சரி – 5
அன்று சென்னை, டி-நகர், டீ கஃபே (D Cafe) போய் பார்த்ததோடு, வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு கஃபேக்கள் சென்று ஆங்காங்கே இருக்கும் நிறை, குறைகளை நினைவில் வைத்துக்கொண்டான் யோகி.
ஏஆர் மாலில் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்து. யோகி வழக்கம்போல் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த ராஜசிம்மன் தூரத்தில் சிப்பந்தியிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்த யோகியை உள்ளே வரச் சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றார்.
“நாந்தான் ராஜு பேசரேன், என்னாச்சு இன்னும் ஒங்க லோடு வரலயே?, ம்… , ம்… சரி வைக்கிறேன்”
உள்ளே நுழைந்த யோகி, “குட்மானிங் சார்”, என்றான்.
“மானிங். புதுசா போட்ட ப்ளான் எந்தளவுல இருக்கு?”, ராஜு.
“சில எடங்களுக்குப் போயி நோட் பண்ணிட்டு வந்திருக்கேன் சார். அங்க இருக்க இன்கன்வினீயன்ட் நம்ம பிஸினஸ்ல இல்லாம பாத்துக்கிட்டா ஃப்யூச்சர் நல்லாருக்கும் சார்”
“நல்லாருக்கும்னு சொன்ன இந்த ஒரு பாஸிட்டிவ் வார்த்தையே மனசுக்கு மகிழ்ச்சியத் தருது யோகி. அப்ப ஒருகை பாத்துறலாம்!”
“பாத்துக்கலாம் சார்”, யோகியின் வழக்கமான வார்த்தை அவனது முதலாளியால் வரவழைக்கப்பட்டது.
“சரி ஒங்களோட அந்த ஸ்டடீச ஒரு ஃபைலாப் போட்டு என்னோட டேபிள்ல, இல்ல வேண்டாம். நா அடுத்து வரும்போது வாங்கிக்கறேன்”, ராஜு.
“எஸ் சார்”, என்று யோகி ஆர்வமானான்.
“எத்தன நாள் ஆகும்?”, ராஜு.
“நாளை மறுநாள் குடுக்கிறேன் சார்”, யோகி.
“அவசரமில்ல. இன்னும் ரெண்டு எடங்கூடப் பாத்துட்டு வாங்க. ஆனா நல்லா ஸ்டடி பண்ணுங்க”, ராஜு.
“எஸ் சார்”, யோகி.
“டீஏ (TA) கம்பெனிலேருந்து வாங்கிக்கங்க”
“இருக்கட்டும் சார். நா பாத்துக்கறேன்”
“டோன் ஃபீல் ஷை, நா நேத்தே சொல்லிட்டேன். நாலு எடத்துக்கு போறப்ப கொஞ்சம் முன்னப்பின்ன செலவாகும். அதெல்லாம் நீங்க வாங்கற சம்பளத்துல சரிக்கட்டுனா நல்லாருக்காது. இந்த டீஏ செலவ செலவுன்னு பாக்காதீங்க. ஃபர்தர் டெவலப்மென்ட்டுக்கு நம்ம கம்பெனியோட இன்வஸ்ட்மென்ட்னு நெனச்சுக்கோங்க”, என்று நீளமாக பேசி யோகியை சம்மதிக்க வைத்தார் ராஜு.
பேசிக்கொண்டே மாலை (Mall) ஒரு நோட்டமிடும் நோக்கத்தோடு அறையைவிட்டு வெளியே வந்தார் ராஜசிம்மன். உடன் யோகியும் நடக்கலானான்.
அப்போது அதே கம்பெனியிலேயே பழம் தின்று கொட்டைபோட்ட சில ‘நல்ல’ உள்ளங்கள் பொறாமைக் கண்களுடன் யோகியையே பார்த்தன.
“இங்க தெஃப்ட் நடக்கறதா எனக்கு கொஞ்சம் டவுட்டா இருக்கு சார்”, யோகி.
