Poo11

சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் பல்லவி. ஏதோ ஒரு சத்தம். புரியாத பாஷையில் யாரோ எதுவோ சொல்வது போல இருந்தது. நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை நான்கு முப்பது. இந்த நேரத்தில் என்ன சத்தம் இது?

 

கொஞ்ச நேரம் செவிமடுத்தவளுக்கு அந்த பாஷை சிங்களம் என்று புரிந்தது. ஆனால் இத்தனைச் சத்தமாக அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. விடிந்ததும் கண்டிப்பாக இதைப்பற்றி கவிதாவிடம் கேட்க வேண்டும்.

 

அந்த எண்ணத்தைச் சற்று ஒதுக்கி வைத்தவுடனேயே கூப்பிடாமல் மாதவனின் முகம் மனதுக்குள் வந்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது. ஃபோனை எடுத்து அதிலிருந்த கணவனின் முகத்திற்கு முத்தம் வைத்தாள் பெண். இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்?

 

நிச்சயமாக நிம்மதியான உறக்கம் அவனுக்கும் இருக்காது. ஊருக்குப் போயிருப்பார்களா? இல்லை தங்கள் வீட்டிலேயே தங்கி இருப்பார்களா? அத்தையை நிச்சயம் கோபித்துக் கொண்டிருப்பான். அத்தையை மட்டுமல்ல, தன் வீட்டாரையும் நிச்சயம் கோபித்திருப்பான். அதையெல்லாம் பார்த்தால் மாதவன் வீடு வந்திருக்க முடியுமா?

 

எண்ணமிட்டபடியே புரண்டு படுத்தாள் பல்லவி. வசதிக் குறைவுகள் எதுவும் இருக்கவில்லை. சொல்லப்போனால் அவள் எதிர்பார்த்ததை விட அனைத்துமே செம்மையாக இருந்தன. 

 

கவிதாவின் நட்பு இப்போதைய அவள் மனநிலைக்கு மிகுந்த மருந்தாக இருந்தது. கலகலவென்று பேசியது பெண். பல்லவியின் அந்தரங்கங்கள் எதையும் அலசவில்லை. அதே போல அவளைப் பற்றியும் எதுவும் பேசவில்லை. யாழ்ப்பாணத்துப் பெண். கண்டியில் வேலைப் பார்க்கிறாள். அவ்வளவுதான் பல்லவிக்குத் தெரியும்.

 

இந்த வீட்டில் அதிக நாட்கள் விருந்தினராக உட்கார்ந்திருக்க முடியாது என்று பல்லவிக்குப் புரிந்ததால் நேற்று இரவு உணவின் போதே பேச்சை ஆரம்பித்திருந்தாள்.

 

கவிதா…

 

சொல்லுங்கோ பல்லவி. சாப்பாடெல்லாம் எப்பிடி இருக்கு? உங்களுக்குப் பிடிச்சிருக்கோ?’

 

ரொம்பப் புடிச்சிருக்கு. நான் சொல்ல வந்தது வேற கவிதா.

 

சொல்லுங்கோ சொல்லுங்கோ.

 

எனக்கு… ஒரு வேலை வேணும்.சொன்ன பெண்ணை எதிரிலிருந்த பெண் ஆச்சரியமாகப் பார்த்தது.

 

ஏன் அப்பிடிப் பார்க்கிறீங்க?’

 

உங்களை இந்த வீட்டுல எந்தக் குறையுமில்லாமப் பார்த்துக்க வேணும் என்டுதான் எனக்கு உத்தரவு. அது உங்களுக்கும் தெரியும் தானே?’

 

தெரியுந்தான்… இருந்தாலும்…

 

பல்லவி, இன்டைக்குத்தான் இங்க வந்திருக்கிறியள். பேசாம ஒரு கிழமைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்கோ. நாளையில இருந்து ஒரு கிழமைக்கு நானும் லீவ் போட்டிருக்கிறன். ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா ஊரைச் சுத்துவம். ஷாப்பிங் பண்ணுவம். பேந்து மத்ததை எல்லாம் யோசிக்கலாம். இப்ப ஹாப்பியா இருங்கோ பல்லவி.அந்தப் பெண் சற்று அழுத்திச் சொல்ல பல்லவி ஒரு புன்னகையோடு அந்தப் பேச்சை விட்டு விட்டாள். 

