AnthaMaalaiPozhuthil-15

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 15          

அபிநயா, அவள் கேள்விகளோடு சிந்தனையில் ஆழ, இந்திரா, ரேவதியோடு அதற்கு மேல் பேச முடியாமல், “வா.. ரூமுக்கு போலாம்.” என்று தன் மனைவியை பார்த்தான் ரகுநந்தன்.

    ‘இவுக ரூமுக்கு போறதுக்கு நான் ஏன் கூட போகணும்?’ புரியாமல் அவள் விழிக்க, அவள் கைகளை பற்றி, இழுத்துக்கொண்டு படியேறினான் ரகுநந்தன்.

    ‘ஐய… எல்லாரும் இருக்காக. இவுக நேத்து ராத்திரி கூட இப்படி இல்லை. இன்னைக்கு காலையிலிருந்து தான் இப்படி இருக்காக. நேத்து பேசின பேச்சுக்கு இந்த லட்சணத்துல சமாதானம் செய்றாகளோ?’ என்ற கேள்வியோடு அவன் பற்றி இருந்த கைகளை பார்த்தபடி படி ஏறினாள் அபிநயா.

     ரகுநந்தனோ அபிநயாவின் அருகாமையை ரசித்தபடி, தன் தலையை திருப்பி, இந்திராவை பார்த்தான்.

    அவள் கண்களில் பொறாமை, கோபம், ஏமாற்றம் அனைத்தும் கலந்து ஜுவாலையாய் தெரிய, அவன் முகத்தில் ஓர் பெருமித புன்னகை.

               அறைக்குள் சென்று ஆசுவாசமாக அமர்ந்தாள் அபிநயா. அவள் மனமோ குழம்பி நின்றது.

  “வாத்தியரம்மா… என்ன யோசனை?” அவன் கேட்க, “கீழ நிறைய வேலை இருக்கும். அத்தைக்கு உதவனும். வேலை செய்யறவக இருந்தாலும், அத்தை பாவம், தனியா நிக்கறாக. நான் போகணும். என்னை எதுக்கு இங்கன கூட்டிட்டு வந்தீக?” என்று கேள்வியோடு நிறுத்தினாள் அபிநயா.

     அவனுக்கு அவளை இந்த நொடி இன்னும் பிடித்தது. வீட்டிற்கு வந்த, மறுநாளே தன் தாயை பற்றி அக்கறையாக பேசிய, அவளை மரியாதையோடு பார்த்தான் ரகுநந்தன்.

    அவனின் மௌனத்தை கலைக்கும் விதமாக, “உங்க அக்கா, கொஞ்சம் கூட அத்தைக்கு உதவுற மாதிரி தெரியலை.” புருவத்தை நெளித்து, கிசுகிசுப்பாக வம்பு கூறினாள் அவள்.

      ஓர கண்களால், ‘கோபப்படுத்தாகளா? என்னை வீட்டை விட்டு, போக சொல்லுதாகளா?’ என்று சோதிப்பது போல்தன் கருவிழிகளை அவன் பக்கம் குறும்பாக திருப்ப, அவளை கண்டுகொண்ட  அவன் கலகலவென்று சிரித்தாள்.

          அவள் அவனை புன்னகையோடு பார்க்க, ‘கீழ போ…என்பது போல், கண்களால் அவன் கூற, அவள் துள்ளி குதித்து சென்றாள்.

    கதவு வரை சென்ற அவளுக்கு, ‘அவனை பார்க்க வேண்டும்.’ என்ற எண்ணம் எழ, சட்டென்று திரும்பி அவனை பார்க்க, அவன் தனது இடது  கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டே, வலது கையை தன் நாடியில் வைத்து அவளை பார்த்து கொண்டிருந்தான்.

     அவன் கண்கள் இவள் விழிகளை ஊடுருவ, அவன் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல் அவள் இமைகள் படபடக்க, அங்கிருந்து மறைந்துவிட்டாள்.

       ‘மனம் இடமாற சில பொழுதுகள் போதும் போலும்.என்று அவன் மனம் அசைபோட, அவன் உதடுகளோ மெல்லிதாக பாடலை முணுமுணுக்க குளிக்க சென்றான்.

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு

கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்” 

 

    காலையிலிருந்து அந்த பிங்க் நிற சேலையில், மலர்ந்திருந்த சிவப்பு பூக்களை அவன் மனம் ரசித்து கொண்டது. அவளையும் சேர்த்து தான். ஆனால், அவன் எண்ணங்களோ, அவள் விழிகளில் வந்து நின்றது.

