cn-12

நிலவு – 12

தயானந்தன் சென்னைக்குச் சென்ற, மூன்றாம் நாள் இரவு சிந்துவிற்கு இடுப்புவலி கண்டிருக்க, விரைந்து ஒட்டன்சத்திரம் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

தமிழ்செல்வனும் மிதுனாவும் அருகிலேயே இருந்து அனைத்து உதவிகளும் செய்திட, மருத்துவமனைக்கு வந்த மூன்று மணிநேரத்தில், சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் சிந்து.

இந்தக் குழந்தை கருவில் உருவான நாள்முதல், மனதோடு படும் அல்லல்கள்தான் எத்தனை எத்தனை… ஆறாத புண்ணும் அதன் வலியும் தன் மழலையின் மதிமுகத்தில் மறந்தே போனது சிந்துவிற்கு. இதுதான் தாய்மையின் சிறப்பு.

இனி இவனது உயர்வும் தாழ்வும் தன் கைகளில் என எண்ணும் பொழுதே, அவளையும் அறியாமல் மனதோடு சிறுகலக்கமும் உண்டானது.

‘நல்லதொரு மனிதனாய் இவனை வளர்க்க, எனக்கு தைரியத்தை கொடு, ஆண்டவா!’ என வலியோடு தன் வேண்டுதலை வைத்தாள் சிந்து.

இறப்பையும் எதிர்நோக்கி பிறப்பை நல்குவது தாய்மை. பிள்ளை பிறந்த பிறகு, அதன் எதிர்காலத்தையே தனது எதிர்பார்ப்புகளாக்கி, ஆசைகளை புதைத்து வாழும் யோகியாக, ஒரு பெண்ணை உருமாற்றுவது தாய்மைப்பேறு.

இதில் சிந்துவும் விதிவிலக்கல்ல… தன் பிள்ளைக்கான நலனை, இப்பொழுதிலிருந்தே மனதில் அசைபோடத் தொடங்கி விட்டாள். பிரசவ மயக்கம் கலைந்த பிறகு, ஆசையும் பாசத்தையும் தாண்டிய ஒரு தீவிரமான பாவனையை, தன் மகவிடம் எந்நேரமும் அவள் வெளிப்படுத்த,

“அழகு சிந்தாசினி பெற்ற பிள்ளை

என் அசட்டுத் தம்பியின் தங்கப் பிள்ளை”

கேலியாக மிதுனா பாட்டுபாட,

“அண்ணி! தேனுபாட்டி காத்து பலமா அடிக்குது உங்களுக்கு, பழைய பாட்ட மாத்தி போட்டு அசத்துறீங்க” சொல்லிய சிந்து மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.

“திருஷ்டி சுத்தி போடணும்டா, குட்டிப்பையா! அம்மா பார்வை சரியில்ல” நாத்தனாரின் செய்கையை கண்டித்தாள் மிதுனா.

“சந்தோசமா இருக்கு அண்ணி! அதே சமயத்துல பயமாவும் இருக்கு, இவனை நல்லபடியா, என்னால வளர்க்க முடியுமா?” மென்மையான பஞ்சுப் பொதியினைப் போன்ற முயல் குட்டியாய், பிள்ளை கைகளில் தவழ, ஆதுரமாக மகனின் உடலை தடவிப் பார்த்துப் பேசினாள் சிந்து.

“உன்னால நடக்க முடியுமான்னு யோசிச்சா, நீ நடக்க ஆரம்பிச்ச? உன்னோட தயக்கத்தையும் பயத்தையும் மூட்டைகட்டி குப்பையில வீசிடு சிந்து… தடுமாற்றத்தோட எதையும் ஆரம்பிக்கக் கூடாது” சிரிப்புடன் ஆதரவாய் பிள்ளையை வாங்கியபடியே மிதுனா சொல்ல,

“இதே வார்த்தைய உங்க தம்பிக்கு சொல்லி இருக்கலாமே அண்ணி?” கழிவிரக்கத்துடன் சிந்து கேட்க, ஒருநிமிடம் என்ன பதில் சொல்வதென்று தடுமாறிப் போனவள்,

“எல்லாமே கை மீறிப் போயிடுச்சு சிந்து, கெட்ட சகவாசம் மட்டுமில்ல, அளவுக்கு மீறிய சுயநலமும் மனுசன கெட்டவனா மாத்திடும். ஒரே பையன்னு அவன் மேல எல்லோரும் ஒரேடியா அக்கறை காட்டப் போய், அவனுக்கு மத்தவங்கள பத்தி சிந்திக்கிறதும், தப்போன்னு தோணிடுச்சு போல…” குழந்தையைப் பார்த்தவாறு மிதுனா வருத்தம் தோய்ந்த குரலில் பேச,

“பொண்ணுங்கள நல்லபடியா வளர்க்கத் தெரிஞ்சவங்களுக்கு, மகனுக்கு நல்ல புத்தி சொல்லிக் கண்டிக்கத் தெரியல… மொத்தத்துல வளர்ப்பு சரியில்ல சிந்து” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார் மரகதம்.

