nila…pen-2

nilapen_image-969e1033

nila…pen-2

ஆத்ரேயன் நல்ல தூக்கத்தில் இருந்தான். பயணக்களைப்பு, சென்னை வெயில் இரண்டும் அவனை லேசாக சோர்வடைய செய்திருந்தன.

காலையில் குளித்து முடித்துவிட்டு வந்தவனை காமிலா ஆன்ட்டியின் வீட்டிற்கு அழைத்து போனார் பாட்டி. ஆதி சற்று சங்கடத்துடன்தான் போனான். ஆனால் அவனே எதிர்பாராத வகையில் வரவேற்பு இருந்தது.

வீட்டின் தலைவர் கரீம் அவனை ஆரத்தழுவி வரவேற்றார். போதும் போதும் என்று சொல்ல சொல்ல கேட்காமல் இட்லி, சாம்பார், சட்னி, வடை என்று ஒரு விருந்தே படைத்துவிட்டார் மனிதர்.

சட்னியே நாலு வகை இருந்தது. பாட்டி சற்று அப்பால் நகரவும்,

“எங்க வீட்டம்மா வெக்குற நாட்டுக்கோழி குழம்பு இந்த இட்லிக்கு சூப்பரா இருக்கும், இன்னொரு நாள் நான் அதை உனக்கு பண்ணிப்போட சொல்றேன் ஆதி.” என்றார் ரகசியம் போல.

“ஐயையோ! இதுவே சூப்பரா இருக்கு அங்கிள்!”

“வயசு பையன், கல்லைத் தின்னாலும் செரிக்கிற வயசு! நல்லா அள்ளி போட்டு சாப்பிடு!” அந்த கரிசனத்தில் ஆத்ரேயன் சற்று நெகிழ்ந்துதான் போனான்.

“விஸ்வநாதன் எங்களைப் பத்தியெல்லாம் பேசுவானா?” மனிதர் கேட்ட கேள்விக்கு மட்டும் ஆதியிடம் பதில் இருக்கவில்லை. சிரித்து சமாளித்தான்.

ஆனால் ஏன் விஸ்வநாதன் அங்கிள் இவர்களைப் பற்றியெல்லாம் தங்களிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை?! ஒருவேளை அப்பாவிடம் பேசுவாரோ!

உண்ட களை வேறு அவன் கண்களைச் சொக்க வைக்க நேராக வந்து கட்டிலில் விழுந்தவன்தான். ஏ சி யை மிதமாக ஓடவிட்டு தூங்கிவிட்டான்.

தன் மேல் தலையணையால் நான்கைந்து அடிகள் விழவும் திடுக்கிட்டு எழுந்தான் ஆத்ரேயன். எதிரே நம்பி நின்றிருந்தான்!

“என்ன? இது பூலோகமா, இல்லை கைலாசமான்னு சந்தேகமா இருக்கோ?” நம்பி பேசிய பிறகுதான் முழுதாக தூக்கம் கலைந்தது ஆதிக்கு. நம்பிக்கு அருகே நின்றிருந்த இரு வாலிபர்களையும் அப்போதுதான் கவனித்தான்.

“இம்ரான் அன்ட் ராபின்… ரைட்?” ஆதி பேச்சைக் கேள்வியோடு நிறுத்தவும் எதிரே நின்றிருந்த மூவரும் சிரித்தார்கள்.

“என்ன நம்பி, அந்த மட்டோட நிறுத்தி இருக்கீங்களா… இல்லை இன்னும் எங்க இமேஜை ஏதாவது டேமேஜ் பண்ணி வச்சிருக்கீங்களா?”

“டேய்! தெருவுல யார் யாரு இருக்காங்கன்னு சொன்னேன்டா!”

“ம்… ம்… நம்பிட்டோம்! ஹாய் ஆதி! ஐம் ராபின்.” நம்பியை முறைத்துவிட்டு ஆத்ரேயனிடம் கையை நீட்டினான் அந்த இளைஞன்.

“ஐம் இம்ரான்.” மற்றவனும் கையை நீட்ட இருவரது கையையும் பற்றி குலுக்கினான் ஆதி.

“என்ன, எங்க ஊரு வெயிலு ரொம்ப உயிரை வாங்குதோ?”

“இல்லையில்லை, அப்பிடியெல்லாம் இல்லை இம்ரான்…” சிரித்து மழுப்பினாலும் அதுதான் உண்மை என்பது போல இருந்தது ஆதியின் முகபாவம்.

