அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 12
பசுபதி வீட்டில் நிலவிய மயான அமைதியை கலைக்கும் விதமாக பேச ஆரம்பித்தான் ரகுநந்தன்.
“எல்லார் வீட்லயும் இருக்கிறது தானே அம்மா. சின்ன வயசுல பேசுறதும், நடக்காம போறதும் இயல்பு தானே? எல்லார் வாழ்க்கையும் அந்த புள்ளியிலே நின்றதில்லையே?” இயல்பை கூறி, கேள்வியோடு முடித்தான் ரகுநந்தன்.
பசுபதியின் கண்களுக்கு, யாரும் தெரியவில்லை. ரகுநந்தன் மட்டுமே தெரிந்தான் . அவன் மனம் நிறைந்து போனது. ‘அம்முக்குட்டி குணத்துக்கு ஏத்த மாப்பிள்ளை. அம்முக்குட்டி வாழ்வு சீரும் சிறப்புமா இருக்கும்.‘ அவன் கண்கள் கலங்க, யாரும் அறியாவண்ணம் அதை உள்ளித்து கொண்டான்.
‘அம்மா…‘ என்ற ரகுநந்தனின் விளிப்பில், நெக்குருகி போன வடிவம்மாள், அவர் வயதும், பக்குவமும் நிதர்சனத்தையும் ஏற்றுக் கொள்ள தயாரானது.
ரகுநந்தனை, பார்த்து கொண்டிருந்த அபிநயா, ‘இவுகளுக்கு எல்லாம் தெரியும் போல! இவுக இவ்வளவு நல்லவகளா?’ என்று கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்தாள். ‘எல்லாம்?’ என்ற வார்த்தை கேள்விக்குறியாக நின்றாலும், அவள் மனமோ அவன் பக்கம் ஊசல் ஆட ஆரம்பித்தது.
‘பிடிக்கலைன்னா?’ காலையில் அவள் கேட்ட கேள்வி அபிநயா முன் கேள்விக்குறியாக, சிவப்பு நிறத்தில் எழுந்து அவள் நெற்றியின் முன் மோதி நிற்க, ‘இப்படி எல்லாம் பேசிட்டா எனக்கு இவுகளை உடனே பிடிச்சிருமா? அவுகளுக்கு கல்யாணம் பிடிக்காது. என்னை ஏதோ போனா போகுதுன்னு ஏத்துக்குவாக. நான் மட்டும் அப்படியே மயங்கி போகணுமா?’ தனக்குள் சிலிர்த்து கொண்டு சுதாரித்துக் கொண்டாள் அபிநயா.
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, ‘கிளம்புவோமா?’ என்று ரகுநந்தன் தலை அசைக்க, அபிநயா சம்மதமாக தலை அசைத்தாள்.
வெத்தலை, பாக்கு, தேங்காய், பழங்கள் வைத்து சில ஐந்நூறு ரூபாய் கட்டுகளோடு சுருள் வைத்து வடிவம்மாள் முன் பசுபதி கொடுத்து இருவரையும் வழி அனுப்பினான்.
பசுபதி நிறைவாக உணர்ந்தான். அவனுள் பழைய அபிநயாவை பார்த்த நிம்மதி. அபிநயா நிம்மதியாக உணர்ந்தாள். ‘அத்தானை நான் காயப்படுத்தவில்லை. மதிப்பு கொண்டு அத்தான் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டேன்.‘ தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.
அபிநயா, ரகுநந்தன் இருவரும் வீட்டிற்கு காரில் திரும்பினர். ‘அவளா ஏதாவது சொன்னால் சொல்லட்டும்.‘ என்று ரகுநந்தன் மௌனித்துக் கொண்டான். தோண்டி துருவி கேள்வி கேட்பது அவனுக்கு அநாகரீமாக பட்டது.
‘வேண்டாம் வேண்டாமுன்னு சொல்றவக கிட்ட என்னத சொல்றது? அவுகளா கேட்டா சொல்லிக்களாம்.‘ என்று அமைதியாக அமர்ந்திருந்தாள் அபிநயா.
இருவரும் வீட்டிற்குள் நுழைய, “மாமா!” என்று அழைத்துக் கொண்டு கழுத்தை கட்டிக்கொண்டான் கவின்.
