cn-14

நிலவு – 14

உலர் சலவை (Dry cleaning) என்பது தண்ணீரைப் பயன்படுத்தாமல் துணிகளை வேதிப் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்யும் முறையாகும்.

உலர்சலவை செய்யும்போது துணிகளில் உள்ள எண்ணெய் பசை கரைக்கப்பட்டு, அகற்றப்படுவதோடு அத்துடன் ஒட்டியுள்ள அழுக்கும் நீங்குகிறது.

உலர்சலவை செய்ய பல நீர்மங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெர்குளோரோ எத்திலீன் பரவலாகப் கையாளப் படுகிறது.

முதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால் டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும்.

மேலும் அழுக்குகள் இருந்தால், அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கரை என்பதை ஆராய்ந்து, அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கரைகளை நீக்குகின்றனர்.

ஒலியும் ஒளியுமாக எல்சிடி திரையில், செயல் முறையோடு காட்சிகள் விளக்கப்பட்டுக் கொண்டிருந்தன. உலர் சலவைத் தொழில் பற்றிய பயிற்சி வகுப்பில் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொள்கிறாள் மிதுனா.

மனதிற்கு பிடித்தமில்லை என்றாலும் எதையும் கூர்ந்து நோக்கும் அறிவு, காட்சியில் விவரிப்பதை உள்வாங்கிக் கொண்டிருக்க, அவளது மனம் லட்சார்ச்சனை செய்வதைப் போல, கணவனை நல்ல பண்பட்ட வார்த்தைகளால்(திட்டு) சாடிக் கொண்டிருந்தது.

புதிய வேலையில் சேர்வதற்கு, ஒருவாரம் அவகாசம் இருக்க, அதுவரையில் இந்த பயிற்சியில் கலந்துகொள் என்று வலுக்கட்டாயமாக தயானந்தன் இங்கே சேர்த்துவிட, இரண்டு முறை வேண்டாம் என்று மறுத்தவள், கணவனின் அழுத்தப் பார்வையில் சரியென்று ஒத்துக் கொண்டு விட்டாள்.

தினமும் அரைநாள் பயிற்சி முடியவும், தவறாமல் அழைக்கவும் வந்து விடுவான். பாஸ்கரின் வண்டியை இப்பொழுது தயா உபயோகிக்க தொடங்கி இருக்க, அதில்தான் இருவரின் பயணமும்…

அந்த வண்டியை பயன்படுத்த தயா ஆட்சேபணை செய்யவும், இவள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இஷ்டமில்லை என்று சொல்வதும் அடுத்தடுத்த நாட்களில் நடக்க, இருவரும் சிறு பிள்ளைகளைப் போல் ஒப்பந்த அடிப்படையில் ‘நான் சொன்னத நீ கேட்டா, நீ சொன்னத நான் கேட்கிறேன்’ என்கிற ரீதியில், தங்களுக்கு வேண்டியதை நடத்திக் கொண்டிருந்தனர்.

வகுப்பு முடித்துக் கொண்டு வந்தவளை, விழி அகலாது பார்த்தான் தயானந்தன். வேலைக்கு செல்வதின் காரணமாக பெரும்பாலும் புடவை அணிந்து, கொண்டை போட்டு, கம்பீரமாகத் தெரிபவள், இன்று முற்றிலும் வேறுபட்டு இருந்தாள்.

சந்தனத்தில் சிவப்பு பூக்கள் போட்ட சல்வாரில், இரு பக்கமும் துப்பட்டாவை விரித்து விட்டிருந்தவள், வகிடில்லாமல் கிளிப் போட்டு தலைபின்னி இருந்தாள். சிவப்பு நிற வட்டப் பொட்டும், அதற்கு கீழும் தலை வகிடிலும் சின்னதாய் குங்குமம் வைத்து, பார்வைக்கு சின்னப் பெண்ணாக காட்சி தந்தவளை, தனக்குள் நிறைத்துக் கொண்டிருந்தான் தயானந்தன்.

