AnthaMaalaiPozhuthil-38

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 38

       பசுபதி அரங்கேறிய பழைய நினைவுகளை இந்திராவிடம் பகிர்ந்துவிட்டான் .  வார்த்தைகளிலிருந்து மீண்டு விட்டான் பசுபதி. ஆனால், அவன் தாடை வருத்தத்தில் இறுகி இருந்தது.

        இந்திராவும், அன்றைய நிகழ்வுகளில் உழன்றாள். நான் தவறியதும் அதே நாளில் தான்.அவன் கூறிய நாளிலும், சம்பவங்களிலும் அதைக் கணித்துக் கொண்டாள். 

       அவசர அவசரமாக அரங்கேறிய அபிநயா, ரகுநந்தனின் திருமண நாளும், அவளுக்கு அதை உறுதி செய்தது .

        நானும் இவனை மாதிரி அவசரப்பட்டுட்டேன்.இந்திராவின் மனமும் வருத்தம் கொண்டது.

   பசுபதி கிட்ட இதை பத்தி பேசுவோமா?’ அவள் மனம் எண்ண, அறிவோ பழசை பேசி என்ன ஆக போகுது. பசுபதிக்கு எல்லாம் தெரியும். இனி பழைய கதை எதுக்கு?’ இந்திரா தன் கடந்த கால எண்ணங்களை ஒதுக்கி விட்டு முழுதாக நிகழ் காலத்திற்கு திரும்பினாள்.

        கம்பீரமாக அவள் பார்த்து பழகிய பசுபதியின் முகம் வாடி இருப்பது பிடிக்காமல், அந்த கயிற்று கட்டிலில் அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.

       இந்திராவின், நெருக்கத்தில் அவனும் சுதாரித்துக் கொண்டான்.

        அந்த இருளிலும், அவன் கண்களில் கண்ணீரின் பளபளப்பு.

சில பொழுதுகளில் நாம்ம செய்ற  தப்பை ஒரு நாளும் சரி பண்ண முடியாதில்லை?” இந்திரா உணர்ந்து கேட்க, பசுபதி தலை அசைத்துக் கொண்டான்.

                 தப்பான வழியில் நாம அடைய நினைக்குற எந்த பொருளும் நமக்கு கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் நிலைக்காது.” அவன் முகத்திலும், எதையோ உணர்ந்து கொண்ட புன்னகை.

                  இந்த சித்தாந்த வேதாந்த பேச்சுக்கள் தொடர்வது பிடிக்காமல், “உண்மை காதல் தவறுகளை மன்னிக்காதா?” என்று கண்களில் குறும்பு மின்ன அவள் கேட்க, “உண்மை அன்பு நிச்சயம் மன்னிக்கும்.” அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

   சரி, அன்புன்னே வச்சிப்போம். ஏன் மன்னிக்கலை உங்க அம்முக்குட்டி?” என்று இந்திரா கண்சிமிட்ட, “மன்னிச்சிட்டா, மறக்கலை…” பசுபதி அழுத்தமாகக் கூறினான்.

 என்னவோ, எனக்கு இது புரியலை. எதை மன்னிக்குறது? எதை மறக்குறதுன்னு.” என்று தன் தோள்களை குலுக்கி, தன் கேள்விகளை தொடர்ந்தாள் இந்திரா.

நீங்க, அதுக்கு அப்புறம் உங்க அம்முக்குட்டி கிட்ட பேசவே இல்லையா? ரகு தான் மாப்பிள்ளைன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா?” என்று இந்திரா தன் சந்தேகத்தை கேட்டாள்.

   எனக்கு தெரியாம எப்படி? அது தானே அம்முக்குட்டி! அப்புறமும், என்னை வந்து பார்த்தா. என்கிட்டே அந்த சம்பவத்தைத் தவிர எல்லாம் பேசினா. மாப்பிள்ளை போட்டோ காட்டினா. எனக்கு சம்மதம்மான்னு கேட்டா. ” என்று பசுபதி நிறுத்தினான்.

