cn-16
cn-16
நிலவு – 16
இரவின் இன்னல்களைத் தீர்த்த, புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுது… தேனுபாட்டிக்கு சூடுதண்ணீர் எடுப்பதற்கென அந்த நேரத்தில் சிந்து சமயலறைக்கு வர, அங்கே அலமேலு பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்தபடியே, தண்ணீரை சுட வைத்தவள், ஃபிளாஸ்கில் ஊற்றிக் கொண்டு, சென்று விட்டாள். அலமேலுவின் செய்கையில் மனம் காயப்பட்ட சிந்து, கடந்த இரண்டு நாட்களாக அவருடன் பேசுவதையும் தவிர்த்திருந்தாள்.
‘இந்தப் பெண் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா? அல்லது என்னிடம்தான் ஏதும் குறைபாடா?’ என்ற தன்னிரக்கத்திலேயே, சென்றவளின் வழியை பார்த்துக் கொண்டிருந்தார் அலமேலு.
முன்தின இரவில் சிந்துவுடன் பேசவென்று அவளைத் தேடிச் சென்ற பொழுது, மரகதமும் தேனரசியும் உரலாக அவளை இடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து தானாக, பின்னடைந்து விட்டார்.
உறக்கமின்றி மனபாரங்களுடன் இரவைக் கடத்திய அலமேலு, விடியாத பொழுதில் தீராத மனப்பொருமலுடன் தனது சாம்ராஜ்ஜியத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.
கைகள் தன் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருக்க, காலையில் சாப்பிடும் லேகியத்தை சிந்துவிற்கென எடுத்து வைக்கவும், மீண்டும் அவள் வரவும் சரியாக இருந்தது.
ஒன்றும் பேசாமல் ‘எடுத்துக் கொள்’ என்று அவளைப் பார்க்க, ‘இன்னமும் இதே பார்வை தானா என் மீது?’ கேட்க முடியாத கேள்வியுடன் சிந்துவும் நிற்க, மௌனமான யுத்தம்தான் இருவரின் இடையிலும்…
அந்த சமயம் அங்கே வந்த நாராயணனும், சிந்து இருப்பதைப் பார்த்து,
“குட்டி முழிச்சிட்டு இருந்தா, தூக்கிட்டு வா சிந்தா…” என்க,
“உங்க பேரன், இப்போதான் நைட் ஷிப்ட் முடிச்சு தூங்குறார், மாமா…”
“அவன் தூங்குற நேரம், நீயும் போய் ரெஸ்ட் எடு கண்ணு… எதுக்காக இங்க நிக்கிற?” என்று பாசம் மேலிட்ட குரலில் உத்தரவிட.
“அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு போறேன், அதுக்குள்ள அம்மாவும் வந்துருவாங்க… அத்தை ஒத்தையில கஷ்டப்பட வேணாம்” சொல்லி முடித்த நேரம், அலமேலு பொங்கி விட்டார்
“ஏன்? இத்தன வருஷம் நீ ஒத்தாசை பண்ணித்தான் நான் மூணு வேளையும் வடிச்சேனா? இல்ல… என் கஷ்டத்த பார்த்து உருகிப்போற நல்லவளா நீ?” தன் மனதின் ஆதங்கத்திற்கு, அவளை பலியாக்கினார் அலமேலு.
ஏதேதோ எண்ணங்களை மனதிற்குள் அலைமோத விட்டுக் கொண்டிருந்தவர், குரல் உயர்த்தியே, தனது பேச்சினை ஆரம்பித்தார்.
“ஐயோ, அப்படியில்ல அத்த… நான் யதார்த்தமாதான் சொன்னேன்” மென்று முழுங்கி சிந்து சொல்ல,
“ஓ… அப்படி இருக்குறவதான், ரெண்டுநாளா என் கூட பேசாம மல்லுக்கு நிக்கிறாயா? அப்படி என்னடி விரோதம் என்மேல, உனக்கு?” என்று படபடத்தவரின் குரல் கரகரப்பிற்கு சென்று, கண்ணீராய் உடைப்பெடுக்க,
“என்ன அலமு சொல்ற? சிந்தா என்ன இதெல்லாம்?” மனைவியின் பொருமலைக் கேட்ட நாராயணன், இருவரையும் கண்டிக்கும் பார்வையில் நோக்கினார்.