‘ரொம்ப கஷ்டப்படுத்துறோமோ? முகத்தில மருந்துக்கும் சிரிப்பை காணோம், மெலிஞ்சு போயிட்டா… சண்டை போடுறதில இருக்குற கவனத்த, இவ சாப்பாட்டுல காமிக்கலாம்’ மனைவியின் மீது அக்கறைப் பார்வையை இவன் படரவிட,

‘வீட்டுல சண்டை போட்டுட்டு, ரோட்ல நின்னு பொண்டாட்டிய சைட் அடிச்சுத் தொலைக்கிறான், விவஸ்த கெட்டவன்…’ முனுமுனுத்தவாறு கணவனை கரித்துக் கொட்டினாள் மிதுனா.

இன்னமும் இவர்களது சடவுப் பேச்சுகள் ஒய்ந்த பாடில்லை. ஒருவரை ஒருவர் மிஞ்சும் வண்ணம் முறைப்பதை முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருந்தனர்.

“வாயில, ஊமை படம் ஓட்டாம, சீக்கிரம் ஏறு” என மனைவியை விரட்ட,

‘சும்மா நிக்கிற வண்டிய, யூஸ் பண்ணட்டும்னு குடுத்ததுக்கு, தண்டனையா, என்னை இங்க கோர்த்து விட்டுட்டான்’ மனதிற்குள் பொருமியபடியே முகத்தை சுளித்துக் கொண்டு, பின்னால் ஏறி அமர்ந்தாள்.

“வண்டியில சமூக இடைவெளி தேவையா? என்னை பிடிச்சுகிட்டா மாகராணி காத்துல பறந்து போயிருவீங்களா?” கோபத்தில் இவன் கடுகடுக்க,

கணவனின் பேச்சிற்கு பதில் சொல்லாமல், அவன் சொல்வதையும் செய்யாமல் மிதுனா அமைதியாக வந்தாள்.

“வண்டி மாதிரியா இருக்கு? எது, எப்போ கழண்டு விழும்னு தெரியல? அதனால என்னை பிடிச்சுக்க சொன்னா, முறைக்கிற… எங்கேயாவது கீழே விழுந்து எந்திரிச்சாதான் உனக்கு புத்தி வரும்” விடாமல் சீண்டிப் பேச,

“ரொம்ப அக்கறைதான் உங்களுக்கு… பிடிக்கலன்னா வண்டிய தொட வேணாம், நான் ஒன்னும் உங்கள மாதிரி, இத செஞ்சே ஆகணும்னு கட்டாயப்படுத்தல” என்று முறுக்கிக் கொள்ள, வண்டியை நிறுத்தி விட்டான் தயானந்தன்.

“இறங்குடி… உனக்கெல்லாம் பாவம் பார்க்க கூடாது” என்று மெதுவான குரலில் இவன், பல்லைக் கடிக்க,

“நம்ம சண்டை, ரோட்ல போறவங்களுக்கும் தெரியனுமா?” பதிலுக்கு சிடுசிடுத்தபடியே, அவனது தோளைப் பற்றிக் கொள்ள,

“இடுப்ப பிடிச்சுகிட்டா கொறைஞ்சா போயிடுவ? எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்னு, சும்மாவா சொல்றாங்க?” என்று பெருமூச்செறிந்தான்.

கோபத்திலும் மனைவியின் அருகாமை அவனுக்கு வேண்டியிருக்க, அதற்கு அக்கறை சாயத்தை பூசிக் கொண்டான்.

“இப்படி பேசிட்டே வந்தா, நான் இறங்கிடுவேன்” இப்பொழுது இவள் எகிற, ஒரு வழியாக பயணத்தை தொடர்ந்தார்கள். பொழுதொரு வண்ணங்களில் இடக்கு மடக்கான பேச்சுக்கள் மட்டுமே, இவர்களிடையே நடக்கின்றது.

இன்று காலையில், இவர்களுக்கிடையே நடந்த ரசவாதத்தின் உச்ச நிலையே, இப்பொழுது இருவரும் முட்டிக் கொள்வதற்கும் காரணம்.