 

கவிதா சொல்வதும் சரிதான். ஒரு வாரம் போகட்டும். அதன்பிறகு என்ன செய்வதென்று யோசித்துக் கொள்ளலாம். இப்போது கையில் செலவிற்குக் கணிசமான தொகை இருக்கும்போது எதற்கு யோசிக்க வேண்டும்.

 

பல்லவியின் சேமிப்பில் எப்போதும் கொஞ்சம் பணம் இருக்கும். போதாததற்கு மாதவன் வேறு இவள் செலவிற்காகப் பணம் போட்டிருந்தான். தேவைப்பட்டால் உபயோகப்படுத்து என்றும் சொல்லி இருந்தான். இதுவரை அதற்குத் தேவை  இருக்கவில்லை.

 

அதற்கு மேல் உறக்கம் வராததால் எழுந்து காலைக்கடன்களை முடித்தாள் பல்லவி. தண்ணீர் ஜில்லிட்டுப் போயிருந்தது. இப்போது குளிப்பது அசாத்தியம் என்பதால் முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். சூடாக ஏதாவது அருந்தினால் நன்றாக இருக்கும் போல இருந்தது. அந்தக் குளிர் அவள் உடலை லேசாக ஊடுருவ அணிந்திருந்த சுடிதாரின் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

 

முதல் வேலையாக ஸ்வெட்டர் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் தினம் இப்படிப் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்துவிடும்.

 

நேரத்தைப் பார்க்க ஐந்து முப்பது என்றது. மாதவன் இப்போது உடற்பயிற்சி செய்யும் நேரம். அவள் மனதுக்குள் ஏதோ ஒரு வலி பரவ அதை உதறியவள் சமையலறையைத் தேடிக் கொண்டு போனாள்.

 

எல்லாம் அந்தந்த இடத்தில் கச்சிதமாக இருந்ததால் தனக்காக ஒரு டீயைப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வத்தாள். வீட்டின் சொந்தக்காரர் கொஞ்சம் பெரிய இடமாக இருக்க வேண்டும். வீட்டிலிருந்த பொருட்களின் தரம் அப்படித்தான் சொன்னது.

 

சூடான டீ உள்ளே இறங்க உடம்பில் ஒரு புதுத் தெம்பு பிறந்தது. முன் வாசல் கதவைத் திறந்து கொண்டு லேசாக வெளியே எட்டிப் பார்த்தாள்.

 

அடேங்கப்பா! எத்தனை அழகு! கண்களை இமைக்க மறந்து பார்த்திருந்தாள் பல்லவி. பிறந்தது கிராமம் என்றாலும் பல்லவி வளர்ந்தது படித்தது எல்லாம் டவுனில்தான். அங்கே இத்தனை அழகைப் பார்க்க முடியாது.

 

மாதவனின் ஊர் நல்ல செழிப்பான ஊர்தான் என்றாலும் அங்கே கூட இத்தனை அழகு சாத்தியமில்லை. இங்கே… பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்

 

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா… என்று பாரதி பாடினானே! அது பல்லவி நின்றிருந்த இடத்திற்கு வெகுவாகப் பொருந்திற்று.

 

எதிரே தெரிந்த தேயிலைப் பயிரிடப்பட்டிருந்த பச்சை மலைகளின் முகடுகளை வெண்பஞ்சு முகில்கள் உராய்ந்து கொண்டு காதல் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

இடைவெளியின்றி நெரிசலாக நின்றிருந்த தேயிலைப் புதர்களுக்கு நடுவில் ஆங்காங்கே சில பெண்கள் கூடைகளை முதுகில் கட்டிக்கொண்டு தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இன்னும் சூரியனே அவன் வேலையை ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இவர்கள் வேலையை ஆர்பித்து விட்டார்களே! அதிசயப்பட்டவளுக்கு வருடத்தில் பல நாட்களில் அந்த ஊரில் சூரியனைப் பார்க்க முடியாது என்பது தெரியாது.