“அது… வந்து மாமா… நான் எதுவும் செய்யணும்னு எல்லாம் செய்யல… ஏதோ ஒரு வருத்தத்தில, பேசத் தோணல” என்ற சிந்து, அலமேலுவிடம் திரும்பி,
“நெஜமா சொல்றேன் அத்த… எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல… உங்க மனசு சங்கடப்படுதேனுதான், நான் ஒதுங்கி இருந்தேன்” தவிப்பாய் தன் நிலையை விளக்க முற்பட்டாள்.
“நேத்தே அவ சொல்லிட்டாளே, அலமு! இன்னும் ஏன் அத தூக்கி சுமக்கிறவ?” நாராயணன் சிந்துவை தாங்கிப் பேச,
“நான் அவகிட்ட பேசிட்டு இருக்கேன், நீங்க இடையில வந்தா நல்லா இருக்காது சொல்லிட்டேன்” வெகுவாக எழுந்த வெறுமை உணர்வில், கணவரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்தார் அலமேலு.
அவரின் கோபத்தில் சற்று பயந்து பின்னடைந்த சிந்து, “பேசமா இருந்தது தப்புதான், மன்னிடுச்சுடுங்க அத்த” என்று இறங்கிய குரலில் மன்னிப்பை வேண்ட,
“இப்படி வார்த்தைக்கு வார்த்தை, அத்தை சொத்தைன்னு சொல்றதுதான்டி, உன்னை தூரமா நிக்க வைச்சு பார்க்க தோணிருச்சு எனக்கு… பெத்தவங்ககிட்ட போனதும், வளர்த்தவங்க உனக்கு அந்நியமா போயிட்டாங்க தானே?” கிட்டத்தட்ட அவளிடம் சண்டை பிடித்தார்.
“அப்படியெல்லாம் இல்ல அத்த…” அவசர அவதியில் சிந்து மறுத்ததும்,
“அலமேலு! எதுக்கு இவ்வளவு கோபப்படுற? அவளுக்கு என்ன சொன்னாங்களோ, அததானே அவ செய்ய முடியும்?” மனைவியிடம் இருந்து எப்படியாவது மகளை காப்பற்றி விடும் தந்தையாக நாராயணனின் குரல் ஒலித்தது.
“அப்போ நாங்க சொல்லி வளர்த்ததெல்லாம் காத்தோட போச்சா? எப்படி இவளால நிமிசத்துல மாத்திக்க முடிஞ்சது… வளர்த்தவங்க பாசம் பொய்யா என்ன? அத்தையாம்… மாமாவாம்… இவ இப்படி உறவு கொண்டாடலன்னுதான் நாங்க அழுதுட்டு இருக்கோமா?” என்றவரின் பேச்சும் கண்ணீரும் அடங்காத வெள்ளமாய் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.
“பன்னெண்டு வருஷமா அம்மான்னு கூப்பிட்டவ, ஒரு வாரத்துல அத்தைன்னு சொல்லிட்டு வந்து நிக்கிறா… நெஞ்சுல தணலை அள்ளிக் கொட்டிட்டா… இன்னைக்கு சொந்த கால்ல நிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிற கழுதைக்கு, அம்மாவ அத்தைன்னு கூப்பிட மாட்டேன்னு, அன்னைக்குச் சொல்லத் தெரியலயா? இவ எங்கள எவ்ளோ தூரத்துல தள்ளி நிறுத்தியிருக்கானு, இதுல இருந்தே தெரிஞ்சு போச்சு” என்று ஆற்றாமையில் புலம்ப ஆரம்பித்தவரை, தேற்றுவதற்குதான் அங்கே ஆள் இல்லை.
“ஆறுமாச குழந்தையில இருந்து, உன்னை பொத்தி வச்சுகிட்டதுக்கு ரொம்ப நல்ல உபகாரம் செஞ்சுட்ட நீ” வார்த்தைகளில் வலிகள் வீரியம் கொள்ள, கண்ணீரும் அதனுடன் கை கோர்த்தது.
பேச்சுச் சத்தம் கேட்டு அனைவரும் அங்கே வந்துவிட, ஒரு நிமிடம் தன்னை நிலைபடுத்திக் கொண்ட அலுமேலு, கண்ணீரை அடக்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
பெரியவர்கள் சொல்வதை தட்டாமல் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட சிந்து, கோமளவல்லியும் மரகதமும் சொன்ன உறவு முறைகளை மனதில் பதிய வைக்கவே மிகுந்த சிரமப்பட்டாள்.
