charkkarai nilavu – 11

charkkarai nilavu – 11

நிலவு – 11

தோல்வியும் வெற்றியும் நம்

வாழ்க்கையின் சுக துக்கங்கள்

அன்றி என்றுமே

நிலையானது அல்ல…

நிரந்தரமும் அல்ல…

முதல்தேதி முடிந்து, இரண்டு நாட்களை கடந்து விட்டது, மாதச்செலவிற்கான பணத்தை, எப்பொழுதும் தானாகவே, தன்தாயிடம் சென்று கொடுத்து விடும் மிதுனா, இன்னும் கொடுக்கவில்லை.

தனது பிறந்த வீட்டினரால் ஏற்பட்ட மனக்கசப்பும், வேலை பறிபோன துக்கமும் சேர்ந்து, அவளின் மனம் வெகுவாக சோர்ந்து போயிருக்க, வந்து கேட்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டாள்.

கடந்து சென்ற ஒருமாதத்தில்தான், எத்தனை மனம் வெறுக்கும் பேச்சுகள், அனைவரின் நெஞ்சிலும் சொல்ல முடியாத தவிப்புகள்… அனைத்திற்கும் காரணகர்த்தா தன்தாய் என்று என்று நினைக்கும் பொழுதே, மனதோடு ஒரு விலகல் தன்மை வந்து சேர்ந்திருக்க, பணம் கொடுத்தேதான் ஆகவேண்டுமா என்ற சலிப்பும் வந்து விட்டிருந்தது.

அந்த நினைவிலேயே உழன்றவள், அப்படியே இருந்துவிட… வேலையிலிருந்து நின்று விட்ட, இரண்டாம்நாள் மஞ்சுளா, மகளைத் தேடி மேலே வந்து விட்டார்.

“உடம்பு எதுவும் சரியில்லையா மிதுனா? வீட்டுலயே அடைஞ்சு கிடக்கிற?” மகளின் நலத்தை விசாரிக்க,

“இவ்ளோ அக்கறையெல்லாம் எம்மேல இருக்கா உனக்கு? காரியம் இல்லாம, மேலே வரமாட்டியே? என்ன விஷயம்?” அசராமல் கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்தாள் மிதுனா.

ஒட்டாத பேச்சும், வெளியாட்களிடம் காட்டும் அலட்டலான பாவனையும் மகள், தன்னிடமே காண்பிக்க, ஒரு நொடி துணுக்குற்று மஞ்சுளாவும் பேச்சைத் தொடர்ந்தார்.

“ஒன்னுந்தெரியாத மாதிரி பேசாதேடி! தேதி என்னன்னு தெரியும்தானே? இன்னும் நீ பணம் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்?” மகளுக்கு சளைக்காமல் அவரும் தர்க்கப் பேச்சில் இறங்க,

“நான் தனியா இருந்த, இத்தன நாள்ல என்னை விசாரிக்க வர முடியல… இப்போ உன்னோட தேவைக்கு மட்டும் படியேறத் தெரியுது. இவ்வளவு வருஷம், நாந்தான் புத்திகெட்டு போய் என் குடும்பம், கூடப் பொறந்தவங்கனு உழைச்சுக் கொட்டியிருக்கேன். இனி உன்னப் போலவே, நானும் இருக்க முடிவு பண்ணிட்டேன்” மிதுனா தன் மனதில் உள்ளதை எல்லாம் மறைக்காது கொட்டி விட,

“என்னடி பெரிய பேச்செல்லாம் பேசுற?” மகளின் இந்த கோபத்தை எதிர்பார்க்காமல் வந்தவருக்கு, கிலி பரவ ஆரம்பித்திருக்க, அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார் மஞ்சுளா.

“பார்த்துட்டு இருந்த வேலையும் பறிகொடுத்துட்டு வெட்டியா உக்காந்திருக்கேன். இனிமே என்னால, உனக்கு பணம் குடுக்க முடியாது. அப்படியே கிடைச்சாலும் எனக்கே எனக்குன்னு வச்சுக்கப் போறேன். பணத்த எதிர்பார்த்து, என்னைப் பார்க்க வராதே…” என்றவள், வேலை பறிபோன விடயத்தை விளக்கி விட்டாள்.

“உனக்காக செலவு பண்ணிக்கிற அளவுக்கு, என்ன தேவையிருக்கு மிதுனா?” மஞ்சுளா, தான் சொன்னவைகளை எளிதாக மறந்துவிட்டு கேட்க, மிதுனாவிற்கு கோபம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

“என்னோட நகைகளை, நான்தானே மீட்டாகணும். நீதான் தெளிவா சொல்லிட்டியே… உன் மருமகள தாங்கிக்க, பிறந்த வீட்டு சொந்தம் இருக்கு. எனக்கு அதுகூட இல்லையே…” என்று சொல்லும்போது, அந்தக் குரலில் அவளின் ஏமாற்றமும் துயரமும் மிதமிஞ்சி நின்றது.  

“நேத்து, சிந்துவுக்கு நீ பேசினது, நாளைக்கு எனக்கு திரும்பாதுன்னு என்ன நிச்சயம்? அதுக்கு முன்னாடி நான் சுதாரிக்க வேணாமா? பதில் சொல்லு…” மூச்சுவிடாமல் தன் ஆதங்கத்தை எல்லாம் வார்த்தைகளால் வடிகட்டி விட்டாள் மிதுனா.

