AnthaMaalaiPozhuthil16

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 16

    நொடி பொழுதுகள் தன் கண்களை மூடி, தன்னை நிதானித்து கொண்டான் ரகுநந்தன். அவன் உணர்வுகள் மட்டுமில்லை, ‘என்ன இத்தனை பிடிவாதம்?’ என்ற அபிநயா மீதான அவன் கோபமும் அவன் கட்டுக்குள் வந்திருந்தது.

      அவன் தீண்டிய பொழுது, அவள் செய்த காரியத்தை ஒதுக்கி கொண்டு, “வாத்தியரம்மா… வாத்தியாரம்மா…” அவள் கன்னங்களை தட்டினான் ரகுநந்தன்.

    மயக்கத்தில், அபிநயாவின் தலை பிடிமானமின்றி சரிந்தது. அவன் இதயம் பயத்தில் வேகமாக துடித்தது.

        கனமான பூப்போன்ற துவாலையை எடுத்து அவள் முகத்தை துடைத்து, எழுப்பி பார்த்தான். “ம்ம்…” பயனில்லை.

     கதவை மூடி கொண்டு, வேகமாக கீழே இறங்கி சமையலறைக்கு சென்றான்.

           “சூடா காபி…” என்று அவன் கேட்க, “உன் பொண்டாட்டி வரலையா?” ரேவதியின் கேள்வி சூடாக வந்தது.

   “அவளுக்கு தலை வலி.” பதில் கூறிக்கொண்டே, காபிக்காக சமையலறையை பார்த்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.

     “கல்யாணம் முடிஞ்ச மறுநாளே, தலைவலின்னு படுத்துட்டாளா?” ரேவதியின் கேள்வி நக்கலாக வர,  “ஆமா, கல்யாணமான முதல் நாளே, நம்ம வீட்டுக்கு வந்தனைக்கு அவ மண்டை உடைஞ்சிருச்சு. அதனால, வந்த தலை வலி.” மறைமுகமாக கூறினான் ரகுநந்தன்.

    தம்பியிடமிருந்து வந்த சுள்ளென்ற வார்த்தையில், ரேவதி எதுவும் பேசவில்லை.

   பவானியம்மாள், எதுவும் பேசாமல்  காபியை தன் மகனிடம் நீட்டினார். காபியோடு அவன் அறையை நோக்கி செல்ல, “அதை இங்க வச்சி குடிக்க வேண்டியது தானே?” ரேவதியின் கேள்வி அவனை இடைமறித்தது.

   ‘ஐயோ…என்று அவன் உள்ளம் அபிநயாவை எண்ணி பதற, அவன் கோபம் சர்ரென்று ஏறியது.

   “ஏன், இத்தனை வருஷம் நான் காபி குடிச்சி நீ பார்த்ததே இல்லையா?” குதர்க்கமாக கேட்டான் ரகுநந்தன்.

   “நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?” ரேவதி எகிற, “அம்ம்மா, என் ரூமில் காபி குடுக்குற உரிமை எனக்கு இருக்கா? இல்லையா?” அதீத கோபமாக கேட்டான் அவன். காபி ஆறி விடுமோ?’ என்ற கவலை அவனுக்கு.

             “நீ போ பா.” பவானியம்மாள் கூற, ரகுநாதன் விறுவிறுவென்று படி ஏறினான். ரேவதியின் பார்வை அவனை சந்தேகமாக தொடர்ந்தது.

   அறைக்குள் நுழைந்து, அபிநயாவை, துண்டால் போர்த்தினான். அவளை அவன் மீது சாய்த்து கொண்டான்.

            அவள் மீண்டும் மீண்டும் மயங்கி சரிய, அவளை தன் மேல் முழுதுமாக சாய்த்து கொண்டு, ஒரு கையால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து காபியை புகட்டினான்.

