birunthavanam-23
birunthavanam-23
பிருந்தாவனம் – 23
கிருஷ் மாதங்கியை யாரோ போல் பாவித்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாலும், மாதங்கி அவனுக்கு பதில் சொல்லவில்லை.
அவன் பேச்சில் காட்டிய அலட்சியம் அவளுக்கு கடுப்பை கிளப்பினாலும் மாதங்கிக்கு அப்பொழுது அது முக்கியமாக தெரியவில்லை.
“உங்க குழந்தையா?” அது தான் முக்கியம் என்று அந்த குழந்தையை பார்த்து கேட்டு வைத்தாள் மாதங்கி.
அவள் கேட்ட கேள்வியில், அவன் பாம்பு போல் சீறிக்கொண்டு அவளை முறைத்தான். நொடிப்பொழுது தான். நொடிப்பொழுதில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, அவளை கூர்மையாக பார்த்தான்.
அவளை படிக்க முயன்று தோற்று போனான் கிருஷ். ஆனால், அவனது நொடிபொழுது கோபத்தை கண்டுகொண்ட மாதங்கி, அவனை புரியாமல் பார்த்தாள்.
‘பார்த்ததும், ஒரு சாரி சொல்லணுமுன்னு நினைச்சன். என்னை யாருன்னே தெரியாத மாதிரி இருக்கிறவங்க கிட்ட நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்? அது தான் அவன் குழந்தையான்னு கேட்டேன். இதுக்கு ஏன் இப்படி கோபப்படணும்?’ மாதங்கி தன் முகத்தை திருப்பி கொண்டாள்.
‘நான் கிருஷை வேண்டாமுன்னு சொல்லிட்டு போய்ட்டேன். இவன் இந்த இடைப்பட்ட காலத்தில் கல்யாணம் செய்திருக்க கூடாதா? இவன் கல்யாணம் செய்து, குழந்தை குட்டின்னு இருக்க கூடாதுன்னு நான் சொன்னேனா? இல்லை நான் இவனை சந்நியாசியாக போக சொன்னேனா? உன் குழந்தையான்னு கேட்டதுக்கு இப்படி ஜின்ஜர் ஈட்டிங் மங்கி மாதிரி மூஞ்சியை ஏன் வைக்கணும்? இது என்னடா வம்பா போச்சு’ அவள் முழு சிந்தனையில் இறங்கியிருக்க, அவன் கடுப்பின் உச்சத்துக்கே சென்றான்.
“செவிடான்னு கேட்டேன்” அவன் சத்தமிட, ‘செவிட்டு மங்கிக்கு, நான் மாதங்கின்னு சொன்னா, மங்கின்னு கேட்கும்’ அவர்கள் கல்லூரியின் முதல் சந்திப்பில் அவள் கூறிய வார்த்தை, இன்று மங்கி, செவிடு என்று அடுக்காக வந்த வார்த்தையில் அவள் எண்ணங்கள் அன்றைய நாளை எண்ணி கொண்டது.
‘எத்தனை அழாகான காலம். திரும்பி வருமா? திருத்தி கொள்ள வாய்ப்பு கிடைக்குமா?’ அவள் மனம் தவித்தது. ஆனால், அவனிடம் இறங்கி பேசத்தான் மனம் வரவில்லை.
அவன் தெரிந்தவன் போல் பேசினால் தானே. பழைய சங்கதி பேச!
மனம் மற்ற விஷயத்தை பேசிக்கொள்ள, ‘ஒருவேளை பிருந்தா குழந்தையா இருக்குமோ?’ அவள் மூளை கேள்வி கொள்ள, அவள் கண்கள் ஆர்வத்தை ஏந்தி கொண்டது.
“குழந்தை யாருது?” என்று இப்பொழுது அதிகாரமாக கேட்டாள் மாதங்கி.
“மேடம், நீங்க எதையும் நியாயமா செய்து பழக்கமே இல்லையா?” என்று பழைய சம்பவத்தை சுட்டி காட்டுவது போல் குத்தலாக கேட்டான் கிருஷ்.
