AnthamaalaiPozhuthil-30

AnthamaalaiPozhuthil-30

       அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 30

          இந்திரா சற்று நேரம், அந்த புகைப்படங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் யோசனை தறிகெட்டு ஓடியது.

     ம்...ச்…” அவள் குரல் சலிப்பை வெளிப்படுத்தியது.

 நான் யோசிச்சி என்ன ஆகப்போகுது? இல்லை நான் கேட்டாலும், யார் பதில் சொல்ல போறா?’ தன் தோளை குலுக்கினாள்.

     பசுபதி கிட்ட கேட்டு பார்க்கலாமா?’ அவள் மனதின் ஓரத்தில் ஓர் ஆர்வம் எட்டி பார்க்க, ‘இப்ப உருவாக்கி இருக்கிற, இந்த சுமுகமான நிலை போய்ட கூடாது. நமக்கென்ன?’ என்று தன் காரியத்தில் கண்ணாக அந்த எண்ணத்தை ஒதுக்கி விட்டாள் இந்திரா.

         பசுபதி, மீண்டும் பேசாவிட்டால்?’ என்ற எண்ணம் ஒருபக்கம் இந்திராவுக்கு ஓடினாலும், அதை ஒத்துக்கொள்ள அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

         அதே அதிகாலை நேரம் ரகுநந்தன் வீட்டில்.

 ரகுநந்தன் தன் மனைவியை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

      நான் சொன்னது தப்புன்னு சொல்றாளா இவ? நான் பேசலைனா, இவ என்கிட்டே பேசமாட்டாளா?’ அவன் அபிநயாவை கடுப்பாக பார்த்தான்.

         அபிநயா,  ஜன்னல் வழியாக சாலையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

   நான் அப்படி என்ன பேசிட்டேன்? இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு இருக்காக. நானா சண்டை போட்டேன்? இவுக தானே, என்னை திட்டினாக. வந்து சமாதானம் செய்ய கூட முடியலையோ? இந்த அபிநயா அவளா, இறங்கி போக மாட்டா. நான் தப்பே பண்ணலை, நான் ஏன் இறங்கி போகணும்?  ஊர்ல மத்தவக கிட்ட வேற வழி இல்லை. இறங்கி போகலாம். இவுக கிட்ட எதுக்கு?’ என்று ரகுநந்தன் அசையும் சத்தத்தில் அவன் விழித்துக் கொண்டதை அறிந்தும், அறியாதவள் போல் அசையாமல் நின்றாள் அபிநயா.

          அவனும், அவளிடம் பேசவில்லை. வாத்தியாரம்மாவுக்கு புரியனும். நான் பேசமாட்டேன்.அவனும் வைராக்கியத்தோடு, குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

   ஓ… என்கிட்ட பேசமாட்டாகளா? பேச வேண்டாம். யாரும் என்கிட்டே பேச தேவை இல்லை.மனதில் ரகுநந்தனை திட்டிக்கொண்டே, சமையலறை நோக்கி சென்றாள் அபிநயா.

    குளியலறையில் இருந்து, வெளியே வந்த ரகுநந்தனின் கண்கள் சுருங்கியது. வாத்தியாரம்மாவுக்கு பயங்கர கோபமோ? இருக்கட்டும். இருக்கட்டும். இந்த முறை, நான் இறங்கி வரப்போவதில்லை.அவனும் தீர்மானமாக இருந்தான்.

     உள்ளே வந்தவள், மேஜை மீது காபியை நங்கென்று வைத்தாள். காபி, சிதறி வெளியே வழிந்தது.

   அடடே… மேஜைக்கு காபி உபச்சாரம் பலமா இருக்கு போல? என்ன மேஜையே, காபி நல்லாருக்கா?” என்று அந்த மேஜையிடம், அக்கறையாக வினவினான் ரகுநந்தன்.

   நக்கல்…என்று எண்ணியபடி, அபிநயா அவனை முறைத்து பார்க்க, சிந்தியது போக மீதம் இருந்த காபியை எடுத்து குடித்தான் ரகுநந்தன்.

