TholilSaayaVaa7

TholilSaayaVaa7

7

***

நாள் முழுவதும் மீட்டிங் வேலை என்று கழிய, சோர்வாய் நாற்காலியில் சாய்ந்து கண்கள் மூடிக்கொண்டிருந்தவன், செல்போன் ஓசையில் கண்கள் திறக்க, அழைப்பது மாயா என்பதை கண்டு உற்சாகமானான்.

 

“சொல்லுடா என்ன ஆஃபீஸ் டைம்ல?” இரண்டு நாட்களாய் அவன் முகத்தில் இல்லாத புன்னகை இன்று இழையோடியது

 

“பைரவ் எனக்கு பயமா இருக்கு…நீ வரியா?” மாயாவின் குரலில் தெரிந்த நடுக்கத்தில் அலுப்பு மறந்து எழுந்து நின்றுவிட்டான்.

 

“என்னமா? என்னாச்சு? எங்க இருக்கடா?”

 

“ஆபீஸ் வெளிலதான் இருக்கேன். நீ வா ப்ளீஸ்” அழைப்பைத் துண்டித்தாள்.

 

செக்ரெட்டரி கீர்த்தியிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன் புயலெனக் கட்டிட வாயிலை அடைந்தான்.

 

கை நகங்களைக் கடித்தபடி ஸ்கூட்டி மீது அமர்ந்திருந்தவள், பைரவை கண்டதும் ஓடிச்சென்று,

 

“எனக்கு படபடன்னு இருக்கு, நீ…நான்…பொண்ணு…வந்து…”

 

அவள் தோளைப் பற்றி உலுக்கியபடி, “இங்க பார்… இங்கபாறேன்… ரிலாக்ஸ்… பொறுமையா சொல்லு. என்னாச்சு?” பதற்றத்தை மறைத்துக்கொண்டு பொறுமையாக அவன் கேட்க

 

“என்னை பொண்ணு பாக்க வராங்க…பயமா இருக்கு! பைரவ் ப்ளீஸ் நீயும் வாயேன்”

 

“இடியட்!” கத்திவிட்டவன், சாலை என்பதால் குரலைத் தாழ்த்தி,

 

“அறிவு இருக்கா? நான் என்னவோ ஏதோன்னு பதறி ஓடிவந்தா…இதுக்கா இப்படி?”

 

“ப்ளீஸ் எவ்ளோ வேணா திட்டிக்கோ, ஆனா எனக்கு துணைக்கு வா. சொல்ல தெரியல ஆனா பயமா இருக்கு. வாயேன் வாயேன்…”

 

“நான் எப்படிடா வர முடியும், நல்லாவா இருக்கும்? அதான் ஆன்டி அங்கிள் இருக்காங்க மாதவன் இருக்கான், போ! நல்ல பொன்னுல போயிட்டுவா” அவன் சமாதானம் செய்ய

 

“இல்ல நீ வரலைனா நான் போகல, நீ வந்து அவனை பார்த்து எப்படின்னு சொல்லு. நீ கூட இருந்தா எனக்கு தைரியமா இருக்கும். ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்லம்ல ப்ளீஸ்” அவளை மேலும் கெஞ்ச பொறுக்கத்தவன்,

 

“சரி நீ முன்னாடி கிளம்பு நான் வரேன்”

 

அவளை அனுப்பிவைத்தவன், காரை நோக்கிச் சென்றபடியே மாதவனுக்கு ஃபோன் செய்து பேச, மாயாவின் வீட்டினரும் அவன் வந்தால் மாயா சகஜமாக இருக்க உதவியாகத்தான் இருக்கும் என்று சொல்ல, அவள் வீட்டிற்கு கிளம்பினான்.

 

மாயாவின் வீட்டில் காலடி எடுத்துவைக்கும் பொழுதே வாசம் ஆளைத் தூக்க, சப்புகொட்டிய மாயா, அதுவரை இருந்த பதற்றத்தை மறந்து,

 

“ஹை உருளைக்கிழங்கு போண்டா…வாவ்!” என்று நேராகச் சமையற்கட்டிற்குள் சென்று, சிலபல போண்டாக்களை கபளீகரம் செய்யத் துவங்கினாள்.