“போகப்போக இன்னும் நிறைய பார்க்க வேண்டி இருக்கும்!”

“அடேய் பசங்களா! வந்ததும் வராததுமா ஒரு மனுஷனை ஏன்பா இப்பிடி டென்ஷன் பண்ணுறீங்க?”

“அப்பிடியில்லை நம்பி, இப்பவே சொல்லி வெச்சுட்டா பிற்பாடு ஆதி ஷாக்கை குறைச்சுக்குவார் இல்லை?” இம்ரானின் வாதத்தில் அனைவரும் ஒன்றாக சிரித்தார்கள்.

சம வயது இளைஞர்கள் நால்வர் சேர்ந்தால் அந்த இடம் எப்படி இருக்குமோ அதைவிட சற்று அதிகமாகவே கலகலப்பாக இருந்தது அந்த அறை.

ஆண்களிடம் இருக்கும் ஒரு சிறப்பு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். தங்கள் வயதை ஒத்த ஒரு வாலிபனைச் சந்தித்து விட்டால் அவனை அவன் நிறைக் குறைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

அதை அவர்கள் பரந்த மனது என்று சொல்வதா… இல்லை பலவீனம் என்று சொல்வதா தெரியவில்லை!

“நம்பி ண்ணா!” சத்தமாக வந்த அந்த குரலில் இதுவரை அந்த அறையில் இருந்த சத்தம் நொடிப்பொழுதில் அடங்கியது. நண்பர்கள் நால்வரும் கட்டிலில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்து கொண்டிருந்தவர்கள் சட்டென்று அமைதியானார்கள்.

“நம்பி ண்ணா, எங்க இருக்கீங்க?” மீண்டும் அதே குரல்.

“துளசி! மேல ரூம்ல இருக்கேன் வாம்மா!” அந்த குரலை இனம்கண்டு கொண்டு மேலிருந்த படியே குரல் கொடுத்தான் நம்பி.

துளசி என்ற வார்த்தையைக் கேட்ட போது ஆத்ரேயன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஓடியது. இன்று காலையில் பார்த்த அந்த மலர் முகம் கண்ணுக்குள் வந்து போனது. இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்தி கொண்டான்.

“சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், இங்க கீழ டைனிங் டேபிள்ல வெக்கட்டுமா?”

“டைனிங் டேபிள்ல வெச்சுட்டு நீ மேல வாம்மா!” சத்தமாக சொன்ன நம்பியை கட்டிக்கொள்ளலாம் போல இருந்தது ஆத்ரேயனுக்கு.

என்னதான் மனதை அடக்கி அடக்கி வைத்தாலும் அந்த முகத்தை ஒரு முறை முழுதாக பார்த்துவிட வேண்டும் என்று மனதில் எழும் ஆவலை இளையவனால் கட்டுப்படுத்த இயலவில்லை.

“ஆதி! இன்னைக்கு காலையில எதிர்த்த வீட்டுல கோலம் போட்ட பொண்ணு யாருன்னு கேட்டீங்க இல்லை?”

“ஆமா, ஞாபகம் இருக்கு, நீங்க கூட துளசின்னு சொன்னீங்களே!”

“கரெக்ட்! நீங்க கண்டிப்பா துளசியை மீட் பண்ணணும், அதுக்கப்புறமா சொல்லுங்க, எங்க துளசியை பத்தி!” ஏதோ தன் உடன்பிறந்ததைப் பார்த்து பெருமைப் பட்டு கொள்வதைப் போல சொல்லிவிட்டு எழுந்து வெளியே போனான் நம்பி.

அந்த பெண் மாடிப்படிகளில் ஏறி வரும் ஓசைக் கேட்டது. இப்போது ஆதியின் அருகே அமர்ந்திருந்த இம்ரான் தன் முழங்கையால் ஆதியின் இடுப்பில் லேசாக தட்டினான்.

சட்டென்று ஆதி திரும்பி பார்க்க இம்ரானின் கண்கள் ராபினை சைகையால் சுட்டி காட்டியது. இது எதையும் கவனிக்கும் நிலையில் ராபின் இல்லை. மாடிப்படியின் முடிவை ஆவலோடு பார்த்திருந்தான்.

“துளசி வந்து போகும் வரைக்கும் ராபினை கொஞ்சம் கவனிங்க ஆதி.” ரகசியமாக இம்ரான் சொல்ல ஆத்ரேயன் திடுக்கிட்டு போனான். ஆச்சரியமாக இப்போது ஆதி இம்ரானைப் பார்க்க,

“உஷ்… பய உருகுவான் பாருங்க.” என்றான் இம்ரான் புன்னகைத்த படியே.