உறவு முறையை மாற்றி அழைப்பதினால் என்ன பாதகம் வந்துவிடப் போகிறது என அவளது அறியா வயதும் நியாயப்படுத்த, பிறந்த வீட்டில் சொன்னதற்கேற்ப, அழைக்கும் முறையை மாற்றிக் கொண்டாள்.
எந்தவொரு பிரதிபலனும் பார்க்காது, அன்பைக் கொட்டி வளர்த்தவர்களின் பாசம், என்றோ ஒருநாள் கானல் நீராக கரைந்து போவது பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
அத்தகையவர்களின் அன்பு, உதாசீனப் படுத்தப்படும் பொழுது அவர்கள் அடையும் மன உளைச்சலுக்கு, எதைச் சொல்லியும் ஆறுதல் கொடுத்து விட முடியாது.
வளர்த்த குழந்தையை மறக்க நினைத்து, அதிலும் தோற்றுப்போய், கோபம் என்னும் முகமுடி அணிந்து, தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்பவர்களும் உண்டு. அலமேலுவின் மனநிலையும் இப்பொழுது அப்படியே…
வருடக் கணக்கில் மனதை அழுத்தி வந்த, ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார் அலமேலு. இதற்கு யாரையும் குற்றவாளியாக்கி குறை சொல்லவும் இல்லை.
தன்னிடம் உரிமை பாராட்டவில்லையே? தனது அன்பும் பாசமும் பொய்யாகிப் போனதோ என்ற வேதனைதான் அவரின் மனமெல்லாம் புதர் காடாய் மண்டிக் கிடந்தது.
மாமியார் மெச்சிய மருமகளாக, தன்னை நிலைநிறுத்தி கொள்ள நினைத்த மரகதம், வளர்த்தவரின் பாசத்தை கவனத்தில் கொள்ள மறந்து போய் விட்டார். ஒரு தாயின் மனதை காயப்படுத்திய தனது தவறை, எண்ணி அவரும் வெட்கித் தலை குனிந்தார்
அனைவரும் கூடத்தில் அமைதியாக நிற்க, “சிந்து, நீதான் போய் சமாதானப்படுத்தனும், போ…” மகளுக்கு உத்தரவிட்ட மரகதம்,
அன்றைய பொழுதை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். காலம் கடந்த ஞானோதயத்தில், எப்படி இதை சரி செய்வது என்ற தவிப்பும் அவருக்கு சேர்ந்து கொண்டது.
“இப்படி மனசுல மருகிட்டு இருக்குறவ, என்கிட்டே கொட்டி இருந்தா, நான் தடுத்திருப்பேனே? எல்லாம் அந்த பெரிய வூட்டுக்காரிய சொல்லணும்” தனது அறியாமையில் குற்றம் கண்டாலும் வழக்கம்போல், சம்மந்தியை நொடித்துக் கொள்வதில் தவறவில்லை தேனுபாட்டி.
தமிழ்செல்வனுக்கும், தன் அன்னையின் வலியில் மனம் தவித்திட, சிந்துவை போகச் சொல்லி பார்வையால் உத்தரவிட்டான். அலமேலுவை நாடிச் சென்ற சிந்து ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியாமல் கைகளைப் பிசைய, அவரைப் பார்த்தபடியே நின்று விட்டாள்.
முதுகு குலுங்குவதிலேயே அலமேலு அழுகையில் கரைவது நன்றாக தெரிய, சிந்துவிற்கும் அவரின் வேதனை தாக்கியது. கட்டிலில் அவருக்கு அருகே அமர்ந்தவள், என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க, அவரது தோள் தொட்டு,
“அம்மா” என்று அழைத்தாலும் அவர் கண்டு கொள்ளவில்லை. மூன்று முறை தொடர்ந்து அழைத்துப் பார்த்தும் அவர் தன்னிலையில் இருந்து மாறாமல் அழுது கொண்டே இருக்க,
“உன் கோபம் போற வரைக்கும் என்னை அடிச்சுடும்மா… நீ அழுது உடம்ப கெடுத்துக்காதே… நிச்சயமா நான் ஒருநாளும் இப்படியெல்லாம் நினைச்சு பார்க்கல… என்னை மன்னிச்சிரும்மா” என்றவள், அவளின் பழக்கமாய், அலமேலுவின் வயிற்றில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.