மஞ்சுளா எய்த அம்புகள், அவரையே திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்க, தனது சுயநலமே, தனக்கு எதிரியாகி விட்டதை, பட்டவர்த்தனமாய் அறிந்து கொண்டார். வாய்ச் சொல்லில் வீரமிருந்து என்ன செய்ய? அதுவா வாழ வைக்கப் போகிறது?

இந்த உண்மையை வெகு தாமதமாக அறிந்து கொண்டவருக்கு, மகளின் மூலம் விழுந்த சிறிய அடியே, பெரிய பாறையை தூக்கிச் சுமப்பது போன்ற பாரத்தை கொடுத்து விட்டது.

தர்க்கம் செய்த நாளில் இருந்தே, மகள் தன்னுடன் பேசும் ஒவ்வொரு முறையும், தன்னை ‘அம்மா’ என்று அழைக்காமல் இருப்பதை, அப்போதுதான் அவரின் மனமும் சுட்டிக்காட்டிட, நெஞ்சில் முள் குத்திய வலியை அனுபவித்தார்.

குற்றம் புரிந்தவனுக்கும் ஒரு நியாயம், குற்றத்தை சுமப்பவனுக்கும் ஒரு நியாயம். இதில் மஞ்சுளா முதல் வகை. மகனின் நல்வாழ்வில் இருந்த அக்கறையில், மகளை மறந்து போனவருக்கு குற்றம் உணர்ச்சி மனதிற்குள் பரவ ஆரம்பித்திருக்க,

“இப்படி திடுதிடுப்புன்னு சொன்னா, எப்படிடி சாமாளிக்கிறது? சாப்பாட்டு செலவு, வாடகைன்னு வரிசையா வந்து நிக்குமே? உன் தம்பிக்கு வேலை கிடைக்கிற வரைக்குமாவது செய்யப்பாரேன் மிதுனா” சோர்வான குரலில் தனது இயலாமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.   

“வாடகைக்கு இந்த மாசம் மட்டும், நான் பதில் சொல்றேன். ஆனா சாப்பாட்டு செலவுக்கு நீதான் பார்த்துக்கனும். அடுத்த மாசம் வாடகை குடுக்க, இப்போ இருந்தே யோசனை செய்ய ஆரம்பி” சூழ்நிலையின் தீவிரத்தை விளக்கி விட,

“இப்படி பேசுறது கொஞ்சமும் நல்லாயில்ல மிதுனா… எல்லாரும், உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறதால, பெத்தவகிட்டயே எடுத்தெறிஞ்சு பேச ஆரம்பிச்சிட்டியா? எல்லாம் உங்க வீட்டுல உள்ளவங்கள சொல்லனும்” மனமுடைந்து போனதில், மகளின் பேச்சு மீண்டும் கோபத்தைக் கொடுக்க, உறவுமுறையை கூட சொல்லாமல், மஞ்சுளா, மகளின் புகுந்த வீட்டினரைச் சாடிப் பேசி விட, கொதித்து விட்டாள் மிதுனா.

“நீ, பெத்த பொண்ணு, மருமகனு பார்த்துதான் பேசினியா? யார்கிட்ட எப்படி பேசணும்னு நீ கத்துக்கோ, மொதல்ல… அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி காரியம் சாதிக்கிறவங்களுக்கு, யார் என்ன பேசினாலும் நல்லா இல்லாத மாதிரிதான் தோணும். என் வீட்டுக்காரர் வர்ற நேரம், இங்கே இருந்து வாங்கிக் கட்டிக்காதே! அவர் எப்போ, என்ன பேசுவார்னு எனக்கே தெரியாது” என்று விரட்டிய விரட்டலில், அதிர்ந்து போனவராய் கீழே சென்று விட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சுளா, பெரியவள் சாந்தினியிடம் மிதுனாவின் முடிவை விளக்கியிருக்க, அவளும் மிதுனாவை அழைத்து என்ன நடந்ததென்று கேட்க, தாயிடம் சொன்ன பதிலையே ஒப்புவித்தாள்.

“இவ்வளவு நாள், நான் பார்த்துட்டேன், இனியும் என்னால தூக்கிச் சுமக்க முடியாது. உனக்கு முடிஞ்சா பாரு, இல்லன்னா நீயும் தட்டிக் கழி…” அசிரத்தையாக தமக்கையிடமும் சொன்னாள்.

“நம்ம அம்மா மிதுனா… ஏன் இந்த மாதிரி பேசுற? கடன் வாங்கி வைச்சிருக்கோமேடி? அதுக்கு என்ன பதில் சொல்லப் போற?” பதட்டத்துடனேயே சாந்தினி கேட்க,

“எல்லாம் உன் கல்யாணத்துக்கு வாங்கினதுதானே? இருக்குற கஷ்டத்துல, சுகமா வாழ்க்கைய அமைச்சுகிட்டவ நீ… கொஞ்சம் என்னப் பத்தி, நீயும் யோசிச்சிருந்தா, என்னோட பாரத்தை குறைக்க முயற்சி பண்ணியிருக்கலாம். நான் தலையிட்டு வாங்கின பணத்துக்கு, நானே கட்டி முடிக்கிறேன். மத்தபடி வேற எதுவும் என்கிட்டே இருந்து வரும்னு, யாரும் எதிர்பார்க்க வேணாம்” சட்டமாக பேச்சினை முடித்து விட்டாள். 

