AnthaMaalaiPozhuthil-21

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 21

      மரத்தில் மீது சாய்ந்தபடி இந்திரா நின்று கொண்டிருக்க, அவள் கண்களில் தெரிந்த அச்சத்தில் பசுபதி சற்று விலகி நின்றுகொண்டான்.

    “இந்தா பார். உனக்கு கல்யாணத்துக்கு என்ன கலர் சேலை வேணும்? என்ன நகை வேணுமுன்னு சொல்லு. நான் எடுத்து தரேன். எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கும். ஆனால், மாப்பிள்ளை நான் தான். அதுல எந்த மாற்றமும் கிடையாது.” அவள் அசைய இடம் கொடுக்காமல், நிதானமாக பேசினான்.

    ‘இவனிடம் இந்த தாலியை காட்டி, மிரட்டினால் என்ன?’ என்று எண்ணம் தோன்ற அவனை யோசனையாக பார்த்தாள் இந்திரா.

    தன் கண்களை இருபக்கமும் சுழலவிட்டாள். யாரும் இல்லை. பசுபதி சற்று முன் செய்த செய்கை, அவள் மனக் கண்ணில் தோன்றியது.

          இயற்கை காற்றிலும், இந்திராவின் முகத்தில் வியர்வை துளிகள்.

        ‘அவன் தாலி மட்டும் தானே கட்டினான். நான் அதுக்கு மேலையும் போவேன்னு சொல்லிட்டா. இவனை பார்த்தால், சரியான முரடன் மாதிரி இருக்கு. செஞ்சாலும் செய்வான்.என்று அவள் அறிவு எச்சரிக்க, அபிநயாவிடம் கூறியதை பசுபதியிடம் கூறும் தைரியம் இந்திராவுக்கு வரவில்லை. தன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

பசுபதி தொடர்ந்து பேசினான்.

           “எனக்கு என் அம்முக்குட்டி வாழ்க்கை நல்லாருக்கணும். அவளுக்கு இந்த அவசர கல்யாணம் நடந்ததுக்கு நான் தான் காரணம். அவளுக்கு இந்த வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும், அதுக்கு நான் தான் காரணம். அதை, நான் தான் சரி செய்யணும். பண பிரச்சனையா இருந்தா, நான் என் மொத்த சொத்தையும் கொடுத்திருப்பேன். அதுக்கு அவசியம் வரலை. பிரச்சனை நீ. நான் யாரையும் கெடுக்க நினைக்கலை. வாழ வைக்க தான் நினைக்குறேன்.” பசுபதி நியாயம் பேசினான்.

என் வாழ்க்கையை கெடுக்கறீங்க.” என்று இந்திரா பட்டென்று கூறினாள்.

   “ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான் பசுபதி.

   “தப்பை ஆண், நான் செய்தால் என்ன, பெண் நீ செய்தால் என்ன? தப்பு தப்பு தானே?” என்று தன் வேஷ்டியை மடித்து கட்டினான்.

       “நீ பண்றதும் தப்பு. நான் செய்றதும் தப்பு. தப்புக்கு தப்பு சரியா போச்சு. கூட்டி, கழிச்சி, பெருக்கி, வகுத்து பாரு கணக்கு சரியா வரும்.” என்று மீசையை முறுக்கினான்.

    “இது நீயா தேடிகிட்டது.” பசுபதி தோளை குலுக்கினான்.

   “நீ ரகுநந்தனை விரும்பி இருக்கலாம். நான் தப்பு சொல்லலை. ஆனால், கல்யாணமானதும், விலகி இருக்கனும் தானே?” என்று பசுபதி கேட்க, ‘நான் ஏன் விலகனும்? நான் அப்படி என்ன தப்பா ஆசைபட்டுட்டேன்?’ அவள் மனம் முரண்டியது.

      ‘இந்த காட்டானிடம் என்ன பேசுவது? நான் பேச வேண்டிய இடத்தில் பேசிக்குறேன்.என்று எண்ணி விலக எத்தனித்தாள் இந்திரா.

   அவள் கைகளை பிடித்து நிறுத்தினான் பசுபதி.

   “நீ அபிநயாவை பார்க்க கூடாது. அவ கிட்ட பேச கூடாது. நீ பேசி, என் அம்முக்குட்டி காயப்பட்டான்னு தெரிஞ்சிது.” அவன் ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்டினான்.