தன்னை விட்டுச் விலகிய சின்னஞ்சிறு மகளாக, அவளை கண்டவரின் மனம், மகள் அழுகையை பார்த்து பதறி விட்டது. தவித்துக் கொண்டிருந்த தாய்மை, முழித்துக் கொள்ள, மகளின் நலனே அவருக்கு பெரிதாகிப் போனது.
“பச்ச உடம்புக்காரி, அழக்கூடாதுடி, பிள்ளைக்கு ஒத்துக்காது கண்ணு” என்று அதட்டல் போட்டவர், நொடியில் இயல்பிற்கு திரும்பி விட்டார்.
“நான் ஒரு கூறுகெட்டவ… ரெண்டு திட்டு திட்டி உன்ன பேச வைக்காம, என்னேன்னவோ புலம்பித் தள்ளிட்டேன்” என்று தன்னைத்தானே குறை பட்டுக் கொண்டவர், சிந்துவின் முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார்.
“நேத்து எல்லார் முன்னாடியும் சொன்னத, தனியா வந்து பேசியிருந்தா, எனக்கு இத்தன மனக்கஷ்டம் வந்திருக்காதுடி.. உன் விருப்பம் எதுவா இருந்தாலும் தலையாட்டுற நெலையிலதான், நான் இப்போ வரைக்கும் இருக்கேன்.
ஆனா என்ன? மகளா வளர்த்தவள, மருமகளா நினைக்கதான் என் மனசு இடறிப் போச்சு… உனக்கு சீர்வரிசை செஞ்சு பெருமையா அனுப்ப நினைச்சேன், அதுக்கும் உன் அண்ணனும் அம்மாவும் சேர்ந்து தடை போட்டுட்டாங்க… நீயும் இங்கேயிருந்து போயிட்டு, முறை மாத்தி கூப்பிட்டதுன்னு எல்லாம் சேர்ந்து எனக்கு அழுத்தம் குடுத்திருச்சு” என்று தன் மனதின் அவஸ்தைகளை, எல்லாம் ஒரேடியாக இறக்கி வைத்தார் அலமேலு.
“நான், இங்கே இருக்குறது பிடிக்காமதான் நீ, என்னை ஒதுக்கி வைக்கிறியோனு, நானும் ஒதுங்கிப் போயிட்டேன்மா. நான் போனது, அத்தனை கஷ்டம் குடுத்திருந்தா என்னை திரும்ப கூப்பிட்டு இருக்கலாமே? ஏன் செய்யல?” தன்னை வளர்த்தவரின் மனவேதனையை எண்ணி, பரிதவித்துப் போனாள்.
“எப்படி கூப்பிட? என் பையன மனசுல வச்சுகிட்டுதானே உன்னோட அப்பத்தா, உன்னை அழைச்சுகிட்டது. அத நாங்க நடத்தப் பார்க்குறோம்னு, அவங்க முடிவே கட்டிடுவாங்க… அப்புறம் அதுவே குடும்ப பிரச்சனையா மாறிடும் கண்ணு… சும்மாவே ரெண்டு பக்கத்து பெரியவங்களும் உடுக்கை அடிப்பாங்க… அதுல என் தலை உருளனுமா?” என்றவரின் பேச்சில் சிரித்து விட்டாள் சிந்து.
“ரெண்டு பாட்டியும் ட்வென்டி ட்வென்டி மாட்ச் ஆடியிருப்பாங்களே! நல்ல சான்ஸ் நடக்காம போச்சே!” பொய்யாய் வருத்தபட்டாள் சிந்து.
“அடிங்… என்னை உருட்டி விடறதுல அவ்வளவு சந்தோஷமாடி உனக்கு?” என காதினைத் திருக,
“இப்போ நான் பச்ச உடம்புக்காரி இல்லையா? என் வலி என் பிள்ளைக்கு போகாதா?” என பாவமாய் கேட்டு கண்ணைச் சிமிட்டினாள் சிந்து.
“இப்படி என்கூட, நீ சிரிச்சு பேசி எத்தன வருஷமாச்சு ராசாத்தி! பட்டணத்துக்கு உன்னை அனுப்ப எனக்கும் உம்ம அப்பாருக்கும் இஷ்டமே இல்ல… பிடிவாதமா உன்னை, எங்ககூட நிறுத்தி வைக்கிற உரிமை இல்லாதவங்களா போயிட்டோம். அத சொல்லி உங்க அப்பா வெசனப்படாத நாளே கிடையாது” என்று கணவனின் தவிப்பையும் சேர்த்து அலமேலு உரைக்க, பெரும் குற்ற உணர்வில் தவித்தாள் சிந்து.