மாதங்கி இப்பொழுது சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்க, “புதுசா ஒரு வீட்டுக்கு வந்தீங்க. நீங்க யாருன்னே எனக்கு தெரியலை. நீங்க யாருன்னு கேட்டேன். அதுக்கும் பதில் இல்லை. என்ன வேணுமுன்னு கேட்டேன். அதுக்கும் பதில் இல்லை. என் கையில் இருக்கிற குழந்தையை பத்தி கேட்டா என்ன அர்த்தம்?” அவன் மெல்லிய புன்னகையோடு கேட்டான்.
‘உண்மையில் இவனுக்கு பழசெல்லாம் மறந்து போச்சா?’அவன் பேச்சிலும், அவன் செய்கையிலும் அவள் தான் குழம்பி போனாள்.
“தெரியாத ஒருத்தர் கிட்ட எப்படி குழந்தை பத்தி சொல்ல முடியும்? உங்க வயசு பொண்ணுங்க, பசங்க மனசை தான் கடத்தி கொடுமை பண்ணுவாங்க. நீங்க புதுசா, குழந்தை கடத்தல் பண்ணுவீங்க போல?” அவன் தைக்கும் குரலில் கேட்க, அவள் அவனை ஆழமாக பார்த்தாள்.
‘இவன் என் கிருஷ் இல்லை.’ அவள் மனம் எங்கோ வலித்தது.
‘என் கிருஷிற்கு என் மேல் கோபம் வரும். ஆனால், என்னை வருத்தப்படுத்த தெரியாது. என்னை காயப்படுத்த தெரியாது. அவன் என் நண்பன்.’ இத்தனை வருட இடைவெளியில் அந்த என் கிருஷ் காணமல் போனதை பாவம் மாதங்கி அறியவில்லை.
அவள் சிந்தனையை கலைப்பது போல, “தம்பி, குழந்தையை தாரீயளா?” என்று அந்த பெண் கைகளை நீட்டினாள்.
“சத்த நேரம் கூட யார்ட்டயும் போவ மாட்டான். ஆனா, நீங்க இவனுக்கு நிறைய பொம்மை, சொக்கா எல்லாம் வாங்கி தர்ரதால உங்ககிட்ட அப்படியே அப்பிக்கிறான்” அந்த பெண்மணி கூற, கிருஷ் புன்னகைத்து கொண்டான்.
‘ஊரான் வீட்டு புள்ளைக்கு தான் இவ்வளவு பில்டப்பா’ என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள் மாதங்கி.
அப்பொழுது அங்கு ஒரு மத்திய வயதில் இருவர் வந்தனர்.
“திலக் சொன்ன பொண்ணு நீ தானா?” என்று கேட்டார் அவர்.
மாதங்கி தலை அசைக்க, “ஐயா, இந்த பொண்ணை மாடிவீட்டில் வாடகைக்கு குடி வைக்கிறோம்.” மத்திய வயது மனிதர் கூற, கிருஷ் தலை அசைத்துக்கொண்டான்.
“ஐயா, ஒத்த பொண்ணுன்னு எங்களுக்கு தெரியாது. குடியும் குடித்தனமா இருக்குமுன்னு நினைச்சோம். இந்த திலக் பையன் இந்த பொண்ணு கிட்ட வாக்குறுதி கொடுத்து கூட்டிகிட்டு வந்துட்டான். ஏதோ வேலை விஷயமா வந்திருக்காக போல. கொஞ்சம் நாளில் போய்டுவாக.” அவர் பவ்யமாகவே கூறினார்.
‘வீட்டுக்கு சொந்தக்காரர் இவரா? இல்லை கிருஷா?’ என்ற சந்தேகம் மாதங்கிக்கு வந்தது.
