Birunthavana-9

Birunthaavanam-2ecae66b

Birunthavana-9

பிருந்தாவனம் – 9

பிருந்தா கைகளை வலுக்கட்டாயமாக உறுவிக்கொள்ள முயல, “ஏன் பிருந்தா இப்படி பண்ற?” தன் கைகளை இடுப்பில் வைத்து கோபமாக கேட்டாள் மாதங்கி.

பிருந்தா அமைதியாக நிற்க, “பேச வேண்டாமா?” மாதங்கி கேட்க, ‘பேச வேண்டும். ஆனால், உன் அருகாமையில் வேண்டாம். கிருஷ் ஏதாவது அவமானப்படுத்திவிட்டால்?’ பிருந்தாவின் மனம் தவித்தது.

தன் தோழியின் மனதை அறிந்தவள் போல், “நான் வேற வழியில் போகிறேன். நீ பேசிட்டு வா. சரியா?” என்று மாதங்கி கேட்க, பிருந்தா மறுப்பாக தலை அசைத்தாள்.

“எதையும், நான் வலுகட்டாயமாக செய்ய விரும்பலை மாதங்கி. நடக்கும் பொழுது நடக்கும்.” என்று பிருந்தா விரக்தியாக கூற, “அப்படி எல்லாம் எல்லா விஷயங்களும் வாழ்க்கையில் நடக்காது. நாம தான் நடத்தி காட்டணும்” மாதங்கி படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

“நீ கேட்க மட்ட…” கூறிக்கொண்டே மாதங்கி கிருஷ் இருக்கும் மரத்தை கடக்க, பிருந்தாவும் அவளோடு மெளனமாக சென்றாள்.

அவர்கள் கிருஷை நெருங்க நெருங்க, கிருஷின் கவனம் முழுதும் மாதங்கியிடம் தான் இருந்தது. ‘மாதங்கி அண்ணன் அவ கிட்ட என்ன சொல்லிருப்பான்?’ அவன் காதலையும் அடக்கி ஆண்டது அவன் கேள்வி.

 பிருந்தா தலையை குனிந்து கொண்டாள். “திமிர் பிடித்தவள். அப்படியே தலை குனிஞ்சிட்டே போவா? அது எனக்கு இடைஞ்சலா.” பிருந்தாவை கணக்கிட்டபடி, முணுமுணுத்து கொண்டே பார்வையை மாதங்கியின் பக்கம் செலுத்தினான்.

வழமை போல் மாதங்கியின் முகத்தில் நட்பு இழையோடிய புன்னகை கிருஷை கடக்கையில். அவள் பூக்கும் புன்னகை அவனுக்கு மத்தாப்பூக்கள் தான்!

இன்று ஏனோ, அந்த புன்னகை அவன் முகத்தில் சிந்தனையை ஏற்படுத்தியது.

‘போலீஸ் அவன் புத்தியை காட்டிட்டானோ?’  அவன் நெற்றி சுருங்கியது.

மாதங்கி அவனை கடந்துவிட்டாள். ஆனால், அவளை பற்றிய சிந்தனைகள் அவனை பேரலையாய் ஆட்கொண்டுவிட்டது.

‘மாதங்கி தெரிஞ்சும் தெரியாமல் மாதிரி போகிற கேரக்டர் கிடையாது. ஆனால், முகுந்தன் கேடி. அந்த போலீஸ் என்னவேணுமினாலும் பண்ணுவான்’ அவன் குழப்பத்தை ஒதுக்கிவிட்டு அவன் தன் வகுப்பறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

எதையும் சரியாக கணிக்க முடியாதபடி, அவர்கள் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் மொத்த டிபார்ட்மென்ட் இளநிலை மற்றும் முதுநிலை  மாணவர்களும் கேரளாவுக்கு கல்லூரி சுற்றுலா வந்திருந்தனர்.

சலசலவென்று ஓடிக்கொண்டிருந்த நீரோடைக்கு  அந்தப்பக்கமும் இந்த பக்கமும் வரிசையாக இருந்த குடில் போன்ற வீட்டில் மாணவர்கள் தங்குவதாக ஏற்பாடு.

மாதங்கி, பிருந்தா இருவரும் அந்த மாலை பொழுதில் பசுமையான இடத்தில் நடந்து கொண்டிருந்தனர். மாணவமாணவிகள் ஆங்காங்கே சின்ன சின்ன குழுவாக பிரிந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.  சற்று தூரத்தில், கிருஷின் குழுவும் இருந்ததது.

