anthamaalaipozhuthil-39

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 39

                ரகுநந்தன் மின்விளக்கை அணைக்க, மேலே சுவரில் கருவில் குழந்தை  ஒளிவடிவமாக!

    அவர்கள் அறையில் விடிவிளக்கு, வட்டவடிவில் இருளில் தானாக ஒளிருவது அமைந்திருக்கும். 

         ‘நான் ரூமுக்குள் வரும் பொழுது, லைட் எரியலையே? அப்ப, நான் பார்க்காமல் லைட் போட்டுட்டேன் போல?’ அவன் அறிவு வேகமாகச் சிந்தித்துக் கொண்டது. 

       அவன் கண்களோ, மடக்கி வைத்திருந்த குழந்தையின் கைகளிலும், கால்களிலும் இருந்தது. அவன் மனதில் ஆவல் பெறுக ஒரு முக்காலியில் ஏறி, ஒளி வடிவ குழந்தையைத் தடவிப் பார்த்தான் ரகுநந்தன்.

      அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அபி அன்னைக்கு எவ்வளவு ஆசையா இருந்திருப்பா என்கிட்ட சொல்ல? நான் கூறுகெட்டவன் போல மொத்தத்தையும் கெடுத்துடனே.அவன் தன் கண்களை இறுக மூடி தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தினாலும், இரு சொட்டு கண்ணீர் வெளியே விழத்தான் செய்தது.

      ‘இதை எப்படி செஞ்சா?’ கேள்வி எழ, விளக்கின் அருகே சென்று பார்த்தான். அந்த வட்ட வடிவ விளக்கின் மீது குழந்தை படத்தை வரைந்த காகிதத்தை வைத்து, அங்கு மட்டும் ஒளி பரவுவது போல் செய்திருந்தாள் அபிநயா.

     ரகுநந்தன்  கண்களில் கண்ணீர் திரையிட்டது.தன் மனைவியை மெச்சிக்கொண்டான். கண்ணீரோடு கலந்து அவன் முகத்தில் புன்னகை.

ஆனந்த கண்ணீர் அல்லவா!

        இனி எங்கே ஓய்வெடுக்க, விரைந்து ஓடினான் தன் மனைவியை நோக்கி.

   அதற்குள் அங்கு பசுபதியும், இந்திராவும் வந்திருந்தனர்.

 பேசும் ஆவலோடு, தன் மனைவியை நெருங்கினான் ரகுநந்தன்.

   அபிநயாவும் அவனை நெருங்கினாள். “அம்மா, கண் முழிச்சிட்டாங்க. இனி பயம் இல்லைன்னு டாக்டர்ஸ் சொல்லிடாக.” அவள் நிம்மதி பெருமூச்சு விட, அவன் தலை அசைத்துக் கொண்டான்.                  

 அனைவரும், மேலும் ஏதேதோ பேச, அவனுக்கு மேலே பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

   பார்வதி அவசர பிரிவிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

  “அத்தைக்கு சரியாகிரும் அபி. வீட்டுக்கு வா…” ரகுநந்தன் அழைக்க, அபிநயா மறுப்பாகத் தலை அசைத்தாள்.

    அவள் மனதை ஒரு விஷயம், குடைந்தது. அவுக அடிச்சாக. சமாதானம் செய்ய வந்தாக தான். ஆனால்?’ அவள் எண்ண ஓட்டம் அங்கு தேங்கி நின்றது.

     ‘குழந்தை விஷயம் தெரிஞ்சும் ஒன்னும் கேட்கலியே. கேட்க சூழ்நிலை அமையலியோ?’ என்று தன் கணவனுக்கு அவளே வக்காலத்து வாங்கினாலும், ‘ஆனால் ?’ மீண்டும் அவள் எண்ண ஓட்டம் அங்கு தடை பெற்று நின்றது.

 “நான் அம்மா கூட இருக்கேன்.” அவள் மறுத்துவிட, ரகுநந்தன் அவளைக் கடுப்பாகப் பார்த்தான்.