“இந்த பாரும்மா, ஐயா ரொம்ப பெரிய மனுஷர். இந்த கிராமத்துக்கும், பக்கத்துல இருக்கிற காட்டுக்கு ஐயா தான்…” கிருஷின் பதவியை சொல்ல தெரியாமல் அவர் விழிக்க, “அதெல்லாம் எதுக்குங்க” கிருஷ் அவர் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.
“நாட்டுக்கும், காட்டுக்கும் ராஜாவா?” என்று பட்டென்று கேட்டாள் மாதங்கி.
கிருஷ், அவளை திரும்பியும் பார்க்கவில்லை.
“ஹா …. ஹா… பொண்ணு நீ நல்லா தமாஷா பேசுத. ஆனால், இந்த பேச்செல்லாம் ஐயா கிட்ட வேண்டாம். ஐயாவுக்கு, அரசாங்க வீடே இருக்கு. அவர் ஏதோ விருப்பப்பட்டு இங்க இருக்காரு. இந்த ஊரு மக்களுக்கு இவர் தான் எல்லாம்.” அவர் பேசிக்கொண்டே செல்ல, ‘இவன் ஏன் இங்கு வந்தான்? இவன் எதற்கு இப்படி ஒரு சிறிய வீட்டில், அதுவும் வாடகைக்கு இருக்கிறான்?’ என்ற சந்தேகம் அவள் மனதில் ஓடியது.
அவள் சந்தேக ஓட்டத்திற்கு, தடா விதித்தது, அந்த வீட்டின் சொந்தக்காரரின் குரல்.
“மாடி வீட்டுக்கு போறதுக்கு வீட்டுக்குள்ளையும் வழி இருக்கு. ஆனால், அதை நீ உபயோக படுத்த கூடாது. வீட்டுக்கு வெளிய இருக்கிற வழியா தான் போகணும்.” என்று அவர் தீவிரமாக பேசினார்.
‘ஐயா, அந்த வழியை பயன்படுத்தி மாடிக்கு வர மாட்டார் தானே?’ மாதங்கியின் நாக்கு துறுதுறுவென்று கேள்வி கேட்க துடிக்க, ‘வந்த இடத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம்’ என்று மௌனித்து கொண்டாள்.
அவர் கிருஷின் புகழ் பாடிவிட்டு, வீட்டு சாவியை கொடுத்து வீட்டையும் திறந்துவிட்டு சென்றார்.
மாடியில் நின்று கொண்டு அவள் அந்த கிராமத்தை பார்த்தாள். சற்று ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த வீடு. வேப்பமர கிளை அசைந்து அவள் முகத்தை வருடியது.
இளம் தளிர்கள் அவள் முகத்தை தீண்ட, அதை வாயில் போட்டு மென்றாள் மாதங்கி. அது மிக கசப்பாக இருந்தது.
‘என் வாழ்வும் இப்படி தான் கசந்து கிடக்கிறதோ?’ அவள் மனதில் இருந்த குற்ற உணர்ச்சி இப்பொழுது சற்று வருத்தமாக மாறி இருந்தது.
‘கிருஷ் ஏன் இப்படி நடந்து கொள்கிறான். என்னை முன்பின் அறியாதவன் போல? கோபமா? கோபமா இருந்தா ரெண்டு திட்டு திட்ட வேண்டியது தானே.’ அவள் ஏதோ நினைப்பில், மரக்கிளையை உடைத்து கீழே போட, அது சொத்தென்று கிருஷின் தலையில் விழுந்தது.
“என் தலையில் ஏதையாவது போடத்தான் கிளம்பி வருவீங்களா?” இப்பொழுதும் அண்ணாந்து பார்த்து பல பொருள்படவே வெடுக்கென்று கேட்டுவிட்டு அரசாங்க வண்டியில் ஏறி சென்றான் கிருஷ்.
‘அரசாங்கமே இவன் பக்கம். இவனுக்கு எதுக்கு இந்த அரசாங்க உத்தியோகம்?’ அவள் கண்கள் அவனை கூர்மையாக பார்க்க, அவள் எண்ணங்கள் அவளை சுற்றியது.