“அம்மா பேசினதுக்கு பழி வாங்குறியா மிதுனா?” சாந்தினி நேரடியாகக் கேட்க,

“வெளியே இருந்து பார்த்தா அப்படித்தான் தெரியும். என்னோட நெலமைய தெளிவா சொல்லிட்டேன். இந்த குடும்பத்துக்கு மட்டுமே சம்பாதிச்சு போடணும்னு, என்னை நேர்ந்து விட்ருக்காங்களா என்ன?” மனதுக்குள் கனன்று கொண்டே இருந்த ஆற்றாமையை, மிதுனா இறக்கி வைத்து விட, சாந்தினிக்குதான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

தனது, இந்த முடிவை, நேரம் பார்த்து கணவனிடம் சொல்லி விட வேண்டுமென்று மிதுனா நினைத்திருக்க, அதை மறக்க வைக்கும் படியாக இருந்தது, அவன் கொண்டு வந்த செய்தி.

“வர்ற சனிக்கிழம கிராமத்துக்கு போகணும் மிது! வேலாயுதம் ஐயா ஃபோன் பண்ணினாரு”

“உங்களுக்கு கடன் கொடுத்தவர் தானே?”

“ஆமா… இப்போ என்ன பூதம் வரப் போகுதோ? ரெண்டு வருஷம் டயம் கொடுத்தது, முடிஞ்சுட்டு வருது. வீட்டை விக்கலாம்னா அம்மா சம்மதிக்க மாட்டேங்குறாங்க… என்ன மாதிரி இடி, என் தலையில இறக்கப் போறாங்களோ? தெரியல…” மனச் சஞ்சலத்தில் புலம்பிக் கொள்வது இப்பொழுது இவனது முறையாக இருக்க, என்ன ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தவென மிதுனாவிற்கும் தெரியவில்லை. 

இரண்டு நாட்கள் முன்பு, மனைவியின் தவிப்பிற்கு ஆறுதல் தந்தவன், அந்த நேரத்தில் தொலைந்து போயிருந்தான். சிறுவனைப் போல் மனைவியின் மடியில் தலைவைத்து பிதற்ற தொடங்கியவனின் தலையை ஆறுதலாய் தடவியவள்,

“என்ன எதுன்னு தெரியுறதுக்கு முன்னாடியே, புலம்புனா எப்படி தயா? இவ்வளவுதான் கஷ்டத்த சமாளிக்க முடியும்னு அளவுகோல் பார்த்துட்டா பிரச்சனைகள் வருது? எது வந்தாலும் எதிர்த்து நிக்கிறீங்கதானே? பின்ன எதுக்கு கவலப்படுறீங்க? நல்லதே நெனைப்போம். நமக்கு நல்லதாவே நடக்கும் என்றபடியே உச்சி முகர்ந்து கணவனை ஆசுவாசப் படுத்திட,

“சின்ன கல்லு விழுந்தா, தடுமாறி எழுந்திருச்சு நிக்கலாம். மிது! ஆனா, எனக்கு வர்றதெல்லாமே பாறாங்கல்லுதான். வெளியே தைரியமா வேஷம் போட்டாலும், இந்த கடனை எல்லாம் எப்ப அடைக்க போறேன்னு நினைக்கிறப்பவே, மூச்சு முட்டித் திணறிப் போறேண்டி! கொடுத்த வாக்கு, குடும்ப கௌரவம்னு எல்லாம் சேர்ந்து என்னை பாடாப் படுத்துது….” கலக்கங்கள் மட்டுமே அவன் மனதில் மையம் கொள்ள, புலம்பித் தள்ளி விட்டான்.

“உங்க பலம், உங்களுக்கு தெரியல… வெளியே காட்டுற தைரியத்தை, உள்ளேயும் கொஞ்சம் ஸ்டாக் வச்சுக்கோங்க… உங்களுக்கு மூச்சு முட்டினா, என் மூச்ச கடன் வாங்கிக்கோங்க, மத்தவங்கள திணறடிக்கலாம்” கணவனின் தவிப்பை காணச் சகிக்காமல், இவள் சகஜ நிலைக்கு மாற்ற முயற்சி செய்ய,

“கடனாதான் குடுப்பியாடி? இந்தா வச்சுக்கோன்னு ஃப்ரீயா குடுக்க மாட்டியா?” தவிப்புடன் இருந்தவனுக்கு மனைவியின் பேச்சு, உற்சாகத்தையும் பலத்தையும் கொடுக்க, சீண்டலில் இறங்கி விட்டான்.

“என் வீட்டுக்காரார்கூட சண்டை போட, எனக்கே நிறைய எனர்ஜி தேவைப்படுது. சோ, லோன்மேளா போடும் போது  கடன் வாங்கிக்கோங்க… கரெக்டா ஈஎம்ஐ கட்டிடனும்” சிரிப்போடு ஒப்பந்தமும் போட்டு முடிக்க,

“புருசன்னு கொஞ்சமாவது விட்டுக் குடுக்குறியா? நான் சொன்ன மாதிரியே, உனக்கு பாசம் இல்ல”

“இப்படியே வம்பு வளர்த்தா, மொட்டை மாடியில இல்லாத நட்சத்திரத்த எண்ணிப் பார்த்துகிட்டே தூங்கணும், ரெடியா தயா?” உச்சந்தலையில் ஆப்பை சொருகி விட, அதற்கடுத்து அவனது எண்ணமும் எண்ணிக்கைகளும் மனைவியிடம் மட்டுமே நிலைத்தது.

