birunthaavanam-18

Birunthaavanam-69223e05

பிருந்தாவனம் – 18

கிருஷின் தாய் கேட்ட கேள்வியில் அவள் மனம் துள்ளாட்டம் போட்டது. 

       ‘உனக்கு வைக்கிறேன் வேட்டு’ மாதங்கியின் மனம் தன் கொள்கை என்னும் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு கொண்டு அமைதி காக்க, அவள் அறிவு கணக்கிட ஆரம்பித்தது.

  மாதங்கியின் சற்று நீளமான மௌனம், கிருஷின் கண்களில் கோபமாக மாறி கொண்டிருக்க… அவன் கண்கள் ரௌத்திரத்தை கரு விழிகளில் எடுத்து கொண்டு, அரவிந்தை பார்த்தது.

‘கிருஷ் கோபம் வந்தால், எதுவும் செய்வான்.’ நிதானமாக மாதங்கியின் கண்கள் கிருஷின் தந்தையை நோக்கி சென்றது.

வேணுகோபாலனின் கண்கள் அவர் விருப்பமின்மையை காட்டியது. ‘இவர் தான் அன்னைக்கு என்னை கடத்த சொன்னது. ஆனால், நிரூபணம் இல்லை.’

அந்த வீட்டு பெண்களை மாதங்கியால் கணிக்க முடியவில்லை. அவர் கண்களில் கனிவு இருந்தது. ‘ஆனால்?’ மாதங்கியின் மனதில் சந்தேகம் எழுந்தது.

கிருஷின் தாத்தா சிரித்த முகமாக இருந்தார். ‘ஒரு காலத்தில் இவர் பலரை அடக்கி ஆண்ட, பெரும் அரசியல் புள்ளி.’ இவர்கள் குடும்பத்தை பற்றி பேசும் பொழுது, அரவிந்தும், முகுந்தனும் சொன்ன வார்த்தை அவள் காதில் வந்து அலை மோதியது.

‘இப்ப வேண்டாமுன்னு சொன்னா, கிருஷ் என்ன வேணும்ன்னாலும் செய்வான். என் திட்டம் இப்படி இருக்க கூடாது. நான் பாதுகாப்பா தான் என் செயலை செய்யணும். கிருஷின் செய்கையை விட என் செய்கை பயங்கரமா இருக்கும்’ மாதங்கி சுய ஆராய்ச்சியில் முழுதாக இறங்கி இருந்தாள்.

“பொண்ணுக்கு வெட்கமா? பையனை பிடிச்சிருக்கான்னு கேட்டோம்” பாட்டி, கலகலவென்று சிரிக்க, ‘பையனை பிடிக்காமல் என்ன? கல்யாணம் தான் பிடிக்கலை’ அவள் நிமிர்ந்து பார்க்க, “எங்களுக்கு முழு சம்மதம்” அங்கு மரகதவல்லியும் சக்திபாலனும் முழு சம்மதத்தை கூறி பேச்சை முடித்தனர்.

கிருஷ்க்கு மாதங்கியின் மௌனம் சற்று கோபம் தான். அவளிடம் விடை பெறாமலே அங்கிருந்து கிளம்பினான்.

பெரிதாக நிச்சயதார்த்தம் வேண்டாம் நேரடியாக கல்யாணம் என்று முடிவு செய்திருந்தனர். திருமண வேலைகள் படுவேகமாக நடக்க ஆரம்பித்தது.

பிருந்தா மாதங்கிக்கு அழைத்திருந்தாள்.

“இல்லை இல்லைனு சொல்லிட்டு சம்மதம் சொல்லிட கேடி” தன் தோழியை  கேலி செய்தாள் பிருந்தா.

“பிருந்தா இந்த கல்யாணம் நடக்காது” மாதங்கி கூற, “மாதங்கி, உனக்கு எப்பப்பாரு விளையாட்டு தானா?” பிருந்தா கேலியில் இறங்கினாள்.

