அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 23
சூரியஒளி வீச்சு, அவள் கண்களை சுட்டெரிக்க தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்தாள் இந்திரா.
‘எப்ப தூங்கினேன்? எப்படி தூங்கினேன்? அவனை பற்றி யோசிச்சபடியே தூங்கிட்டேனோ?’ போன்ற கேள்விகளோடு எழுந்து அமர்ந்தாள்.
அறை முழுக்க கண்களை சுழலவிட்டாள். பசுபதியை காணவில்லை.
‘விடியகாலையிலேயே எழுந்திருப்பான் போல.‘ என்று அறைக்குள் இருக்கும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘கிராமமா இருந்தாலும், இதெல்லாம் நல்ல வசதியா தான் இருக்கு.‘ என்று எண்ணி அவள் குளியலை முடித்து கொண்டாள்.
அப்பொழுது பசுபதி அவர்கள் அறை நோக்கி வந்தான். அறை கதவை தட்ட, எந்த சத்தமும் இல்லை. மீண்டும் கதவை தட்டினான். எந்த பதிலும் இல்லை.
‘என்ன ஆச்சு?’ அவனுள் மெல்லிய பதட்டம். மீண்டும் கதவை தட்டினான். பதில் இல்லை.
‘இந்திராவுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. ஏதாவது ஏடா கூடமா செஞ்சிருப்பாளோ? ச்… ச்ச… ஆனால், அவளை பார்த்தா அவ்வளவு கோழை போல தெரியலையே.‘ போன்ற எண்ணத்தோடு அவன் பதட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருந்தது.
பதில் வரமால் போக, கதவை சடாரென்று வேகமாக தள்ளினான் பசுபதி.
அந்த கிராமத்து கதவை சரியாக தாழிட தெரியாமல், இந்திரா அரைகுறையாக தாழிட்டு இருக்க, பசுபதி தள்ளிய வேகத்தில் கதவு திறந்து கொண்டு சுவரோடு மோதி, பசுபதி உள்ளே நுழைந்ததும் மீண்டும் படாரென்று அடைத்து கொண்டது.
பசுபதியின் கண்கள், இந்திராவை பார்த்தும் சற்று ஆசுவாசமானது. அவன் பார்வையில், இந்திரா மட்டுமே இருந்தாள். அவள் நின்ற கோலம் பதியவில்லை.
ஆனால், அவளிடம் தெரிந்த பதட்டத்திலே, அவள் நின்ற கோலம் மெல்ல மெல்ல அவனுக்கு தெரிந்தது.
குளித்துவிட்டு, சேலை கட்ட தெரியாமல், சேலையை கையில் வைத்து கொண்டு, போராடி கொண்டிருந்த இந்திரா.
அவள் கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் அவன் கட்டிய தாலியின் மஞ்சள் நிறத்தோடு போட்டி கொண்ட அந்த கருமை நிற மச்சம் அவள் நின்ற கோலத்தை கூற, பசுபதி தன் தலையை குனிந்து கொண்டான்.
இந்திரா, தன் கைகளில் இருந்த சேலையை எடுத்து அவசர அவசரமாக தன்னை மறைத்து கொண்டு நின்றாள்.
“இல்லை… நான்… நான்… கதவை தட்டினேன்.” அவளை பார்க்காமல் தரையை பார்த்தபடி தடுமாற்றத்தோடு கூறினான் பசுபதி.
‘கதவு தட்டும் சத்தத்தை கூட கவனிக்காமல், இந்த வேலை தான் தீவிரமா நடந்ததா?’ என்ற கேலியும் பசுபதி மனதில் உதித்தது.
“அது தான் நான் திறக்கலைல? அப்புறம் ஏன் உள்ள வந்த?” சுள்ளென்று வந்தது இந்திராவின் குரல்.
“ரொம்ப நேரம் தட்டினேன்.” மீண்டும் தடுமாறினான் பசுபதி.