“சும்மா வா துளசி, எதுக்கு இவ்வளவு தயங்குறே.” சொல்லிய படி நம்பி வர அவன் பின்னாலேயே வந்தது அந்த பெண்.

காலையில் ஆதி பார்க்கும்போது கட்டியிருந்த அதே பட்டுப்புடவை. தலை நிறைய மல்லிகைப்பூ. அழகான வட்ட முகம், அதில் சின்னதாக ஒரு செந்நிற ஸ்டிக்கர் பொட்டு.

நெற்றியில் பொட்டு பொட்டாக வியர்வைத் துளிர்த்திருந்தது. விசேஷ வீட்டில் வேலைச் செய்திருப்பாள் போலும், முகத்தில் மலர்ச்சி லேசாக குறைந்து சிறிது களைப்பு தெரிந்தது.

அந்த உயரத்திற்கு ஏற்றாற்போல அளவான உடல்வாகு, புடவைப் பாந்தமாக அவளுக்குப் பொருந்தி இருந்தது. ஆளை அடிக்கும் அழகு என்றெல்லாம் சொல்ல முடியாது! ஆனால்… அந்த முகத்தை இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கலாம்!

“துளசி, இது ஆதி… இன்னைக்கு காலைலதான் லண்டன் ல இருந்து வந்திருக்காரு!”

“பாட்டி சொன்னாங்க ண்ணா.” அந்த முகம் இப்போது ஆத்ரேயனை பார்த்து ஸ்நேகமாக முறுவலித்தது. ஆதி தனக்குள் ஏதோவொன்று அசைவது போல உணர்ந்தான்.

“வணக்கம்! வீடெல்லாம் சௌகர்யமா இருக்கா?” ஏதோ சம்பிரதாயத்திற்காக கேட்க வேண்டும் என்று கேட்டிருக்கும் போலும்.

“ஆ… வீடு வசதியா இருக்கு.” தட்டு தடுமாறினான் ஆதி.

“நம்பி ண்ணா, உங்க எல்லாருக்கும் சாப்பாடு டைனிங் டேபிள்ல இருக்கு, நீங்களே போட்டு சாப்பிடுவீங்களா இல்லை இப்பவே வந்தீங்கன்னா நானே பரிமாறுவேன்.”

“இல்லை துளசி, உனக்கு இன்னைக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும், நீ கெளம்பு நாங்க பாத்துக்கிறோம்!” நம்பி சொல்ல அந்த பெண் மீண்டுமொரு முறை இவர்களையெல்லாம் பார்த்து புன்னகைத்துவிட்டு படிகளில் இறங்கி போனது.

முதுகு வரை நீண்டிருந்த கெட்டியான பின்னல் அவள் நடைக்கேற்ப நாட்டியம் ஆடியது. தன்னருகே இருந்த வாலிபர்களின் முகபாவங்களை சட்டென்று ஆராய்ந்தான் ஆத்ரேயன்.

நம்பியின் முகத்தில், இவள் என் தங்கை என்ற பூரிப்பு தெரிந்தது!

இம்ரானின் முகத்தில், இவள் என் தோழி என்ற பெருமிதம் தெரிந்தது.

ஆனால்… ராபினின் முகத்தில், இதையெல்லாம் தாண்டிய எதுவோ ஒன்று தெரிந்தது. அது என்னவென்று ஆதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஆசையா, காதலா, இல்லை அனுதாபமா?

எதுவாக இருந்த போதும் அது ஆத்ரேயனுக்கு பிடிக்கவில்லை!

இப்போது இம்ரான் ராபினின் நாடியைத் தன் கையால் பிடித்து உயர்த்தி அவன் வாயை வேண்டுமென்றே மூடினான்.

“போதும் மூடுடா! ரொம்ப வழியுது!”

“இம்ரான்! சும்மா இரு! கொன்னுடுவேன்!” ராபின் இப்போது மிரட்டவும்,

“டேய்! நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று தலையில் அடித்து கொண்டான் நம்பி.

“நம்பி, என்ன பிரச்சனை? ஏதோ இருக்கு!” என்றான் ஆத்ரேயன்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஆதி.” அவசர அவசரமாக பதில் சொன்னான் ராபின்.