 

வேலையாக அறைக்குள் இருந்த கீதாவும் கண்ணனும், தோட்டத்தில் ஃபோன் பேசிக்கொண்டிருந்த மாதவனும் மாயா வந்ததை கவனிக்கவில்லை.

 

“மாயா…” குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்த பைரவ் கண்ட காட்சியில் வாசற்படியிலேயே சிரித்தபடி நின்றுவிட, அவன் குரல் கேட்டு வெளியே வந்த மாயாவின் பெற்றோர்,

 

“வா பா…மாயா இன்னும் வரலையே”

 

பைரவோ சிரிப்பை அடக்க முடியாமல், வாசலுக்கு நேர் எதிரே இருந்த சமையற்கட்டின் வாயிலில் நின்றிருந்த மாயாவை காட்டி, விழுந்து விழுந்து சிரிக்க

 

குழப்பத்துடன் திரும்பிப் பார்த்த பெற்றோர் கண்கள் விரிய,

 

“வா பைரவ்” என்றபடி வந்த மாதவனும் தங்கையின் கோலம் கண்டு சிரிக்க துவங்கினான்.

 

வாயில் ஒரு முழு போண்டாவை அடக்கிகொண்டு இரு கைகளிலும் போண்டாக்களை வைத்துக்கொண்டு, அகப்பட்ட திருடன் போல் மாயா பேஸ்தடித்து நின்றாள்.

 

“என்னடி இது? வரவங்களுக்காக சூடா செஞ்சுவச்சா…” என்றபடி சமையல் அறைக்குள் சென்ற கிதா,

 

“ஹேய்…” என்று கையை ஓங்கியபடி மாயாவை நெருங்க, அவளோ மாதவனின் பின்னே ஒளிந்து கொண்டு,

 

“ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்” வாயிலிருந்த போண்டாவை அவசரமாக விழுங்க முடியாமல் திணறியவள், அடிவாங்காமல் போக்குக்காட்டியபடி, மாதவனிடமிருந்து இப்பொழுது பைரவின் பின்னே ஒளிந்துகொள்ள,

 

அவளை மறைத்தபடி கைகளை விரித்துகொண்ட பைரவ், “ஆண்டி ப்ளீஸ் பாவம் குழந்தை தானே…”

 

“யாருபா குழந்தை? அவளா? பெருச்சாளி பெருச்சாளி குண்டுப் பெருச்சாளி…மரியாதையா வா” அவனை விலகி மகளை நிருங்க முயற்சித்தார்

 

கிருஷ்ணனும் “விடு மா குழந்தை ரெண்டு போண்டா சாப்டா தப்பா?”

 

“ரெண்டா? பாதிக்கு மேல தின்னுருக்கா. அதென்னடி வயிறா வண்ணாஞ்ஜாலா?” கீதா விடாது திட்ட, ஒருவழியாக வாயிலிருந்த போண்டாவை விழுங்கியவள்,

 

“நீ இவளோ நல்லா சமைச்சா நான் என்ன செய்ய முடியும்?” உதட்டைப் பிதுக்க,

 

“அவ்ளோ போண்டாவையுமா சாப்டா?” மாதவன் கண்கள் விரிய

 

“கண்ணு வைக்காதே வளர்ற குழைந்தை” பைரவ் கிண்டல் செய்ய

 

“நீயும் அவங்க கூட சேர்ந்துட்டேல? போ போ” கையிலிருந்த மிச்ச சொச்ச போண்டாக்களை திருப்பி வைத்தவள் கோவமாக அறைக்குச் செல்ல

 

கீதா “ஒழுங்கா குளிச்சுட்டு ரெடி ஆகு அவங்க வந்துர போறாங்க” என்று மாயாவிடம் கத்தியவர், “இவளுக்கு சோறுபோட்டே அந்த பையன்…” காதில் கேட்காதபடி புலம்பிக்கொண்டே சமயலறைக்கு சென்றார்.

