VVO9

வெல்லும் வரை ஓயாதே!

வெல்! ஓயாதே – 9

 

சசிகலா கூறியதைக் கேட்டவுடனே, தனது தமையனுக்கு அழைத்து விசயத்தைக் கூறியிருந்தான் பூபேந்திரன்.

 

அரசியல் வாழ்க்கையில் சில அல்லக்கைகளுடன் அமோகமாக இருந்த நாகேந்திரன், தீனதயாளன் முன்பு தந்திருந்த பெண்ணின் புகைப்படத்தோடு அந்தப் பகுதியில் முதலில் விசாரிக்கக் கூறியிருந்தான்(ர்).

 

புதுக்கோட்டையில் இருந்து கிளம்பியவள், தனது பூர்வீக கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரில் வாழத் துவங்கியது தெரியாமல், திருச்சி, கோயம்பத்தூர், சென்னை என பல இடங்களில் சல்லடைபோட்டு தேடச் செய்த மடத்தனத்தை எண்ணி தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது நாகேந்திரனுக்கு.

 

கிராமத்தில் தேடுவது எளிது என்றாலும், பெண் உண்மையில் அங்குதான் இருக்கிறாளா அல்லது வேறு எங்கேனும் இருந்து கொண்டு பொய்யான தகவலை சசிகலாவிடம் தந்திருந்தால் என யோசித்தவன், நெருடலை சரி செய்துவிடும் நோக்கில் உடனே ஆட்களை ஏற்பாடு செய்து அதற்கன பணிகளைச் செய்ய முடுக்கி விட்டிருந்தான்.

 

அதிதீ கூறியது பொய் என்பதும், அவள் தங்கியிருப்பது வெளியூரில் அல்ல என்பதும், அன்று மாலைக்குள் திண்ணமாகியிருந்தது.

 

அந்த ஊரில் மிகவும் குறைவான எண்ணிக்கையில், ஒரு ஆணுடன் வந்து கடைகளில் சாமான் வாங்கும்போது புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பார்த்ததாக கடை வைத்திருப்பவர்கள் கூறிட, மேற்கொண்டு நம்பிக்கையோடு ஊருக்குள் விசாரிக்கத் துவங்கியிருந்தனர்.

 

அதேநேரம், நாகேந்திரனுக்கு தங்களின் பூர்வீக ஊரில் இருந்த ஏதோ பெண்ணுக்கு பிரச்சனை என்று வந்த அழைப்பை ஆரம்பத்தில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

அந்தப் பெண்ணை, தங்களது வீட்டில் அவள் கணவன் வரும்வரை தங்க வைக்க அனுமதி வழங்கியிருந்தான்.

 

ஒரே இடத்தில் தங்களால் அதிதீயைத் தேடும் படலமும், அதே ஊரில் ஏதோ ஒரு பெண்ணுக்கு எழுந்த பிரச்சனையை முன்னிட்டு அவ்வூர் மக்கள் தன்னை உதவிக்கு நாடிய தருணமும் மனதில் லேசான சந்தேகத்தை உண்டாக்கியிருந்தது.

 

திடீரென மனதில் எழுந்த சந்தேகத்தால், தங்களின் கிராம வீட்டில் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றிருந்த பெண்ணை அங்கிருந்த வேலைக்காரப் பெண்ணிடம்

 

“நம்ம வீட்டுல கொண்டு வந்து இன்னிக்கு விட்டுட்டுப் போனாங்கள்ல அந்தப் பொண்ணோட போட்டோவ மொபைல்ல என் நம்பருக்கு போட்டு விடும்மா”, என அதிதீயின் புகைப்படத்தை அனுப்பக் கூறினான்.

 

அமர்ந்த நிலையில் யோசனையோடு இருந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததும், தனது தம்பி பூபேந்திரனுக்கு அனுப்பி, இவள்தான் உனக்குத் பார்த்த பெண்ணா எனக்கேட்டு அனுப்பியிருந்தான் நாகேந்திரன்.

 

தந்தையின் வீட்டில் இருந்ததைவிட, தற்போது சற்று மெலிந்து, நிறம் குறைந்து காணப்பட்டாள் அதிதீ.