தனக்கென மட்டுமே சாதகமாக நினைக்கத் தொடங்கியிருந்த மரகதத்தின் புதிய பரிணாமம், பிறரின் மன உணர்வுகளை கவனிக்க தவறி விட்டது. 

இப்பொழுதெல்லாம் மருமகளிடம் நேரடியாகவே குறைபட ஆரம்பித்திருந்தார் மிதுனாவின் மாமியார். மருமகளும் எதிர்பேச்சு பேசாமல், அவர்களின் மனக்காயத்திற்கு இப்படியாவது ஆறுதல் தேடிக் கொள்ளட்டுமென, பதில் பேசாமல் விட்டு விடுகிறாள்.

ஒருபுறம் பாட்டியின் ஜாடைப் பேச்சு, மறுபுறம் மாமியாரின் நேரடித் தாக்குதல் எனத் தொடர் சங்கிலியாக அவளைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. அனைத்து பேச்சிற்கும் முற்றுப் புள்ளியாக, மிதுனா வீட்டினரின் செயலில் வந்து நின்றிருக்க, முள்ளில் நிற்பதைப் போல் தவித்தாள்.

இங்கே இருப்பதால் தானே, இது போன்ற குறை பேச்சுக்களை கேட்க நேரிடுகின்றது என்ற எண்ணம் மிதுனாவிற்கு வர, தன்னை வலுக்கட்டாயமாக இங்கே விட்டுச் சென்ற கணவனின் மேல், அவளது கோபங்கள் திரும்பியிருந்தது. தன் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ளவும் யாருமில்லாது, கணவனின் வரவை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் சிந்துவை வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, மறுநாள் காலையில் தயானந்தன் வந்து விட்டான்.

மூன்றுநாள் பழக்கத்தில், மழலையை தூக்கி வைத்துக் கொள்ளும் முறையை நன்றாக தெரிந்து வைத்திருந்த தமிழ்செல்வன், தனது மச்சானுக்கு ஆசானாகி பாடம் எடுக்கத் தொடங்கியிருந்தான்.

அதிகாலை வேளையில், குழந்தையோடு முன்னறையில் இருவர் மட்டுமே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, கருப்பட்டி காபியோடு அவர்கள் முன்பு வந்து அமர்ந்தாள் மிதுனா.

“தலை, கழுத்து ரெண்டையும் ஒரு கையால பிடிச்சுட்டு, இன்னொரு கையால தூக்கு மச்சான்”

“அக்கா பசங்கள தூக்கியிருக்கேன் மாப்ளே… எனக்கும் தெரியும்”

“வருஷமாயிருச்சே, மறந்து போயிருக்கும்னு சொன்னேன் மச்சான். மூணு மாசம் கழுத்தும் முதுகெலும்பும் பலப்படுற வரை, ரொம்ப பத்திரமா பார்த்துக்கனும்”

“பிள்ளை வளர்ப்புல, டாக்டர் பட்டம் வாங்கிட்ட போ… நாளைய தேவைக்கு இன்னைக்கே, கத்து வச்சுகிட்ட, மாப்ளே!” கேலியும் கிண்டலுமாக பேசிய தயானந்தன்,

“ஆஸ்பத்திரியில எவ்வளவு செலவாச்சு மாப்ளே?” என கேட்க,

“தங்கச்சி குடுத்திருச்சு, மச்சான். நானும் தொகை எவ்வளவுன்னு கேட்க மறந்துட்டேன்” தமிழ்செல்வன், பேச்சை மிதுனாவின் பக்கம் திசை திருப்பி விட்டான்.

“ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு ஆச்சு மிது?” உடனே தயாவும் கேட்க,

“இருபத்தியஞ்சு கோடி”

ஒரே வார்த்தையில் மிதுனா பதிலளிக்க, காபியை குடித்துக் கொண்டிருந்த தமிழ்செல்வனுக்கு புரையேறி விட்டது.

“நான் சின்னபையன், மச்சான். இது அபாய பகுதி, இங்கே இருக்காதேன்னு, என் சிறுமூளை ஜோசியம் சொல்லுது. எந்த சேதாரமா இருந்தாலும் கடமை வீரனா நெஞ்சுல தாங்கிக்கோ…” கேலியில் இறங்கியவன், காபியில் தன் மச்சானுக்கு வீரத் திலகமிட்டே, அங்கிருந்து அகன்றான்.

