AnthaMaalaiPozhuthil-14

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 14

ஹாய் ரகு, குட் மோர்னிங்.” என்று பேச்சை ஆரம்பித்தாள் இந்திரா.

            பேச்சு என்னவோ ரகுவிடம் தான். ஆனால், அவள் பார்வையோ சற்று பொறாமையோடு அபிநயாவை தழுவியது. அவள் கண்களில் தெரிந்த பொறாமையில், ஒரு “ஹாய்…” யை இந்திராவிடம் அனுப்பிட்டு பார்வையை அபிநயாவின் பக்கம் திருப்பினான் ரகுநந்தன்.

           எந்தவித ஒப்பனையுமின்றி அழகாக இருந்தாள். நெற்றி வகிட்டில், ‘அவனின் அவள்…என்று எடுத்துரைக்கும் விதமாக அரக்கு நிற குங்குமம். அப்பொழுது தான் குளித்திருக்கிறாள் என்பதன் அடையாளமாக, அவள் தலையிலிருந்து ஒரு சொட்டு நீர் நெற்றியில் வடிந்து கொண்டிருந்தது.  

   ‘இந்திராவின் பொறாமை ததும்பும் விழிகள், இவள் அழகை கண்டா? இல்லை இவள் என் மனைவி என்பதாலா?’ என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்து கொண்டிருக்க, மனைவியை விட்டு கண் அகற்ற மனமில்லாமல் அவளை அளவிட்டு கொண்டிருந்தான் ரகுநந்தன்.

              பிங்க் நிறத்தில் சேலை. கோலம் இடுவதற்கு வசதியாக சேலையை தூக்கி இடுப்பில் சொருகி இருந்தாள். மெல்லிடை அவள் சேலையை தாங்கி கொண்டு அழகாக காட்சி அளித்தது.

தன்னையும் மறந்து தன் மனைவியின் உடல்வாகை ரசித்தான் அந்த கணவன்.

   நொடிக்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு, ‘ரகு நீ இப்படி எல்லாம் பாக்குற ஆள் கிடையாது? உனக்கு என்ன ஆச்சு? வாத்தியரம்மா கம்பை தூக்குறது நிஜம்.என்று அறிவுறுத்திக் கொண்டு கண்களை அவள் இடையிலிருந்து உயர்த்த, அவன் கண்களை ஆக்ரமித்து கொண்டது அந்த தாலி.

     திருமணத்தன்று சங்கிலியாக தெரிந்த தாலி, இன்று ஏனோ உரிமையாக தெரிந்தது. அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. அது தானே, எனக்கு இல்லாத உரிமையா?’ தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான் ரகுநந்தன்.

  அனைத்தும் அரங்கேறியது ஒரு நொடியில் தான்.

     நொடிப்பொழுதில் அவன் பார்வையை கண்டுகொண்ட இந்திரா, ‘நான் இங்க இவ்வுளவு கஷ்டப்பட்டு டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். இவன் இந்த பட்டிக்காட்டு டீச்சர் அம்மாவை சைட் அடிக்கிறான்.என்று மனதிற்குள் பொருமிக் கொண்டு, “என்ன ரகு என்கிட்டே அவ்வளவு கலகலன்னு பேசுவீங்க. உங்க மனைவியை பார்த்து பயமா? இப்ப என் கிட்ட பேச மாட்டேங்கிறீங்க?” கேள்வியாக தன் வேலையை ஆரம்பித்தாள் இந்திரா.

    தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பது போல், விலக எத்தனித்த மனைவியை, கை பிடித்து நிறுத்தினான் ரகுநந்தன்.

     சாலையில் பலரும் பார்க்க நேரிடுமோ, என்று அபிநயா  கைகளை உருவிக் கொள்ள எத்தனிக்க, அவன் பிடிமானம் இறுகி, அவள் மணிக்கட்டு சற்று வலிக்க, அவனை கோபமாக முறைத்தாள்.

       “என் மனைவி பக்கத்தில இருந்தா எனக்கு வேற எதுவும் தெரிய மாட்டேங்குது.” சோகமாக கேலி பேசினான் ரகுநந்தன்.

     அவன் கேலியில் இந்திரா கடுப்பாக, “ம்… க்கும்… உங்க அக்கா, கவின் வந்தா தெரியும் உங்க மயக்கம்.” அவனுக்கு மட்டும் கேட்கும்படி சிரித்த கொண்டே கிசுகிசுத்தாள் அபிநயா.