 

ஆண்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க, மாயா “அம்மா!” என்று அலறியதில் பதறியடித்து பைரவும் மாதவனும் அவள் அறைக்கு ஓடினர்.

 

மாயாவோ கதவைத் திறக்காமல், “அம்மாவை கூப்பிடு புடவை கட்டவே வரலை” உள்ளிருந்தபடி கத்த, ஆண்கள் இருவரும் நெளிந்தபடி கீழே சென்று கீதாவை அனுப்பி வைத்தனர்.

 

மாதவன் “பைரவ் எனக்கென்னமோ பயமா இருக்கு பா, அவங்க கிளம்பர வரை இவ எதுவும் சொதப்பாம இருக்கணும்”

 

பைரவ் “சமாளிச்சுக்கலாம் டோன்ட் வொரி” சமாதானம் செய்தான்.

 

சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக மாயாவிற்கு புடைவை கட்டிவிட்ட கீதா, மகளுக்குத் திருஷ்டி கழித்து,

 

“இப்போதான் நீ பொறந்தது போல இருக்கு, அதுக்குள்ள வளந்துட்டே” மகளைக் கட்டிக்கொண்டு கண்கலங்கியவரை மாயா,

 

“நீ தான் என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்ற. பேசாம ஒரு நாலஞ்சு வருஷம் போகட்டுமே”

 

“அதெல்லாம் பாத்துக்கலாம். வா” மகளை அழைத்துச் சென்றார்

 

புடவையில் நடக்கத் தெரியாமல் தடுமாறி ஒருமார்கமாய் கீதாவை பிடித்தபடி நடந்துவந்தாலும், புடவை மாயாவிற்கு பாந்தமாகத்தான் இருந்தது.

 

கண்ணனும் மாதவனும் அசந்து அவளைச் சூழ்ந்து கொண்டு கொஞ்ச, அவர்கள் நால்வரையும் தன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டான் பைரவ்.

 

அவனருகில் சென்ற மாயா, ஆர்வமாய், “நீ வாங்கி தந்த புடவை, நல்லா இருக்கா?” அவன் முகத்தையே பார்க்க

 

“அழகா? பொம்மை மாதிரி இருக்கேடா, வரவன் கண்டிப்பா இன்னிக்கே கல்யாணம் செஞ்சுக்குடுங்கன்னு கேட்கப்போறான் பாரு” புன்னகைக்க

 

“பாஸ் இது எனக்கே கொஞ்சம் ஓவரா இருக்கு”

 

“அப்டியா?”

 

“எஸ்”

 

சிரித்தவன் “நெஜம்மா இன்னிக்கிதான் என் கண்ணனுக்கு நீ பொண்ணா தெரியிரே” என்று சொல்ல

 

“அப்போ இவளோ நாளா?” அவள் முறைக்க

 

“வாலில்லாத குரங்குன்னு நெனச்சுருப்பான்” மாதவன் வம்பிழுக்க,

 

மாப்பிள்ளை வீட்டார் வாயிலருகில் வந்துவிட்டதாக கீதா முறைக்கும் வரை அவர்கள் அரட்டை கச்சேரி தொடர்ந்தது.

 

மாப்பிள்ளை பையனைப் பார்க்க மாயாவைவிட பைரவ் தான் ஆர்வமாக இருந்தான்.

 

மாப்பிள்ளையுடன் அவன் பெற்றோர் மற்றும் சற்று வயது முதிர்ந்த பெனொருவர் (மாப்பிள்ளையின் அத்தை முறையாம்) வந்திருந்தனர். அறிமுக படலம் முடிந்து,

 

“மாயா எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வா” என்று கிருஷ்ணன் குரல் கொடுக்க,

 

அசலே புடவையில் தள்ளாடியவள், கையில் காஃபி ட்ரேயை வைத்துக்கொண்டு, வித்தை காட்டுவதை போல இடதும் வலதுமாக ஆடியபடி நடக்க, மாயாவின் குடும்பத்தினர் மற்றும் பைரவ் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ள, ஒருவழியாகத் தடுமாறி அனைவர்க்கும் காபி கொடுத்தாள்.