      பேசி முடித்த பசுபதியின் முகத்தில், ஒரு புன்னகை எட்டி பார்த்தது.

    “நான் அவ்வளவு நல்லவன் கிடையாது.” என்று தன் மீசையை முறுக்கி கொண்டு கூறினான் பசுபதி.

   இந்திரா, அவள் வந்திருந்த வண்டியை நோக்கி நடந்தாள்.   எதுவும் பேசாமல், விருட்டென்று கிளம்பிவிட்டாள்.

   பசுபதி அவளை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான்.

     இந்திராவின் மனம் இப்பொழுது ரகுநந்தனை எண்ணவில்லை. மாறாக, அபிநயாவிடம் இடம் பெயர்ந்து கொண்டது.

    ‘இந்த பெண் அபிநயா எத்தனை கொடுத்து வைத்தவள்?’ என்ற கேள்வி இந்திராவிடம் எழுந்தது.

    கோபத்தில், இயலாமையில் வண்டியை வேகமாக செலுத்தினாள் இந்திரா.

       வண்டியின் வேகத்திற்கு ஏற்ப, அவள் எண்ணங்களும் கேள்விகளும் தறி கேட்டு ஓடியது.

           ‘அவளுக்காக, அம்மா, அப்பா, அவளை தாங்கும் கணவன். இந்த பசுபதி யார்? கூட பிறந்தவன் கூட இல்லை. ஏதோ அத்தை பையன் தான். அவன் கூட, இந்த அபிநயாவுக்காக உருகுறான்.இந்திராவின் கோபம் கனன்றது.

       ‘சின்ன வயசுலையே, அம்மா, அப்பா போய்ட்டாங்க. அவங்க முகம் கூட எனக்கு சரியா ஞாபகம் இல்லை. ஏதோ சொந்தகாரங்க வளர்த்தாங்க. அண்ணன், அவன் ஒருத்தன் தான். அவன் தான் எனக்கு பாதுகாப்பு. அவனும் பாதி நாள் குடிச்சிட்டு வருவான். அவன் இருக்கும் குடும்பம் பாதுகாப்பா இருந்துச்சு. அந்த குடும்பத்துக்கு போய்ட்டா நல்லதுன்னு நினச்சேன். இதுக்கு கூட எனக்கு குடுப்பின்னை இல்லையா?’ இந்திராவின் மனம் அவளுக்காகவே பரிதவிக்க ஆரம்பித்தது.

    ‘ரகுநந்தன் குடும்பம் இல்லைனா அபிநயாவுக்கு வேற வழியே இல்லையா?’ கடுப்பாக எண்ணினாள் இந்திரா.

    அவள் கண்கள் கலங்கியது. சாலை சரியாக தெரியவில்லை. இந்திரா சற்று தடுமாறினாள்.

         “ச்… ச்சீ… ” என்று அருவருப்பாக கூறிக்கொண்டே, வண்டியை ஓரங் கட்டினாள் இந்திரா.

    ‘நான் அழக்கூடாது. இந்த பசுபதி எல்லாம் ஓர் ஆளா? அழுவது பலவீனம்.என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, தன் கண்களை துடைத்து கொண்டாள்.

     வண்டியை நேராக ரகுநந்தனின் அலுவலகத்துக்கு செலுத்தினாள் இந்திரா.

   கதவை திறந்து கொண்டு  சரேலென்று உள்ளே நுழைந்தவளை, எதிர்பார்திருத்தவன் போல் பார்த்து கொண்டு தன் நாற்காலியில் அரைவட்டம் அடித்தான் ரகுநந்தன்.

இந்திராவின் உடை அவன் கண்ணில் பட்டது. இந்திராவின் நாகரிக உடை அவன் அறிந்தது தான். ரகுநந்தனுக்கு அதில் எந்த தவறும் தெரிந்ததில்லை.

    ரேவதி அடிக்கடி கூறுவது அவன் நினைவுக்கு வந்தது. இந்திரா மாடர்ன் தான். ஆனால், உனக்கு மாடர்ன் பிடிக்கும் தானே? அவளை கட்டிக்கோ. அவளுக்கும், உனக்கும் ஒத்து போகும்.தன் தமக்கை திருமணத்திற்கு முன் பேசிய வாரத்தைக்கள், நினவுக்கு வந்தன.