“என்ன இல்லை? எல்லாம் இருக்கு, எதுக்கு நீ இப்போ ஆதிக்கிட்ட உன்னோட வீரத்தை மறைக்கிற?” இம்ரான் பட்டென்று போட்டுடைக்க ராபினுக்கு இப்போது நிஜமாகவே கோபம் வந்தது.

“இம்ரான்! நீ ரொம்ப பேசுற! நான் ஆதிக்கிட்ட எதையும் மறைக்க நினைக்கலை, எதுக்கு சும்மா கண்டதையும் பேசணும்னுதான் நினைச்சேன்.”

“டேய்! ரெண்டு பேரும் நிறுத்துங்கடா! ஸ்கூல் பசங்க மாதிரி எப்பவும் சண்டைப் போட்டுக்கிட்டு.” நம்பி குரலை உயர்த்தவும் இரண்டு பேரும் அடங்கி போனார்கள்.

“இங்கப்பாரு ராபின், இந்த வெள்ளிக்கிழமை துளசிக்கு நிச்சயதார்த்தம், எவ்வளவு தடங்கல்களுக்கு மத்தியில அது நடக்க போகுதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.”

“நம்பி… இதையெல்லாம் இப்ப எதுக்கு எங்கிட்ட சொல்றே நீ?”

“சும்மா சும்மா கோபப்படாத ராபின்! இதுவரை அவ நம்ம துளசி, ஆனா இனி அப்படியில்லை, அவ இன்னொருத்தனுக்குச் சொந்தம், புரிஞ்சுக்கோ.”

“புரியுது.” ராபின் நிலத்தைப் பார்த்தபடி சொல்ல இம்ரான் அவனைத் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

“என்னப்பா நடக்குது இங்க?” ஆதிக்கு தலைச் சுற்றியது.

“அது ஒன்னுமில்லை ஆதி, ராபினுக்கு சின்ன வயசிலிருந்தே துளசின்னா ரொம்ப பிடிக்கும்.”

“ஓ…”

“அப்பவே, நான் வளர்ந்ததும் துளசியைத்தான் கட்டிப்பேன்னு அடிக்கடி சொல்லுவான்.”

“ஓ… அப்ப கட்டிக்க வேண்டியதுதானே?”

“அப்படி கேளுங்க ஆதி!” இது இம்ரான்.

“டேய், சும்மா இருடா!” இம்ரானை அடக்கிய நம்பி தொடர்ந்தான்.

“அது அப்பிடியில்லை ஆதி, அதுல ஒரு சின்ன குழப்பம் இருக்கு.”

“என்ன குழப்பம்?”

“துளசி ஜாதகத்துல சின்னதா ஒரு ப்ராப்ளம் இருக்கு ஆதி.”

“ஜாதகத்துல ப்ராப்ளமா? எந்த உலகத்துல இருக்கீங்க நம்பி?”

“அப்பிடியில்லை ப்பா, எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்னும் நம்ம ஜனங்க சில விஷயங்கள்ல பழமை வாதிங்கதான், அதைத் தவிர்க்க முடியாது.” அவன் தரப்பு வாதத்தை நம்பி வைக்க இப்போது இம்ரானை திரும்பி பார்த்தான் ஆதி.

“எனக்கு இதுலெல்லாம் நம்பிக்கை இல்லை ஆதி, ஆனா நம்புறவங்களோட நம்பிக்கையை நான் மதிக்கிறேன், அவ்வளவுதான்!” என்றான் இம்ரான்.

இப்போது ராபினை பார்த்தான் ஆத்ரேயன். எதுவுமே பேசாமல் அமைதிமாக இருந்தான் ராபின்.

“இதுதான் ப்ராப்ளம்னா தடாலடியா ஏதாவது பண்ணி இருக்கலாமே ராபின்!”

“என்ன பண்ண சொல்றீங்க ஆதி?”

“உங்க இடத்துல நான் இருந்திருந்தா பொண்ணைத் தூக்கி இருப்பேன்!”

“தூக்கி? அதுக்கப்புறம் என்ன ஆதி?” நிதானமாக கேட்டான் ராபின்.

“என்னய்யா பேசுற நீ? அதான் லவ் பண்ண தெரிஞ்சிருக்கில்லை, அப்போ தூக்கிக்கிட்டு போய் குடும்பம் நடத்தவும் தெரிஞ்சிருக்கணுமில்லை?!” இப்போது கோபப்படுவது ஆதியின் முறையாயிற்று. ஆனால் ராபின் நிதானமாக சிரித்தான்.

