AnthaMaalaiPozhuthil-28

AnthaMaalaiPozhuthil-28

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 28

  அபிநயாவின் முக ஜொலிப்பை கணக்கிட்டபடி, “ரொம்ப சந்தோஷமா இருக்க போல? எல்லாரோட சந்தோஷத்தையும் பறிச்சிக்கிட்டு?” இந்திராவின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

           அபிநயாவின் கண்கள் பெரிதாக விரிந்தன. ஒரு சில வார்த்தைகள் தான். ஆனால் இந்திராவின் குற்றச்சாட்டு அவளை நிலை குலைய வைத்தது.  நான் அடுத்தவங்க சந்தோஷத்தை பறிச்சிட்டேனா?’ அபிநயாவால், அந்த சொல்லை தாங்க முடியவில்லை.

     அபிநயாவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, இந்திராவுக்கு சற்று சுவையாகவே இருந்தது.

    ரகுநந்தன் தாலி கட்டும் புகைப்படத்தை காட்டும் பொழுது அபிநயா முகத்தில் வராத அதிர்ச்சி இன்றாவது வந்ததில் இந்திராவுக்கு பரம திருப்தி.

    “உங்க அத்தான் உன் முன்னாள் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கறாங்க. என் கூட சந்தோஷமா இருக்க முடியுமா? இல்லை நான் தான் விட்டிருவேனா?” என்று இந்திரா, அபிநயாவை குறி பார்த்து அடித்தாள்.

         தன் மேல் விழுந்த குற்றச்சாட்டை விட, இந்திராவின் இந்த வார்தைகள் அவள் நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது போல் வலித்தது.

     தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.  அத்தான்… அத்தான்… அத்தான்…என்று அவள் மனம் ஓலமிட்டது.

      அபிநயாவின் முகத்தில் தெரிந்த அழுத்தத்தில், இந்திராவின் உதடுகள் புன்னகையில் மடிந்தது.

       அபிநயா நிலைகுலைந்து போனாள். ஆனால், நிலை குலைந்து போனது ஒரு நொடி தான்.

      ‘நான் அழ கூடாது. என் கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் வெளியே வந்திற கூடாது.தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.

       தன் கண்களை திறந்து, இந்திராவை பார்த்தாள்.

         ‘என்னை பார்த்து எப்படி இப்படி சொல்லலாமுன்னு நான் கேட்டா, இவ என்ன ஆவா?’ என்ற எண்ணம் அபிநயவுக்கு எழுந்தது.

   ‘இவுக சும்மா விடுவாகளா இவளை? இல்லை, அத்தான் தான் இவளை சும்மா விடுவாகளா?’ என்ற எண்ணம் அபிநயாவுக்கு முகத்தில் பிரதிபலிக்க, ‘பேசு… நீ பேச தான் காத்திருக்கிறேன். அங்க ஆரம்பிக்குறேன், என் வேலையை…என்ற காத்திருப்பு இந்திராவின் கண்களில் இருந்தது.

      ‘இவளை உண்டில்லைனு நான் பண்றேன்.என்று அபிநயா பேச எத்தனிக்க, இந்திராவின் கழுத்தில் உள்ள தாலி அபிநயாவை பரிதாபமாக பார்த்தது.

      ‘இவள், அத்தானின் மனைவி அல்லவா?’ என்ற கேள்வி அவள் மனதை தொட்டது.

      ‘பசுபதி அத்தானின் மனைவியை, நான் என்னனு சொல்வேன்?’

இந்திரா மறைந்து போனாள்.  பசுபதியே நிறைந்து நின்றான்.

அவள் மனம் இப்பொழுது அவள் அத்தானின் மனைவி மீது பாசம் மட்டுமே கொண்டு தவித்தது.

    ‘என்றாவது ஒரு நாள், எல்லாம் சரி ஆகும். இவள் வயிற்றில் பிறக்கும் அத்தானின் குழந்தைக்கு, நானும் தாய் தானே? அந்த குழந்தைகள் என்னை சித்தி என்று அழைக்கையில், இவள் என் சகோதரி அல்லவா?’ அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து, அபிநயாவை மௌனிக்க செய்தது.

    இந்திரா, அபிநாயாவின் மௌனத்தில், பொறுமையில் சற்று அசந்து தான் போனாள்.

