RR13

ரௌத்திரமாய் ரகசியமாய்-13

அவன் முன்னால் கிடந்த ஃபைலை அமைதியாக எடுத்துப் பார்த்தான். வேறு என்ன இருக்கப் போகிறது? விவாகரத்து பத்திரம் தான்.

அந்த ஃபலை மேசை மீது போட்டவன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி நிமிர்ந்து அமர்ந்தான். அவளை தீர்க்கமாக பார்த்தான்.

அவள் முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவள் எடுத்த முடிவு மாறாது என்பது போல உறுதியாக அமர்ந்திருந்தாள்.

“சோ உனக்கு டிவோர்ஸ் வேணும்?” அவனது பார்வை மாறவில்லை.

“யெஸ்” என்றாள் ஆமோதிப்பாக. அவளது பார்வை வேறு எங்கேயோ இருந்தது.

“வெல்…‌ உன் விருப்பம் போலவே நடக்கும்”  உடனடியாக அவனிடமிருந்து வந்த பதிலில் சிறிய அதிர்வுடன் அவனை பார்த்தாள்.

“என் விருப்பம்? எப்போதிலிருந்து?”  அவனை வெறித்துப் பார்த்தாள். அவள் குரலில் நக்கல் தெறித்தது.

“எப்போவுமே…” இதழ்க்கடையோரம் சிறு புன்னகை அரும்பியது.

இப்போது அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவள் இருந்த மனநிலையில் அவனது சின்னச் சிரிப்புக் கூட எரிச்சலை கிளப்ப அவனை முறைத்தாள். ஆனால் அதற்கு மேல் அவனுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள விருப்பமில்லை.

மேசை மேல் கிடந்த ஃபைலை கண்களால் சுட்டிக்காட்டி, “கையெழுத்துப் போட்டு கொடுத்தீங்கனா உங்க நேரம் வீணாகாதுன்னு நெனக்கிறேன்” பேனாவை நீட்டினாள்.

ருத்ரனின் புருவம் உயர்ந்தது. அவள் கையிலிருந்த பேனாவை வாங்கும் போது அவன் கைவிரல்கள் தாமிராவின் விரலை லேசாக தீண்டிச் சென்றன. பட்டென கையை இழுத்துக் கொண்டாள்.

“இது தான்‌ உன் விருப்பமா?” கையெழுத்திட முன் இறுதியாக கேட்டான். அவளது ஒவ்வொரு அசைவையும் கூர்மையாக ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவள் இதயம் நின்று துடித்தது. ஆனாலும் சமாளித்தாள். என்ன கேள்வி இது? அவளது தேவை எதுவென்று கூறிய பிறகும் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறான்.

“ஆமா..‌. இது தான் என் விருப்பம். இது தான் என்னோட முடிவு” அவளுக்கு கடுப்பானது.

அவனது கண்கள் ஒரு தரம் சுருங்கி விரிந்தது. சிந்தனையோடு அவளை பார்த்தான். கையில் இருந்த ஃபைலையும் பேனாவையும் மேசையில் போட்டு விட்டான்.

“அதுல எனக்கு விருப்பம் இருக்கனுமே…?” இழுத்தான். நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து அவளை ஊன்றிப் பார்த்தான்.

அவளுக்கு பக்கென்றானது. ‘உன் விருப்பம் போல் நடக்கும்’ என்று வசனம் பேசியவன் இப்போது யோசிப்பதை பார்த்தால்…

‘கூடாது இது கூடவே கூடாது. கடவுளே அவன் அப்படி ஒரு முடிவு மட்டும் எடுத்து விடக்கூடாது’ அவள் உள்மனம் பதறினாலும் வெளியில் விறைப்பாக அமர்ந்திருந்தாள்.

“உங்க விருப்பத்தை கேட்க நான் வரலை” என்றாள் பட்டென்று.

“இத்தனை வருஷம் இல்லாம இப்போ வந்து டிவோர்ஸ் கேட்குறதுக்கான ரீசன்?” அவள் படபடவென்று பேசினாலும் நிறுத்தி நிதானமாக பேசினான் இவன்.

இவ்வளவு நடந்த பின்னும் ஒன்றும் தெரியாதவன் போல் காரணத்தை கேட்பது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவனை உறுத்து விழித்தாள்.

