AnthaMalaiPozhuthil-9

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 9

      ரகுநந்தன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க, “காதல் கல்யாணம் பிடிக்காதா? இல்லை காதல் கமா கல்யாணம் அது தான் காதல் காற்புள்ளி கல்யாணம் இதில் எல்லாம் விருப்பம் கிடையாதா?” என்று அவன் பேச்சை இடைமறித்தாள் அபிநயா.

     ‘இந்த நிறுத்த குறியீடுகள் இப்பொழுது முக்கியமா?’ என்பது போல் ரகுநந்தன் அவளை கடுப்பாகப் பார்க்க,”நிறுத்த குறியீடுகள் இல்லைனா அர்த்தம் மாறிடும்.” அவன் கேள்வி புரிந்தது போல் பதில் கூறினாள் அபிநயா.

      “காதல் கல்யாணம் பிடிக்காதுன்னு சொல்றது இயற்கை. நிறைய பேருக்கு அந்த எண்ணம் இருக்கும். அந்த காதலை விட்டு தள்ளுங்க. எனக்கும் அதில் நம்பிக்கை இல்லை. ஆனால், கல்யாணத்தில் விருப்பம் இல்லைனா என்னனு யோசிக்கணும்?” என்று அவள் கூற, அவள் கூறிய விளக்க உரையில் ரகுநந்தன் அவளை பார்த்து உதட்டை மடித்து சிரித்தான்.

        “வாத்தியாரம்மாவா இல்லை வக்கீல் அம்மாவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.” அவன்  நக்கலாக புருவங்கள் உயர்த்த,  “வாத்தியாரம்மா தான். எங்க வேலை வக்கீலை விட கஷ்டம்.” என்று கம்பீரமாகக் கூறினாள் அபிநயா.

    “அது எப்படி?” என்று அவன் கேட்க, “வக்கீல் பேசும் பொழுது யார் மனசும் புண்பட்டிருமோன்னு யோசிக்க வேண்டாம். நாங்க குழந்தைங்க மனசு கஷ்ட படாத மாதிரி பேசணும். பல சமயங்களில் பெற்றோர் மனசு உட்பட” என்று அவள் தோரணையாகக் கூறினாள்.

   “இந்த வாத்தியாரம்மாவை பார்த்தா அப்படி தெரியலை.” நேற்று கவினிடம் அவள் நடந்து கொண்ட முறையை மனதில் வைத்துக் கூறினான் ரகுநந்தன்.

                       கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கணும். அது பெரியவங்களா இருந்தாலும் சரி… சின்னவங்களா இருந்தாலும் சரி.” அவள் இருபொருள் படக் கூறினாள்.

     “ரகு…” கீழே இருந்து பவானி அம்மாளின் குரல் வர, “வரோம் அம்மா…” என்று பதிலளித்தான் ரகுநந்தன்.

   “உன்கிட்ட பேச வந்தா பேச்சு வளருது.” என்று சலிப்பாக முணுமுணுத்துக் கொண்டான் ரகுநந்தன்.

   “பிடிக்காமல் என் கிட்ட யாரும் பேச வேண்டாம்.” அவளும் முணுமுணுத்தாள்.

          “இந்த பாரு… நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கலாம். நான் சொல்றதை குறுக்க பேசாம கேளு.” என்று கூறினான் ரகுநந்தன்.

   “என்ன சொல்ற?” என்று அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க, “நீங்க தானே குறுக்க பேச கூடாதுன்னு சொன்னீங்க” என்று அவள் கூற, அவன் புன்னகையோடு தலை அசைத்தான்.

    “எனக்கு இந்த கல்யாணத்தை ஏத்துக்க, இந்த ஹஸ்பேண்ட் பொஸிஷன் ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும். அதே மாதிரி உன் நிலைமையும் எனக்கு தெரியும். மாமா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. உனக்கும் கொஞ்சம் கால அவகாசம் வேணும்.” அவன் கூற திக் பிரமை பிடித்தார் போல் நின்றாள் அபிநயா.

    அவள் இத்தனை நேரம் பேசிய, கேலி பேச்சுக்கள், அவளிடம் தெரிந்த விளையாட்டுத்தனம் எல்லாம் மறைந்து போயிருந்தன.

     ரகுநந்தனின் மனம் அவள் தலை கோதி தோழமையைக் காட்ட வேண்டும் என்று விழைந்தது.

      ‘அந்த நெருக்கம் இன்னும் வரவில்லை.என்று அவன் மூளை அறிவுறுத்த, தன் கைகளை பின்னே கட்டிக்கொண்டான். எங்கே அவன் கைகள் அவன் கட்டளையை மீறிவிடுமோ?’ என்ற அச்சம் அவனுள்.

