Oh Papa Laali–Epi 5

அத்தியாயம் 5

ஆசியாவின் முதல் ரிவர் சஃபாரி சிங்கப்பூரில் தான் உள்ளது. படகில் பயணித்துக் கொண்டே பல வகையான மிருகங்களையும் கடல் சார்ந்த உயிரினங்களையும் பார்க்கலாம்.

 

அன்று அதிசயமாக வீட்டில் இருந்தான் சூர்யவர்மன். சின்னவனை இவனிடம் விட்டு விட்டு மதுரா பெடிகியூர் சென்றிருந்தாள்.

“மாமா பசிக்குது!”

“ரைஸ் இருக்கு போட்டுத்தரவாடா?”

“வேணாம்! பிட்சா ஆர்டர் செய்யலாமா ப்ளீஸ்?”

“அம்மா வந்தா திட்டுவாங்கடா! கஸ்டப்பட்டு குக் பண்ணியிருக்காங்க தானே!”

“அதெல்லாம் கஸ்டம் இல்ல மாமா! அடுப்ப ஆன் பண்ணிட்டு சட்டில எல்லாம் கொட்டி, இப்படி, அப்படி கிண்டனும்! தடா!!!!!! டின்னர் ரெடி” என சமைப்பது போல அபிநயித்துக் காட்டினான் ரோஹித். இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“இவ்ளோ ஈசியான குக்கிங் செய்ய உங்கம்மா என்னா சலிப்பு சலிச்சுக்கிறாங்க! இனிமே நாமளே குக் பண்ணிறலாம்டா ரோஹி!” என சொல்லி சிரித்தவன், போனை எடுத்து ஃபூட் பாண்டாவில்(உணவு ஆர்டர் செய்யும் அப்ளிகேஷன்) மருமகன் கேட்ட சிக்கன் சுப்ரீம் பிட்சாவை ஆர்டர் செய்தான்.

“தேங்க்ஸ் மாமா!” என சூர்யாவைக் கட்டிக் கொண்டு முகம் முழுக்க முத்தமிட்டான் சின்னவன். ரோஹித்தை திருப்பிப் போட்டு கிச்சிகிச்சு மூட்டி சிரிப்புக் காட்டி பிட்சா வரும் வரை விளையாடினான் சூர்யா. பிட்சா டெலிவரி வரவும், ப்ளேட்டில் வைத்துக் கொண்டு தொலைக்காட்சி முன் அமர்ந்துக் கொண்டார்கள் இருவரும்.

வசந்தத்தில் ‘மாலை மாலை வசந்தம்’ மறு ஒளிபரப்பு நிகழ்ச்சி அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்தது.

“ரோஹி, இதுல மாமா ஒரு பாட்டு பாடி இருக்கேன்!”

“ஐ!!! ஜாலி ஜாலி” என பிட்சாவை வாய் நிறைய திணித்துக் கொண்டு குதித்தான் ரோஹித்.

“குதிக்காம உட்கார்ந்து சாப்பிடு! அடச்சிக்கப் போகுது”

எப்பொழுதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் மாமன், இந்த கண்டிப்புக் குரலைக் காட்டினால் மட்டும் அடங்கிப் போய் விடுவான் ரோஹித்.

அதற்குள் தொலைக்காட்சியில் இவன் பாடல் பாட வரப் போவதை அறிவிக்க ஆரம்பித்திருந்தார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி.

“அடுத்தப் பாடலை நமது வளர்ந்து வரும் கலைஞர்!!!” என சொல்லி அவர் கொஞ்சம் இடைவெளி விட,

“ஏற்கனவே சைட் வாக்குல வளர்ந்துதாங்க இருக்கேன்! இன்னும் வளர வேணாமே!” என தன்னைத் தானே கிண்டல் அடித்தவாறே மேடைக்கு வந்தான் சூர்யா.

அந்தப் பெண் சிரிப்புடன்,

“எவர் சார்மிங் சூர்யவர்மன் அண்ட் பியூட்டிபுல் காவ்யா உங்களுக்காக ஒரு அழகான டூயடைப் பாட போகிறார்கள்” என அறிவித்தார்.

“சின்ன ராசாவே

சிட்டெறும்பு என்னைக் கடிக்குது” என காவ்யா ஆரம்பித்து வைக்க,

தன்னால் முடிந்த அளவு பிரபுதேவா போல் இடையை ஓரளவு ஆட்டி,

“அட ரோசாவே

சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா” என இவன் பாட்டை முடித்து வைத்தான்.

“மாமா மாமா!”

“என்ன ரோஹி?”

“நீங்க சூப்பரா டான்ஸ் பண்ணீங்க!”