“உங்களோட வாழ விருப்பமில்லைனு அர்த்தம் மிஸ்டர் ருத்ரன்” சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாள்.

“வெல்… பட் டிவோர்ஸ் கொடுக்க முடியாது” அவ்வளவு தான். அவன்‌ குரலில் ஓர் அழுத்தம். யாரும் எதிர்த்து பேச முடியாத குரல் அது.

சட்டென்று அவளது முகம் உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்றது. இது அவள் எதிர்ப்பார்த்த ஒன்று தான். அவ்வளவு எளிதில் மற்றவர் விருப்பங்களுக்கு வளைந்து கொடுப்பவனல்ல இந்த ருத்ரன். அதுவும் அவளது விருப்பங்களுக்கு.

“இது… இது தான் நீ. இது தான் ரீசனும் கூட. நீ ஒரு ராட்சசன்; அரக்கன்” ஒற்றை விரலால் அவன் முகத்துக்கு நேரே நீட்டி கத்தினாள். அவள் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளி விட்டு எழுந்தவள் அவன் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல் திரும்பி நடந்தாள்.

***

அந்த ஹோட்டலின் தோட்டப்பகுதி முழுவதும் மஞ்சள் நிற ட்விங்கிள் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருக்க, ஆங்காங்கே லேண்டர்ன் விளக்குகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தருண் மற்றும் வந்தனாவின் திருமண ரிஷப்சன் வைபவம் அது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது‌.

விருந்தினர்கள் வருகை தந்து கொண்டிருக்க, ஓர் ஓரமாக தாமிரா மட்டும் தனித்திருந்தாள்.

 

அதிக வேலைப்பாடுகளற்ற கறுப்பு நிற ஷிபான் சேலை அணிந்திருந்தாள். காதுகளில் உடைக்கு பொருத்தமான கறுப்பு மற்றும் வெள்ளி நிறம் கலந்த சிறிய காதணி. அதே நிறத்தில் கைகயில் சில வளையல்கள். அவ்வளவு தான் அவள். இப்படி சிம்பிளாக இருந்தது கூட அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.

 

வழமை போல் விரித்து விடப்பட்டிருந்த அவள் கேசம் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்க, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு தனிமையில் நின்றிருக்க, அப்போது தான் ரகு வந்தான்.

“தாமிரா… கெஸ்ட்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க. இங்க என்ன‌ பண்ணிட்டு இருக்க? ” அவள் அருகில் வந்து நின்றான்.

“நத்திங் ரகு…” ஒரே வார்த்தையாக பதில் சொல்லி விட்டு அமைதியானாள்.

அங்கு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக குழுமியிருக்க, இங்கு தனித்திருந்த தோழியை கண்டதும் அவன் மனம் கலங்கியது.

அவளுடைய கண்களில் எப்போதும் மின்னுகிற குறும்பை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. அவளுடைய பேச்சில் எப்போதும் தொணிக்கிற கேலி, நிதமும் அவள் முதத்தில் வீற்றிருக்கும் சிரிப்பு  இப்போது தொலைந்து போயிருந்தது.

இப்போதெல்லாம் அவளுடைய முகத்தில் அசாத்திய அமைதிதான் அனுதினமும். கண்களில் சலனமற்ற பார்வை. பேச்சில் ஒரு விதமான இறுக்கம். எல்லோரிடமும் ஓர் ஒதுக்கம். இலங்கை வந்தது முதல் அவள் நடந்து கொள்ளும் விதமே வேறு மாதிரியாக இருந்தது.

அவளிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என எண்ணினாலும் அப்போதைக்கு வேறு எதையும் கேட்டு அவளை வருத்த விரும்பாமல் சாதாரணமாக பேசினான்.

“எதுவா இருந்தாலும் பரவாலை. எல்லாரும் அங்க இருக்காங்க. அன்ட் இது உன் ஃபேவரைட் பிரதரோட பங்சன். வா பேகலாம் ” அவள் முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்த படியே கேட்டான்.

“இல்லை ரகு… ஐ ஃபீல் அன்கம்பர்ட்டபிள். அதான் உ… உள்ள” என்று அவள் திணற,

“இது உன் வீட்டு பங்சன் தானே? இதுல என்ன அன்கம்பர்ட்டபிள் ஃபீல்?”