     ‘வாத்தியரம்மா, நான் அடிச்சிட்டேன்னு வேணுமினே பண்ணுதாளோ? டிச்சதுக்கு  சமாதானம் செய்ய நான் இறங்கினாலும், அவள் இடம் கொடுக்கவே இல்லையே? குழந்தை விஷயம், அவ மட்டும் என்கிட்ட அப்புறம் சொல்லவே இல்லையே? அன்னைக்கு சூழ்நிலை சரி இல்லை. அதுக்காக, சொல்லாமலே இருப்பாளா?’ ரகுநந்தனின் கோபம் தலைக்கேறியது.

    மேலும் எதுவும் பேசவில்லை.

எல்லாம்  சரியாகட்டும். எல்லாம் சரியான, நம்ம வீட்டுக்கு வந்து தானே ஆகணும்?’ என்ற எண்ணத்தோடு மௌனமாக சென்றுவிட்டான் ரகுநந்தன்.

           நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. பசுபதி, இந்திராவின் நெருக்கம் சற்று அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால், இடைவெளி முழுதாக குறையும் அளவிற்கு இல்லை.

 ரகுநந்தன், அபிநயா ஊடல் மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும், பசுபதியின் கண்களுக்கு தப்பவில்லை.

 பார்வதி முழுதாக தேறி, வீடு திரும்பும் நாளும் வந்தது.

 “அத்தையை வீட்டில் விட்டுட்டு நாம வீட்டுக்கு கிளம்புறோம்.” ரகுநந்தனின் குரலில் அழுத்தம் இருந்தது.

   “நான், கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருக்க போறேன். அம்மாவுக்கு உதவியா. நான் அத்தை கிட்ட பேசிட்டேன்.” அபிநயா கூற, ‘அப்ப நான் யார்?’ ரகுநந்தனின் கண்களில் சீற்றம்.

 அவன் எதுவும் பேசவில்லை.

 பசுபதி, இந்திரா, ரகுநந்தன், அபிநயா, ராமசாமி வீட்டிற்கு பார்வதியை அழைத்து சென்றனர்.

அபிநயாவை அங்கே விட்டுவிட்டு செல்ல, ரகுநந்தனுக்கு சிறிதும் பிடித்தமில்லை. அதை அவன் முகம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

பசுபதி அதைக் கண்டுகொண்டான்.

ரகுநந்தன் சிறிது நேரம் பேசிவிட்டு  கிளம்ப, “அம்முக்குட்டி, நீ மாப்பிள்ளையோடு கிளம்பலை?” கேள்வியோடு பசுபதி ரகுநந்தனை நிறுத்தினான்.

      “இல்லை அத்தான்… நான் அம்மாவை பார்க்கணும்.” என்று அம்முக்குட்டி கூற, “அதெல்லாம் வேண்டாம் அபிநயா. நீ மாப்பிளையோடு கிளம்பு. இங்க நிறைய பேர் இருக்காக.” பார்வதி ரகுநந்தனின்  முகம் பார்த்து கூறிவிட்டார்.

  “நான் தினமும் அபிநயாவை இங்க கூட்டிட்டு வரேன்.” ரகுநந்தன் சூழ்நிலையை தனக்கு சாதமாக மாற்றிக் கொண்டான்.

 அபிநயா, யோசனையாக அனைவரையும் பார்க்க, “பசுபதி, இப்ப தான் அவன் பொஞ்சாதி கூட வரான். அவன் பார்த்துப்பான். நீ கிளம்பு.” பார்வதி கூற, ராமசுவாமி அனைவரையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.

      “நாங்களும், நல்லா பார்த்துப்போம். நீயும், இங்க தானே இருக்க. அவசரமினாலும் வந்திறலாம். உங்க அம்முக்குட்டிக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை போல?” இந்திரா பேச்சை அபிநயாவிடம் ஆரம்பித்துபசுபதியைப் பார்த்து கேள்வியோடு முடிக்கபசுபதி, ரகுநந்தன் இருவரும் புன்னகைக்க வேறுவழியின்றி அபிநயா கிளம்பினாள்.