 

அதற்கு மேல் விஷ பரீட்ஷை செய்ய விரும்பாமல், பலகாரங்களைக் கீதாவே கொண்டுவந்தார்.

 

மாயா அமர்ந்திருக்க, அவள் பக்கத்திலேயே மாதவனும் பைரவும் இருபுறமும் காவலர்கள்போல அமர்ந்துகொண்டனர்.

 

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, மாயா மாதவன் பைரவ் மூவரும் அவர்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில் பேசிக் கொண்டனர்.

 

“அப்பறம் பொண்ணுக்கு பாட தெரியுமா?” மாப்பிள்ளையின் அத்தை கேட்க,

 

மாதவன், “மாயா பையனைப் பிடிச்சிருந்தா பாடதே. பிடிக்காட்டி பாடு அவனே ஓடிடுவான்”

 

பைரவ் மாயா இருவரும் சிரிப்பை அடக்கிக்கொள்ள

 

கீதா, “பாட்டெல்லாம் கத்துக்கல…” என்று தயங்க,அதில் முகம் சற்று மாறியது பையனின் அத்தைக்கு.

 

“எங்க பாஸ்கர்(மாப்பிள்ளை) ஜோரா தப்லா வாசிப்பான். பொண்ணுக்கு பாட தெரிஞ்சா, ரெண்டு…” அவர் எதோ பேசிக்கொண்டே போக

 

பைரவோ, “எங்க டேடி வாசிக்க, மம்மி ஆட ஒரே கூத்தா இருக்கும்” வடிவேலு டயலாக்கை அதே போல் தாழ்ந்த குரலில் சொல்ல, கிளுக்கென்று சிரித்துவிட்ட மாயா, கிருஷ்ணனின் முறைப்பில் அமைதியானாள்.

 

“பாஸ்கர் ரயில் வேஸ்ல பெரிய உத்யோகத்துல இருக்கான், அவன் தான்…” அத்தை பையனின் பெருமை பேசத் துவங்க

 

“ட்ரெயின் நின்னா அவன் தான் இறங்கி தள்ளுவானாம்” மாதவன் ரகசியமாய் குரல் கொடுக்க, இப்பொழுது ஒருநொடி சிரித்துவிட்டு பைரவ், வேகமாக சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள

 

அதைக் கவனித்துவிட்ட பாஸ்கர், “நீங்க?” என்று பார்க்க

 

“இவர் என் பிரென்ட் பைரவ்” ஆர்வமாக அறிமுகம் செய்த மாயாவின் மீதிருந்த பாஸ்கரின் பார்வை, பைரவ் மீது விழும்போது முறைப்பாக மாறியதை பைரவ் மட்டுமே உணர்ந்தான்.

 

“உங்க அவிப்பிராயம் சொன்னீங்கன்னா…” கிருஷ்ணன் மெல்ல தயக்கத்துடன் கேட்க

 

“பொண்ணு மாநிறமாத்தான் இருக்கா, எங்க பாஸ்கர் நல்ல சேப்பு…” அத்தைக்காரி இழுக்க

 

பைரவின் பற்கள் கடிபடும் ஓசை மாயாவின் காதில் விழ, ‘ஆஹா…’ மெல்ல பதட்டம் தோன்ற துவங்கியது

 

“பையன் நல்ல உசரம், பொண்ணு குள்ளமா இருக்கா…” அத்தை நிறுத்துவதாக இல்லை போலும்

 

பைரவ் உப்ப் என்று பெருமூச்சுவிட, மாயா ‘போச்சு என்னவோ ஆகபோது’

 

“எங்க பையனுக்கு வேலை வேலைனு நேரம் சரியா இருக்கும், உங்கப்பொண்ணு வேலைக்குப்போய் தான் எங்கவீட்ல ஆகணும்னு இல்ல, எதோ பொம்மை போடுற வேலைதான் செய்யுறா போல, அதை விட்டுட சொல்லிடுங்க” என்ற அத்தை மேலும்,