 ‘இவள் சாமர்த்தியசாலி. இன்று அபிநயா கோபம் கொண்டிருந்தால் நிலை வேறாகிருக்கும்.இந்திராவின் ஆசை நிராசையாக போனதில் அவள் முகம் சுண்டைக்காயாக சுருங்கியது.

        ஒரு நிமிடம் என்று கூறி கொண்டு அவள் அறைக்கு சென்று, ஒரு பரிசுப் பொருளை எடுத்து வந்தாள் அபிநயா.

                        அதில்  ஒரு சிவப்பு கல் மோதிரம் இருந்தது.

இந்திராவின் கைகளை பிடித்து, அதில் மோதிரம் அணிவித்தபடியே, “இது என் அத்தானோட மனைவிக்கான பரிசு.” என்று கூறி அழகாக புன்னகைத்தாள்.

                       ‘நீ கூறிய வார்த்தைக்கு, நீ என் அத்தானின் மனைவி என்பதால் சும்மா விடுகிறேன் என்ற எச்சரிக்கையா இந்த புன்னகையும் பரிசும்?’ என்ற சந்தேகம் இந்திராவின் மனதில் எழுந்தது.

           “கிளப்புவோமா?” என்று பசுபதியின்   குரல் வந்த திசையை நோக்கி இந்திரா வேகமாக செல்ல, ‘அத்தான் சந்தோஷமா இருபாகளானு தெரியாது. ஆனால்இவ மிரட்டல் எல்லாம் அத்தான் கிட்ட நடக்காது.அபிநயாவின் மனம் உறுதியாக நம்பியது.

              பசுபதி வீட்டை நோக்கி வண்டியை செலுத்த, “உனக்கும், உன்  அம்முக்குட்டிக்கும் என்ன பிரச்சனை?” என்று நேரடியாக கேட்டாள் இந்திரா.

   பசுபதி பதிலளிக்கவில்லை. புன்னகைத்துக் கொண்டான்.

 “என்ன பிரச்சனைன்னு கேட்டேன்?” இந்திராவின் குரல் சற்று உயர்ந்தது.

         சாலையில் கவனத்தோடு ஜீப்பை செலுத்தியபடி, “இல்லாத பிரச்சனையை, என்னனு கேட்டா நான் என்ன சொல்லுவேன்.” அசட்டையாக கூறினான் பசுபதி.

    “இல்லை, நீ என் கிட்ட பொய் சொல்ற. உண்மையை சொல்லு. எனக்கு தெரியணும்.” இந்திரா பிடிவாதமாக கூறினாள்.

        “ஆமா, பொய் தான் சொல்றேன்.” தோள் குலுக்கினான் பசுபதி.

உன்கிட்ட நான் ஏன் உண்மையை சொல்லணும்?” பசுபதி, இந்திராவை பார்த்தபடி கேட்டான்.

   “யாராவது கட்டின பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லுவாங்களா?” என்று இந்திரா சிடுசிடுப்பாக கேட்டாள்.

   “அட்றா சக்க…” பசுபதியின் குரலில் இப்பொழுது உற்சாகம் பீறிட்டு வழிந்தது.

        பசுபதியின் குரலில் ஏற்பட்ட உற்சாகத்தில், இந்திராவின் மனம் சற்று வேகமாக துடித்தது.

       ‘அப்படி என்னத்த சொல்லி தொலைச்சேன்?’ அவள், பசுபதியை யோசனையாக பார்த்தாள்.

      அவன் ஜீப், திருநெல்வேலி ஊர் பக்கத்திலிருந்து சற்று வெளியே வந்து அவன் கிராமத்தை சற்று நெருங்கி இருக்க, ஆள் அரவம் இல்லாத அந்த இடத்தில் ஒரு மரத்திற்கு கீழ் தன் வண்டியை ஓரங் கட்டினான் பசுபதி.

            காற்று வீச, அதை அனுபவித்த  படி பசுபதி அவன் சீட்டில் தன் தலைக்கு அண்டை கொடுத்து உல்லாசமாக சாய்ந்து கொண்டான்.

       “இப்ப எதுக்கு இங்க நிறுத்திருக்க?” என்று இந்திரா சிடுசிடுக்க, “இல்லை, பொண்டாட்டின்னு சொன்னியே, சாலையிலே யாரையும் காணும். அதுதேன் அழகா, ஷோக்கா யாரும் போறாகளான்னு பார்க்கலாமுன்னு வண்டியை நிறுத்தினேன். ஆனால், யாரையும் காணலியே?” என்று பசுபதி சோகமாக உதட்டை பிதுக்கினான்.