 

பல்லவி! வேளையோட எழும்பிட்டியளோ?” அந்தக் குரலில் கவனம் கலைந்த பல்லவி திரும்பிப் பார்த்தாள். ஒரு கொட்டாவியை நாசூக்காக வெளியேற்றிய படி அங்கிருந்த கூடை நாற்காலியில் அமர்ந்தாள் கவிதா.

 

எந்திருச்சிட்டேன் கவிதா. காலையிலேயே ஏதோ பெருசா சத்தம் கேட்டுதா என்னால…”

 

ஷ்…” பல்லவி முடிக்கும் முன்பாகவே தலையில் கையை வைத்துக் கொண்டாள் கவிதா.

 

சாரி பல்லவி. நேத்தே உங்களுக்கு இதைச் சொல்லணும் என்டு நினைச்சனான். அசதியில மறந்து போனன். அது இங்க தலதா மாளிகைஇருக்குத்தானே?” கவிதாவின் பேச்சில் பல்லவி திருதிருவென முளித்தாள்.

 

ஓ… தெரியாதோ? கண்டியில நல்ல புகழோட இருக்கிற பௌத்த ஆலயம்தான் தலதா மாளிகை. இங்க புத்தரின் புனிதப் பல் இருக்கிறதா பௌத்தர்கள் சொல்லுறாங்க. அவங்க காலையிலேயே அவங்க பாஷையில ஏதோ ஓதுவாங்க. அந்தச் சத்தம்தான் அது.”

 

ஓ… கவிதாக்கு சிங்களம் தெரியுமா?”

 

ஏதோ இஞ்ச குப்பைக் கொட்டுற அளவுக்குத் தெரியும் பல்லவி. அதை விடுங்க. இன்டைக்கு என்ன ப்ளான் பல்லவி. வெளியே எங்கயாவது போய் ஊரைச் சுத்துவமோ?”

 

ம்… போகலாம் கவிதா.”

 

அப்ப முதல்ல ஷாப்பிங் போவம். எனக்கும் கொஞ்சம் திங்ஸ் வாங்கக் கிடக்கு. நீங்களும் பெருசா ஒரு உடுப்புகளும் கொண்டு வரலைப் போல?”

 

ஆமா… திடீர்னு கிளம்பினேன். அதால கொஞ்சம் ட்ரெஸ்தான் கொண்டு வந்திருக்கேன்.”

 

டோன்ட் வொர்ரி, அப்ப இன்டைக்கு ஃபுல்லா ஷாப்பிங்தான்.” அந்தப் பெண் உற்சாகமாகத் திட்டம் தீட்ட, தன் கவலைகளைத் தூக்கித் தூர வைத்துவிட்டு பல்லவியும் அந்த குதூகலத்திற்குள் தன்னைப் புகுத்திக் கொண்டாள்.

 

பல்லவியின் தூக்கத்தைக் கலைத்த தலதா மாளிகைக்கே பெண்கள் இருவரும் முதலில் போனார்கள். அங்கிருந்த கூரைகளில் ஒன்று தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. அங்குதான் புத்தரின் புனிதப் பல் இருக்கிறதாம். 

 

உள்ளே செல்லும் வழி நெடுகிலும் சிறிய தட்டுக்களில் தாமரைப் புஷ்பங்களும் மல்லிகைப் புஷ்பங்களும் வைத்திருந்தார்கள். தன் மனதின் பாரங்களையெல்லாம் அந்தக் கருணா மூர்த்தியின் பாதங்களில் இறக்கி வைப்பவள் போல பல்லவி பயபக்தியோடு ஒரு தட்டை வாங்கிக் கொண்டாள். 