‘நான் இந்த சுற்றுலாவில் எப்படியாவது என் காதலை மாதங்கியிடம் சொல்ல வேண்டும்’ அவன் கண்கள் உல்லாசமாக மாதங்கியை வட்டமடித்து கொண்டிருந்தது.

 அவளோ இன்று இன்னும் அழகாக அவன் கண்களுக்கு தெரிந்தாள். வழமையாக அணியும் சுடிதார், லெக்கின்ஸ் இல்லாமல் சுற்றுலா தளம் என்பதால் கருப்பு மிடி, சிவப்பு நிற டாப்ஸ் அணிந்திருந்தாள். அதில் மஞ்சள் நிற குட்டி பூக்கள்.

அவனுக்கு மாதங்கியிடம் பேசும் ஆவல் எழுந்தது. பேசவேண்டும் என்பதை விட அவளை அருகில் சென்று பார்க்க வேண்டும்.  அன்றைய தீண்டலுக்கு பின், அவளை நெருங்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை.

‘கிடைக்கவில்லையா? இல்லை மாதங்கி புத்திசாலித்தனமாக அவனை தவிர்த்து கொண்டிருக்கிறாளா?’ என்ற சந்தேகம் அவனுள்!

‘எப்படியாவது இன்று அவளோடு ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளவேண்டும். ‘ என்ற அவாவும் அவனுள் எழுந்தது.

மாதங்கியும், பிருந்தாவும் நீரோடைக்கு அருகே நடக்க, கிருஷ் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி தனிமையை ரசிப்பவன் போல் நடந்தான். கிருஷின் நெருங்கிய நண்பர்கள் அவன் மனதை அறிந்து கொண்டாலும் அறியாதவர்கள் போலவே நடந்து கொண்டார்கள்.

 தென்னங்கீற்று தொட தண்ணீர் சலசலவென்று ஓட,  ” இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு . நான் மொபைல் எடுத்துட்டு வர மறந்துட்டு வந்துட்டேன். ஃபோட்டோ எடுக்கணும். நீயும் ரூமுக்கு வரியா?” என்று பிருந்தாவிடம் கேட்டாள் மாதங்கி.

“இல்லை மாதங்கி… காலையில் ட்ராவல் பண்ணோமில்லை. எனக்கு ஒத்துக்கலைனு, நான் எதுவுமே சரியா சாப்பிடலை. இப்பவும் சாப்பிட பிடிக்கலை. இப்ப, தலை சுத்துது. இங்க நிக்குறேன். நீ போயிட்டு வரியா?” பிருந்தா கண்களை சுழல விட்டபடி கேட்டாள்.

“தனியா நினுப்பியா? நான் காசும் எடுத்துட்டு வரலை. எதாவது எடுத்திட்டு வரேன். ஏதாவது வாங்கி சாப்பிடுவோம்.” என்று மாதங்கி ஆதரவாக கூறினாள்.

“எடுத்துட்டு வா மாதங்கி. சுத்தியும் நம்ம மக்கள் தானே இருக்காங்க. நான் பார்த்துப்பேன்.” பிருந்தா கூற, “இப்ப வந்திடுறேன்” கூறிக்கொண்டே மாதங்கி அறையை நோக்கி ஓடினாள்.

அவர்களுக்கு எதிர் பக்கம் கிருஷ் இவர்களை நோக்கி நெருங்கி விட்டான். பிருந்தா மட்டும் தனியாக இயற்கையை ரசித்து கொண்டிருந்தாள்.

பிருந்தாவிற்கு சற்று தள்ளாடியது. அவள் கண்கள் இருண்டது. அப்பொழுது, சற்று நடக்க ஆரம்பித்தாள். அங்கு கிருஷை கண்டதும், அவள் கண்களில் சற்று மலர்ச்சி.

  ‘இன்று கிருஷிடம் பேசினால் என்ன?’ என்ற எண்ணம்  அவளுள் எழ, அவள் அவனை சோர்வாக நெருங்கினாள்.

   அந்த புது இடத்தில், அவள் “அண்ணா…” என்று கூறிக்கொண்டு யாரும் அருகே இல்லாததை உறுதி செய்து கொண்டு கிருஷை நெருங்க, “இத்தனை வருஷம் இல்லாமல், உனக்கு என் மேல் என்ன திடீர் பாசம்? எந்த காரியத்துக்காக வந்து இங்க நிக்குற? உன் அம்மா புத்தி தானே இருக்கும் உனக்கு” அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

    காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்த அவள் உடல் நிலை, அவன் பேசிய விதம் பதட்டத்தில் தலை சுற்றி அவன் தோள் மீதே சரிந்தாள் பிருந்தா.