    ‘ஏற்கனவே, அம்முக்குட்டி. இப்ப நானு, இன்னும் இவருக்கு ஏழு ஜோடி கேட்குதா? பெரிய மைனர்ன்னு நினைப்பு?’ இந்திரா அவனை கடுப்பாக பார்க்க, ‘மைனர் தான். முறுக்கிய மீசை, மேல் பட்டன் இடாத சட்டை. அதில் தெரிந்த தங்க சங்கிலி. சிறிதும் கரை படியாத வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, கம்பீரமான தோற்றம்.இந்திராவின் மனம் அடுக்கி கொண்டே போக, அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

    அவனும், அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். 

     “என்ன ஆளு, ஜோரா இருக்கான். இவனுக்கு பொருத்தமா ஜோடி எப்படி தேடுறதுனு யோசிக்குறியா?” அவன் தன் நாக்கை சுழற்றியபடி, புருவம் உயர்த்த, “ம்… க்கும்…. நினைப்பு தான். நான் பொண்டாட்டின்னு என்னை தான் சொன்னேன்.” இந்திரா இப்பொழுது அவனை பார்த்து பற்களை நறநறத்தாள்.

   “அப்படி போடு அரிவாளை.” அவன் உல்லாசமாக அவள் பக்கம் திரும்பினான்.

    “நீ எப்படி எனக்கு பொண்டாட்டி?” அவன் சந்தேகம் கேட்க, இந்திரா இப்பொழுது அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

      ‘இவன் நேத்து தானே யோக்கியன் மாதிரி பேசினான்.இந்திராவின் கண்கள், இப்பொழுது தெறித்து வெளியே விழும் அளவுக்கு விரிந்தது.

     ஆனால், அவள் விழிகள் வெளியே வருவதற்கு பதிலாக, பசுபதி அதில் வீழ்ந்துவிட்டான்.

   “எப்படி பொண்டாட்டின்னு கேட்டேன்?” அவன் அவளை நெருங்கி இருந்தான். 

  அவன் குரலில், அழுத்தமில்லை, கோபமில்லை, ஒரு மென்மை குடிகொண்டிருந்தது.

அவள் கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் இருந்த அந்த கருமை நிற மச்சத்திற்கு அருகே அவன் விரல் மெல்ல நெருங்கியது.

             அவன் சுவாசக்காற்றில், அவள் இமைகள் படபடத்தது.

      அவன் விரல் அவள் தாலியை, சற்று அழுத்தியது. அந்த அழுத்தம் அவள் உடல் எங்கும் பரவி, அவளை இம்சித்தது.

           “எதை வச்சி பொண்டாட்டின்னு சொல்ற? இந்த தாலியை வச்சா?” அவன் விரல்கள், அவளை சிறிதும் தீண்டாமல், தாலியை மட்டுமே தீண்டி கொண்டிருக்க, அவன் குரல் மென்மையாக ஒலித்தது.

             ‘மேன்மை பொருந்திய மென்மை.அவள் மனம் மீண்டும் அதை அசைபோட்டு கொண்டது.

     ‘நான் தப்புனு பலர் ஒதுக்கினாங்க. அப்படி இல்லைனா, அண்ணன் குடிகாரன். எனக்குன்னு யாருமில்லை. என் நிலைமையை தெரிஞ்சிக்கிட்டுஎன் தனிமையை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்க ஆரம்பிச்சாங்க. ஆனால், இவன் மட்டும் ஏன் இத்தனை நல்லவனா இருக்கான்?’ இந்திராவின் மனம் அவள் மீதே கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்தது.

    அவன் விரல்களோ, அவன் கட்டிய தாலியை தீண்டி கொண்டிருந்தது.

                        “நான் கேட்ட கேள்விக்கு பதில்.” அவன் முகத்தில், ஒரு புன்னகை.

        ‘எந்த கள்ளமும் இல்லாத புன்னகை.அவள் அறிவு கணக்கிட ஆரம்பிக்க, தன் எண்ணப் போக்கில் திடுக்கிட்டு போனாள் இந்திரா.

