AnthaMaalaipozhuthil-24

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 24

            பசுபதி சற்று விரலை தளர்த்தியதும், இந்திராவின் மூச்சு சீராக, ‘அம்முக்குட்டி, இவன் பலவீனம்.அவளை வச்சி இவனை அடிக்கணும். இவனை அவளை அடிக்கணும்.கணக்கிட்டு கொண்டது இந்திராவின் மனம்.

      பசுபதி, அவள் முகத்தை கூர்மையாக பார்த்தான்.

   “என்ன கணக்கு போடுற?” அவன் கண்களில், ஏளன புன்னகை.

இந்திரா பதில் கூறாமல், அசட்டையாக எங்கோ பார்த்தப்படி நின்று கொண்டிருந்தாள்.

      அவளிடமிருந்து விலகி, எதிரே இருந்த வேலைப்பாடு மிகுந்த, மிக பெரிய  தேக்கு மரநாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் பசுபதி.

     இந்திரா பசுபதியை ஓர கண்களால் அளவிட்டாள். வெள்ளை நிற வேஷ்டி, முறுக்கு மீசை, விவசாயம் செய்து  உழைப்பில் முறுக்கேறிய உடல். வாள் மட்டும் தான் இல்லை. பெரிய அரசன்னு நினைப்பு.தன் உதட்டை சுளித்து கொண்டாள்.

     அதே நேரம், பசுபதி இந்திராவை பார்த்து, “பார்க்க ஆள், நல்லா தான் இருக்க” என்று பேச ஆரம்பிக்க, ‘நல்லா தான்னு? என்ன சலிப்பு? இவன் சலித்துக் கொள்ளும் அளவுக்கா நான் இருக்கேன். திமிர் பிடிச்சவன்.மனதிற்குள் பொருமினாள் இந்திரா.

   “உன் பேச்சு, கேள்வி கூட நல்லா தான் இருந்தது. ஆனால், அதை நீ கேட்ட பாரு, அது தான் செம சிரிப்பானியா இருந்துச்சு. ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரிப்போடு முடித்தான் பசுபதி.

 

    “ஹலோ…. நீ சிரிக்க, நான் ஜோக் சொல்லலை. நான் நியாயத்தை கேட்டேன்.” இந்திரா சிலுப்பிக் கொள்ள,  ” ஓ… அடுத்தவன் புருஷனை நினைக்கும் பொழுதும், திருட்டு தனமா தாலி கட்டும் பொழுதும் உன் நியாயம் எருமை மாடு மேய்க்க போயிருந்துதா?” என்று பசுபதி பற்களை நறநறத்தான்.

    “எருமை, கருமைன்னு சொன்னா…” என்று இந்திரா, ஒற்றை விரல் உயர்த்தி, மிரட்ட எத்தனிக்க, “என்ன டீ பண்ணுவ?” என்று அவளை நெருங்க, ‘டீ யா?’ என்ற கடுப்பு மனதில் எழுந்தாலும், இந்திரா அவனை சற்று மிரட்சியாக பார்த்தாள்.

    அவள் கண்களில் தெரிந்த, கலக்கத்தில் பசுபதி தன்னை நிதானித்து கொண்டான்.

                 “இந்த பார். நீ கேட்டியே, எத்தனை பேருக்கு தாலி கட்டணுமுன்னு? அம்முக்குட்டிக்கு யார் மூலமா பிரச்சனை வந்தாலும் தாலி கட்டமாட்டேன். தீர்த்து கட்டிருவேன். நம்ம ஊர்ல, நான் நினைச்சா எந்த கேஸை எப்படி  மூடணுமுன்னு எனக்கு தெரியும் என்று அசட்டையாக கூறினான் பசுபதி.

“உன்னை தீர்த்து கட்டிருப்பேன். ஆனால்,” என்று பசுபதி நிறுத்த,  இந்திரா, அவனை யோசனையாக பார்த்தாள்.

 

         “உன்னை தொட்டா, உங்க அண்ணனுக்கு வலிக்கும். அது உங்க மதினியை பாதிக்கும்.அது ரகுநந்தனை பாதிக்கும். ரகுநந்தனுக்கு, எந்த பாதிப்பும் வர கூடாது.” என்று அழுத்தமாக கூறினான் பசுபதி.