“இல்லை மாதங்கி… அது வந்து… உன் அண்ணன்…” என்று மாதங்கி ஆரம்பிக்க அவளை இடைபுகுந்து தடுத்து நிறுத்தினாள் பிருந்தா.

“என்ன உன் அண்ணன் கூட குடித்தனம் நடத்த மாட்டேன்னு சொல்ல போறியா? முதலில் காதல் இல்லைன்னு சொன்ன. இப்ப கல்யாணம் இல்லைனு சொல்ற… அப்புறம் புள்ளை குட்டி இல்லைன்னு சொல்ல போறியா?” பிருந்தா தன் தோழியை மடக்கினாள்.

“புள்ளை குட்டியா?” மாதங்கி வாயை பிளக்க, “பின்ன கல்யாணத்துக்கு அப்புறம் புள்ளை குட்டி தானே? உன் பிள்ளை என்னை அத்தைன்னு கூப்பிடும் தானே?” பிருந்தா சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள்.

‘என் வாழ்க்கை, கிருஷுக்கு பிள்ளை குட்டி பெத்து போடவா? கண்ராவி… என் படிப்பு, என் கனவு… நான் வேலைக்கு போகணும்… கை நிறைய சம்பாதிக்கணும்… நான் ஒரு சுதந்திர பறவையா சுத்தணும்… காதலையே நான் யோசிக்கலை. கல்யாணமே என் கழுத்தை நெறிக்குது. இதுல புள்ளை குட்டியா?’ மாதங்கியின் மனம், “ஓ…” என்று அலறியது. அந்த சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்டது.

“பிருந்தா என் ஆசை, என் கனவு எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசினா எப்படி?” மாதங்கி கேட்க, “அட போடி…. இன்னைக்கு கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெத்துக்கிட்ட பாதி பேர் உன்னை மாதிரி பேசினவங்க தான்.” என்று பிருந்தா தன் தோழியிடம் நிதர்சனத்தை பேசினாள்.

பிருந்தாவின் மனதில், ‘என் தோழி என் சொந்தமாகிறாள்!’ என்ற பிரமிப்பு மட்டும் தான்.

“எல்லாரும் நானும் ஒன்னில்லை பிருந்தா” மாதங்கி பட்டென்று கூற, “ஹெலோ மேடம் நான் உன் நாத்தனார். மரியாதை… மரியாதை…” பிருந்தா அவளிடம் கேலி போல் மிரட்ட, “நான் சொல்றதை கேட்கறியா? இந்த கல்யாணம்…” என்று மாதங்கி பேச ஆரம்பித்தாள்.

“காதல் இல்லை. கல்யாணம் இல்லை. இது தானே சொல்ல போற? இந்த பேச்சை கேட்க எனக்கு வாய்ப்பே இல்லை. கல்யாணத்துக்கு பர்ச்சேஸ் பண்ணனும். என் அம்மா, மாமா இரண்டு பெரும் நான் கல்யாணத்துக்கு வரதை தடுக்க நிறைய குட்டையை கிளப்புவாங்க. நான் அவங்களை சமாதானம் செய்யணும்.நிறைய வேலை இருக்கு என் செல்ல அண்ணியாரே! வைக்கிறேன். பை… பை… பை…” என்று மாதங்கி கூற வருவதை கேட்கமாலே தன் பேச்சை முடித்துவிட்டாள் பிருந்தா.

‘கேட்டிருந்தால்? அனைவரின் வாழ்விலும் ஏதேனும் மாற்றம் வந்திருக்குமோ? நல்ல விதமாக!’ என்று பிருந்தாவின் அலைபேசியும் மாதங்கியின் அலைபேசியும் ஒரு சேர எண்ணி கொண்டது.

‘இன்னும் நான் கிருஷ் அண்ணன் கிட்ட நல்லா பேசலை. இந்த கல்யாணத்திலிருந்து எனக்கு எல்லார் கூட பேசவும் வாய்ப்பு கிடைக்கும். எல்லாம் சரியாகும்’ பிருந்தாவின் மனம் கொஞ்சம் சுயநலமாகவும் யோசித்து கொண்டது.