அவன் பேச்சு, செய்கை அனைத்தும் இந்திராவுக்கு அவன் கண்ணியத்தை எடுத்து காட்டியது.
“நான் செத்துருவேன்னு நினைச்சியா? அவ்வளவு பயம் இருக்கிறவன் ஏன் என்னை கல்யாணம் பண்ணனும்?” சேலையை கோமாளி போல் சுற்றி கொண்டு கடுப்பாக கேட்டாள் இந்திரா.
இந்திராவின் குரலில் இருந்த குற்றச்சாட்டில், விருட்டென்று நிமிர்ந்து அவளை பார்த்தான் பசுபதி.
இந்திரா முன்பு இருந்த கோலத்தில் இப்பொழுது இல்லை. சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டு அவளை பார்த்தான்.
ஆனால், இந்திராவை பார்த்த பசுபதி, அடக்க மாட்டாமல் “ஹா…ஹா…” என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான்.
‘எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு?’ என்று சற்று திரும்பி, அந்த மர பீரோவில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்தாள் இந்திரா.
தன் உடலை மறைத்து விட்டாலும், அந்த சேலை அவளை சுற்றி இருந்தது அவ்வளவே. ‘ஜோக்கர் மாதிரி இருக்கேனா?’ என்று அவள் முகம் சோகத்தை வெளிப்படுத்த, “அன்னைக்கு, என்னை கடுப்பேத்த நீ போட்டிருந்த மினி ஸ்கர்ட்டை விட, இது ரொம்ப நல்லாருக்கு‘ என்று பசுபதி ஆறுதல் படுத்தவுது போல் கூற, அவன் மீசைக்கு கீழே இருக்கும் உதடுகள் சிரிப்பை அடக்கமாட்டாமல் மடிந்தது.
அவன் கேலியை உணர்ந்து, இந்திரா அவனை கடுப்பாக பார்க்க, மெத்தையில் சட்டமாக அமர்ந்தான் பசுபதி.
சுவரோரமாக தன்னை சுற்றி இருந்த சேலையை பிடித்ததபடி நின்று கொண்டிருந்த அவளை பார்த்து, “சரி… ஆத்தா சாப்பிட கூப்பிடுறாக. வா” என்று அழைத்தான் பசுபதி.
“இப்படியா?” என்று எரிச்சலை வெளிப்படுத்தினாள் இந்திரா.
“வேற டிரஸ் இல்லையா?” என்று பசுபதி புருவத்தை உயர்த்த, “ரேவதி அண்ணி சேலை இருக்கிற பெட்டி மட்டும் தான் வச்சிருக்காங்க போல. மத்த பெட்டி இன்னைக்கு வரும்.” சலிப்பாக கூறினாள் இந்திரா.
“சரி, நான் உதவி பண்றேன்.” என்று பசுபதி தீவிரமாக கூற, “என்ன விளையாடுறீங்களா?” என்று சீறினாள் இந்திரா.
பசுபதியின் குரலில் இருந்த தீவிரம், அவன் முகத்தில் இல்லை. அவன் கண்ணோரம் சுருங்கி, அவளை ஆராய்ந்தது. உதடும், அவன் தாடையும் மௌனமாக சிரித்தது.
“இப்ப என்ன பண்ணலாம் சொல்லு. ஆத்தா, உன்னை ரொம்ப நேரம் தேடுதாக, நீ இப்படியே வரியா? இல்லை என் உதவியை ஏத்துக்கறியான்னு நீ தான் முடிவு பண்ணனும்.” என்று பசுபதி கறாராக கேட்டான்.
“யார் உதவியும் வேண்டாம்.” அழுத்தமாக கூறினாள் இந்திரா.
“சரி, உன் இஷ்டம்.” தோள்களை குலுக்கி கொண்டு வெளியே சென்றான் பசுபதி.
“போன்னு சொன்னா போய்டுவானா? இவனெல்லாம் ஒரு ஆளு.” என்று முணுமுணுத்துக் கொண்டு, மீண்டும் சேலையோடு போராடினாள் இந்திரா.