   ஷார்ட்ஸ், டீ ஷர்ட் அணிந்து கொண்டு அவள் முன் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். வழக்கமாக, அவளும் அவனோடு ஜாக்கிங் செல்வதுண்டு.

   இன்று வழக்கத்திற்கு மாறாக சேலையை கட்டிக்கொண்டு, அவனோடு செல்வதற்கு எந்த அறிகுறியும் இல்லாதவள் போல் நின்று கொண்டிருந்தாள் அபிநயா.

    அவுக கூப்பிட்டா தான் நான் கிளம்புவேன்.அபிநயாவின் முகத்தில் பிடிவாதம்.

     ரகு, நீ எதுவும் தப்பா சொல்லலை. வாத்தியாரம்மா, வந்தா கூட்டிட்டு போற, வரலைனா விடு.தனக்கு தானே கூறிக்கொண்டு, அவள் முன் அப்படியும், இப்படியும் சென்றான் ரகுநந்தன்.

    அபிநயா, கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக இருக்க, சில நிமிடங்கள் அவளுக்காக காத்திருந்து, பயன் இல்லாமல் போக அறை கதவை படாரென்று அடைத்து விட்டு, வேகமாக வெளியேறினான் ரகுநந்தன்.

     அவன் கதவை மூடிய சத்தத்தில், பவானியம்மாள், ரேவதி இருவரும் அவர்கள் அறையை நோக்கி பார்த்தனர்.

      ரகுநந்தன், யாரிடமும் எதுவும் பேசாமல் மடமடவென்று சென்றுவிட்டான்.

பவானியம்மாள், ரேவதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    யாருக்கு வந்த விருந்தோ?’ என்பது போல், ரேவதி தன் வேலையில் மூழ்கி விட்டாள்.

    பவானியம்மாளின் நெற்றி சுருங்கியது. நேத்து இந்திரா வந்துட்டு போனதில் எதுவும் பிரச்சனை வந்திருக்குமோ?’ அவருள் சந்தேகம் எழும்பியது.

     ரகு, அப்படி எல்லாம் சண்டை போட்டுற மாட்டான். அபிநயாவும் சரி பண்ணிருவா.தன் மகன், மருமகள் மேல் இருந்த நம்பிக்கையில் தன்னை தானே சாமாதானம் செய்து கொண்டு, அவர் வேலையை கவனிக்க சென்றார்.

   அங்குமிங்கும், அசைந்து கொண்டிருந்த கதவு ரகுநந்தனின் கோபத்தை கூற, ‘நான் பேசிருக்கலாமோ? அவுகளுக்கு ரொம்ப கோபம் வந்திருச்சோ?’ அபிநயா அங்கிருந்த சோபாவில் கண்மூடி சாய்வாக அமர்ந்தாள்.

    இவுகளோட இந்த கோபம் நியாயமா? எல்லா இடத்துலயும் இப்படி கோபப்பட முடியுமா? அவுகளுக்கு புரிஞ்சி தான் ஆகணும்.நிதானமாக சிந்தித்தாள் அபிநயா.

     ஜாக்கிங் சென்ற ரகுநந்தனும் அபிநயாவை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தான்.

        வாத்தியரம்மா, வந்தா ஏதாவது பேசுவா. தனியா வந்தது செம எரிச்சலா இருக்கு. நான் சமாதானமா  பேசிருக்கலாமோ? ஆனால்…அவன், “ஊப்…” என்று பெருமூச்சை வெளிப்படுத்தினான்.

     இருவரும் பேசத்தான் நினைத்தார்கள். ஆனால், சுமுகமாக பேசவில்லை. ஏதோ தேவைக்கென்று ஓரிரு வார்தைகள்.

அதுவும் சுவரை பார்த்து, மேஜையை பார்த்து, அலமாரியை பார்த்து சில வார்த்தைகள்.

     குடும்பத்தினர் முன் சகஜமாக சில வார்த்தைகள். இவர்கள், பிரச்சனை வெளியே தெரிந்துவிட கூடாது என்றதில் கவனமாக! இல்லை காரணம் வைத்துக்கொண்டு என்றும் கூறலாம்.