“ஜாதகத்துல ஏதோ செவ்வாய் தோஷமாம், அதே மாதிரி ஜாதகம் உள்ளவனைத்தான் கட்டிக்கணுமாம், இல்லைன்னா கட்டிக்கிறவனுக்கு நல்லதில்லையாம்!”

“ராபின்! நீயுமா இப்பிடி பேசுறே?!” இயல்பாக ஒருமைக்குத் தாவி இருந்தான் ஆதி.

“நான் பேசல்லை ஆதி, இந்த தெருவுல இருக்கிற அத்தனை லேடீஸும் கூடிக்கூடி பேசினாங்க, என்னோட அம்மா உட்பட.”

“தப்பா எதுவும் பேசலையே ராபின்! நம்ம துளசிக்கு இப்பிடியொரு ப்ராப்ளம் இருக்கு, என்ன பண்ணலாம்னு கூடி‌ பேசினாங்க, அதுக்குத் தீர்வு தேடினாங்க.” இது நம்பி.

“தீர்வு தேடினவங்க ஏன் தன்னோட பையனை துளசிக்கு கட்டி வெக்கலை?” இது இம்ரான்.

“அந்தளவு பரந்த மனசு அந்த பழைய மனுஷங்களுக்கு இல்லைப்பா, அவங்க இதையெல்லாம் இன்னும் நம்புறாங்க, அதையேன் நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க?” நம்பி சொல்ல ஆதி இப்போது ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டான்.

“ஆக மொத்தத்துல இப்போ பாதிக்கப்பட்டிருக்கிறது ராபின்!”

“ஆமா ஆதி!” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான் இம்ரான்.

“நீ எதுக்குய்யா இப்போ சிரிக்கிறே? எனக்கு எரிச்சலா வருது!” ஆதி கோபப்பட இன்னும் இன்னும் அதிகமாக சிரித்தான் இம்ரான்.

“ஆதி… இன்னைக்கு காலைல பார்த்த உங்களுக்கே இந்த லூசு மேல இவ்வளவு பாசம் வரும்போது, கூடவே வளர்ந்த எனக்கு எப்பிடி இருக்கும் சொல்லுங்க?”

“அப்ப ஏதாவது பண்ணி இருக்கலாமே இம்ரான்?!”

“யாருக்கு? இவனுக்கா? இந்த ஹாஃப் பாயிலை நம்பியா? சும்மா போப்பா! எனக்குப் பசிக்குது, நான் சாப்பிட போறேன்!” சொல்லிவிட்டு இம்ரான் நகர அவனோடு நம்பியும் போய் விட்டான்.

அந்த அறையில் இப்போது ராபினும் ஆதியும் மட்டுமே தனித்திருக்க ஆதியை பார்த்து ஒரு விதமான வலியோடு சிரித்தான் ராபின்.

“என்னாச்சு ராபின்?”

“இம்ரான் சொல்ற மாதிரி நடந்துக்க எவ்வளவு நேரம் ஆகும் ஆதி? ஆனா அதுக்கப்புறமா வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு இல்லையா? லவ் பண்ணுறதுன்னா என்ன ஆதி? ஆசைப்பட்டவளைக் கஷ்டப்படுத்துறதா? நான் அப்பிடி நினைக்கலை, துளசி நல்லா இருக்கணும், யாரைக் கட்டிக்கிட்டாலும் பரவாயில்லை, எனக்கு அவளோட சந்தோஷம் முக்கியம் ஆதி!”

“அப்போ உன்னோட நிலைமை என்ன ராபின்?” கேட்ட ஆதியின் குரலில் ஏகத்திற்குக் கவலைத் தெரிந்தது.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆதி, நாளைக்கு என்னைக் கட்டிக்கிட்டு வாழும் போது எனக்கு சின்னதா ஒரு அடிபட்டாலும் இங்க இருக்கிற அத்தனை மனுஷங்களும் துளசியைத்தான் சாடுவாங்க, ஏன்னா எந்த அளவுக்கு இங்க இருக்கிற மனுஷங்களுக்கு துளசி முக்கியமோ அதேயளவு நானும் அவங்களுக்கு முக்கியம்! என்னால துளசி வாழ்ந்ததாத்தான் இருக்கணும், கஷ்டப்பட்டிட கூடாது, அதுக்குப் பதிலா நான் கஷ்டப்படுறது ஒன்னும் எனக்குப் பெரிசில்லை ஆதி!”