அந்த சேலையை அவள் ஒரு பக்கம் பிடிக்க, அது ஒரு பக்கம் ஓடியது. ‘ஹொவ் டு டை எ சேரி? என்று யூட்யூபில் பல வீடியோக்கள் பார்த்தும் ஒரு பிரயோஜனமில்லை. அவளுகளுக்கு மட்டும் தான் அழகா வருது. நமக்கு ஒரு மண்ணும் வரலை.‘ அவள் மனதோடு புலம்பினாள்.
“நான் ஒரு பக்கம் இழுத்தா, அது ஒரு பக்கம் நழுவிகிட்டு போகுது.” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டே, தன் சேலை சுருக்கை மீண்டும் முதலில் இருந்து வைக்க மறுபடியும் கதவு தட்டும் ஓசை கேட்டது.
“இப்ப எதுக்கு நொச்சு நொச்சுன்னு கதவை தட்டுற?”அவள் சலிக்க, “அம்மா…” என்று ஒரு பெண் குரல் கேட்க, உள்ளே வரும்படி செய்கை காட்டினாள் இந்திரா.
“ஏதாவது உதவி வேணுமா?” என்று அந்த பெண்மணி கேட்க, அவள் உதவியோடு சேலை கட்டி கொண்டு வெளியே வந்தாள் இந்திரா.
‘நேரம் ஆகிருச்சோ, யாரும் எதாவது சொல்லுவாங்களோ?’ என்ற சந்தேகம் எழ, இந்திராவுக்கு படபடவென்று அடித்துக் கொண்டது.
‘என் நிலைமை இப்படியா ஆக வேண்டும்?’என்ற பச்சாதாபமும் ஒரு சேர எழுந்தது.
இந்திரா வர, “என்ன இப்படி உன் தலை முடியில் ஈரம் சொட்டுது? தலைக்கு துவட்ட கூட இல்லை. இதுக்குத்தேன் இவ்விளவு நேரமா?’ என்று கடிந்து கொண்டார் வடிவம்மாள்.
“கொண்டு வா… நான் துவட்டுறேன்.” என்று அவர் துவட்ட, அவர் துவட்டிய வேகத்தில் இந்திரா சற்று பயந்தே போனாள்.
இதமாகத்தான் இருந்தது. ஆனாலும்….
“பொன்னம்மா…இந்திராவுக்கு சாம்பிராணி போடு.” என்று வடிவம்மாள் கூற, ‘சாம்பிராணியா?’ என்று அதிர்ந்து போனாள் இந்திரா.
“எனக்கு பழக்கம் இல்லை.” என்று அவள் தடுமாற, “அதெல்லாம் பழகிக்கோ.” அதிகாரமாக ஒலித்தது அவர் குரல்.
‘எல்லாமே இவங்க முடிவு தானோ? இனி நான் நினைக்குறது எதுமே நடக்காதோ?’ என்ற கேள்வியே அவளுள் பூதாகரமாக எழுந்தது.
பசுபதி முதலில் அங்கு இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்தான். மீசையை முறுக்கியபடி, அவர்களை ஓரக் கண்களால் பார்த்தபடி, ‘எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.‘ என்பது போல் அமர்ந்திருந்தான்.
வடிவம்மாள், இருவரையும் சாப்பிட அழைத்தார்.
பசுபதி சாப்பிட அமர, “இந்திரா நீயும் உட்கார்.” என்று கூறி, வடிவம்மாள் பரிமாற உணவு எடுக்க அவர் உள்ளே சென்றார்.
பொன்னம்மா, உதவி செய்து கொண்டிருந்தாலும், சமையலறை அவர் கட்டுப்பாட்டில் நின்றது.
அவர் அதிகாரமும், சத்தமும் வீடெங்கும் ஒலித்தது.