“ச்சீ… ஏன் என் மேல சாய்ந்து அழற?” என்று அவன் அவளை உதற, “சீனியர்…” அலறிக்கொண்டு அங்கு ஓடி வந்து பிருந்தாவை தாங்கிக்கொண்டாள்.

“பிருந்தா… பிருந்தா…” மாதங்கி அவள் கன்னங்களை தட்ட, ஓடி சென்று அவள் முகத்தில் தண்ணீர் அடித்தான் கிருஷ்.

சூழ இருந்த மாதங்கி பிருந்தாவின் நட்பு கூட்டம் அங்கு கூடிவிட்டது. 

“என்ன ஆச்சு?” அவன் பதட்டமாக கேட்க, “இப்ப கேளுங்க. அவ  மயங்கி விழறா. நீங்க அவளை தள்ளி விடுறீங்க?” சீறினாள் மாதங்கி.

“இல்லை, அவ மயங்கினது எனக்கு தெரியாது.” அவன் தடுமாற்றத்தோடு கைகளை பிசைந்தான்.

பிருந்தா சோர்வாக கண்களை திறந்தாள். அவள் கண்களுக்கு பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த கிருஷ் தெரிந்தான். அவள் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று. அவள் கண்ணோரம் கரித்தது. அதே நேரம், சற்று முன் கிருஷ் பேசிய வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க, பிருந்தாவின் முகம் இறுகியது.

 பிருந்தாவின் உணர்வுகள் வேறு  யாருக்கும் புரியவில்லை. தன் தோழியை பற்றி தெரிந்ததாலும், நடந்ததை ஓரளவுக்கு கணித்துவிட்டதாலும் மாதங்கி தன் தோழியின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டாள்.

சூழ்நிலையை பிருந்தாவுக்கு சாதகமாகக் தன் அடியை எடுத்து வைத்தாள் மாதங்கி. அவள் அறியவில்லை, தன் வாழ்வும் அங்கு தான் திசை மாறப்போகிறது என்று!

“பிருந்தா எதுமே சாப்பிடலை, காலையிலிருந்து… ஏதாவது வாங்கிட்டு  வாங்க சீனியர். ஒரு பொண்ணு இப்படி மயங்கி விழுந்திருக்கா. இப்படியா நிற்பீங்க?” மாதங்கியின் அதிகாரம் தூள் கிளம்பியது.

“மாதங்கி…” பிருந்தா மறுப்பாக தலை அசைத்தாள். “நீ சும்மா இரு பிருந்தா.” தன் தோழியை அடக்கினாள்.

கிருஷின் கண்கள், தன் தங்கையை தழுவியது. அவன் முகத்தில் கோபம், வெறுப்பு அனைத்தும் இருந்தாலும், அதையும் தாண்டி அவன் கண்களில் அக்கறை பிரதிபலித்தது. மெல்லிய கவலையின் ரேகையும் ஓட, மாதங்கி சட்டென்று அவனை படித்துவிட்டாள்.

“சீனியர், என்ன மசமசன்னு நிக்குறீங்க? ஓடி போய் ஏதாவது வாங்கிட்டு வாங்க” அவள் அவனை மிரட்ட, மொத்த தோழிகளின் கூட்டமும் கிருஷை பார்த்தது பல விதமான கேள்விகளோடு.

‘இது தான் சாக்குன்னு இவ என்னை மிரட்டுறா? என்னவோ, என்னை மிரட்டுற தைரியம் இவளுக்கு மட்டும் தான்.’ எண்ணிக்கொண்டு, பிருந்தாவுக்கு உண்பதற்காக வாங்குவதற்கு கடையை நோக்கி ஓடினான் கிருஷ்.

 பிருந்தா கண்விழித்ததும், கூட்டம் கலைத்திருந்தது.  பிருந்தா,  சற்று ஓரமாக அத்தனை கூட்டம் இல்லாத இடத்தில் தனிமையை விரும்பியவள் போல் நீர் அருகே இருந்த கல்லின் மீது அமர்ந்திருந்தாள்.