   ரகுநந்தன், அபிநயாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டானே ஒழிய அவனுள் மெல்லிய வருத்தம். அவளுள்ளும் மெல்லிய வருத்தம்.

        மருத்துவமனையில் அவளால், அவள் கோபத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க முடிந்தது. வீட்டிற்கு வந்ததும், ரகுநந்தனின் செய்கை  அபிநயாவிற்கு வலித்தது.

    ‘அம்மா வீட்டுக்கு போறாளாம். அம்மா வீட்டுக்கு…அவனும் முறுக்கி கொண்டான்.

   இரவு அவர்கள் அறையின் விளக்கை அவள் அணைக்க, அங்கு மேலே விடிவிளக்கின் ஒளியில் லவ் யூஎன்று மின்னியது.

 அதை பார்த்து கடுப்பான அபிநயா, ‘யார் லவ்வும் யாருக்கும் வேணாம்.விடிவிளக்கை அணைத்து விட்டு கோபமாக வந்தமர்ந்தாள் குழந்தையின் பிடிவாதத்தோடு.

 ரகுநந்தன் தன் மனைவியின் செய்கையை ரசனையோடு பார்த்தான். அந்த ஊடலும், அவனுக்கு பிடித்திருந்தது.

   ‘அவ சொல்லணும்… நான் கேட்கணும்.அவனுள் பிடிவாதம் அமர்ந்து கொண்டது.

   சில நாள் பிரிவுக்குப் பின், மனைவியின் அருகாமையை அவன் ரசித்தான். அவள் கோபத்தையும்.

    அவனுக்கு பேச தோன்றவில்லை. அபிநயா சினத்தோடு உறங்கிவிட்டாள்.  நித்திரையில் ஆழ்ந்திருக்கும் மனைவியை ரசித்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.

   அன்றிரவு இந்திராவும், பசுபதியும் பார்வதியைப் பார்த்துவிட்டு அவர்கள் ஜீப்பில் கிளம்பினர்.

     மழை, “சோ…” என்று பெய்தது.

      பசுபதி அவன் ஜீப்பின் மேல் பகுதியை மூட எத்தனிக்க, “எனக்கு இப்படி மழையில் போறது பிடிச்சிருக்கு.” இந்திரா கூற, தோள்களைக் குலுக்கி கொண்டு மழையில் நனைந்தபடி வண்டியை செலுத்தினான் பசுபதி.

          “உனக்கு பிரச்சனை இல்லையா?” திறந்திருந்த ஜீப்பில் மழையில் நனைந்தபடி இந்திரா கேட்க, “உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு சந்தோசம் தான்.” அவன் புன்னகைத்தான்.

 “நீ ஏன் எங்க அண்ணன் பத்தி என்கிட்ட சொல்லலை? சொல்லிட்டா, சமாதானமாகி நான் உன் கூடவே இருந்திருவேனோன்னு பயந்திட்டியா?” அவள் கேலி போலவே கேட்டாள்.

     சரேலென்று பிரேக் பிடித்து நடுசாலையில் வண்டியை நிறுத்தினான்.

    ‘இது என்ன பேச்சு? இவ என்னை பத்தி என்ன நினைக்குறா?’ என்று கடிந்து கொள்ளவே அவன் திரும்ப, அவள் முகம் அவனை ஏதோ செய்தது.

     ‘இந்திராவின் கண்கள் கலங்கி இருக்கிறதோ?’  என்ற ஐயம் பசுபதிக்குள் எழ அவன் எதுவும் பேசாமல், வண்டியைச் செலுத்தினான்.

     மழைநீரோடுஇந்திராவின் மனமும் கரைந்து கொண்டிருந்தது.