    ‘நேற்று கண்டிப்பு பேசிய அவள் கண்கள் இன்று பேசுவது என்ன?’ அவன் அறிவு சிந்திக்க, குளியலோடு அவன் பாடலும் தொடர்ந்தது.

வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்

பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை…

இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை…”

    

      பாடலோடு குளியலை முடித்து கொண்டு வந்தான் ரகுநந்தன்.

    ரகுநந்தன், வீட்டுக்குள் இருப்பதற்கு எதுவாக பேண்ட் அணிந்திருந்தான். மேலே, இப்பொழுது தான் குளித்து முடித்ததை கூறுவது போல் பூப்போன்ற நீல நிற துவாலையால் போர்த்தி இருந்தான்.

                    போன வேகத்தில், திரும்புவது போல் உள்ளே நுழைந்தாள் அபிநயா.

அவனை பார்த்ததும், சங்கடத்தோடு அங்கே நின்றுவிட்டாள்.

     ‘இவள் எதற்கு இத்தனை சங்கடப்படுகிறாள்?’ என்ற கேள்வி அவனுள் எழகீழே குனிந்து தன்னை பார்த்தான் ரகுநந்தன்.

    சட்டை இல்லாமல் நின்று கொண்டிருந்த தன்னை பார்த்துவிட்டு புன்னகைத்து கொண்டான்.

  “ம்… ச்…வா… ” உரிமையோடு அவளை அழைத்தான் அவன்.

        “இல்ல… நீங்க சாப்பிட வாங்க… அத்தை சாப்பிட கூ… கூப்பிட்டாங்க.” தட்டு தடுமாறி கூறிவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.  ரகுநந்தனின் சிரிப்பு சத்தமோ அவளை தொடர, இன்னும் வேகமாக படி இறங்கினாள் அபிநயா.

       ஒவ்வொரு முறையும், வெட்கப்பட்டு கொண்டு படியிறங்கும், அபிநயாவை இந்திராவின் கண்கள் கண்காணித்து கொண்டிருந்தது.

    ‘ரகுநந்தன் தானா இது? நம்ப முடியலையே? ஏன் என்னால் முடியவில்லை?’ இந்திரா தன்னை தானே கேட்டுக்கொண்டு கவினோடு விளையாடியபடியே ரேவதி சுரேஷோடு பேசி கொண்டிருந்தாள்.

     அனைவரும் சாப்பிட அமர, பவானி, “நான் சற்று நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு, அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

   ‘இந்திராவின் வருகை பவானியம்மாளுக்கு பிடிக்கவில்லை.என்பதை கணித்து கொண்டாள் அபிநயா.

        ‘அதிகபட்சம் தன் தாயின் எதிர்ப்பு இவ்வளவு தானே?’ வருந்தியது ரகுநந்தனின் மனம்.

    ‘இதை எல்லாம் கண்டுகொள்வேனா?’ என்பது போல் இந்திராவை கவனித்து கொண்டிருந்தாள் ரேவதி.

 

    “அபிநயா, நீ பரிமாறு.”  என்று அபிநயாவை அழைத்து, ரேவதியின் அதிகாரம் தூள் கிளம்பியது.

   ரகுநந்தனின் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது. “சாப்பிட வா.” என்று அழுத்தமாக கூறினான் ரகுநந்தன் அபிநயாவை பார்த்தப்படி.

   “இல்ல… நான் பரிமாறிட்டு…” அபிநயா தொடங்க, “சாப்பிட வான்னு நான் சொல்றேன்.” சற்று சத்தமாக அழுத்தமாக  அவன் குரல் ஒலித்தது.

    பவானியம்மாள், அறையை விட்டு வெளியே வந்து பார்த்துவிட்டு, புன்முறுவலோடு உள்ளே நுழைந்து கொண்டார்.

   “அக்கா, பரிமாறணும்னு நினச்சா நீ பண்ணு. இல்லைனா, உள்ளே அலமேலுமா இருப்பாங்க. அவங்களை வைக்க சொல்லு.” உறுதியாக கூறிவிட, ரகுநந்தனின் குணமறிந்து மறுபேச்சின்றி தலை அசைத்தாள் ரேவதி.

       எதுவும் நடக்காதது போல் அமர்ந்திருந்தான் சுரேஷ். இந்திரா இயல்பாக, ரகுநந்தன் பக்கத்தில் அமர முற்பட, ஒற்றை விரலால் அவளை விலக சொன்னான் ரகுநந்தன்.

“வந்து உட்கார்.” கூறிக் கொண்டே அபிநயாவை அவன் இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் சரிந்தாள் அபிநயா.