முழுதாக பேசாமலும் இருக்க முடியவில்லை. அன்பும், காதலும், ஆசையும் ஒரு பக்கம் வழிந்து ஓடுகிறது. அதை அடைத்து கொண்டு நிற்பது போல், தன்மானமும், கோபமும், வைராக்கியமும் வீஞ்சி கொண்டு நின்றது.

  இரெண்டு நாட்கள், இது போலவே கடந்திருந்தது. பேச, நினைத்து பேசாமல் இருந்து, ‘யார் முதலில் பேசுவது?’ என்ற  பிரச்சனையும் கூடவே வளர்ந்து நின்றது.

       பெட்டியை பார்த்தபடி, “நாம்ம, இன்னைக்கு கிளம்பனும்.” அவன் கூற, அதே பெட்டியை பார்த்தப்படி, “எனக்கு டீ பிடிக்காது.” தன் உதட்டை சுழித்தாள் அபிநயா.

   சரி, தெருத்தெருவா போய், காபி சாப்பிடுவோம்.” என்று அவன் நக்கல் தொனித்த குரலில் கூறியபடி, இப்பொழுது அவளை பார்த்தான்.

   அவன் பார்வையை தாங்கி, அவளும் அவனை பார்த்தாள். இரெண்டு நாளா, இவுக என்னை பார்த்து பேசலை.அவள் மனம் தவித்தது.

      அவள் கண்கள், ‘எங்கே கலங்கிவிடுவோமோ?’ என்று அஞ்சி, அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து, ஆனால், பார்க்கும் ஆவலை அடக்கவும் முடியாமல் அவனை பார்த்தது.

   அபிநயாவோ, அவன் இரெண்டு நாட்களாக அவள் முகம் பார்த்து பேசவில்லை என்பதில் கோபம் கொண்டு மனதின் போராட்டத்தை மறைத்து, “எனக்கு காப்பியும் பிடிக்காது.” முரண்டு பேசினாள்.

        நீ என்கூட வரியா, வரலையா?” ரகுநந்தன் சிடுசிடுக்க, அபிநயா எதுவும் பேசாமல், மௌனமாக தலை அசைத்தாள்.

   இவுகளுக்கு இன்னும் என் மேல கோபமா? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?’ என்று எண்ணியபடி, “டிரஸ்…” அவள் இழுக்க, “எல்லாம், நான் வச்சிட்டேன்.” அவன் பேச்சு முடிந்தது என்பது போல் கிளம்பிவிட்டான்.

    இருவரும், விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவன் கொடுத்த குறிப்பிலிருந்து, கன்சென்ஜூங்கா என்று அபிநயாவும் கணித்துவிட்டாள். தேநீரை பற்றி அவன் பேசியதிலிருந்து, அவர்கள் செல்லுமிடம் டார்ஜிலிங்காக இருக்கும் என்பதும் அவள் யுகம்.

   அவள் யூகமும் பொய்க்கவில்லை. அபிநயாவின் முதல் விமான பயணம். அவள் தடுமாறுகையில், அவன் அவளை தாங்கினான்.

    விமான பயணத்தின் பொழுது காது அடைத்து கொள்ளாமல் இருக்க, அவளுக்கு செவிகளில் பஞ்சு வைக்க உதவினான். ஏதாவது மென்றால், காது அடைப்புக்கு அவளுக்கு ஏதுவாக இருக்கும் என்று அவள் முகமறிந்து மிட்டாய் கொடுத்தான்.

  என்ன, ‘உன்னை தொடாமலே, என்ற சொல்லோடு  உன்னிடம் பேசாமலே…என்ற சொல்லும் இணைந்து கொண்டது.

        இவ்வளவும் செய்வாக… ஆனால், பேச மாட்டாக.அவள் அவனை ஏக்கமாக பார்த்தாள்.