           ***************************************

வெள்ளியன்றே இருவரும் வலையப்பட்டிக்கு கிளம்பி, அங்கே இருந்து விருப்பாச்சிக்கு செல்லலாம் என்ற யோசனையில் புறப்பட்டனர். முதன் முறையாக தனது மனைவியுடன் வலையபட்டிக்கு வந்திறங்கிய தயானந்தனுக்கு, அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிறு வயதில் சிந்துவை பார்க்கவென வரும் பொழுதுகளில், தமிழ்செல்வனோடு, அந்த சிறிய கிராமத்தை சுற்றித் திரிந்தவனுக்கு, அங்குள்ள மனிதர்கள் வெகு பரிச்சயமாகி இருந்தார்கள்.

உடலோடு மனதையும் தழுவிச் சென்ற மெல்லிய இளந்தென்றலை, தன் வாழ்நாளில் முதன்முறையாக அனுபவித்த மிதுனா, தன் மூச்சை ஒருமுறை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டாள். ஈரமண்ணோடு கலந்த பச்சை வாசம் அவளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்க, உடலும் சிலிர்த்துக் கொண்டது.

“வா தாயி! பிரயாணம் சுகமா இருந்துச்சா?” பிரியத்துடன் வரவேற்ற அலமேலுவும், நாராயணனும் வெள்ளந்தியான பாசத்தை வெளிபடுத்தினார்கள்.

தமிழ்செல்வனின் வீடு சற்று பெரியதாகவே இருந்தது. மாட்டுத் தொழுவம், கால்நடை வளர்க்க என பின்புறம் விசாலமான இடமிருக்க, இரண்டு முற்றங்களை கொண்ட பெரிய வீடாகவே விளங்கியது. அந்தந்த வேலைக்கென ஆட்கள் தனியாக இருக்க, வீடு சுறுசுறுப்பாக இயங்கியது. 

விவசாயத்தை நாராயணனும், தமிழ்செல்வனும் பார்க்க, கால்நடை வளர்ப்பும் பால் வியாபாரமும் வீட்டில் அலமேலுவின் மேற்பார்வையில் நடக்கும். மொத்த குடும்பமும் அயராது உழைத்திட, சில வருடத்திற்கு முன்புதான் இந்தப் பெரிய வீட்டைக் கட்டியிருந்தனர். 

குடும்பேமே இவர்களின் வருகையை கொண்டாடி மகிழ, மிதுனாவும் அவர்களுடன் எளிதில் தன்னைப் பொருத்திக் கொண்டாள். காலை உணவை முடித்துக் கொண்டு விருப்பாச்சி செல்ல, தயானந்தன் ஆயத்தமாக,

“அந்த வீட்டை வித்துடுவோம் ஆனந்தா… இருக்க இருக்க கடன் சுமையும் மனக்கஷ்டமும்தான் ஏறிக்கிட்டே இருக்கேயொழிய, குறைய வாய்ப்பு இருக்குற மாதிரி தெரியல… அதுக்கான ஏற்பாட்டை அவங்கள விட்டே பார்க்கச் சொல்லிடு, தம்பி!” மரகதம் தனது மனதில் இருப்பதை கூற,

“எதுக்கும்மா இந்த திடீர் முடிவு? வீட்டுப் பெரியவங்க ஆசையே, நம்ம பரம்பரைக்கே பெருமை சேக்குற, அந்த வீட்டை, கைவிட்டுப் போகாம காப்பாத்தறதுதான். அவங்க மனசு சங்கடபட்ட மாதிரி, வீட்டை கைமாத்தி விட்டா, நம்ம வாழுற வாழ்க்கை, சாபக்கேடா முடியும்னு நீங்கதானே சொன்னீங்க… அதெல்லாம் என்ன ஆச்சு?” ஆரம்ப காலத்தில் அவனுக்கு சொல்லப்பட்ட விளக்கத்தை, தன் அன்னைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினான் தயானந்தன்.

“பரம்பரை பேரையும், சொத்தையும் உசிரக் குடுத்து கையோட வச்சுக்கணும்னு நினைச்சேன்தான். பெரியவங்க கொடுத்த பொக்கிஷத்த காப்பாத்தப் போய், என் பொண்ணோட வாழ்க்கையே பலி கொடுத்த மாதிரி ஆகிடுச்சே தம்பி… ஊர் பேர் தெரியாதவங்ககிட்ட பேச்சும், இடியும் படணும்னு நமக்கென்ன தலையெழுத்தா?” தன் அறியாமையினால் வந்த விளைவுகளை, எண்ணிப் பார்த்தவருக்கு, துக்கம் கண்ணில் வந்து நின்றது.

“எதுக்கு அத்த, இப்படி பேசுறீங்க? எங்க வீட்டுல பேசினது கொஞ்சமும் நியாயமில்லதான். அதுக்காக நீங்க மனசு உடைஞ்சி போகலாமா?” சமாதானப் படுத்தவென மிதுனாவும் ஆறுதல் கூற,

“என் பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறியா நிக்கிறப்போ, வேற எப்படி பேசச் சொல்ற மிதுனா? அவளோட வயசுக் கோளாறும் என்னோட அஜாக்கிரதையும் சேர்ந்து, அவ வாழ்க்கைய காவு வாங்கிடுச்சு… தற்குரியா ஒருத்தன கட்டிக்கிட்டு, புகுந்த வீடும் நிரந்தரமில்லாம  இன்னைக்கு நிக்கிறா… யார குத்தம் சொல்ல நான்? இதுக்கு எல்லாம் காரணம், அந்த கடனும் அதுனால வந்த பிரச்சனையும் தானே?” இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த வேதனைகள், வார்த்தைகளாக வடிவம் பெற்றிருக்க, தனது ஆதங்கத்தை எல்லாம் கோபமாக வெளிப்படுத்தி விட்டார் மரகதம்.