பிருந்தா சந்தோஷமாக சுற்றி கொண்டிருக்க, அவள் தாய்மாமா தில்லைநாயகம் வீட்டிற்கு வந்திருந்தார்.

“என்ன ருக்மணி? பிருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கா?” என்று தன் தங்கையிடம் கேட்டார்.

“அவுக வீட்டு பையனுக்கு கல்யாணம்” ருக்மணி கழுத்தை நொடித்தார். “ஏன் இவள் கல்யாணத்துக்கு போக போறாளா?” என்று தில்லைநாயகம் கோபமாக கேட்டார்.

“பொண்ணு இவளுக்கு ரொம்ப ஃபிரண்டு” என்று ருக்மணி கடுப்பாக கூற, “யாரு நாகராஜன் பொண்ணு இவளுக்கு ஃபிரண்டா? எப்படி?” என்று தில்லைநாயகம் கண்களை சுருக்கினார்.

“உனக்கு விஷயமே தெரியாதா? கிருஷ் இந்த பொண்ணை  லவ் பண்ணிருக்கான். பொண்ணு  பெயர் மாதங்கி. அந்த பொண்ணு நம்ம பிருந்தா மாதிரி. நல்ல தங்கமான பொண்ணு.” என்று ருக்மணி கூற, “உன்னை யார் அந்த பொண்ணுக்கு செர்டிபிகட் கேட்டா?” வார்த்தைகளை கடித்து துப்பினார் தில்லைநாயகம்.

“உனக்கு கெட்டிக்காரத்தனமில்லை. உன்னை அவங்க வீட்டில் கட்டி கொடுத்ததே எனக்கு ஒரு அரசியில் சீட்டு கிடைக்குமுன்னு தான். அதுக்கு தான் உனக்கு முடியலை. உன் மாப்பிள்ளைக்காவது வாங்கி கொடுப்ப… அதுல  நான் கொஞ்சம் வாழலாமுன்னு பார்த்தா, அவங்க உன்னை வெளிய அடிச்சிப்பத்திட்டாங்க. உன் மாப்பிளையை இன்னும் முழுசா உனக்கு கைக்குள்ள போட தெரியலை. இப்ப, அவங்க வீட்டு பையனுக்கு நீ பொண்ணு பார்த்திட்டு இருக்க” தில்லைநாயகம் கடுப்பாக பேசினார்.

“அண்ணா…” தன் அண்ணனின் கூற்றில் உள்ள உண்மை அவரை சுட, ருக்மணி தடுமாறினார்.

“இந்த காதல் கல்யாணத்தில் நிச்சயம் யாருக்காவது அதிருப்தி இருக்கும். நாம, அதை கண்டுபிடிக்கணும். அந்த வீட்டு அரசியல் வாழ்க்கையை அழிச்சி, எதிர் கட்சியில் இடம்பிடிக்கணும். உன் புருஷனை வைத்து தான் இதை செய்யணும். அவருக்கு தான் சமுதாயத்தில் மரியாதை அதிகம்.” தில்லைநாயகம் திட்டமிட, ருக்மணி அவருக்கு சம்மதமாக தலை அசைத்தார்.

அதே நேரம் சந்தியாவின் வீட்டில்.

சந்தியாவின் அறையில் அவள் கதவு தாழிடப்பட்டிருந்தது.

சந்தியா தன் அலைபேசியில் மாதங்கியின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

‘அப்படி என்ன பேரழகி இவள்? கன்னம் ரெண்டும் பொம்முபொம்முனு இருக்கு. என்னை மாதிரி ஒரு நல்ல ஸ்ட்ரக்ச்சர் கூட இல்லை. நல்ல வண்ணமா இருக்கா. சில போஸ் குண்டுன்னு கூட சொல்லாலாம்.’ தன் மெல்லிய இடையை தடவி கொண்டாள் சந்தியா.