 

தம்பிக்கு பார்த்திருந்த பெண்ணை கருத்தினுள் கொண்டு வராததால், மொபைலில் வந்திருந்த படத்தைக் கண்டதும் அடையாளம் தெரியவில்லை நாகேந்திரனுக்கு.

 

தம்பியிடமிருந்து உடனடியாக பதில் வராமல்போகவே, வெளியூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவன், புதுக்கோட்டை வந்தபின் அதைப் பார்க்கலாம் எனத் தீர்மானித்திருந்தான்.

 

ஞாயிறு அன்று அவர்களின் கட்சித் தலைவர் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தவனால், எங்கும் நகர முடியவில்லை.

////////////////

 

பெண் வீட்டைவிட்டுச் சென்றது அறிந்தது முதலே தீனதயாளனை சொற்களால் குதறியும், குடைந்தபடியும் இருந்திருந்தான் நாகேந்திரன். 

 

தீனதயாளனும், பூபேந்திரனுடனான மகளின் திருமண ஏற்பாடு விசயம் எவ்வாறு அதிதீக்கு தெரிய வந்தது என்பது தெரியாமல் பெண் கிளம்பிச் சென்றதில் பதறியிருந்தார். 

 

பதற்றம் தீர்க்க, வார்த்தைகளாலும், தனது பெல்ட்டாலும் கௌசல்யாவைத் துன்புறுத்தி அதனைக் குறைக்க முற்பட்டார் தீனதயாளன்.

 

இருப்பினும் பெண் சென்றது இந்தளவு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று எண்ணியிருக்கவில்லை.

 

அதிதீக்குத் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்து, பிறகு ரிசப்ஷனை மிகவும் சிறப்பாக வைத்துக் கொள்ளலாம் என தனக்குள் எண்ணி மேற்படி விசயத்தில் இறங்கியிருந்தார் தீனதயாளன்.

 

அதனைக் காட்டிலும், வருபவன் சோதா மாப்பிள்ளையாக இருந்தால், அதிதீயையோ, நந்தாவையோ சமாளிக்க இயலாது என்றே, முரடர்கள் என்றறிருந்திருந்தும் துணிந்து பூபேந்திரனுக்குப் பேசியிருந்தார் தீனதயாளன்.

 

பெண்ணை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றே காதும் காதும் வைத்த நிலையில் பேசத் துவங்கியிருந்தார்.

 

ஊரறிய திருமணம் வேண்டாம் என்ற தீனதயாளனிடம், காரணம் கேட்டார் நாகேந்திரனின் தந்தை.

 

ஜோதிடர்கள் எளிமையாக கோவிலில் வைத்து பெண்ணுக்கு திருமணம் செய்தால் அதிதீக்கு தோஷம் விலகும் என்றிருப்பதாகக் கூறியிருந்தார்.

 

ரிசப்சனுக்கு கட்சிப் பிரமுகர்கள் முதல் உற்றார், உறவினர்களையும் அழைத்து சிறப்பாகச் செய்யலாம் என்றுகூறி சமாளித்திருந்தார் தீனதயாளன்.

 

நாகேந்திரனின் தந்தை, தீனதயாளனை தங்களது வீட்டிற்கு கௌசல்யாவுடன் அழைத்திருக்க, தனியாகவே சென்றிருந்தார் தீனதயாளன்.

 

“என்னப்பா வீடறியக் கூட வீட்டம்மாவைக் கூட்டிட்டு வராம தனியா வந்திருக்க?”

 

“அது… அவ அவங்க பக்கம் ஒரு ஃபங்சனுக்கு போனதால வரமுடியல.  இன்னொரு நாளைக்கு கூட்டிட்டு வரேன்”

 

தீனதயாளனின் முரணான பேச்சு மற்றும் செயலில், மேற்கொண்டு பேசுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டிருந்தார் பெரியவர்.

 

அந்த இடைவெளியில் அதிதீ வீட்டை விட்டுச் சென்றிருந்தாள்.

 

பெண் சென்றது முதல் நேரிலும், போனிலும் அவர்கள் கொடுத்த குடைச்சலில் மிகுந்த மனஉளைச்சலோடு, போனை அணைத்து வைத்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார் தீனதயாளன்.