“என் உதவி வேண்டாமுன்னு சொன்ன, இப்ப என் உதவி வேலை செய்த மாதிரி இருக்கு?” என்று இந்திரா கட்டியிருந்த சேலையை பார்த்தப்படி நக்கல் பேசினான் பசுபதி.
‘இது தான் இவன் சொன்ன உதவியா? தெளிவா சொல்லிருக்கலாமில்லை?’ என்பது போல, அவள் அவனை பார்க்க, அவள் பார்வையை புரிந்து அவன் புருவம் உயர்த்தினான்.
“நீ என்ன உதவின்னு நினைச்ச?” என்று பசுபதி புன்முறுவல் பூத்தப்படி கேட்க, “ஒண்ணுமில்லை…” என்று கூறி இந்திரா மௌனித்தாள்.
“நான் இந்த உதவியை தான் சொன்னேன். நீ வேற எதோ யோசிச்ச மாதிரி, உன் முகம் சொல்லுதே?” அப்பாவியாக கேட்டான் பசுபதி.
‘இல்லை அவன் அப்பொழுது பார்த்த பார்வை… நான் தான் எக்கு தப்பா யோசிச்சிட்டேனா?’ என்று அவனை குழப்பமாக பார்த்தாள் இந்திரா.
அதற்குள் வடிவம்மாள் வந்துவிட, இந்திரா “போதும், போதும்…” என்று கூறினாலும், “இது எப்படி காணும்? நாளைக்கு மூணு பிள்ளை பெத்து போடவாது உடம்பில் தெம்பு வேணாம்?” அவர் கடிந்து கொள்ள, ‘மூணா? அதுவும் இவனோட ஒரு வாழ்க்கையா?’ இந்திராவிற்கு மயக்கமே வந்தது.
வடிவம்மாள், சமையலறைக்குள் செல்ல இந்திரா பசுபதியை பரிதாபமாக பார்த்தாள்.
“என்னால, உண்மையில் சாப்பிட முடியலை. நான், லேசா ரெண்டு தோசை சாப்பிடுவேன். உங்க ஆத்தா தோசை, குண்டு குண்டா குண்டான் மாதிரி இருக்கு. ஒரு வாரத்துக்கு போதும் போல இருக்கு. இதுல கேசரி, வடை வேற.” என்று பரிதாபமாக கூறினாள் இந்திரா.
“நான் மூணு வேளை சேர்த்து கூட இவ்வளவு சாப்பிட மாட்டேன்.” அவள் தவிப்போடு கூற, “ஆத்தா, எனக்கு போதும்.” என்று கூறி இந்திரவிடமிருந்து எடுத்து கொண்டான் பசுபதி.
“தேங்க்ஸ்…” என்று இந்திராவின் குரலில் உண்மையில் நன்றி இருந்தது.
பசுபதி புன்னகைத்துக் கொண்டான்.
அவர்கள் உண்டு முடித்து அவர்கள் அறைக்குள் செல்ல, அங்கு ஒரு பெட்டி வீற்றிருந்தது.
“சுடிதார், லெக்கிங்ஸ், டாப்ஸ்… எப்படி?” என்று இந்திரா உரக்கவே சிந்தித்தாள்.
‘இதுலாம் இவன் ஏன் வாங்கி தரான்?’ இந்திராவின் கடுப்பு சற்று அதிகமானது.
“எடுத்து உள்ள வை.” என்று பசுபதி அதிகாரமாக கூற, “நீ எதுக்கு எனக்கு வாங்கி கொடுக்கணும்?” என்று இந்திரா இடக்கு பேச, “யாரும் அக்கறையில் வாங்கி தரலை. என்னால், தினமும் உனக்கு சேலை கட்ட உதவ முடியாது. அதுக்குதேன்.” என்று அசட்டையாக கூறினான் பசுபதி.
‘திமிரு பிடிச்சவன்.‘ என்று கறுவினாள் இந்திரா.