‘தலை முடியை கூட நல்லா சீவலை. முடி பப்ரப்பன்னு நிக்குது. என்ன முழி இது? அந்த பார்வையில் ஒரு திமிர் இருக்கு? இவ என்னை விட அப்படி என்ன உசத்தின்னு இந்த கிருஷை இவளை லவ் பண்ணினான்? என்னை வேண்டாமுன்னு சொல்லிட்டு வேறவொரு கல்யாணமா? இது அப்படி எளிதா நடந்திருமா?’ சந்தியாவின் இதழ்களில் ஒரு நமட்டு சிரிப்பு வந்தமர்ந்து.

சந்தியாவின் அறையின் கதவுக்கு அந்த பக்கம்.

‘இந்த கல்யாணம் இல்லைனு சொன்னதிலிருந்து சந்தியா ரொம்ப அப்செட்டா இருக்கா. நல்லா சாப்பிடுறதில்லை. கலகலன்னு பேச மாட்டேங்குறா? இந்த வேணுகோபாலன், தன் பையன் கல்யாணத்தில் அவன் அரசியல் புத்தியை காட்டிட்டான். நான் இவர்களை சும்மா விட மாட்டேன்.’ நாகராஜன் கோபமாக தன் அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.

அந்த பெண்பார்க்கும் சம்பவத்திற்கு பின் கிருஷ் மாதங்கியை அழைத்து பேசவே இல்லை. இன்று, திருமணத்திற்கு உடை எடுக்க, இரு குடும்பத்தாரும் செல்வதாக ஏற்பாடு.

 கிருஷ் கிளம்பியிருந்தான். மாதங்கியை பார்க்கும் பேராவல் அவன் மனதில் எழுந்தது. அதே நேரத்தில், அவள் மீது கோபமும் இருந்தது.

தன் அறையில் அவள் வளையல்களை எடுத்து கொண்டான். அதை அவன் அசைக்க, அந்த வளையோசை அவன் இதயத்தை வருடியது.

‘இன்னும் கொஞ்சம் நாளில் வளையோடு அவளோசையும் கேட்கும்.’ அவன் மனதில் நிம்மதி பரவியது.

“ஏன் மாதங்கி, என்னை கல்யாணம் செய்து கொள்ள சரின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா உன் கெளரவம் குறைந்து விடுமா? நான் உன்கிட்ட ரொம்ப இறங்கி போறதால உன் பிடிவாதம் அதிகம் ஆகுதா? அது தான் நான் உன்கிட்ட அப்புறம் பேசவே இல்லை. இந்த கல்யாணம் நடக்கும். நடத்த வேண்டிய கட்டாயம் எனக்கு. இல்லைனா, எனக்கு வேறு யார் கூடவாது கல்யாணம் நடந்திரும். என்னால் வேற யாரையாவது கல்யாணம் செய்துக்க முடியுமா?” அவன் கொஞ்சம் கோபத்திலும் அதீத காதலிலும் புலம்பி கொண்டிருந்தான்.

மாதங்கி அவள் அறையில்!

  கிருஷ் கொடுத்த கிளி பொம்மையை பார்த்து கொண்டிருந்தாள். மிகவும் சின்னதாக இருந்தது. ஆனால், அந்த கிளிகள் செய்ய சேட்டைகள் சற்று அதிகமாகத்தான் இருந்தது.

இவள் என்ன பேசினாலும், அந்த கிளி பொம்மை பேசியது. கிளி பொம்மை சற்று அதிகமாக பேசினால், அந்த ஆண் கிளி பெண் கிளியை கொஞ்ச ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆண் கிளி ஒவ்வொரு முறையும் அந்த பெண் கிளியை தீண்டுகையில், அவளுக்கு கிருஷ் அவளை தீண்டுவது போலவே இருந்தது.