  இவ்வளவு பண்றேன். ஆனால், இவ என்கிட்ட பேசமாட்டா?’ அவனும் அவளை ஏக்கமாக பார்த்தான்.

 விமானம், கார் என அவர்கள் பயணம் மாறி டார்ஜிலிங்கை வந்தடைந்தனர்.

 குளிர் அவள் உடலை ஊசியாக துளைத்தது.

   அவன் அவளிடம் ஜெர்கினை நீட்ட, அதை வாங்கி அணிந்து கொண்டாள் அபிநயா.

          அவர்களுக்கென, தனி கார் அமர்த்தி இருந்தான். இருவரும் அவர்கள் அறையை நோக்கி பயணித்தனர்.

   காரிலிருந்து, இறங்கி சற்று தூரம் அவர்கள் நடக்க, “ட்ரீ ஹவுஸ்….” ஆச்சரியத்தில், தன் கண்களை விரித்தாள் அபிநயா.

         தன் மனைவியின், சந்தோஷத்தை அவள் கண்களில் தோன்றிய ஜொலிப்பில் புரிந்து கொண்டான் ரகுநந்தன்.

 

        அவளை ரசனையோடு பார்த்தான். இறைவன் முன் கூட  இதுவரை தோன்றாத எண்ணங்கள் இன்று அவன் மனைவியை பார்த்து அவனுக்கு தோன்றியது.

    வாத்தியரம்மா என்கிட்டே மனசு விட்டு பேசணும். எங்களுக்குள்ள இருக்கிற இடைவெளி மறையனும். இந்த தனிமை நிச்சயம் அதுக்கு  வழிவகுக்கும்.  எல்லாம் சரியாகணும்.அவன் மனதார வேண்டிக்கொண்டான்.

   இருபக்கமும் மரக்கிளைகள், இடையில் மரவீடு அமைந்திருந்தது.

              மரப்படிகள், இடையில் சிறிய இடைவெளி. அபிநயா ஏற, பயப்படுவாளோ?’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க, ‘இதெல்லாம் எனக்கு எம்மாத்திரம்?’ என்பது போல் அசட்டையாக ஏறினாள் அபிநயா.

       மரம் ஏறி பழக்கம் போல?” ரகுநந்தன் குரல் கேலியாக ஒலித்தது.

    ம்… வாக்கப்பட்டு வந்த இடம் அப்படி.” சரக்கென்று கூறினாள் அபிநயா.

    பேசி முடித்துவிட்டு தான், தான் கூறிய முழு பொருள் புரிய, நாக்கை கடித்தாள்.

    அவுக சொன்னாக, நானும் சொன்னேன்.தான் பேசியதற்கு நியாயம் கற்பித்து கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

      ஒரு வரண்டா. பெரிதாகவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாமல் படுக்கை அறை. அதை ஒட்டியே சின்ன சமயலறை.

 

   மூங்கில் கம்புகளால் ஆன, கட்டில். வெள்ளை நிற மெத்தை. மர, ஜன்னல். அந்த ஜன்னல் வழியே, அருகில் தெரிந்த மரக்கிளைகள். அதில் பூத்து குலுங்கிய மஞ்சள் நிற பூக்கள்.

           ஜன்னல் வழியாக அந்த பூக்களை பறிக்க எத்தனித்து, அவளுக்கு எட்டாமல் போக, முகத்தை சோகமாக சுழித்தாள்.

      அவன் பூக்களை கொய்து, அவளிடம் பூங்கொத்தை கொடுத்து, அவள் மறைமுக நாண புன்னகையை பரிசாக பெற்றுக் கொண்டான்.

      காரணமே இல்லாமல் வளர்ந்து கொண்டிருந்த கோபம், காரணம் இல்லாமலே மறைய ஆரம்பித்திருந்தது.

      குளிச்சிட்டு வா. வெளிய போவோம். பெருசா ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. ஜஸ்ட் வாக்கிங். ட்ரெக்கிங்ன்னும் சொல்லலாம்.” என்று அவன் கூற, அவள் உடை எடுக்க எத்தனிக்க, அவன் ஒரு உடையை நீட்டினான்.