“கிளம்பி இரு. கோவிலுக்கு போகணும்.” பசுபதி ஆணை போல் கூற, “நீ மிரட்டி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டா, நீ சொல்றதை எல்லாம் நான் கேட்கணுமா?” முகம் சுழித்தாள் இந்திரா.
பசுபதி, முகம் சுழித்து தன் புருவத்தை நீவினான்.
“பணம் எனக்கு வேணும் தான். ஆனால், உன் பணத்தை பார்த்து நான் மயங்க மாட்டேன். எனக்கு உன்னை பிடிக்கலை.” ஆங்காரமாக கூறினாள் இந்திரா.
பசுபதி மீசையை முறுக்கி கொண்டு, அவளை பரிதாபமாக பார்த்தான்.
‘இது நீயாக தேடி கொண்டது.‘ என்பது போல் இருந்தது அவன் பார்வை.
“என்ன நல்லவன் வேஷம் போடுறியா? நீ யோக்கியன் மாதிரி பேசிட்டா, நான் உன்னை நல்லவன்னு நம்பணுமா? நீ எந்த விதத்தில் நல்லவன்?” என்று கேட்டாள் இந்திரா.
“அந்த காலத்துல கூட, சுயம்வரம் நடந்து பொண்ணுங்க தான் தன் கணவனை தேர்ந்து எடுத்தாங்க. மிருகத்தில், பறவைகளில் கூட பெண் இனம் தான் ஆணை தேர்ந்தெடுக்கும். நீ கற்காலத்தை விட முன்னோக்கி இருக்க. மிருகத்தை விட மோசம்.” அன்று வெளிப்படுத்த முடியாத கோபத்தை இன்று அவன் காட்டிய தோரணையில் வெளிப்படுத்தினாள் இந்திரா.
பசுபதி அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்தான்.
“எங்க அண்ணனை மிரட்டிருக்க? பிடிக்காத பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணிருக்க? என் கிட்ட தப்பா நடந்திருக்க? நீ எல்லாம் எந்த விதத்தில் யோக்கியன்? மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிருச்சா?” என்று இந்திரா காட்டமாக கேட்டாள்.
பசுபதி, தன் கண்களை சுருக்கி அவளை ஆராயும் விதமாக பார்த்தான்.
“நீ ஏற்பாடு பண்ணின, இந்த கல்யாணத்தை நிறுத்த என்னால, முடியலை. அது தான் கட்டிகிட்டேன். இங்க வந்திருக்கேன். அவ்வுளவு தான். இந்த அதிகாரம் பண்ற வேலை, என்னை மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். என்கிட்டே எதுவும் நடக்காது.” என்று கோபமாக கூறினாள் இந்திரா.
அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் பசுபதி.
பசுபதியின் இந்த சிரிப்பு, இந்திராவிடம் சற்று அச்சத்தை கிளப்பியது. ‘இவனை பார்த்து எனக்கு என்ன பயம்?’ என்று அந்த எண்ணத்தை ஒதுக்கி விட்டு, மேலும் பேசினாள் இந்திரா.
“என்னை நீ திருத்த போறியா? அதுக்கு தான் கல்யாணம் செஞ்சிருக்கேன்னா அந்த எண்ணத்தை குப்பையில் போடு.” தெளிவாக பேசினாள் இந்திரா.
“யாரும் திருத்த வேண்டிய நிலையில் நான் இல்லை. நான் எந்த தப்பும் பண்ணலை. ரகு விஷயத்தில் நான் பண்ணது பிசகு. சரி ஒத்துக்கிறேன். நான் விலகிடுறேன்னு சொல்லியும், நீ ஏன் கல்யாணத்தை நிறுத்தலை?” என்று நேரடியாக கேட்டாள் இந்திரா.
நேற்று இருந்த பசுபதியை பற்றிய சந்தேகம், குழப்பம் இன்று இந்திராவுக்கு இல்லை.