 

“எங்க பக்கத்துல சாதாரண குடும்பம்னாவே கொறைஞ்சது நூறு பவுன் போடுவாங்க, எங்க பாஸ்கர் மாதிரி பையன்னா…பேசாம நீங்க ஒரு நூத்தி ஐம்பது போட்டுடுங்க, இதெல்லாம் தாத்தா சொத்துதானே? கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பாஸ்கர் பேருல பத்திரம் பண்ணிகொடுத்துடுங்க, ஹனிமூன்னு யூரோப் டூர் போதும் …” கூச்சமே இல்லாமல் பட்டியலை வாசிக்க,

 

இப்பொதுழு பற்கள் கடிபடும் ஓசை அவள் வலது காதில் விழ, அது மாதவன் என்று உணர்ந்துகொண்டாள்.

 

‘ம்ஹும் இதுங்க இன்னிக்கி உருப்படியா வீடு போய்ச் சேராது’ கண்களை மூடிக்கொண்டாள்

 

அவர்கள் பேச்சில் கிருஷ்ணன். கீதா இருவருக்குமே கோவம் தலைக்கேற, பாஸ்கரின் குணத்தை தெரிந்துகொள்ள எண்ணிய கிருஷ்ணன்,

 

“பையன் எதுவுமே பேச மாட்டேங்குறாரே…” என்று கேட்க

 

“அவன் மட்டுமா அவன் அப்பா அம்மா கூடத்தான் வாயே தொறக்கலை, எல்லாம் இந்த அத்தை ஆட்சிபோல” மாதவன் முணுமுணுக்க

 

“ம்ம் இவன் தேறமாட்டான்” மாயா பொதுவாக பைரவ், மாதவன் இருவரிடமும் சொல்ல

 

பாஸ்கர், “அது…” என்று இழுக்க

 

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு பா” கிருஷ்ணன் சொல்ல

 

“பொண்ணு படிப்பு, அந்தஸ்து, உங்க குடும்பம் எல்லாம் எனக்கு ஓகே” என்றவன் தயங்கி,

 

“எனக்கு வரபோற மனைவி என் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு அழகா இருக்கணும்னு நெனச்சேன், கொஞ்சம் கலரா… உயரமா, ஒல்லியா, இன்னும் ஸ்டைலிஷா…” என்று சொல்லிக்கொண்டே போக

 

உரக்க தொண்டையை செருமினான் பைரவ்,

மாதவனோ, கைகளை நீட்டிச் சட்டையை மடித்துவிட,

 

‘ஆச்சு இனி கடவுளே வந்தாலும்…ஹும்ஹும்’ தலையை கவிழ்ந்து கொண்டாள் மாயா

 

“ஏன் சொல்றேன்னா என் தகுதிக்கு இன்னும் அழகா எதிர்பார்த்தேன்…” அவன் மீண்டும் தொடர

 

பைரவின் நாற்காலியில் அசைவை உணர்ந்தவள், அவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ கோவத்தை கட்டுப்படுத்திக்கொள்ள போராடுவது அவன் முகத்தில் தெரிந்தது.

 

“எல்லாத்துக்கும் மேல, நாங்க டீசென்ட் ஃபேம்லி! இப்படி பாய் ஃபிரெண்டை கூடவே வச்சுக்கிட்டு பொண்ணுபாக்க குப்புடறது…”

 

“டேய்!” கோவமாக எழுந்து நின்றிருந்தாள் மாயா, அனைவரும் நடப்பதை உணரும் முன்னே

 

“நானும் பாக்கறேன் சும்மா நொட்டு நொள்ளைன்னு?” , அவள் கரம்பற்றி இழுத்த மாதவன், “மாயா…” என்று அவளை அடக்க முற்பட,

 

அவன் கைகளை உதறிய மாயா, மீண்டும் பாஸ்கரை நோக்கிப் பாய்ந்தாள்,

 