 

ஏனெனில் அலுவலகத்திற்கு சென்றாலும், அவர்களின் அழைப்பும், பேச்சும் குறைந்தபாடில்லை.

 

நாகேந்திரனால் எழுந்த மனஅழுத்தத்தை, மனைவி கௌசல்யாவை அடித்துத் துன்புறுத்தி குறைத்துக் கொண்டிருந்தார் தீனதயாளன்.

////////////////

 

இடையிலேயே தனது தம்பிக்கு பார்த்திருந்த பெண்தான் தனது வீட்டில் அடைக்கலமாகியிருக்கிறாள் என்பதும் நாகேந்திரனுக்கு ஊர்ஜிதமாகிட, தங்களது வீட்டில் பலத்த பாதுகாப்பை ஏற்பாடு செய்ததோடு தந்தையிடம் இதைப்பற்றி பேச எண்ணியிருந்தான்.

 

இந்நிலையில் நேரில் வந்து சிக்கிய நந்தாவிடம் நறுக்குத் தெரித்தாற்போல பேசி பெண்ணை அனுப்பமுடியாது என கண்டிப்பாகக் கூறி அனுப்பியிருந்தான் நாகேந்திரன்.

 

அடுத்தடுத்த நாள்களிலும் கட்சிப் பணிகள் சேர்ந்திட, நேரமின்மையால் பூர்வீக ஊருக்குச் செல்ல இயலாமல் தட்டிப்போனது. 

 

பெண்ணை தம்பிக்கு மணம் செய்யும் எண்ணத்தில் தீவிரமாக இருந்தான் நாகேந்திரன்.

 

பூபேந்திரனும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தான்.

 

தந்தையும் மறுக்க மாட்டார் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையில் சகோதரர்கள் இருவருமே இருந்தனர்.

/////

கைதி ஒருவன் தப்பித்து விட்டதாகவும், அவனை ஊருக்குள் காவல்துறைத் தேடித் திரிவதாகவும் நாகேந்திரனுக்கு செய்தி வரும்போது நள்ளிரவு.

 

அதிதீயை வேறு எங்கேனும் கொண்டு சென்று மறைத்து வைக்க உத்தேசித்து, செயலை நடைமுறைப்படுத்த எண்ணுகையில், பூர்வீக வீட்டு வாயிலில் காவல்துறை வாகனம் வந்து நின்றிருந்தது.

 

பெண் யாரெனக் கேட்டால், உறவுக்காரப் பெண் என்று கூறிக் கொள்ளலாம் என தன்னை சமாதானம் செய்து கொண்டான் நாகேந்திரன்.  ஆனாலும், அதிதீ எதாவது வாயைத் திறந்து கூறிவிட்டால் பிரச்சனையாகிவிடுமே என்கிற எண்ணம் வந்ததும், என்ன செய்யலாம் என யோசித்திருந்தான்.

 

புதுக்கோட்டையில் இருந்து நாகேந்திரனால் உடனடியாகக் கிளம்பி அங்கு வரமுடியாத நிலை.

 

நள்ளிரவு நேரத்திலும், கிராமத்து மக்கள் நாகேந்திரனின் வீடு இருக்கும் தெருவில் கேட்ட காவல்துறை வாகன அரவத்தில் எழுந்து வரத் துவங்கியிருந்தனர்.

 

கூட்டம் மெல்ல தெருவில் சேரத் துவங்கியிருந்தது.

 

வரிசையாக அனைத்து வீடுகளிலும் தேடுவதாக பாவனை செய்திருந்த காவல்துறை, காவலுக்கு இருவர் இருந்த நாகேந்திரனின் வீட்டிற்குள் அடுத்து தேடுவதற்காக நுழைந்திருந்தது.

 

ஊரே வேடிக்கை பார்த்திருந்தது.

 

வீட்டிற்குள்ளிருந்து அதிதீயை மட்டுமே சிலர் எதிர்பார்த்திருக்க, உள்ளிருந்து நந்தாவுடன் அதிதீயும் வெளிவர, வாயிலில் காவலுக்கு நின்றிருந்த நாகேந்திரனின் ஆட்களும் அதிர்ந்திருந்தனர்.