மனைவியின் பதிலில் கோபம் புதைந்துள்ளதை அறிந்த தயானந்தன்,

“செலவு எவ்வளவுன்னு கேட்டா, உங்க அத்தை முறைக்கிறாடா? என்ன காரணம்னு நீயாவது சொல்லு ராஜா!” குழந்தையின் மூலம், இவன் பேச்சை வளர்க்க,

“கேள்விய ஒழுங்கா கேட்டிருந்தா, பதிலும் ஒழுங்கா வந்திருக்கும்” முறுக்கிக் கொண்டு பேசினாள் மிதுனா.

‘ஆஹா! என்னமோ சரியில்ல… எதுக்கு கோபம்னு தெரியலேயே? இவ விசயத்துல குப்புற விழுந்து புதையல் எடுக்குறதே, என் பொழப்பா போச்சு’ மனதோடு புலம்பிக் கொண்டவன்,

“என் செல்லத்துக்கு என்ன வேணும்? சொன்னா மாமா வாங்கிக் குடுப்பேனாம்” என்றே மனைவியையும் குழந்தையையும் ஒன்றாக்கி பேசிட,

“சீக்கிரம் ஊருக்கு போகணும், மாமாவ அடிக்க உருட்டுக்கட்டை வேணும்” அவனைப் போலவே இவளும் தன் தேவையை கூற,

“செலவு எவ்வளவுன்னு கேட்டது தப்பா போச்சா? அதுக்கு கட்டைய தூக்கியே ஆகணுமா, மிது!”

“நான் சரியாதான் பதில் சொல்லியிருக்கேன்… ஏறக்குறைய அந்த ஆஸ்பத்திரி அத்தனை கோடியிலதான் அடங்கும்” கணவனின் புலம்பலை கணக்கில் கொள்ளாது, மிக எதார்த்தமாக பதில் பேசினாள்.

“ஓ… பில் எவ்வளவு போட்டாங்கன்னு நேரடியா கேட்டிருக்கணுமோ?” தயா தனக்குள் ஊகித்தபடியே கேட்க,

“இப்படிதான் தயா… பல விஷயங்கள் மறைமுகமா கேட்கும்போது, அதற்கான பதில் அர்த்தமில்லாம போகுது” பூடகமாய் சொல்லிக் கொண்டே, குழந்தையின் மீது தன் பார்வையை செலுத்த ஆரம்பித்து விட்டாள்.

தயானந்தனுக்கு மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்றெல்லாம் பிடிபடவில்லை. அதை அறிந்து கொள்ளும் ஆவலும் தோன்றவில்லை. பழக்கமில்லாத புதிய இடத்தில் பொருந்திக் கொள்ள, மிகுந்த சிரமப்பட்டு போனாளோ என்றே மனைவியின் தவிப்பை எண்ணிக் கொண்டவன், அவளை அணைத்தபடியே,

“என்னை தேடுனியா மித்துகுட்டி?” இளகிய குரலில், அவளின் தோள் அணைத்தே கேட்க,

“ம்ம்… ரொம்பவே… நல்லா சண்டை போடணும்னு நினைச்சிருந்தேன். ஆனா எல்லாம் காத்தோட கரைஞ்சு போச்சு. ஏதோ மேஜிக் பண்றீங்க தயா!” இறங்கிய குரலில் மனைவியும் கூற, அவளை உச்சி முகர்ந்தே ஆறுதல் அளித்தான்.

கணவனிடம் தன் நிலையைச் சொல்லி, நியாயத்தை கேட்டு, கேள்விகளால் திணறடிக்க வேண்டுமென நினைத்தவள், அவனது ஆறுதல் வார்த்தையில், தன் கோபத்தை கரைத்து விட்டு, அவனோடு ஒன்றி விட்டாள்.

“ஹால்ல உக்காந்திருக்கோம் தயா… மடியில குழந்தைய வச்சுட்டு செய்ற வேலையைப் பாரு” விலகாமல், பொய்யாக சிலிர்த்துக் கொள்ள,

“என் பொண்டாட்டிய, என் சக்கரகட்டிய கொஞ்ச, நேரம் காலமெல்லாம் பாக்க மாட்டேன்” நெற்றி முத்தம், கன்னத்திற்கு முன்னேறும் பொழுதே, குழந்தை சிணுங்கி விட்டது.

“இப்பவும் உங்க வேலையத்தான் செய்வீங்களா தயா சார்?” சிரிப்புடன் தன்மடியில் குழந்தையை மாற்றிக் கொண்டு தட்டிக் கொடுக்க,

“எவ்வளவு செலவாச்சு மிது?”

“என் வீட்டுக்காரர் சுமையில நான் பங்கெடுத்துக்க கூடாதா?”