     “ரகுநந்தன், எனக்கு ரொம்ப முக்கியம். ரகுநந்தன் சந்தோஷமா இருக்கனும். அப்ப தான், என் அம்முக்குட்டி சந்தோஷமா இருப்பா.  பிரச்சனையின் மைய புள்ளி  நீ. அந்த மைய புள்ளி, என் கட்டுப்பாட்டில் இருக்கனும். நீ, என் பக்கத்தில் இருந்தா உங்க அண்ணன் சரியா இருப்பான்.” என்று பசுபதி நிதானமாக, தான் காரியத்தை வெற்றிகரமாக சாதித்த பெருமையோடு கூறினான்.

        “அதுக்கு எங்க அண்ணனை மிரட்டி இருக்க?” என்று கோபமாக கேட்டாள் இந்திரா.

 அவள் அண்ணன், என்று அழைக்கும் பொழுது, அவன் கண்களில் நொடி பொழுதில் வந்து சென்ற கனிந்த பார்வையை மனதில் குறித்து கொண்டான் பசுபதி.

   ‘இல்லை…என்று பசுபதி மறுத்திருக்கலாம். ஏனோ, அவனுக்கு மறுக்க மனமில்லை, ‘எது நடக்க வேண்டுமோ, அது  நடந்தே தீர வேண்டும், என்பது விதியின் செயல் என்றால், யார் எதை மாற்ற முடியும்?’ என்பது போல் நடந்து கொண்டான் பசுபதி.

    “இவ்வளவு யோசிக்குற நான், எதை எப்படி செய்யணுமுன்னு யோசிக்க மாட்டேனா? இல்லை உன்னை பத்தி விசாரிச்சிருக்க மாட்டேனா?” என்று பொது படையாக முடித்துவிட்டான் பசுபதி.

           “ரகுநந்தன் குடி போதையில் இருக்கும் பொழுது நீ பண்ண எல்லாம் எனக்கு தெரியும். இந்த குடி பழக்கம் எனக்கு சுத்தமா பிடிக்காது. கொலை பண்றவன் கிட்ட கூட சில சமயம் நியாயமான காரணம் இருக்கும். ஆனால், குடிக்கிறவனை, வீட்டு நடை ஏத்த மாட்டேன். அந்த வகையில் எனக்கு ரகுநந்தனை பிடிக்கலை.” என்று கூறி, “ம்… ச்…” கொட்டினான் பசுபதி.

   “அம்முக்குட்டிக்கு குடிகார மாப்பிள்ளையான்னு? ஒரு வருத்தம் இருந்தது. ஆனால், இப்ப ரகுநந்தனுக்கு எந்த பழக்கமும் இல்லை மாதிரி தான் தெரியுது.” என்று பெருமூச்சு விட்டான் பசுபதி.

 

   “ரகுக்கு அப்படி எல்லாம் மொடா குடிகாரன் கிடையாது. ஜஸ்ட் சோசியல் ட்ரிங்கிங். அது எப்பவாது, அதிகம் ஆகும் அவ்வளவு தான்.” என்று இந்திரா முணுமுணுப்பாக கூற, “எப்படி, ஒரு பொண்ணு தாலி கட்டி பிரச்சனை பண்ற அளவுக்கா?” என்று நக்கலாக கேட்டான் பசுபதி.

   “என்னத்த சோசியல் ட்ரிங்கிங். குடிகாரன், குடிகாரன் தானே?” என்று தோள்களை குலுக்கினான் பசுபதி.

         ‘இவனுக்கு இப்படி ஒரு கொள்கையா?’ என்று அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள் இந்திரா.

   அவள் பார்வையை அவன் கண்டுகொண்டது போல் தெரியவில்லை.

            “நான் என் வாழ்க்கையை பத்தியோ, உன் வாழ்க்கையை பத்தியோ யோசிக்கலை.  உன்னை , கொடுமை பண்ணவோ, பழிவாங்கவோ கல்யாணம் பண்ணற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ” என்று தெளிவாக பேசினான் பசுபதி.