“அம்மா கொஞ்சம் அமைதியா இரு… உன் வருத்தம் நியாயமானதுதான். எல்லாம் விதிவசம்னு சொல்ற நீயே இப்படி பேசலாமா? இத்தனை படபடப்பு உனக்கு ஒத்து வராதும்மா” பயம் கலந்த பாசம், தயாவின் குரலில் விரவிக் கிடந்தது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான். அது, தனது தாயின் பேச்சில் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் வந்து விட்டிருந்தது.  அன்னையின் கோபம், அவரின் உடலுக்கும் மனதிற்கும் இன்னல்களை அளித்து, தேக ஆரோக்கியத்தை குறைத்து விடுமோ என்றே அஞ்சினான்,

“போதும் ஆனந்தா… பதிலுக்கு பதில் நாமும் பேசியிருந்தா இத்தனை சங்கடம் நமக்கு வந்திருக்காது. அடிபட்டாதானே தெரியுது வலியோட கொடுமை. ரொம்ப நல்லவனாவும் இருக்க கூடாது, கெட்டவனாவும் வாழக் கூடாது. ரௌத்திரம் பழகுன்னு சொல்றது, எதுக்குன்னு நான் புரிஞ்சுகிட்டேன்” நொந்து போன குரலில் மரகதம் மீண்டும் தொடர,

“முடிஞ்சத பேசி, இப்ப பிரயோசனம் இல்ல, தாயி… புள்ளக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பிவை. நம்ம வாய் முகூர்த்தம் எப்பவும் ஒன்னுபோல இருக்காது. கொஞ்சம் அமைதியா இரு, மரகதம்…” தேனுபாட்டி மகளை சாதானபடுத்திட, கண்களை துடைத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு மாற முயற்சி செய்தார்.

“இன்னும் போக வேண்டிய தூரம் நீண்டு கிடக்கு தங்கச்சி… இப்பவே எல்லாமும் முடிஞ்சு போன மாதிரி பேசக்கூடாது.  வாழ ஆரம்பிச்சிருக்க இளங்குருத்துங்க முன்னாடி, மனசு விட்டுப் போனாப்புல பேசுறது, நல்லதில்லம்மா” அண்ணன் நாராயணனும் தன் பங்கிற்கு, மரகத்ததிற்கு ஆறுதலையும் அறிவுரையும் கூறினார்.

தாயின் தவிப்புகளை கேட்ட சிந்துவிற்கும், தாள முடியாத துக்கத்தை தர, தேனுபாட்டியின் தோள் சாய்ந்து விட்டாள்.

“சிந்தா கண்ணு! உன்னை பெத்தவளுக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் போல… அதான் கூறு இல்லாம பேசிபுட்டா… நீ வெசனப்படாதே, தாயி!” என்றே பேத்தியை அணைத்துக் கொள்ள, மிதுனாவிற்கு அங்கே, தான் தனியாக நிற்பது போன்ற பிரமை ஏற்பட்டது.

“பார்த்துக்கோ அம்மாச்சி… நான் மாப்பிள்ளைய கூட்டிட்டு கிளம்புறேன்” என்ற தயா, தமிழ்செல்வனுடன் புறப்பட்டான்.

ஒருமணிநேர பயணத்தில் விருப்பாச்சி, வேலாயுதம் வீட்டை அடைந்தவர்கள், அவர் மகன் முரளியின் வருகைக்காக காத்திருந்தனர்.

“எம்பையன் வந்து பேசுறேன்னு சொல்லியிருக்கான்பா… அவனும் நேத்துதான் வந்தான். வயலை பாக்க போயிருக்கான் வந்துருவான்” என்று சொன்ன வேலாயுதம், அனைவரின் நலத்தையும் விசாரித்து, தயாவின் தொழில் நிலவரத்தை கேட்டுக் கொண்டார்.

சற்று நேரத்தில் முரளியும் வந்துவிட, பயண சௌகரியங்களை கேட்டுக் கொண்டு நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டான்.

“நான் ****** மீடியா கார்ப்பரேஷன்ல, ஒரு பார்ட்னரா இருக்கேன்… பெரிய நிறுவனம் அது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூணு மொழியிலயும் சீரியல் எடுத்துட்டு இருக்கோம். இப்போ உள்ள காலகட்டத்துல மக்கள் எவ்வளவு ஆர்வமா சீரியல் பாக்குறாங்கன்னு, உங்களுக்கே தெரியும்.

நம்ம நாடு சுதந்திரம் அடைஞ்ச பிறகு நடக்கிற கதை ஒண்ணு, சீரியலா எடுக்க ஆரம்பிச்சுருக்கோம். அதுக்கு, அந்த காலத்து வீடுகள், பயன்படுத்திய பொருட்கள் எல்லாமே தேவைப்படுது” எனச் சொல்லும் பொழுதே, பழச்சாறு வர, அதை குடிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,

“இவர் சொல்றதுக்கும் என்னை கூப்பிட்டு வச்சு பேசுறதுக்கும், என்ன சம்மந்தம் மாப்ளே?” மெதுவான குரலில் தயா, தமிழிடம் கேட்க,

“உன்னை பாட்னரா சேர்த்துக்க ஐடியா இருக்கு போலேயே, மச்சான்?” தமிழ் செல்வன் அவன் காதில் கிசுகிசுத்தான்.