 

இவ்வளவு காவலையும் மீறி, நந்தா எப்படி உள்ளிருந்து வருகிறான் என்பது அதிதீயைக் கொண்டு வந்து அவ்வீட்டில் விட்டுச் சென்றவர்களுக்கும் புரியவில்லை.

 

சில நண்பர்கள் மற்றும் காவல்துறையின் மறைமுக உதவியோடு அதிதீ தங்கியிருந்த வீட்டை ஒரு மணித் தியாலத்திற்கு முன்பே நந்தா அடைந்திருந்தான்.

 

குற்றவாளியான நந்தாவிற்கும் அவனது மனைவிக்கும் அடைக்கலம் கொடுத்ததாக நாகேந்திரன் மீதே வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக காவல்துறையிடமிருந்து செய்தி வரவே, சுதாரித்திருந்தான் நாகேந்திரன்.

 

நடந்த அத்தனையையும் மறைக்க வேண்டிய நிர்பந்தம்.

 

தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு வழமையாக அடைக்கலம் தருவதுபோல தம்பதியருக்கும் தனது வீட்டில் தங்க இடம் கொடுத்ததாகவும், அவர்கள் குற்றவாளி என்பதே தனக்குத் தெரியாது என்றும் அலைபேசியிலேயே கூறி பெருமூச்சு விட்டிருந்தான் நாகேந்திரன்.

 

கட்சி மேலிடம் வரை இந்நிகழ்வு தெரிந்தால் அரசியல் வாழ்க்கைப் பொய்த்துப் போகும் என்பதால் எழுந்த சினத்தை உள்ளுக்குள் அடக்கியவாறு அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டான் நாகேந்திரன்.

 

நள்ளிரவிலும், மீடியா, பிரெஸ் என வீட்டு வாயிலில் நிற்க, இது தனது அரசியல் வாழ்க்கையிலும், உள்ளூரிலும் தனது இமேஜை சரிக்கும் என எண்ணியவன், அதிதீ போனால் போகட்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டிருந்தான்.

 

ஆனாலும் பூட்டியிருந்த வீட்டிற்குள் நந்தா இருந்ததாகச் சொன்னதை நம்ப முடியாமல் இருந்தான்.

 

நந்தா செய்த குற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள அவனது வீடு இருந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துக் கேட்டபோது, அவன் பணிபுரிந்த கட்டிட நிறுவனத்திலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் இருதினங்களுக்கு முன்பே நந்தாவைக் கைது செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தது காவல்துறை.

 

நாகேந்திரனை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகே, கைது செய்திருந்ததாக பதிவான புகாரையும் கேட்டு உறுதி செய்து கொண்டு அமைதியாகியிருந்தான் நாகேந்திரன்.

 

திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.

 

கைது செய்து சிறையில் இருந்தவன், சிறையில் இருந்து வெளிவந்ததைவிட, தனது வீட்டுக் கட்டுக்காவலையும் மீறி உள்ளே வந்தது விளங்காமல் இருந்தது நாகேந்திரனுக்கு.

 

பொய்யாக புனையப்பட்டிருந்தாலும், காவல்துறையின் மேற்பார்வையில் மிகக் கச்சிதமாகக் கையாண்டிருந்தார்கள்.

 

நந்தாவின் முயற்சியால் நடந்திருக்கும் எனக் கணிக்கத் தவறியிருந்தான்(ர்) நாகேந்திரன்.

 

நெருடல் வராதபடி பூரண ஒத்துழைப்பை நல்கி, அதிதீயை மீட்கும் பணியைச் செவ்வனே செய்திருந்தது செந்தில்நாதன் தலைமையில் செயல்பட்ட காவல்துறை.

 

நாகேந்திரன், தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாக உணர்ந்தாலும், தகுந்த நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க எண்ணினான்.

 

நடந்த விசயம் தனக்கு மிகுந்த தலைகுனிவைத் தரும் என்றெண்ணி, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நடந்த அனைத்தையும் மீடியாவிலோ, அடுத்த நாள் தினசரி பேப்பர் எதிலும் வராமல் செய்திருந்தான் நாகேந்திரன்.