  அதுக்கு அப்புறம் நீங்க அம்முக்குட்டியை சமாதானம் செய்ய நினைக்கவே இல்லையா?” என்று இந்திரா தன் கண்களைச் சுருக்கி கேட்க, பசுபதி  மறுப்பாக தலை அசைத்தான்.

ஏன்?” என்று இந்திரா சட்டென்று கேட்க, “அம்முக்குட்டி கண்ணுல என் மேல அவ வச்சிருக்கிற பழைய அன்பைப் பார்த்தேன். என் மேல அவ வச்சிருக்கிற பழைய உரிமையைப் பார்த்தேன். ஆனால், அவ கண்ணுல என் மேல நம்பிக்கை இல்லை. ஒரு  பதட்டம் இருந்தது. அப்ப, எனக்கு புரிஞ்சிது. அம்முக்குட்டி, நான் செஞ்ச தப்பை மறக்க மாட்டா. ஒரு நாளும், என்கூட அவ சந்தோஷமா இருக்க மாட்டான்னு.” என்று பசுபதி நிதானமாகக் கூறினான்.

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும், அவ கண்ணில்  என்னை பார்க்கும் பொழுது ஒரு பதட்டம் இருந்தது. இப்ப, தான் அம்முகுட்டி எங்கிட்ட பழைய மாதிரி இருக்கா.”

   பசுபதியின் குரலில், கேள்விக்கான பதில் மட்டுமில்லை. தன் மனைவியிடம், எதையும் மறைக்கக் கூடாது என்ற வெளிப்படையான பேச்சும் இருந்தது.

       இந்திராவுக்கு அது புரிந்தது. அவளுக்கு சில தெளிவுகள் தேவை பட, “எல்லாம் தெரிஞ்சி, எதுக்கு அரிவாளை எடுத்துக்கிட்டு மண்டபத்துக்கு வரணும்?” அவள் கேட்க,”ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் பசுபதி.

   இதுல சிரிக்க என்ன இருக்கு?” இந்திரா உதட்டை சுழிக்க, “எம் பொஞ்சாதிக்கு எல்லா விஷயமும் தெரியும் போல?” அவன் கட்டிலிலிருந்து எழுந்து புருவம் உயர்த்தினான்.

    உங்களுக்கு தெரியும் பொழுது, எனக்கு தெரியாதா?” அவள் கேட்க, அவன் ஆமோதிப்பாக  தலை அசைத்துக் கொண்டான்.

 அம்முக்குட்டி, விருப்பம் இல்லாம கல்யாணம் நடக்குதோன்னு கடைசி வரைக்கும் எனக்கு ஒரு சந்தேகம். ஆத்தா அப்படி தான் சொன்னாக.” அவன் தோள்களைக் குலுக்கினான்.

      அனைத்தையும் தெளிவுபடுத்திவிட்ட எண்ணத்தில்,  எல்லாரும் தூங்கிருப்பாக. வா… உள்ள போலாம்.” அவன் படி ஏற வேகமாக ஓடி அவன் ஏற எத்தனிக்கும் ஒரு படிக்கு முன் நின்று இரு கைகளையும் நீட்டி  வழி மறித்தாள் இந்திரா.

     உன் அம்முக்குட்டிக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?” அவள் கேட்க, பசுபதி அப்படியே நின்று விட்டான்.

   அவன் மௌனத்தை அவள் கண்டுகொள்ள வில்லை.

   இந்திராவிற்கு அனைத்தும் தெரிந்திருந்தும், “ஏன், என் அண்ணனை மிரட்டி என்னை கல்யாணம் பண்ண? ” தெரியாதவள் போல் அவள் கேட்க, ஏதோ சொல்ல எத்தனித்து தன் வாயை இறுக மூடிக்கொண்டான் பசுபதி.

 

        எனக்கும் இது பிடிக்காத கல்யாணம் தான்.” அவள் குரல் மட்டுமே அதை சொல்லியது.  பாவையின் பார்வைக்கு பொயுரைக்க  தெரியவில்லை.

                                 அவன் பார்வை பெண்ணவளின் பார்வையை புரிந்து கொண்டது.