“ஐநூறு ரூபாய்க்கு சிங்கி அடிக்கிறவனையா, பார்ட்னரா சேர்த்துப்பாங்க? ஒருவேள நம்ம அரசிய, ஹீரோயினா நடிக்க வைக்கிறதுக்கா இருக்குமோ? உலக புகழ் அரசியோட பேரன்னு உனக்கு பட்டம் கிடைக்கப் போகுது மாப்ளே!” தயானந்தன் சிரிக்காமல் வம்பை வளர்க்க,

“உனக்கு மட்டும் கிடைக்காதாக்கும்… அப்டியே சைக்கிள் கேப்ல உனக்கு மாட்டுக்காரன் வேசமும், எனக்கு பண்ணையார் வேசமும் கேட்டு வாங்கிடலாம். டோன்ட் வொர்ரி மச்சான்” தமிழும் சளைக்காமல் பதில் அளித்தான்.

“அதென்ன மாப்ளே… அப்படி சொல்லிட்ட! பிச்சக்காரன் வேஷம் உனக்கு கணபொருத்தமா இருக்கும்னு, உன் முகத்துக்கு பின்னாடி தெரியுற ஒளிவட்டம் தெளிவா சொல்லுது. கண்ணாடியில பார்த்ததில்லையா நீ?” இடைவிடாமல், தணிவான குரலில் வம்பு பேச்சுக்களை இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வேலாயுதத்தின் தொண்டைச் செருமலில்தான் நிறுத்தினர்.

“சொல்லுங்க சார், நான் என்ன உதவி செய்யனும்?” பொறுப்பானவனாய் தயானந்தன் கேட்க,

“நம்மள விரோதியா பார்க்கமா, இன்னும் நட்பா பேசுற பார்த்தியா, இந்த குணம்தான் உன்னை வளர்த்துவிடும் ஆனந்தா…” என்ற வேலாயுதம், மகனிடம் திரும்பி, “மிச்சத்தையும் சொல்லி, தம்பிங்க குழப்பத்தை தீர்த்து வை முரளி” என்று கூற,

“அந்த காலத்து சூழ்நிலைய கண்ணு முன்னாடி கொண்டு வர்றதுக்கு வீடு, நிலம், தோட்டம்னு தேடிட்டு இருக்கோம் ஆனந்தன். அதுல உங்க வீடும் எங்க லிஸ்ட்ல இருக்கு.

நீங்க வீட்டைக் காலி பண்ணினதுல இருந்து, அப்பப்போ வந்து சின்ன சின்ன ஷாட் எடுத்து, வியூ பார்த்துதோட சரி. டைரக்ஷன் டீம் எதிர்ப்பார்க்குற அத்தனை அம்சமும் உங்க வீட்டுல அப்டியே மாறாம இருக்கு.

வீட்டோட பழைமைய கொஞ்சமும் மாற்றாம, அந்த பொருட்களோட நீங்க வச்சிருந்தது, எங்களுக்கு ரொம்ப ஹெல்பா இருந்தது. சோ… புரோடக்ஷன் டீம்ல அக்ரீமெண்ட் போட்டு, வீட்டை வாடகைக்கு கேக்க சொல்லிருக்காங்க” முரளி விளக்கம் சொன்னான்.

“இந்த காரணத்துக்கு தானா சார், நீங்க எங்கள காலி பண்ணச் சொன்னது?” தயா, தன் சந்தேகத்தை கேட்டிட,

“நோ பிரதர்… அப்போ எனக்கும் கூட இந்த ஐடியா இல்ல… ஒரு ரெண்டு மாசம் கழிச்சு நான், உங்க வீட்டைப் பார்த்த பிறகுதான், என்னோட சஜஷன் சொன்னேன். அது கிளிக் ஆகிடுச்சு.

அதுபோக, பக்கத்து கிராமங்கள்ல, நம்ம ப்ராஜக்ட்க்கு பொருந்தி வர்ற மாதிரியா இருக்குற நிலம், ஃபார்ம் ஹவுஸ் எல்லாம் பார்த்து பேசிட்டு வர்றோம். முடிவு உங்க கையில… நீங்க சரின்னு சொன்னா, நெக்ஸ்ட் புரசீஜர் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றே முரளி இருவரின் முகம் பார்க்க,

“நீங்க அந்த புரசீஜர் பத்தியும் விளக்காம சொல்லிட்டா, நல்லா இருக்கும் சார். மச்சான் சென்னையில இருக்காரு, அடிக்கடி வந்து போயிட்டு இருக்க முடியாது. இப்போவே சொன்னீங்கன்னா, அடுத்து பாக்குறப்போ முடிவ சொல்லிட்றோம்” என்று தமிழ் செல்வன் விளக்கம் சொல்ல, தயானந்தனும் ஆமாம் என தலையாட்டினான்.

“குட்… ரெண்டு வருஷ காண்ட்ராக்ட்… இந்த ஃபீல்ட்ல தினவாடகைதான் அதிகம் பேசுவாங்க… ஆனா நாங்க மொத்தமா எடுக்கப் போறதால, மாத வாடைகைக்கு பேசச் சொல்லியிருக்காங்க. அன்னைக்கு, நான் உங்ககிட்ட மாத வாடகையா கேட்ட தொகைய விட, இரண்டு மடங்கு அதிகம், இப்ப கம்பெனியில குடுக்க நினைக்கிறது.

கார்ப்பரேட் கம்பெனியில எல்லாமே எழுத்து மூலமாவே நடக்கும். அதனால பணம் கைக்கு வராம போயிடுமோ ஏமாத்திடுவாங்களோனு பயப்பட வேணாம். நீங்க என் மேல நம்பிக்கை வச்சு சரினு சொன்னா, உங்க கடனும் பைசல் பண்ணிடலாம்.