 

ஊராறின்முன் அவனின் தராசு தாழ்ந்திருந்ததும், வருத்தத்தைத் தந்திருந்தது.

 

நந்தாவின் மீது முன்பைக் காட்டிலும் வன்மம் வளர்ந்திருந்தது.

////////////////

 

அனைத்தும் காவல்துறையின் ஒத்துழைப்போடு, நந்தாவின் அரிய முயற்சியினாலும் அரங்கேறியிருந்தது.

 

கட்டிடத்திற்குள் நுழைய, வாயிலைப் பயன்படுத்திடாமல், கயிற்றின் துணையால் வீட்டிற்குள் சென்றிருந்தான் நந்தா.

 

திடகாத்திரமான வலிமையான தேகம் படைத்திருந்தவனாதலால், கடின வேலைகளும் பழகியிருக்க, இலகுவாக கயிற்றின் துணையோடு மேலேறிச் சென்றிருந்தான் நந்தா.

 

காவல்துறை அந்த வீட்டை அடையும்வரை மறைந்திருந்தவன், அவர்கள் வந்ததை உறுதி செய்துகொண்டே, பெண்ணைச் சந்தித்தான்.

 

கனவுபோல எண்ணி விழித்தவளை, தன்னோடு அணைத்து உச்சி முகர்ந்தவன், “உம்புருசந்தான்டீ, என் செல்லப் பொண்டாட்டீ!”, என்றபின்னே கணவனின் அருகாமையை தொட்டு உணர்ந்து, நடப்பிற்கு வந்தவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தான்.

 

மீட்டவளின் தோற்றம் நந்தாவின் மனதை வதைத்தது.  பாதியிளைத்து, கண்ணில் கருவளையத்தோடு இருந்தவளைக் கண்டதும் மனம் வருந்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ள சரியான தருணமல்ல என்பதால் அமைதியாகவே வந்திருந்தான்.

 

போலீஸைக் கண்டதும் என்னவோ, ஏதோ என்கிற பயம் வந்திருந்தது அதிதீக்கு.

 

மிரண்டு விழித்தவளை, ஒரு கைவளைவில் அணைத்துத் தேற்றினான்.

 

நந்தாவைக் காணும்வரை சோபையிழந்திருந்தவள், கண்டதும் சோலைபோல முகமெங்கும் பரவசத்தில் குளுமையைத் தத்தெடுத்திருந்தது.

 

காவல்துறை வாகனத்திலேயே இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர்.

 

அரசியல் செல்வாக்கு இருப்பவர்களை பகைத்துக் கொள்ள விரும்பாத காவல்துறை, முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்கிற யோசனைப்படி, ஏசிபி செந்தில்நாதன் அறிவுறுத்தலின்பேரில் அனைத்தையும் செய்து, அதிதீயை மீட்டு அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.

 

செல்லும் வழியெங்கும் நடத்திய நாடக விசயங்களைப் பற்றி காவல்துறையோடு, நந்தா பேசியவாறு வந்திட, ஆவென பார்த்திருந்தாள் அதிதீ.

 

பெண்ணது பார்வையில் அவளது மனதை உணர்ந்தவன், கையைப் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது.  பிறகு சொல்கிறேன் எனும்படியாக தனது செயலில் கூறினான்.

 

ஆனாலும் பெண்ணது சோர்ந்த தோற்றம் நந்தாவை வதைத்தது.

 

உணவை மறுத்து இவளாகவேதான் உடம்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து, ஒப்புக்கு காவல் நிலையம் வரை சென்று, சில நடப்பு விசயங்களை முடித்துக் கொண்டனர்.

 

அதன்பின் நந்தா அதிதீயைக் காணவில்லை எனக் கொடுத்திருந்த புகாரையும் வாபஸ் பெற்றுக் கொண்டு, அதிகாலையில் அங்கிருந்து இருவரும் வெளியேறியிருந்தனர்.

 

புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தவன், ஹோட்டலுக்கு பெண்ணை அழைத்துச் சென்றான்.