     “உங்க அம்முக்குட்டி ரொம்ப கொடுத்து வச்சவ.” இந்திரா கூற, பசுபதி எதுவும் பேசவில்லை.

     “அம்மா, அப்பா நல்ல குடும்பமுன்னு இருந்தா, அபிநயா மாதிரி எல்லார் கிட்டயும் நிமிர்வா இருக்க முடியும்.” இந்திரா, சற்று முன் இறங்கி பேசியதற்கு சரி செய்வது போல் பேச ஆரம்பித்தாள்.

    பசுபதிக்கும் பேச வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தைத் தகர்க்க வேண்டும்.’ என்று முடிவு கட்டினான்.

    “நீ என் அண்ணனை மிரட்டலை. அப்படியே மிரட்டி இருந்தா  மட்டும், என்னால் தூக்கி போட்டுட்டு போகவா  முடியும்?” இந்திரா மிடுக்காகவே கேட்டாள்.

   இந்த கேள்வி பசுபதியின் மனதில் இடியாக இறங்கியது.

பிடித்தம் இல்லாமல் அரங்கேறிய திருமணம் தான். ஆனால், பசுபதியின் மனம், இந்திராவிடம் சரிந்து விழுந்து பல நாள் ஆகிவிட்டதே.

   வண்டியைத் தோட்டத்து வீட்டிற்கு செலுத்தினான்.

“இங்க எதுக்கு?” இந்திரா கேட்க, “நேரம் ஆகிருச்சு. ஆத்தாவை தூங்க சொல்லிட்டேன். நாம, நாளைக்கு நம்ம வீட்டுக்கு போவோம்.” பசுபதி கூற, அவளும் இறங்கி கொண்டாள்.

  இருவரும் மழை நீரில் மொத்தமாக நனைந்திருந்தனர்.

    இந்திரா உள்ளே செல்ல, “பேசணும்…” பசுபதி அழுத்தமாகக் கூறினான்.

   யாருமில்லாத தோட்டத்து வீட்டு வாசலில் நின்றபடி அவன் கூற, “இப்பவா? இப்படியேவா?” என்று இந்திரா கேட்க, ‘ஆம்…என்பது போல தலை அசைத்தான் பசுபதி.

   “உனக்குன்னு யாரும் இல்லைன்னு யோசிக்க வேண்டாம். உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா, இங்க இருந்து போக நான் எல்லா ஏற்பாடும் பண்ணி தரேன். நீ போய்டு.” அவன் உறுதியாக கூறினான்.

      மழையோடு பெரிய இடி ஒன்று, “டமார்…” என்ற சத்தத்தோடு இறங்கியது.

      அந்த சத்தம் இருவரையும் பாதிக்கவில்லை. அதைவிட பெரிய இடியை இறக்கிய அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் இந்திரா.

     “உன் பாதுகாப்பு என் பொறுப்பு. நான் என்ன செய்யணுமுன்னு சொல்லு. செய்யறேன்.” அவன் தடுமாற்றத்தோடு பேசினான்.

       அருகே இருந்த மரத்தில் அவனைத் தள்ளி,    “நான் ஏதோ பேச்சுக்கு சொன்னா. இது தான் சாக்குன்னு போன்னு சொல்லுவியா?”  என்று காட்டமாக கேட்டாள் இந்திரா.

பசுபதியின் கண்களில் ஒரு மின்னலின் கீற்று. அதை கண்டுகொண்ட இந்திராவின் மனதிலும் கோடி மின்னல்.

        மழை கொட்டிக் கொண்டிருக்க, பசுபதி ஏதோ பேச எத்தனிக்க, அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்தாள்.  மேலே பேச முடியாமல் அவன் தடுமாறினான்.

      மழை நீர் இருவர் முகத்திலும் வழிந்து கொண்டிருந்தது.

    அந்த மழை நீர் முத்துக்கள் அவள் செவ்விதழ் தொட்டு, அவன் தேகம் தொட்டு சென்றது.