“உன் சமையலறையில் இன்று ஆப்பிரிக்காவா? ஆஸ்‌திரேலியாவா மிது?” தனது கிண்டலை, காலை உணவை பார்த்தபடியே ஆரம்பித்தான் தயா…

“என்னதான் சொல்ல வர்றீங்க?” வேலை மும்மூரத்தில் சீண்டலை கவனத்தில் கொள்ளாமல் மிதுனா கேட்க,

“சாப்பாத்திங்கிற பேர்ல உலக வரைபடத்த சுட்டு குடுப்பியே… அத சொன்னேன்” நக்கலுடன் சிரித்தான்.

“ம்ம்… அப்புறம்” பதிலுக்கு, இவள் பல்லைக் கடித்துக் கொண்டு முறைக்க,

“அந்த மேப் இல்லன்னா… தோசைக் கல்லுல இட்லிய திருப்பி போட்டு குடுக்குற… அதுதான் என்னால சகிச்சுக்க முடியலடி…” முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு சொன்னான்.

“லிஸ்ட் இருக்கா… முடிஞ்சுருச்சா?” காலைநேர அவசரத்தில் செய்ததை, முகம் சுளித்த படியே பார்த்த கணவனை அடிக்கும் ஆத்திரம் வந்தது அவளுக்கு…

“அத்தைய வரச் சொல்லுங்க… நானும் நிம்மதியா இருப்பேன். போதும்டா சாமி! இந்தாளுக்கு சமைச்சு போட்டு புண்ணியத்தை கட்டிகிட்டது” என்று கோபத்துடன் அலுத்துக் கொண்டாலும், இவன் விட்ட பாடில்லை.

“விளங்காத ரசத்தையும் கசப்பான பொரியலையும் சாப்பிட்டே நான் செத்து போகப் போறேன், அப்பத்தா… உன் பேராண்டி, நிலைமைய பார்த்தியா?” மேலே பார்த்து போலியான வருத்தத்துடன், சலித்துக் கொள்ள, அவன் வாயில் அடித்தாள் மிதுனா

“நல்லதே பேச வராதா? இந்த வாய இழுத்து தைக்கணும்… நாக்க முழ நீளத்துக்கு, நல்லா வளர்த்து விட்டுருக்காங்க… பேசவும் கூடாது, சாப்பிடவும் கூடாது…” என்று சடைத்துக் கொண்டாள் மிதுனா.

“அடிப்பாவி நெஜமாவே செத்துப் போயிருவேண்டி, அப்புறம் நான் இல்லாம, யாருகூட நீ சண்டை போடுவ?”

“நான் சண்டை போடுறத, நிறுத்தி ரொம்ப நாளாச்சு… நீங்கதான் இழுத்து வைக்கிறீங்க? இதுக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?

“அதுதானே, தடையில்லாம நடந்துகிட்டு இருக்கு”

“எனக்கு தெரியாத விஷயத்தை மெதுவா பார்த்து பார்த்துத்தான் பழகிக்க முடியும்… வெளி வேலையில வர்ற இண்டரெஸ்ட், எனக்கு அடுப்படியில வர மாட்டேங்குது, நான் என்ன பண்ண? அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, இல்லன்னா நீங்க சமைக்க ஆரம்பிங்க…” தனது இயலாமையை வெளிப்படுத்தி, அவனுக்கு சளைக்காமல் உத்தரவும் போட,

“உன்னை கட்டிக்கிட்டதுக்கு, இதுமட்டுந்தான்டி நான் செய்யல”

“செய்ய வேண்டாம்னு நானும் தடுக்கல…” என மேலும் வளர்ந்த, அர்த்தமே இல்லாத வாக்கு வாதங்கள், இவர்களின் உணவு நேரத்தை காவு வாங்கி விட, அந்த உலக வரைபடத்திற்கு ஆயுட் காலத்தை நீட்டித்து, வீட்டை விட்டு கிளம்பி வந்திருந்தார்கள்.