                   அவன் கண்கள், இந்திராவை அளவிட்டு கொண்டிருந்தது.

 இன்று, வழக்கமாக மாடர்ன் என்ற சொல்லை தாண்டிய ஏதோவொரு விகல்பம் இருந்ததைரகுநந்தனின் மனம் கணித்துக் கொண்டது.

 

      ‘இந்த மினி ஸ்கிர்ட் எல்லாம் நம்மூருக்கு ஓவர். பசுபதியை கடுப்பேத்த செய்த முயற்சியோ?’ என்ற சந்தேகம் வர, ‘இவளை எல்லாம் திருத்தவே முடியாது.என்ற எண்ணமும் ஒரு சேர எழ, ரகுநந்தனின் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.

    “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல? என்னை ஒரு பட்டிக் காட்டான் தலையில கட்டுறது தான் உங்க திட்டமா? ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி புருஷனும், பொண்டாட்டியும் செம்ம ஜோடி. நல்லா போடுறீங்க திட்டம்.” என்று அவன் முன் கோபமாக கத்திக் கொண்டு நின்றாள் இந்திரா.

  இந்த பிரச்சனைக்கு இப்படி ஒரு கோணமா?’ என்று எண்ணிக் கொண்டான். ரகுநந்தன், எதுவும் பேசவில்லை. அவளை மௌனமாக பார்த்தான்.

          “என்ன திமிர், பேசாமலே காரியம் சாதிச்சிட்டோமுன்னு இவ்வளவு தெனாவட்டா உட்காந்திருக்கியா?” இந்திரா அவன் மேஜையை தட்டி கேட்டாள்.

      ‘இந்திரா, செம்ம கடுப்பில் இருக்கா. பேசி ஒரு பிரோயஜனமும் இல்லை.மனதில் எண்ணியவாறு, ஒரு பெருமூச்சை வெளியிட்டான் ரகுநந்தன்.

      “உன் பொண்டாட்டி கிட்ட என்ன சொல்லி மயக்கி வச்சிருக்க? நான் தாலியை காட்டி, போட்டோவை காட்டி எதுக்குமே, உன் பொண்டாட்டி அசைஞ்சி கொடுக்கலை.” என்று கூற, ரகுநந்தனின் நெற்றி சுருங்கியது.

     ‘வாத்தியாரம்மா என் கிட்ட எதுவுமே சொல்லலையே? எதுவுமே கேட்கலையே? ஏன்?’ என்ற கேள்வி அவனை  வண்டாக குடைந்தது.

          என்ன உன் பொண்டாட்டி பத்தி நினைப்பா?” என்று இந்திரா காட்டு கத்தலாக கேட்க, ரகுநந்தன் அபிநயாவின் எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, மீண்டும் சுயநினைவுக்கு வந்தான்.

   “அந்த வாத்தியரம்மா திட்டம் தானே?” இந்திரா கடுப்பாக கேட்க, “இதுக்கும், அவளுக்கும் சம்பந்தமில்லை.” நிதானமாக கூறினான் ரகுநந்தன்.

    “உன் பொண்டாட்டியை சொன்னா, உனக்கு அப்படியே பொத்துக்கிட்டு வரும்ன்னு மதினி சொன்னாங்க. சரியா தான் இருக்கு.” என்று கேட்டுக்கொண்டே, அவன் முன் அமர்ந்தாள் இந்திரா.

   “ஏன் ரகு உனக்கு என்னை பிடிக்கலை? நான் அபப்டி என்ன ஆசைபட்டுட்டேன்? எங்க அண்ணன் அங்க இருக்கான். மதினிக்கும் எனக்கும் செட் ஆகும். கவினை எனக்கு பிடிக்கும். எனக்கு உன்னையும் பிடிக்கும்.” ஏக்கமாக பேசினாள் இந்திரா.

   “இது எல்லாத்தோட சேர்ந்து வாழ்க்கைக்கு தேவையான பணம் உன்கிட்ட இருக்கு. ஒரு பொண்ணு எதிர்பார்க்குற, மாடர்ன் கனவு நாயகன் நீ. படிச்சிருக்க, பண்பா இருக்க. நான் உன்னை விரும்பினதுல, உன்னை அடையனும்முன்னு நினச்சதுல என்ன தப்பு?” என்று கேட்டாள் இந்திரா.