         நானும், யாரையாவது கல்யாணம் பண்ணனும். ஊர் வாயை, முதலில் எங்க ஆத்தா வாயை அடைக்கணும். அதுல, எந்த பொண்ணோட வாழ்க்கையும் நாசமாக கூடாது. அது தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன், காதல் பக்கங்கள் காற்றோட போய் ரொம்ப நாள் ஆகுது. நான் உனக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யலை.” என்று நிறுத்தி நிதானமாக அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு பேசினான் பசுபதி.

      இந்திராவின் உதடுகள் இப்பொழுது ஏளனமாக மடிந்தது.

                  “நீ ஓரளவுக்கு தான் மார்டன்னு, எனக்கு தெரியும். அன்னைக்கு, நீ வந்த நோக்கமும் எனக்கு தெரியும். உன் சுதந்திரத்தில், நான் அதிகம் தலையிட மாட்டேன். பெண்கள், விருப்பப்படுறதை, படிச்சி அவங்க காலில் அவங்க நிற்கணுமுன்னு நினைக்கிறவன் நான். உன், விருப்பத்திற்கு நிச்சயம் மதிப்பு இருக்கும். ஆனால், இந்த ஊருக்கு நான் உன் புருஷன், நீ என் பொஞ்சாதி.  அதை, நான் எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டேன்.” என்று பசுபதி கூற, கலகவென்று சிரித்தாள் இந்திரா.

   ‘என்ன சிரிப்பு?’ என்று பசுபதி ஒற்றை புருவம் வளைத்து, அவளை கேள்வியாக பார்க்க, “சாத்தான் வேதம் ஓதுற மாதிரின்னு கேள்வி பட்டிருக்கேன். இன்னைக்கு தான் நேரில் பார்த்தேன்னா, சிரிப்பு வந்திருச்சு.”  என்று கழுத்தை வளைத்து அழகு காட்டி, மீண்டும் பசுபதியை கேலி செய்து கலகலவென்று சிரித்தாள் இந்திரா.

     பசுபதியின் கண்கள் அவளை கேலியாக பார்க்க, இந்திரா இப்பொழுது தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டாள். 

   ‘கோபப்படுவான்னு பார்த்தா, இவன் ஏன் சிரிக்குறான்?’ என்ற சந்தேகம் எழ , இந்திராவின் சிரிப்பு சட்டென்று நின்று அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள் பரவியது.

     “கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி நீ பேசினது கூட, பெண் சாத்தான் வேதம் ஓதுற மாதிரி தான் இருந்தது. ஜோடி பொருத்தம், பிரமாதமில்லை?” என்று பசுபதி மீசையை முறுக்கினான்.

    “ரகுநந்தனுக்கு செஞ்சதை எனக்கு செஞ்சிருந்தன்னு வை, நான் உன்னை இப்படி விட்டிருக்க மாட்டேன். உன் சங்கை நெரிச்சிருப்பேன். ரகு, அளவுக்கு நான் நல்லவன் இல்லை. சில விஷயத்தில், நான் சாத்தான் தான்.” என்று கூறி சிரித்தான் பசுபதி.

       அறை எங்கும் எதிரொலித்த அந்த சிரிப்பு, அத்தனை உவப்பானதாக இல்லை.

  தன் சிரிப்பை நிறுத்திவிட்டு, “அம்முக்குட்டி விஷயம் வரும் பொழுது, நான் எப்படி மாறுவேன்னு எனக்கே தெரியாது. மத்த விஷயத்தில் நான் கொஞ்சம் நல்லவன் தான்.” என்று அவளை மிரட்டுவது போல் மிரட்டி, சமாதானம் பேசினான் அந்த முரட்டு கணவன்.

    “அம்முக்குட்டிக்கு உன் அன்பு புரிஞ்சிருந்தா, அவள் ஏன் இன்னொருத்தனை கட்டிக்க போறா? உன்னை விட, ரகு ஸ்டைலா இருக்கிறதால கட்டிக்கிட்டாளா? இல்லை, உன்னை பிடிக்காததால கட்டிக்கிட்டாளா உங்க அம்முக்குட்டி? படிப்பு காரணமா இருக்காது. நீயும் படிச்சிருக்க…” என்று யோசனையாக நக்கல் பேசினாள் இந்திரா.