ரகுநந்தன், குழந்தையை பாசமாக தூக்கி கொண்டான். ‘இந்த குழந்தை குட்டி அதெல்லாம் கூட, எனக்கு அவ்வளவு இஷ்டம் கிடையாது.‘ இன்று ஆற்றங்கரையில் அவன் கூறிய வார்தைகள் எங்கோ இடித்தது அபிநயாவிற்கு.
‘என்னை தவிர்க்க சொன்ன வார்த்தைகளோ?’ விசித்திரமான சந்தேகம் அவள் மனதில் அமர்ந்து கொண்டது.
எதையும் வெளிக்காட்டாமல், அமைதியாக உள்ளே சென்றாள்.
அங்கிருந்த சோபாவில், ரகுநந்தன் அமர்ந்து கொண்டு, கவினை மடியில் வைத்துக்கொண்டான்.
ரேவதி தன் தம்பி அருகே அமர்ந்து கொண்டு, தோண்டி துருவி பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தாள்.
பவானியம்மாள் அவராக எதையும் கேட்கவில்லை. ஆனால், ரேவதியயை தடுக்கவுமில்லை. ‘தடுக்க விரும்பல்லையா? இல்லை தடுத்து பயனில்லைன்னு அமைதியா இருக்காகளா?’ என்ற கேள்வி அபிநயா மனதில் சட்டமாக அமர்ந்தது.
இந்த ஒரு நாளில், ரேவதி மேல் நல்ல அபிப்பிராயம் அபிநயாவின் மனதில் உருவாகவில்லை. அபிநயாவின் கண்களோ, பவானியம்மாளை தழுவியது.
‘இவங்களை எந்த கட்சியில் சேர்ப்பது? நல்லவங்களா? இல்லை…‘ மேலும் சிந்திக்க மனம் வராமல், தன் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தி கொண்டாள் அவள்.
அபிநயாவை யாரோ துளைப்பது போல் இருக்க, பார்வையை அங்கு திருப்பிக்கொண்டாள்.
கவின் அபிநயாவை முறைத்து கொண்டிருந்தான்.
அபிநயா, அவனை அருகே அழைக்க அவன் மறுப்பாக தலை அசைத்தான்.
“ஏன் முறைக்குற? சிரிக்கனும்” அவள் கூற, கவின் இன்னும் அவளை முறைத்து பார்த்தான்.
மற்றவர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.
“கவின், உனக்கு உங்க மாமாவை ரொம்ப பிடிக்குமா?” என்று அபிநயா கேட்க, அவன் மேலும் கீழும் தலை அசைத்தான்.
“பேசமாட்டியா?” அவள் கேட்க, அவன் கண்டு கொள்ளாததை போல் தலையை திருப்பிக் கொண்டான்.
“கவின் வேற யார் கிட்டையோ எல்லாம் பேச மாட்டான்.” பெருமையாக கூறினாள் ரேவதி, அபிநயாவை ஒதுக்கி வைக்கும் விதத்தோடு.
‘இதில் என்னை ஒதுக்கி வைக்கவோ, பெருமை படவோ என்ன இருக்கு?’ என்ற எண்ணத்தோடு, ரேவதியை ஒதுக்கி விட்டு பேச்சை கவினோடு தொடர்ந்தாள் அபிநயா.
“எனக்கும் உங்க மாமாவை ரொம்ப பிடிக்கும். சோ பிரெண்ட்ஸ்.” என்று கூறிக்கொண்டே, கவினிடம் கைநீட்டினாள் அபிநயா.
ரகுநந்தன் முகத்தில் புன்முறுவல். கவினின் முகத்திலோ கடுங்கோபம். ரகுநந்தனின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு அவளை இன்னும் கோபமாக முறைத்தான்.
ரேவதியின் முகத்தில் நக்கலாக சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது.
“உங்க மாமாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.” அசராமல் அடுத்த ஆயுதத்தை வீசினாள் அபிநயா.
கவினிடம் இது சற்று வேலை செய்தது. ஆனால், மற்றவர்கள் முகத்தில் அபிநயா பேசிய வெளிப்படையான பேச்சில் அதிர்ச்சி சூழ்ந்து கொண்டது.