             “நாங்க புதுஜோடி. கொஞ்சம் அப்படி இப்படி தான் பேசுவோம். நீ உள்ள போ” என்று ரகுநந்தன் இந்திராவை நாசுக்காக வழியனுப்ப, மேலே அங்கு நின்று பேச முடியாமல் அவள் ஹை ஹீல்ஸ் செருப்பை வைத்து கொண்டு டொக் டொக்கென்று சப்தம் செய்து கொண்டே கோபமாக வீட்டிற்குள் நுழைந்தாள் இந்திரா.

                அவள் சென்றதும், படக்கென்று கைகளை உருவிக்கொண்டு தன் மணிக்கட்டை தேய்த்தாள் அபிநயா.

    “ஏன் இப்படி அழுத்தி பிடிச்சீங்க?” அவள் கைகளை தேய்க்க, “நீ ஏன் நான் பேசிட்டு இருக்கும் பொழுது போன?” அவள் கைகளை பிடித்து மன்னிப்பு கோரும் விதமாக பார்த்தான்.

   “இது ரோட்…” அவள் சிடுசிடுக்க, “அப்ப, வீட்டுக்குள்ள பரவா இல்லையா?” என்று கண்சிமிட்டினான் அவன்.

   “உங்களுக்கு என்னை பிடிக்காது.” அவள் ஆர்மபிக்க, அவன் உதட்டை பிதுக்கி, மறுப்பாக தலை அசைத்தான்.

 “சரி… கல்யாணம் மட்டும் பிடிக்காது” என்று அவள் நிறுத்த, “அது நேத்து…” என்று அவன் தோள்களை குலுக்க, அவனை கடுப்பாக பார்த்தாள் அபிநயா.

    ‘உனக்கு பிடிச்ச கல்யாணம் தானே?’ என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் எழ, அவளை ஆழமாக பார்த்தான்.

அவள் உள்ளே செல்ல எத்தனிக்க, “என் கூட ஜாக்கிங் வரியா?” என்று கேட்டான் ரகுநந்தன் அவளை விட்டு செல்ல மனமில்லாமல்.

      “இந்த சேலையோடையா?” அவள் கேட்க, “என் ஷார்ட்ஸ் போட்டுக்குறியா?” அக்கறையாக கேட்டான் அவன்.

   அவள் கைகளை இடுப்பில் வைத்து முறைக்க, அவன் ஷார்ட்ஸில் அவளை கற்பனை செய்து பார்த்து, அந்த தொள தொள அபிநயாவை எண்ணி அவனுக்கு சிரிப்பு வந்தது.

                    மனைவிக்கு பயந்து அந்த சிரிப்பை அடக்கி கொண்டு,”சரி இன்னைக்கு வாக்கிங் போவோம். உனக்கு ட்ராக்ஸ் வாங்கிட்டு, அப்புறம் ஜாக்கிங் போலாம்.” என்று அவன் கூற, அவள் யோசித்தாள்.

      “நீ என் கூட வாக்கிங் வந்தா, நான் உன்னை உங்க வீட்டில் விடுறேன். இல்லைனா உங்க வீட்டுக்கு கொண்டு போய் விடவே மாட்டேன்.” அவன் குறும்போடு மிரட்ட, அவள் புன்னகைத்தாள்.

   ‘என்னை வெளிய போக சொல்லிட்டு எப்படி எல்லாம் சமாதானம் செய்யறாக.அவள் எண்ணம் ஓட, “வாத்தியரம்மா நேரம் ஆகுது.” அவன் சிடுசிடுத்தான்.

    “நான் குளிச்சிட்டேன். அத்தை கிட்ட சொல்லணும்.” என்று அவள் பல காரணங்களை அடுக்கி கொண்டே இழுக்க, “என் கூட வர இஷ்டமா இல்லையா?” நேரடியாக கேட்டான் அவன்.

   ‘இஷ்டம் தான்.என்பது போல் அவள் வேகமாக தலை அசைக்க, அவனுக்கு இதமாக இருந்தது.

    “நான் சொன்னா இந்த வீட்டில் மறுப்பு கிடையாது.” என்று கூறிக்கொண்டே, வாசலில் இருந்து அவன் தகவல் கொடுக்க, இருவரும் கிளம்பினர். இந்திரா இருக்கும் பொழுது, அபிநயாவை வீட்டில் விட அவனுக்கு விருப்பம் இல்லை.

எத்தனை நாள், என்னால் இடையில் இருந்து தடுக்க முடியும்?’ என்ற கேள்வி அவனுள் எழுந்தாலும், ‘அதை அப்புறம் யோசிப்போம்.என்று முடிவு எடுத்தவனாக அவளை அழைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் ரகுநந்தன்.