    “கொஞ்சம் நாள் போகட்டும். நமக்குள்ள எல்லாம் சரியாயிடும்.” அவன் கூற, “சரியாயிடும்முன்னா?” என்று நொடிப்பொழுதில் தன்னை சரி செய்து கொண்டு துடுக்காகக் கேட்டாள் அபிநயா.

          அவள் மீண்டு கொண்டதில், அவனுள் உற்சாகம் பீறிட்டு வழிந்தது.

    “எனக்கு உன்னை பிடிச்சி… உனக்கு என்னை பிடிச்சி…” அவன் ரசனையோடு ராகம் பாடினான்.

இதற்கெல்லாம் அசருவேனா?’ என்பது போல் “ஒருவேளை,கல்யாணத்துலயே விருப்பம் இல்லாத உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா?” என்று அவள் கேட்க, “நம்பிக்கை தான் வாழ்க்கை. கால அவகாசத்தில் எல்லாம் மாறும். பிடிக்கும்.” என்று அவன் கூறினான்.

               ‘கால அவகாசம் கூட இல்லாமல், இவள் பேச்சில் மயங்கி விடுவேனோ?’ என்ற சந்தேகமும் அவனுள் பரவ ஆரம்பித்திருந்தது.

          ஒருவேளை, எனக்கு உங்களை பிடிக்கலைன்னா?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

   ‘அது என்ன விருப்பு? வெறுப்பு? எல்லாம் இவுகளுக்கு மட்டும் தானா? அதையும் அவுக தான் முடிவு பண்ணனுமா?’ என்ற இறுமாப்பு அவளுள்.

              அவன் அவளை யோசனையாக பார்த்தான்.

    அபிநயாவின் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

         ‘எங்க வீட்டுக்கு வர மாட்டாக. கூட்டிட்டு வந்து மண்டையை உடைப்பாக. சின்ன பையனை கூட படுக்க வச்சிப்பாக. ஏதோ, என்னை வேண்டா வெறுப்பா  கட்டிகிட்ட மாதிரி கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லுவாக. கொஞ்சம் நாள் போனா, பிடிச்சிருமுன்னு, வேற வழி இல்லாத மாதிரி சொல்லுவாக. இந்த அபிநயா என்ன எல்லாத்துக்கும் தலை ஆட்டுற கேனை கிறுக்கியா?’ என்று எண்ணிக்கொன்டு அவனை அசராமல் பார்த்தாள்.

            நான் இந்த கல்யாணத்துக்கு முழு மனசா தானே சம்மதிச்சேன். என்னை பேச விடமால், அப்பா சொன்னாகன்னு இவுகளே என்ன முடிவு எடுக்கிறது?’ அபிநயா சற்று கடுப்பாகவே சிந்தித்தாள்.

அவள் மனமோ, ‘நீயும் கொஞ்ச கால அவகாசம் தானே கேட்க நினைச்ச? அதை அவுகளே கொடுத்தா சரின்னு கேட்டுட்டு போக வேண்டியது தானே?’ என்று இடித்துரைக்க, ‘எல்லாத்துக்கும் சரின்னு போய்ட்டா அவ அபிநயாவா?’ என்று அவள் அறிவு வாதிட்டு தன் கேள்வியை சரி என்று நிலை நிறுத்திக் கொண்டது.

    ‘நான் என்ன எதிர்பார்த்து விட்டேன்? வந்தவுடனே பாச மழையையா பொழிய சொன்னேன்? புது பொண்ணுக்கு இருக்கும் சராசரி வரவேற்பை தானே? இந்த வீட்டில் அதுவுமில்லை. பேச கூட கூடாதா?’ என்று அவள் மனம் சண்டை கோழியாக திமிறிக் கொண்டு நின்றது.

ரகு….” என்ற அழைப்பு மீண்டும் வர, “உங்க வீட்டுக்கு போகணும். கிளம்புவோமா?” என்று கேட்டான் அவன்.

     சம்மதமாக தலை அசைத்து கிளம்பினாள் அபிநயா. காலையில் அவர்கள் வீட்டில் தான் விருந்து. அனைவரும் கிளம்பி இருந்தனர்.

மற்றவர்கள் வேறு ஒரு காரில் வர, இவர்கள் இருவரும் தனி காரில் வந்தனர்.

       ரகுநந்தன் காரை செலுத்தி கொண்டிருந்தான். இருவரும் எதுவும் பேசவில்லை. அதிகமாக பேசிவிட்டார்கள்.’ எண்று எண்ணிக் கொண்டது போல் மௌனத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.     