      பசுபதி, தன் கண்களை இறுக மூடி  கொண்டான். அவன் கை முஷ்ட்டி இறுகியது.

அவன் நரம்புகள் புடைத்து, அவன் உணர்வுகளை ஆட்கொண்டது.

     அவன் முகத்தில் தெரிந்த வலியில், அவள் மனம் இனித்தது.

       “உன்னை வேண்டாமுன்னு தூக்கி போட்டுட்டு போனவ மேல, இப்படி உருக வெட்கமா இல்லை?” என்று வார்த்தைகளை கத்தியாக்கி  அவன் இதயத்தில் சொருவினாள் இந்திரா.

                  பசுபதி, ஆழ மூச்செடுத்து தன்னை நிதானித்து கொண்டான்.

   இந்திராவை ஆழமாக பார்த்தான்.

            “நான் பண்ண தப்பினால், அம்முக்குட்டி ரகுநந்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. என் சம்மதத்திற்கு அப்புறம் தான் ரகுநந்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அம்முக்குட்டி. நான் மறுத்திருந்தா, இந்த கல்யாணம், எவன் நினைச்சாலும் நடந்திருக்காது.” வார்த்தைகளை உளி கொண்டு செதுக்குவது போல் அழுத்தமாக கூறினான் பசுபதி.

 

         “காதல்… எனக்கு அம்முக்குட்டி மேல, காதலா? தெரியாது. ஆனால், பாசம் அம்முக்குட்டி சந்தோஷமா மட்டும் தான் இருக்குமுன்னு சொல்ற அளவுக்கு அன்பு. எங்க ஆத்தாவை கூட, அவங்க பிறந்ததில் இருந்து நான் பார்த்ததில்லையே? ஆனால், அம்முக்குட்டியை பிறந்தத்திலுருந்து பார்க்குறேன்.ரசனையோடு கூறினான் பசுபதி.

என்னை, வேண்டாமுன்னு அவ சொல்லிருந்தா கூட, அவ நாசமா போகணுமுன்னு நினைக்குற விடலை பையன் காதல் இல்லை இது. ஆனால், அம்முக்குட்டி என்னை வேண்டாமுன்னு சொல்லவே இல்லை. அம்முக்குட்டி…” என்று பசுபதி மீண்டும் ஆரம்பிக்க, இந்திராவின் கண்களில் தெரிந்த பளபளப்பில்,  தன்னை சமன்படுத்தி  கொண்டான் பசுபதி.

  ‘அதற்கு மேல் பேசுவது அத்தனை உசிதமல்ல.என்று தன் பேச்சை அங்கு நிறுத்தி கொண்டான் பசுபதி.

  “இந்த பார், அம்முக்குட்டி பத்தி பேச கூட தகுதி வேணும். அம்முக்குட்டி, சொன்னால், செஞ்சா எல்லாம் நியாயமா இருக்கும். உனக்கு அதெல்லாம் தேவை இல்லை. நான் அதை, உன்கிட்ட சொல்லணும்ன்னு கூட அவசியமில்லை. அதை கேட்க கூட, உனக்கு தகுதி இல்லை.” இந்திரா அவன் மனதில் இறக்கிய கத்தியை, அவள் பக்கம் இறக்கிவிட்டு அறையை  விட்டு வெளியே சென்றான் பசுபதி.

      “ஏலே, பசுபதி. ஐயர், ஏதோ வேலைன்னு இன்னைக்கு பூஜை பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதனால், இரண்டு நாள் கழித்து தான் நம்ம சாஸ்தா கோவிலுக்கு போகணும்.” என்று வடிவம்மாள் கூற, தலை அசைத்து வெளியே சென்றான் பசுபதி.

     ‘இவர்களுக்குள், என்ன நடந்திருக்கும்? அது ரகுநந்தனுக்கு தெரிந்திருக்குமா?’ என்ற சந்தேகம், இந்திராவுக்கு எழுந்தது.