அவனை ஆச்சரியமாக பார்த்த ராஜு,“நாமதான் அங்கங்க சிசிடிவி வச்சிருக்கோம்ல?”, என்றார் அவரது கடையின் அமைப்பில் மிகவும் நம்பிக்கை வைத்தவராக.
“ஆனா, அதெல்லாம் தெரியிற மாதிரி இருக்குறதுனால அந்த இடங்கள்ல தெஃப்ட் நடக்கறதில்ல சார்”
“ம், அதான் நடக்கறதில்லன்னு நீங்களே சொல்றீங்களே!”
“ஆனா கேமரா இல்லாத சில எடங்களும் இருக்குல்ல சார், அங்கல்லாம் ரகசிய கேமரா வச்சு பாத்தா உண்மைய தெரிஞ்சுக்கலாம்னு நெனக்கிறேன் சார்”
“ரகசிய கேமரான்னா, நீங்க எந்த மாதிரி யோசிக்கிறீங்க?”
“இப்பதான் பட்டன் டைப், ஸ்க்ரூ டைப்னு நெறையா வந்திருக்குல்ல சார்”
“ஆமா, எப்படிச் இம்ப்ளிமென்ட் பண்ணலாம்?”
“இன்ட்டீரியர் டெக்கரேசன் கொஞ்சம் மாத்தினோம்னா இம்ப்ளிமென்ட் பண்ணிறலாம் சார்”
“ஓக்கே, கோ அகெட். பட், நீங்க சொன்னது சரியான்னு ஒன்னுக்கு ரெண்டு தடவ யோசிச்சுக்கோங்க”
“எஸ் சார்”
பேசிக்கொண்டே அறைக்கு திரும்பி வந்தவர் டேபிளில் இருந்த போனை எடுத்தார். யோகி விடைபெற்று அறையைவிட்டு வெளியேறினான். மேலும் சில நபர்களுடன் போனில் பேசிவிட்டு வெளியில் கிளம்பினார் ராஜசிம்மன்.
vvv
ரம்மியமான மாலை நேர மயக்கத்தில் யோகியும், சித்துவும் விடுதி அறையில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தனர்.
“நாளக்கி ஒனக்கு லீவா மச்சி?”, யோகி.
“ஆமா, செகேண்ட் சாட்டர்டேதான, இருக்கும். ஆனா என்னோட ப்ரோக்ராமே இறுதி நேர மாறுதலுக்குட்பட்டதுதான மச்சி”, சித்து.
“ஊருக்குப் போலாமா? அம்மாவப் பாத்து ரொம்ப நாளாச்சு”
“ம், போலாமே. டிக்கட் ரிசர்வ் பண்ணவா?”
“இரு மச்சி, அம்மாவுக்கு போன் போட்டு சொல்லிடறேன். அவுங்க கிராமத்துல இருந்தாங்கன்னா அப்பறம் நாம போயி வேஸ்ட்டாயிரும்”
அவனது தாய் தனிமையில் இருக்க முடியாமல் அடிக்கடி தனது ஊரான சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்திற்குச் சென்று அங்கு அவனது அண்ணன் சுந்தரம் வீட்டில் தங்கிவிடுவாள். அண்ணன் பிள்ளைகள், மற்றும் பேரன், பேத்திகளுடன் பொழுது சந்தோசமாகப் போகும் என்பதால் யோகியும் கண்டுகொள்ள மாட்டான். அவனது தந்தையின் மறைவிற்குப் பின் தாய்க்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவரது அண்ணன் வீடுதான்.
கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு மொபைலை எடுத்து தனது தாயார் சரண்யா தேவியை அழைத்தான் யோகி.
“ஹலோ அம்மா, எப்புடி இருக்கீங்க? எங்க இருக்கீங்க?”, யோகி.
“ராசா நல்லாருக்கியாப்பா? நான் நல்லத்தாம்ப்பா இருக்கேன்”, தாயார் சரண்யா உருகினார்.
“நல்லாருக்கேன்மா. நாளைக்கு ஊருக்கு வரலாம்னுதாம்மா கேட்டேன். எங்க இருக்கீங்க?”