 

ஆனால் கவிதா நிதானமாக உள்ளே செல்லவும் பல்லவி அவளைக் கேள்வியாப் பார்த்தாள். ஒரு தோள் குலுக்கல் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

 

ஏன்? கவிதாக்கு கடவுள் பக்தி இல்லையா?”

 

அது இருக்கு ஒரு ஊர்ப்பட்ட அளவு.”

 

பின்ன என்னாச்சு?”

 

புத்தர் பெரிய மகான்தான், இல்லையென்டு சொல்லலை. ஆனா…” அதற்கு மேல் கவிதாவும் பேசவில்லை, பல்லவியும் துருவவில்லை. இது உள்நாட்டுக் கலவரத்தின் விளைவு என்று புரிந்து கொண்டாள். 

 

அந்த இடத்தையே நிரப்பியிருந்த அமானுஷ்ய அமைதியும் சதா சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் விளக்குகளின் வாசனையும் பல்லவியின் மனதிற்குள் சொல்லவொண்ணா அமைதியை ஊடுருவச் செய்தன.

 

அதன்பிறகு பெண்கள் இருவரும் தங்கள் இஷ்டம் போல ஊர் சுற்றினார்கள். தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டார்கள்.‌ இலங்கையில் உற்பத்தியாகும் கைத்தறிச் சேலைகள் மிகவும் அழகாக இருக்கவே அதில் நான்கைந்தைப் பல்லவி வாங்கினாள். 

 

அங்கிருந்த தரமான உணவகம் ஒன்றில் மதிய உணவை முடித்துக்கொண்டு ஒரு கேப்பைப் பிடித்துக்கொண்டு வீடு வந்தார்கள். கேப்பின் ட்ரைவர் தமிழர் போலும். அழகான தமிழ் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.

 

பூந்தோட்டத்தில் ஹோய்… காதல் கண்ணம்மா…  பாடல் வரிகள் பல்லவியைச் சுண்டி இழுக்க சொல்லாமல் கொள்ளாமல் அவள் மனது மாதவனை நாடிச் சென்றது. 

 

அந்த முகத்தில் வாட்டத்தைக் கண்ட கவிதா பல்லவியின் கையை லேசாக அழுத்திக் கொடுத்தாள். இந்தப் பெண்ணுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?! ஆச்சரியப்பட்ட பல்லவி அப்போதைக்கு அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள். இருந்தாலும் அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

 

***

 

வாடகைக்கு ஒரு காரை எடுத்துக்கொண்டு ஊர் நோக்கிப் போய் கொண்டிருந்தான் மாதவன். பின் சீட்டில் அம்மா பவானி. எப்போதும் அம்மாவும் மகனும் பேசிக் கொள்பவர்கள் அல்லதான். இருந்தாலும் இன்று அந்தக் காருக்குள் நிலவிய அமைதி கொஞ்சம் கனமாக இருந்தது.

 

பல்லவியின் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் மாதவனின் பார்வை அம்மாவின் பக்கம் திரும்பவே இல்லை. அவன் கைகளில் அந்தக் கார் படாத பாடுபட்டு ஊர் வந்து சேர்ந்தது. இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் பயணத்தை அதற்கு முன்பாகவே முடித்திருந்தான் மாதவன்.

 

இவர்கள் வீடு வந்து சேர்வதற்கும் நர்ஸ் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் சோமசுந்தரத்தின் உடல்நிலையைப் பரிசோதிக்க டாக்டர் அந்த ஏற்பாட்டைப் பண்ணி இருந்தார்.

 

அப்பாக்கு எல்லாம் நார்மலா இருக்கா?”

 

இருக்கு சார்.” பணிவாகச் சொல்லிவிட்டு அந்தப் பெண் நகர மாதவன் விடுவிடுவென்று வீட்டிற்குள் நுழைந்தான்.

 

மாது! எப்படிடா இருக்கே?” கண்கள் கலங்க அற்புதா ஓடி வந்தாள். கணவரும் பெண்ணும் ஏதோ வேலையாக வெளியே போயிருக்க அற்புதா மட்டுமே வீட்டில் இருந்தாள்.