         சூடான காபி உள்ளே இறங்க, இறங்க அவள் இமைகள் மெல்ல படபடத்தது. அவன் கதகதப்பில், சுகமாக சாய்ந்து கொண்டாள்.

    ‘இப்படி மயங்கி, என்னையும் மயக்கி, நானும் அவளிடம் மயங்கி.என்று அவன் எண்ணங்கள் காதல் மயக்கத்திற்குள் புகுந்து கொண்டது.

   அந்த நொடி, வாழ்வில் காதலின் முழு அர்த்தம் அவனுக்கு விளங்க ஆரம்பித்து.

        ‘சரித்திர கதையில் காதல் இல்லையென்றால் அது ஆராய்ச்சி கட்டுரை. சமூக நாவலில் காதல் இல்லை என்றால், அது செய்தி.அவன் அறிவு பித்தன் போல், காதலை நியாயப்படுத்தி ஏதேதோ சிந்தித்து கொண்டிருந்தது.

      அவன் கைவளைவில், ஈர உடையில், அந்த மென்மையான பிங்க் நிற சேலையில், தன் மெல்லிடையோடு, மென்மையான மேனியோடு சுயநினைவில்லாமல் அவன் மேலே துவண்டு கிடந்த மனையாளோ, சிற்பங்களின் அழகையும் பொய் என்று அவனுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தாள்.

            ‘எந்த கதைகளும், கவிதைகளும் இவள் அழகை சரியாக எடுத்து சொல்லவில்லையே?’ தன் மனைவியை பார்த்தபடி அவன் எண்ணங்கள் தறிக்கெட்டு ஓட, அவன் கைகள் அவளுக்கு காபியை புகட்டி கொண்டிருந்தது.

   சூடான காபி, சுறுசுறுப்பாக வேலை செய்ய, அபிநயா தன் கண்களை முழுதுமாக திறக்க அவள் இருக்கும் கோலம் புரிந்து படக்கென்று விலகி அமர்ந்தாள்.

         அவன் முகத்தில் ரசனையோடு குறும்பு புன்னகை. புல்லாங்குழல் வைத்திருக்கும்  கண்ணனின் மயக்கும் புன்னகை. அபிநயா மூச்சு வாங்கி கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.

          அவர்கள் நெருக்கம் இன்னும் குறையவில்லை.

   “திரும்ப குளிக்க போயிடாத. நான் உன்னை தொடவே இல்லை. உனக்கும் எனக்கும் இடையில் இந்த துண்டு இருந்தது. துண்டு தான் உன்னை தொட்டது.” முகத்தை அப்பாவி போல் வைத்து கொண்டு, அவன் அவளுக்கு போர்த்தி விட்ட துண்டை காட்டினான்.

      இவுக என்ன நினைச்சுகிட்டு இருக்காக?’ என்று எண்ணியபடி தன் நாக்கை சுழற்றினாள்.  நாக்கு கசந்தது.

    “காப்பியா?”என்று முகத்தை சுழித்தாள். அவள் முக சுழிப்பை பார்த்தப்படி அவன் தன் தலையை  மேலும் கீழும் அசைத்தான்.

       “எனக்கு காபி பிடிக்காது.” அவள் முகத்தை திருப்ப, ‘இது தான் இப்ப முக்கியமா?’ என்பது போல் அவளை பார்த்தான் அவன்.

   “வாத்தியாரம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னீங்கன்னா, அடுத்த தடவை மயங்கி விழும் பொழுது சரியா கொடுத்திடுறேன்.” என்று அவன் கண்களில் கேலி புன்னகையோடு அக்கறையாக கூற, தன் பற்களை நறநறத்தாள் அவள்.

     “ஈர ட்ரெஸ்ஸோட ரொம்ப நேரம் இருக்க. டிரஸ் மாத்திட்டு வா.” அவன் கரிசனத்தோடு கூற, “அது தான் இந்திரா போய்ட்டாகள்ளா? அப்புறம் ஏன் என் மேல் அக்கறை மாதிரி நடிக்கறீக?” சுள்ளென்று விழுந்தது அவள் கேள்வி.