அபிநயா கூறுவது உண்மையா என்பது போல் தன் மாமனை பார்த்தான் கவின். அவன் பார்வையின் பொருள் புரிந்து, ரகுநந்தன், ‘ஆம்!‘ என்பது போல் தலை அசைத்து, அதை நிரூபிக்கும் விதமாக எழுந்து சென்று அபிநயாவின் அருகே அமர்ந்து கொண்டான் ரகுநந்தன் .
இந்த திடீர் நெருக்கத்தில் அபிநயா சற்று பதட்டமானாள். அவள் பதட்டத்தை, ரகுநந்தன் உள்ளூர ரசித்து சிரித்தான். ‘என்னை பிடிச்சிருக்குன்னு எல்லார் முன்னாடியும் பொசுக்குன்னு சொல்ல தெரியுது. அப்புறம் என்ன தடுமாற்றம்?’ அவன் அவளை சீண்டலாக பார்த்தான்.
‘தனியா இருந்தா என்னை பிடிக்கலைன்னா?’ அப்படின்னு கேள்வி கேட்க வேண்டியது.
சோபாவின் கைப்பிடி ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அபிநயா. அவளால் அதற்கு மேல் நகர முடியாது.
‘இவுகளுக்கு நட்பு கரம் மட்டும் தானே நீட்டினேன். இந்த உரிமையை எல்லாம் யார் கொடுத்தது? வெளிநாட்டில் படிச்சதால், நட்புன்னு சொன்னாலே, இவ்வளவு நெருக்கமா வந்திருவாகளோ?’ கண்கள் மிரள, அவனை பார்த்தாள் அபிநயா.
அபிநயாவின் எண்ண ஓட்டத்தை கண்டுகொண்டவன், அதை கண்டும் காணாதவன் போல, தன் கவனத்தை கவின் பக்கம் திருப்பினான் ரகுநந்தன்.
அத்தை மாமாவின் மௌன போராட்டம் புரியாமல், அவர்களின் ஒற்றுமையை கண்டு வேறுவழியின்றி “பிரெண்ட்ஸ்…” என்று மாமாவிடமிருந்து கொண்டே கைகளை நீட்டினான் கவின்.
அபிநயா, கவினின் கன்னத்தில் இதழ் பதித்து, “பிரெண்ட்ஸ்…” என்று கூறினாள்.
“அத்தைன்னு சொல்லணும்…” என்று அவள் கூற, தன் மாமனை பார்த்தபடி தலை அசைத்தான் கவின்.
பவானியம்மாளின் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று. ரேவதி இவர்களை யோசனையாக பார்த்தாள்.
அதிகமாக பேசி, அவள் குழந்தையை அச்சுறுத்த விழையவில்லை.
இந்திராவின் இல்லத்தில்.
அதே நேரம், இந்திரா அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
தன் வலது கைகளால், தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை சுற்றிக் கொண்டிருந்தாள்.
‘இதே போல் ஒரு மஞ்சள் கயிறை தான் ரகு அவ கழுத்தில் கட்டி இருக்கான். அவ என்ன உசத்தி? நான் என்ன தாழந்து போய்ட்டேன்? அப்படி சுலபமா நான் அவங்களை விட்டிருவேனா? எவ்வளவு சொத்து? அண்ணன், அங்க போய் இத்தனை வருஷமாகியும், அதை கைக்குள்ள கொண்டு வரலை . அண்ணி, நான் பாத்துக்குறேன்னு சொல்லியும், எதையும் செய்யலை.‘ என்று யோசனையை ரகுநந்தனிடம் ஆரம்பித்து, தன் சகோதரன் சுரேஷை திட்டிக் கொண்டிருந்தாள் இந்திரா.
“அவசர படக்கூடாது. அதுக்காக ஒதுங்கி இருக்கவும் கூடாது. நான் அடிக்கடி அங்க போகணும்.” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தன் அறையில் முடங்கி கொண்டாள் இந்திரா.
அதே நேரம், ரகுநந்தன் வீட்டில்.