“எதுக்கு தேவையில்லாம? நான் சேர்த்து வச்சுருக்கேன்மா!”

“வளைகாப்புக்கு என் செலவையும் சேர்த்து, நீங்க செய்யும் போது, நான் ஏதாவது சொன்னேனா? அது போல இப்போ அமைதியா இருங்க… நீங்க கொண்டு வந்த பணத்த, அத்தைகிட்ட செலவுக்கு வச்சுக்க சொல்லி குடுத்துடுங்க…” என்றதோடு பேச்சை முடித்துக் கொள்ள, சரியாக ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பித்து விட்டனர்.

நர்மதா, கங்கா இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு அன்று குழந்தையை பார்ப்பதற்கென வருகை புரிந்திருக்க, அந்த வீட்டில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் மட்டுமே நிறைந்திருந்தது.  

மரகதத்துடன் விருப்பாச்சிக்கு சென்று, வீட்டு வாடகை ஒப்பந்தத்தை முடித்து விட்டு வந்தவனுக்கு, அன்றைய பொழுது சுகமாக கழிந்தது. தனது உடன்பிறப்புகளை பத்திரமாக விருந்து முடித்து, அன்றைய தினம் அனுப்பி வைத்தான்.

மிதுனாவை அழைத்துச் சென்று, தங்களது சொந்த வீட்டை காண்பிக்க வேண்டும் என்று தயாவிற்கு ஆசைதான். ஆனால் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மனைவியை மட்டும் தனியாக அழைத்துச் செல்ல முடியவில்லை.

மறுநாள் பகல் பொழுதில் மஞ்சுளா, பாஸ்கர், சாந்தினி குழந்தையை பார்க்கவென வருகை புரிய, வந்தவர்களை விரட்டி விடுவது போல, முறைத்துப் பார்த்தான் தயானந்தன்.

தமிழ்செல்வனும் அலமேலுவும் மட்டுமே, அவர்களை வரவேற்று உபசரித்தனர். மரகதம் முழுமூச்சாக அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், தன் வேலைகளை மும்மூரமாக செய்வதில் ஒதுங்கிக் கொண்டார்.  

“ஊசிப் போன பட்டாசும் ஒருகாட்டு காட்டிட்டு போகுமாம்…  அது மனுஷ பயலுகளுக்கும் பொருந்துது. நானும் இருக்கேன்னு ஞாபகப்படுத்த, காக்காவா வந்துட்டு போறாங்க” என்று தேனுபாட்டி, வந்தவர்கள் எதிரிலேயே ஜாடைமாடையாக பேசிவிட, பெருத்த தலைகுனிவாகிப் போனது.

கிராமத்து மனிதர்கள் பாசத்தை மழையாகப் பொழியும் நேரத்தில், எதிர்ப்பை நெருப்பாக காட்ட அஞ்ச மாட்டார்கள். சம்மந்தி குடும்பத்தாரின் முகத்திருப்பலை எதிர் கொண்டவர்களுக்கு, இப்பொழுது தர்ம சங்கடமான நிலைமைதான்.

குற்றம் குறை சொல்லாமல், நல்ல முறையில் பேசி மருமகளை வீட்டிற்கு அழைத்து விடு என்று மஞ்சுளாவிடம் பல அறிவுரைகளை சொல்லியே, சாந்தினி அழைத்து வந்திருந்தாள். மனைவியிடம் சமாதானமாகப் பேசி, நம்பிக்கை வார்த்தைகளை கூறி ஆறுதல் படுத்துமாறு பாஸ்கரிடமும் பேசச் சொல்லியிருந்தாள்.

தங்களது குற்றங்களை ஓரளவு உணர்ந்து கொண்டவர்களும் அதே முடிவுடன் வந்திருக்க, அவர்களுடன் பேசுவதற்குதான் ஆட்களைக் காணோம். தேநீரை கொடுத்து விட்டு அலுமேலுவும் சென்று விட, தயானந்தன், தமிழை வம்படியாக வீட்டுத் திண்ணைக்கு இழுத்து வந்திருந்தான்.

“நீ செய்றது சரியில்ல மச்சான்… எங்க வீட்டுக்கு வந்தவங்கள நான் கவனிக்க வேணாமா?

“அத்தன பெரிய மனுசங்க இல்ல மாப்ளே! கொஞ்சம் பேசினா உனக்கே ஆப்பு வைக்க பிளான் பண்ணுவாங்க” என்று தமிழை தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

மிதுனாவால் இரண்டு குடும்பங்களுக்கும் நடுவில் நின்று நடப்பதை ஊமையாக, வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. சிந்துவின் அருகில் நின்று, பிறந்த வீட்டினர் கேட்பதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, சாந்தினி பேச்சு கொடுக்கத் தொடங்கி இருந்தாள்.