அவள் கோபத்தின் காரணம் அவனுக்கு ஓரளவுக்கு புரிந்துவிட்டது.

     “ஹா… ஹா….” பெருங்குரலில் சிரித்தான் அவன். “என்ன சிரிப்பு?” என்று ஈர சேலையோடு உடல் குளிரில் நடுங்கினாலும்  அசையாமல் அமர்ந்தபடியே அவள் கேட்டாள்.

    “என் மனைவி இவ்வளவு புத்திசாலித்தனமா இருந்திருக்க வேண்டாமுன்னு நினச்சேன். சிரிச்சேன்.” அவன் கூற, ‘இவுக என்ன கொஞ்சம் கூட, கவலை படமால் இப்படி சிரிக்கறாக?’ அவள் அருகே அமர்ந்திருந்த அவனை சந்தேகமாக பார்த்தாள் அவள்.

    டிரஸ் மாத்திட்டு வா.” என்று அவன் கூற, “என் மேல் அக்கறை காட்ட வேண்டாம். நான் இப்படியே தான் இருப்பேன்.” அவள் பிடிவாதமாக கூறினாள்.

    அவன் அருகே அமர்ந்திருந்த அவளை அவன் நெருங்கினான். அவள் பயந்து விலக எத்தனிக்க, “இப்படியே இரு. எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. பார்க்க ரொம்ப அழகாவும் இருக்க.” அவள் காதில் ரசனையோடு, உல்லாசமாக மெல்ல கிசுகிசுத்தான்.

    இப்பொழுது அவள் மேல் துண்டு இருந்தாலும், ‘இதற்கு முன் எப்படி இருந்தேன்? அதுவும் ஈர புடவை. பிங்க் நிற சேலை.என்ற எண்ணம் ஓட, கோபம் முழுதாக மறைந்து அவளை வெட்கம் பிடுங்கி தின்றது. 

        ‘அழகா இருந்தேனா?’ அவன் வார்த்தை அவள் செவிகளை ரசனையோடு மீண்டும் மீண்டும் தீண்ட,  அலறி அடித்து கொண்டு, அவள் எழ தண்ணீர் வழுக்கி மீண்டும் அவள் சரிய அவன் அவளை பிடித்து நிறுத்தவில்லை.

          ஆனால், அவள் அவனை பிடிப்பதற்கு ஏதுவாக, அவள் அருகே நின்று கொண்டான். அவள் அவனை பிடித்து விலக, “நான் உன்னை தொடலை. அதனால, நீ திரும்பவும் குளிக்க வேண்டாம்.” உதட்டை மடித்து கூறினான்.

   அவள் அவனை முறைக்க, “வாத்தியாரம்மா, உண்மையா அக்கறையா தான் சொல்றேன். உங்க ஊரு மாதிரி இங்க தண்ணீர் செழிப்பு கிடையாது. ஆறு, நதி, அருவி எல்லாம் வீட்டு பக்கத்துல்ல இல்லை. நீங்க இப்படி மணி கணக்கா, தண்ணீரை வேஸ்ட் பண்ணா தாங்காது.” அவன் கூற, அவளுக்கு கோபத்திலும், உடல் பலவீனத்திலும் கண்களை கண்ணீர் கரித்து கொண்டு வந்தது.

    ‘இவுகளுக்கு நான் விளையாட்டு பொருள் போல் இருக்கேனா?’ என்று எண்ணியபடி தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு, வேறு உடையை எடுத்துக் கொண்டு மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

         அவன் அவளுக்காக காத்திருந்தான்.

    ‘வாத்தியாரம்மா, இந்திராவுக்காகத்தான் அவ கிட்ட பேசுறேன்னு நினைச்சிட்டாளோ?’ என்ற கேள்வி அவனுள் எழுந்தது.