நான் எதிர்பார்க்கிற வாடகையை கழிச்சுட்டு மீதம் உள்ள பணத்தை, உங்க கடன் தொகையில பேலன்ஸ் பண்ணிட்டு வரச் சொல்லிடுறேன், இல்ல நீங்களே மொத்தமா சேர்த்து வச்சு குடுத்தாலும் நோ பிராப்ளம்… உங்க வசதிய பொறுத்து செய்யுங்க” நீண்ட விளக்கத்தை கொடுத்த முரளி, மாத வாடகையாக சொன்ன தொகை, உண்மையில் இளைஞர்கள் இருவருக்கும் வியப்பைத் தந்தது.

“மூணு மொழியிலயும் எடுக்குறோம், டப்பிங் ரைட்ஸ் அது தனியா வரும். பெரிய ப்ராஜக்ட், பெரிய பட்ஜெட். ரெண்டு வருஷம், மூணு அல்லது நாலு வருஷமா கூட நீண்டு போக வாய்ப்பிருக்கு. அதுவரை பேசின வாடகை கரெக்டா வந்துடும். வீட்டுல கலந்துட்டு சொல்லுங்க” சிரித்த முகத்துடன், கைகுலுக்கி விட்டு அவர்களை அனுப்பி வைத்தான் முரளி.

அனைவரையும் அமர வைத்து முரளி சொன்ன விவரங்களை சொன்ன தயா, முடிவிற்காக தாயின் முகம் பார்க்க,

“நீ என்ன சொல்றியோ, அதுதான்யா என் முடிவும்… கடைசிவரை உன்கூட வரப்போற சொத்து, உனக்கு எது நல்லதுனு படுதோ அப்படியே செய்! கடவுளா பார்த்து குடுத்த, நல்ல வாய்ப்ப பயன்படுத்தி, நம்ம கஷ்டத்தை குறைச்சுக்க பாரு தம்பி” மரகதம், தன் எண்ணத்தை சொல்லி விட்டார்.

“தானமா வாங்கின பொருள, பக்கத்துல வச்சு அழகு பாக்கணுமே தவிர, அதோட பல்லை பிடுங்கி பார்க்க நினைக்கிறது தப்புன்னு, இந்த வீடு விசயத்துல நெசமாயிருக்கு ராசா… ஏதோ இந்த அளவுக்காவது நமக்கு நிம்மதி கிடைச்சுதேன்னு, சந்தோசப்பட்டு சரின்னு சொல்லிட்டுவாப்பு” என்று தேனுபாட்டியும், தன் கருத்தை கூறிவிட்டார்.

குடும்பத்தார் அனைவரின் கருத்தும் ஒன்றாகவே இருக்க, அடுத்த நாளே நேரில் சென்று, சம்மதத்தை சொல்லி விட்டான் தயானந்தன்.

“உங்கள ஊரை விட்டு அனுப்பனும்னு நான் கொஞ்சமும் நினைக்கல தம்பி… நீங்க இங்கேயிருந்து பைசல் பண்ணி முடிப்பீங்கன்னு பார்த்தேன்… ஆனா இப்டி மொத்தமா போனது, என் மனசை உலுக்கிடுச்சு…

நியாய தர்மம் பார்த்தா, வட்டி தொழில் பண்ண முடியாதுதான். ஆனாலும் உங்க அப்பாகூட பழகின பழக்கம், உங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி, வீட்டை உங்களுக்கு குடுக்க சொல்லிக்கிட்டே இருந்தது.

இப்போ நடக்குற விஷயம் நான் எதிர்பார்க்காததா இருந்தாலும், எனக்கு அத்தனை சந்தோசத்தை தருது. நல்லா வாழ்ந்த குடும்பம் கீழிறங்கிப் போனா, அதோட வலியும் வேதனையும் அவ்வளவு சீக்கிரத்துல ஆறாது தம்பி. உங்கம்மாகிட்ட, என்னோட மனவருத்தத்தை சொல்லணும்” என்று ஆழ்ந்த குரலில் வேலாயுதம், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,

“அதெல்லாம் தேவையில்லங்கயா… எதுவும் வேணும்னு நடக்கிறதில்லையே? இந்த மாதிரி நல்ல மனுசங்க கிடைக்கவும், நாங்க கொடுத்து வச்சிருக்கணும்” பூரிப்புடன் சொன்னான் தயானந்தன்.

ஒப்பந்தப் பத்திரத்தை எழுதச் சொல்லி, தயா கேட்டுக் கொள்ள, அதற்கு ஒருவார கால அவகாசம் வேண்டும் என்று முரளியும் கூறிவிட, தயானந்தன், மிதுனாவை வலையபட்டியில் விட்டு விட்டு, சென்னைக்குப் புறப்பட்டான்.

“ஒரு வாரம் இங்கே தங்கிட்டு போயா மாப்ளே!” என்று நாராயணன் உட்பட எல்லோரும் சொன்னாலும், வேலையை காரணம் காட்டி சென்றான் தயானந்தன்.

அங்கே இருந்த ஒருவாரமும் மரகதமும் சிந்துவும் மறந்தும் கூட மிதுனாவின் தாய் வீட்டைப் பற்றி விசாரிக்கவில்லை. ஆனால் அனைத்திற்கும் சேர்த்து, தேனுபாட்டி, வீட்டிற்கு வரும் கிராமத்து சொந்தங்களிடம், மஞ்சுளாவைப் பற்றி சாடிப் பேசியது, மிதுனாவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, பெரிதும் தவித்து விட்டாள்.