பொம்மையை பார்த்தபடி, “சீனியர்க்கு ரொம்ப தான் நக்கலு” மாதங்கி பற்களுக்கு இடையே நறநறத்து, அந்த ஆண் கிளியின் மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்டினாள்.

“மாதங்கி  நேரம் ஆச்சு வா” மரகதவள்ளி சத்தம் கொடுக்க, கீழே இறங்கி வந்தாள் மாதங்கி.

“அரவிந்த் நீ வரலியா?” என்று சக்திபாலன் கேட்க, “இல்லை அப்பா. எனக்கு வேலை இருக்கு.” அரவிந்த் மறுத்துவிட்டான்.

இந்த திருமண பேச்சிற்கு பின், அரவிந்த் தங்கையிடம் இந்த திருமணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மற்ற விஷயங்கள் எல்லாம் சகஜமாக பேசிக்கொணாடன்.

 ‘அண்ணனுக்கு வருத்தமா? கோபமா? இல்லை பிடித்தமின்மையா?’ மாதங்கி தனக்கு தானே கேட்டுக்கொண்டாள்.

அரவிந்த் கிளம்புமுன், மாதங்கி அருகே வந்தான். அவள் தலை கோதினான்.

“பத்திரமா போயிட்டு வாங்க. உங்க பிடிச்சதெல்லாம் வாங்கிக்கோ” என்று அவன் கூற, “சரி அண்ணா.” சம்மதமாக தலை அசைத்தாள் மாதங்கி.

அனைவரும் கடைக்கு சென்றனர். ‘நான் இன்னைக்கு மாதங்கியை தொந்தரவு செய்ய கூடாது உறுதிமொழி எடுத்து கொண்டான்.’

அப்பொழுது இரு ஜோடி கண்கள் இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தது.

கடையில் மரகதவள்ளி, ரங்கம்மாள், வேதநாயகி  சேலையை பலவிதமாக புரட்ட, கிருஷின் கண்களோ தன்னவளை பார்வையாலே தனதாக்கி கொண்டிருந்தது.

மாதங்கி மறந்தும் கிருஷின் பக்கம் திரும்பவில்லை. அவள் காட்டிய ஒதுக்கத்தில் கிருஷின் பொறுமை காற்றோடு பறக்க ஆரம்பித்தது.

‘அப்படி என்ன அவளுக்கு திமிர்?’ அவன் காதல் பார்வை கோபப்பார்வையாக மாறி கொண்டிருந்தது.

சேலை எடுப்பதிலும் அவள் ஆர்வம் காட்டவில்லை. “நான் சரின்னு சொன்னா, அவளுக்கு பிடிக்கும்” மரகதவல்லி சப்பை கட்டுக்கட்டினார்.

“மாதங்கி,உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” தன் மகளை சந்தேக பார்வையோடு கேட்டார்.

‘அம்மாவிடம் சொல்லுவோமா?’ அவள் மனம் ஒரு நொடி நின்று துடித்தது.

‘சொன்னால் மட்டும்?’  அவள் அறிவும் மனமும் ஒன்று போல் அவள் முன் கேள்வியாக நின்றது.

“அப்படி எல்லாம் இல்லை அம்மா. நான் என்னத்த செலக்ட் பண்ண?” சூழ்நிலையை சரி செய்தாள்.

‘கொஞ்சம் கூட என் கிட்ட வந்து பேசமாட்டேங்குறா. வீட்டில் எல்லாரும் என்ன நினைப்பாங்க? திமிர்…. திமிர்… அந்த திமிர் தான் எனக்கு பிடித்தும் தொலைச்சிருக்கு.’ மாதங்கியை கோபம் கலந்த காதலோடு பார்த்தான் கிருஷ்.

‘இந்த பாழாய் போன காதல், கோபத்திலும் வந்து தொலைக்குமா?’ அவன் தன்னை தானே நிந்தித்து கொண்டான்.

“நீங்க இரெண்டு பேரும் தனியா ஷாப்பிங் பண்ணறீங்களா?” தன் பேரனின் பார்வையை படித்தபடி பாட்டி கேட்டார்.