“இதெல்லாம் துளசிக்கு…”

“ஐயையோ! துளசிக்கு எதுவுமே தெரியாது, நம்ம பசங்களுக்கு மட்டும்தான் தெரியும், இப்ப உங்களுக்கு.”

“கஷ்டமா இல்லையா ராபின்? கண்ணுக்கு முன்னாடி நாம ஆசைப்பட்ட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்! எப்பிடிய்யா?”

“துளசிக்கு இப்ப வயசு இருபத்தி ஆறு ஆதி.”

“ஸோ…”

“நம்ம ஊருல எல்லாம் பொண்ணுங்களுக்கு இருபது ஆனாலே மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க, இருபத்தி நாலுக்குள்ள கல்யாணத்தை முடிச்சு வச்சிர்றாங்க.”

“ஓ…”

“ஜாதகத்துல ப்ராப்ளம் இருந்ததால வந்த வரனெல்லாமே தட்டி போச்சு.” ராபின் சொல்ல சொல்ல ஆதிக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

வெளிநாடுகளில் எல்லாம் பெண்கள் எத்தனைச் சுதந்திரமாக தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை, தங்களுக்கு வசதிப்பட்ட நேரங்களில் அமைத்து கொள்கிறார்கள். அப்படியிருக்க இங்கெல்லாம் ஏன் இப்படி?!

“இருக்கிற வீடு சாதாரணமான கொஞ்சம் பழைய வீடுதான்னாலும் சங்கரபாணி அங்கிளுக்கு கிராமப்பக்கமா வயல், தோட்டம்னு ஏக்கர் கணக்குல இருக்கு, அத்தனையுமே துளசிக்குத்தான், படிச்ச பொண்ணு, மேத்ஸ் டீச்சர், டென்த்துக்கு மேத்ஸ் சொல்லி குடுக்குது.”

“ஓ…”

“பார்க்க எவ்வளவு லட்சணமா இருக்கா, அதான் நீங்களே பார்த்தீங்களே ஆதி, துளசிக்கு என்ன குறைச் சொல்லுங்க?!” மனம் நிறைய ஆதங்கத்தோடு பேசும் அந்த வாலிபனை ஒரு இயலாமையோடு பார்த்தான் ஆத்ரேயன்.

“துளசிக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகணும் ஆதி, எனக்கிருக்கிற ஒரேயொரு ஆசை இப்ப அது மட்டுந்தான், அவ நல்லா இருக்கணும், வாங்க கீழ போய் சாப்பிடலாம்.”

“ராபின்!” படிகளில் இறங்க ஆயத்தமான தன் புதிய நண்பனை அழைத்தான் ஆதி. ராபின் நின்று திரும்பி பார்த்தான். எந்த தயக்கமும் இன்றி அவனை அணைத்து கொண்டான் ஆதி.

“ஆதி… என்ன ஆச்சு?!”

“தன்னோட ஆசை நிராசையா போனாலும் பரவாயில்லை, அந்த பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைச்சீங்க பார்த்தீங்களா… அந்த சுயநலமில்லாத அன்பு, நல்ல மனசு எல்லாருக்கும் வராது ராபின்.”

“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை ஆதி.” ஆதியின் நெகிழ்ந்த முகத்தை ஒரு சங்கோஜத்தோடு பார்த்துவிட்டு கீழே இறங்கி போய்விட்டான் ராபின். ஆத்ரேயனுக்கு தன்னை மீட்டுக்கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது.

***

இரவு ஒன்பது மணியோடு அந்த தெரு ஓய்ந்து அடங்கிவிட்டது. அன்று விசேஷம் வேறு இருந்ததால் எல்லோரும் கொஞ்சம் அதிகப்படியாகவே களைத்து போனார்கள்.

ஆத்ரேயன் தனது பெட்ரூமின் பால்கனியில் நின்றபடி அந்த தெருவையே பார்த்திருந்தான். இன்று காலையில்தான் அந்த தெரு அவனுக்கு அறிமுகமானது என்று சற்றும் அவனால் நம்ப முடியவில்லை.

ஏதோ ஒரு பந்தம் இருக்க போய்த்தான் தனக்கு இத்தனை மன வேதனைகளும் வந்து தான் இந்தியா வந்தோமோ என்று இன்று பல முறை ஆதி நினைத்துவிட்டான்.

இரவு உணவையும் பாட்டிதான் கொண்டு வந்திருந்தார். தன் வெண்கல குரலில் சிறிது நேரம் இவனோடு அளவளாவியவரிடம் தனக்குத் தேவையான தகவல்களை நாசூக்காக எடுத்து கொண்டான் ஆதி.

துளசிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பாங்க்கில் வேலைப் பார்க்கின்றானாம். கை நிறைய சம்பாதித்த போதும் துளசிக்கு ஏற்ற வரனில்லை என்று பாட்டி சிறிதே வருத்தப்பட்டார்.

“மூக்கும் முழியுமா எவ்வளவு அழகா லட்சணமா இருக்கா! பொறுப்புன்னா பொறுப்பு அப்பிடியொரு பொறுப்பு! அந்த குழந்தைக்கு ஆண்டவன் இன்னும் கொஞ்சம் நல்லதா நாடி இருக்கலாம்! ஹூம்… நாம என்னத்தைப் பண்ண முடியும் சொல்லு ஆதி! எல்லாம் அவன் சித்தம்!”

ஆத்ரேயனுக்கு மனதுக்குள் பிசைந்தால் போல இருந்தது. ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?! அந்த மலர் முகம் அவன் கண்களுக்குள் அடிக்கடி வந்து போவதை அவனால் தடுக்க இயலவில்லை.

ராபின்! அவனை என்னவென்று சொல்வது?! ஆண்டு கணக்கில் ஆசைப்பட்டவன் வாடி நிற்க, தகுதியே இல்லாதவனுக்கு ஒரு பெண்ணைக் கொடுப்பதா?!

தன் அன்பு கூட அந்த பெண்ணைக் காயப்படுத்தி விடக்கூடாது என்று ஒருவன் நினைக்கின்றான் என்றால் அந்த அன்பு எத்தனைத் தூய்மையானதாக சுயநலம் அற்றதாக இருக்க வேண்டும்!

என்ன மாதிரியான நியாயம் இதுவெல்லாம்?! யார் இதுபோன்ற அர்த்தமில்லாத கொள்கைகளை எல்லாம் வகுத்து வைத்தது?! தனக்குள்ளேயே ஒரு பட்டிமன்றம் வைத்து வாத பிரதிவாதங்களை நடத்திக்கொண்டிருந்த ஆதியை கலைத்தது அவன் தொலைபேசியின் சிணுங்கல். தாமஸ் அழைத்து கொண்டிருந்தான்.

“ஹலோ தாமஸ்!” தனது மனக்குழப்பங்களை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு புத்துணர்வோடு பேச்சை ஆரம்பித்தான் ஆத்ரேயன்.

“ஹலோ சார், எப்பிடி இருக்கீங்க? ஜர்னி எப்பிடி இருந்தது?”

“எல்லாம் ஓகே தாமஸ், அப்பா எப்பிடி இருக்காங்க?”

“மூர்த்தி சாரை விஸ்வநாதன் சார் அவங்க ஃபாம் ஹவுசுக்குக் கூட்டிட்டு போய்ட்டாங்க, நாலஞ்சு நாள் தங்கிட்டுத்தான் வருவாங்கன்னு நினைக்கிறேன்.”

“தட்ஸ் குட்! விஸ்வநாதன் அங்கிள் கூட இருக்கிறது அப்பாக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்.”

“ஆமா சார்.”

“அம்மா எங்க?”

“அம்மாவை உங்க அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு போனாங்க.”

“ஓ… எதுக்கு இப்ப அம்மாவை அவன் கூப்பிடுறான்?”

“இதே கேள்வியைத்தான் உங்க அப்பாவும் கேட்டாங்க, ஆனா அம்மா எதுவுமே பேசாம அண்ணா கூட கிளம்பி போய்ட்டாங்க.”

“ம்…” ஆதியின் குரல் உறுமலாக வந்தது.

எல்லாம் பண்ணி முடித்துவிட்டு எதற்காக இந்த பயல் இப்போது அம்மாவைத் தன்னோடு அழைக்கின்றான். அம்மா மார்க்ரெட்டிற்கு அண்ணா என்றால் கொஞ்சம் பாசம் அதிகம்.

வீட்டில் மூத்த பிள்ளை என்பதால் அதிகம் பேசாமல் பொறுப்பாக எப்போதும் நடந்து கொள்வான் ஆதேஷ்.

ஆனால்  அவனது எல்லா நல்ல குணங்களும் அவன் திருமணத்தோடே காணாமல் போனது. வீட்டிற்கு வந்த பெண் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவன் மனதை மாற்றி விட்டிருந்தாள்.