ஏற்கனவே மரகத்தின் வேதனைக்கு, எவ்வாறு ஆறுதல் சொல்வதென தெரியாமல், மனம் மருகிக் கொண்டிருந்தவளுக்கு, இந்தக் காரணமும் சேர்ந்து, அங்கே இருக்க மனம் ஒட்டவில்லை. 

வெறுப்பு என்பது இருவருக்கும் தனிப்பட்ட ஒன்று. தான் மனதிற்குள் வெறுத்தாலும், நெருக்கமானவர்களை வெளியில் விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை. மிதுனாவின் நிலையும் அப்படித்தான் ஆகிப்போனது.

தனது பிறந்த வீட்டினர் செய்தது சரியென்று வாதாட அவள் விரும்பா விட்டாலும், தன் கண்முன்னே அவர்களை தரம் தாழ்த்திப் பேசுவதை கேட்கும் பொறுமையும் அவளுக்கு இல்லை.

கணவனின் கோபத்தை அறிந்தவளுக்கு, தான் நினைப்பதை அவனிடம் சொல்லவும் முடியவில்லை. முடிந்தவரை உள்ளறையிலே தங்கிக்கொண்டு தனது இயலாமையை கட்டுப்படுத்திக் கொண்டாள் மிதுனா.

நிறைமாதத்தின் அசௌகரியங்கள் சிந்துவிடம் தென்பட, அவளும் உள்ளறையிலேயே தங்கிக் கொண்டதால், பாட்டியின் பேச்சு அவளுக்கும் தெரியவில்லை. மிதுனாவிடம் இயல்புத் தன்மை தவறியதை கண்டு கொண்டவன் தமிழ் செல்வன் மட்டுமே…

“வந்த பிள்ளைக்கு விருந்து ஆக்கிப் போடுறத விட்டுட்டு, அவங்கள தொரத்தி விடறதுக்கு, சாடை பேசிட்டு இருக்க… உன் பேத்திகிட்ட சொன்னா, நல்லா மந்திரிச்சு விடுவா… கூப்பிடவா” என்று தேனரசியை கடிந்து கொண்ட தமிழ் செல்வன்,

“சிந்தா… உன் அம்மாச்சி என்னவோ குசும்பு பண்ணுது, என்ன ஏதுன்னு கேட்டு வை!” என்று கொளுத்தியும் போட்டு விட்டான்.

என்னவென்று கேட்டு வந்த சிந்துவிடம், ஒன்றுமில்லை என சமாளித்த தேனுபாட்டி,

“மனசுல இருக்குறத, இறக்கி வைச்சது குத்தமாயா? எல்லோரும் ஒன்னுபோல கட்டிப்போட்டா, நான் எங்கே போயி, என்னோட கவலைய இறக்கி வைக்க” என அதற்கும் ஒரு புலம்பலை புலம்பினார்.

“அரசி! இப்டி புலம்பி வைக்கவா, இத்தன வருஷம் வாத்தியார் படம் பார்த்த? உனக்கு படம் போட்டு காமிச்சு, ஒரு பிரயோஜனமும் இல்ல போ…” தமிழ்செல்வன் அலுத்துக் கொண்டான்.

“அவர் சொன்னததான், நானும் சொல்லிட்டு இருக்கேன், பேராண்டி!“ என்றவர், தனது பாட்டுத் திறமையை வெளிப்படுத்தி,

“கண்போன போக்கிலே கால் போகலாமா…

கால் போன போக்கிலே மனம் போகலாமா…

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா…

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா…

இது எல்லாருக்கும் பொருந்தும் ராசா… வார்த்தை வருதுன்னு பேசிட்டு, கடைசியில வாயி வலிக்குதுன்னு சொல்ற கூட்டம் இப்போ நிறைஞ்சு போச்சு தம்பி… இவங்களுக்கெல்லாம் யார் வந்து நல்ல புத்தி சொல்லி திருத்தப் போறாங்களோ?” தனது ஆதங்கத்தை இறக்கி வைத்தார் தேனுபாட்டி.

“ராசாத்தி… வயசானவ ஏதோ தெரியாம வாய விட்டிருந்தா மனசுல வச்சுக்காதே ஆத்தா! தாயும் மகளும் அவங்க கஷ்டத்தை வெளியே சொல்லாம மனசுக்குள்ளே மருகிட்டு கிடக்குறது பார்க்குறப்போ, என் நெஞ்சுல ரத்தமே வடியுது…

என் பொண்ணுக்குதான், மாமியா சுருக்கு கயிறா இறுக்கிச்சுன்னா, என் பேத்திக்கு பாம்பால்ல வெசத்தை கக்கிட்டு கிடக்கு. இதை எல்லாம் எங்கே போயி கொட்ட நானு… அதான் கொஞ்சம் வெசனப்பட்டு பேசிட்டேன் ஆத்தா!” தன் மனஆற்றாமைகளை மிதுனாவிடம் பகிர்ந்து கொள்ளும் போது, அவளுக்கும் பெரியவரின் பேச்சை குற்றம் சொல்ல முடியவில்லை.

அதற்கு மாறாக பழக்கம் இல்லாத இடத்தில், தன்னை விட்டுச் சென்ற கணவனிடத்தில்தான், அவளின் கோபம் நிலை கொள்ள, அதே கோபத்துடன் அவனை வரவேற்க காத்திருந்தாள்.   

வாழ்க்கையில் எதுவும்

சொல்லிவிட்டு வருவதில்லை…

ஆனால், வந்த எதுவும்

எதையும் சொல்லிக்

கொடுக்காமல் விடுவதில்லை…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!