     அவன் சட்டையைக் கொத்தாக பிடித்திருந்தாள் இந்திரா. மேல் படியில் நின்று கொண்டிருந்த இந்திரா, அவன் உயரத்திற்குச் சமமாக இருந்தாள்.

        இப்பவும், சொல்ல மாட்டியா பசுபதி. எங்க அண்ணன் தான் எல்லாம் பண்ணான்னு சொல்ல மாட்டியா?” அவள் அவன் காதருகே கேட்க, பசுபதி கண்களில் அதிர்ச்சி.

      எனக்கு எல்லாம் தெரியும். ரகு சொல்லிட்டான். உங்க அப்பா சாவுக்கு கூட…” இந்திரா குரல் பிசிறியது.

    அவன் இந்திராவின் இதழ்களை, தன் ஆள் காட்டி விரலால் மூடி தன் தலையை இருபக்கமும் அசைத்தான்.

    உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. நீ என்ன பண்ணுவ?” அவன் கேட்க, “ஆத்தாவுக்கு தெரிஞ்சா என்னை ஏத்துப்பாங்களா?” இந்திராவின் முகத்தில் பதட்டம்.

 அவள் பதட்டம் அவனுக்கு ருசித்தது. அவளைச் சீண்டவும் தோன்றியது.

     உனக்கு தான் என்னை பிடிக்காதில்லை? இது பிடிக்காத கல்யாணம் வேற? ஆத்தா ஏத்துக்கலைனா நல்லதுன்னு கிளம்பிரு.” அவன் உல்லாசமாக கூற, இந்திரா கோபமாக  படக்கென்று திரும்பினாள்.    

                         அவள் கோபம், அவள் மனதை இன்னும் அந்த நிலவொளியில் வெளிச்சம் போட்டு காட்ட, அவளை பின்னோடு இடையோடு பசுபதி அணைத்துக் கொண்டான்.

    இதை எதிர்பார்க்காத இந்திரா, அவன் மீது சரிந்தாள்.

      அவன் அவளைத் தாங்கியபடி, அவள் அருகாமையை ரசித்தான். அவள் முகம் அவன் தோள் வளைவில் சாய, விலக மனமில்லாமல் அவளும். விடுவிக்க மனமில்லாமல் அவனும்.

    அவன் சுவாசக் காற்றில் அவள் கரைந்து போக, “ஆத்தாவுக்கு தெரிஞ்சா தானே?” அவன் கிசுகிசுத்தான்.

      உனக்கு எல்லாம் தெரியுமா?” என்று அவள் கேட்க, “ம்… நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி.” அவன் கூற, “அப்புறம் ஏன் என்னை கட்டிகிட்ட?” அவள் முன் பக்கமாக திரும்பி அவன் முகம் பார்த்து கேட்டாள்.

    அவன் கரங்கள், அவள் இடையை விடுவிக்கும் எண்ணம் இல்லாமல் அவளைச் சுற்றி கோர்த்துக் கொண்டு தான் இருந்தது.

   அம்முகுட்டிக்காக…” அவன் அதரங்கள் உண்மையை மட்டுமே உரைத்தது.

 

     உண்மை பிடிக்காமல், இந்திரா விலக எத்தனிக்க, அவல் இடையில் அவன் பிடிமானம் இறுகியது.  “அது பழைய கதை…” அவன் சரசம் பேசினான்.

    அவன் சரசத்தில்  அவள் மனம் உண்மையை ஏற்றுக் கொண்டது. “எனக்காக ஆத்தா கிட்ட பொய் சொல்றியா?” என்று கைகளை அவன் கழுத்தில் மாலையாகக் கோர்த்துக் கொண்டு இந்திரா கேட்டாள்.

அவள் நெருக்கம் அவனை ஏதோ செய்தது. அவன் முகத்தில் புன்னகை மட்டுமே.

    பதில் சொல்லு…” இந்திரா பிடிவாதம் பிடிக்க, அவளை அப்படியே தூக்கி மேல் படியில் நிறுத்தி, “படுக்க போவோம்.” என்று பசுபதி கூறினான்.

    அவர்கள் அறைக்குள் செல்ல, அவன் பாயை விரித்தான்.