   ‘இந்த பாட்டிகாட்டானை, விரும்ப ஆரம்பிச்சிருவேனோ?’ அவள் மனம் கொதிக்க, அவள் அருகே இருந்த பசுபதியை தள்ளும் வேகம் அவளுள் எழுந்தது.

          அறிவு, அவனை தள்ள உந்த, மனமோ அறிவின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல், அவன் மென்மையில் மேன்மையில் தவித்தது.

    “நான் உன்னை தான் கேட்டேன். நீ சொன்னால், தான் வண்டி கிளம்பும்.” அவன் பிடிவாதமாக கேட்டான்.

       அவனை ரசிக்கவும் முடியாமல், அவளுக்கென்று இப்பொழுது இருக்கும் ஒரே ஆதரவை தூர எறியவும் முடியாமல், “நான், உங்க அம்முக்குட்டி கிட்ட…” என்று ஆரம்பித்து, அவள், அபிநயாவிடம் கூறியதை முழுதுமாக கூறி முடித்தாள்.

   இந்திரா பேசப்பேச, மெல்ல விலக ஆரம்பித்து அவன் முழுதாக, விலகி அமர்ந்தான். அவன் முகம் பாறையாக இறுகியது.  தன் கண்களை இறுக மூடி சில நொடிகள் அமர்ந்திருந்தான். 

     ‘கோபப்படுவான். எகிறுவான். கழுத்தை பிடிப்பான்.இந்திரா சிந்தித்து கொண்டிருக்க, நொடிக்குள் தன்னை சுதாரித்து கொண்டு அவளை நோக்கி புன்னகைத்தான் பசுபதி. 

        அவனின் அந்த புன்னகையில் அவள் சிலையாக சமைந்து போனாள். அபிநயாவின் அதே புன்னகையை நினைவுபடுத்த, இந்திராவின் இதயம் திக் திக்கென்று துடித்தது.

    பசுபதி, எதுவும் பேசாமல் வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்.

     பசுபதி, அதன் பின் இந்திராவிடம் பேசவில்லை. 

            வடிவம்மாள், கேட்ட கேள்விக்கு பதில் கூறினான். மேலே,  எதுவும் பேசாமல்  அவன் வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

      திருமணமாகி  ஓரிரு நாட்களாக தான் இருந்தாலும், சில மணி நேரத்தில் பசுபதியிடம் சண்டையிட தான் செய்தாலும், இந்த மௌனம் இந்திராவை கொன்றது.

     இந்த மௌனமும், தனிமையும் அவளுக்கு புதிது அல்லவே. சிறுவயது முதல் தனிமை தான். சுரேஷ் இணக்கமாக இருந்தாலும், அவன் படிப்பு, வேலை என்று  சென்றுவிட்டான். நண்பர்கள் குடி, கும்மாளம் இது தான் சுரேஷின் வாழ்க்கை.

   அதன் பின் காதல் திருமணம். ஏதோ திருமணம் செய்து கொண்டானே, என்ற  நிம்மதி தான் அப்பொழுதும் இந்திராவுக்கு தோன்றியது.

   மீண்டும் தனிமை. தோழிகள் எல்லாம் பெரிதாக இந்திராவுக்கு கிடையாது. சிலர் பரிதாபமாக பார்த்தனர். சிலர், இவள் நமக்கு தொந்திரவோ, என்று தான் பார்த்தனர். அதனாலயே, இந்திரா பெரிதாக யாரிடமும் பழகவில்லை.

     அவளுக்கென்று ஒருவன் என்றால், அன்பை பொழிவதற்காக இல்லை என்றாலும், சண்டையிடவாது  பசுபதிஇருக்கிறான்,  என்ற எண்ணம் அவளுள் இந்த இரண்டு நாளில் வளர ஆரம்பித்திருந்தது.

அவனும் இப்பொழுது பேசவில்லை என்று கடுப்பாக உணர்ந்தாள்.

   ‘நான் அபிநயாவிடம் வம்பு பண்ணினா, இவன் கோபப்படுவான். ஆனால், இவன் ஏன் சிரிக்குறான்? லூசா இவன்?’ என்று கோபமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

  ‘ஒருவேளை பேசவே மாட்டானோ? நான் இந்த ஆத்தா கிட்ட தான் பேசணுமா? நல்ல ஆத்தா தான். ஆனால், அதிகாரம் செய்து நம்மளை கொல்லுவாங்க. அப்புறம்  ரொம்ப கேள்வி கேட்டு நம்ம கழுத்தை அறுப்பாங்க.என்று நொந்து கொண்டாள் இந்திரா.