தன்னை கண்ணில் வைத்துத் தாங்கும் உறவுகள் சுற்றிலும் இருக்க, அவசரகோலத்தில் ஒரு மணவாழ்க்கையை அமைத்துக் கொண்ட அறியாமையை நினைத்து, மனம் அவளை வன்மையாக கடிந்து கொள்ள, அது பாஸ்கரின் மீது கொண்ட வெறுப்பை இன்னும் ஏற்றி வைத்தது.
“எனக்கு இப்போதான் ஊர் உலகம், மனுசங்க எல்லாம் எப்படினு புரிய ஆரம்பிச்சிருக்கு. யார் என்ன சொன்னாலும் நம்புற கிளிபிள்ளையா இருக்கப் போயிதான், இன்னைக்கு எல்லாரும் என்னை பார்த்து சிரிக்கிற நெலையில இருக்கேன்” தன் நிலையை வெட்கி, தலை தாழ்த்தி சொல்ல,
“அப்படியெல்லாம் சொல்லாதே சிந்தா கண்ணு! நம்ம குடும்பத்துக்கே கிரகம் சரியில்ல… அதான் எல்லாரையும் போட்டு வதைக்குது. இல்லன்னா என் பொண்ண, நானே தப்பா நினைச்சு பார்ப்பேனா?
நாலு பேர் நாலு விதமா பேச ஆரம்பிச்சு, நானூறு பேருக்கு போயி சேருற கிராமம் இது. எந்த பொல்லாத பழியும் யார் மேலயும் வந்திறக் கூடாதேன்னு கவனமா இருக்க நெனைச்சு, உன் மனச சங்கடப் படுத்தி பார்த்துட்டேன், மனசுல வச்சுக்காதே கண்ணு!” மீண்டும் மீண்டும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் பொழுதே, இவர்களின் பேச்சில் இடையிட்ட நாராயணன்,
“அம்மாவும் பொண்ணும் சமாதானமாயாச்சா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர,
“எங்களுக்குள்ள சண்டையெல்லாம் இல்ல… நாங்க பேசிட்டு இருக்கோம் மாமா!” என்று சிந்து சொன்னதும் நாராயணன் முகத்தை சுருக்க, அலமேலு முறைக்க, சிந்து இரு கைகள் தூக்கி “சரண்டர்” என்றவள்,
“சீக்கிரம் மாத்திக்க பார்க்கிறேன் இப்போதைக்கு கண்டுக்காதீங்க” பொதுவாக சொல்ல,
“ஏன் அம்மான்னு உடனே கூப்பிட முடிஞ்ச உன்னால, அப்பானு கூப்பிட முடியலையா?” கணவருக்கு பரிந்து கொண்டு, அடுத்த தர்க்கத்திற்கு தயாரானர் அலமேலு.
“ஐயோ அம்மா ஆரம்பிக்காதே! நெஜமாவே முடியல” என்று அவரிடம் இருந்து நகன்றவள், நாராயணனிடம் சென்று,
“அப்பா… இன்னைக்கு அலமு சண்டகோழியா சிலிர்த்துட்டு நிக்கிறாங்க, என்னை காப்பாத்திட்டு நீங்களும் தப்பிச்சுடுங்க” என்று கிண்டலில் இறங்கி விட்டாள்.
குழந்தையின் அழுகுரல் கவனத்தை திசைதிருப்பி விட,
“என் அம்மாதான் அவ புள்ளைய கவனிக்கல, நீயாவது உன் புள்ளைய கவனி சிந்தா” என்ற தமிழ், அவள் கைகளில் குழந்தையை கொடுக்க, நாராயணன் இடையீடு வாங்கிக் கொண்டார்.
குழந்தையின் பாஷையில் பேசி சிரிக்க வைக்க, மழலையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது.
“விபுகுட்டி நல்லா முகம் பார்க்க ஆரம்பிச்சுட்டான்ப்பா… நாம முன்னாடி நின்னாலே சண்டைக்கு வர்றவன் கணக்கா நெஞ்சை தூக்கிட்டு, கைய விரிச்சு கூப்பிடுறான்” என்று சிலாகித்த தமிழ்,
“என்ன சிந்தா குழப்பம் எல்லாம் தீர்ந்ததா? இனி வெளிநடப்புனு சட்டசபை டயலாக் விடுவியா?” சிந்துவைப் பார்த்து கேட்க,
“இப்போதைக்கு போகல” என்று சுருக்கமாக கூறிட, அவளின் பதிலில் மீண்டும் முகத்தை சுருக்கினார் அலமேலு.