மாதங்கி அவள் முன்னே நின்று கொண்டு, “உங்க அண்ணன் ஏதாவது ஒழுங்கா வாங்கிட்டு வருவானா?” என்று மாதங்கி , பிருந்தாவை வம்பிழுக்க, பிருந்தா தன் சோர்வையும் மறந்து மாதங்கியை முறைத்து பார்த்தாள்.

“என்ன உன் அண்ணனை சொன்னால், உனக்கு அப்படியே கோபம் வருது.” என்று மாதங்கி பிருந்தாவை மீண்டும் வம்பிழுக்க, “கிருஷை என் அண்ணனு சொல்லாத” சுள்ளென்று விழுந்தாள் பிருந்தா. அவள் கண்கள் கலங்கியது.

“யாரும் இங்க அண்ணனு சொல்லிக்க விரும்பலை” கையில் பதார்த்தங்களுடன் வந்த கிருஷின் வார்த்தைகளும் சுள்ளென்று விழுந்தது.

அங்கு வேறு யாருமில்லை. மாதங்கி, இருவருக்கும் தனிமை கொடுத்து விலகவே விரும்பினாள். ஆனால், பிருந்தா இப்பொழுது இருக்கும் நிலைமையை மனதில் கருதி, மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.

“மாதங்கி நான் ரூமுக்கு போறேன்” என்று பிருந்தா விருட்டென்று எழ, “கோபம் என் மேல தானே? அவளை சாப்பிட சொல்லு.” கிருஷ், அவன் கொண்டு வந்ததை மாதங்கியிடம் நீட்டினான்.

“எங்க அம்மாவை பத்தி தப்பா சொல்றவங்க கையால் நான் எதுவும் வாங்க கூட மாட்டேன் மாதங்கி” பிருந்தா, அங்கு ஓடி கொண்டிருந்த நீரை பார்த்தபடி கூறினாள்.

“உண்மை சுடத்தான் செய்யும்” அவன் அழுத்தமாக கூறினான்.

“எது உண்மை? என் அம்மா புத்தின்னு சொல்ற?” கிருஷின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள் பிருந்தா.

“உன் அம்மாவை நான் சொல்லட்டுமா? உன் அம்மா புத்தின்னு நான் சொல்லட்டுமா?” பிருந்தாவின் கண்கள் கலங்கியது.

பிருந்தாவின் கண்ணீர் அவன் கைகளை தொட, அவன் கைகள் அவள் கண்ணீரை துடைக்கவே விழைந்தது. ஆனால், தன் கைகளை இறுக்க கட்டிக்கொண்டான்.

“என் அம்மா உனக்கு யாரு?” அவன் குரல் தோய்ந்தே ஒலித்தது.

“என் அம்மா மட்டும் உனக்கு யாரு?” அவளும் விடாபிடியாக கேட்டாள்.

“உனக்கு இத்தனை வருஷம் என் கிட்ட பேசணும்ன்னு தோணவே இல்லையே?” அவன் குற்றம் சாட்ட, “ஏன் நீ மட்டும் அப்படியே என்னை பார்த்தும் பேசிட்டே?” பிருந்தா  திரும்பி நின்று கொண்டாள்.

பிருந்தாவின் வருத்தமான குரல் அவனை ஏதோ செய்தது. கிருஷ் மேலும் பேசி அவளை வருத்தம் கொள்ள செய்ய விரும்பவில்லை.

“பேசி எதுவும் மாறப்போறதில்லை. அவளை சாப்பிட சொல்லு. அவளுக்கு மத்த வாழை பிடிக்காது. செவ்வாழை தான்  பிடிக்கும். அது தான் வாங்கிட்டு வந்திருக்கேன். பிரெட் வேண்டாம். எப்ப போட்டதுனு தெரியலை. நைட், என்ன சாப்பிடலாமுன்னு அங்க போய் முடிவு செய்துப்போம்.” அவன் குரலில் கரிசனம் மட்டுமே கொட்டி கிடந்தது.

அவன் கரிசனத்தில் பிருந்தாவின் கண்களில் கண்ணீரும், அதே நேரம் அவன் மேல் உள்ள கோபத்தில் அவள் மனதில் கோபமும் ஒரு சேர வடிந்து கொண்டிருந்தது.

மாதங்கியின் பார்வையில் கிருஷ் பல படிகள் ஏறி நின்றான். என்ன பிரச்சனை இருந்தாலும், அவன் காட்டும் கரிசனத்தில், அவன் காட்டும் பாசத்தில் அவள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள்.