“யாரு நானு? இருக்கும் இருக்கும்!”

“நெஜமா மாமா! ஆனா எனக்கு ஒன்னுத்தான் புரியவே இல்ல!”

“என்னடா?”

“அந்த ஆண்ட்டிக்கு எறும்பு கடிச்சா, நீங்க எதுக்கு பாட்டு பாடறீங்க?” என பெரிய சந்தேகத்தைக் கேட்டான் சின்னவன்.

வாயில் பிட்சாவோடு சூர்யா சிரித்த சிரிப்பில், தொண்டையில் சிக்கிக் கொண்டது உணவு. இவன் இருமிக் கொண்டிருக்க, அப்பொழுதுதான் உள்ளே வந்த ரகு வேகமாக தண்ணீரை எடுத்து வந்துக் கொடுத்தான்.

வாங்கிக் குடித்தவன்,

“தேங்க்ஸ் மாம்ஸ்” என கண்ணில் நீர் வழிய சொன்னான்.

“ஏன்டா நீ என்ன சின்னப்புள்ளையா? அடச்சிக்கற மாதிரியா சாப்பிடுவ!” என திட்டியபடியே அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் ரகு.

அவனிடம் ஒரு பிட்சா துண்டை நீட்டிய சூர்யா,

“உங்க மகன் கேட்ட கேள்வில எனக்கு நெஞ்சு அடைச்சுக்கிச்சு!” என சொன்னான்.

“யாரு மகன் இவன்! என் மகன்டா! என்னை மாதிரியே மூளைக்காரன்”

“ரோஹி! அந்தக் கேள்விய உங்கப்பாட்ட கேளுடா! அவர் அழகா பதில் சொல்வாரு”

மீண்டும் சின்னவன் அதே கேள்வியைக் கேட்க, என்ன பதில் சொல்வது என பேய் முழி முழித்தான் ரகு.

“அது வந்துடா ரோஹி செல்லம்..உன்னை எதாச்சும் கடிச்சிட்டா வலிக்கும்ல, அம்மா மருந்து போட்டு பாட்டு பாடி தூங்க வைப்பாங்கல்ல! அதே மாதிரி அந்த ஆண்ட்டிக்கும் எறும்பு கடிச்சு வலிச்சிருச்சாம், அதான் உங்க மாமா பாட்டு பாடி வலிய போக வைக்கறாரு” என சமாளித்தான்.

அதற்குள் வீட்டுக்கு வந்த மதுரா, நடந்துக் கொண்டிருக்கும் பிட்சா பார்ட்டியைப் பார்த்து செம்ம காண்டாகி போனாள்.

“மனுஷி அடுப்படியிலெ வெந்து நொந்து சமைச்சு வச்சா, நீங்க மூனு பேரும் பிட்சா வாங்கி சாப்படறீங்களா? ஆக்கி வச்ச சோத்த இப்ப யாரு சாப்பிடறது? அது முடியற வரைக்கும் மூனு நாள் ஆனாலும் அதையே தான் சூடு காட்டி வைப்பேன்!” என மூச்சு விடாமல் கத்த ஆரம்பித்தாள்.

“சொன்னா எங்கக்கா கேக்கறாங்க!” என பொதுவாக சொல்லிய சூர்யா,

“எனக்கு வேலை இருக்குக்கா! நான் ரூமுக்குப் போறேன்!” என கழண்டுக் கொண்டான்.

“அப்போ நீங்கதான் ஆர்டர் பண்ண சொன்னீங்களா?” என மதுரா தன் கணவனை ஒரு பிடிபிடிக்க,

“இல்லடி! நானே இப்போத்தான் வந்தேன்.” என அவன் சரண்டராக,

“இன்னிக்கு மேசேஜ்ல மெனு போட்டதுக்கு ரிப்ளை வராதப்பவே எனக்குத் தெரியும், மெனு பிடிக்கலன்னு! அதான் நான் வரதுக்குள்ள பிட்சா ஆர்டர் செஞ்சிருக்கீங்க” என இவள் அர்ச்சனையை நிறுத்தவே இல்லை.

“ரோஹி, வாடா மாமா ரூமுக்கு! அம்மாவும் அப்பாவும் பேசி முடிக்கட்டும்” என ரூமில் இருந்து மருமகனை கத்தி அழைத்தவன்,

“ஆகாயம் தீப்பிடித்தால் நிலா தூங்குமா!” என பாட வேறு செய்தான்.