       எதிர்பாராமல், அவன் மேல் பூமாலையாய்  சரிந்த அவளை ரசித்தான் ரகுநந்தன். அவள் தலையில் சூடி இருந்த பூவின் நறுமணத்தோடு, அவள் மணமும்.

 அவன் மனம் அவன் முணுமுணுத்த பாடலை எண்ணி புன்னகைத்து கொண்டது.

     தன் மேல் சரிந்த மனைவியை, அவன் ஆதரவாக பிடிக்க, அவன் விரல்கள் அவளை எங்கெங்கோ தீண்டியது.

    அனைவர் முன்னும் சரிந்து விழுந்தது அவளுக்கு அவமானமாக இருக்க, அதுவும் ரகுநந்தன் மேல் சரிந்து விழுந்தது வேறு அவளை வெட்கம் கொள்ள செய்தது.

   அபிநயா சுதாரித்துக் கொண்டு ரகுநந்தன் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

   அபிநயாவின் நெருக்கம், ரகுநந்தனை வேறு எதுவுமே சிந்திக்க விடவில்லை. ஆனால், அவள் விலகிய நொடி, ரகுநந்தனின் பார்வை இந்திராவை நோக்கி சென்றது.

    இந்திராவின் கண்களில் பொறாமை. ரகுநந்தனின் கண்களில் ஏளன சிரிப்பு. அவர்கள் கண்களின் பரிமாற்றத்தில், பல செய்திகளை கணித்துவிட்டாள் அபிநயா.

    ‘இதற்காகத்தானா? அனைத்தும் இதற்காகத்தானா?’ அபிநயாவின் மனம், சுக்கு நூறாக உடைந்து, ‘ஓ…என்று ஓலமிட்டது.

        ‘நேற்று வெறுத்த அவுக... உன்னை வெளியே போன்னு சொன்ன அவுகஉன்னை ஒரு நாளில் விரும்பிவிடுவாகளா?’ என்று அவள் அறிவு அவளை சாட்டையாக அடித்தது.

      ‘காலையில், இந்த இந்திரா வராவிட்டால், உன்னை திரும்பியும் பார்த்திருக்க மாட்டாக. அப்படியே ஜாக்கிங் போயிருப்பாக.அவள் அறிவு இடித்துரைக்க, முன்னே இருந்த பூ போன்ற இட்லி கல்லாக மாறி அவள் தொண்டையை அடைத்தது.

         மென்று விழுங்கினாள். “சாப்பிடு…” அவன் குரல் இவள் காதில் கிசுகிசுப்பாக ஒலித்தது.

   ‘அக்கறையா? யார் மேல்? அக்கறையா? இல்லை இந்திராவை பொறாமை அடைய செய்யும் முயற்சியா?’ கத்த வேண்டும் என்பது போல் அவள் மனம் அவளை அழுத்தியது.

 

    ‘அபிநயா… பொண்ணுக்கு பொறுமை ரொம்ப முக்கியம்.அவள் தாய் பார்வதி அடிக்கடி கூறும் வார்த்தைகள் அவள் செவிகளில் ஒலிக்க, தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் அபிநயா.

      “ஏன் சாப்பிடலை? பிடிக்கலையா?” ரகுநந்தன் கன அக்கறையாக அவள் தட்டை பார்த்தபடி கேட்க, வேகவேகமாக இரண்டு இட்லியை உள்ளே தள்ளினான்.

காலையில் இனித்த ரகுநந்தனின் பேச்சு இப்பொழுது அபிநயாவுக்க மிளகாயாக எரிய, அவன் அவளிடம் காட்டும் கரிசனம் இந்திராவுக்கு வேப்பங்காயாக கசந்தது.

   இவர்களை காண சகியாமல், இந்திரா வேகமாக உணவை முடித்து கொண்டாள்.

இந்திராவின் மனதில் கோபம், ஏமாற்றம், ‘என்னை ஏன் ரகுநந்தனுக்கு பிடிக்கவில்லை?’ இந்த கேள்வி அவளை கத்தியால் கூர் கொண்டு இறக்கியது போல் அவள் நெஞ்சை குத்தியது.

     ‘எங்கு எல்லார் முன்னும் அழுதுவிடுவோமோ?’ என்ற பயம் எழ,  அவர்கள் வீட்டை நோக்கி விரைவாக கிளம்பிவிட்டாள்.

    உணவை முடித்துக் கொண்டு, ரகுநந்தனும் அவசரமாக வேலை விஷயமாக கிளம்பிவிட்டான்.