“சார் நீங்க எப்பிடி சார் இருக்கீங்க? புது இடம், புதிய மனுஷங்க… கஷ்டமா இருக்கா, இல்லை என்ஜாய் பண்ணுறீங்களா?”

“அதையேன் கேக்குற தாமஸ், இன்னைக்கு காலையில ஒரு ஆறு மணி போல சென்னைக்கு வந்து சேர்ந்துட்டேன், அப்போ…” என்று ஆரம்பித்து அன்றைக்கு நடந்தது அத்தனையையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் ஆதி.

“இன்டரெஸ்டிங்! அப்போ உங்களுக்கு பொழுது நல்லாவே போகும்னு சொல்லுங்க!”

“தாமஸ்!” அழைத்த குரலில் லேசாக வலி இருக்கவே தாமஸ் கொஞ்சம் அதிர்ந்து போனான்.

“சார்! என்னாச்சு சார்? ஏன் சட்டுன்னு டல்லாகிட்டீங்க?”

“மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு தாமஸ்.”

“ஏன் சார்?”

“அந்த பொண்ணைப் பார்க்கும் போது… மனசுக்குள்ள லைட்டா வலிக்கிற மாதிரி இருக்கு தாமஸ்!”

“ஓ…”

“ஜஸ்ட் டுவென்டி சிக்ஸ் தாமஸ்! அம்மா கூட இல்லையாம், நம்ம ஊர்ல எல்லாம் இந்த வயசுல இப்பதான் யூனிவர்சிட்டியை முடிச்சிட்டு பொண்ணுங்க ஜாலியா இருப்பாங்க! ஆனா இங்க எல்லாம் தலைகீழா இருக்கு தாமஸ்.”

“ஓ…” தன் முதலாளியை அந்த பெண் வெகுவாக பாதித்திருக்கிறாள் என்று தாமஸுக்கு புரிந்தது. அவன் வாயிலிருந்தே அனைத்தும் வரட்டும் என்று அமைதியாக கேட்டு கொண்டிருந்தான்.

“வேலைக்குப் போகுது, பொறுப்பா வீட்டையும் அப்பாவையும் பார்த்துக்குது, ஆனா ஜாதகம் மண்ணாங்கட்டின்னு எதையெதையோ சொல்லி அந்த பொண்ணைப் படுகுழியில தள்ள பார்க்கிறாங்க!”

“படுகுழின்னு நாமளே எப்பிடி சார் முடிவெடுக்கிறது?”

“அதைத்தான் பாட்டி சொன்னாங்களே!” இப்போது ஆதியின் குரலில் ஒரு எரிச்சல் தெரிந்தது.

அதற்கு மேல் தாமஸ் எதுவும் பேசவில்லை. பாட்டி, பார்த்திருக்கும் வரன் அந்த பெண்ணிற்குப் பொருத்தமில்லை என்றுதானே சொல்லி இருக்கிறார்!

மற்றைய படி பையன் பாங்க்கில் வேலைப் பார்க்கிறான். பாங்க்கில் வேலை என்றால் நன்றாய் சம்பாதிப்பவனாகத்தானே இருக்க வேண்டும்?!

ஆண்பிள்ளைக்கு எதற்கு அழகு?! கைநிறைய சம்பாதித்து வருபவளை நன்றாக பார்த்து கொண்டால் போதாதா?!

“என்ன தாமஸ், திடீர்னு சைலண்ட் ஆகிட்டே?”

“இல்லை சார், நீங்க சொன்னது எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தேன்.”

“ம்…”

“ஏன் சார்?”

“சொல்லு தாமஸ்.”

“இன்டியாக்கு கொஞ்சம் முன்னாடியே போயிருக்கலாமோன்னு தோணுதா?” தாமஸ் எந்த ஒளிவு மறைவுமின்றி கேட்க ஆத்ரேயன் கொஞ்சம் திணறித்தான் போனான்.

“கொஞ்சம் முன்னாடின்னா?”

“அந்த துளசிக்கு கல்யாணம் நிச்சயமாகிறதுக்கு முன்னாடி!” தாமஸ் நிதானமாக சொன்னான். அதற்கு ஆத்ரேயன் பதில் சொல்லவில்லை.

தன் முதலாளி இதற்கு பதில் சொல்லமாட்டார் என்று தெரிந்த தாமஸும்,

“பை சார்.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான். அதற்கு மேல் அந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்க சக்தியில்லாமல் தனது லாப்டாப்பை எடுத்து கொண்டான் ஆத்ரேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!