சில நிமிடங்களில் தன்னை மீட்டுக்கொண்டு, “வந்த வேலையை பார்ப்போம். கிருஷ்க்கும் எனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை. பார்த்தா, மன்னிப்பு கேட்கனுமுன்னு நினச்சேன். என்னை தெரியாத மாதிரி இருக்கிறவன் கிட்ட மன்னிப்பு ஒரு கேடா? அதுக்கும் அவசியம் இல்லை.” மாதங்கி முகம் சுழித்து முணுமுணுத்து கொண்டாள்.
அப்பொழுது அவள் தோழன் திலக் அழைத்திருந்தான்.
“இன்னைக்கு நம்ம போக வேண்டிய ஃபாரஸ்ட்டுக்கு பர்மிஷன் வாங்க, ஃபாரஸ்ட் ஆஃபிசரை பார்க்கணும். நம்ம ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் பத்தி சொல்ல வேண்டியதிருக்கும். அவர் உதவி நமக்கு வேணும். நான் ஏற்கனவே பேசியிருக்கேன். இன்னைக்கு, நீ, நான், ஹென்றி போறோம்.” என்று கூற, மாதங்கி தலை அசைத்து கொண்டாள்.
சற்றுமுன் அரங்கேறிய சம்பவத்தை வைத்து , தான் சந்திக்கபோவது கிருஷை என்று கணக்கிட்டு கொண்டாள் மாதங்கி.
“சிவில் சர்வீஸ் எழுதி, கிருஷ் இங்க இருக்கிற பெரிய போஸ்டில் இருக்கிறான் போல. இத்தனை வருஷத்தில் இதை தான் செய்திருக்க வேண்டும்.” தனக்கு தானே பேசிக் கொண்டாள் மாதங்கி.
என்ன செய்திருக்கிறான், என்று கணிக்க முடிந்த அவளால், ஏன் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான் என்று கணிக்க முடியவில்லை.
அலுவலகத்தில் கிருஷை சந்திக்க, மாதங்கி, திலக், ஹென்றி பல மணி நேரம் காத்திருந்தனர்.
தன் அறையிலிருந்து அவ்வப் பொழுது வெளியே வந்தான் கிருஷ். பளிச்சென்று சுருக்கம் இல்லாத நீல நிற முழு நீள சட்டை. ஊர் மக்களை சந்தித்தான். அவன் சொல்லுக்கு அனைவரும் தலையசைத்து விடைபெற்றனர். பொறுமையாக, சிரித்த முகமாக அனைவரிடமும் பேசினான்.
மாதங்கி, ஹென்றி அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, திலக் கிருஷையே பார்த்து கொண்டிருந்தான்.
“ஃபுல் ஃபார்மல்ஸ்ல செம்ம ஸ்மார்ட்டா இருக்காரில்லை?” என்று திலக் கேட்க, ஹென்றி ஆமோதிப்பாக தலை அசைத்தான்அவர்கள் சம்பாஷணை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தது.
ஹென்றி அமெரிக்காவை சேர்ந்தவன். திலக் மற்றும் மாதங்கி அமேரிக்காவில் படிக்கும் பொழுது, அவர்கள் பேசிய இந்தியாவின் பெருமையில் ஈர்க்கப்பட்டு, பிரோஜக்ட் செய்ய இவர்களுடன் இந்தியா வந்துவிட்டான்.
ஹென்றியை ஈர்த்த விஷயம் இன்னொன்றும் உண்டு. அதை திலக் அறிவான்.
“என்ன கம்பீரமா இருக்கார். செம்ம ஸ்மார்ட்டா தெரியுது. பார்க்கவும் மனுஷன் பின்றார். இவர் பின்னாடி காலேஜில் எத்தனை பொண்ணுங்க சுத்திருப்பாங்க?” திலக் பேசி கொண்டே போக, கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த மாதங்கி, அவன் கடைசியாக கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு அமர்ந்தாள்.