 

நல்லா இருக்கேன்.” மாதவனின் குரலில் அவ்வளவு கடினம். இவன் சத்தம் கேட்கவும் வாணியின் தலை கிச்சனில் இருந்து நீண்டது.

 

உனக்கு ஒன்னும் இல்லையே மாது?”

 

ஒன்னுமில்லை.”

 

பல்லவி எங்க மாது?” அக்கா கேட்ட மாத்திரத்தில் மாதவனின் கண்கள் அம்மாவை அனல் பார்வைப் பார்த்தது.

 

அதை உன்னோட அம்மாக்கிட்டக் கேளு. கேட்டுட்டு, முடிஞ்சா எனக்கும் சொல்லு.” வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு சட்டென்று மாடிக்குப் போய்விட்டான். அற்புதாவின் பார்வை அம்மாவை ஆச்சரியமாகப் பார்க்க அதற்கு மேல் அடக்க முடியாமல் விக்கி விக்கி அழுதார் பவானி. 

 

மாதவன் அதன்பிறகு தன் வீட்டில் சிறிது நேரமும் தாமதிக்கவில்லை. தனக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டு கீழே இறங்கி வந்தான். அப்பாவிடம் போய் இரண்டொரு வார்த்தைகள் அவருக்குச் சந்தேகம் வராதவாறு பேசியவன் மீண்டும் அற்புதாவிடம் வந்தான்.

 

இனி இந்த வீட்டுக்குள்ள நான் வர்றதா இருந்தா அது பல்லவி கூடத்தான் இருக்கும். ஒருவேளை அவளை என்னால கண்டுபிடிக்க முடியலைனா நீங்க என்னப் பார்க்கிறது இதுதான் கடைசித் தடவையா இருக்கும்.”

 

மாது!” அற்புதாவின் அதிர்ந்த பார்வையைப் புறந்தள்ளியவன் அவசரமாகக் காருக்குப் போய் அதைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். பெண்கள் இருவரும் திகைத்துப்போய் நின்றிருந்தார்கள்.

 

நேராக பல்லவியின் வீட்டிற்கு வந்த மாதவன் அவன் கையோடு கொண்டு வந்திருந்த பையை பல்லவியின் அறையில் வைத்துவிட்டு வெளியே வந்தான்.

 

துளசி!”

 

அத்தான்.”

 

எனக்கு பல்லவி முன்னாடி வேலைப் பார்த்த ஆஃபீஸுக்குப் போகணும். கொஞ்சம் எங்கூட வர்றியா?”

 

வர்றேன் அத்தான்.”

 

மாப்பிள்ளை…” முதன்முதலாகத் தனது இளைய மருமகனை மாப்பிள்ளைஎன்று அழைத்தபடியே வந்து நின்றார் தியாகராஜன். அவருக்குப் பின்னால் சரோஜாவும் நின்றிருந்தார்.

 

சொல்லுங்க.”

 

இப்போ எதுக்கு அங்க…” அவரை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தது மாதவனின் பார்வை.

 

அப்போ என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க? கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கைப் பார்க்கச் சொல்றீங்களா?” இதற்கு என்ன பதில் சொல்வது?! காரில் ஏறப்போனவன் மீண்டும் திரும்பி சரோஜாவிடம் வந்தான்.

 

பல்லவியை நீங்க கஷ்டப்பட்டுப் பெத்து வளத்திருக்கலாம். நான் இல்லேங்கலை. ஆனா இப்போ அவ எனக்குச் சொந்தம். எனக்கு மட்டுந்தான் சொந்தம். இனிமே இப்பிடிக் கை நீட்டுற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க அத்தை. அதுக்குப் பிறகு நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” அந்த அதட்டலில் சரோஜா வெருண்டு போனார். குரலை லேசாக உயர்த்தி அவன் கர்ஜித்த விதத்தில் தியாகராஜனே கொஞ்சம் பயந்துதான் போனார்.