“அய்யோ ராசா! இப்பத்தானடா மாமா வீட்டுக்கு வந்தேன். வந்து இன்னும் அரமணி நேரங்கூட ஆகலயே!”
“சரி, சரி. எப்ப வருவீங்க”
“காலைல தான நீ வருவ? நீ அங்கருந்து கிளம்பி வர்றதுக்குள்ள நா இங்கருந்து கிளம்பி வந்துறேம்ப்பா”
“ச்சேச்சே வேணாம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க”
“எனக்கென்னப்பா ரெஸ்ட்டு! நா இங்க ஒரு வேலயாதான் வந்தேன். ரொம்ப நாளா இழுத்துக்கிட்டே இருந்துச்சு. முடிச்சுறலாமேன்னு”, என்றாள் தாய் சற்று கவலையாக.
“என்ன வேலம்மா”
“நம்ம தாத்தாவோட சொத்த, அதான் இந்த வீடு, வயல் எல்லாத்தையும் தனித்தனியா அண்ணனுக்கும் எனக்கும் பிரிச்சு எழுதிரலாமேன்னு சொல்லிட்டே இருந்துச்சு அண்ணே. நாந்தான் என்னத்துக்குன்னு தள்ளிப் போட்டுகிட்டே போனேன்”
“சரி, சரி, எத்தன நாளாகுமாம்”
“எப்புடியும் பத்திரமெல்லாம் ரெடிபண்ணி வேல முடிக்க நாலு நாளாவது ஆகும்ல கண்ணு”
“ஓ, இத நா எதிர்பார்த்தேன்”
“பரவாயில்ல நா அப்பறமா செஞ்சிக்கிறலாம்னு அண்ணன்கிட்ட சொல்லிறேன்”
“பரவால்லம்மா, வேலய முடிங்க. பட் கையெழுத்து போட்றத மட்டும் கொஞ்சம் தள்ளிப் போடுங்க. நா வந்திடுறேனே”
“சரி ராசா. அப்ப நாளைக்கு நீ நேரா இங்க வர்றியா?”
“இல்லம்மா, நீங்க நெனக்கிற மாதிரி அது நாலு நாள்ல முடியாது. ஒரு வாரமாவது ஆகும். எனக்கு தொடர்ச்சியா அவ்ளோ நாள் லீவு கெடக்காது. பத்திரம் முடிக்கிறதுக்கு முந்தி மாமாவ அதுல ரஃப் காப்பி ஒன்னு எனக்கு அனுப்பச் சொல்லுங்க”
“ஏம்ப்பா போட்டு இழுத்துக்கிட்டே போகணும்? முடிச்சுரலாமே”
“முடிச்சுரலாம்மா அதுக்குத்தான கேக்குறேன். மாமா இருக்காங்களா?”
“இல்லயேப்பா”
“சரி, மாமா வந்தா எனக்கு கால் பண்ணச் சொல்றீங்களா?”
“சரிப்பா”
“சரி, நா அடுத்த வாரம் வறேன். அதுக்குள்ள முடிஞ்சா வேலய முடிச்சுருங்க. அதுக்காக மாமாவ ரொம்ப அவசரப் படுத்தாதீங்க”
“ம், சரிப்பா”
“சரி, நா போனை வக்கட்டா?”
“ம், வச்சுரு கண்ணு. ஒடம்பப் பாத்துக்க”
“சரிம்மா. வைக்கிறேன்”
யோகி தாயாருடன் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் வேறு ஒரு அழைப்பு வந்து முடிந்திருந்தது. இவன் மொபைலை வைப்பதற்குள் சித்துவின் மொபைல் ஒலித்தது.
“இஸிட் சித்தார்த்?”, எதிர் முனையில் பெண்ணின் குரல் சற்று அதட்டலாக.
“எஸ், யூ?”, என்றான் சித்து.
“எஃப்3 (F3) ஸ்டேஷன்ல இருந்து பேசறேன்பா. ஒங்க ஃப்ரண்ட்தான மிஸ்டர் யோகிதாஸ்?”, என்று குரல் மேலும் கடுமையானது.