“எப்படியிருக்க சிந்து? வலியில ரொம்ப அவஸ்தை பட்டியா?” அக்கறையாக கேட்க.

“நல்லா இருக்கேன்… அப்படியெல்லாம் இல்ல” ஒற்றை வார்த்தைகளில், வேண்டா வெறுப்பாக பதில் சொன்னாள் சிந்து.

குழந்தையை மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொள்ளும் போதே, அது அழுகையில் கரைந்திட,

“அம்மாட்ட போக, அதுக்குள்ள என்ன அவசரம்? பாட்டி மடியில கொஞ்ச நேரம் இருடா, கண்ணா!” மஞ்சுளா பேரனைப் பார்த்த சந்தோசத்தில், தன்போக்கில் பேசிவிட,

“ரெண்டு பேர் அவசரத்துக்கு பொறந்தவேன், வேற எப்படி இருப்பான்?” என்ற குத்தல் பேச்சில், குழந்தையை வாங்கிக் கொண்டாள் சிந்து.

என்னதான் மகளின் மூலமாக பேரப் பிள்ளைகளை பார்த்திருந்தாலும், மகன் வயிற்றுப் பிள்ளையை, தன் குலம் தழைக்க வந்த வாரிசினை, கைகளில் ஏந்தும்போது ஏற்படும் இன்பப் பூரிப்பே தனியானது. அந்த உணர்வை முழுதாய் அனுபவித்துக் கொண்டே மஞ்சுளா பேசிவிட, அதற்கு மருமகள் பதில் அளித்த விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

“இந்த நேரத்துக்கு என்ன தேவையோ, அது மட்டும் பேசு, சிந்து!” மெதுவாக மிதுனா அறிவுரை கூற,

“என் குழந்தைய தட்டிக் கழிச்சவங்களுக்கு, அவன பத்திப் பேசுற தகுதி இல்லண்ணி… இதவிட பெரிய வார்த்தை பேச எனக்கு வாய் வரல…” சோர்ந்த முகத்தில் கோபம் குடிகொள்ள, ஒருவித படபடப்பும் அந்த நேரத்தில் அவளைத் தாக்கத் தொடங்கியது.

புகுந்த வீட்டினரின் வருகையை விரும்பாதவளின் மனம், தன் பிள்ளையை அவர்கள் கொண்டாடுவதை, ஏற்க முடியவில்லை. மகளை பார்க்க அறைக்குள் வந்த மரகதமும், சிந்துவின் முக வாட்டத்தை கண்டு கொள்ள,

“கண்ண மூடிக்கோ! யாரையும் பார்க்காதே, பேசவும் செய்யாதே…” மகளின் பேச்சிற்கு தூபம் போட்டு விலகி விட்டார்.

“உன் மாமியார கூப்பிடு மிதுனா!” என்ற மஞ்சுளாவின் பேச்சில், மரகதம் அவர்களின் பக்கம் திரும்ப,

“மூனுமாசம் கழிச்சு, நல்ல நாள் பார்த்து, பொண்ணையும் பேரனையும் அனுப்பி வைங்க…” தான்வந்த கடமையை, முடித்துக் கொண்டார் மஞ்சுளா.

“எங்களுக்கு அதுக்குள்ள நகை, சீர் எல்லாம் ரெடி பண்ண முடியாதுங்க… அதெல்லாம் எப்ப சேர்க்க முடியுதோ, அப்ப கொண்டு வந்து விடுறோம்” என்றே மரகதம், மஞ்சுளா முன்பு பேசியதை குத்திக் காட்ட,

“என் சொந்த முயற்சியிலதான் செய்யனும். அதையும் தெளிவா சொல்லிடும்மா. எனக்கு நிம்மதி கிடைக்கும்ங்கிற நம்பிக்கை வராம, நான் அந்த வீட்டுல அடி எடுத்து வைக்க மாட்டேன்.

பாசத்த பலிகொடுத்த என்னால, இனியும் தன்மானத்த விட்டுக் கொடுக்க முடியாது. நான் சொன்னது பிடிக்கலன்னா, மொத்தமா ஒதுங்கிக்கட்டும்” குறையாத படபடப்பில் மூச்சிறைத்தே சிந்து பேசிட, அவளது உடலெங்கும் நடுக்கம் கண்டது. மஞ்சுளாவிற்கு பதிலளிக்க தாயும் மகளும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

“அமைதியா இரு சிந்து… ஏன் பதட்டப் படுற? உன் வாழ்க்கைய, உனக்கு பிடிச்ச மாதிரியே வாழலாம்” அந்த நேரத்தில் அவளை அமைதிப்படுத்த, ஆறுதல் மொழிகளைத் தவிர, வேறெதுவும் கைகொடுக்காது என்று மிதுனாவும் சிந்துவை ஆசுவாசப்படுத்த,

“எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலண்ணி… போகச் சொல்லிடுங்க, இல்லன்னா கொஞ்ச நேரத்துல எதையாவது பேசி, என் குழந்தைய என்கிட்ட இருந்து பிரிச்சுக் கொண்டு போயிடுவாங்க…” பேறுகால மன உளைச்சல்கள், அவளது பேச்சில் சிதறாமல் அழுகையோடு வெளிப்பட, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள் மிதுனா.