“என் நட்பை கேவலமா சொல்றே? டேய் என் பைரவ் மாதிரி பாய் பிரென்ட் இருந்தா, நான் ஏண்டா உன் முன்னாடி உட்கார்ந்து கிட்டு கெடக்கேன்? கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிருப்பேன்”

 

பாஸ்கரும் கோவமாக, “போக வேண்டியது தானே, நீ சுமாரா இருக்கறதால தான், அவன் உன்னை வச்சு டைம் பாஸ் பன்றான். சலிச்சுப்போனதுனால என் தலையில கட்ட பாக்குறீங்க!” அவன் எள்ள, மாதவன் கோவமாக “டேய்! “ என்று பாஸ்கரை நோக்கி முன்னேற, அதற்குள் பைரவ் பாஸ்கரின் சட்டையை பிடித்திருந்தான்.

 

“ஷட் அப் ! யூ **! ஒரு வார்த்தை இனி பேசின, நொறுக்கிடுவேன். வெளிப்புற அழகை வச்சு ஒரு பொண்ணை அளவிடர கேடுகெட்ட குணம் உங்க குடும்பத்துக்கே இருக்கா? நானும் பொறுத்து பொறுத்து பாக்கறேன்.

 

டைம் பாஸ்னா சொன்ன? அடேய் உனக்கு பெண்கள் கிட்ட எப்படி பழகனும்னும் சொல்லிக் கொடுக்கலை போல, உன் அல்ப புத்திக்கு எங்க மாயா கேக்குதா? அதுவும் உன் அத்தைக்காரி” என்று அத்தையை ஆக்ரோஷமாய் பார்த்தவன்,

 

“நீங்க என்ன வித்தை காட்டவா பொண்ணை தேடுறீங்க? ஆடத் தெரியுமா பாட தெரியுமான்னு?

 

என்ன சொன்னேங்க பொம்மை போட்றாளா? அவ திறமையை புரிஞ்சுக்க கூட உங்களுக்கு அறிவு பத்தாது, அதென்ன உங்க வீடு புள்ளை வேலை ஒசத்தி, அதே உத்தியோகத்தை வேற வீட்டு பொண்ணு பண்ண கேவலமா பேசுவீங்களா?

 

வேலைக்குப்போய் சம்பாதிக்க வேண்டாமா? அதானே, மொத்தமா நகை சொத்துன்னு சுருட்ட பிளான் போட்டுடீங்கல!” அவன் குரலில் அத்தனை எள்ளல்.

 

பைரவ் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்ட பாஸ்கர் மாயாவிடம் கோவமாக, “என்னடி ஆள் வெச்சு மிரட்டுறியா? உள்ளதை சொன்னா எரியுதோ?” என மாயாவின் மீது பாய்ந்தான்‌.

 

நொடி நேரத்தில் பாஸ்கரின் செயலை உணர்ந்த பைரவ் லாவகமாகப் பாஸ்கரின் கழுத்தை நெருக்கிப் பிடித்து, பின் புறமாக நகர்த்தி சென்று, அங்கிருந்த சுவற்றில் அழுத்தி நிருத்தி,

 

“என் மாயாவ தொட்டா, இல்ல இல்ல தொடனும்னு நெனச்சா கூட உன இங்கயே பினிஷ் பண்ணிடுவேன்.” என எச்சரித்தவன், பாஸ்கர் கண்கள் பிதுங்கி மூச்சு விடச் சிரமப் படுவதைக் கண்டு, அவனைப் பிடித்திருந்த கையை விலக்கவும், தள்ளாடி கீழே சரிந்தான் பாஸ்கர்.

 

மிரண்டு தன்னை அண்ணாந்து பார்த்தவனை, கொலை வெறியோடு பார்த்தவன்,

 

“ராஸ்கல்! மரியாதையா உன் உருப்படாத குடும்பத்தை கூட்டிகிட்டு ஓடிடு, இல்ல உங்க நாலுபேரையும் இல்லாம செஞ்சுடுவேன்” அவன் கர்ஜித்ததில் அந்தக் குடும்பமே துண்டைக்காணும் துணியை காணுமென்று பின்னங்கால் பிடரியில் பட ஓடியது.

