Idhayam – 44

அத்தியாயம் – 44

இருவரையும் எங்கே தங்க வைப்பதென்று யோசிக்க மஞ்சுளாவின் முகமே அவனின் மனதில் தோன்றி மறைந்தது. உடனே தாய்க்கு அழைத்து நடந்த விஷயத்தை சொல்லி இருவரையும் அவரோடு மதுரை வீட்டில் தங்கவைக்க ஏற்பாடு செய்தான். ஜெகனும் வருமானவரி துறையினர் பிரச்சனைக்கு பிறகு மனைவியைப் பார்த்துவிட்டு வருவதாக சொல்லி மதுரை சென்றார்.

அவர்களை வழியனுப்பி வைத்த கையோடு சிவாவிற்கு அழைத்து அவர்களின் வீட்டில் முறைப்படி சிந்துவிற்கு திருமணம் பேசி முடித்து தேதியும் குறித்தான். தன் தங்கைகள் இருவருக்கும் ஒரே மேடையில் திருமண ஏற்பாடுகளை செய்தான் ஆதி.

அவன் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு அபூர்வாவை அழைத்துச் செல்ல அவளின் நிறுவனத்திற்குச் செல்ல, “சார் மேடம் மத்தியானமே வீட்டுக்கு போயிட்டாங்க” என்றார் வாட்ச்மேன்.

“ஓஹோ அப்படியா?” என்றவனின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கிட, ‘இன்னைக்கு என்ன இவளுக்கு உடம்பு சரியில்லையா?’ என்ற கேள்வியுடன் காரை வீட்டிற்கு திருப்பினான்.

அவன் வீட்டிற்குள் சென்று காரை நிறுத்திட, “அம்மா இன்னைக்கு நான்தான் சமைப்பேன். நீங்க கிச்சன் பக்கம் வராமல் இருங்க அதுவே நீங்க எனக்கு செய்யும் பெரிய உதவி” என்ற அபூர்வாவின் குரல் கணீர் என்று வாசல்வரைக் கேட்டது.

அவளின் குடும்பத்தினர் வந்துவிட்ட விஷயம் உணர்ந்து அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட, ‘அம்மாவை வேலை செய்யவிடாமல் ஆர்ப்பாட்டத்தை பாரு’ என்று நினைத்துக் கொண்டான்.

“நாங்க சமைச்சு நீ சாப்பிட்டப்போ எப்படி இருந்த இப்போ பாரு துரும்பா இழச்சிட்ட” என்று கயல்விழி சொல்ல, “சித்தி நீங்க வேற எனக்கு இப்போ ஐந்து கிலோ எடைதான் ஏறி தான் இருக்கேன். நீங்க அவர் வந்த கேட்டுப் பாருங்க அவரு கதை கதையா சொல்வாரு” என்று பதிலடி கொடுத்தாள்.

“மது நம்மதான் அபூர்வாவை இன்னும் கை குழந்தையாக பார்த்துட்டு இருக்கும். இவ பாரேன் நம்ம மூணு பேருக்கும் சளைக்காமல் பதிலடி கொடுக்கிற” என்று பெருமைப்பட்டார் கீர்த்தி.

தாய்மார்கள் மூவரும் இணைந்து அவளை வேலை செய்ய விடாமல் இருப்பதை ஹாலில் இருந்து பார்த்து கொண்ட ஆண்கள் மூவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அங்கே நடக்கும் விஷயங்களை கவனித்தபடி வீட்டிற்குள் நுழைந்த ஆதியின் முகம் பிரகாசமானது. அவனுக்கு எப்போதும் தனிமை பிடிக்காது தன்னை சுற்றிலும் கலகலப்பாக பேசி சிரிக்க பெரிய பட்டாளத்தை எதிர்பார்ப்பான்.

அந்த எதிர்பார்ப்பு இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்றுதான் நிறைவேறி இருப்பதை நினைத்து அவனின் மனம் சந்தோசம் அடைந்தது.

அவன் வீட்டிற்குள் நுழைவதை கண்ட சக்தி, “மாமா வந்தாச்சு” என்று சொல்ல பெரியவர்களின் கவனம் அவனின் பக்கம் திரும்பியது.

“வாங்க மாப்பிள்ளை” என்று மூவரும் அவனை அழைக்க, “என்ன மாமா நல்ல இருக்கீங்களா? நான் சொன்ன தேதிக்கு பத்துநாள் முன்னாடியே வந்துட்டீங்க?” என்றான்.