   தன் தடுமாற்றத்தை மறைத்து, அவளை விலக்கி, அவன் பேச முயற்சிக்க,  அவன் பேச்சை தன் இதழ்களால் நிறுத்தினாள் இந்திரா.

     சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டு பசுபதி விலக, “அன்னைக்கு இப்படி பண்ணியே? அப்ப எங்க போச்சு இந்த புத்தி?” தன்னை சுதாரித்து கொண்டு கேட்டாள் இந்திரா.

   “அது… அப்ப…” என்று பசுபதி தடுமாற, “கேட்ட கேள்விக்கு பதில்.” பசுபதியை மிரட்டினாள் இந்திரா.

   “அப்ப நீ யாரோ. எனக்கு அப்ப, என் குடும்பம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிஞ்சிது. இப்ப…” அவன் தடுமாறினான்.

இப்ப?” தெனாவட்டாக கேட்டாள் அவள்.

   “இப்ப, நீ என் மனைவி. உன் சந்தோஷமும்…” அவன் தடுமாற, “ஓ! உன் கிராமத்துல, மனைவியை வெளிய அனுப்பிட்டு தான் சந்தோஷமா பாதுகாப்பா பார்த்துப்பீங்களா?” இந்திரா இடக்காக கேட்டாள்.

    “இல்லை… உனக்கு பிடிக்கலைன்னா.” அவன் தடுமாற, “அப்ப, உனக்கு பிடிச்சிருக்கு.” அவள் கண்ணடித்தாள்.

   “ஆம்… ” மேலும் கீழும் தலை அசைத்து, “ம்…ஹூம்…” என்று இரு பக்கமும் மறுப்பாகத் தலை அசைத்தான் பசுபதி.

     மரத்தோடு சாய்ந்து நின்ற அவள் அருகாமையில், அவன் கிறங்கி போனான்.

   அவன் கண்கள் அவள் மேல் மையல் கொண்டது.

                “ஏன் என் அண்ணன் பத்தி சொல்லலை?” அவள் பிடிவாதமாக, அவன் சட்டையைப் பிடித்து கொண்டு கேட்க, “ரொம்ப நேரம், மழை நீரில் இருக்க. குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வா.” என்று அவன் மழுப்ப, குளித்துவிட்டு சேலை கட்டிக்கொண்டு வந்தாள் இந்திரா.

   இந்த சில மாதங்களில், சேலை கட்ட இந்திரா பழகி இருப்பது தெரிந்தது.

    பசுபதியும் குளித்து உடைமாற்றி அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

      “படுப்போமா?” அவன் விலக எத்தனிக்க, அவன் வழி மறித்தாள் இந்திரா.

   “என்ன பெரிய புத்திசாலின்னு நினைப்பா? இப்படி பதில் சொல்லாம மழுப்பற?” என்று அவள் அவன் முன் கோபமாக நின்றாள்.

   “சொல்லக்கூடாதுன்னு இல்லை. சொன்னா, நீ வருத்தப்படுவேன்னு தான்.” பசுபதி மெதுவாக கூறினான்.

 செய்யும் நல்லதையும், சொல்லாத அவன் குணத்தில் அவள் உணர்ச்சி வசப்பட்டாள். 

“நான் வந்தனையிலிருந்து, என் வருத்தம் உனக்கு முக்கியமா?” உரிமையோடு அவன் தோள் சாய்ந்து கேட்டாள் இந்திரா.

    “என் மனைவிக்கு அவ, அண்ணனை விட்டா யாருமே இல்லையே?” அவள் தலை கோதி, அவன் கூற, “அது அப்ப.” அவள் சன்ன குரலில் கூற, “இப்ப?” அவள் காதில் அவன் கிசுகிசுப்பாக வினவினான்.