“ஆமா மேடம். என்ன மேடம், ஏதும் பிரச்சனையா?”, என்று அஞ்சுவதுபோல் பாவனை செய்துவிட்டு, எதிரில் குழம்பிப் போய் அவனையே பார்த்துக்கொண்டிருந்த யோகியிடம், ‘சும்மா’ என்பதுபோல் கையைக் காண்பித்தான்.
“கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு ஆக்சிடன்ட் பண்ணிருக்கீங்க, இன்ஃபார்ம் பண்ணலயே?”, என்று அதட்டல் தொடர்ந்தது.
அந்த மூன்றில் ஒன்று என்பதுபோல ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த யோகிக்கு சைகை காண்பித்தான். மேலும் குரலில் பயம் காட்டாமல், “யாரு நாங்களா?”, என்றான்.
“நாங்களான்னா, அப்ப நீங்களும் ஸ்பாட்ல இருந்தீங்களா?”
“ஆக்ஸிடன்ட் ஆனதென்னவோ ஃப்ரண்டோட வண்டிதான். ஆனா அடிபட்டது எனக்குத்தான மேடம். சரி… நீங்க எப்ப எஃப்3-ல டூட்டி ஜாய்ன் பண்ணீங்க?”
“நா எப்ப ஜாய்ன் பண்ணா என்ன மேன்? நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சரியா சொல்லலயே!”, குரலில் கடுமை கொஞ்சம் குறைந்தது. ‘கண்டுபுடுச்சுட்டானோ?’
“யாரது ரிதுவா, யாஷிகாவா இல்ல சம்யுக்தாவா?”, என்றான் கிண்டலாக.
“அதையும் நீங்களே கண்டுபுடிங்களேன்”, என்று வேறு ஒரு குரல் வந்தது.
“யாரது கிராஸ் டாக்?”
“கிராஸ் டாக் இல்ல, கான்ஃபரன்ஸ் கால், அதெல்லாம் கிராமத்துக்காரங்களுக்குத் தெரியாதுல்ல!”, என்று ரிது வாயைக் கொடுத்தாள்.
“யாரு மதுரக்காரன்கிட்டயா! நாங்கலாம் அப்டேட்டட் அல்ட்ரா சிட்டி!”, என்றான் சித்து விட்டுக் கொடுக்காமல்.
“சரி நா யாருன்னு சொல்லுங்கப் பாப்பம்?”, ரிது.
“நீங்க ரிது, மொதல்ல பேசுனது பர்த்டே பேபி சம்யு”, என்றான் கொஞ்சமும் யோசிக்காமல்.
“அதென்ன பர்த்டே பேபி?”, என்றாள் சம்யு.
“நீங்க ரெண்டு பேருந்தான அன்னக்கு கஃபேல பேசிட்டுப் போனீங்க? அந்த ரிதம் ஆஃப் டாக்கிங் கூடவா தெரியாம போயுரும்?”, சித்து.
“ஒத்துக்கிறேன். நீங்க ஒரு யோகின்னு ஒத்துக்கிறேன். சரி யோகி எங்க?”, ரிது.
“பக்கத்துலதான் இருக்கான்”
“மொபைல ஸ்ப்பீக்கர்ல போட முடியுமா?”, என்றாள் சம்யு.
மொபைலை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “போட்டாச்சு, போட்டாச்சு”, யோகியைப் பார்த்து மொபைலைக் காண்பித்தான் சித்து.
“கான்ஃபரன்ஸ் காலா?”, என்று கேட்டான் பேச்சுக்கு இடையில் வந்த யோகி.
“ஆமா யோகி. எப்டி இருக்கீங்க?”, ரிது.
“என்ன விசயம். சொல்லுங்க”, யோகி.
“அத அவ சொல்லுவா”
“ஹலோ, யோகி அன் சித்து, ஹியர் மீ. ஐம் யாஷிகா”, என்று யாஷிகாவும் அவர்களோடு இருப்பதை உறுதிப்படுத்தினாள்.