    ‘ரகுநந்தன் கிட்ட வம்பு வளர்த்து ஒரு பிரயோஜனமில்லை. இந்த அபிநயாவும் பல்லை காட்டுதா! அவ அத்தானும் பல்லை காட்டுதான்! என்ன ஜென்மங்களோ? சண்டை போட்டா திரும்ப போடலாம். இப்ப என்ன பண்றது?’ இந்திராவின் தலை விண்விண்ணென்று வலித்தது.

   அதே நேரம் பசுபதி வேலையில் மூழ்கி இருந்தாலும், அவன் எண்ணம் முழுதும் அபிநயாவை சுற்றி வந்தது.

   ‘அம்முக்குட்டி, என் கிட்ட பேசலை. அம்முக்குட்டிக்கு என் மேல இன்னும் கோபம். இதுல இந்திரா வேற இப்படி பேசி வச்சிருக்கா? ரொம்ப வருத்தப்பட்டிருப்பாளோ? அம்முக்குட்டியை கூப்பிட்டு பேசுவோமா?’ என்ற எண்ணம் தோன்ற, அவன் அலைபேசியை எடுத்தான்.

       “ம்… ச்…” என்ற சலிப்போடு தன் நெஞ்சை நீவிக்கொண்டான் பசுபதி.

   “எப்படியும் அம்முக்குட்டி எடுக்கமாட்டா… கொஞ்சம் நாள் போனா, எல்லாம் சரியாகிரும்.” என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அலைபேசியை வைத்துவிட்டு வேலையில் மூழ்கினான் பசுபதி.

     அபிநயாவின் பிறந்த நாள், பசுபதி இந்திராவின் விருந்து என்று ஆரம்பித்த அந்த நாள் இரவை எட்டியது.

  அபிநயா வேலையை முடித்துவிட்டு வர, ரகுநந்தன் அவர்கள் ஊருக்கு செல்வதற்கு துணிமணியை எடுத்து வைத்து கொண்டிருந்தான்.

    அபிநயா, காலையிலிருந்து விருந்து வேலையில் மூழ்கி இருந்ததால், ஆயாசமாக மெத்தையில் கால் நீட்டி அமர்ந்தாள்.

   “வாத்தியரம்மாவுக்கு, பிறந்த நாள் அன்னைக்கு பயங்கர வேலையா?” என்று அக்கறையாக கேட்டான் ரகுநந்தன்.

   “ச்…ச்ச… அப்படி எல்லாம் இல்லை.” தன் கால்களை சட்டென்று மடக்கி கொண்டாள் அபிநயா. 

   “ஒய்… நான் தானே இருக்கேன்? இப்ப எதுக்கு காலை மடக்கின? நீட்டிக்கோ.” அவன் அன்பாக கட்டளையிட, அவள் முகத்தில் ஒரு சங்கோஜ புன்னகை.

  ‘….’ எதுவும் பேசாமல், அவன் புன்னகையோடு புருவம் உயர்த்த, “டீ சாப்பிட போக இவ்வளவு பேக்கிங்கா?” என்று அபிநயா குறும்பாக கேட்டாள்.

     “ஆமா, போறோம் விதவிதமா டிரஸ் பண்றோம். தெருத்தெருவா டீ குடிக்கிறோம். வரோம்.” அவனும் சிரிக்காமல் கூறினான்.

   “செம பிளான். நான் என் ட்ரெஸ்ஸை நாளைக்கு எடுத்து வைக்கிறேன்.” என்று அவள் கூற, “நீ எடுத்து வைக்க வேண்டாம். நான் வச்சிட்டேன்.” என்று அவன் கண்சிமிட்டினான்.

   “நான் என்ன டிரஸ் போடுவேன்னு, உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அவள் கேட்க, “நீ என்ன டிரஸ் போடுவேன்னு எனக்கு தெரியாது. ஆனால், நீ அங்க என்ன டிரஸ் போடணுமுன்னு எனக்கு தெரியும்.” அவன் ரசனையோடு  கூறினான்.

   “நீங்க என்கிட்டே வம்பு பண்ணுதீக.” என்று அவள் சிணுங்க, “ஓ… அப்படியா. எப்படி?” என்று அவன் கண்களில் குறும்போடு கேட்டான்.