“இப்ப வேணாம் பாட்டி. நீங்க ஷாப்பிங் முடிங்க. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தனியா ஷாப்பிங் பண்றோம். நான் மாதங்கியை வீட்டில் கொண்டு வந்து விடுறேன். உங்களுக்கு ஓகே தானே அத்தை. கூட்டிட்டு போகலாம் தானே மாமா?” என்று மாதங்கியை பார்க்கும் முன் எடுத்து கொண்ட தீர்மானத்தை மறந்து, மாதங்கியை பார்த்து நமட்டு சிரிப்போடு தன் வருங்கால மாமியார் மாமனாரிடம் பதவிசமாக அனுமதி கேட்டான் கிருஷ்.

“அதுக்கென்ன மாப்பிள்ளை?” ஒருசேர அவர்கள் சம்மதம் தெரிவிக்க, அனைவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு கிளம்பினர்.

அனைவரும் கிளம்ப, “காருக்கு போலாமா மாதங்கி?” என்று கிருஷ் கேட்க, ‘மறுப்பு தெரிவித்து பயனில்லை’ என்ற எண்ணத்தோடு மாதங்கி சம்மதமாக தலை அசைத்தாள்.

அந்த இரு ஜோடி கண்கள், இப்பொழுது மற்ற அனைவரையும் விடுத்து இவரக்ளை கண்காணிக்க ஆரம்பித்தது.

கிருஷ், மாதங்கி இருவரும்  பார்க்கிங் நோக்கி செல்ல, மற்ற இருவரும் அவர்களை தொடர்ந்தனர். இருவரும் பைக்கை எடுத்து கொண்டு இவர்களுக்காக காத்திருந்தனர்.

“பொண்ணை ஸ்பாட்லையே போட்டு தள்ளறோம். பழியை அவன் மேல போடுறோம். இது தான் நம்ம பாஸ் சொன்ன திட்டம்” ஒருவன் மற்றோருவன் காதில் கிசுகிசுக்க, மற்றோருவன் தலை அசைத்து கொண்டான்.

“உங்க அண்ணன் வரலையா?” கிருஷ் காரின் கதவை அவளுக்காக திறந்து விட்டபடியே கேட்டான்.

“அண்ணனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.” அவள் மிடுக்காக கூற, “அது சரி தங்கை கல்யாணம். வேலை இருக்கத்தான் செய்யும்” அவன் புன்னகையோடு மறுபக்கம் ஏறி அமர்ந்தான்.

“எங்க போகணும்?” அவன் கேட்க, அவள் ஒரு கடை பெயரை சொல்ல, “அங்க வேண்டாம் கூட்டமா இருக்கும்.” அவன் மறுப்பு தெரிவித்தான்.

“இந்த கல்யாணம் நடக்காது. நான் அடுத்த மாசம் மேல படிக்க போறேன். அதுக்கு  டிரஸ் வாங்கணும். அப்புறம் கொஞ்சம் புக்ஸ் வாங்கணும்.” என்று அவள் கூற, “மாதங்கி…” அவன் கர்ஜித்தான்.

“நடக்காத கல்யாணத்துக்கு ஏற்கனவே ரொம்ப நேரம் வேஸ்ட் பண்ணியாச்சு. பணமும் வேஸ்ட் பண்ணியாச்சு. இனி நடக்க போற வேலைக்கு டிரஸ் எடுப்போம். செலவு பண்ணுவோம்.” அவள் கறாராக கூறினாள்.

“சரி, நீ சொல்ற கடைக்கு போறோம். டிரஸ் வாங்குறோம். நீ அடுத்த மாசம் படிக்க போ. இடையில் நம்ம கல்யாணமும் நடக்கும்” அவன் சமரசம் பேசியபடி அவள் சீட் பெல்ட்டை எட்டி அவன் மாட்ட, “ஏய்….” அலறினாள் அவள்.