   சற்று வசதியானவர்கள் வாழும் பகுதி. பெரிய பெரிய வீடுகள். அவர்கள் அதை ஒட்டி நடக்க ஆரம்பித்திருந்தனர்.

     இருவரும் கைகோர்த்து நடக்கவில்லை. நடக்கும் பொழுது மெலிதாக உரசிக்கொண்ட அந்த தோள்கள் மெல்லிய தோழமையை பாராட்டி கொண்டது.

           ‘நான் ஏன் இப்படி மாறி போனேன். திருமணம் அப்படினாலே, பயந்தேனே. இப்பொழுது, இவளை பக்கத்தில் வைத்து கொண்டே இருக்கிறேனே. ஏன்?’ என்ற கேள்வி அவனுள்.

     ‘நான் என்ன, இவங்க கூட இப்படி இழைஞ்சிப்போறேன். இவுக வீட்டில் யாரும் பழக்கம் இல்லை. இவுகளை மட்டுந்தேன் கொஞ்சம் தெரியுது. அதனாலையோ?’ என்ற கேள்வியோடு நடந்தாள் அபிநயா.

       சில கேள்விகளுக்கு ஒரு நாளும் பதில் கிடையாது என்றறியாமல், இருவரும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடந்தனர்.

   அத்தனை ஆள் அரவம் இல்லாத சாலையை அடைந்திருந்தனர்.

           அப்பொழுது எதிரே ஒருவர் மிக பெரிய நாயை கூட்டிக்கொண்டு வர, அது சங்கிலியோடு அபிநயா மீது பாய எத்தனிக்க, அவளை தன்பக்கம் இழுத்து கொண்டான் ரகுநந்தன். அவள் தடுமாறி அவன் மீது மோதி அவன் மேல் முழுதுமாக சாய்ந்து நின்றாள். அவள் விலக எத்தனிக்க, அவள் தோள்களை இறுக பற்றி இருந்தான் ரகுநந்தன்.

     ரகுநந்தனின் நெருக்கம் ஓர் பதட்டத்தை கொடுக்க, அதை தாண்டியும் ஓர் பாதுகாப்பு உணர்வை உணர்ந்தாள் அபிநயா.

    அவன் கதகதப்பு, அவளுள் ஏதோ செய்தி கூற எத்தனிக்க, அதை முழுதும் அறிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் அந்த இளம் பெண்.

சில்லென்ற அந்த காலை நேர காற்று, அவள் முகத்தை தீண்ட, அவள் தேகத்தை ஒருபக்கம் அவன் மூச்சு காற்றின் வெப்பம் தீண்ட, சட்டென்று சுயநினைவுக்கு வந்தாள் அபிநயா.

    ‘இவுக ரோட்டில என்ன பண்ணுதாக?’ என்ற எண்ணத்தோடு அவள் தன் தலையை பின்பக்கமாக திருப்பி பார்த்தாள்.

    அவள் தலை அவன் நாடியை இடித்து கொண்டு நிற்க, அவள் கண்களோ அவன் உயரத்தை இப்பொழுது தான் கணக்கிட்டு கொண்டது. அவள் கண்கள் நேற்று போல் இன்றும் பெரிதாக விரிந்து பிரமிப்பை வெளிப்படுத்த, ‘என்ன?’ அவன் கண்கள் கேள்வியாக உயர, சரேலென்று விலகி கொண்டாள் அபிநயா.

   “நாய் போய்டுச்சா?” அவள் கேட்டுக்கொண்டே விலக, “அது போய் ரொம்ப நேரம் ஆகுது.” என்று கூறி கொண்டே சென்றார் அந்த சாலையை கடந்து சென்ற பாட்டி ஒருத்தி.

இருவர் முகமும் வெட்கத்தோடு சிரிப்பை வெளிப்படுத்தியது.

அவன் குறுஞ்சிரிப்போடு அவளை பார்த்தான். அவளின் முகத்தில் செம்மையை வெளிப்படுத்திய அந்த நாணம் அவனுக்கு ரசனைக்குரியதாக இருந்தது.

       “நான் நாய்க்கெல்லாம் பயப்பட மாட்டேன்.” அவள் தலையை குனிந்து கொண்டே முணுமுணுக்க, “ஓ… சாரி. நீங்க கம்பு வச்சிருக்கிற வாத்தியரம்மான்னு நான் மறந்தே போயிடுறேன்.” என்று அபிநயா என்ன நினைத்திருப்பாளோ?’ என்ற எண்ணத்தோடு அவன் மன்னிப்பு கோரினான்.