 

அதீதி, “சாப்பாடே வேண்டாம், உன்னைப் பார்த்ததுமே மனசு நிறைஞ்சிருச்சு”

 

“ச்சு.. அதுக்காக.. இன்னும் நிறைய வேலை கிடக்கு.  அது முடிய எத்தனை நாளாகும்னே தெரியலை.  நேரங்கெடைக்கும் போது ஒழுங்கா வாங்கிக் கொடுக்கறதை சாப்பிட்டுக்கோ”, என்றான் நந்தா.

 

வெளிச் சாப்பாடு அத்தனை பழக்கமில்லாததால், இட்லியே போதுமென்றிருந்தாள்.

 

மூன்று இட்லியை உண்ணவே மிகவும் பிரயத்தனப்பட்டவளை, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

 

பெண் மறுத்தும் கேட்காமல் அழைத்துச் சென்றிருந்தான்.

 

“சாப்பிடவே மாட்டிங்கறா.  மூனு இட்லிகூட சாப்பிட முடியலை.  அல்சர் எதுனா வந்திருக்கா.  நல்லா சாப்பிட மருந்து எதாவது தாங்க டாக்டர்”, என்ற நந்தாவின் பேச்சில் மருத்துவரே சிரித்துவிட்டார்.

 

“சாப்பிட மருந்தா?  சின்னப் புள்ளையா அவங்க.  அவங்க மனசு சரியான பின்ன பசிச்சு சாப்பிடுவாங்க”, என்றிருந்தார்.

 

மருத்துவரின், “அவங்க மனசளவில ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்காங்க.  மற்றபடி ஒன்னும் பிரச்சனையில்லை.  நல்ல நம்பிக்கையான சூழல்ல வச்சிருந்தா சீக்கிரம் ரெகவர் ஆகிருவாங்க.  பயப்படாதீங்க”, என்ற பின்பே நிம்மதியாக உணர்ந்தான்.

 

அதன்பிறகும் யாரையும் நம்பி விடாமல் தன்னோடே அதிதீயை வைத்துக் கொண்டான்.

 

கையோடு அழைத்துக் கொண்டு மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை ஓய்ந்து அமராது அடுத்தடுத்துச் செய்தான்.

 

பெண்ணுக்காக அவ்வப்போது ஓய்வு தரும் வேளையில், அவனும் ஓய்வெடுத்துக் கொண்டான்.

 

நண்பர்களே நந்தா அதிதீயின் மீது காட்டும் அக்கறையில், “டேய் மாப்பு, நீ இவ்வளவு நல்லவனா இருப்பேனு தெரியாமப் போச்சே.  எப்படியோ எங்க தங்கச்சிய கண்கலங்காம நல்லா வச்சிக்கிட்டா சரிதான்”, என கலாய்த்து மகிழ்ந்தனர்.

 

அதிதீக்கும் இவை அனைத்தும் தெரிந்தாலும், பட்டும்படாமல் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாள்.

 

இரண்டு நாள்கள் வெளியில் லாட்ஜில் தங்கிக் கொண்டனர்.

 

அதிதீயைக் கொண்டே, காதல் திருமணம் செய்துகொண்டமையால், உண்டாகும் பெற்றோரின் துன்புறுத்தல், மற்றும் (பூபேந்திரன்)மாப்பிள்ளை வீட்டாரின் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டு பெண்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்படி செய்திருந்தான் நந்தா.

 

ஒளிந்து மறைந்திருக்க வேண்டிய அவசியமின்றி, இனி புதுக்கோட்டையிலேயே தாங்கள் குடியிருக்க வீடு பார்க்க எண்ணி நண்பர்களிடம் பணித்திருந்தான் நந்தா.

 

மூன்றே நாள்களில், முன்பிருந்த இடத்திலிருந்த சாமான்களை நண்பர்கள் உதவியோடு புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு எடுத்து வந்திருந்தான்.

 

பெண்ணுக்கோ, தனக்கோ உயிருக்கோ, உடமைக்கோ, ஏதேனும் தொந்திரவுகள் நேரிடையாகவோ, மறைமுகவாகவோ வரும்பட்சத்தில், நாகேந்திரன், மற்றும் தீனதயாளன் மட்டுமே காரணம் என நந்தாவும் புகார் அளித்திருந்தான்.

 

கடன் வாங்கி அனைத்தையும் செய்து முடித்திருந்தான்.