 

பைரவ் பேசத் துவங்கியது முதல் அந்தக் குடும்பம் ஓடும்வரை மாயாவின் குடும்பமே ஸதம்பித்திருந்தது, கீதா கண்கள் கலங்கி சரிந்தபடி அமர்ந்து விட, கிருஷ்ணன் யோசனையாய் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

 

மாதவன் மாயாவின் தலையை வருடிச் சமாதானம் செய்ய,

மாயாவின் பார்வை முழுவதும் பைரவ் மீதே இருந்தது. அவனோ ரௌத்திரமாய் அந்த ஹாலில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான்.

 

“இந்த பரதேசியெல்லாம் கல்யாணம் செஞ்சுக்கலைனு எவன் அழுதான்…இவனையெல்லாம்…சே அவன் வாயை ஒடச்சு விட்டிருக்கனும்” பொறுமியபடியே இருக்க எதோ தோன்ற கிருஷ்ணனிடம்,

 

“சாரி அங்கிள், நான்…”

 

அவனைத் தடுத்த கிருஷ்ணன், “நீ எதுவும் சொல்ல வேண்டாம், நீ எந்தத் தப்பும் செய்யலை, நீ கேட்டதெல்லாம் எங்க மனசுலயும் வந்த கோவம்தான், நீ கேட்காட்டி மாதவன் கேட்டிருப்பான், என்னடா?” மாதவனை பார்த்தார்

 

மாதவனோ, “கண்டிப்பா, நான் இதைத்தான் செஞ்சுருப்பேன், நாலு அறையும் விட்டுருப்பேன்” அவன் முகத்திலும் ரௌத்திரம்.

 

பைரவ் பார்வை கீதாவின் மேல் விழ அவரோ, “என் பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சுப்பாக்க ஆசைப்படறேன், ஆனா ஏனோ இதுவரை வந்த ரெண்டு சம்மந்தமுமே சரி இல்ல” கண்கள் கலக்கியவர், பைரவிடம்,

 

“எனக்கு உன்மேல எந்தக் கோவமும் இல்ல, ஆனா பெத்தவளா மனசு கேட்கலை, எல்லாம் கடவுள் விட்ட வழி. அவ தலையில என்ன எழுதி இருக்கோ அப்படியே நடக்கட்டும்” கண்கள் கலங்க, எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட, கிருஷ்ணன் மனைவியை சமாதானம் செய்யப் பின்தொடர்ந்தார்.

 

மாயாவை பார்க்கத் திரும்பிய பைரவும் மாதவனும் அவளை அங்குக் காணாது வேகமாக அவள் அறைக்கு விரைந்தனர்.

 

எவ்வளவு குரல் கொடுத்ததும் பதில் வராததால் கதவை உடைப்பது போல் தட்டிய மாதவன்,

 

“மாயா ப்ளீஸ் எதுவும் வறுத்த படாதே, இவன் இல்லாட்டி வேற ஒருத்தன்”

 

பைரவோ, “ஆழாக்கு ப்ளீஸ் இதுக்கெல்லாம் மனசு உடையதே! நான் உனக்கு ஜம்முனு பையன் பாக்கறேன். ப்ளீஸ்மா கதவை திரடா” இருவரும் கதவை ஓயாது தட்ட

 

கதவை கோவமாகத் திறந்துகொண்டு வந்தாள் மாயா,

 

“அடேய் ஒருத்தி நிம்மதியா பாத்ரூம் போகக் கூடாதா?” முறைத்தவள், புடவையிலிருந்து கவுனிற்கு மாறியிருந்தாள்.

 

ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

 

சோர்வாகக் கட்டிலில் அமர்ந்தவள், “போண்டாவை ஆசையா தின்னுட்டு நான் பட்ட பாடு…அந்த அத்தைகாரி பாட்டு பாட தெரியுமானும் போதே எனக்கு வயறு கடாமுடான்னு பாட ஆரம்பிச்சுடுச்சு.