‘சுமாரா இருந்தாலும் ஏதோ ஒன்னு, வயித்துல போட்டுட்டு வந்துருக்கலாம். எல்லாம் இவனால… காலையில குடிச்ச காபியோட, இன்னைக்கு பொழுது ஓடுது. என்ன வாழ்க்கையோ? எல்லாம் என் தலையெழுத்து’ என கடுகடுத்தவளின் முகம், அவளது மனத்தாங்கலை வெளிப்படுத்தியது.

கணவனுடன் பேசும் பேச்சிலும் அதே பாவனையே வெளிப்பட்டு, அவன் மனதையும் பதம் பார்த்து விடுவதை அவளால் தடுக்க முடிவதில்லை. நடப்பவைகள் அனைத்தும் தனக்கு எதிராக இருக்க, மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.

தயானந்தன் சொல்வதைப் போல் சமைக்கும் பதார்த்தங்களின் சுவையில், ஏதோ ஒரு குறைவு ஏற்பட்டு விடுகிறது. கவனித்து செய்தாலும் அவளின் கைகளுக்கு சுவையான சமையலின் பக்குவம் வரவில்லை. இதை நினைக்கும் பொழுதே, தன் மீது, தனக்கே வெறுப்பு வந்துவிட, வண்டி நின்றதை கூட அறியாமல் யோசனையில் இருந்தாள் மிதுனா.

“இறங்கு மிது, சாப்பிட்டு போகலாம்” என்று ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தி இருந்தான் தயானந்தன்.

“எனக்கு வேணாம்” காலையில் மூண்ட கோபத்தை பிடித்து  கொண்டு இவள் பேச,

“வர்ற கோபத்துக்கு, உன்னையே கடிச்சு சாப்பிட்டுருவேன்டி… பசியில வண்டி ஓட்ட முடியல, கேன் தூக்கி போடவாவது தெம்பு வேணாமா? சாப்பிட்டு நம்ம கோபத்த, திருவிழாவா கொண்டாடுவோம், வா…” விடாப்பிடியாக, அவளை இழுத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவள் விரும்பி சாப்பிடும் டிஃபனை ஆர்டர் கொடுத்தவன், தனக்கு சாப்பாடு வரவழைத்து, அவளை ஏறிட்டும் பார்க்காமல் உண்ணத் தொடங்கினான்.

‘ஒருவேளை பசிய தாங்க முடியலையா, துரைக்கு?’ என்று அவனை நக்கலடிக்கும் எண்ணம் வந்ததும்,

‘உனக்கு புத்தி மழுங்கிப் போச்சு மிதுனா… வெட்டியா நிக்கிற உனக்கே, ஒரு நாளைக்கு ஆறு வேளை பசிக்கும் போது, வெயில்ல அலையுறவங்களுக்கு பசிக்க செய்யாதா? எத்தன டீ குடிச்சானோ?’ என்றே அவளது மனசாட்சி, கணவனுக்கு பரிந்து பேசி, அவளை திட்டி முடித்தது.

தயானந்தனை வேடிக்கை பார்த்துக் கொண்டு,  இவள் உண்ண மறந்திருக்க,

“சாப்பிட்டு முடி மிது… கோபத்த சாப்பாட்டுல காட்டாதே!” என்றிவன் அறிவுறுத்த,

“எனக்கு பசிக்கல…” என்றவள் தனது உணவின் பாதியை அவனுக்கு கொடுத்து விட்டு, உண்ணத் தொடங்கினாள். மனைவி கொடுத்ததையும் வஞ்சனை இல்லாமல், இவன் உள்ளே தள்ள,

“இவ்ளோ பசி இருக்குறவர், முன்னாடியே சாப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? எதுக்கு, எனக்காக வெயிட் பண்ணனும்?

“எப்படியும் உனக்காக ஒருதடவ ஹோட்டலுக்கு வரணும்… தனித்தனியா வந்தா, டைம் வேஸ்டாகும். அந்த நேரத்துல ஒரு லயன் பார்த்து முடிக்கலாம்” என்றவனின் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டவள், இனிமேல் எந்த சண்டையாக இருந்தாலும் பட்டினியோடு, கணவனை வெளியே அனுப்பக் கூடாது என்று முடிவெடுத்தவள்,

‘ஆண்டவா! நல்லா சமைக்கிற மேஜிக் ஏதாவது இருந்தா என் கனவுல வந்து கத்துக்குடேன்’ மனதோடு, அவசரக் கோலத்தில் ஒரு வேண்டுதலையும் வைத்தாள்.