“இன்னிக்கு நீ மேசேஜ் போட்டப்போ நான் ஓர்க்ல பிசியா இருந்தேன்மா! அதான் ரிப்ளை போடல!” என ரகு கெஞ்ச, தன் அக்கா மிஞ்ச என அவர்கள் இருவரின் மினி சண்டையை சிரிப்புடன் கேட்டப்படி ரோஹித்தை குளிப்பாட்டி, ஸ்பைடர்மேன் இரவு உடை அணிவித்து தன்னுடனே படுக்க வைத்துக் கொண்டான் சூர்யா.

அவன் உறங்கியதும் பெட் சைட் லைட்டைப் போட்டவன், கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தான்.

பெண் நட்புக்கள் போட்டிருந்த படங்களுக்கும் போஸ்டுக்கும் வஞ்சகம் இல்லாமல் ஹார்ட் போட்டு விட்டவன், ஆண் நண்பர்களின் போஸ்டை கண்டுக் கொள்ளாமல் விட்டான். பின் தனது பேஜிக்கு சென்று ஒரு ரவுண்ட் அடித்தான்.

“இரவினில் ஆட்டம்

பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம்” என எழுதி தனது செல்பியையும் பேஜில் பதிவிட்டவன் ஆவ் என ஒரு கொட்டாவியை வெளியேற்றினான். கொட்டாவி விட்ட கேப்பில் அந்த ஸ்கைமூனிடம் இருந்து ‘வாவ்’ வந்திருந்தது அவன் போஸ்ட்டுக்கு.  

‘என்னோட பேஜ்லயே பாய் போட்டு படுத்திருப்பாளோ!’

அன்று முடிவெடுத்ததில் இருந்து கையும் கண்ணும் அவள் மேசேஜ்களை படிக்க சொல்லி துருதுருத்தாலும், இவன் அசைந்துக் கொடுக்கவில்லை. ஆனால் அவளை ப்ளாக் செய்யாமல் விட்டு வைத்திருந்தான். ஒரு ரசிகையை வீணாக ஏன் ப்ளாக் செய்ய வேண்டும் என தனக்குத்தானே சப்பைக்கட்டு கட்டினாலும், அவள் இவனை ஃபோலோ செய்வதை மனம் விரும்புகிறது என்பது அவன் ஆழ் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.

இத்தனை வயதுக்கும் காதலி என ஒருத்தி இல்லாத தனிமை, இரவின் ஏகாந்த குளுமை, அக்கா மாமாவின் காதல் எல்லாம் அவனை ஒரு வித ஏக்கத்தின் பிடியில் தள்ளி இருந்தது.

‘சும்மா படிச்சுத்தானே பார்க்கப் போறோம்! ரிப்ளை ஒன்னும் செய்யப் போறது இல்லையே!’ என மனதை சமாதானப்படுத்தி பேஜ்கான மேசெஞ்சரை திறந்தான் சூர்யா.

“வர்மன், கிரே கலர் லாங் ஷேர்ட்ல இன்னிக்கு ரொம்ப ஹெண்ட்சமா இருந்தீங்க! ஆனா ரைட் ஹேண்ட் கைல பட்டன எங்க காணோம்? இனிமே பட்டன் இல்லைனா போடாதீங்க ப்ளிஸ்! என்னால தாங்கிக்கவே முடியல. அப்பவே உங்க கையைப் பிடிச்சு பட்டன தச்சி விடனும் போல படபடன்னு வந்துருச்சு!”

மேசேஜை படித்தவனுக்கு ஒரே ஆச்சரியம். அது வந்திருந்த தேதியைப் பார்த்தான். பிரிண்டிங் ஆபிசுக்குப் போன தினம் அது. அந்த கிரே கலர் சட்டையை அயர்ன் செய்து போடும்போது பட்டன் பிய்ந்து விட்டது. மறுபடி இன்னொரு சட்டையை அயர்ன் செய்ய சோம்பேறியாக இருக்க அப்படியே வந்து விட்டான். 

‘பட்டன் இல்லைன்ற அளவுக்கு நெருக்கமா கவனிச்சிருக்கா! இவ யாரா இருக்கும்? அன்னிக்கு ரயில்ல எனக்கு ரொம்ப பக்கத்துல அந்தக் கண் சிமிட்டிய காந்தக் கண்ணழகி தானே நின்னுட்டு இருந்தா! ஒரு சமயம் அவளா இருக்குமோ?’

பட்டென படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டான் சூர்யா. இவன் சடாரென எழ தூக்கத்தில் முண்டினான் ரோஹித்.

“ஷ் ரோஹி! ஒன்னும் இல்லடா” என மெல்லிய குரலில் சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்தான். சின்னவன் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லவும், அடுத்த மேசேஜை படிக்க ஆரம்பித்தான் சூர்யா.