“உங்க சம்மதத்தோட மட்டுமே, இங்கே இருந்து போவேன்” என்று சமாதானம் கூற,
“மாப்பிளை தம்பி வந்தாலும் இங்கேயே கூப்பிட்டுக்குவோம் சிந்தா… நீயா எந்த முடிவும் எடுக்காதே!” என்று அலமேலு தன் கருத்தை கூற சிந்து முறைத்தாள்.
“இந்த பாசம்தான், என்னை இங்கே இருந்து துரத்த பார்க்குது. ஏன் என்னை யாரும் புரிஞ்சுக்காம மாட்டேங்குறீங்க? எனக்கு என் மகன் போதும். வேற யாரும் தேவையில்ல…” என்றவள் பிள்ளைக்கு பசியாற்ற தன் அறைக்கு சென்று விட்டாள்.
அன்றைய நாள் முழுவதும் மரகதம் தனது செயலுக்கு வருத்தபட்டு, மன்னிப்பு கேட்டுக் கொள்ள, அலமேலு பெருந்தன்மையாக தடுத்தார்.
“சூழ்நிலை நமக்கு எதிரா இருந்தா, நாம என்ன பண்ண முடியும் மரகதம்? உன் மனசு எனக்கு தெரியாதா?” என்று சொல்லி சகஜம் ஆனார்கள்.
தேனு பாட்டியும் மனக்குறையை தன்னிடம் பகிராமல் இருந்ததற்கு மருமகளை கடிந்து கொண்டு, தானும் கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொண்டார். குடும்பத்தினர் அனைவரும் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு மாறியிருக்க, நாட்கள் அதன் போக்கில் கடக்க ஆரம்பித்தது.
அடுத்த மூன்று மாதத்தில், தமிழ்செல்வனுக்கு பக்கத்து கிராமத்தில், கயல்விழியுடன் திருமணம் முடிவானது. கல்லூரி இறுதியாண்டை முடித்திருந்தவளின் குடும்பப் பாங்கும், பேச்சும் அனைவருக்கும் பிடித்துப் போனது.
தொழில் ஆரம்பித்து ஆறுமாதங்கள் கடந்திருக்க, தமிழ் லீசுக்கு கொடுத்த தொகையினை திருப்பி அளித்து, கணக்கை நேர் பண்ணிக் கொண்டான் தயானந்தன். செலவினங்கள் வெகுவாக குறைந்திருக்க, இருவரும் முடிந்த வரையில் சிக்கனத்தை கடைப்பிடிக்க, மிகக் குறுகிய காலத்தில் கடனை அடைக்க முடிந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தயானந்தன் மிதுனாவுடன் வருகை புரிந்தான்.
கோவிலில் திருமணத்தை முடித்தவர்கள், கிராமத்திற்கே விருந்து வைத்து, உபசரித்தனர். சொந்தங்கள் அனைவரும் குடும்பமாக கூடி நிற்கும் வேளையில் சிந்து மட்டும் தனியாக, நடமாடிக் கொண்டிருந்தது தமிழ், தயா இருவருக்கும் வருத்தத்தை கொடுத்தது.
“போனவன் வரட்டும், பிடிச்சு உள்ளே தூக்கி போட்றேன்” பாஸ்கரை குறிப்பிட்டு தயா பல்லைக் கடிக்க,
“எங்கே இருக்கானு தங்கச்சிகிட்ட கேட்டுச் சொல்லு மச்சான்… போய் அள்ளிகிட்டு வந்துருவோம்” என்று தமிழ் தன் பங்கிற்கு கடுகடுத்தான்.
திருமணம் முடிந்து ஓய்வாக அமர்ந்திருந்த மாலை வேளையில், கையில் சிந்துவின் குழந்தையை வைத்துக் கொண்டு, பேசிக் கொண்டிருந்தவர்களை, தேனுபாட்டி நொடித்துக் கொண்டார்.