“ஹலோ யாஷிகா”, என்றனர் நண்பர்கள் இருவரும் கோரஸாக.
“ரிது சொன்ன அந்த ‘அவ’ நீங்கதானா?”, சித்து.
“இல்ல, இல்ல அவ சம்யு”, யாஷிகா.
“சொல்லுங்க சம்யு”, சித்து.
“என்னோட பர்த்டே செலிப்ரேட் பண்ணலாமேன்னுதான் கூப்பிட்டோம்”, சம்யு.
“எங்க ஸ்டேஷன்லயா?”, சித்து.
“அய்யோ அத விடுங்க”, சம்யு.
“எங்க, எப்போ?”, யோகி.
“இப்பவே, எங்க வீட்ல”, சம்யு.
“இப்பவேவா?”, சித்து.
“ஏண்டீ ரொம்பப் படுத்தற?”, ரிது.
“சரி, சரி கைஸ். நாளைக்கு வரலாமா?”, சம்யு.
“ஓக்கே”, சித்து.
“எங்க கம்பெனில லீவு கேட்கணுமே”, என்றான் யோகி.
“கேளுங்க, குடுக்க மாட்டேன்னு சொல்லிருவாங்களா என்ன?”, ரிது.
“நார்மலா நா லீவு போட்டா, ஊருக்குப் போறதுக்குத்தான் கேட்பேன். நாளைக்கு ஒரு நாள் மட்டும்னா…, ஃபுல் டேயுமா செலிப்ரேட் பண்ணப் போறீங்க. ஈவினிங் வந்தா ஓக்கேவா?”, யோகி.
“ஈவினிங்தான் நாங்க ப்ளான் பண்ணிருக்கோம்”, சம்யு.
“ஆனா, என்ன சொல்லி பர்மிஷன் கேக்குறதுன்னு தெரியலையே?”, யோகி.
“உங்க தங்கச்சிக்கு பர்த்டேன்னு சொல்லுங்க”, இடையில் நுழைந்தாள் யாஷிகா.
“சொல்லிட்டாப் போச்சு. ஆனா இதுவரைக்கும் எனக்கு இந்த சென்னைல யாருமே இல்லைன்றது எல்லாத்துக்கும் தெரியுமே”, யோகி.
“நாளைக்கித்தான் பொறந்துச்சுன்னு சொல்லுங்க!”, ரிது.
“இது கொஞ்சம் நான்சிங்க்கா இல்ல?”, சித்து.
“ஹலோ கைஸ், எப்டியாவது வந்து சேருங்க”, சம்யு.
“எங்க, உங்க வீடா?”, சித்து.
“இல்ல. நாளைக்கு லொக்கேஷன் ஷேர் பண்றோம்”, சம்யு.
“இது ஒங்க நம்பரா? இதுல இருந்துதான ஷேர்ப் பண்ணுவீங்க?”, யோகி.
“யா, மறக்காம வந்துருங்க. ஓக்கேவா?”, சம்யு.
“ஓக்கே, ஓக்கே, ஓக்கே”, நண்பர்களின் கோரஸ்.
“அதென்ன மூனு ஓக்கே?”, ரிது.
“மூனு பேரு லைன்ல இருக்கீங்கள்ல, அதான்”, யோகி.
பின்பு அனைவரும் ஒருவருக்கொருவர் அலைபேசியின் பேச்சிலிருந்து விடைபெற்றனர்.
“அப்பாடா, பேசியே டயர்டான மாதிரி இருக்குல்ல?”, சித்து.
“டயர்டானியா, பூஸ்ட்டப் ஆகிருக்கியா? கரெக்டா சொல்லு மச்சி”, யோகி.
“ஓ, இதுக்கு அப்டி ஒரு பேரா”
“அடுத்து என்ன?”
“வெளில அப்டியே கொஞ்சம் காலாற போயிட்டு வருவோமா”
“காலாறவா, கிஃப்ட் வாங்கவா?”, கலாய்க்கும் குரலில் கேட்டான் யோகி.