“இது உன் குழந்தைம்மா…உன் சம்மதம் இல்லாம, உனக்கு கஷ்டம் குடுக்குற எதையும் நடக்க விடமாட்டோம், அழாதே சிந்து… இந்த நேரத்துல உடம்புக்கு நல்லதில்ல” என்றே தணிவாகக் கூறியவள், தனக்குள் அவளை அடக்கிக் கொள்ள. அவளும் அமைதியாகிப் போனாள்.

“மிதுனா, நீ அவங்கள அனுப்பிட்டு வா… நான் இங்கே இருக்கேன்” மரகதம், மகளின் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு, மருமகளிடம் பேசும் வார்த்தை மூலமே, வந்தவர்களுக்கு விடை கொடுத்து விட்டார்.

‘தேவையா இந்த அவமானம்? குற்றம் குறைகளைப் பேசியே, சின்னப் பெண்ணின் மனதை வதைத்ததின் பலனை, அனுபவித்தாகி விட்டதா?’ பார்வையாலேயே பிறந்த வீட்டினரைப் பார்த்து மிதுனா கடிந்து கொள்ள,

“நாங்க கெளம்புறோம் மிதுனா… வீட்டுல சொல்லிடு” சாந்தினி சொல்லிக்கொண்டே புறப்பட்டு விட்டாள்.

“என்ன தங்கச்சி? இந்நேரத்துக்கு சென்னைக்கு வண்டி இல்லையேம்மா, பொழுது சாஞ்ச பிறகு அனுப்பி இருக்கலாமே?” தமிழ் கூற, மிதுனா, சிந்துவின் நிலையை சொல்லி, உள்ளே சென்று விட்டாள்.

மனைவியை தொடர்ந்து உள்ளே சென்ற தயா, “நீதான் கொழந்த பொறந்தத சொன்னியா மிது?” கோபத்துடன் கேட்க,

“ரெண்டு நாள் முன்னாடி, நான் எங்கே இருக்கேன்னு கேட்டு தம்பி ஃபோன் பண்ணான். அப்போ சிந்து எப்டி இருக்கா? எப்போ டெலிவரின்னு கேட்டதுக்கு, கொழந்த பொறந்தத சொன்னேன்” நடந்ததை சொல்ல, நம்பவில்லை தயானந்தன்.  

“பொய் சொல்ற நீ… தானா கேட்டுக்கிற அளவுக்கு, அத்தனை அக்கறை இருக்கிறவனா உன்தம்பி?” தயானந்தனின் இந்தப் பேச்சை மிதுனா சுத்தமாக விரும்பவில்லை.

“அவனோட அக்கறை லட்சணத்தை, அவன்கிட்டயே கேட்டுக்கோங்க… நான் பேசுனதயெல்லாம் நிரூபிச்சே ஆகணும்ங்குற கட்டாயம் எனக்கில்ல… அத செய்யவும் மாட்டேன். நம்பினா நம்புங்க, இல்ல… உங்க இஷ்டத்துக்கு கோபப்பட்டுகிட்டே இருங்க” என்று பதிலுக்கு வார்த்தைகளை கொட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள் மிதுனா.

தனது மனக்குமுறல்களை இறக்கி வைக்க, எந்தவொரு வழியும் இல்லாதிருக்க, கணவனின் குற்றசாட்டிற்கு, கொட்டும் தேளாக பதிலளித்து விட்டாள் மிதுனா.

தானாக நடக்கும் நிகழ்விற்கும் காரண காரியத்தை தேடி, மிதுனாவிடம் குற்றம் காண்பதை தயாவும் தொடங்கியிருந்தான். இதையெல்லாம் பார்த்து தமிழுக்குதான் மனம் சலித்துக் கொண்டது.

மிதுனா இங்கு வந்ததிலிருந்து தன்பாட்டியும், அத்தையும் மாறிமாறிப் பேசி வருவதை நன்றாக கவனித்து வருகிறான். சிந்துவிற்கு தெரிந்தும் ஏனோ அவளும் தடுக்காமல் இருக்கிறாள்.