 

துளசியையும் ஏற்றிக்கொண்டு நேராக அந்தக் கார் பல்லவியின் பழைய ஆஃபீஸுக்கு நேராகச் சென்றது. உள்ளே போகாமல் கட்டடத்தின் பிரதான வாயில் தெரியும்படி காரைப் பார்க் பண்ணிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் மாதவன். துளசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தன் இளைய அத்தான் பண்ணுவது சரியா தவறா என்று கூடப் புரியவில்லை. பல்லவி அக்காவிற்காகத்தான் எல்லாம் பண்ணுகிறார் என்றாலும் இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் எப்படி இருக்கும்?

 

அவள் சிந்தனையைக் கலைத்தபடி பிரதான வாயிலிலிருந்து வெளியேறினான் கௌதம். அவனைப் பார்த்த மாத்திரத்தில் மாதவனின் உடல் விறைப்புற்றது. கியரை அத்தானின் கை மாற்றிய வேகத்திலேயே அவன் மனநிலையை நன்கு அறிந்து கொண்டாள் துளசி.

 

பார்க்கிங்கில் இருந்து அந்த ப்ளாக் ஆடி மெதுவாக வெளியேற அதைத் தொடர்ந்தது துளசி அமர்ந்திருந்த கார். எங்கேயும் தொலைந்து போகாமல் அந்த வாகன நெரிசலிலும் ப்ளாக் ஆடியைத் தொடர்ந்தான் மாதவன்.

 

ஆஃபீஸில் அந்தக் கேடு கெட்டவனைச் சந்திப்பது அத்தனை நாகரிகமாகப் படவில்லை மாதவனுக்கு. அத்தோடு பல்லவியைத் தெரிந்தவர்கள் கூட அங்கே இருப்பார்கள். எதற்கு வீணான ரசாபாசம்.

 

அந்த ப்ளாக் ஆடி தனது எஜமானனின் வீட்டு வாயிலில் நிற்க அதைப் பின் தொடர்ந்தான் மாதவன். காவலாளி கேட்டைத் திறந்து விட சீரான வேகத்தில் ஆடி உள்ளே நுழையப் போனது. அப்போது சரேலென்று மாதவன் தான் வந்திருந்த வண்டியைச் சற்று உள்ளே செலுத்தி அங்கு நிறுத்த கார்கள் இரண்டும் உராய்ந்தபடி நின்றன.

 

கோபமாகக் காரை விட்டு இறங்கிய கௌதமின் கண்கள் மாதவனைக் கண்டதும் தனது பரம வைரியைப் பார்த்தது போல ஏளனமாகச் சிரித்தன.

 

என்ன ஸ்கோடா? ஐயையோ! ஸ்கோடா எங்க? காரை வித்துட்டியா? கார் வெச்சிருக்கிற அளவுக்கு உனக்கெல்லாம் தெம்பில்லைன்னு இப்போதான் உனக்குப் புரிஞ்சுதா?” ஏளனமாகக் கேட்ட கௌதம் மாதவனை நோக்கி வந்தான்.

 

பேச்சுக் குரல் கேட்டு கௌதமின் வீட்டிலிருந்த அவன் பெற்றோரும் அப்போதுதான் கௌதமைப் பார்க்க வந்திருந்த தன்வியும் வீட்டு முற்றத்திற்கு வந்தார்கள். அதற்குள்ளாக கௌதமின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் மாதவன்.

 

பல்லவி எங்கடா?” மாதவனின் முகத்தில் கொலை வெறி தாண்டவமாடியது. அவன் ரௌத்திர முகத்தைப் பார்த்த பின்பும் கௌதம் அசைந்து கொடுக்கவில்லை. இன்னும் தன் எதிரியைக் கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு போனான்.

 

ஆ… என்னோட பெட் ரூம்லதான் இருக்கா, வந்து பார்க்கிறியா?” கௌதம் கேட்டு முடித்த போது மாதவன் அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான்.