ரகுநந்தன் சில காரணங்களை கூறி கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
நேரம் செல்ல செல்ல அவனுக்காக காத்திருந்தாள் அபிநயா.
யாரிடம் பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. சொந்தபந்தங்கள் யாரும் இல்லை. வீட்டினர் மட்டுமே இருந்தனர். பவானியம்மாள் அவர் வேலையில் மூழ்கி கொண்டார்.
ரேவதியின் பார்வை இவளை வட்டமடித்தே தவிர, இவளிடம் பேசவில்லை.
அபிநயாவின் மனம் அவள் வீட்டோடு ஒப்பிட்டு பார்த்தது. ‘எந்நேரமும் யாரவது இருப்பாக. அதுவும் கல்யாணம் முடிஞ்ச ஜோரோடு, எல்லாரும் கூட்டமா கும்மாளமா தான் இருக்கும். இங்கன பேசவே கூலி கேட்பாக போல? நல்ல வேளை அவுக அப்படி இல்லை.‘ என்று அவள் எண்ணி கொண்டிருக்கையில் எண்ணத்தின் நாயகன் வந்து சேர்ந்தான்.
ரகுநந்தன் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் சுரேஷும் வந்து சேர்ந்தான்.
ரகுநந்தன் குளித்துவிட்டு வர, இரவு உணவு பரிமாறப்பட்டது. கவினின் அட்டூழியம் தலைக்கு மேல் இருந்தது. ‘அவனை கண்டிக்கிறாளா, இல்லை கோபப்படுகிறாளா?’ என்று தெரியாத வண்ணம் ரேவதி குழம்பிக் கொண்டிருந்தாள். வேறு யாரும் எதுவும் பேசவில்லை.
மொத்தத்தில் குழந்தையை கையாள தெரியாமல், ரேவதி தடுமாறிக் கொண்டிருப்பதை அபிநயாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘உணவே பிரதானம்.‘ என்பது போல் மற்றவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
‘குடும்பம் எவ்வழி, நானும் அவ்வழி.‘ என்று முடிவு எடுத்தவளாக, ‘உணவே பிரதானம்.‘ என்று முடிவு எடுத்து கொண்டு உண்ண ஆரம்பித்தாள் அபிநயா.
முழு கவனத்தையும் உணவில் செலுத்த முடியாமல், ‘ஏதோ சரி இல்லையே. கவினை இவர்கள் சரியாக கையாளவில்லை.‘ அபிநயாவின் மனம் அரற்றியது.
உணவை முடித்து கொண்டு இவர்கள் அறைக்குள் சென்றனர்.
ரகுநந்தன் அவன் வேலைக்குள் மூழ்கிவிட்டான்.
அபிநயா அவனை பல முறை பார்த்துவிட்டாள். அவளுக்கு பேச வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின், கோப்புகளை மூடி வைத்துவிட்டு, அவளை பார்த்தான் ரகுநந்தன்.
“நான் வேலைக்கு போகணும்.”, அவள் உதடுகள் தெளிவாக பேச, ‘இந்த வீட்டில் மனுஷன் காலையிலிருந்து, சாயங்காலம் வரை தனியா இருப்பானா?’ அவள் மனம் உறுதியாக கேள்வி கேட்டு கொண்டது.
“இது, அனுமதியா? செய்தியா?” கேள்வியாக நிறுத்தினான் அவன்.
“நீங்க சம்மதம் சொன்னா, அனுமதி. மறுத்தா செய்தி.” அவள் புன்னகையோடு கூறினாள்.
அவன் புருவங்கள் நெளித்து, உயர்ந்தது.
“வாத்தியாரம்மா, நினச்சதை முடிச்சிருவீங்க போல?” அவன் கேட்க, “நல்லதை நினைப்பேன். நல்லதை செய்வேன். வாத்தியாரம்மா இல்லையா?” அவன் கேள்வியிலிருந்தே பதிலை கொடுத்தாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போகலை தானே?” என்று அவன் கேட்க, அபிநயா படக்கென்று பேச நிமிர, அவள் பேசும்முன், கை உயர்த்தி அவளை தடுத்தான் ரகுநந்தன்.