“இப்படி எல்லாம் மனுசங்க இருந்தா நம்மளை எல்லாம் எவென் பார்ப்பான்?” திலக் சோக பெருமூச்சு விட்டான்.
“அப்படி எல்லாம் இல்லை திலக். விஜய்க்கு நயன்தாரா வந்தா, விவேக்குக்கு கோவை சரளா கிடைக்கும் திலக்” அவள் கூற, “என்னை பார்த்தா உனக்கு காமெடியன் மாதிரி இருக்கா?” திலக் கோபித்துக் கொள்ள, “ஹூ இஸ் விஜே , நயன்?” என்று ஹென்றி தீவிரமாக சந்தேகம் கேட்டான்.
“ம்… இப்ப இது தான் முக்கியமா?” என்று திலக் அவனை முறைக்க, அவர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல, அவர்களுக்கு கிருஷை சந்திக்க அழைப்பு வந்தது.
மூவரும், உள்ளே நுழைய அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியை காட்டினான் கிருஷ்.
திலக், “இல்லை இருக்கட்டும்…” மரியாதை நிமித்தமாக மறுத்துவிட, கிருஷ் மேலும் வற்புறுத்தவில்லை.
திலக் நீட்டிய கோப்புகளை பார்வையிட்டான்.
‘கல்லூரி கிருஷ்க்கும், இவனுக்கும் எத்தனை வித்தியாசம்? எத்தனை நிதானம்? எப்பவும் நல்லவன் தான். பொறுப்பு தான். ஆனால், இப்பொழுது….’ மாதங்கியின் கண்கள், அவனை மெச்சுதலாக பார்க்க… சட்டென்று கிருஷின் புருவங்கள் உயர்ந்து இமைகள் மேல்நோக்கி நகர்ந்து மாதங்கியை பார்வையிட்டு கொண்டது யாரும் அறிந்துகொள்ள முடியாத வகையில்.
அவன் முகத்தில் எந்த பாவனையும் வெளிப்படவில்லை.
அந்த கோப்புகளை மூடி வைத்தான் கிருஷ்.
“நீங்க ஏற்கனவே அனுப்பி வைத்த டாக்குமெண்ட்ஸ் தான் இது. இதை பார்த்தெல்லாம் ஒகே சொல்ல முடியாது.” நிதானமாக கூறினான் கிருஷ்.
“கொஞ்சம் நாள் இருந்து, பழகி பார்த்துட்டு வேணா சொல்லலாம்.” ‘பழகி பார்த்திட்டு…’ அவன் இதழ்கள் அந்த வார்த்தையில் அழுத்தம் கொடுக்க, அவன் விழிகள் அவள் மேல் அழுத்தம் கொடுத்துவிட்டு செல்ல மற்ற இருவரும் புரியாமல் பார்க்க, அவளோ விசுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“பழகின்னா, நீங்க இங்க இருந்து இந்த காட்டை பழகி, சுற்றுப்புறத்தை பழகி…” அப்படி அவன் பல ‘பழகி…’ போட்டு பேசினான்.
‘திமிர் பிடித்தவன்… திமிர்… திமிர்… அதே திமிர்… எத்தனை வருஷம் போனாலும், பிறவி குணத்தை மாற்ற முடியுமா?’ அவள் வேகம் சர்ரென்று ஏறியது.
“எனக்கென்னவோ, நீங்க வேணுமுன்னே மறுப்பு சொல்ற மாதிரி இருக்கு. லஞ்சம் எதுவும் எதிர்பாக்குறீங்களா?” நக்கலாக கேட்டாள் அவள்.
“அடிங்…” மேஜையை தட்டி வேகமாக எழுந்தான் அவன். அவன் கண்களில் கோபம் மின்னியது.
அவன் கொடுத்த சத்தத்தில், திலக் மற்றும் ஹென்றி மிரள, ‘ஐயா… கோபமே படமாட்டாகளே.’ என்று வெளியே இருந்தவர்கள் மிரண்டு போய் பார்த்தார்கள்.