 

        ‘இதை, எப்படி தெரிஞ்சிக்கறது?’ என்று இந்திரா சிந்திக்க, பசுபதி பேசிய பேச்சு அவளிடம் அலைமோதியது.

       ‘அன்பு… காதல்... பாசம்… இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம்?’ என்ற சந்தேகமும், அவள் மனதில் எழும்பியது.

     அதே நேரம், ரகுநந்தன் தீவிர சிந்தனையில் இருந்தான். அபிநயாவின், மனமாற்றத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

        ஆனால், அவளிடம் என்ன பேசுவது? எப்படி எப்படி பேசுவது என்று தான் ரகுநந்தனுக்கு புரியவில்லை.

    அபிநயா, அவர்கள் அறையில் பீரோ மேலே எதையோ அடுக்கி கொண்டிருந்தாள்.  அப்பொழுது, அவள் கண்களில்  அவர்கள் திருமணம் புகைப்படம் பட்டது.

    அது சற்று சரிந்தார் போன்ற எண்ணம் வர, அந்த முக்காலியை அந்த புகைப்படம் அருகே இழுத்து போட்டு, அதை சரி செய்தாள்.

     அப்பொழுது, ரகுநந்தன் அவர்கள் அறைக்குள் சென்றான்.

           அபிநயாவின் செய்கையை ரசித்தபடி சுவர் ஓரமாக சாய்ந்து நின்றான்.

     அபிநயா, ரகுநந்தனை கவனிக்கவில்லை. அவள் கவனமோ, புகைப்படத்தில் இருந்த ரகுநந்தனில் ஆழ்ந்து விட்டது.

புகைப்படத்தில் இருந்த ரகுநந்தனை வரி வடிவமாக தீண்டினாள்.

    ரகுநந்தனின் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை. ஓ! இதெல்லாம் வேற நடக்குதா?’

    “உங்களுக்கு கல்யாணம் பிடிக்காது?” புகைப்படத்தில் இருக்கும், அவன் தலையில், “நங்…” என்று கொட்டினாள்.

    அதிர்ச்சியடைந்த ரகுநந்தன், தன் தலையை தடவி கொண்டான். நல்ல வேளை. நேரில் விழலை.சற்று அமைதி கொண்டது அவன் மனம்.

    புகைப்படத்தை அவள் ஆழமாக பார்த்து கொண்டிருக்க, அவன் அவளை அழமாக பார்த்தான்.

     புகைப்படத்தில், அவன் கன்னத்தை  திருகி, “பொய்… வாயை திறந்தாலே வரது எல்லாம் பொய்.” அவள் தன் இடுப்பில் கை வைத்து, தான் முக்காலியில் நின்று கொண்டிருப்பதை மறந்து அசைந்த படி அவனை திட்ட, அந்த முக்காலி ஆட்டம் கொண்டது. திட்டுவதில் அத்தனை சுவாரசியம்!

      அபிநயா, நிலை இல்லாமல் தடுமாற, ஓடி வந்து அவளை கீழே விழாமல் கைக்களில் ஏந்தினான் ரகுநந்தன்.

       அச்சத்தில் இருந்த அபிநயா, அவள் கழுத்தை இறுக கட்டிக்கொண்டாள்.

      ‘பூ…என அவள் குணத்தை உணர்ந்தவன், இன்று பூக்குவியலாக அவளை தாங்கி கொண்டான்.

      அவன் கண்டிராத மென்மையை அவன் ஏந்திட, அவள் கண்டிராத கதகதப்பை அவள் உணர்ந்திட இருவரும் தங்கள்  உலகத்தை மறந்து, அவர்கள் உலகத்தில் மூழ்கினர். 

    காதல் என்னும் அலை, அவர்களை மூழ்கடிக்க…

    அவனின் பார்வை அவளிடம்…

    அவளின் பார்வை அவனிடம்…

    அவள் அவனை கண்டுகொண்டாளா? அவன் அவளை    கண்டுகொண்டானா?

    பொழுதுகள் விடியும்…