அவன் சோபாவில் அமர, “அபூர்வா மாப்பிள்ளை வந்து இருக்கிறார் அவரைக் கவனி” என்று ரோஹித் மகளுக்கு குரல்கொடுத்தார்.

அவள் கையில் காபியை கொடுத்த மது, “நீ போய் மாப்பிள்ளையிடம் பேசிட்டு இரு. நாங்க சமையல் வேலையைப் பார்க்கிறோம்” என்று மகளை அனுப்பி வைத்தாள் மது.

அவள் அங்கிருந்து நகர பெண்கள் மூவரும் தங்களின் வேலையைத் தொடங்கிட, “நான் நல்ல இருக்கேன் மாப்பிள்ளை. நாங்க முன்னாடியே வந்தது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கா” வேண்டுமென்றே மருமகனை வம்பிற்கு இழுத்தான் ரோஹித்.

“ஐயோ மாமா நான் அப்படி சொல்லல. நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. நான் தனியாக வளர்ந்தவன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா நான் கூட்டுக்குடும்பத்தில் பிறக்கலையேன்னு ஏங்கி இருக்கேன். இப்போ உங்களை எல்லாம் இங்கே பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு மாமா” என்றவனின் பார்வை தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அபூர்வாவின் மீது மையலோடு படித்தது.

மாமனாரும், மருமகனும் நண்பர்கள் போல பேசுவதை கண்ட அபூர்வாவின் மனம் பூரித்தது.

“சாருவுக்கும், சிந்துவுக்கும் கல்யாண மாப்பிள்ளை பிடிச்சிருக்கு இல்ல மாப்பிள்ளை? பிள்ளைகளுக்கு பிடிக்காத விஷயத்தை செய்து வைத்து நாளைக்கு அவங்க கஷ்டபடுவது பார்க்கக்கூடாது இல்ல அதன் கேட்கிறேன்” என்றதும் அபூர்வா திகைப்புடன் கணவனை ஏறிட்டாள்.

அதற்குள் சிறியவர்கள் நால்வரும் அவளின் பக்கம் வந்து, “என்ன மாமா எங்கக்காவை குற்றாலம் கடத்திட்டு வந்ததில் இருந்து எங்களை கண்டுக்கவே மாட்டேன்றீங்க” என்று சக்தியும், ராகவும் அவனை வம்பிற்கு இழுத்தனர்.

“அது எப்படி ஞாபகம் வரும். அவரோட பைங்கிளி பக்கத்தில் இருக்கும்போது வானரங்கள் உங்களை நினைக்க அவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு” என்று ஆண்கள் இருவரையும் வாரினார் ரக்சிதாவும், சஞ்சனாவும்.

அவர்களின் சண்டையை ரசித்த ஆதியிடம், “என்ன மாமா அவங்க சொல்வது நிஜமா” என்று ராகவ் கேட்க, “உண்மைன்னு சொல்லுங்க அப்போதாவது மரமண்டையில் ஏறுதான்னு பார்க்கலாம்” என்றாள் சஞ்சனா குறும்புடன்.

சக்தியோ, “இன்னைக்கு மாமா ஆமான்னு சொன்னாலும் சரி, இல்லன்னு சொன்னாலும் சரி சேதாரம் என்னவோ அவருக்குதான் ரக்சி” என்று அவன் சிரிக்க, “ஆமா சக்தி. நம்ம ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்ப்போம்” என்றாள் அவள் சிரிப்பினூடே

அவர்களின் கலட்டாவை ரசித்து வாய்விட்டு சிரித்தவன் கையைத் தூக்கி, “நான் அம்பேல். என்னை ஆளைவிடுங்க. நான் என் அபூர்வாவை தவிர யாரோட பிடியிலும் சிக்க தயாராக இல்ல” என்று சொல்லிவிட்டு எழுந்துக் கொண்டான்.

அபூர்வா சிந்தனையோடு எல்லோருக்கும் காபி கொடுத்துவிட்டு ஆதியின் அருகே செல்ல அவனின் செல்போன் சிணுங்கிட, “மாமா ஒரு முக்கியமான போன் வருது பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு தங்களின் அறைக்கு சென்று மறைந்தான். அவள் யோசனையோடு அவனை பின் தொடர மற்றவர்கள் ஹாலில் அமர்ந்து பேச தொடங்கினர்.

அவள் காபியோடு அறைக்குள் நுழைய, “அபூர்வா” என்று அவளின் பின்னோடு வந்து அணைத்துக் கொண்டான் ஆதி.