மாதங்கியோ, அவனை அசட்டையாக பார்த்து கொண்டு நிற்க, “லஞ்சம் வாங்குறது உங்க குடும்பத்து பழக்காம இருக்கலாம்” அவன் சிடுசிடுக்க, “என் குடும்பத்தை பத்தி பேசுற யோ…” அவள் ஏற, “மாதங்கி காரியத்தையே கெடுதிருவ போல” திலக் அவளை கட்டுப்படுத்தினான்.
‘அது தானே உன் குடும்பத்தை சொன்னால் மாட்டும் சுருக்குனு தைக்கும். நான் மட்டும் எப்பவும் தொக்கா? திமிர்… திமிர்… திமிர் பிடிச்சவள். எத்தனை வருஷமானாலும் திருந்தவே மாட்டா’ அவன் அவளை பார்த்தபடி சிந்தித்து கொண்டிருந்தான்
திலக் மாதங்கியிடம் எதுவோ பேச, சில நிமிடங்களில் இருவரும் சுயநினைவுக்கு வந்து மௌனித்து கொண்டனர்.
“கிருஷ் சார் ரொம்ப நேர்மை. எதையும் நேர்மையா செய்து தான் அவருக்கு பழக்கம். அவருக்கு குறுக்கு வழின்னா என்னனே தெரியாது.” திலக், கிருஷின் புகழ் பாட, “ஆஹான்…” என்று நக்கலாக கேட்டாள் மாதங்கி.
“சார், மாதங்கி ரொம்ப அமைதி. கோபப்படவே தெரியாது. பிடிவாதம் பிடிக்கவே மாட்டாங்க. என்ன சொன்னாலும் கேட்பாங்க. இன்னைக்கு என்னனு தெரியலை, இப்படி அவங்க வாழ்க்கையில் முதல் முறையா கோபப்படுறாங்க” திலக் பொறுமையாக பேச, கிருஷ், “ஆஹான்…” அவளை போலவே நக்கலாக கேட்டு அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்து, அவன் கண்கள் சுருங்க, உதடு மடிய நமட்டு சிரிப்பு சிரித்தான் கிருஷ்.
அந்த சிரிப்பின் உள்ளர்த்தம் தெரியாமல், அந்த புன்னகை திலக்கிற்கு நிம்மதியை தர, அவன் மேலும் பேச்சை தொடர்ந்தான்.
திலக் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு, “இந்த டாகுமெண்ட்டில் இருக்கிறதை தான் நீங்க திரும்பவும் சொல்லறீங்க. நீங்க என்ன செய்ய போறீங்கன்னு, எனக்கு முழுசா தெரியணும். ஏதாவது பிரச்சனைனா, நான் தான் அதுக்கு பொறுப்பு. எதுவும் முழுசா தெரியாம என்னால பர்மிஷன் பர்மிஷன் தர முடியாது.” கிருஷ் நிறுத்த, அங்கு அமைதி நிலவியது.
மூவரின் முகமும் யோசனையை காட்ட, “முதலில், காட்டுக்கு போறதும், வர்றதும் அவ்வளவு ஈஸி கிடையாது. உங்க டீமில் ஒரு பொண்ணு இருக்காங்க. அவங்களுக்கும் நாம தான் பொறுப்பு. ஹென்றி வெளிநாட்டவர். அவருக்கு எல்லா இடத்துக்கு போற பர்மிஷன் இருக்கான்னு நான் பார்க்கணும். நீங்க என்ன செய்ய போறீங்கன்னு ஒரு முழு திட்டத்தோட எனக்கு சொல்லுங்க. அதை பார்த்திட்டு நான் சொல்றேன்.”
நிதானமாக ஒரு நேர்மையான அதிகாரியாக பேசினான் கிருஷ். மூவரும் அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு வெளிய வந்தனர்.