     “அது தான் நீ இருக்கியே?” அவள் இன்னும் வாகாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

       அவன் இடது கைகள் அவளை இடையோடு சேர்த்து கொண்டது. அவனது வலது கையில் ஆள் காட்டி விரல் அவள் முகத்தை உயர்த்தி, “யாரு?” என்று அவன் அவள் பதிலை மீண்டும் கேட்கும் ஆசையோடு கேட்டான்.

  ‘அப்படி எல்லாம் சொல்லிவிடுவாளா இந்திரா?’ என்ற இறுமாப்போடு, “சேலை எல்லாம் வாங்கி வச்சிருக்கஅக்கறையில் வாங்கி தரலை. என்னால், உனக்கு தினமும் உனக்கு சேலை கட்ட உதவ முடியாதுன்னு சொன்ன?” அவன் நெருக்கத்தை தீண்டலை ரசித்தப்படி அவன் திருமணம் முடிந்த புதிதில் கூறியதை நினைவு வைத்து இந்திரா கேட்டாள்.

    “தினமும், நானே உதவி செய்யலாமுன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.” அவன் பல அர்த்ததில் கூறி பெருங்குரலில் சிரிக்க, அவன் உதடுகளை தன் கைகளால் மூடினாள் இந்திரா.

    “எதுக்கு இப்ப சிரிக்குற?” அவள் கிசுகிசுக்க, அவன் பதில் கூற மனமில்லாமல், அவளை ரசித்தான்.

அவள் கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் அவன் கட்டிய தாலியின் அருகே இருந்த கருமை நிற மச்சத்தை தீண்ட, அவள் முகம் செவ்வானமாக சிவந்தது.

    “கொஞ்ச நேரம் முன்னாடி என்னவோ பண்ணியே?” அவன் அவளை வம்பிழுக்க, அவன் கரங்கள் அதன் ஆளுமையைக் காட்டியபடி கேட்க, இப்பொழுது பேசவும் முடியாமல் அவள் தடுமாறினாள்.

   “கேட்குற கேள்விக்கு பதில்.” அவன் குரலில் இப்பொழுது அழுத்தம்.

     அவள், தன் நாணத்தை உரியவனிடமே மறைக்க அவள் போராட, “என்னை பாருன்னு சொன்னேன். ஏதோ, உன் மனசு தெரியாம, கொஞ்சம் தடுமாறினா, ரொம்ப பேசுற.” அவள் அவன் காதோரமாகக் கிசுகிசுத்தான்.

      அவளை எதிரே நிறுத்தி, “அழாக இருக்க டீ…” என்று அவன் கூற, “அழகா தான் இருக்கன்னு சலிச்சிப்ப…” மீண்டும் அவன் பேசிய பழைய நினைவுகளை அவள் பகிர, அவன் சிரித்தான்.

    அவன் இதழ்கள் பேசவில்லை. பேச்சுக்கு வேலை இல்லை என்று முடிவு எடுத்து கொண்டது போலும்!

‘செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே

வான்நிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே….’

மறுநாள் மாலையில்

     வேலையை முடித்து கொண்டு சந்தோஷமாக உள்ளே நுழைந்தான் ரகுநந்தன்.

     அவன் கண்கள் அபிநயாவைத் தேடியது. வழியில் வந்த கவினை கொஞ்சி கொண்டான்.

    ரேவதி அமர்ந்திருந்தாள். இருவரும் பெரிதாக பேசி கொள்வதில்லை. பேசி கொள்ளாமல் இருப்பதும் இல்லை.  சுரேஷ் ரேவதியை மொத்தமாக இறுக்கி இருந்தான்.

   மருத்துவமனையில், பசுபதியையும், இந்திராவையும் பார்த்த சுரேஷ் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். 

    தன் தங்கையின் வாழ்வும் சிறப்பாக இருக்கிறது. அபிநயாவால் எந்த பிரச்சனையும் இல்லை. கவினை சிறப்பாக பார்த்து கொள்கிறாள். அவர்களை விட!

    ‘தன்னால் தான் கவினுக்கு இந்த நிலையோ?’ என்ற குற்ற உணர்வு வேறு.