‘நல்ல நண்பன்… நல்ல அண்ணன்…’ அவள் மனம் அவனை பாராட்டியது.

“பிருந்தாவை ரூமுக்கு கூட்டிட்டு போய் கொடு” அவன் பழத்தை மாதங்கியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அறைக்குள்  நுழைந்ததும், “பிருந்தா நாளைக்கு நாம வெளிய கிளம்பனும். நீ கோபத்தை பழத்துகிட்ட காட்டாம, சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு” மாதங்கி கூற, பிருந்தா மறுப்பு தெரிவிக்காமல் பழத்தை சாப்பிட்டு கொண்டு படுத்துவிட்டாள்.

கிருஷ் பேசியது வருத்தம் தான். ஆனால், அதை தாண்டி அவனிடம் பேசிவிட்டது அவள் மனதை வருடியது. ‘இத்தனை நாள் பேசலைன்னு அண்ணனுக்கு கோபமா? ஏன் அவன் என்னிடம் பேச வேண்டியது தானே?’ அவள் மனம் சுணங்கி கொண்டு, சுய அலசலில் இறங்க ஆரம்பித்தது.

அதே நேரம், மாதங்கியின் தோழி ஒருத்தி, “அன்னைக்கு என் காதுக்கு ஒரு செய்தி உன்னையும் கிருஷையும் பத்தி வந்த பொழுது நான் நம்பலை. இன்னைக்கு நம்புறேன்” அவள் மாதங்கியை கேலி செய்தாள்.

“என்ன செய்தி?” மாதங்கி தன் கண்களை சுருக்கினாள்.

“நீ கிருஷை லவ் பண்றதா கிருஷ் உங்க அண்ணன் கிட்ட சொல்லிருக்கான்.” அவள் தோழி கூற, மாதங்கி ஒரு நொடி ஆடிவிட்டாள்.

அவள் கோபம் மேலெழும்ப, ‘விஷயம் விவகாரமா தெரியுதே…’ சட்டென்று தன்னை அடக்கி கொண்டாள் மாதங்கி. “உனக்கு யார் சொன்னா?” மாதங்கி நிதானமாக கேட்டாள்.

“அப்ப உண்மை?” தோழி மீண்டும் மாதங்கியை கேலி பேச, “யார் சொன்னான்னு கேட்டேன்” மாதங்கியின் குரலில் அழுத்தம் கூடி இருந்தது.

“அன்னைக்கு கிருஷ் அப்படி சொல்லும் பொழுது அவங்க ஃபிரெண்ட்ஸ் கூட இருந்திருக்காங்க. அவங்க மூலாமா தான்  செய்தி காற்றில் வந்தது.” இப்பொழுது மாதங்கியின் அழுத்தத்தில் அவள் தோழி தடுமாற, “யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவ?” மாதங்கி அவள் புருவத்தை உயர்த்தினாள்.

“ஜஸ்ட் ஒரு கேலியா?” இப்பொழுது தோழி ஜகா வாங்க, ‘நெருப்பில்லாமல் ஏன் புகைகிறது? காரணகர்த்தாவை சந்திக்க வேண்டும்’ அவள் மனம் கணக்கிட, விறுவிறுவென்று அறையை விட்டு வெளியே சென்றாள்.

கிருஷின் அலைபேசிக்கு அவள் அழைக்க, “சொல்லு மாதங்கி. பிருந்தாவுக்கு எதுவும் உடம்பு முடியலையா?” அவன் குரலில் பதட்டம்.

“இல்லை சீனியர். பிருந்தா பழம் சாப்பிட்டுட்டு தூங்கிட்டா. நைட் சாப்பிட போகும் பொழுது எழுப்ப சொன்னா. நான் உங்க கிட்ட தனியா பேசணும்” மாதங்கி கூற, “நாம அப்ப மீட் பண்ண இடத்தில் வெய்ட் பண்ணு இதோ வரேன்.” கிருஷ் உல்லாசமாக கூறினான்.

தான் பேசிய பேச்சு அவள் காதிற்கு சென்றிருக்கும் என்று, கிருஷிற்கு இப்பொழுது மனதில் சிறிதும் சந்தேகம் எழவில்லை.   அவன் மனதில் பூமழை. ‘நாம, எப்படி கூப்பிடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தோம். இப்ப மாதங்கியே கூப்பிடுறா.’ அவன் சீட்டியடித்தபடி கிளம்பினான் தன் காதலியை பார்க்க.

அவன் காதலை சொல்ல!

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!