    அடர்ந்த பிங்க் நிறத்தில், வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் பூக்கள் தெறித்தார் போல் லாங் ஸ்கிர்ட், மஞ்சள் நிறத்தில் டாப்ஸ். அதை பின்னோடு இறுக்கி கட்டுவது போல, பிங்க் நிற கயிறு.

     வாவ்!அவள் கண்களில் பாராட்டு, ‘இவுகளுக்கு இவ்வளவு பார்த்து எடுக்க தெரியுமா?’ என்ற கேள்வி அபிநயாவின் மனதில். ஆனால், அவள் கேட்கவில்லை. பேச மாட்டார்களாம். கோபம்!

 அவள் கோபத்தை நினைத்து, அவளும் சிரித்துக் கொண்டாள். அவனும் ரசித்துக் கொண்டான்.

  வெந்நீரில் குளித்து, லாங் ஸ்கிர்ட் அணிந்து, மஞ்சள் நிற டாப்சும் அணித்திருந்தாள்.  பின்னோடு கட்ட வேண்டிய கயிறை, ஒருவாறு கஷ்டப்பட்டு, கட்டி முடித்துவிட்டாள்.

 

   இதை எல்லாம் நான் எப்படி தனியா கட்டுவேன்? அதை எல்லாம் யோசிக்கறாகளா?” செல்லமாக கோபித்து கொண்டு, தலை முடியை காயவைத்து விட்டு வெளிவந்தாள் அபிநயா.

  அவன் வாங்கி வைத்திருந்த, மஞ்சள் நிற நீளமான தோடு அவள் நடைக்கு ஏற்ப அசைந்து அசைந்து அவள் கன்னத்தை தீண்டியது.

          ஹர் ட்ரையரில் காய்ந்த முடி, ஆங்காங்கே சில நீர் மொட்டுகளோடு அவள் கன்னம் தொட்டு வடிந்து கொண்டிருந்தது.

   இமைக்கவும் மறந்து அவளை பார்த்தான் ரகுநந்தன். லாங் ஸ்கிர்ட் அவளுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது.

          அவன் கண்கள், அவள் தேகம் தொட்டு வடிந்து கொண்டிருந்த நீர் மொட்டுகள் மேல் நின்றது.

   அவன் மனமோ, அவனுக்கு கிட்டாத, பாக்கியத்தை பெற்ற நீர் மொட்டு மேல் சற்று பொறாமை கொண்டு, அதை தட்டிவிட எண்ணியது.

   ஆனால், ‘உன்னை தொடலை?’ என்ற அவன் கொள்கை, அவன் கைகளை இறுக கட்டிவிட, ‘தொட்டா, என்ன சொல்ல போறா?’ அவள் மனதை அறிந்த அவன் மனம் வாதிட்டது.

    இல்லை, வாத்தியரம்மா மனசு எனக்கு முழுசா தெரியணும். அவளுக்கு என் மேல், எந்த சுணக்கமோ, வருத்தமோ இருக்க கூடாது.என்று உறுதி எடுத்துக்கொண்டு, “கிளம்புவோமா?” என்று அவளை பார்த்தபடியே கேட்க, அபிநயா மௌனமாக தலை அசைத்தாள்.

      பேசமாட்டாளோ?’ அவனுள் ஏக்கம்.

 

   இந்த டிரஸ் போட்டுட்டு எப்படி ட்ரெக்கிங் போறது?” சமாதானமாகவும் பேச பிடிக்காமல், பேசாமல் இருக்கவும் பிடிக்காமல் இப்படி ஒரு கேள்வி கேட்டு வைத்தாள் அபிநயா.

      ஜஸ்ட் கொஞ்ச தூரம் வாக்கிங் தான். நீ எப்பவும் கட்டுற சேலை மாதிரி தான் இது.” அவள் பேசியதே போதும், என்பது போல் பதிலளித்தான் அவன்.

அதற்கு மேலே எதுவும் அவளும் பேசவில்லை. அவனும் பேசவில்லை.