காரை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் ரகுநந்தன். அந்த வேகத்தை விட, அவன் எண்ணங்கள் வேகமாக தறி கெட்டு ஓடியது.

       ‘வாத்தியரம்மா என்ன சொல்ல வராங்க? என்னை பிடிக்கலைன்னு சொல்றங்களா? இல்லை நேத்து அவங்க பேச வந்தப்ப, நான் தவிர்த்தது கோபமா? இது என்னடா வம்பா போச்சு?’ என்று சிந்தித்தான் ரகுநந்தன்.

       ‘திருமணத்தின் நம்பர் ஒன் கஷ்டம் இது தான் போல. பெண்களின் மனம் ஆழ்கடல் என்றால், மனைவியின் மனம் அழ்க்கடலிலும் அதீத ஆழம் போல. எனக்கு என் அக்கா, அம்மா யோசிக்குறதை கண்டு பிடிக்கிற அறிவே கிடையாது.என்று சோகமாக எண்ணிக் கொண்டான்.

 அப்பொழுது அவர்கள் கார் சாலையில் உள்ள  பிள்ளையார் கோவிலை கடக்க, ‘பிள்ளையாரப்பா நீ மட்டும் நிம்மதியா இருந்துட்டு, என்னை மட்டும் சம்சாரம் என்னும் ஆழ்கடலில் தள்ளி விட்டுட்டியே. எனக்கு சுமார் நீச்சல் தான் தெரியும். ஆழ்கடல் நீச்சலுக்கு நான் எங்க போவேன்?’ என்று நொந்து கொண்டே காரை செலுத்தினான்.

    ‘ அப்பப்ப அமைதியா கூட இருப்பா போல…என்று அவள் பக்கம் திரும்ப, அவள் நெற்றி சற்று வீங்கி இருந்தது. அவள் தலையில் இருந்த கட்டை தாண்டியும், அந்த வீக்கம் தெரிந்தது.

    ‘இவங்க வீட்டில என்ன நினைப்பாங்களோ?’ என்ற எண்ணத்தோடு அவன் அவளை பார்க்க, “சாலையை பார்த்து ஓட்டுங்க. ஏற்கனவே என் மண்டையை உடைச்சிடீங்க. இப்ப வண்டியை எங்கயாவது விட்டுட்டு, என் கை காலையும் உடைச்சிராதீங்க.” அவள் கூற, அவன் சிரித்துக் கொண்டான்.

  ‘வீட்டில கேட்டா என்ன சொல்லுவா?’ என்ற எண்ணம் அவனுள் ஓட, அவன் மனதை படித்தவள் போல் நிச்சயம் கவின் பெயரை சொல்ல மாட்டேன். நீங்க தான் என் மண்டையை அடிச்சி உடைச்சிட்டிங்கன்னு சொல்லுவேன்.” என்று குறும்பு மின்ன உதட்டை சுழித்து கூறினாள் அபிநயா.

         “அச்சச்சோ…” என்று அவன் சோகமாக கூற, ‘பயந்துட்டாகளா?’ என்று அவன் முகத்தை பார்த்தாள் அபிநயா.

       “நீ இப்படி சொல்லுவன்னு தெரிஞ்சிருந்தா, கிடைச்ச சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உன் மண்டையை பலமா உடைச்சிருப்பனே.என்று அவன் முகம் அப்பட்டமாக சோகத்தை வெளிப்படுத்த, அவனை முறைத்தாள் அபிநயா.

    அவன் பெருங்குரலில் சிரிக்க, “திருநெல்வேலில அரிவாளை கம்மியா எடுப்பாக போல. உள்ள கிராமத்துக்கு வர வர தெரியும் சேதி. அரிவாளை எடுத்து ஒரே போடு போட்டிருவாக. ஜாக்கிரதை ரொம்ப சிரிக்க வேணாம். முத்து உதிந்திர போகுது.” அவள் கழுத்தை நொடிக்கவும் அவள் வீடு வரவும் நேரம் சரியாக இருந்தது.

      அபிநயா இறங்க எத்தனிக்க, “வாத்தியாரம்மா ஒரே நாளில் எனக்கு ஒரு பாடம் கத்து கொடுத்துடீங்க.” அவன் தீவிரமாக கூற, ‘சற்று முன் மிரட்டியதற்கு ஏதோ சொல்ல போறாகளோ?’ என்ற கேள்வியோடு அவனை பார்த்தாள் அபிநயா.