 

கைவளைவில் பெண்ணை வைத்துக் கொண்டே பணிகளை மேற்கொண்டான்.

 

/////

நந்தா பணிபுரிந்து வந்த கட்டிட நிறுவனத் தலைவரும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கியிருந்தார்.

 

நந்தா பணி செய்த கட்டிட நிறுவனத்தில் கொடுத்திருந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தது அந்நிறுவனம்.

 

தான் இதுவரை பணிபுரிந்த நிறுவனத் தலைவரை, அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று நன்றி கூறிவிட்டு, “நீங்க பண்ண உதவிய என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன் சார்.  ரொம்ப நன்றி” என்றவன்,

 

“அடுத்த வாரத்தில இருந்து நீங்க சொன்ன இடத்தில வேலைக்குப் போறேன் சார்”, என விடைபெற்று வந்திருந்தான்.

 

காவல்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க, கட்டிட நிறுவனரே அதிதீயை மீட்க வேண்டி பொய் புகார் ஒன்றைக் கொடுத்து, நந்தா கைதானதுபோல அனைத்தையும் செய்திருந்தது.

 

புகார், கைது, வாபஸ் அதன்பின் அதே நிறுவனத்தில் பணியைத் தொடர்வது, சந்தேகத்தை உண்டு செய்யும் என்பதால், அதே ஊரில் இயங்கி வரும் வேறொரு கணினி கட்டிட அமைப்பு நிறுவனத்தில், ஆட்டோகாட், எஸ்டிமேட் போன்ற பணிகள் செய்யும் வேலையில் நந்தாவைச் சேர்த்து விட்டிருந்தார் முன்னாள் முதலாளி.

 

பெண்ணோடு தனித்திருக்கக்கூட நேரமில்லாமல், இரவு பகல் என்றலைந்தான்.

 

குறைந்த செலவில் புதிய மொபைல் இரண்டை வாங்கி, ஒன்றை தனக்கும், மற்றொன்றை அதிதீக்கும் என வைத்துக் கொண்டார்கள்.

 

ராஜேஷி தினசரி புதுக்கோட்டை வந்து செல்வதால், எதேச்சையாக நந்தாவைக் கண்டிருந்தான்.

 

ராஜேஷின் மூலம் நந்தா தற்போது செங்கல்பட்டில் இல்லை என்பதைக் கேள்விப்பட்டு, காமாட்சியே பழைய நிறுவனத்திற்கு சென்று விசாரிக்க, அவர்களின் மூலம் நந்தாவிற்கு விசயம் தெரிவிக்கப்பட்டது.

 

நண்பர்களைக் கொண்டு தாயை தனது புதிய புதுக்கோட்டை வீட்டிற்கு  அழைத்து வரச் செய்தான் நந்தா.

 

வந்ததும், வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டவர், நண்பர்களோடு நந்தா பேசுவதைக் கொண்டு, ஓரளவு அனைத்தையும் யூகித்துக் கொண்டார்.

 

அதிதீ நந்தாவுடனேயே ஒட்டிக் கொண்டு தெரிவதுபோல உணர்ந்தவருக்கு, தனது அண்ணன் மகள் இருக்க வேண்டிய இடத்தை, இவள் ஆக்ரமித்துக் கொண்டாளே எனும்படியான வன்ம பார்வையை பெண்ணது மீது வீசியவாறு, அதிதீயை நெருங்காமலேயே இருந்தார்.

 

வெளியே கிளம்பும் தோரணையில் தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த தாயின் அருகே சென்றவன், “நீ ஊருக்கு கிளம்பறதா இருந்தா கிளம்பும்மா.  நேரங்கிடைக்கும்போது வந்து பாக்கறேன்”, என நந்தா கூற

 

கிளம்பாமல் தயங்கியவாறு நின்றிருந்தவரின் அருகே சென்று மெதுவாக என்ன என்று வினவ

 

தாயின் பேச்சில் இதுவரை கோபம் கொண்டிராதவன் கோபம்கொண்டு கத்தியிருந்தான்.

 

காமாட்சி, நந்தா கோபம் கொள்ளும்படி என்ன கூறினார்?

 

அடுத்த அத்தியாயத்தில்…