    நீல நிற ஆகாயம். ஆகாயத்தை தழுவி கொண்டு பசுமையான மலை. அந்த மலையை, கொஞ்சி விளையாடிபடியே மேகங்கள்.   

          சில்லென்ற காற்று அவர்களை இதமாக வருடியது. தன் மனைவியை விதம், விதமாக படம்பிடித்தான் ரகுநந்தன். அவளும் அவனை படம்பிடித்தாள்.

           ஆனால், இருவரும் இணைந்து படம் பிடிக்க வேண்டும் என்ற அவா அவளுள். அவள் ஆசையை புரிந்து கொண்டவன் போல், அங்கு சென்று கொண்டிருந்த, ஜோடியிடம் அவன் கேமராவை கொடுக்க, இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

    மெல்லிய இடைவெளியோடு தான்!

  “யு போது டோன்ட் லுக் லைக் ஹனி மூன் கபில்.” என்று அந்த வட இந்தியன் ஆங்கிலத்தில், அவர்கள் நின்ற விதத்தை  கேலி பேசி சென்றான்.

    ரொம்ப கரெக்ட். விடுகதை போட்டு ஹனிமூன் போற இடத்தை சொல்றது. பேசமாலே, பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே, ஹனிமூன் கூட்டிட்டு வரது. இதெல்லாம் கொண்ட ஸ்பெஷல் ஹனிமூன் கபில்.” அபிநயா முணுமுணுக்க, ரகுநந்தன் தன் மனைவியை பார்த்து , ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.

   இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை…அவனை திட்டியப்படி, அங்கு முட்களுக்கு இடையே மலர்ந்திருந்த ரோஜாக்களை ரசித்தப்படி நடக்க ஆரம்பித்தாள் அபிநயா.

    ரகுநந்தன் பின்னே வருவான் என்ற நம்பிக்கையோடு.

 அவள் வானம், பூமி, மலையின் உயரம், மறுப்பக்கம் இருந்த பள்ளத்தாக்கின் ஆழம் என அனைத்தயும் கணக்கிட்டபடி சற்று கோபமாகவே வேகமாக நடந்தாள்.

   என்ன கோபம்? எதற்கு கோபம்?’ என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

    அன்று பேசியதற்கு, மன்னிப்பு வேண்டாம். சமாதானம் செய்தால் கூட போதும்.

 பேசாமல், நான் இதை அவுகளிடம் கேட்டு சண்டை போட்டுற வேண்டியது தான்.என்ற முடிவோடு அவள் திரும்ப, அங்கு ரகுநந்தன் இல்லை.

   அங்கு யாருமே இல்லை.  மலை பிரமாண்டமாக வெறுமையாக காட்சி அளித்தது.

 

ஒரு நொடி, அபிநயாவின் இதயம் திக் என்று நின்று  வேகமாக துடித்தது. வந்த வழியே பின்னே சென்றாள்.

ரகுநந்தனை காணவில்லை.

   என்னை விட்டுட்டு எங்கையும் போக மாட்டாகளே.அவள் மனம் உறுதியாக நம்பியது.

தன் கண்களை நான்கு பக்கமும் சுழலவிட்டாள்.

நான் ஏன் அவுகளை விட்டுட்டு முன்னே நடந்தேன்?’ நொடி பொழுது கால தாமதத்தில், தன்னை தானே நொந்து கொண்டாள்.

   ஒரு நிமிடம் கடந்திருந்தது.  

“நந்தன்…” அவள் உதடுகள் சத்தமாக அழைத்தது.

பதில் இல்லை.

 பசுமை நிறைந்த அந்த இடம், அதன் பசுமையை இழந்து அவளுக்கு பாலைவனம் போல் காட்சி அளித்தது.

நந்தன்… நந்தன்… நந்தன்…” என்ற அவள் அழைப்பு, அவள் ஆழ் மனதிலிருந்து, உயிரோடு கலந்து விம்மல் போல் ஒலிக்க ஆரம்பித்தது.

பொழுதுகள் விடியும்…

Leave a Reply

error: Content is protected !!