               ‘வாத்தியாரம்மா எதிர்பார்ப்பும் தப்பில்லையே? அவங்களுக்கே அவங்களுக்கான அன்பு தான் அவங்க எதிர்பார்ப்போ? என் மனசில் இப்ப வந்திருக்கிற மாற்றத்திற்கு பெயர் என்ன?’ அவனுள் பல கேள்விகள்.

    அவள் இப்பொழுது மஞ்சள் நிற சுடிதாருக்கு மாறி இருந்தாள். அவள் தலை முடி, மயில் தொகை போல் நீண்டு, கார் மேகம் போல் படர்ந்து, இருள் போல் கருமையான நிறத்தோடு அவள் நடைக்கு ஏற்ப அசைந்தது.

    அதில் நீர், சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. நீரில் நின்றதில், உடல் சோர்வுற்று, அங்கிருந்த சோபாவில் ஓய்வாக அமர்ந்தாள்.

      அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

   ‘என்ன நினச்சா என்ன? என்னை கேட்க வேண்டியது தானே? அது என்ன தண்ணீரில் போய், நிற்கும் அளவுக்கு பிடிவாதம்?’  என்ற கோபம் மனதினுள் கழன்றாலும், அவளை பார்க்க பாவமாக இருந்தது.

    துண்டை எடுத்து அவள் தலையை துவட்டினான். அவள் விலக எத்தனிக்க, “நம், நட்பு கரம் அப்படியே தான் இருக்கு. நான் உன்னை தொடலை. துண்டு தான் உன் தலை முடியை தொடுது.” அவன் கூற, அவன் வியாகியானத்தில் அவளுக்கு சற்று சிரிப்பு வந்தாலும், அவன் மேல் உள்ள கோபத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

        அவள் உடல் சோர்வில், அவன் செய்கை அவளுக்கு இதமாக இருந்தது. அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை. 

       வலிக்காமல், மென்மையாக அவன் துவட்டிவிட, அவன் செய்கையில் அவன் அருகாமையில் அவள் மறுக்க நினைத்தாலும் அவள் மனம் குழைய, அவள் சங்கடமாக, ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறுமையாக உணர்ந்தாள்.

    அவள் அருகே அவன் அமர, அவள் தலையை திருப்பி கொண்டாள்.

    “வீட்ல ஒரே பொண்ணு ரொம்ப செல்லமோ?” அவன் கேட்க, அவள் அவனை திரும்பி பார்த்தாள். எதுவும் பேசவில்லை.

    “உனக்கு முடி ரொம்ப நீளம். நல்ல அடர்த்தி. வீட்ல அம்மா, தான் துவட்டி விடுவங்கள்ளா?” அவன் சண்டையிடும் எண்ணத்தை கைவிட்டு, அவளை ஒட்டி பேசினான். 

      தன் தாய் பற்றிய பேச்சில், அதையும் அவன் இன்று அவளுக்காக செய்ததில், ‘இப்பொழுது இந்திரா இல்லையே? அக்கறை இருக்கு தானே?’ ஆசை கொண்ட அவள் மனம் அவன் செயலில் சற்று இளைப்பாற எண்ணியது.

   அவள் முகம் கனிய, “என்ன பிரச்சனை?” அவன் நேரடியாக  விஷயத்திற்கு வந்தான்.

     “இந்திரா வரலைனா, நீங்க என்னை ஜாக்கிங் கூட்டிட்டு போயிருக்க மாட்டீங்க தானே?” அவளும் நேரடியாகவே கேட்டாள்.

      ஒரு நொடி சிந்தித்தான். அவள் கேள்வியின் நியாயத்தில், ‘ஆம்!என்பது போல் மேலும் கீழும் தலை அசைத்தான் ரகுநந்தன்.

     சமாளிக்காமல், தலை அசைத்த அவன் நேர்மை அவளுக்கு பிடித்திருந்தது. 