அன்றிரவு, கிருஷ் வழமை போல் ஷார்ட்ஸ், பனியன் அணிந்து கொண்டு அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று காற்று வாங்கி கொண்டிருந்தான். சில வருடங்களாக, இதுநாள் வரை இருந்த நிம்மதி தொலைந்து போனதை அவன் அறிவு அவனுக்கு அறிவுறுத்த ஆரம்பித்தது.
மாதங்கி இரவு உடையில் தன் அறையின் பால்கனியிலிருந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
‘எதை மறக்க நினைத்தேனோ, அதை மறக்க முடியாத சூழலில் சிக்கி இருக்கிறேன். கிருஷ்…’ அவள் எண்ணம் ஓட, “வேண்டாம்… வேண்டாம்… எதுவும் யோசிக்க வேண்டாம்.” தனக்கு தானே கூறிக்கொண்டு வெளியே பார்த்தாள்.
முழு நிலவு. கருமையான நிறத்தில் வானம். இருளில் பச்சை நிறமரங்கள் அனைத்தும் கரிய நிற யானைகள் போல் காட்சியளிக்க, ‘மாடிக்கு போய் பார்ப்போம். ரிலாக்ஸ்ட்டா இருக்கும்’ எண்ணிக் கொண்டே மேலே சென்றாள் மாதங்கி.
அவள் மடமடவென்று மாடி ஏற, அவள் காலடியோசையில் அவன் சுதாரித்துக்கொண்டான். ஆனால், அவள் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை. மாடிப்படியில் விளிம்பில் தடுமாறி நின்றாள் மாதங்கி.
அவன் உடையில், அவள் முகம் குனிந்து கொண்டாள். அமெரிக்காவில் பலரை இது போல் உடையில் மாதங்கி பலரை பார்த்திருக்கிறாள் தான். அங்கு , அனைவரும் அப்படி இருக்க, அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.
ஆனால், இங்கு கிருஷை அவள் அப்படி எதிர்பார்க்க வில்லை. ‘நான் இங்கு வந்திருக்க கூடாது.’ அவள் அறிவுறுத்திக்கொண்டு திரும்ப எத்தனிக்க, “நான் யாருக்கும் இடைஞ்சலா இருக்க மாட்டேன்.” கூறிக்கொண்டே அவனும் படி இறங்க எத்தனிக்க, அவள் தடுமாறி விழ, அவன் வலிய கரங்கள் அவளை தாங்கியது.
அவள் அவனணைப்பில்! தோழனாய் அவன் தீண்டல் இருவரின் நினைவலைகளில். காதலனாய் அவன் இதழின் பதிவு அவள் மனதில்.
இன்று, சகமனிதனாக அவன் தீண்டல். அவர்கள் அறிவு அப்படிதான் நம்பியது. அந்த ஸ்பரிசத்தை என்னவென்று அவர்கள் மனம் கணக்கிட ஆரம்பித்தது, அவர்களின் மூளைக்கு கண்ணாம்பூச்சி ஆட்டத்தை காட்டிவிட்டு!
அந்த மெல்லிய, தேக நிற சாட்டின் நைட்டி அவள் உடலின் அங்க வடிவை எடுத்து காட்ட, அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்திருந்தது. அவள் விழாமல் தடுக்க, அவளை பாதுகாக்க மட்டுமே!
தடுமாறி விழ எத்தனித்தவள், பிடிமானத்திற்கு அவன் தோள்களையே பற்றினாள். அவன் சுவாச காற்று, அவள் தேகத்தை தீண்ட, அவன் பிடிமானத்தில் அவள் தன்னை நிதானித்துக் கொண்டிருக்க, அவள் அருகாமையில் அவன் தன் நிதானத்தை இழந்து கொண்டிருந்தான்.
நிகழ் காலமும், கடந்த காலமும் அவனை அழுத்த, ‘நானும் தசையும், ஆசையும் கொண்ட மனிதன் தானே. யாரோ போல் எவ்வளவு நேரம் நடிப்பேன்’ அவன் இதயம் துடித்தது கோபக் கனலோடு.