         “தேங்க்ஸ்…” அவள் கூறிக்கொண்டே நடக்க, “எதுக்கு?” என்று அவன் கேட்க, “நேத்து என்னை வீட்டை விட்டு போன்னு சொன்னீங்களே அதுக்கு.” நேரடி காரணத்தை ஒத்துக் கொள்ள அவள் தன்மானம் இடம் கொடுக்காததால், இவ்வாறு விளையாட்டாகவே கூறி சமாளித்தாள்.

    அவள் முன்  வழி மறித்து நின்றான் ரகுநந்தன்.

      “நான் அப்படி சொன்னது உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சா?” அவன்  ஆழமான குரலில் கேட்க, அவள் பதில் பேசவில்லை. தன் தலையை குனிந்து கொண்டாள்.

   ஆள்காட்டி விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி, “நான் கேட்டா பதில் சொல்லணும்.” அவன் குரலில் அழுத்தம் சற்று கோபமும் வந்து அமர்ந்திருந்தது.

   அவன் கோபத்தில் அவன் தொடுகையை மறந்து,   “என்ன கோபப்படுதீக? நான் தான் கோபப்படணும்.” அவள் முகத்தை திருப்பிக் கொண்டு ஏறினாள்.

   “நான் கோபப்பட்டா எல்லாரும் பயப்படுவாங்க. ஆனால், நீ எகிறுற. அதனால் தான் இந்த வாத்தியரம்மாவை எனக்கு ஒரே நாளில் ரொம்ப பிடிச்சிருச்சு  போல?” அவள் கன்னம் தட்டி அவன் உல்லாசமாக சிரித்தான்.

   “சரி… இத்தோட, இந்த பேச்சை முடிச்சிப்போம். சாரி. நான் இனி அப்படி பேச மாட்டேன்.” அவள் தோள் மேல் கைபோட்டு அவன் கெஞ்சுதலாக கூற, “இது ரோட்.” அவள் முணுமுணுத்தாள்.

     “ஹலோ ஒரு பிரென்ட் தோள் மேல் கை போட்டா தப்பில்லை வாத்தியரம்மா. அது ரோடா இருந்தா என்ன? வீடா இருந்தா என்ன?” அவன் கண்கள் அவள் முகம் பார்த்து கெஞ்சியது.

  “இப்படி தான் எல்லா பிரென்ட் தோள் மேலும் கைபோடுவீங்களா?” அவள் அவன் தோள் வளைவில் நடந்து கொண்டே கேட்க, அந்த பிரென்ட்…என்ற வார்த்தையில் இருந்த அழுத்தத்தில் கைகளை எடுத்துவிட்டு அவன் கலகலவென்று சிரித்தான்.

    “என்ன சிரிப்பு?” அவள் அவன் முகம் பார்த்து கேட்க, “இந்த பிரென்ட்… கொஞ்சம் ஸ்பெஷல்.” அவன் கண்களில் ஒன்று இவளை பார்த்து சிமிட்டியது.

       ‘என்ன ஸ்பெஷல்?’ இன்று இவள் மனம் துள்ளாட்டம் போட்டது. கேட்க வேண்டும் என்று அவள் மனம் விழைந்தாலும், அவள் அதரங்கள் ஒத்துழையாமை இயக்கம் செய்தது. அவள் இமைகளோ, அவள் மறைக்க நினைத்தாலும், படபடத்து அவள் மனதை வெளி காட்ட துணிந்தது.

     ரகுநந்தன் மனதில் மெல்லிய தயக்கம். என்ன ஸ்பெஷல்? அவள் கேட்டுவிட்டால், என்ன சொல்லுவேன்? நேற்று வரை கல்யாணம் பிடிக்கவில்லை. இன்று உன்னை பார்த்து மயங்கிவிட்டேன். பிடித்துவிட்டது என்றா? நம்புவாளா? இல்லை என்னை தப்பாக எடுத்து கொள்ளுவாளா?’ அவள் தயங்கி நின்ற நொடிகளில் அவன் தன்னை சமன் செய்து கொண்டான்.

        “நோ டாபிக் சேன்ஞ் வாத்தியாரம்மா. நான் கேட்ட சாரிக்கு பதில்.” அவன் அவளையும் மீட்டெடுத்தான்.

அத்துக்கிட்டு போக யாரும் கலியாணம் கட்டிக்குறதில்லை.” அர்த்தத்தோடு கூறி, புன்னகைத்துக் கொண்டே  அவள் நடந்தாள்.