“ஜஸ்ட், தெரிஞ்சிக்க தான்.” என்று அவன் சமாதனம் போல் கூற, “படிச்சி முடிச்சி கொஞ்ச நாள் தான் ஆச்சு. வேலைக்கு போகணும்ன்னு நான் ஆரம்பிச்சப்ப…” மேலும் பேச முடியாமல் அவள் தடுமாறினாள்.
அருகே இருந்த தண்ணீரை, “மடக்… மடக்…” என்று குடித்தாள்.
‘நான் அத்தானை என் வாயால், எங்கும் விட்டுக்கொடுக்க முடியாது.‘ அவள் மனம் படபடவென்று அடித்து கொள்ள, “சொல்ல வேண்டாமுன்னா, வேண்டாம்.” இவள் பதட்டம் அறிந்து கொண்டவன் போல் கூறினான் ரகுநந்தன்.
“ஒண்ணுமில்லை. போகணும்னு நினச்சேன். சூழ்நிலை, சரியா அமையலை. அதுக்குள்ள, நம்ம கல்யாணம் நடந்திருச்சு.” என்று அவள் ஒருவழியாக கூறி முடித்தாள்.
“கொஞ்ச நாள் கழிச்சி போகலாமா?” என்று அனுமதியாக கேட்டான் ரகுநந்தன்.
மறுத்ததால் கோபம். ஆனால், அவன் கேட்ட விதத்தில் தன் சினத்தை வெளிப்படுத்த முடியாமல் அவள் அவனை ஆழமாக பார்க்க, “இல்லை… கல்யாணம் முடிஞ்ச கையோட வேலைக்கு போனா, நான் தான் உன்னை எதோ வேலைக்கு அனுப்பறேன்னு தப்பா நினைச்சிற கூடாது. எதுவும் பிரச்சன்னைன்னு நினைச்சிருவாங்க.” அவன் பொறுமையாக விளக்கினான்.
‘வேலைக்கு போறதில்ல இவ்வளவு பிரச்சனையா?’ அவள் அவனை பார்க்க, “ஏதாவது படிங்க. ஒரு மாசம், ரெண்டு மாசம் போகட்டும். இந்த வீடு பழகினவுடனே போகலாம்.சரியா?” அவன் அனுமதி போல கேட்க, மறுக்க முடியாமல் அவள் தலை அசைத்தாள்.
தன் பக்கத்தை பேசி முடித்ததிலிருந்து, ரகுநந்தன் சற்று நிம்மதியாக இருந்தான். அபிநயாவிற்கு தான், புது இடம், புது மனிதர்கள் சங்கடமாக இருந்தது.
பேச்சு முடிந்தது என்பது அவன் வேலைக்குள் மூழ்க, மீண்டும் அவன் முகத்தை பார்க்க, ‘என்ன?’ என்பது போல் அவன் விழி உயர்த்த, “கவின்…” என்று தடுமாறினாள் அபிநயா.
“அவனுக்கு என்ன?” என்று ரகுநந்தன் சற்று கோபமாக கேட்க, “எதுவோ சரி இல்லை. உங்க அக்கா…” என்று அவள் தொடங்க, “இதுக்கு தான் நான் கல்யாணம் வேண்டாமுன்னு சொன்னேன். அவங்க இங்க தான் இருப்பாங்க. பிடிச்சிருந்தா அவங்களை, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இங்க இரு. கவினை குறை சொல்ற வேலை எல்லாம் வேண்டாம். பிடிக்கலைனா இங்கேயிருந்து கிளம்பி போய்கிட்டே இரு.” ரகுநந்தன் காட்டமாக கூறினான்.
அவர்களுக்குள் மெலிதாக உருவாக ஆரம்பித்திருந்த நட்பு என்று மெல்லிய பிணைப்பு அறுந்து அந்தரத்தில் தொங்க ஆரம்பித்தது.
அபிநயாவின் தன்மானம் சீண்டப்பட்டு, சுள்ளென்று அவள் கேட்ட கேள்வியிலும், மேலும் அவள் பேசிய பேச்சிலும் ரகுநந்தன் அவளை திக் பிரமை பிடித்தவன் போல் பார்த்தான்.
பொழுதுகள் விடியும்…