“தருணுக்கு பிடிக்காது” என்றாள் மெல்லிய குரலில். அவள் குரலில் கவலை தெரிந்தது.

“அப்படிலாம் ஒன்னுமில்லை நீயா எதையும் வீணா இமேஜின் பண்ணிக்காத. வந்தனா ஃபேமிலி வேற உன்னை தான் கேட்டுக்கிட்டே இருக்காங்க. வா” அவளது மறுப்பை கண்டு கொள்ளாமல் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.

தாமிராவை அங்கு கண்டதும் அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்த தருண் முகம் இறுகியது. அதை ரகுவும் கண்டு கொண்டான். அவனது முகமாற்றத்தை கண்டவளுக்கு ஒரு மாதிரியானது. ரகுவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவளை கண்களால் சமாதானம் செய்தான்.

சுமித்ராவும் அக்ஷராவும் தாமிராவை வந்தனாவின் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க இவளும் புன்னகைத்து வைத்தாள். ஆனால் தருண் அவளை பார்க்கப் பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டது, சக்கர நாற்காலி அமர்ந்திருந்த தந்தை அவளை ஏறெடுத்தும் பார்க்காதது என அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது.

“உங்க பையனும் பொண்ணும் ரெட்டை தானே. நல்ல வரணா பார்த்து பொண்ணுக்கும் சேர்த்தே கல்யாணத்தை பண்ணியிருக்கலாமே?” என்றது அந்த கூட்டத்திலிருந்த ஒரு பெண்.

“ஆமா என்ன தான் பெரிய டாக்டர்னாலும் ஒரு வயசுக்கு மேல பொண்ணுங்களை வச்சிருக்க முடியாதே.”

“பொண்ணுக்கு மாப்பிள்ளை ஏதும் பார்த்துட்டீங்களா?” இப்படி ஏகப்பட்ட குரல்கள்.

ஏதேதோ சொல்லி சுமித்ராவும் அக்ஷராவும் அவர்களை சமாளிக்க வேண்டியதாயிற்று.

தாமிராவுக்கு அந்தக் கேள்விகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏதோ முள் மேல் நின்றிருப்பது போல தோன்றியது. நெஞ்சுக்குள் ஏதோ பதற அவஸ்தையாக நின்றிருந்தவளை ரகு தான் அப்போது காப்பாற்றினான்.

***

தருண் திருமணம் முடிந்து மூன்று நாட்களாகி விட்டன. அங்கு தங்கியிருந்த உறவினர்களும் கிளம்பி விட்டார்கள். ஹாலில் தருண் டீவியின் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருக்க, வந்தனாவும் அக்ஷராவும் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

யாருடனோ பேசிவிட்டு அலைபேசியை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தவள், அவளது அறையை நோக்கி நடக்க வந்தனா அவளை அழைத்தாள்.

“அண்ணி… பிஸியா இருக்கீங்களா?”

“இ… இல்லை” என்றாள்.

“இங்க வந்து கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருங்க. எப்போ பார்த்தாலும் அந்த ரூமுக்குள்ளேயே அடஞ்சி இருக்கீங்க” என அவளை பார்த்து சிநேகமாக புன்னைக்க, அவளால் மறுக்க முடியவில்லை.

“ஆமாக்கா… அண்ணி‌ எங்களை மாதிரி ஜாலி டைப் தான். வாக்கா” என பதிலுக்கு தங்கையும் அழைத்தாள்.

தாமிராவின் பார்வை தயக்கத்துடன் மெல்ல தருண் பக்கம் சென்றது. அவன் அமைதியாக டீயை வெறித்துக் கொண்டிருந்தான். வேறு வழியின்றி அவளும் வந்தனாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“யாரு அண்ணி உங்களுக்கு வந்தனா; போனனா; வழுக்கிட்டு விழுந்தேனானுன்னுலாம் பேர் வச்சது‌?” அவளை கலாய்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

தாமிராவால் சிரித்து வைக்க மட்டுமே முடிந்தது. முன்பானால்  இவளும் சேர்ந்து அவளை  ஒரு வழி செய்திருப்பாள்‌. இப்போது அவளால் அப்படியெல்லாம் இருக்க முடிவதில்லை.