“நீ?”, என்று ஓரெழுத்தில் வினா எழுப்பினான் தோழன்.
“தங்கச்சிக்கு நா வாங்காம யாரு வாங்கப் போறா?”
“ஆமாடா, இதுவரைக்கும் நாம இந்த ஊர்ல யார் கூப்பிட்டும் போனதில்லல”
“யாரும் கூப்டலைன்னு சொல்லு மச்சி! இப்பதான் ஏதோ ஒரு அழைப்பு வந்திருக்கு அதுக்காகவாவது நாம போயே ஆகனும்டா!”
“சரி வாடா மச்சி, வெளிய போவோம்”, என்று நண்பனை துரிதப்படுத்திவிட்டு, உடைகள் மாற்றினான் சித்து. அறையைவிட்டு வெளியேறினர்.
“என்னோட வண்டில போயிட்டு வந்துருவமே?”, யோகி.
“ஏன்டா ஸ்டேஷன்ல இருந்து யாரும் பாத்ருவாங்களோ”, என்று சற்று சிரித்தவாறே கேட்டான் சித்து.
“எப்படிடா சட்டுன்னு கண்டுபிடிச்ச அதுகள? என்ன உளருச்சுங்க?”, யோகி.
“அய்யோ செம. மொதல்ல நம்ம நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்னு சொல்லுச்சு. அதான் எஃப்3, அப்பறம் நீங்களும் ஸ்பாட்ல இருந்திங்களான்னு கேட்டுச்சு”
“சரி”
“சம்பவம் நடந்த எடம் வேளச்சேரி ஏரியா, சரி அதக் கூட விடு மச்சி. சித்தார்த்துன்னு என்னோட பேர்தான கிளினிக்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கு?”
“ஆமா”
“அப்பறம் எப்படி எடுத்தவொடனே இந்த சம்பவத்துல எங்கயுமே குறிப்பிடாத ஒன்னப்பத்தி கேக்க முடியும்? ஓட்டிட்டு வந்த வண்டி நம்பர வச்சப் பாத்தாலும், அன்னைக்கு நாம ரெண்டு பேரும் போனது என்னோட வண்டி”
“பிரமாதம்டா மச்சி!”
“இதென்னப் பிரமாதம், இதவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்னு இருக்கு!”என்றான் சித்து வடிவேலு ட்ரண்டில்.
“என்னது?”
“பேச்ச ஆரம்பிக்கும் போதே நா ரிசீவ் பண்ணிட்டேன்னு தெரியாம ஒன்னுக்கொன்னு நீ பேசு, நீ பேசுன்னு சொல்லிட்டிருந்துச்சுங்க”
“அப்டி போடு”
வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்தவுடன் யோகி சந்தேகமாக கேட்டான், “சரி, மச்சி. எங்க போகலாம், என்ன வாங்குறது?”
“முன்னப் பின்ன வாங்கிருந்தாத்தான தெரியும்”, சித்து.
“டி-நகர் போகலாமா?”, யோகி.
“ம், ஆனா வண்டி நிக்க பார்க்கிங் பிளேஸ் இருக்கணும்”, சித்து.
“நிபுனா போவோண்டா! நல்லா ஸ்பேசியசா இருக்கும். நிறைய கிஃப்ட் ஐட்டம் இருக்கும்னு நெனக்கிறேன்”
“பரவால்லயே. இதப்பத்தியும் ஒங்க பாஸ் ஸ்டடி பண்ணச் சொல்லிருக்காரா என்ன?”
“இதென்னடா, ஆன் தி வே பாத்துருக்கேன், அவ்ளோதான் மச்சி”
டி-நகர், பாண்டி பஜாரில் நிபுனா கிஃப்ட் ஷாப்பில் வண்டியை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றனர். இருவர் கண்ணிலும் அந்த அற்புதமான பரிசுப் பொருள் பட்டது. இருவரும் அதையே வாங்கலாம் என யோசித்தனர்.
தனித்தனியாக!
©© | ©©