“புள்ளைய கையில வச்சுட்டு ரெண்டும் பழி வாங்குற கணக்கா பேசித் தொலையுது… மாமனுங்களுக்கு உன் தீர்த்தத அபிஷேகம் பண்ணி விடு சிங்கக்குட்டி…” என்று கொள்ளுப் பேரனை ஏவி விட,
“இவன் எங்க வீட்டுப் புள்ள… இது ஊரறிந்த உண்மை… மாமன்கிட்ட அடக்க ஒடுக்கமா இருப்பான் அரசி” தெனாவட்டுடன் பதில் கொடுத்தான் தயா.
“மச்சான், அப்படியெல்லாம் தூக்கி குடுக்க முடியாது. உனக்கு வேணும்னா நீ பெத்துக்கோ.. இவன் எங்கவீட்டு பேரன்” தமிழ் போட்டி போட,
“சிங்கத்தை சீண்டி பார்த்துட்டே மாப்ளே… ஆசைக்கு ரெண்டு பொண்ணு, ஆஸ்திக்கு நாலு பையன பெத்து யாருக்கும் காட்டாம வளர்க்கிறேனா இல்லையானு பாரு… அரசி நீ சாட்சி” என்று அவரையும் சேர்த்து வம்பிற்கு இழுக்க,
“உன் பார்ட்னர், சம்மதிக்கணுமே மச்சான்?”
“என் பேச்சே, அவளுக்கு மூச்சு… இன்னைக்கே ஹனிமூன் கிளம்புறேன், யாருக்கிட்ட…” சவால் விட்டு மிதுனாவை அழைக்க, அங்கு வந்து நின்றவளை பெருமூச்சுடன் நோக்கிய தமிழ்,
“தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி… தாளம் வந்தது பாட்ட வச்சி… தூக்கி வளர்த்த என் அன்புத் தங்கச்சி… மச்சான் பேச்சில் நெஞ்சே வெடிச்சாச்சு…” பாட்டு பாடி பொய்யாய் அழுகையில் கரைய,
“அச்சோ அண்ணா… இன்னும் ஒரு மணிநேரம் பொறுங்க, உங்கள ரூமுக்குள்ள தள்ளி விட்டுறேன்” என்று கிண்டலடித்தாள் மிதுனா.
“மாப்ளே அதுக்கெல்லாம் கவலைப் படல… நான் சொன்ன நல்ல சேதியில அசந்து போயிட்டான், மிது”
“அப்படி என்ன நல்ல செய்தி தயா?”
“இப்பவே ஹனிமூன் கிளம்பறோம், நம்ம தயாரிப்புக்கு ஃபார்முலா ரெடி பண்றோம், ஓகே” கண்ணடித்துச் சொல்ல,
“தெனமும், வீட்டுல அதே ஃபார்முலாதானே ஓடுது, புதுசா அங்கே போய் என்ன கண்டுபிடிக்கப் போறீங்க?” சளைக்காமல் வாரிவிட்டவள், அக்கம் பக்கம் பார்த்து நாக்கை கடித்துக் கொண்டாள்.
மனைவியின் பேச்சில் சங்கோஜப்பட்டு தயா அசடு வழிய, வந்த சுவடு தெரியாமல் மிதுனா உள்ளே சென்று விட்டாள்.
“மச்சான்… நீ பத்து புள்ளகூட பெத்துக்கோ, ஆனா புருசனும் பொஞ்சாதியும் சேர்ந்து பச்ச மண்ண, சூடாக்காதீங்க” – தமிழ்.
“உன்ன சுட்ட மண்ணாக்குறத்துக்கு வேண்டிய ஏற்பாடு செஞ்சுட்டு, வந்து பேசுறேன் மாப்ளே!” பொறுப்பானவனாக தயா, உள்ளே சென்று விட்டான்.
“பொண்டாட்டி பின்னாடி போக, எப்படியெல்லாம் சாக்கு தேடுறான். நம்மாளு உள்ளேயே உக்காந்துட்டு என்ன பண்ணுது. நீ வாடா ராஜா, உன் அத்தைய போயி பாப்போம்” தமிழும் குழந்தையுடன் பேசிக் கொண்டு உள்ளே சென்றான்.
திருமண இரவிற்காக தமிழின் அறையில், பலூன்களை சின்னதாக ஊதி, தலையணை மற்றும் மெத்தையின் விளிம்புகளில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தாள் மிதுனா.