வார்த்தைக்கு வார்த்தை வந்தனா அவளை அண்ணி என்று அழைத்துக் கொண்டிருக்க,

“அவளை பேர் சொல்லியே கூப்பிடு வந்தனா. இந்த அண்ணி நொண்ணிலாம் அவளுக்கு தேவையில்லை” என்றான் தருண்.

அவன் குரலில் இருந்த எரிச்சல் தாமிராவுக்கும் அக்ஷராவும் மட்டுமே புரிந்தது‌. வந்தனாவோ புரியாமல் ‘ஏன்’ என்பது போல தருணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க என் பேர் சொல்லியே கூப்பிடுங்க. அது தான் எனக்கும் கம்ஃபர்ட்டபிளா இருக்கு” என்றவள் பட்டென்று எழுந்து அவளறைக்குச் சென்று விட்டாள்.

என்னை ஏன் தருணுக்கு பிடிக்கவில்லை? ஏன் இந்த கோபம்? அவனது உதாசீனத்தையும் கோபத்தையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் செய்தது தவறு தான் அவளுக்கே தெரியும். ஆனாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை அவளுக்குத் தேவையா? ஆம் தேவை தான் அவளது சுயநலத்தால் வந்த வினை.

அப்போது தான் அவளது செவிகளை தீண்டியது அந்தக் குரல்.

ஆம், அது அத்தனை ஆண்மை நிறைந்த குரல்! அவளது உயிர் வரை ஊடுருவும் அவன் குரல்!

இது பிரம்மை. நெற்றியை நீவி விட்டு, தலையை சிலுப்பிக் கொண்டாள். ஆனால் மீண்டும் அந்தக் குரல் கேட்டது. அவளது வீட்டு ஹால் பக்கம் தான்.

உண்மையில் அவன் தானா? எதுவும் யோசிக்கத் தோன்றாதவளாய் எழுந்து ஹாலுக்குச் செல்ல அங்கு அவன் தான் ருத்ரன் அமர்ந்திருந்தான்.

அவனை இங்கு  நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை. இவளோ அச்சத்திலேயே, நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொள்ள, பேச்சு மூச்சற்று நின்றாள்.

அவளுக்குப் புரியவில்லை. அவன் எதற்கு இங்கு வந்தான்? ஏன் வந்தான்?

தருண் இவளை பார்த்து முறைத்து வைத்தான். அவளது தந்தையும் அங்கு தான் இருந்தார். அவளது அன்னையோ அமைதியாக நின்றிருக்க, அக்ஷரா இன்று தான் அவனை நேரில் பார்க்கிறாள்.

வந்தனாவுக்கோ வந்திருப்பவன் யாரென்றே தெரியவில்லை. புருவம் உயர்த்தி தாமிராவை பார்த்தவன்  தோரணையாக அமர்ந்திருக்க, அவள் இதயமோ வேகமாக துடித்தது.

விஸ்வநாத், தாமிராவை ஒரு வெறித்த பார்வையுடன் பார்த்தார். ருத்ரனுடன் தனியாக பேச வேண்டுமென அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

உள்ளே என்ன பேசினார்களோ யாருக்கும் தெரியாது.  அவளது மூளையோ பிண்ணனியில் எதை எதையோ யோசித்தது. அவளுடைய மூளை யோசித்து அவளுக்கு உரைத்த விஷயம், தாமிராவை உடனே பக்கென அதிர வைத்தது.

அந்த வீட்டை விட்டு கிளம்பும் போது கூட இதயம் தடதடக்க, குழப்பம் கொப்பளிக்க நின்றிருந்தவளை கண்களில் சுவராஸ்யம் மின்ன பார்த்து விட்டுத் தான் சென்றான்‌ அவன்.

அவளுக்கு எல்லாம் புரிந்து போனது.

‘கடவுளே…  அது மட்டும் நடக்கக் கூடாது.’

***

இருண்டு போன ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள் தாமிரா. சலனமற்ற வானில் ஜொலிக்கும் நிலவும், மினுக்கும் நட்சத்திரங்களும், மெலிதாக வீசிய தென்றல் காற்றும் எப்போதும் போல இன்று அவள் மனதை சாந்தப்படுத்தவில்லை.