   “கல்யாணம் கஷ்டம்ன்னு மட்டும் தான்னு நினச்சேன். ஆனால், அதுல பல சுவாரசியமும் அடங்கி இருக்குமுன்னு எனக்கு இத்தனை நாள் தெரியாது. இதுவும் நல்லா தான் இருக்கு.” என்று கலகலப்பாக அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து கூறினான் ரகுநந்தன்.

      அபிநயா, அவனை பதட்டமாக பார்க்க, “பக்கத்துல ஜம்முனு ஒரு பொண்ணு…” அவன் நிறுத்த, ‘இவுக என்ன பேச போறாக?’ என்று அபிநயாவுக்குள் உதறல் எடுக்க, அவள் முகம் பதட்டத்தை வெளிப்படுத்தியது.

    ‘இவ்வளவு தான் வாத்தியரம்மா தைரியமா?’ அவனுள் உல்லாச மின்சாரம் பரவியது. “நான் அதை சொல்லலை. உன் கூட பேசுறது நல்லருக்குன்னு சொல்ல வந்தேன்.” என்று அவன் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு  கூறினான்.         

    ‘வாத்தியாரம்மாவை வம்பிழுக்கும் பொழுது ஒரு தனி சுகம் கிடைக்குதே. அது என்னவா இருக்கும்?’ என்ற எண்ணத்தோடு அவளை தொடர்ந்தான் ரகுநந்தன்.

      அபிநயாவின் தலையில் உள்ள காயம் அனைவரின் கண்ணில் பட்டாலும், மாப்பிள்ளை வீட்டின் முன் எதையும் கேட்க முடியாமல், மௌனித்தனர்.

         கவின் கொடூரமாக சேட்டை செய்து கொண்டிருந்தான். அவனை யாரும் கண்டிக்கவுமில்லை. ரகுநந்தன் தான் அவனை தோட்டத்திற்கு அழைத்து சென்றுவிட்டான்.

       அனைத்தையும் கொட்டி, முழக்கி குழந்தை செய்த அட்டகாசத்தை பார்த்து அனைவரும் மிரண்டு விட்டனர்.

    ‘ஆனால், குழந்தையை என்ன சொல்வது?’ அனைவரும் மனதிற்குள் நொந்து கொண்டனர்.

    பவானியம்மாள், ரேவதி குடும்பம் விருந்து முடிந்து கிளம்ப, ரகுநந்தன், அபிநயாவோடு அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு வருவதாக ஏற்பாடு.

        எல்லாரும் சென்றவுடன், “எப்படி அடிபட்டது?” என்று கேள்வி எழும்ப, அப்பொழுது தான் அனைவரையும் அனுப்பிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த ரகுநந்தனின் காதில் அந்த கேள்வி விழுந்தது.

    “புது இடமில்லை… தெரியாமல் விழுந்துட்டேன் அம்மா.” என்று அபிநயா, தன் தாயிடம் கூற, “பார்த்து வர கூடாதாம்மா?” என்று அவள் தந்தை ராமசாமி கேட்டார்.

    “ம்…” அபிநயா தலை அசைக்க,”அறிவில்லை… இப்படி விழுந்து தொலைச்சருகியே. உனக்கு பொறுமை இல்லைனு யாரவது சொல்லிறப் போறாக. இல்லைனா, நீ வந்த நேரம் சரி இல்லைன்னு சொல்லிட போறாக.” என்று பார்வதி மகளை திட்டினார்.

    “அவுக வீட்டில் அப்படி யாருக்கும் இதுவரைக்கும் யோசனை இல்லை. நீங்க சொல்லி கொடுத்தா தான் உண்டு.” என்று அபிநயா கூற,’இவள் பேசும் முறையே இது தான் போல. இன்டரெஸ்டிங்.சுவரின் மறுபக்கம் இருந்த நாற்காலில் அமர்ந்த ரகுநந்தன் புன்னகைத்து கொண்டான்.

   “அவுக நல்லா பார்த்து கிட்டாக அப்பா. உடனே, ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய்ட்டாக. அத்தையும், அவுகளும் வலிக்குதான்னு கேட்டாக. காலையில் கூட, தண்ணீர் படமா பார்த்துக்கோன்னு அக்கறையாக சொன்னாக.” என்று தன் தாய் தந்தையிடம் கூறினாள் அபிநயா.

            ரகுநந்தன் முகத்தில் ஓர் நிம்மதி பரவியது. எந்த சுமுகமான நிலைமையும் ஏற்படாத பொழுதும், அவர்கள் வீட்டை விட்டுக்கொடுக்காமல் பேசிய அபிநயாவின் மேல் அவன் மரியாதை கூடியது.