    “நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி பெண்ணை தேடும் பொழுது, நான் எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு ஆளை தேடுறது தப்பா? எனக்கும் அம்மா, அப்பா இருந்திருந்தா இதை தானே பண்ணிருப்பாங்க?” என்று சட்டம் பேசினாள் இந்திரா.

    ‘திருமணமான என்னுடன் பேசும் பேச்சா இது?’ என்ற எண்ணம் தோன்ற, ரகுநந்தன் இந்திராவை யோசனையாக பார்த்தான். ஆனால், அவன் கோபப்படவில்லை. அவளை பார்க்கவும் அவனுக்கு பாவமாக இருந்தது.

           “என்னை பார்த்தா பைத்தியக்கார மாதிரி இருக்கா?” புலம்பினாள் இந்திரா.

    “கல்யாணம் முடிஞ்சி, பொண்டாட்டியை உயிரா நேசிக்குற உன்கிட்ட லூசு மாதிரி பேசிட்டு இருக்கேன்ல.” நக்கலாக கேட்டாள் இந்திரா.

        “நான் தானே உன்கிட்ட, முதலில் காதல் சொன்னேன். நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கலை?” இந்திரா கோபமாக கேட்டாள்.

   இவளிடம் என்ன சொல்லி புரிய வைக்க. ஆயிரம் காரணங்கள். ஆனால், அதை நான் ஏன் இவளிடம் சொல்ல வேண்டும்? சொன்னாலும் புரிந்து கொள்வாளா?’ என்ற கேள்வி ரகுநந்தனின் மனதில்.

       ‘ஏதோ, இன்று அதீத அதிர்ச்சி. இவ்வளவு பொறுமையா பேசுறா. இல்லைனா, இவ லட்சணம் எனக்கு தெரியாதா?’ என்று யோசிக்க, “சரி விடு. முடிஞ்சது முடிஞ்சி போச்சு.” என்று இந்திரா அவள் புலம்பலுக்கு முற்று புள்ளி வைத்தாள்.

   “அந்த பட்டிக்காட்டான், என் அண்ணனை மிரட்டி இருக்கான்.” என்று இந்திரா கூற, “இதை யார் சொன்னா?” என்று கேட்டான் ரகுநந்தன்.

   “சுரேஷ் அண்ணா.” என்று இந்திரா கூற, ரகுநந்தன் புன்னகைத்து கொண்டான்.

    ஏனோ, அவனுக்கு அதில் நம்பகதன்மை ஏற்படவில்லை.    ‘சொன்னாலும், இந்திரா என்னை நம்பப்போவதில்லை. அவள் அண்ணனை தான் நம்புவாள்.என்று எண்ணியவாறு இந்திராவுக்கு, மறுப்பு தெரிவிக்காமல் கேட்டு கொண்டான்.

    “நான் உன் வாழ்க்கையில் குறுக்க வரலை. இந்தா…” என்று கூறி, அவள் கழுத்தில் தாலி என்ற பெயர்கொண்டு இருந்த மஞ்சள் கயிறை கழட்டி, அவன் அறையில் இருந்த குப்பை தொட்டியில் போட்டாள்.

 “இதை நான் செய்தது தானே உனக்கு பிரச்சனை? இதை தானே காரணம் காட்டி என்னை ஒதுக்கின? உனக்கு பிரச்சனை கொடுத்த விஷயத்தை நான் சரி செய்துட்டேன். நான் உன் வாழ்க்கையில் இனி குறுக்க வரமாட்டேன்.” என்று நிதானமாக கூறினாள் இந்திரா.

      ஆஹா! இது என்ன திடீர் ஞனோதயம்?’ என்று எண்ணியவாறு, அவளை ஆச்சரியமாக பார்த்தான் ரகுநந்தன்.

 “ஆனால், நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். எனக்கு அந்த பட்டிக்காட்டான் வேண்டாம். இந்த கல்யாணத்தை நிறுத்து.” நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ரகுநந்தனிடம் கேட்டாள் இந்திரா.

    ‘தாய் தகப்பன் இல்லாத பெண். அண்ணனும் சரி கிடையாது. வாழ்க்கை கொடுக்க முடியாது. ஆனால், நிச்சயம் உதவி பண்ணலாம்.ஆரம்பத்திலிருந்து, இந்திராவை பார்த்த நாளிலிருந்து இது தான் ரகுநந்தனின் எண்ணம்.