“விடுங்க ஆதி.. என்ன இது வீட்டில் எல்லோரும் இருக்கும்போது இப்படி பண்றீங்க” என்று அவனின் கரங்களை விலக்கிவிட்டு காபியை டேபிளில் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் கீழிறங்கி சென்றுவிட்டாள்.

அவளின் ஒதுக்கத்தை உணர்ந்தவன், “மேடம் நம்ம மேல கொலைகாண்டில் இருக்காங்க போல. பரவால்ல கொஞ்சநேரம் மூஞ்சை உம்முன்னு வெச்சிட்டு சுத்தட்டும். நைட் அவளிடம் பேசி எல்லாத்தையும் சரி பண்ணலாம்” என்று குளியலறைக்குள் புகுந்தான்.

அவன் குளித்துவிட்டு கீழே வரும்போது இரவு உணவுகள் அனைத்தும் இருக்க ஒருவரையொருவர் வம்பிழுத்தபடி சாப்பிட்டு முடிக்க பெண்கள் சமையலறை சுத்தம் செய்துவிட்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.

இரவு நேரத்தில் மொத்த குடும்பமும் மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மதுதான் சாருமதி, சிந்துஜாவின் திருமண பேச்சை எடுத்தார்.

“மாப்பிள்ளை பொண்ணுங்க அப்பா, அம்மா இருவரும் கல்யாணத்திற்கு வருவாங்க இல்ல” என்று கேட்க ஆதியோ மனைவியைப் பார்க்காமல், “அவங்க அப்பா வருவாங்க அத்தை. அவங்க அம்மா வருவாங்களான்னு தெரியல” என்றான்.

“உன் தங்கைகள் தானே அப்பானே சொல்ல வேண்டியது தானே ஆதி?” என்று கேட்டார் ரஞ்சித்.

“யாருக்கு யாரு அப்பா? சின்னதில் இருந்து தனியாக கஷ்டப்பட்டு  வளர்த்தது என் அம்மா. அதனால் நான் என்னைக்குமே அப்பாவுக்கு இம்பார்டன்ஸ் கொடுததில்ல. அவர் என்னையும் வளர்க்கல. என் தங்கைகளையும் ஒழுங்கா பாதுகாக்கல. பணம் இருந்தா போதுமா பந்தபாசம் என்று நால்வர் வேண்டாமா?” என்ற அவனின் தோளை தட்டி கொடுத்தார் ரோஹித்.

“யாரையும் எதிர்பார்க்காமல் பெண்கள் இருவரையும் கரை சேர்க்க நினைக்கிற பாரு அதுதான் உன் நல்ல குணம். அந்த குணத்தை தான் எங்க அபூர்வா மனசார காதலிச்சி இருக்கிறான்னு இப்போ புரியுது” என்றார் ஜீவா புன்னகையுடன்.

அதன்பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைகளுக்கு சென்றனர். அபூர்வா வழக்கம்போல தங்களின் அறைக்குள் நுழைய ஆதி கட்டிலில் படுத்து விழி மூடியிருந்தான்.

‘ஓ சாருக்கு இப்போவே தூக்கம் வருதோ’ என்று அவள் சென்று, “ஆதி தூங்குவது மாதிரி பாசாங்கு செய்யாமல் எழுந்து உட்காருங்க. நான் உங்களோட பேசணும்” என்றாள்.

அவளின் குரல் கோபத்துடன் ஒலிக்க, “என்ன பேசணும்” என்று எழுந்து அமர்ந்தான்.

“எல்லோரையும் சாருமதி, சிந்துஜாவின் திருமணத்திற்கு வரச்சொல்லி இருந்தீங்களா” அவள் நேரடி தாக்குதலில் இறங்கிட, “ஆமா” என்றான் அசராமல்.

“நான் கல்யாணத்திற்கு வரலாமா?” என்று தலையைச்சரித்து கேட்டவளின் அழகில் அவன் மனம் மயங்கியது.

“என் மனைவி நீ இல்லாமல் அவங்களுக்கு திருமணம் நடக்குமா? நீதான் செல்லம் முதல் ஆளாக கிளம்பனும்” என்று அவளின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சிட அவனின்கரங்களை பட்டென்று தட்டிவிட்டாள்.

“என்னிடம் எப்படிங்க உண்மையை மறைக்க மனசு வருது” கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டாள்.