“ஆஹா… நாம இதெல்லாம் மிஸ் பண்ணிட்டோம் மிது! இன்னைக்கு அரெஞ்ச் பண்ணுவோமா?” தயா, மனைவியின் அருகில் நின்று கேட்க,
“நமக்கு நாமே திட்டத்துல கிக் இருக்காது தயா” என்றவளை பின்னோடு அணைத்து,
“காலையிலே பட்டுசேலை, இப்போ டிசைனர்னு அசத்துற மிது… கிறுக்கு பிடிச்சு கிடக்கேன். ரெண்டு முத்தம் குடுத்து என்னை தெளிய வையேன்” என்றவன் அவளை இழுத்து கட்டிலில் தள்ள, ஊதிய பலூன்கள் டப்பென வெடித்தன.
“உங்கள யாரு இங்க வரச் சொன்னா?” என்று தலையில் அடித்துக் கொண்டு, முறைத்தபடியே கணவனை தள்ளி விட்டாள் மிதுனா.
அறையின் கதவும் லேசாக திறந்திருக்க, சத்தம் கேட்டு புது மாப்பிள்ளை எட்டிப் பார்த்து, கண்ணை கைகளால் மூடிக்கொண்டு போக, இவர்களின் நிலை ஐயோ என்றானது.
அவசரகதியில் விலகியவளை விடாமல் இழுத்து பிடித்தான் தயா.
“உன்னை நம்பி சவால் விட்ருக்கேன் மிது… என்னை மோசம் பண்ணிடாதே” என்றவனின் ஆசையை கேட்டு, நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியில் உறைந்தவள்,
“அடப்பாவி… ஆசைக்கு ஒரு அளவில்லையா? என்னை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா?” என்று பாவமாய் கேட்க,
“அதுக்குதானேடி தினமும் கை காலெல்லாம் பிடிச்சு, தைலம் போட்டுவிட்டது” அசராமல் சட்டம் பேசினான் தயா.
“கால் பிடிச்சு விட்டதுக்கு ஆறு புள்ளன்னா, இடுப்பு பிடிச்சு விட்டிருந்தா, பன்னென்டு புள்ள கேப்பியா நீ? இந்த டீலிங்க்கு நான் ஒத்துக்க மாட்டேன்” மிதுனா முறுக்கிக் கொள்ள,
“இதுக்குன்னு நான் தனியா ஆள் பார்க்க முடியுமா? ஆறு பன்னென்டானா, என் அருமைய வரலாறு பேசும்டி”
“இப்போ புது மாப்பிள்ளை வந்து, உங்கள எருமையில ஏத்தி விடப் போறாரு” என்றவள் சிரிப்பை அடக்க முடியாமல் வெளியே வந்து விட்டாள்.
“சிந்தா எங்க ரெண்டு பேருக்கும் பொட்டியக் கட்டு…” தயா அடிக்கும் கூத்தில், சோகத்துடன் தமிழ் சொல்ல,
“எதுக்கு மாமா?” மிதுனா வெளியே வந்ததைப் பார்த்துக் கொண்டே, அவளும் கேட்க,
“என் மச்சான்காரன் அலட்டல் தாங்க முடியல… நான் சன்னியாசியா போறேன், கயல் நீயும் ஏதாவது மடத்துக்கு போறியா?” புது மனைவியைப் பார்த்துக் கேட்க, அவளும் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தாள்.
“வாய கழுவு மாப்ளே! ரூம்ல எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிட்டு வர்றதுக்குள்ள, சன்னியாசத்துக்கு கிளம்பி நிக்கிற நீயி” தயா நியாயம் பேச,
“ஒ… நீ சமூக சேவை செய்ய, என் ரூம்தான் கிடைச்சுதா? மச்சான்!”
“அடக்கி வாசி மாப்ளே! நாளைய பொழுது நீ தொலஞ்சு, அக்மார்க் கயல் செல்வனா மாறியிருப்ப… அப்போ நான் வந்துதான் உன்னை கை தூக்கி விடனும். என்ஜாய் மாப்ளே…”
தயாவின் பேச்சில், புதுமணத் தம்பதிகளுக்கு ஒட்டு மொத்த வெட்கமும் சூழ்ந்து கொள்ள, அவர்களை அறைக்குள் தள்ளி கதவை அடைத்தான் தயா.
இதழ் சிரிப்புடன் மனைவியின் அழகில், மனதை லயிக்க விட்ட தமிழ்செல்வன், அன்றைய இரவு முழுவதும் அவளை இனிக்க வைத்தான்.