 

இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்திற்குள் நடந்திருந்ததால் யாராலும் எதையும் தடுக்க முடிந்திருக்கவில்லை. 

 

வாட்ச்மேன்!” கூவியபடி கௌதமின் அப்பா ஓடி வர, தனது எஜமானனின் அலறலில் வீட்டிலிருந்த மற்ற வேலைக்காரர்களும் வாசலுக்கு ஓடி வந்தார்கள். தன்வியும் நடப்பதை நம்ப முடியாமல் வாசலுக்கு விரைந்து வந்தாள்.

 

கௌதம்! பல்லவி எங்கேன்னு சொல்லிடு. அவளுக்கு ஏதாவது ஆச்சு! உன்னை நான் கொல்லவும் தயங்க மாட்டேன்.” மாதவன் அனல் தெறிக்கப் பேசிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவருக்கும் இப்போது தெளிவாகக் கேட்டதால் திக்பிரமைப் பிடித்தது போல நின்று விட்டார்கள்.

 

கௌதம்!‌ வாட் இஸ் திஸ்?” கௌதமின் அப்பா அலற மாதவனிடமிருந்து தன் மகனை மிகவும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் பிரித்தெடுத்தார் அந்த மனிதர்.

 

துளசியும் காரிலிருந்து இறங்கி ஓடி வந்தவள் மாதவனை தன் பக்கமாக இழுத்தாள். ஆனால் மாதவன் அசையவேயில்லை.

 

அத்தான்! வாங்கப் போகலாம். ப்ளீஸ் அத்தான். பல்லவிக்காவ நாம தேடலாம் அத்தான்.” அவள் குரல் அழுகையோடு மாதவனைக் கெஞ்சியது.

 

இல்லை துளசி. இவனுக்குக் கண்டிப்பா பல்லவி எங்க இருக்கான்னு தெரியும்.‌ இவன்தான் ஏதோ பண்ணி இருக்கான்.”

 

யாரு என்ன வேணும்னாலும் பண்ணட்டும். பல்லவிக்கா கூடிய சீக்கிரம் வந்திருவா அத்தான். வாங்க நாம போகலாம்.” துளசியின் கெஞ்சலை, கண்ணீரைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் கௌதமோடு மல்லுக்கே நின்றான் மாதவன். எப்படியோ பகீரதப் பிரயத்தனங்கள் பண்ணி மாதவனை கேட்டுக்கு வெளியே கூர்க்காவும் தோட்டக்காரனும் அழைத்துச் செல்ல தன்வி கௌதமின் கைகளைக் கெட்டியாகப் பற்றி உள்ளே இழுத்துச் சென்றாள்.

 

தன்வி! கால் த போலீஸ்.” கௌதமின் அப்பா இரைந்து சொல்ல தன்வி கௌதமைப் பார்த்தாள். அவன் வேண்டாம்என்பது போல தலையை அசைக்க கௌதமின் அப்பா கோபத்தின் உச்சத்திற்குப் போனார்.

 

கௌதம்! யாரோ ஒருத்தன் நம்ம வீட்டு வாசல்ல வந்து நின்னு உன்னை அடிக்கிறான், கொல்லுவேன்னு பயமுறுத்துறான். நீ என்னடான்னா போலீஸைக் கூப்பிட வேணாம்னு சொல்றே!”

 

டாட்! ப்ளீஸ். இதுல நீங்க யாரும் தலையிடாதீங்க. இது எனக்கும் அவனுக்குமான பிரச்சனை.”

 

யாரவன்?”

 

டாட்! ப்ளீஸ். எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க. நீங்க கேக்குற எதுக்கும் என்னால பதில் சொல்ல முடியாது. நீங்க போலீஸ் போனீங்கன்னா எனக்குத்தான் ஆபத்து. ஏன்னா… தப்பு எம்மேலதான்.” நிதானமாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான் கௌதம். 

 

கௌதமைப் பெற்றவர்கள் திகைத்துப் போனார்கள் என்றால், தன்வியின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் தெரிந்தன.