மேனகா அவளுக்கு கொடுத்த அத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு தன்னிடம் ‘துரோகி’ என்ற பட்டத்தையும் வாங்கிகொண்டு ஐந்து வருடம் பிரிந்து கஷ்டங்களை அனுபவித்து மீண்டும் அவனை தேடியே கொல்கத்தா வரை வந்தாள்.

யாரின் மீதும் அவள் வைக்காத நம்பிக்கையை அவனின் மீது மட்டும் வைத்தாள். ‘காதல்’ என்ற வார்த்தை தாண்டி தன் சூழ்நிலையை இன்றளவும் சொல்லாமல் வைராக்கியமாக இருப்பவளின் மனதை திறக்க அவன் இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படித்திக் கொண்டான்.

அவளை தீர்க்கமாக பார்த்த ஆதி, “அவங்க திருமணம் பற்றி சொல்லன்னு உனக்கு கோபம் வருதே.. மேடம் எத்தனை விஷயத்தை என்னிடம் இருந்து மறச்சு வச்சிருக்கீங்கன்னு ஞாபகம் இருக்கா?” என்றதும் அவளின் மனம் திக்கென்றது.

அவன் மேனகா விஷயத்தை குறிப்பிடுவதை உணர்ந்தவள், “நான் எந்த உண்மையும் மறைக்கல ஆதி” என்று அவள் மீண்டும் பொய் சொல்ல, “ஓ அப்படியா” என்றவன் அவளை அருகே இழுத்து இதழில் இதழ் பதித்தான்.

முதலில் கோபமாக இருந்தவள் அவனிடமிருந்து விடுபட போராடிட சட்டென்று அவளை விட்டுவிட்டு வேறு எதுவும்  பேசாமல் கட்டிலின் மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டான். அவனின் செயலில் இருந்தே அவன் கோபமாக இருப்பதை உணர்ந்த அபூர்வா எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டாள்.

அவள் செல்வதை கவனித்த ஆதியோ, ‘மேனகா செய்த அத்தனை டார்ச்சரையும் சொல்லாமல் இருக்கும் அளவுக்கு நான் அந்நியனாக போயிட்டேன் இல்ல. உன் வாயை திறக்க வைக்கவே ஏதாவது செய்யனும்னு தான் மேனகாவுக்கு செக் வச்சேன்’ என்றவன் சிந்தனையோடு அமைதியாக இருந்தான்.

அவளிடம் வற்புறுத்தி உண்மையை வாங்கிட அவன் மனம் இடம் தரவில்லை. அதை அவளே சொல்வாள் என்று அவன் நினைப்பிலும் ஒரு லாரி மண்ணைக் கொட்டினாள் அவனின் காதலி.

மேனகா சதிசெய்து மீண்டும் தங்களை பிரித்துவிடுவாளோ என்ற பயத்தில் அவள் நடமாடுவதை உணர்ந்து இருந்தான் ஆதி. அபூர்வாவின் இந்த பயத்தை போக்கிட நினைத்தவன் அவளிடம் நடந்த விஷயத்தை சொல்லவில்லை. அவளுக்கு தானாக தெரியட்டும் என்று அமைதியாகிவிட்டான்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய சாருமதி, சிந்துவின் திருமணநாளும் வந்தது. வீட்டில் இருந்த அனைவரும் முன்னாடியே கிளம்பி மண்டபத்திற்கு செல்ல ஆதியும், அபூர்வாவும் வீட்டில் தேங்கி நின்றனர்.

அவள் கல்யாணத்திற்கு தயாராகி கீழே வர ஆதி கார் சாவியை எடுத்துகொண்டு முன்னே சென்றான். அவன் காட்டிய ஒதுக்கமும், பாராமுகமும் அவளின் நிம்மதியைக் கெடுத்தது. அவள் காரில் ஏறியதும்  வேகமாக காரை எடுத்தவன் பொறுமையாக வண்டியை ஓட்டினான்.

அபூர்வா வெளியே வேடிக்கைப் பார்க்க ஆதியோ அவளை ரசித்தான். ஆரஞ்சு நிற பட்டுபுடவையில் தேவதையாக அமர்ந்திருந்திருந்த அழகு அவனை தடுமாற வைத்தது. அவன் பார்வையை அவளின் மீதே நிலைக்கவிட அவளின் கண்கள் லேசாக கலங்கி இருப்பதை பார்த்தான்.