    “இந்திரா இல்லைனா, என்னை கையை பிடிச்சிட்டு மேலே கூட்டிட்டு வந்திருக்க மாட்டீங்க தானே?” அவள் கேட்க , பேச்சை தவிர்க்க அவன் அழைத்தது நினைவு வர, ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

     “இந்திரா இருக்கான்னு, தானே என்னை அப்படி சாப்பிட உட்கார வச்சீங்க?” இதை கேட்கும் பொழுது அவள் குரல் தோற்று விட்ட உணர்வோடு உள்ளே சென்றது.

       ‘ஐயோ….என்று அவன் மனம் கதறியது. அதற்கு பின் பல காரணங்கள் இருந்தாலும், அவள் கேள்விக்கு இல்லை என்ற பதில் அவனிடம் இல்லாததால், ‘ஆம்…என்பது போல் தலை அசைத்தான்.

    அவள் மௌனித்துக் கொண்டாள். “கேள்வி அவ்வுளவு தானா?” அவன் கேள்வி சுருக்கமாக, ஒற்றை வாக்கியமாக வெளி வந்தது.

   அவள் மௌனிக்க, “நான் கேட்டா பதில் சொல்லணும். நீ கேட்டப்ப, நான் பதில் சொன்னேன் தானே?” அவன் குரல் அழுத்தமாக வெளி வந்தது.

     “அவ்வளவு தான்.” அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பது போல் மௌனமாக அமர்ந்திருந்தாள் அபிநயா.   

     அவள் மனதில் இருந்ததை கேட்டுவிட்ட நிம்மதி அவளுள்.

    “அதுக்கு மேல உனக்கு எதுவும் தோணலையா?” அவன் கேட்க, சரேலென்று அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

    ‘அதுக்கும் மேல?’ அவள் மனம் அடித்துக் கொண்டது. ஐயோ… தோணுச்சே!  அவன் கண்கள் காதல் பேசியது. அவன் தொடுகை உரிமை பேசியது. அவன் வார்த்தைகள் அக்கறை காட்டியது, எல்லாம் உணர்ந்தேனே. ஆனால்?’ அவள் இதயம் தடுமாறியது.

    அவள் கண்கள் ஆர்வத்தை காட்டி, கருவிழிகள் ஆசையை காட்ட எத்தனிக்க, அது  முடியாமல் மருண்டு விழித்தது.

             ‘நான் தான் கானல் நீரை கண்டு ஏமாந்து விட்டேனோ? அப்படி  எதுவுமில்லை. எதுவுமில்லை.அவள் மனப் போராட்டத்தில் உழல, “மேல பேச ஒண்ணுமில்லையான்னு கேட்டேன்?” ‘அவள் எதையும் என்னிடம் உணரவில்லையா?’ என்ற ஏமாற்றத்தில் அவன் கடுப்பாக கேட்டான்.

     ‘ஓ பேசவா?’ அவளுக்கு சொத்தென்று ஆகிவிட்டது. மறுப்பாக தலை அசைத்தாள்.

        அவள் முக வட்டத்தில், அவன் இதயம் வலித்தது.

            ‘சொல்லாமல், நம் செயல்களுக்கான காரணத்தை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படி அவர்களுக்கு நம்மை புரியவில்லை என்றால், விளக்கி கூறினாலும் அவர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை.எங்கோ படித்தது நினைவு வர, அவன் செயல்களுக்கு பின் இருந்த காரணத்தை விளக்க அவன் முனையவில்லை.

        ஆனால், அவளை அப்படியே விட்டுச்செல்லவும் அவனுக்கு மனமில்லை.

   எனக்கும் என் மனம் புரிய கால அவகாசம் வேண்டும். அவசர படக்கூடாது. வாத்தியரமாவுக்கும், என்னை புரிஞ்சிக்க கால அவகாச வேண்டும்.தன்னை நிதானித்து கொண்டான்.