சிந்துவின் மனநிலை உடல்நிலை, நடப்பதை எல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும், தானாக காதுகளில் விழும் வார்த்தைகளைக் கூடவா, புரிந்து கொள்ள முடியாமல் போய் விடும்? இப்பொழுது இந்த வரிசையில் தயானந்தனும் சேர்ந்து கொள்ள, அவனால் பொறுக்க முடியவில்லை.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே மச்சான்… தங்கச்சிக்கிட்ட அனுசரணையா இருக்க பாரு. இங்கே என்னென்ன பேச்சு நடக்குதுன்னு உனக்கு தெரியாது. அவளுக்கு நிம்மதிய குடுக்கணும்னு நினைச்சா, ஊருக்கு கூட்டிட்டு போயிடு” தமிழ் தன்னால் முடிந்தவரை கோடு காட்டிவிட்டான்.

“ஏன் மாப்ளே? இங்க அவளுக்கென்ன குறை? சந்தோசமாதானே இருக்கா?

“இருக்க இடமும் மூணு வேளை சோறும் மனசுக்கு சந்தோசத்த குடுத்திடுமா மச்சான்?” தமிழின் கேள்வி யோசிக்க வைக்க, மிதுனா அடிக்கடி சொல்வதும் நினைவிற்கு வந்தது.

வாரத்தில் ஒருநாள் தங்களுக்கென ஒதுக்கும்படி, மனைவி வாய் வலிக்க சொல்லியும், தனது வேலை நிமித்தத்தை காரணம் காட்டியே, அதனை ஒதுக்கி வைத்தவன் தயானந்தன்.

எந்தநாளும் அவனது தேவைகளை முன்னிட்டே, அவளை நாடுபவன், மனைவியின் ஆசை என்னவென்று இதுநாள் வரையிலும் நினைத்ததில்லை. அதையெல்லாம் பெருங்குறையாக எண்ணி அவள் சண்டை பிடித்ததும் இல்லை. எப்பொழுதும் அவனது செயல்கள்தான், மனைவி, அவனுடன் பிணக்கு கொள்ளும் படியாக இருக்கும்.

எந்த இடத்திலும் தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுபவளுக்கு, இங்கே என்ன கஷ்டம் இருந்து விடப் போகிறது? என்றே அவன் எண்ணிக் கொண்டான். அவனைப் பொறுத்தவரை தன்மனைவி, எந்த இடத்திலும் மனதில் இருப்பதை மறைக்காமல் பேசுபவள் என்றுதான்.  

ஆனால் அதைச் சொல்லவும் இங்கே நேரம் வாய்த்ததா என்பதுதான் கேள்வியே? இதனை உணர்ந்து கொண்டால் தயானந்தன், மனிதருள் மாணிக்கம் ஆகிவிடுவான். அப்படி மாறிவிடுவானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                         ******************************************************************************************

குழந்தையை பார்த்துவிட்டு கிளம்பிய மூவரும் நடந்ததை, தங்கள் மனதிற்குள் அசை போட்டுக் கொண்டே, அமைதியாக பயணத்தை தொடர்ந்திருந்தனர்.

திண்டுக்கலில் இறங்கி சென்னைப் பேருந்தில் ஏறும் சமயம், பார்சல்களை சுமந்து வரும் தள்ளு வண்டியை கவனிக்காமல் மனச் சஞ்சலத்துடன் மஞ்சுளா நடக்க, அந்த வண்டியில் உள்ள ஒரு பார்சல், அவரின் வலது தோள்பட்டையை இடித்து, அந்த அதிர்வில் அவர் கீழே விழ, இடித்த பார்சலும் அவர் மேலேயே விழுந்தது.

முன்னே சென்று கொண்டிருந்த பாஸ்கர், கீழே விழுந்தவரின் அலறல் கேட்டுத்தான் திரும்பிப் பார்த்தான். தன் வீட்டினருடன், அலைபேசியில் பேசிக் கொண்டே பின்னால் வந்த சாந்தினியும் அந்த நேரத்தில்தான் கவனித்து, விரைந்து செல்ல, அங்கே மூர்ச்சை ஆகியிருந்தார் மஞ்சுளா.

அவசரமாக முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர். அரைமணி நேரம் அங்கேயே அமர்ந்து, கைவலிக்கு, தற்காலிக வலி நிவாரண மாத்திரையை கொடுக்க, சற்றே தெளிந்தவர், பேருந்தில் ஏறி விட்டார்.

அந்த பயணம் முழுவதிலும் மஞ்சுளாவின் மனம், தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிராகரிப்பை நினைத்து வேதனையில் தவித்தது.  