மாறாக அவள் மனம் விரக்தியின் உச்சத்தில் இருந்தது. பேசாமல் உயிரை விட்டால் என்ன? என்று கூட தோன்றிய மறுகணமே என்ன இது கேவலமான முடிவு? அவள் மனம் ஒரு  நிலையில்லாமல் ஊசலாடியது.

அதற்குக் காரணம் அவளது தந்தை முன்வைத்த குரூர கோரிக்கை.

“நீ அ… அவன் கூட போயிடு.”

“அப்பா… !”

“அ… அந்த தகுதியை நீ எப்பவோ இழந்துட்ட. இ… இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் அவனுக்கும் கல்யாணம். அது இந்த ஊர் வாயை மூடுறதுக்காக. இங்கிருந்து போ… போயிடு… ” குழறலாக வெளி வந்தது அவரது வார்த்தைகள்.

அவ்வளவுதான். தாமிராவின் இதயம் வெடித்து சின்னாபின்னமாய் சிதறுவது மாதிரி அவளுக்குத் தோன்றியது. எல்லா கதவுகளுமே சாத்தப்பட்டு, அவளது வாழ்க்கை இருண்டு போன மாதிரியாக ஒரு உணர்வு.

‘எங்க வீட்ல கொஞ்ச நாள் வந்து தங்கிக்க தாமிரா. யு.எஸ்ல இருந்து அக்காவும் பேபியும் வந்து இருக்காங்க. உனக்கு கொஞ்சம் மைன்ட் டைவர்ட் ஆகும்’ என ரகு அவளை எத்தனையோ முறை அழைத்தும் அவள் அங்கு வரவில்லை. ஆனால் இன்று ரகுவின் வீட்டுக்கு அவளாகவே வந்து விட்டாள். அவளது வீட்டில் அவளே அந்நியமாய் உணர்ந்தாள்.

 

அவளுடைய பார்வைக்கு அவளது எதிர்காலமே இப்போது சூனியமாக காட்சியளித்தது. எதையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தாளோ அவையெல்லாம் இப்போது அவளது மூளையில் சிக்கி சித்திரவதை செய்தது. யாரை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்றாளோ யாரிடம் தன் சந்தோஷத்தை, குடும்பத்தை இழந்தாளோ அவனிடமே மீண்டும் சிக்கி சின்னாபின்னமாவதா? 

 

‘அந்த ராட்சசனுடனான வாழ்க்கை தன்னை எங்கு கொண்டு சேர்க்கும்?’ என்று அவள் அடிக்கடி எழுப்பிய கேள்விக்கு, அவளுடைய புத்தியால் பதில் சொல்ல முடியவில்லை. 

 

அப்போது தான் ரகு அவளை தேடி பால்கனிக்கு வந்தான். அவளது வீட்டில் நடந்தது அவனுக்கும் தெரிந்திருந்து. அவனால் அவளை அப்படியே விட முடியவில்லை.

 

பால்கனி கைப்பிடிச்சுவரை பிடித்தவாறு வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றமே அவளது மனதின் உட்சபட்ச குழப்பநிலையை எடுத்துச் சொன்னது‌.

 

எதற்கும் பயந்து நடுங்கும் தாமிரா இப்போது இல்லை. முன்பெல்லாம் அவளிடம் இருந்து மென்மை, கனிவு எதுவும் அவளிடம் இல்லை. எல்லாம் தொலைந்து இறுகிப் போன தோற்றம்.

 

அவளது வாழ்க்கை தடம்மாறி போனது அவனுக்குத் தெரியும். ஆனால் இன்று வரை என்ன நடந்தது எனத் தெரியாது. ருத்ரனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள் என்பது தெரியும் ஆனால் எதற்காக அவனை பிரிந்தாள்? என்று தெரியாது.

 

அவளது இந்த மாற்றத்திற்கு ருத்ரன் தான் காரணமென்று தெரியும் ஆனால் அது எப்படி நிகழ்ந்ததென தெரியாது. 

 

நேற்று முதல் இவர்களது உறவை வெறுத்த இவளது தந்தை இன்று அவனையே மணந்து கொள்ள சொல்கிறார்? ஏன்?  சத்தியமாக குழம்பிப் போனான்.