                அவன் வாழ்வும் பிரச்சனை இல்லாமல் செல்கிறது. ரேவதியால் தான், அபிநயாவோடு முழுதாக ஒத்துப் போக முடியவில்லை.

   ‘நாத்தனார் என்ற பதவியா?’ இல்லை தம்பியை, தாயை அவள் பக்கம் இழுத்துவிட்டாள் என்ற கோபமா?’ இல்லை மகனையும் கவர்ந்து விட்டாள் என்ற பொறாமை உணர்வா?’ அவளுக்குத் தெரியவில்லை.

   பகைமையும் பாராட்டாமல், நட்புக்கரமும் நீட்டாமல் இந்த சில நாட்களில்  தன்னை பழக்கப் படுத்துக்கொண்டாள் ரேவதி.

              ரகுநந்தனின் கண்கள் தன் மனைவியைத் தேடியது. இந்நேரம் ரூமில் இருக்க மாட்டாளே? உடம்பு எதுவும் சரி இல்லையோ?’ அவன் மனம் பதறியது.

  ‘பிடிவாதக்காரி, எதுவும் பிரச்சனை நாளும் சொல்ல மாட்டா…என்று அவன் சிந்தித்தபடி அவன் தோட்டத்திற்கு செல்ல, “அபிநயா, உங்க ரூமில் தான் இருக்கா.” பவானியம்மாள், மகனுக்கு காபி கொடுத்தபடி கூற, அதை அருந்திவிட்டு படியேறி அவர்கள் அறைக்கு வேகமாகச் சென்றான் ரகுநந்தன்.

    ஏதோ, சிந்தித்தபடி மெத்தையில் அமர்ந்திருந்தாள் அபிநயா.

   “வாத்தியரம்மா” அவன் அழைக்க, “ம்….” கொட்டினாள் அவள்.

   “நம்ம கவினுக்கு ஆர்டர் பண்ணது வந்திருச்சு.” என்று கூறி அதை அவளிடம் காட்டி, அவன் செயல் முறை விளக்கம் கூற, “அவள் பயிற்சி கொடுத்தால், எல்லாம் சரியாகிடும்.” என்று கூறிக்கொண்டே போக, அவளிடம் பதிலே இல்லை.

  எதையோ சிந்தித்தபடி அவள் கண்கள் அவனை ஏக்கமாகத் தழுவிக் கொண்டிருந்தது.

      அந்த பார்வையில், அவன் மொத்தமும் பதறிப் போனான்.

    “அபி” அவன் அழைப்பில், அவள் கண்கள் கலங்கியது.

படக்கென்று எழுந்து, ஜன்னல் அருகே சென்று கொண்டாள்.

    “அபி, திரும்பு…” என்று அவன் கூற, அவள் திரும்பவில்லை.

    தோள் தொட்டு, அவளைத் திருப்ப முயன்று தோற்றுப் போனான் ரகுநந்தன்.

ஜன்னல் கம்பிகளைப் பிடித்து இறுக்கமாக நின்றாள் அபிநயா.

   அபிநயாவை பின்னோடு அணைத்து அவள் தோளில் முகம் புதைத்து, “சாரி அபி… நான் அன்னைக்கு அடிச்சது தப்பு தான். நான், அன்னைக்கே உன்னை சமாதானம் செய்ய வந்தேன். நீ தான் பேசலை.” கம்மலான குரலில் கூறினான் ரகுநந்தன்.

   “எனக்கு கோபம் இல்லை. வருத்தம் தான். என்னை யார் முன்னாடியும் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு சொல்லி சொல்லி நீங்களே எல்லார் முன்னாடியும் விட்டு கொடுத்துடீங்க.” அவள் குரலில் வருத்தம்.