“அது ஒண்ணுமில்ல மிது, உணக்கு மேக்கிங் வருது ஃபினிஷிங்தான் சொதப்பி வைக்குது, அதான் வெண்பொங்கலும் சின்ன குழந்தை வாந்தி எடுத்த, தயிர் சாதம் மாதிரி இருக்கு” என்று இவன் மீண்டும் ஆரம்பிக்க,

அடேய்! உனக்கு பாவம் பாக்குறேன் பாரு… உண்மையிலேயே நாந்தான்டா, திருந்தாத ஜென்மம் என்று மனதில் நினைத்தை வெளியிடத்தில், சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தாள். 

         **************************************

சுமார் 2500 சதுர அடி கொண்ட பெரிய இடம் அது… அதன் முக்கால்வாசி மறைக்கப்பட்டு, முன்புறம் அலுவலகமாக மாறியிருந்தது. சலவை செய்யப்பட்ட துணிகளும், சலவைக்கு வந்த துணிகளும் பின்னால் இருந்த கூடத்தில் இருந்து, வெளியே செல்வதும் உள்ளே அனுப்புவதுமாக இருந்தனர் வேலையாட்கள்.

“இப்போ நிறைய ஸ்டார்ட்-அப் வர ஆரம்பிச்சுடுச்சு… அதுக்கு தகுந்த வேகத்துல நாமளும் வேலை செஞ்சா, நல்லா முன்னுக்கு வரலாம். துணி துவைக்கிற வேலைன்னு ஈஸியா நினைக்காம, கொஞ்சம் கவனம் எடுத்தாலும் போதும், பிக்-அப் பண்ணிடலாம். நான் பொழுது போக்குக்கு மட்டுமே, இந்த தொழில செய்யுறதால, மேற்கொண்டு எந்தவொரு முயற்சியும் எடுக்காம இருக்கேன்” என்று சொன்னவர் அந்த உலர்சலவை தொழிலகத்தின் நிறுவனர் ராமமூர்த்தி.

அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் சொந்தக்காரர். இவரது வாரிசுகள் வெளிநாட்டில் நல்ல முறையில் தடம் பதித்து, அங்கேயே செட்டில் ஆகியிருக்க, இங்கே பிறருக்கு வருமானம் கொடுக்கும் தொழிலைச் செய்து, தன் நாட்களை கடத்திக் கொண்டிருப்பவர். குணத்திலும் பழக்கத்திலும் மிக எளிமையை கடைபிடிப்பவர்.

கீழே உலர் சலவைக் கூடமும், அலுவலகமும் அமைக்கப்பட்டிருக்க, மேலே குடிநீர் சுத்திகரிக்கும் ஆலைக்கான தனித்தனியான அறைகளும் பிரித்துக் கட்டப் பட்டிருந்தது.

சென்னைக்கு வந்த நாள்தொட்டு, தயானந்தனின் பேச்சால் குணத்தால் கவரப்பட்டு, அவனுக்கு வேலை கொடுத்து உதவியவர். நாளைடைவில் வண்டி வாடகையும், தண்ணீர் கேனின் அசலை மட்டும் பெற்றுக் கொண்டு, அவனை ஒரு வியாபாரியாக்கி முன்னேற்றியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

ஒருவார பயிற்சி முடிந்த மறுநாளே, மனைவியை அழைத்துக் கொண்டு இங்கே வந்து விட்டான் தயானந்தன். இருவரையும் எதிரே அமர வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் பெரியவர் ராமமூர்த்தி.

“எனக்கு, மூணு பசங்க ஒரு பொண்ணு, நாலு பேரும் நாலு திசையில இருக்காங்க… என்னதான் வீடியோகால்ல பேசி பார்த்துகிட்டாலும், நேர்ல பேசின மாதிரி இருக்காது. அதான் நானும் என் வீட்டம்மாவும் ஒரு வருஷம் ஊர் சுத்திட்டு, பசங்கள பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம்.