        அபிநயா, உதட்டை பிதுக்கி அவனை பரிதாபமாக பார்க்கடிக்கெட்டை எடுத்து வைத்துக்கொண்டே, “நாம்ம எங்க போறோமோன்னு நீ இன்னும் சொல்லலை.” அவன் பேச்சை மாற்றினான்.

    “நீங்களும் தான் சொல்லலை.” அவள் கண்சிமிட்டினாள்.

  “இந்திரா என்ன சொன்னான்னு நீ இன்னும் சொல்லலை.” அவன் குரல் விளையாட்டுத்தனத்தை விடுத்து, தீவிரத்தை கையில் எடுத்து கொள்ள, அபிநயா அவனை பதட்டமாக பார்த்தாள்.

    “என் கிட்ட எதையுமே சொல்ல மாட்டியா?” அவன் குரலில் ஆதங்கம் மித மிஞ்சி இருந்தது.

    அவள் மெத்தையில் அமர்ந்திருக்க, அவன் அருகே நின்று கொண்டு கேட்க, விழிவிரித்து அவனை பார்த்தபடி  அபிநயா மறுப்பாக தலை அசைத்தாள்.

 “சொல்ல கூடாதுன்னு எதுவுமில்லை. ஆனால், எதுக்கு வருத்தமுன்னு…” அவள் தட்டு தடுமாறினாள்.

ரகுநந்தன் அவளை கூர்மையாக பார்த்து கொண்டிருக்க,     “அது… உங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?” என்று அபிநயா, அவனிடம் கேட்டாள்.

 “வாத்தியாரம்மா, பதில் சொல்ல மாட்டீங்க. நான், அப்படி இல்லை. என் பொண்டாட்டி கிட்ட எல்லாமே சொல்லுவேன்.” என்று நிறுத்தி நிதானமாக கூறினான் ரகுநந்தன்.

    “உன் முகமே காட்டி கொடுத்தது.” அவன் அவள் முகத்தை பார்த்தபடி கூறினான்.

  “அப்ப, அத்தானுக்கும் தெரியுமா?” என்று அபிநயா பதட்டமாக கேட்டாள்.

   “வாய்ப்பில்லை. நான் தான் உன்னை பாக்குற மாதிரி நின்னுகிட்டு இருந்தேன்.” ரகுநந்தன் கூற, “ஹப்பா…. தெரிஞ்சா அத்தான் ரொம்ப வருத்தப்படுவாக…” அபிநயா கவலையோடு கூறினாள்.

   “இந்திரா என்ன சொன்னான்னு நான் கேட்டேன்.” ரகுநந்தன் அழுத்தமாக வினவ, அபிநயா முழுதும் அவனிடம் கூறினாள்.

   “நறுக்குன்னு நாலு கேட்காம, அவளை சும்மா விட்டியா? அறிவில்லை?” ரகுநந்தன் அவளிடம் எகிறினான்.

    முதல் நாளைக்கு பின் ரகுநந்தனின் கோபம். அபிநயா, அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

   “அப்பவே இதை நீ என் கிட்ட சொல்லிருக்கணும். உன்னை, அவ எப்படி இந்த மாதிரி பேசலாம். நான், என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரியாது.” ரகுநந்தன் கர்ஜிக்க, “அதான் சொல்லலை.” அபிநயா நிதானமாக கூறினாள்.

      “அத்தான், மனசு வருத்தப்படுவாக.” அவள் கூற, “எனக்கு உன் மரியாதை முக்கியம். அதை நான், யாருக்காகவும் எங்கயும் விட்டு கொடுக்க மாட்டேன்.” அவன் அழுத்தமாக கூறி, அவளிடமிருந்து விலகி செல்ல, அவன் கைகளை பிடித்து அபிநயா, அவனை ஏக்கமாக பார்த்தாள்.

    “எனக்கு உறவுகள் முக்கியம். ஒரு உறவை நிலைநிறுத்த, நான் இறங்கி போறதுல, எந்த தப்புமில்லைங்க.” அவள் அவனுக்கு புரிய வைக்கும் நோக்கோடு பேசினாள்.