     இங்கயே படு.” மெத்தையில் தன் அருகே இருக்கும் இடத்தை காட்டி இந்திரா இயல்பாகக் கூறினாள். 

    பசுபதி எதுவும் பேசவில்லை. தன் மனைவியின் முகத்தை கூர்மையாக பார்த்தான்.

                   அவன் பார்வையின் வீரியம் தாங்காமல், அவள் ஒரு புன்னகையோடு தன் முகத்தை திருப்பிகொள்ள, அவன் மீசை மெலிதாக துடிக்க, அவன் முகதில்லும் ஒரு கம்பீரம் கலந்த வெட்க புன்னகை பூத்தது.

   அவள் அருகே அவன் படுத்துக் கொண்டான். அவர்களுள் ஒரு இடைவெளி. அவனும் குறைக்க நினைக்கவில்லை. அவளும் நெருங்க  நினைக்கவில்லை.

  இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். இந்திரா, அப்படியே உறங்கிவிட்டாள்.

    பசுபதி, அருகே இருந்த மனைவியை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

     எங்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டதா?’ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.  

ஆம்….என்று அறிவு கூறியது. மனமும் ஒத்துக் கொண்டது. காலம் சரியான பதிலை தரும் என்று எண்ணிக்கொண்டு அவனும் நித்திரையில் ஆழ்ந்தான்.  

நேரம் நள்ளிரவைத் தாண்டி விடியற் காலையைத் தொட்டிருந்தது.

    மருத்துவமனையில், அபிநயா அங்கிருந்த இடத்தில் படுத்திருந்தாள். ரகுநந்தன், ராமசாமி மூலமாகவும், பசுபதி மூலமாகவும் தன் மனைவியைப் பற்றி அறிந்திருந்த கடந்த காலத்திலிருந்து வெளியே வந்தான்.

           அவன் முகத்தில் ரசனையோடு ஒரு புன்னகை.

             என் அம்மா கிட்ட இல்லாத தெளிவு, தைரியம். என் அக்கா கிட்ட இல்லாத நேர்மை. இதெல்லாம் தானே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது. உன்னை பத்தி முழுசா தெரிஞ்சதும், நீ என் கூட இருந்தா என் வாழ்க்கை நல்லாருக்குமுன்னு நினைச்சி தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.” நித்திரையில் ஆழ்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்தபடி அவன் முணுமுணுத்தான்.

       அவன் முணுமுணுப்பு சத்தத்தில், அபிநயா திரும்பிப் படுத்தாள்.

         அவள் முகத்தில் ஓர் அழுத்தம்.

       பிடிவாதக்காரி. நான் அடிச்சது தப்பு தான். எத்தனை தடவை சமாதானம் செய்யறேன். ஏத்துக்க மாட்டாளா? குழந்தை விஷயம் கூட என்கிட்ட சொல்லலை. நான், இனி இவளை சமாதானம் செய்ய மாட்டேன். வாத்தியரம்மா குழந்தை விஷயத்தை என்கிட்ட சொன்னால் தான், நானும் அவ கிட்ட பேசுவேன்.” அவனும் முணுமுணுத்தபடி சபதம் மேற்கொண்டான்.

    இவன் முணுமுணுப்பு சத்தத்தில், எழுந்து அமர்ந்த அபிநயா, இவனைப் பார்த்து முறைத்தாள்.

    குழந்தை விஷயம் சொல்லிருக்கேன். என்கிட்ட கேட்டால், குறைஞ்சா போயிருவாக. திமிர்.அவள் மனம் அவனைத் திட்டிக் கொண்டிருந்தது.

    அவள் அவனை முறைக்க, அவன் முகத்தில் புன்னகை.

   ரகு, சிரிக்காத… சிரிச்ச வாத்தியாரம்மா ரகு இல்லை இனி ராகுன்னு சொல்லிருவா…அடக்க முயன்றும் அவன் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.