   “வாத்தியரம்மா சொன்னால், சரியா தான் இருக்கும். கேட்டுக்குறேன்.” என்று அவன் தலை அசைத்து நடக்க ஆரம்பித்தான்.

அவள் எதுவும் பேசவில்லை.

     ‘பிடிவாதக்காரி. சரின்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போயிருவா?’ அவன் மனம் எண்ணிக்கொண்டது. குழந்தை மனம்.பசுபதி சொன்னது நினைவு வந்தது.

    ‘நான் வீட்டை விட்டு போக சொன்னது வாத்தியாரம்மாவை ரொம்ப காய படுத்திருச்சு போல. இனி இப்படி பேச கூடாது.அவன் உறுதி செய்து கொண்டு, வேறு பல விஷயங்களை பேச ஆரம்பித்தான்.

அபிநயாவும் அவனோடு ஒத்து பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே நடந்தாள்.

             இருவரும் வீட்டிற்குள் நுழைய, ரேவதி இந்திராவோடு சிரித்த முகமாக பேசி கொண்டிருந்தாள்.

    ‘இவுகளுக்கு சிரிக்க கூட தெரியுமா?’ என்பது போல் அபிநயா ரேவதியை பார்த்தாள்.

            “என்ன தம்பி. உங்க ரெண்டு பேரை பார்க்க தான் இந்திரா வந்திருக்கா? இப்படி கிளம்பி போய்ட்டியே? அதுவும் புது பொண்ணை கூட்டிகிட்டு? அவளையாவது விட்டுட்டு போயிருக்கலாமில்லை?” என்று ரேவதி மனத்தாங்கலோடு கேட்டாள்.

   ‘நான் புது பொண்ணுன்னு இப்ப தான் இவுகளுக்கு தெரியுதா? கவினை அன்னைக்கு ரூமுக்கு அனுப்பும் பொழுது தெரியலையோ?’ என்று அபிநயா அவர்களை பார்த்தாள்.

   ‘இதை எல்லாம் இவுக கிட்ட சொல்லி சண்டையை வளர்க்க கூடாது.முடிவு எடுத்து கொண்டாள் அபிநயா.

   “மாமா…” என்று அழைத்து கொண்டு கையிலிருந்த   சாக்லேட், கேக் அனைத்தையும் காண்பித்தான் கவின்.

    ‘ஒரு குழந்தைக்கு இவ்வளவா?’ அபிநயாவின் கண்கள் அதிர்ச்சியாக விரிந்தது. கவின் இந்திராவோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். வழக்கமாக தேடும் மாமாவை கூட அவன் இப்பொழுது தேடவில்லை.

      ‘இந்திரா, கவினுக்கு அத்தை முறை. அதனால் நெருக்கம்.என்று இங்கு வந்து தெரிந்து கொண்ட உறவு முறையில் சமாதானம் ஆக முயற்சித்தாலும், ‘அந்த உறவை குழந்தையிடம் நெருக்கி கொள்ளவே இந்த லஞ்சமோ? தப்பாயிற்றே?’ அவள் மனம் கணக்கிட ஆரம்பித்தது.

   இந்திரா, ரகுநந்தனிடம் ஏதோ சலசலத்து கொண்டிருந்தாள். அபிநயா மனதில் அது பதியவில்லை. அவள் எண்ணமோபல கேள்வியோடு கவினையே சுற்றி சுற்றி வந்தது.

       ‘கவின் பேசுகிறான். ஆனால், எல்லாம் பேசுகிறானா? ஏதோ குறைகிறதே? இவர்கள் கவினை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறாங்களா? நேத்து பேச வந்ததுக்கே இவுக இப்படி எகிறுனாக. இதுல டாக்டர் கிட்ட போகணும். அப்படி, இப்படின்னு சொன்னா என்ன பண்ணுவாக?’ என்ற கேள்வி அபிநயாவின் மனதில் எழுந்தது.

    ‘முதலில் கவின் அம்மா, தன் மகனிடம் குறைன்னு சொன்னா ஏத்துக்குவாகளா?’ என்ற கேள்வியும் அவளை குடைந்தது.         

   ‘கவின் குறையை இவர்கள் கண்டுபிடித்த மாதிரி தெரியலையே? சேட்டை, பிடிவாதம் என்று இவர்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் சரி தானோ? நான் தான் தப்போ?’ என்ற சந்தேகமும் அவளுள் எழுந்தது.             

பொழுதுகள் விடியும்…