‘நேற்றையை களைப்பு இன்றில்லை என்பது காரணமோ? இல்லை, பசுபதியை பற்றிய பயம் ஒதுங்கி விட்டதோ?’ என்று இந்திராவுக்கும் காரணம் தெரியவில்லை.
“இந்த தாலி சென்டிமென்ட் எல்லாம் என் கிட்ட கிடையாது. நான், இதுக்கெல்லாம் அசர மாட்டேன்.” என்று அசட்டையாக, அவன் கட்டிய தாலியை அவன் முன் நீட்டினாள் இந்திரா.
“இந்த தாலிக்காக, எனக்கு உன் மேல பாசம் வரலாமுன்னு நீ நினைச்சா, அது உன் முட்டாள் தனம். எனக்கு உன்னை ஒரு நாளும் பிடிக்காது. அதுக்காக, நான் இங்கிருந்தும் போக மாட்டேன். இங்க, தான் இருப்பேன். என்னை ஏன் கல்யாணம் செய்தோமுன்னு நீ வருத்த படனும். உன்னை வருத்த படவைப்பேன்.” என்று அவனை மிரட்டினாள் இந்திரா.
பசுபதி சிரித்து கொண்டான். “பாசம் வருமான்னு தெரியாது. ஆனால், நீ கோவிலுக்கு வருவ?” என்று அவள் ‘அத்தனை நேரம் பேசியது அனைத்தும் ஒன்றுமில்லை‘ என்பது போல் கண்சிமிட்டினான் பசுபதி.
‘இவன் எதற்கும் அசர மாட்டானா?’ என்ற எண்ணத்தோடு இந்திரா அவனை பார்க்க, “பேச்சு முடிஞ்சிதா? இல்லை இன்னும் இருக்கா?” என்று நாற்காலியில் இருந்து எழுந்தான்.
அவன் காட்டிய அலட்சியத்தில், அவனை நெருங்கி அடுத்த ஆயுதத்தை வீசினாள் இந்திரா.
“எனக்கு மட்டும் தான் தாலி கட்டிருக்கியா? இல்லை இன்னும் நிறைய பேருக்கு கட்டிருக்கியா?” என்று அசராமல் கேட்டாள் இந்திரா.
இத்தனை நேரம் இந்திரா பேசிய பேச்சு பசுபதிக்கு புரிந்தது. ஆனால், இந்த கேள்வி புரியாமல் போக, அவன் அவளை குழப்பமாக பார்த்தான்.
“என்ன புரியலையா? இல்லை, உன் அம்முக்குட்டிக்கு பிரச்சனையா இருக்கிற எல்லாம் பொண்ணுகளையும் நீ கல்யாணம் கட்டணுமுன்னா, நீ இது வரைக்கும் எத்தனை பொண்ணுகளை கட்டிருக்கணும்னு யோசிச்சேன்? இல்லை இன்னும் எத்தனை பொண்ணுகளை கட்டணுமுன்னு யோசிச்சேன்?” என்று இந்திரா அப்பாவி போல் கேட்டு பசுபதியை, கிடுக்கு பிடியில் நிறுத்தினாள்.
“இல்லை, என் அழகையும், நிறத்தையும் பார்த்து மயங்கி கட்டிகிட்டியா?” என்று, தோரணையாக கேட்டாள்.
இந்திராவின் கேள்வியில், அவளை பார்த்து, ‘அழகி தான்…‘ ஒத்து கொண்டது பசுபதியின் மனம்.
“இனி, என் குறி ரகு இல்லை. இப்ப, என் குறி உன் அம்முக்குட்டி தான். எந்த அம்முகுட்டிக்காக இந்த கல்யாணம் நடந்ததோ, அந்த அம்முக்குட்டி ஒரு நாளும், அந்த வீட்டில் சந்தோஷமா வாழ மாட்டா. நான் இங்க வந்துட்டா மட்டும் எல்லாம் சரியாகிருமா? என்னை அவ்வளவு சீக்கிரம், யாரும் எதுவும் பண்ண முடியாது.” என்று சவால் விட்டாள் இந்திரா.