 

இதுநாள் வரையிலும் அவளை தான் எந்த விதத்திலும் வருத்தி விடக் கூடாதெனத் தான் அவளிடம் இது பற்றி எதையும் வாய்திறந்து கேட்கவில்லை. ஆனால் இன்று அவனால் அப்படியிருக்க முடியாது. இது பற்றி பேசித் தீர்த்திட எண்ணியே அவன் அங்கு வந்தான். 

 

“தாமிரா… ” அவளை மெல்ல அழைத்தான்.

 

“ம்ம்… சொல்லு ரகு” அவள் மெதுவாக அவன் பக்கம் திரும்பி நின்றாள்.

 

“ஏன் இப்படி இருக்க?”

 

“எப்படி?” அவள் புரியாமல் விழிகளை சுருக்கினாள்.

 

“நீ முன்ன மாதிரி சந்தோஷமா இல்லை. உன்னோட பழைய குறும்பு இல்லை. யார் கூடவும் சரியா பேசுறதில்லை. எதிலும் ஒரு அலட்சியம். ரொம்ப இறுகி போயிருக்க. உனக்கு நீ போல்ட்டா இருக்குற மாதிரி தெரியும். ஆனால் எனக்கு அதெல்லாம் மீறி உன் கண்ணுல வலி தெரியுது. நீ நிம்மதியா இல்லை” அதை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அவளது கண்கள் அதிர்ச்சியை காட்டியது.

இருந்தாலும் சமாளிப்பாக, “அப்படியெல்...” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் இவன் முந்திக் கொண்டு,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லைனு மட்டும் சொல்லாத. உன்னை எனக்கு நல்லாவே தெரியும். ஏன் இப்படியாகிட்ட?”

“உலகத்துல மாற்றம்ன்ற ஒரு விஷயத்தை தவிர வேற எந்த விஷயமும் நிரந்தரம் இல்லை ரகு‌. மனுஷ வாழ்க்கையும் அந்த மாதிரி தான். ஒவ்வொரு காலகட்டத்துலயும் மனுஷங்களும் அவங்க மனசும் மாறிக்கிட்டே தான் இருக்கும். இது நானா ஏற்படுத்திக்கிட்ட மாற்றம்.”

“அந்த மாற்றம் எதனால வந்தது? உன் கடந்த காலத்தை கேட்டு வருத்தப்பட வைக்குறது என் எண்ணம் இல்லை.

அவனை பிடிக்கலைனா ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட? அதுக்கப்புறம் ஏன் அவனை பிரிஞ்ச? அப்படி என்ன நடந்தது?  இத்தனை நாள் நான் எதையும் கேட்டு உன்னை கஷ்டப்படுத்த விரும்பலை. ஆனா உன் வாழ்க்கை போற போக்கை பார்த்தா என் ஃபிரண்டை இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு” அடுக்கடுக்காக அவன் முன்வைத்த கேள்விகளில் அவள் திணறினாள்.

அவளுக்கு தெரியும் அவள் மீதான ரகுவின் எல்லையற்ற அன்பு. இது நாள் வரை ஏன்? எதற்கு? என்று கூட கேட்காமல் பல வகையிலும் அவளுக்குத் துணை நின்பவன் அவன்.

முழு குடும்பமுமே அவளை வெறுத்து வேண்டாமென ஒதுக்கிய போதும் அவன் அவளை விட்டுவிடவில்லை. அவளை ஒரு காலத்தில் காதலித்தவன் தான். அதற்கான அவளும் இவன் மேல் கோபம் கொண்டாள். ஆனால் இன்று அத்தகைய அன்பை இழந்ததற்காக உள்ளுக்குள் வருந்துகிறாள்.

 

இன்றுவரை எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனக்காக எதையும் செய்திட துடிக்கும் ரகுவிடம் மறைப்பதில் அர்த்தமில்லை என்றே தோன்றியது. ஆனால் அதுவே அவன் மனதை நோகடித்து விடும் என்று பயந்தாள்.

 

ரகு, தாமிராவை காதலித்தான். தாமிரா, ருத்ரனை காதலித்தாள். தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஒருவனை காதலித்ததற்காக இன்று வரை தவித்துக் கொண்டிருக்கிறாள்.

 

அவளது இதயம் ‘படக்.. படக்…’ என்று விட்டு விட்டு அடித்துக்கொள்ள அவளது அழகிய வாழ்வை அலங்கோலமாக புரட்டிப்போட்ட பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.

 

# # #