அவன் கைகள் இப்பொழுது பிடிமானதை இறுக்க, மாதங்கி திடுக்கிட்டு போனாள்.
“இன்னைக்கு விழும் பொழுது என்னை நம்பி என் தோளை பிடிக்கிற? அன்னைக்கு நம்பி என் கைகளை பிடிக்கனுமுனு தோணலைல்ல உனக்கு?” அவன் பிடிமானத்தை விட அவன் வார்த்தைகளில் அழுத்தம் அதிகமாக இருந்தது.
“நான் யாரடி உனக்கு? ஏன் என்னை பிடிக்கிற? படியில் விழுந்து சாக வேண்டியது தானே?” அவன் வார்த்தைகள் காட்டுத்தனமாக விழுந்து கொண்டிருந்தது.
அவள் விழமால் இருக்க, அவன் தான் பிடித்தான் அதன் பின் தான் அவள் அவன் தோள்களை பற்றி கொண்டாள். அன்னிச்சை செயல் போல! அதை அவன் மறந்து போனான். அது தெரிந்தாலும், மாதங்கி , ‘இவன் பேசட்டும். இவன் எல்லையை பார்த்துவிட வேண்டியது தான்.’ முடிவோடு அவனை பார்த்தாள்.
‘காலையிலிருந்து எப்ப இப்படி சிக்குவேன்னு நினைச்சிருப்பானோ?’ மாதங்கி மௌனிக்க, “கேட்குறேன்ல, விழுந்து சாக வேண்டியது தானே? நீ சாக மாட்ட. நான் இருக்கிற இடம் தேடி என்னை சாகடிக்க வந்தியா?” அவள் தேகத்தின் வலியை மனதில் கொண்டு, அவள் விழுந்து விடாமல் இருக்க லாவகமாக கைகளை விட்டவன், அவள் மனதை வருத்த வலிக்க வலிக்க வார்த்தைகளை வீசினான்.
மாதங்கி உதட்டை சுழித்து கொண்டு அசட்டையாக திரும்பி செல்ல எத்தனிக்க, ‘திமிர் பிடிச்சவள். கேட்டா பதில் சொல்ல மாட்டா. உன்னை பதில் சொல்ல வைக்கிறேன்.’ கங்கணம் கட்டிக் கொண்டு அவன் அடுத்து கேட்ட கேள்வியில் அவள் கண்கள் கலங்கி அவள் கண்ணீர்த்துளி, அவன் தோள்கள் தொட்டு சென்றது.
‘ஐயோ…’ அவன் மனம் அரற்றியது. பாறையாய் இறுகி நின்ற அவன், அவள் சிந்திய விழிநீரில் பனியாய் உருக ஆரம்பித்தான்.
‘என் தோள் சேர நான் நினைத்தது, அவளையும் அவளிடும் மாலையையும் தானே? அவள் கண்ணீர் என் தோள் சேரவா நான் அவளை காதலித்தேன்? அதையும் என் சொல்லாலே?’ மறந்து போன அவன் காதல் அவனை வதைத்தது.
அவள் சொற்கள் அவள் பார்வை
அவள் தரிசனம் அவள் தேக ஸ்பரிசம்
உணர்த்தாத அவன் மறந்த காதலை
அவள் கண்ணீர்! அவன்…
தோள் தொட்டு சென்ற அவள் கண்ணீர்…
மறந்த காதலை!
மறக்கவில்லை என உணர்த்தி…
தேள் கொடுக்காய் கொட்டியது.
அவன் மனதை!
அவன் கேள்வியில் அவள் கண்ணீர் வடிக்க…
அவள் விழிநீரில் அவன் விழிமூடி
அகத்தோடு விசும்ப…
அவன் உணர்வுகள் கோபத்தில் தகிக்க…
இளமையின் இயலாமையில்…
அவன் கண்ணீர் அவள் பாதம் தொட்டு சென்றது.
அவளின் கண்ணீரும்! அவனின் கண்ணீரும்!
காதலின் கோலமா? காலத்தின் கோலமா?
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…