மினரல் வாட்டர் பிளானெட்ட, ஏற்கனவே ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சாச்சு… ட்ரைகிளீனிங்னு சொன்னாலே, ஒவ்வொருத்தனும் வேலைக்கு வரவே யோசிக்கிறான். நான் வர்ற வரைக்கும் இந்த தொழிலை எடுத்து நடத்த பொறுப்பான ஆள் தேடும் போதுதான் தயானந்தன், நான் செய்றேன்னு முன்வந்தாப்புல…

சம்பளம் வாங்கி, வேலைக்காரனா இருக்குறத விட, லீசுக்கு எடுத்து சம்பாத்தியம் பண்ணிக்கிறேன்னு, அவன்தான் கேட்டான். வாழ்க்கையில முன்னுக்கு வர நினைக்கிறவனுக்கு, என்னால முடிஞ்ச சின்ன உபகாரமா இருக்கட்டும்னு ஒத்துக்கிட்டேன்” என்று அவர் சொல்லச் சொல்ல இமை தட்டாது உள்வாங்கிக் கொண்டாள் மிதுனா.

“ஆனா உங்களுக்கு, இதுல நஷ்டம்தானே சார்… சரி வருமா? மிதுனா, தனது சந்தேகத்தை மறைக்காமல் கேட்க,

“போன வருஷ வருமானத்தில வந்த மூணுல ஒரு பங்கு பணத்த, நான் லீஸ் அமௌண்டா வாங்கிக்கிறேன். அதுக்கும் மேல, உங்க சாமர்த்தியத்துலதான் நீங்க லாபம் பார்க்கப் போறீங்க… நான் திரும்பி வர்ற வரைக்கும், இந்த தொழிலை எடுத்து நடத்துறதுக்குன்னு ஒப்பந்த பத்திரம் ரெடியா இருக்கு. உன் பேர்ல தான்ம்மா லீஸ் எடுத்திருக்கு. நீ சைன் பண்ணினா வேலை முடிஞ்சுடும்” என்று பத்திரத்தை எடுத்து மேஜையின் மேல் வைக்க, ஆச்சரியப் பார்வையில் கணவனைப் ஏறிட்டாள் மிதுனா. இவளுக்கு இந்த செய்தி புதிது.

உனக்காக, ஒரு புதிய ஏற்பாட்டை செய்திருக்கேன் என்று அழைத்து வந்தான்தான். புதிய வேலையாக இருக்கும் என்று எதிர்பார்த்தவள், இப்படியான புதிய பொறுப்பு தன்னை வந்து சேரும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.

“ஒரு மாசத்துக்கு முன்னாடியே பேசி முடிச்ச ஒப்பந்தம். தயானந்தன், அவனோட மாப்பிள்ளை கூட வந்து அட்வான்ஸ் குடுத்துட்டு போனாரு” என்று கணவனின் ரகசியத்தை, பெரியவர் போட்டு உடைக்க,

‘என்ன இதெல்லாம்?’ மிதுனா, பார்வையால் கணவனை வினவ,

“நல்லநேரம் முடியுறதுக்குள்ள சைன் போடு மிது! அடுத்து பேசுவோம்” என்று, அவளை யோசிக்கவும் விடாது, அடுத்தடுத்த வேலைகளை செய்ய வைத்தான்.

“ஒரு வருஷம், ரொம்ப சின்ன பீரியட்தான்… தொழில் செய்றதுக்கு உங்க ட்ரைனிங்கா எடுத்துக்கலாம். கடை வாடகை, மூலப்பொருள் வாங்குறது, லேபர்ஸ் சம்பளம் போக, உங்களுக்கும் லாபம் அதிகமா வர்ற மாதிரி நிறைய மாற்றங்களை கொண்டு வாங்க… கண்டிப்பா ஜெயிக்கலாம்” பெரியவரின் நம்பிக்கை வார்த்தைகள், தேவாமிர்தமாக ஒலிக்க, புதியதொரு உற்சாகம் இருவருக்கும் தொற்றிக் கொண்டது.