   ரகுநந்தன் கிளம்பியதை அபிநயாவின் அறிவு விரும்பியது. எனக்கு தனிமை வேண்டும்.அவள் அறிவு எடுத்துரைக்க, மனமோ, ‘இவுக ஏன் வீட்டில் இருக்க போறாக? இவுகளுக்கு நான் யார்? அந்த இந்திராவை கடுப்பேத்த நான் பகடைக்காய். அவ்விளவு தானே?’ அவள் மனம் அரற்றியது.

            சிந்தித்த படியே, அறையை நோக்கி படி ஏறினாள்.

     ‘இவுக எதுக்கு என்னை கல்யாணம் செய்தாக? நேத்து அவுக  அக்காவுக்காக என்னை வெளிய போக சொல்லிட்டு, இன்னைக்கு எனக்காக பேசும் பொழுதே நான் யோசிக்க ஆரம்பிச்சிருக்க வேண்டாமா? வாக்கிங் கூட்டிட்டு போனது கூட…அவள் அறைக்கு வந்து கதை மூடினாள்.

அபிநயாவால் மேலும் சிந்திக்க முடியவில்லை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. குன்றலாக இருந்தது. அவனை நினைத்தும்! அதை விட, அவனிடம் இளகிய அவளை நினைத்தும்!

    “ச்சீ… ச்சீ… ச்சீ…” அவள் காதுகளை மூடி கொண்டு கத்தினாள்.

      தன் கைகளை தட்டி கொண்டாள். காலையில், ரகுநந்தன் தொட்ட பொழுது குழைந்த இடம் இப்பொழுது அவளுக்கு அவமானத்திலும், அருவருப்பிலும் எரிந்தது.

    “என்னை இவுக என்ன நினைச்சிட்டாக?” தன்மானம் சீண்டப்பட்டவளாக, அவள் தன்னை தானே கேட்டு கொண்டாள்.

  ‘கல்யாணம் பிடிக்காதுன்னு சொன்னவக, தொட்டதும் குழைந்த என்னை என்ன நினைச்சிருப்பாக?’ அவளுக்கு அவமானம், கோபம் என அனைத்தும் கலந்து நின்றது.

      ரகுநந்தன், தன் வேலையை முடித்து விட்டு வீடு திரும்புகையில், ‘வாத்தியரமாவுக்கு ஏதாவது வாங்கனும். என்ன வாங்கலாம்?’ அவன் மனம் துள்ளியது.

  ‘வாத்தியாரம்மாவுக்கு என்ன பிடிக்கும்? ஒருவேளை பிரம்பு தான் பிடிக்குமோ? பிரம்பு வாங்கி கிப்ட் பேக் பண்ணி  கொடுத்தா என்ன?’ அவன் சிந்தனை சற்று தீவிமரமாகி சிந்தித்து பதில் கிடைக்காமல் போக, “வாத்தியாரம்மாவை கூட்டிட்டு போய் வாங்குவோம்.” தனக்கு தானே கூறிக்கொண்டான் .

    காரை நிறுத்திவிட்டு, வேகமாக உள்ளே நுழைந்தான்.

     பவானியம்மாள் எதிரே வர, “அம்மா, அபிநயா எங்க?” சீட்டியடித்தபடி கேட்டான் ரகுநந்தன்.

     ‘அபிநயா… நான் இதுவரை அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை. வாத்தியரம்மா… இப்படியே கூப்பிட்டு பழகிட்டேன். அது என்ன பழகிட்டேன்? ரெண்டு நாள் தானே ஆகுது? ரெண்டு நாள் தானா!அவனுக்குள் ஆச்சர்யம்.

   ‘அதுக்குள்ள, வாத்தியரம்மா என்னை என்னவோ பண்ணிட்டாங்க.ரகுநந்தன் எண்ணிக் கொண்டிருக்க, “உங்க ரூம்ல தான்.” அவர் கூறி முடிப்பதற்குள் ரகுநந்தன் படியேறி இருந்தான்.

     பவானியம்மாள், தன் மகனை நிம்மதியாக பார்த்தார்.

அறைக்குள் ரகுநந்தன் நுழைய, அங்கு அபிநயா இல்லை.

தண்ணீர் சத்தம் கேட்க, அவளுக்காக காத்திருந்தான் ரகுநந்தன். பல மணித்துளிகள் ஆகியும் அபிநயா வெளியே வராததால், அவனுக்குள் மெல்லிய சந்தேகம் எட்டி பார்த்தது.

    அவன் கதவை தட்டினான். பதில் இல்லை.