“எதுக்கு இப்படி கத்துற?” அவன் அவள் முக வடிவை அருகே இருந்து ரசித்தப்படி கேட்க, “நீங்க சொன்னா நான் சீட் பெல்ட் மாட்ட போறேன். நீங்க தான் மாட்டி விடணுமா?” அவள் சிடுசிடுத்தாள்.

“நான் சொன்னால் நீ தான் கேட்க மாட்டெங்குறியே?” அவன் வாகாக அவள் சுவாசத்தை ரசித்தபடி அவள் அருகே சாய்ந்தபடிக் கேட்டான்.

‘நான் எங்க சீட் பெல்ட் போட மாட்டேன்னு சொன்னேன்.’ அவள் அவனை புரியாமல் பார்க்க, “நான் லவ் பண்ண சொன்னேன். நீ பண்ணலை. இப்ப கல்யாணம் பண்ணிக்க சொல்றதையும் கேட்க மாட்டேங்குற. மிரட்ட தான் வேண்டியதிருக்கு. அது தான் நான்  உன்னை சீட் பெல்ட் போட சொன்னாலும், நீ நான் சொல்றதை கேட்க மாட்ட. அது தான் நானே போட்டுட்டேன்.” அவன் சிரியாமல் சோகம் போல் கூறினான்.

“என்ன லொள்ளா?” அவள் கேட்க, “இல்லை லவ்” என்றான் அவள் கன்னம் தட்டி.

அவள் கன்னங்களை அவன் தீண்ட, அவனுக்கு அவன் கொடுத்த காதல் பரிசு நினைவு வர அவன் முகத்தில் ஓர் அழகான புன்னகை வந்து அமர்ந்தது.

இவர்கள் காரை கண்காணித்து கொண்டிருந்த இருவரில் ஒருவன், “இவங்க காரில் என்ன பன்றாங்க? பேசாம இங்கயே போட்டு தள்ளிருவோமா?” என்று அவன் கையுறை அணிந்திருந்த கையிலிருந்த கத்தியை துணி கொண்டு தடவினான்.

காருக்குள் மெல்லிய அமைதி நிலவியது. மெலிதாய்  ஓர் இன்னிசை ஒலித்து கொண்டிருந்தது.

“நான் அன்னைக்கு உன்கிட்ட காதல் சொன்ன முறை தப்பா இருக்கலாம். ஆனால், என் அன்பு உண்மை. லவ் யு மாது.” அவன் குரல் கரகரத்தது.

அவன் குரல் அவளை ஏதேதோ செய்தது. ‘இது தான் காதலா?’ அவளுக்கு தெரியவில்லை.

அங்கு மௌனம் நிலவ, அவன் அவள் முகத்தை பார்த்தான். அதில் கர்வம் இல்லை. அதில் பிடிவாதம் இல்லை. அதில் திமிர் இல்லை. ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு. அவள் கண்களும் காதலை பிரதிபலித்து விடாதா என்ற எதிர்பார்ப்பு. அவள் இதழ்கள் காதலை சொல்லி விடாதா என்ற ஆசை.

அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க, “எனக்கு காதல் வரலை. எனக்கு அப்படி எதுவும் தோணலை.” அவள் குரலில் கரகரப்பு.

“வரும்… இப்ப நீ சொல்ற கடைக்கு போறோம். நீ கேட்டதெல்லாம் வாங்குறோம்.” அவன் அழுத்தமாக ஆரம்பித்து உல்லாசமாக முடித்தான்.

அவர்கள் கடைக்கு செல்ல, “இது என்ன இந்த கடைக்கு போறாய்ங்க. ரொம்ப கூட்டமா இருக்குமே?” ஒருவன் கூற, “கூட்டத்தில் யாருன்னு தெரியாது. கமெராவில் முகம் தெரியாத மாதிரி போறோம். குத்துறோம். கொல்றோம் ” என்று கூறி கொண்டே இருவரும் அவர்களை தொடர்ந்தனர்.