மொத்தத்தில் தன் வார்த்தைகளை கூர்வாளாக இறக்கி, பசுபதியை கோபமாக பார்த்தாள் இந்திரா.
பசுபதியின் பொறுமை, ‘அம்முக்குட்டி…‘ என்ற சொல்லில் உடைபட்டு, தெறித்து ஓடியது.
தன் முன் கோபமாக, கனலாக தகித்து கொண்டிருந்த இந்திராவின் கைகளை அழுந்த பிடித்து இழுத்தான். அவளை சுவரோடு சாய்த்து, ஒற்றை விரலால், அவள் தொண்டையை அழுத்தினான் பசுபதி.
பசுபதி கொடுத்த அழுத்தத்தில், இந்திராவின் கழுத்து பகுதி சிவந்தது. அவள் நிறம், அந்த சிவப்பை எடுத்து காட்டியது.
வலி தாங்காமல், இந்திரா முகத்தை சுழித்தாள்.
அவள் தோளுக்கும், கழுத்துக்கும் இடையில் இருந்த அந்த கருமச்சம், இப்பொழுது கன்றி சிவந்த கழுத்தோடு ஒன்றிவிட்டது.
பசுபதியின் முகத்தில், ‘யார்கிட்ட?’ என்பது போல் ஏளன புன்னகை.
“உன் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க தான் உன்னை இவ்வளவு நேரம் பேசவிட்டு வேடிக்கை பார்த்தேன். உன்னை இஷ்டப்படி பேசிவிட இல்லை.” பசுபதி மெதுவாக, அவள் காதருகே கூறினான்.
அது கிசுகிசுப்பாக ஒலிக்கவில்லை. மிரட்டலாக எதிரொலித்ததது. இந்திரா, அவனை முறைக்க, அவன் விரலின் அழுத்தம் கூடியது.
அவள் கண்களில் தெரிந்த, முறைப்பு, நேரம் செல்ல செல்ல வலியை வெளிப்படுத்த, அவன் விரலின் அழுத்தத்தை சற்று தளர்த்தினான் பசுபதி.
இந்திரா, “லொக்… லொக்…” என்று இருமினாள்.
தன் விரல்களை எடுத்து, அவள் கழுத்தை விடுவித்தான் பசுபதி.
இந்திராவின் மூச்சு சீரானது. தன் தலையை குனிந்த படி நின்று கொண்டிருந்தாள்.
தன் ஆள் காட்டி விரலால், அவள் கன்னத்தை வலிக்காதவாறு, நிமிண்டினான். இந்திரா அழுத்தமாக தலையை குனிந்து கொண்டிருந்தாள்.
தன் ஆள் காட்டி விரலால், அவள் முகத்தை உயர்த்தினான். அவள் முகத்தில் சீற்றம் குடிகொண்டிருந்தது.
“நான், அயோக்கியான் இல்லைனு தான் சொன்னேன். நல்லவன்னு சொல்லலை. கெட்டவன். ஹீரோ தான். ஆனால்…” சிரித்தான் பசுபதி.
“எப்படி பட்ட ஹீரோன்னு உனக்கு இன்னுமா தெரியலை?” அவள் முகம் பார்த்து கேலியாக சிரித்தான் பசுபதி.
இந்திரா கூர்வாளாக இறக்கிய கேள்விக்கு பதிலை, இருமுனை கத்தியாக்கி அவள் பக்கம் இறக்கினான் பசுபதி.
அந்த இருமுனை கத்தி காலப் போக்கில், இருவரையும் குத்தி கிழிக்கப்போவது தெரியாமல்!
அந்த இருமுனை கத்தி இவர்களை மட்டும் பாதிக்குமா? இல்லை, இவர்களால் பலரின் வாழ்க்கையும் குத்தி கிழிக்கப்படுமா?
பொழுதுகள் விடியும்…