     அறிவு, மனம் இரண்டும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவ, பிடிவாதம், அவ அத்தான் கிட்ட வேணாசெல்லுபடி ஆகலாம். பசுபதி கேட்பான். நான் கேட்க மாட்டேன். நான் இவ சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டணுமா?’ ரகுநந்தனின் மனமும் முரண்டு பிடித்தது.

           ரகுநந்தன் யார் சொல்றதையும் கேட்க மாட்டான்.வீம்பாக அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

      ரகுநந்தன் எதிரே அமர்ந்திருந்த அபிநயா, அவனைக் கடுப்பாகப் பார்த்தாள்.

 

   என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? அம்மாவுக்கு சரியாகிருச்சு. சீக்கிரம் நார்மல் வார்டுக்கு மாத்திருவாக. அதெல்லாம் சரி தான். ஆனால், இவுக சிரிக்கிற அளவுக்கா இருக்கு நிலைமை.அபிநயா அவனைப் பார்த்து கடுப்பாக எண்ணினாள்.

   அந்த விடிகாலை வேளையில், அபிநயாவைக் கடுப்பேற்றும் முடிவோடு நக்கலாகச் சிரித்தான் ரகுநந்தன்.

    அபிநயா, வேணுமுன்னே வம்பு வளர்கிறாக. என்ன சிரிப்புனு கேட்பேன். அதை வச்சி வம்பு வளர்த்துப் பேச முடிவு பண்ணுதாக. ம்… பேசக் கூடாது. அடிச்சிருக்காக. பேசிறாத அபிநயா. பேசிறாத…தனக்கு தானே கூறிக்கொண்டு அவள் எழ முயல, தலை சுற்றித் தடுமாறினாள் அபிநயா.

       அபி…” அவன் பதறிக்கொண்டு ஓடி வந்தான்.

         அவளை அமரவைத்து, தன்னோடு சாய்த்துக் கொண்டான். அவள் கருவுற்றிருக்கும் செய்தி தெரிந்து தனிமையில் அவன் முதல்  தீண்டல். அவன் உருகினான். அவன் தீண்டலில், அவளும் உருகினாள்.

       இன்பம், துன்பம் இரண்டையும் இத்தனை நேரம்  தனியே சுமந்தவள், அதைத் தாங்க முடியாமல் அவனிடம் இறக்குவது போல் அவனைக் கட்டிக்கொண்டாள்.

     அவள் பாரம் இறங்குவது போல், அவள் விழிநீர் அவன் சட்டையை நனைத்தது.

                        

    அவன் கைகள் அவள் தலை கோதியது. இருவரும், எதுவும் பேசவில்லை.   அவன் சபதமும், அவள் வீராப்பும் அவர்கள் அன்பின் முன் சில நொடிகள் மறைந்து கொண்டன.

      சில நொடிகள் தான். தன்னை சரி செய்து கொண்டு, அபிநயா விலகி எழுந்தாள்.

       அவனும் விலகி கொண்டான். அவள் பேசவில்லை. அவனும்!

    அவள் முகம் நிமிர்த்தி, அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் நெற்றியில் இதழ் பதித்தான். வேறு எதுவும் கேட்கவில்லை. அவளும் கூறவில்லை.

    குழந்தை விஷயம். நீ என்னிடம் சொல்ல மாட்டாயா?’ அவன் விழிகள் ஏக்கமாக அவளைத் தழுவ, ‘ஒன்றும்  இல்லை.என்பது போல் அவள் உதடுகள் இறுக மூடிக்கொண்டன.

         உங்களுக்கு என்கிட்ட கேட்க எதுவும் இல்லையா?’ அவள் கண்கள் அவனை ஏக்கமாக தழுவ,  ஒன்றும்  இல்லை.என்பது போல் அவன் உதடுகள் இறுக மூடிக்கொண்டன.

      அங்கு மௌனமே. அவன் அவளை விலக விரும்பாமல் நிற்க, “நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. அப்பா, இருக்காங்க நான் சமாளிச்சிப்பேன். எப்படியும் கொஞ்ச நேரத்தில் அத்தான் வந்துருவாங்க.” அவள் கூற, அவன் தலை அசைத்துக் கொண்டான்.