 

அவனுங்க பேசிட்டே போறாங்க, ரெண்டு தடி மாடுகளும் கம்முனு கெடக்கீங்க?

 

நானும் நெனச்சேன் ரெண்டுபேரும் இப்போ பொங்குவீங்க, இப்போ பொங்குவீங்கன்னு… பல்லை கடிக்கிறீங்க… சட்டையை மடக்குறீங்க…. ஆனா ஒரு பய எழுந்துக்குற மாதிரி இல்ல” அலுத்துக்கொண்டவள்,

 

வயிற்றை பிடித்தபடி, “பாஸ்! அவன் சட்டையை முன்னாடியே பிடிக்கர்துக்கு என்ன? நானும் எவ்ளோதான் கண்ட்ரோல் பண்றது?” பைரவை முறைக்க,

 

“என்னடி சொல்ற?” மாதவன் விழிக்க

 

“ஏண்டா கேட்கறே, அம்மா போண்டா சூப்பரா பண்ணுவாளேன்னு அசைய கொஞ்சூண்டு…” கையை மாதவனை நோக்கி நீட்டி, சிட்டிகை போலச் செய்கை செய்தவள், “அவ்ளோதான் சாப்பிட்டேன் அதுக்கு பேதி பிச்சுகிச்சு. நான்…ஐயோ” என்று துள்ளி எழ, பதறிய பைரவ்,

 

“என்னடா?”

 

“ரவுண்டு 3…முடியல வரேன்…” குளியலறைக்கு ஓடிவிட்டாள் மாயா.

 

சிரித்தபடி கீழே சென்ற ஆண்கள் இருவரும், கீதாவிடம் மாயாவின் அவஸ்த்தையை சொல்ல, அதில் பதறியவர் அதுவரை புலம்பிக்கொண்டிருந்த மாயாவின் எதிர்காலத்தை பற்றிய கவலைககளை மறந்து, பேதிக்கு தீர்வுகாண ஆராய்ச்சியாளரைப் போல சமயலறையில் என்னமோ கைமருந்தை தயார்செய்ய துவங்கினர்.

 

இரவு உணவை மாயாவின் வீட்டில் சாப்பிட்ட பைரவ் மாயாவிடம் தனிமையில்,

 

“ஆழாக்கு நீ ஏதும் பீல் பண்ணாத, கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோவோ மக்கள் நம்மளை கடந்து போகலாம், ஆனா வாழக்கையை அவசரமா முடிவு செய்யக் கூடாது.

 

ஆயுசுக்கும் நம்ம கூட வாழப்போற உறவு, பொறுமையா எல்லா விதத்துலயும் யோசிச்சு தான் முடிவெடுக்கனும் புரியுதா?” அன்பாய் அவள் தலை வருடினான்

 

“பைரவ்…” அவனைக் கூர்ந்து பார்த்தவள் பார்வையில் எதோ கேள்வி

 

“என்னடா”

 

“நீ எப்படி பவித்ராவை தேர்ந்தெத்தெடுத்தே? உன்னால எப்படி அவ உனக்கு ஏத்த பொண்ணுன்னு முடிவு செய்ய முடிஞ்சுது? எனக்கு டிப்ஸ் கொடேன், நானும் அதே மாதிரி யோசிப்பேன் அதான்…” மனதில் இருந்ததை தயங்காமல் கேட்டுவிட,

 

உள்ளே எதோ பிரள்வதைப் போல் உணர்ந்தவன்,

 

“டைம் ஆச்சு நான் கிளம்பறேன். நாளைக்கு சொல்றேன். நீ தூங்கு,

அம்மா ரெண்டு தரம், என்னாச்சுன்னு கேட்டு ஃபோன் பண்ணிட்டாங்க. போய்தான் சொல்லணும். நான் கிளம்பவா?”

 

அவள் கேட்ட கேள்வி அவனைத் துளைத்தெடுக்க துவங்கியிருந்தது, தப்பிக்க அவ்விடம்விட்டு வேகமாகக் கிளம்பினான்.

Leave a Reply

error: Content is protected !!