அவளின் மனதை நொடியில் படித்துவிட்டு, “இந்த ஆதி உன்னைவிட்டு ஒரு நொடிகூட பிரிஞ்சிருக்க மாட்டேன். எனக்கு என்னைக்கும் நீதான் எல்லாம். உன்னைத் தவிர வேற பொண்ணுக்கு என் மனதில் இடம் இல்ல” என்றவன் மண்டபத்தின் முன்னே காரை நிறுத்தினான்.

அவனை திகைப்புடன் பார்த்த மனையாளின் முகம் கொஞ்சம் தெளிந்து இருப்பதை உணர்ந்தவன் அவளை அருகே இழுத்து நெற்றியில் இதழ்பதித்து, “இன்னைக்கு ரொம்ப அழகாக இருக்கிற செல்லம்”  அவளின் காதில் ஏதோ சொல்ல வெக்கத்தில் அவளின் முகம் அந்திவானமாக சிவந்தது.

இருவருக்குள் இருக்கும் ஊடல் மறைய, “எங்கே வந்து எதை பேசறீங்க” என்று சிணுங்கிவிட்டு காரைவிட்டு இறங்கி சென்றவளை பார்த்து குறும்புடன் சிரித்தபடி காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மண்டபத்தின் உள்ளே நுழைந்தான்.

பெரிய பெரிய ஆட்கள் எல்லோரும் திருமணத்திற்கு வந்திருக்க அவர்களை எல்லாம் வரவேற்று உபசரித்தனர் வீட்டில் இருந்தவர்கள்.

சந்தனம் கொடுத்து பன்னீர் தெளிக்க நின்றிருந்த ரக்சிதா, சஞ்சனாவை அங்கே நிற்கக்கூடாது என்று சொல்லி சண்டைப்போட்டு கொண்டிருந்தனர் சக்தியும், ராகவும்.

அந்தநேரம் ஆதி அங்கே செல்ல, “மாமா இவங்க இருவரையும் மணப்பெண் அறைக்கு போக சொல்லுங்க” என்றான் சக்தி கோபத்துடன்.

“ஏன் சக்தி? சந்தனம் கொடுத்து பன்னீர் தெளிக்க இவங்க இருக்கணும்” என்று சொல்ல, “எதுக்கு மாமா வரவன் போறவன் எல்லாம் இவங்களை சைட் அடிக்கவா?” என்றான் ராகவ் எரிச்சலோடு.

அவர்கள் எதற்காக கோபமாக இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்த ஆதி, “நீங்க இருவரும் அவங்க சொல்றதை கேளுங்க. முதலில் மண்டபத்திற்குள் போங்க” என்று வேற ஆட்களை கூப்பிட்டு அங்கே நிறுத்திவிட்டு தன் வேலையைக் கவனிக்க சென்றான்.

அபூர்வா மணமேடையில் இருந்து அங்கே கேட்பதை எடுத்துக்கொடுக்க மணமகள் அறைக்கு சென்றால் ரேவதி சிந்துவை அலங்காரம் செய்து கொண்டிருக்க, “என்ன ரேவதி உன் அண்ணியை மட்டும் அலங்காரம் செய்யற? சாருவுக்கு ஏன் பண்ணல” என்றான்.

சாருமதி அலங்காரம் செய்யாமல் படுக்கையில் அமர்ந்திருக்க, “அதை நீ அவங்ககிட்ட கேளு ஆதி” என்றாள் ரேவதி சிரிப்புடன்.

“ஏய் என்ன கிளம்பாமல் உட்கார்ந்து இருக்கிற” என்று கேட்க, “உன் பொண்டாட்டி எங்கே? அவளுக்கு என்மேல் என்ன கோபமாம்?” என்று அவள் கேட்ட கேள்வியில் திருதிருவென்று விழித்தான் ஆதி.

பெண்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க, “இப்போ அபூர்வா வந்து என்னை அலங்காரம் பண்ணிவிடணும். இல்லன்ன நான் இந்த அறையைவிட்டு வர மாட்டேன்” என்று அடம்பிடித்த சாருவின் மனம் புரிய, “ரேவதி நீ போய் அபூர்வாவை வர சொல்லு” என்றான்.

அவள் சென்று அழைத்து வர, “ஏண்டி இதுக்காக இப்படி அடம்பிடிச்சிட்டு இருக்கிற? சீக்கிரம் எழுந்து வா நான் உன்னை ரெடி பண்றேன்” படபட பட்டாசாக பேசிய அபூர்வாவின் பேச்சில் சாருமதி அழுகையோடு அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.