“இப்போ எனக்கு டெலிபதி மேல நம்பிக்கை வந்துருச்சு தெரியுமா வர்மன்! நீங்க ரயில்ல இருந்து இறங்கனதும் ‘என்னைப் பாருங்க, என்னைப் பாருங்க’ன்னு உங்களுக்கு சிக்னல் அனுப்பிட்டே இருந்தேன். அதே மாதிரி நீங்களும் என்னைத் திரும்பி பார்த்துட்டீங்க! சந்தோசத்துல எனக்கு என்ன செய்யறதுனே தெரியல! படக்குன்னு கண் அடிச்சிட்டேன்! இதுதான் பர்ஸ்ட் டைம் நான் இப்படிலாம் இம்ப்பல்சிவா செய்யறது தெரியுமா! ஃபீல் சோ சோ ஹேப்பி வர்மன்!”

“அவளேதான், இது அவளேதான்!! ரயிலழகியும் ஸ்கைமூனும் ஒரே ஆள்தான்! ஓ மை காட், ஓமை காட்! இவ்ளோ அம்சமா இருக்கற இவ எதுக்கு என் பின்னாடி சுத்தறா? இந்த மாதிரி பியூட்டியலாம் இன்னுமா கேர்ள்ரேண்ட் ஆக்கிக்காம விட்டு வச்சிருக்கானுங்க!” வாய் விட்டே சொல்லிக் கொண்டவன் அந்த அறையிலேயெ குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

பின் அடுத்த மேசேஜைப் படித்தான் சூர்யவர்மன்.

“ஆன்லைன்ல இருக்கீங்க! ஆனா எனக்கு ஒரு ஹாய்னு கூட ரிப்ளை போட மாட்டறீங்க வர்மன்! வை மேன் வை?” என கேட்டு கோப பொம்மையை அனுப்பி இருந்தாள்.

பின் வரிசையாக வர்மன், வர்மன் என விடாமல் இவன் பெயரை மெசேஜாக ஜபம் செய்திருந்தாள்.

“நான் ஒருத்தி உங்களுக்காகவே இருக்கறப்போ எதுக்கு ஊருல உள்ளவங்க கிட்டலாம் போய் பொண்ணு கேக்கறீங்க? நோ, நோ வர்மன்! ஐம் ஹியர் ஃபோர் யூ! அந்த ஆண்ட்டி உங்களுக்கு செம்ம பல்பு குடுத்துட்டாங்க! எவ்ளோ கண்ட்ரோல் பண்ணியும் என்னால சிரிப்ப அடக்க முடியல. அதென்ன படக்குன்னு என் கிட்ட பேச வந்துட்டீங்க! அப்படி சட்டுன்னு பேசிடுவேனா நான்? கொஞ்ச நாள் இப்படியே பேசி புரிஞ்சிக்கலாம் வர்மன்! தென் நேர்ல பேசிக்கலாம்! சரியா?”

அடுத்த மேசேஜில்,

“நீங்க பதில் போடலைனாலும் உங்கள ஸ்டால்க் செய்யறத விடமாட்டேன் நான்! இப்போதைக்கு உங்கள நேர்லயும், பேஸ்புக்கிலயும் ஃபோலோ செய்யறது மட்டும்தான் எனக்கு ஆறுதல் தர விஷயம் வர்மன்! ப்ளிஸ் ரிப்ளை மீ மேன்!” என கெஞ்சி இருந்தாள்.

மீண்டும் பல வர்மன்கள் தொடர்ந்திருந்தன.

அவள் அனுப்பிய மேசேஜ் எல்லாவற்றையும் இவன் படிக்காமல் விட்டிருக்க, அவளோ நிறுத்தாமல், சலிக்காமல் தொடர்ந்து அனுப்பி இருந்தாள். அதன் பிறகு கூட நிறைய இடங்களுக்கு இவனைத் தொடர்ந்திருக்கிறாள் என அவள் அனுப்பிய மேசேஜ்களில் இருந்து தெரிந்துக் கொண்டான் வர்மன்.  

ஆக கடைசியாக அவள் அனுப்பிய மேசேஜ் பார்த்து எவ்வளவு முயன்றும் இவனால் பதில் போடாமல் இருக்க முடியவில்லை.

“நான் நேர்ல வந்து நிக்காம, இப்படி கோழை மாதிரி பேஸ்புக்ல ஒளிஞ்சிக்கறதனால தானே என்னை இக்நோர் பண்ணறீங்க வர்மன்! சரி, நாம சந்திக்கலாம் வர்மன். நேரடியா சந்திக்கலாம்! பேஸ்புக் இல்லாம பேஸ் டூ பேஸ் சந்திக்கலாம். லெட்ஸ் மீட் மேன்”

“எங்கே, எப்பொழுது?”

பாடுவான்…..