    அவன் செல்ல, “நீங்க படுக்கவே இல்லை. கொஞ்ச நேரம் படுத்துட்டு வாங்க.” அவள் கூற, அவன் தன் தலையை திருப்பி அவளை ஆழமாகப் பார்த்தான். இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.என்ற பார்வை அவன் கண்களில் இருக்க, அபிநயா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

       இன்னும் விடியவில்லை. வானம் இருள் கவ்வியே இருந்தது. ரகுநந்தன் அவன் வீட்டிற்குள் நுழைய, அந்த சத்தத்தில் பவானியம்மாள் எழுந்து வந்தார்.

       அவர் தன் மகனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

  அம்மா…” அவன் அழைக்க, “ம்…” அவர் கேட்க, “அம்மா…” ரகுநந்தன் மீண்டும் தயங்கினான்.

  நான், உன் கிட்ட இதை எதிர்பார்க்கலை ரகு.” அவர் கோபமாக கூற, “அம்மா… நான்…” அவன் பேச ஆரம்பிக்க, “அபிநயா, உன் கிட்ட தான் குழந்தை விஷயத்தை முதலில் சொல்லணும்னு எவ்வளவு ஆர்வமா இருந்தா தெரியுமா?” என்று பவானியம்மாள் வருத்தத்தோடு கேட்டார்.

   அம்மா, உங்களுக்கு விஷயம் தெரியுமா?” ரகுநந்தன் முகத்தில் ஓர் ஆர்வம்.

       தெரியும். அபிநயா சொல்லலை. நான், அவ முகத்தைப் பார்த்தே கண்டுபிடிச்சிட்டேன். அவ, உன்கிட்ட தான் முதலில்  சொல்லனுமுன்னு  ஆசையா வாசலைவாசலை  பார்த்து கிட்டே இருந்தா. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.” என்று கூறி சமையலறைக்குள் சென்று, அவள் செய்த இனிப்புகளோடு வெளியே வந்தார்.

  ஹோம் மேட் சாக்லட்ஸ். கவினுக்கு இது தான் சரி வரும்ன்னு செஞ்சா. உன்கிட்ட இனிப்போட சொல்லணுமுன்னு. இப்படி இருக்கும் பொழுது, அக்காவும், தம்பியும் பிள்ளைதாச்சி பொண்ணை அடிச்சி வச்சிருக்கீங்க.” பவானியம்மாள் சிடுசிடுக்க, ரகுநந்தன் தன் கண்களை இறுக மூடி திறந்தான்.

    மேலே பேச எதுவும் இல்லை என்பது போல், பார்வதி உடல்நிலையை விசாரித்துவிட்டு, அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார் பவானியம்மாள்.

   ரகுநந்தன் அவர்கள் அறைக்குள் நுழைந்து, அபிநயாவிற்கு உடை எடுக்க அலமாரியைத் திறக்க, அங்குப் பல பரிசுகள்.

      இரண்டு பெரிய கோப்பைகள், ஒரு சிறிய கோப்பை. இரண்டு கைக்கடிகாரம். ஆண் அணிவது போல் ஒன்று. பெண் அணிவது போல் ஒன்று. ஒரு குட்டி கைக்கடிகாரம்.

  பெரிய பொம்மைகள் இரண்டு. ஒரு குட்டி பொம்மை. இப்படி பல பரிசுகள். அவன் முகத்தில் புன்னகை.

      அவள் கொடுக்க வைத்திருந்த பரிசுகளை அவன் அருகே வைத்து, அசைபோட அவனுக்கு ஆசுவாசம் தேவைப்பட்டது.

 இன்னும் முழுதாக விடியாததால், மின் விளக்கை அணைத்துவிட்டு அவன் படுக்க எத்தனிக்க, அவன் கண்ட காட்சியில் அவன் கண்கள் கலங்கியது.

     இதை விட, அவள் வேறு எப்படி சொல்ல முடியும்?’ என்ற  கேள்வியும் அவனுள் எழுந்தது. தன் மனைவியை அள்ளி அணைக்கும் பேராவல் அவனுள் எழுந்தது.

     

பொழுதுகள் விடியும்…