         “எனக்கு, என் மரியாதை சந்தோசம் முக்கியம். கல்யாணம் செஞ்சா இதெல்லாம் போய்டுமோன்னு யோசிச்சேன். அதுக்கு தான் நான் கல்யாணம் வேண்டாமுன்னு சொன்னேன். இயல்பா, நடந்தது தான் நம்ம கல்யாணம். நான் உன்னை ரொம்ப பிடிச்சி எல்லாம் கல்யாணம் பண்ணலை. ஆனால், இப்ப ரொம்ப பிடிக்குது. அவன் ஆழமான குரலில் கூறினான்.

  அந்த குரலில் அன்பு வழிந்தது

 அந்த நான், என், எனக்கு என்ற சொல்லில் இப்ப நீயும் அடக்கம். உனக்கு அப்புறம் தான் எந்த உறவும். அது உன் பக்க உறவா இருந்தாலும் சரிஎன் பக்க உறவா இருந்தாலும் சரி.” அவள் மீதான அன்பை, உறவை நிலை நாட்டிவிட்டு அவளிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டு ரகுநந்தன் வேறு பக்கம் திரும்பி படுத்துவிட்டான்.

   ‘நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு, இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு அந்த பக்கம் திரும்பி படுத்திருக்காக?’ அபிநயாவிற்கு கோபம் மூண்டது.

          அவளும் வேறு பக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.

  அதே நேரம், இந்திரா அவள் அறையில் காத்திருந்தாள். பசுபதி வரவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது. தாமதமாகவே அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.

     அவன் வழி மறித்து நின்றாள் இந்திரா.

     “என் மேல கோபமுன்னா கோப படவேண்டியது தானே? எதுக்கு சிரிக்கிற மாதிரி சிரிச்சிட்டு அப்படியே போகணும்?”  இந்திரா கேட்க, அவளை ஒதுக்கிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்தான் பசுபதி.

   “நீ பேசினதுக்கு, அம்முக்குட்டி என்ன சொன்னா?” என்று பசுபதி கேட்க, அவள் விரலில் உள்ள மோதிரத்தை நீட்டினாள் இந்திரா.

  “இதை கொடுத்து, அத்தானின் மனைவிக்கு என் பரிசுன்னு கொடுத்தா.” நான் கேட்பதற்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணியபடி, பதிலளித்தாள் இந்திரா.

   “நான் உன்னை திட்டணுமுன்னு நினைச்சிருந்தா, அம்முக்குட்டி அப்பவே விஷயத்தை போட்டு உடைச்சி, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பண்ணிருப்பா. நான், என் மனைவியோடு சந்தோஷமா வாழணும்ங்கிறது தான் அம்முகுட்டியோட ஆசை.” பசுபதி கூற, “இதை கூட அவ தான் முடிவு பண்ணுவாளா?” இந்திரா காட்டமாக கேட்டாள்.

   பசுபதி தன் தோள்களை அசட்டையாக குலுக்கினான். “என் ஆசையும் கூட அது தான். உன்கிட்ட சண்டை போடுறது எண்ணமில்லை. உன்னை கஷ்டப்படுத்தறது என் நோக்கமில்லை.பசுபதி நிதானமாக பேசினான்.

 இந்திரா அவனை புரியாமல் பார்க்க, “நம்பறதும், நம்பாததும் உன் இஷ்டம். இதை முதல் நாள் நீ பேசி இருந்தா, நான் உன்னை கொன்றிருப்பேன். ஆனால், என் மனதில் ஏதோ ஒரு மூலையில்நீ என் மனைவின்னு சட்டமிட்டு அமர்ந்துட்ட. ரெண்டு நாளிலேயான்னு கேட்டா எனக்கு பதில் தெரியலை. ஆனால், ஏதோ ஒன்னு, உன்னை திட்ட எனக்கு மனசு வரலை.” கூறிவிட்டு பசுபதி பாயை விரித்து சுவரை பார்த்தபடி படுத்துவிட்டான்.

    ‘திட்ட மனசு வரலைனா, பேசவும் மாட்டானா?’ அவனை ஏக்கமாக பார்த்தாள் இந்திரா.

அன்பு நிறைந்து வழிந்தாலும்,

  அன்பிற்காக ஏங்கினாலும்,

  தவிப்பும் காத்திருப்பும்

  பெண்ணிற்கான தலை எழுத்தோ?” என்று நிலவுப்பெண் அவள் சோகத்தை மறைக்க, இருள் கவ்விய மேகத்திற்குள் தன்னை மறைத்து கொண்டாள்.

பொழுதுகள் விடியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!