குழப்பங்களை சுமந்து கொண்டு வந்தவளுக்கு, சந்தோசத்தை பரிசாக அளித்து, வீட்டிற்கு அழைத்து வந்தான் தயானந்தன்.

“ஏன் எங்கிட்ட சொல்லல தயா? கோபத்தோட கிளாஸ்க்கு போகும் போதாவது சொல்லி இருக்கலாமே? நம்மால முடியுமா? அட்வான்ஸ் குடுக்க பணம் ஏது?” தனது கேள்விக் கணைகளை தொடுத்து, கணவனை திக்கு முக்காட வைத்தாள் மிதுனா.

“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ மிது! நான் சொல்ற எதையும் காது குடுத்து கேட்குற நிலமையில நீ இல்ல… கிளாஸ்னு ஆரம்பிக்கும் போதே, ஏன் எதுக்குனு கேக்காம, வேண்டாம்னு சண்டை போட்டவ நீ… இத பத்தி சொன்னா, இந்த வேலையெல்லாம் செய்யவே வேண்டாம்னு, முடிவெடுத்து, வீட்டுலயே உட்கார்ந்துருவ…” நீண்டதொரு விளக்கத்தை கூறி, மனைவியை அமைதிப் படுத்தினான்.

“நான் மட்டுமா கோபப்பட்டேன்? நீங்களும்தான்… ஒழுங்கா என்கூட பேசி எத்தன நாளாச்சு?” மற்றொரு வாதத்திற்கு மிதுனா அடித்தளம் அமைக்க,

“இப்போ சண்டை போடவா? உனக்கு பதில் சொல்லவா?” தயா எதிர்கேள்வி கேட்ட பிறகுதான், அமைதியானாள்.

“தமிழ் மாப்ளேகிட்ட கேட்டுதான் குடுத்திருக்கேன்… உங்கம்மா காரியத்துக்கு வந்தப்ப, விவரம் சொன்னதும் உடனே வேலைய முடி, மச்சான்னு தூக்கி குடுத்திட்டான். வேண்டாம்னு சொன்னா, கோவிச்சுப்பான்…” சொல்லிக் கொண்டே மனைவியை தன் கைச்சிறைக்குள் கொண்டு வந்திருந்தான்.  

“ஏற்கனவே நிறைய செலவு என்னால…இப்போ இதையும் இழுத்து வச்சுக்கணுமா? கொஞ்சநாள் பொறுத்து ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம் தயா?” அவனோடு ஒட்டிக் கொண்டு, தனது சிறு வருத்தத்தை மிதுனா தெரிவிக்க,

“போட்ட பணத்த, சீக்கிரமே திருப்பி எடுத்து, குடுத்துடலாம் மிது… எத்தன வருசம்தான் நீயும் சம்பளம் வாங்கிட்டு இருப்ப… கொஞ்சநாள் சம்பளம் குடுத்துப் பாரு, முதலாளியா இருந்தா எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க வேணாமா?” என்றவன் பேச்சில், பளிச்சென சிரித்தவள்,

“முதலாளியா இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா ருசி கண்டுட்டா, திரும்ப அப்படியே இருக்கனும்ன்னு மனசு கேக்குமே… அப்போ என்ன செய்ய போறோம்?” தனது சந்தேகத்தை கேள்வியாக நிறுத்தினாள்.

“போறோம் இல்ல… என்ன செய்ய போறேன்னு, இப்போ இருந்தே யோசிக்க ஆரம்பி… என்னால முடிஞ்ச சின்ன உதவியா, உனக்காக ஒரு தொழிலை ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டேன். இனி அத பிடிச்சு மேலே வர்றது உன்னோட பொறுப்பு” மனைவியின் மூக்கைத் திருகி, தன் பேச்சை முடித்தவன் உறங்கப் போய்விட, இவள்தான் இன்னும் இன்னும் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டி இருந்தது.

(இரசவாதம் – வீண் வாதம், வீண் சண்டை, வலிய சண்டைக்கு இழுத்தல்)