ஏற்கனவே மிதுனாவின் முடிவில், அதிர்ந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவருக்கு, சாட்டையடியாக சுழன்ற மருமகளின் பேச்சு, மனதைப் பதம் பார்க்க, சம்மந்தி குடும்பத்தாரின் பாராமுகமும் மிகுந்த மன உளைச்சலைத் தர, அதில் உழன்றபடியே, தன் கைவலியை கவனிக்கத் தவறி இருந்தார்.

மனதின் வலி, உடலின் வலியை மறக்கச் செய்திருந்தது. நடு இரவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள் உறக்கத்தை தழுவிக் கொள்ள, மறுநாள் மஞ்சுளாவால் தன் உடலை அசைக்கக்கூட முடியவில்லை.

கைவலி விண்ணென்று தெறிக்க, கண்களும் திறக்க முடியாமல் படுக்கையில் கிடந்தது தவித்துக் கொண்டிருந்தார்.

அதிகாலை நேரத்தில் சாந்தினி, தன் வீட்டிற்கு கிளம்பிய பொழுது, மஞ்சுளா உறக்கத்தில் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ளாமல், சென்று விட்டாள்.

பாஸ்கர், சாந்தினியை இறக்கி விட்டு வரும் நேரத்தில், முனகல் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கும்போதுதான், தாயின் நிலைமை மகனுக்கு தெரிய வந்தது.

மஞ்சுளாவை எழுப்பி உட்கார வைக்க முயன்றாலும் அவர் ஒத்துழைக்கவில்லை. தொடர் முயற்சியில், நல்லதொரு வேலைக்கு தேர்வாகி, மறுநாளே வந்து சேரச் சொல்லி தகவல் வந்திருக்க, அவன் அந்த அவசரத்தில் இருந்தான்.

“ஈரோடுல, வேலை கன்ஃபார்ம் ஆகியிருக்கும்மா… இப்போவே கிளம்பினும். பெரிய கம்பெனி, இப்போதைக்கு உனக்கு மாத்திரை வாங்கிக் குடுக்கிறேன். அக்காவ வந்து பார்த்துக்க சொல்றேன்” தன் இஷ்டத்திற்கு பேசிய பாஸ்கர், சொன்னதைச் செய்தான்.

வாங்கி வந்த இட்லியை, எடுத்து உண்ணவும் மஞ்சுளாவின் விரல் சண்டித்தனம் செய்தது. வலியோடு வீக்கமும் சேர்ந்து, அந்த இடமே ரணகளமாக இருந்தது. இருந்த ஒரு அலைபேசியை தன் கையோடு பாஸ்கர் கொண்டு சென்று விட்டான்.

சாந்தினியை அழைத்து, பாஸ்கர் நிலைமையை விளக்கிச் சொன்னதும், “ரெண்டு நாள் பசங்கள, உங்க மாமா பார்த்துகிட்டதுக்கு, வீடு காடா மாறிக் கிடக்கு பாஸ்கி… திரும்பவும் நான் அந்த பக்கம் வந்து, அவர்கிட்ட பேச்சு வாங்கிக்க முடியாது. மாத்திரை குடுத்திருக்கதானே? நான் சாயந்தரமா போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறேன்” தன் நிலையைக் கூறி பேச்சை முடித்துக் கொண்டாள்.

அவளது வீட்டுச் சூழல், தாயின் நினைவை அறவே மறக்க செய்து விட, அவரின் ஞாபகம் வந்து பதறியபடியே, மஞ்சுளாவிற்கு அழைக்கும் நேரம், இரவு எட்டுமணியைக் கடந்திருந்தது. அழைப்பினை பாஸ்கர் எடுத்து

“இருக்குறதே ஒரு ஃபோன்தானேக்கா… எனக்கு தேவைப்படும்னு, நான் கொண்டு வந்துட்டேன். ரொம்ப முடியாமப் போனா, அம்மாவ பக்கத்துல வீட்டுல சொல்லி உன்னைக் கூப்பிடச் சொல்லிருந்தேன்.

இதுவரைக்கும் ஒன்னும் ஃபோன் வரலைன்னா, காய்ச்சல் குறைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். எதுக்கும் பக்கத்து வீட்டுக்கு கூப்பிட்டு பாக்குறியா?” என்று அக்காவிற்கே, வேலையை கொடுத்து, அவன் அமைதியாகி விட்டான்.

தம்பி சொன்னபடியே செய்த சாந்தினியும், பக்கத்து வீட்டினரை அழைத்துப் பார்க்க சொல்ல, அப்படிப் பார்த்தவர்கள், மஞ்சுளா மயக்கத்தில் இருக்கிறார் என்று சொல்லிவிட, மனக் கலக்கத்தோடு தன் தாயைப் பார்க்கச் சென்றாள் சாந்தினி. இனி அவரது நிலை…