கிருஷ், மாதங்கி இருவரும் மின்தூக்கியில் நுழைய கூட்டம் அவர்களை நெருக்கியது.

மெல்ல, மெல்ல நகர்ந்து அவள் அவனை நெருங்கியிருந்தாள். இல்லை அவன் மேல் சாய்ந்திருந்தாள்.  மற்ற இருவரும் அவர்கள் அருகே கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க முயற்சித்தனர்.

அவள் கேசம் அவனை தீண்ட அவள் வாசத்தில் அவன் அவள் வசமாகிருந்தான். காதலில் தீவிரம் காட்டும் கிருஷ், இன்று காதலின் ரசனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான்.

அவள் ஏதுவுமறியாமல் நிற்க,”இந்த கூட்டம் ரொம்ப நல்லாருக்கு மாது. இதுக்கு தான் இந்த கடைக்கு போலாமுன்னு சொன்னியா?” அவன் இதழ்கள் அவள் செவியை தீண்டியதா? இல்லை அவன் குரல் அவள் செவிகளை தீண்டியதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவன் கேலி அவள் செவியை தீண்டியது.

கத்தியோடு இருவரும், அவர்களை கொஞ்சம் நெருங்கி இருந்தனர்.

அவள் அவன் கேலியில் துள்ளி குதித்து விலக, அவன் கைகள் அவளை இடையோடு அணைத்தது.

அவன் சுவாசக்காற்று, அவள் கழுத்தை தீண்ட, “எல்லாரும் இருக்காங்க” அவள் அழுத்தமாக கூற, “அது  தான் பிரச்சனையா? அப்ப, கல்யாணத்துக்கு சம்மதமா?” அவன் குரல் காதலை தாண்டி அவளிடம் உரிமை கொண்டாடியது.

கத்தி வைத்திருப்பவனிடம், மற்றோருவன், ‘விஷம் தடவியாச்சா?’ என்று கண்களால் கேட்டான். கத்தி வைத்திருப்பவனோ, ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

கிருஷின் செய்கை மாதங்கிக்கு சொல்லில்வடிக்க முடியாத உணர்வை கொடுத்தது.  அவன் மார்பில் அவள் சாய்ந்திருக்க, அவன் அவளை வாகாக கைவளைவுக்குள் நிறுத்தி இருந்தான். மற்றவர்களுக்கு, அவர்கள் கூட்டத்திற்காக நெருங்கி நிற்பது போல் தெரிந்தாலும், உண்மை நிலை அறிந்த மாதங்கி வெட்கத்தில் நெளித்தாள்.

அவள் கேசத்தின் வாசம் அவனை மயக்க, “பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா மாது?” நேற்று தான் திருவிளையாடல் பார்த்தவன் போல் காதல் பிதற்றலாய் தீவிரமாக சந்தேகம் கேட்க, அவன் குரல் அவன் தீண்டல் அவன் அருகாமை இவை தரும் தவிப்பு என திண்டாடிய மாதங்கி பற்களை கடித்து, “கையை எடுங்க…” கர்ஜித்தாள்.

“கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. நான் லிஃப்டில் அந்த ஓரத்திற்கு போயிடுறேன்.” அவன் செய்கையில் சிவக்கும் அவள் முகம் பார்த்து ரசித்து அவன் கூற, ‘அவள் வயிற்றில் கத்தியை சொருகு…’  மற்றோருவன் கண்களால் செய்கை காட்டினான்.

“எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை… அதுவும் நீ தொடுறது பிடிக்கலை… பிடிக்கலை பிடிக்கலை…” அவள் கண்கள் கண்ணீரை, கோபத்தை எடுத்து கொள்ள, அவன் கைகள் சரேலென்று விலக, கையுறை அணிந்தவன் கத்தியை   மாதங்கியின் வயிற்றில் சொருக அந்த கத்தி அவள் வயிற்றை நெருங்கி இருந்தது.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…