                         “நீ ஒரே பொண்ணு. உன் சந்தோசம் தான் முக்கியம்.” என்று அவர்கள் கூற, “நான் சந்தோஷமா இருப்பேன்.” என்று அபிநயா உறுதியாக தன் பெற்றோரிடம் கூறினாள்.

       அவன் மனத்தில் அவள் கேட்ட கேள்வி, ‘ஒருவேளை எனக்கு உங்களை பிடிக்கலைன்னா?’சட்டமிட்டு அமர்ந்து கொண்டது.

    ‘புரிஞ்சி சொன்னாளா? புரியாம சொன்னாளா?’ அவன் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தான்.

          “மாப்பிள்ளையும், நீயும் அப்படியே தோப்புக்கு போய்ட்டு வாங்க.” என்று அவள் தந்தை கூற, இருவரும் காலாற நடந்தனர்.

    அவன் மனதில், அவள் கேட்ட கேள்வி உழன்று கொண்டிருந்தது.

   “வாத்தியாரம்மா… டீச்சர்… மிஸ்…” என பல அழைப்புகளோடு, பலர் பேச, அவர்களுக்கு பதில் கூறிக்கொண்டே அவள் அவனோடு நடந்தாள்.

     ஆற்றை நெருங்கினர். சிறு சிறு பாறைகள். தென்னை மரம். சிலுசிலுவென்று காற்று.  சற்று உள்ளே செல்ல செல்ல, அங்கு அத்தனை ஜனம் இல்லை.

     கொஞ்சம் தனிமை கிடைத்தும், “இங்க உட்காருவோமா?” என்று அவன் கேட்க அபிநயா தலை அசைத்தாள்.

   “வாத்தியரமா…” என்று அவன் அழைக்க, “என்னை அபிநயான்னு கூப்பிடுங்க.” என்று கூற, “வாத்தியரம்மான்னு கூப்பிட பிடிசிருக்கு.” அந்த கூப்பிடவில் அழுத்தம் கொடுத்து கூறினான் ரகுநந்தன்.

    “எனக்கு பிடிக்கலை.” அவள் கூற, “எனக்கு பிடிச்சிருக்கு.” என்று அவன் ரசனையோடு கூறினான்.

    “இது உங்களுக்கு பிடிக்காத கல்யாணம்.” அவள் அழுத்தம் கொடுக்க, “போக போக பிடிச்சிரும்.” அவள் அழுத்தத்தில் அவன் ரசனை கூடியது.

     “எனக்கு பிடிக்கனுமில்லை.” என்று கூறி அவள் படக்கென்று எழ, ஆற்று பாறையில் அவள் சரேலென்று வழுக்க அவளை தாங்கி பிடித்தான் அவன்.

     அவன் பிடிமானத்தில் அவள். அவள் இதயம் தடக் தடக்கென்று வேகமாக துடித்தது.  அவள் விழிகள் அவனை நோக்க, அதில் ஏதோவொரு உணர்ச்சி. அவன் தன்னை சுதாரித்து கொண்டான். அவள் விலக எத்தனிக்க, “காலையில் ஒரு கேள்வி கேட்டியே? அதை இப்ப கேளு.” என்று அவன் அவள் பதட்டத்தை   அருகாமையை ரசித்தபடி கேட்டான்.

    “என்ன கேள்வி?” அவள் புரியாதது போல் நடித்து தலை குனிந்து கொள்ள, அவன் தன் தலையை குனிந்து, அவள் முகம் பார்த்து, “அப்புறம்…” என்று இழுத்தான்.

     “என்னை விடுங்க. இது கிரமாம். யாரவது பாத்திர போறாக.” என்று விலக எத்தனிக்க, அவன் பிடிமானம் இறுகியது.

   “நீ திரும்ப கேளு நான் பதில் சொல்லணும். அப்புறம் விடுறேன்.” என்று அவனும் உறுதியாக நின்றான்.

     “ஏன் அப்ப, பதில் தெரியலையா?” அவள் கேட்க, “இப்ப தெரிஞ்சிருச்சு.” அவன் கண்சிமிட்டி கூறினான்.

            கேட்டால் தான் விடுவேன்.” அவன் தன் நிலையில் உறுதியாக நின்றான்.

   ‘அது என்ன அவுகளுக்கு அவ்வளவு பிடிவாதம்?’ என்ற எண்ணத்தோடு அவளும் பிடிவாதமாக நின்றாள்.

                   ‘யார் அவர்கள் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வார்கள்?’ என்று ஆற்று நீர் சலசலத்து கொண்டது.

       

    பொழுதுகள் விடியும்…