         அவன் சிந்தித்து கொண்டிருக்க, இந்திரா பொறுமை இழந்து எழுந்தாள்.

     “இந்த கல்யாணத்தை நீ நிறுத்தலைனா, என் செயல் வேற மாதிரி இருக்கும்.” என்று மிரட்டலாக கூறினாள் இந்திரா.

   “அது தானே பார்த்தேன். இது தானே உன் குணம்.” என்றான் ரகுநந்தன் தெனாவட்டாக.

       “தெரிஞ்சா சரி…” அசட்டையாக தோளை குலுக்கினாள் இந்திரா.

     “நாங்களும் இந்த கல்யாணத்தை நிறுத்தணுமுன்னு தான் நினக்குறோம். பசுபதி பாவம். அவர் வாழ்க்கை நாசமாகிட கூடாது பாரு.” அவள் அசட்டைக்கு சிறிதும் குறை இல்லாமல் ரகுநந்தனின் குரலும் அசட்டையை வெளிப்படுத்தியது.

இந்திராவை தூர நிறுத்துவதில் ரகுநந்தன் தெளிவாக இருந்தான்.

    “என்ன நக்கலா?” என்று இந்திரா கேட்க, “நிதர்சனம்.” என்று ரகுநந்தன் அழுத்தமாக கூறினான்.

    “எதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும். எனக்கு இந்த கல்யாணம் நிற்கணும்.” என்று கூறிக்கொண்டு வெளியே சென்றாள் இந்திரா.

     ரகுநந்தனின் எண்ணமோ, மீண்டும் மனைவியிடம் இடம் பெயர்ந்து கொண்டது.

  ‘அபிநயாவுக்கு என்ன தெரியும்? எதுவரை தெரியும்? ஏன் என்னிடம் சொல்லவில்லை?’ அடுக்கடுக்கான கேள்விகளோடு, மாலை வேலையை முடித்து விட்டு  வீட்டை நோக்கி சென்றான் ரகுநந்தன்.

    அபிநயா, கவின் இருவரையும் வீட்டில் காணவில்லை. தோட்டத்தில், கண்ணை கட்டிக்கொண்டு கவினோடு விளையாடி கொண்டிருந்தாள்.

          ரகுநந்தன், கவினை அனுப்பிவிட்டு அவள் முன்னே நின்றான். சத்தம் இல்லமால் போக அவள் கவினை தேடி நேரே நடந்து வர, மூடிய கண்களோடு ரகுநந்தனை மோதி தட்டு தடுமாறி விழ எத்தனித்து அவனை தாங்கி பிடித்து நின்றாள்.

       அவளை தாங்கி பிடிக்க, அவன் கைகள் மேலே ஏறி, அவள் இடை வரை நெருங்கி, காற்று புகும் இடைவெளியில், அன்று தண்ணீரில் அபிநயா செய்தது நினைவு வர, கைகளை விலக்கி கொண்டான் ரகுநந்தன்.

    அபிநயா, அவனை தாங்கி தோளோடு தொங்கி கொண்டு நின்றாள்.

அபிநயா நிதானிப்பதற்குள், “நான் உன்னை தொடலை.” அவன் குரல் அவள் காதில் கிசுகிசுப்பாக ஒலித்தது.

   வார்த்தைகள் அவன் வழக்கமாக கூறுவது  தான். ஆனால், வழக்கமாக இருக்கும் ஒரு ரசனை, குறும்பு ஏதோவொன்று குறைவது போல் அபிநயாவின் ஆழ்மனம் ஓலமிட அவள் உள்ளம் பதறியது.

     ரகுநந்தனிடமிருந்து விலகி நிற்க, அவள் அறிவு எச்சரித்தாலும், மனம் அவன் எங்கோ விலகி செல்வது போல உணர்த்த, அதை விரும்பாமல் அவனை இறுக பற்றினாள் அபிநயா.

    மேலும் ரகுநந்தன் கேட்ட கேள்வியில், அவள் மனதின் தவிப்பு உறுதி செய்யப்பட, கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், அவள் மனக்கண்கள் அவனை ஏக்கமாக பார்த்தது.

    ‘அவள் மனதின் ஏக்கம் அவனுக்கு புரிந்ததா?’ என்று அவர்களை தழுவி சென்ற தென்றல் அவர்களை ஆர்வமாக வட்டமடித்தது.

பொழுதுகள் விடியும்…