    “உண்மை தான் அபி. நீ மன்னிப்பு கேட்கவும் பயங்கர கோபம். தப்பே செஞ்சிருந்தாலும், என் மனைவி மன்னிப்பு கேட்டா எனக்கு பிடிக்காது. ஏதோ பொசுக்குன்னு கைநீட்டிட்டேன். “

 அவன் அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, சட்டென்று அவள் விலக எத்தனிக்க, அவன் பிடிமானம் இறுகியது.

   “இன்னுமென்ன கோபம்?” அவன் கேட்க, அவள் கண்ணிலிருந்து இரு துளி கண்ணீர்.

   “அபி, அழறியா?” பதட்டத்தோடு அவளை தன் பக்கம் திருப்பினான்.

  அவளிடம் இப்பொழுது இறுக்கம் இல்லை. அவள் தேகம் இப்பொழுது குழைந்திருந்தது.

    “உங்களுக்கு தான் என் மேல கோபம்.” அவள் தன் கழுத்தை நொடிக்க, “எனக்கு உன் மேல கோபம் வருமா?” அவள் முகத்தை கைகளில் ஏந்தி கேட்டான் ரகுநந்தன்.

  “நான் அத்தான், கிட்ட குழந்தை விஷயம் சொல்லிட்டேன்னு உங்களுக்கு என் மேல கோபம். அது தான், நீங்க, நம்ம குழந்தை பத்தி கேட்கவே இல்லை.” அபிநயா முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.

   மறுப்பாக தலை அசைத்தான் ரகுநந்தன்.

கோபம் இல்லை வருத்தம். என் அபி என் கிட்ட சொல்லவே இல்லையேன்னு வருத்தம்.” அவன் கண் சிமிட்ட, “சொல்ல வந்தன்னைக்கு அப்படியே ஆசையா கேட்டுடீங்க?” அவள் உதட்டை சுழித்து கோபமாகக் கூறினாள்.

   “நான் ஒரு நாள் தப்பு பண்ணிட்டா, நீ என் கிட்ட சொல்லவே மாட்டியா அபி?” அவன் குரலில் அத்தனை வருத்தம். அவன் கண்களிலும் பளபளப்பு.

       ‘எதற்காக கோபித்து கொண்டோம்?’ என்று அறியாதவளாக, “உங்களுக்கு தான் தெரியுமே? நீங்க குழந்தையை பத்தி கேட்பீங்கன்னு நினச்சேன்.” அவள் குரல் பல உணர்வுகளோடு வெளிப்பட்டது. அவள் குரலிலும் வருத்தம். ஏக்கம்.

            அவன் கைகள் அவளை அருகே இழுத்துக்கொண்டு  உரிமையோடு தழுவியது, குழந்தையின் இருப்பை உணர்ந்து கொள்வது.

   அவளும் அவன்  மேல் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டாள்.

   “நான் ஏதாவது தப்பு பண்ணா, ன் டா இப்படி பண்ண? ன் டா என்னை அடிச்ச? ஏன் டா என் கிட்ட கேட்கலைன்னு சட்டையை பிடிக்கணும். அதை விட்டுட்டு இப்படியா ஏக்கமா பார்ப்ப? எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.” அவன் அவளை சமாதானம் செய்ய, “ஒகே டா…” பட்டென்று கூறினாள் அபிநயா.

  “ஒய்… ஒரு பேச்சுக்கு சொன்னா, உடனே டா போடுறதா?” அவன் அவளை முன்னே நிறுத்தி முறைக்க முயன்று தோற்று போககிண்கிணியாக சிரித்தாள் அவன் மனைவி. 

     தன் மனைவியின் சிரிப்பில் கலந்து கொண்டான் அந்த கணவன். 

        சிரிப்பினோடு, அவள் வைத்த கோரிக்கையில், அவன் அவளை யோசனையாகப் பார்த்தான். 

        ‘எல்லாம் சரியாக வருமா?’ என்ற கேள்வி அவனுள். வரும்…என்ற நம்பிக்கை அவள் கண்களில்.                  

பொழுதுகள் விடியும்…