     அபிநயா சோபாவில் அமர்ந்திருந்தாள். அவள் முன் கைகளை கட்டி கொண்டு அவள் முகத்தை பார்த்தபடி நின்றான் ரகுநந்தன்.

   ‘நாம்ம நினைச்ச மாதிரி இன்னைக்கு பிரம்பை கிபிட் பேக் பண்ணி குடுத்திருக்கணும். நமக்கு நிச்சயம் அடி கிடைச்சிருக்கும்.என்ற எண்ணம் வர, அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

 “நான் உன்னை காயப்படுத்தி இருந்தா, சாரி.” அவன் சமாதானம் கொடியை பறக்க விட, “இல்லை நான் தான் ஏதேதோ கற்பனையை…” அவன் பேசும் விதத்தில் அவள் தடுமாறினாள்.

                  அவள் கற்பனை என்னவென்று அவனாலும் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. காலையில், அவள் முகம் காட்டிய பாவனையிலும், அவள் இமைகளின் படபடப்பிலும், அவள் பாதங்கள் துள்ளி குதித்ததிலும் அவனும் தான் உணர்ந்தானே. ஆனால்?’ என்று அவன் மனமும் தேங்கி நின்றது.

       “பிரெண்ட்ஸ்… ஏர் ஹை பை” என்று அவன் கூற, ‘அது என்ன ஏர் ஹை பைஎன்று அவனை பார்த்தாள் அபிநயா.

         “தொடாமலே, ஹை பை பண்றது. உன் கைகளுக்கும், என் கைகளுக்கும் இடையே இடைவெளி இருக்கும். நான் தொட்டா தான் உனக்கு பிடிக்காதே.” அவன் நிறுத்த, அவள் முகத்தில் ஓர் அழகிய புன்னகை வந்தது.

      அவள் சிரிப்பை ரசித்து கொண்டே, “வாத்தியாரம்மா சிரிப்பு தான் நல்லாருக்கு. பிடிவாதம் இல்லை.” அவன் அழுத்தமாக கூற, “சிரிப்புக்கு, பிடிவாதம் இலவசம். நீங்க மறுக்க முடியாது.” அவள் துடுக்காக கூறினாள்.

   “இப்படி பேசுங்க. தண்ணீர்ல எல்லாம் நிக்காதீங்க.” என்று அவன் கூற, அவள் முறைக்க, “நின்னாலும் சரி தான். இப்படி மயங்கும் பொழுது தான், பூமாலையே தோள் சேரவா? அப்படின்னு எனக்கும் சில பாக்கியம் கிடைக்குது.” என்று அவன் கண்சிமிட்டி சிரித்தான்.

       அவன் சிரிப்பில் நொடியில் மயங்கி தன்னை சுதாரித்து கொண்டு, ‘நான் எதுக்கு கோபப்பட்டேன்? அதுக்கு பதில் கிடைக்கலையே? நான் யோசிச்சதும் முழுசா சரி இல்லையோ? இல்லை இவுக என்னை திசை திருப்பிட்டாகளோ?’ அவனை யோசனையாக பார்த்தாள் அபிநயா.

    அவள் கவனத்தை திசை திரும்பும்படி, “ரெண்டு மாசத்துக்கு அப்புறம் வேலைக்கு போகலாம். இப்ப உங்களுக்காக ஒரு கோர்ஸ் பார்த்திருக்கேன்.  படிக்கறீங்களா?” என்று கேட்டான்  அவன்.

         அவளும் ஆர்வாமாக தலை அசைத்தாள். அதன்பின் அவனும் அவளை நெருங்கவில்லை. மெல்லிய நட்போடு, சுவாரசியம் குறையாமல் ஓர் இடைவெளியோடு அவர்கள் நாட்கள் மெலிதாக நகர ஆரம்பித்தது.

   அந்த மாலை பொழுது வரும் வரை!

பொழுதுகள் விடியும்…