வாத்தியாரம்மவை ஒதுக்கி, எப்படி அழைப்பது? அவனுள் அவள் பெயர் உதிக்கஇப்ப கூப்பிடக்கூடாது. அவளை அருகில் வைத்து, அவள் முகம் செவ்வானமாக சிவக்கும் பொழுது, இமைகள் படபடக்கும் பொழுது அழைக்க வேண்டும்.நொடிப்பொழுதில் அவன் மனம் ஆசையை வளர்த்து கொண்டது.

   “வாத்தியரம்மா…” அவன் கதவை தட்ட, கதவு திறக்கப்படவில்லை. ரகுநந்தனுக்குள், மெல்லிய பயம் எட்டி பார்த்தது. அவன் இதயம், “தடக்… தடக்…” என்று வேகமாக துடித்தது.

    மீண்டும், மீண்டும் கதவு தட்டும் ஓசையோடு, தண்ணீர் விழும் ஓசை மட்டுமே கேட்டது.

ரகுநந்தனின் பதட்டம் அதிகரிக்க, வெளியிலிருந்தும் திறக்கும் வசதி கொண்ட கதவை அவன் வேகமாக திறந்தான்.

       நீரில் நனைந்தபடி நின்றுகொண்டிருந்தாள் அபிநயா. அவள் நின்ற கோலத்தில் அவன் அதிர்ச்சி அடைந்தான்.

     “வாத்தியரம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” அவன் கேட்டுக்கொண்டே, நீரை நிறுத்தினான்.

     பிங்க் நிற சேலை அவள் உடலோடு ஒட்டி கொண்டு அவள் அங்கவடிவங்களை எடுத்து காட்டியது. ரகுநந்தன் சற்று தடுமாற்றத்தில், தன் தலையை குனிந்து கொண்டான்.

    அவன் கண்களுக்கு, அவள் இடுப்புக்கு கீழ், பிங்க் நிற சேலையில், காலையில் அழகாக பூத்திருந்த பூக்கள் இப்பொழுது நீரில் சுருங்கி கசங்கி அவள் உடலோடு ஒட்டி பொலிவிழந்த காட்சியே தெரிந்தது.

    ரகுநந்தனின் மனமும் சோர்ந்து, ‘இவளுக்கு என்ன ஆயிற்று?’ என்று அண்ணாந்து அவள் முகம் பார்த்தான்.

     அவள் முகமும் பூ போலவே சுருங்கி, அவள் மன சுணக்கத்தை காட்டினாலும் அதை தாண்டிய, பிடிவாதம் இருந்தது.

     ‘இது என்ன சிறுபிள்ளை தனம்?’ அவன் மனம் கோபங்கொண்டாலும், குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் அவளை பார்க்க பாவமாக இருந்தது.

              “வெளிய வா.” அவன் அழுத்தமாக கூற, அவள் பிடிவாதமாக அசையாமல் அங்கு நின்றாள்.

     அவன் அவள் கைகளை பிடித்து இழுக்க, “இதுவே உங்க வேலையா போச்சு.” கைகளை உருவிக் கொண்டு மீண்டும் தண்ணீரை திறந்து, அவன் தொட்ட இடத்தை கரகரவென்று நீரில் தேய்த்தாள்.

       அவள் பேசுவது புரியாமல், அவள் செய்கையின் அர்த்தம் அறியாமல் ஸ்தம்பித்து நின்றான் ரகுநந்தன்.

    அவள் கண்களில் தெரிந்த கோபம், பிடிவாதத்தால் அவன்  மனம் நடுக்கம் கொள்ள, நீரில் நடுக்கமாகி மயங்கி அவன் மீது சாய்ந்தாள் அபிநயா.

   செய்வதறியாமல், அவளை கைகளில் ஏந்தி, மஞ்சத்தில் கிடத்தினான் ரகுநந்தன்.

        “அபிநயா… அபிநயா…” அவள் கன்னங்களை தட்ட எத்தனித்தான். அவன் தீண்டலை விரும்பாமல்,கைகளை உருவிக் கொண்டு அவள் நீரில் தேய்த்தது நினைவு வர தன் கைகளை விலக்கி கொண்டான்.

    ‘இப்படி ஈரத் துணியில் இருக்காளே? உடையை மாற்ற வேண்டாமா? இப்படியே இருந்தா என்ன ஆகும்? அம்மாவை கூப்பிடுவோமா? என்ன செய்றது? அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?’ அவளை பார்த்தான் ரகுநந்தன்.

                      நீர் அவள் தேகத்தில் செவ்வனே தன் பணியை செய்து, பிரமனின் தாராளத்தை எடுத்து காட்டியது.

        அவள் அழகும், அவன் இளமையும், அவள் செய்கையும் அந்த அறைக்குள் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

                      

 பொழுதுகள் விடியும்…