NNA17

நீயும் நானும் அன்பே

அன்பு-17

 

திருமணத்தை அடுத்து வந்த இரு நாள்களும் விடுப்பு எடுத்திருந்தனர் மணமக்கள்.

 

அலைபேசி மூலம் திருமண அழைப்பு விடுவித்ததன் காரணமாக, சில நல்ல உள்ளங்கள் வீடுதேடி வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றிருந்தனர்.

 

காண வந்து சென்றவர்களின் அறிவுரைக்கிணங்க, அடுத்து வரக்கூடிய ஒரு நல்ல நாளில் சொந்த ஊரிலேயே வரவேற்பு ஒன்றினை ஏற்பாடு செய்ய முடிவு செய்திருந்தனர் பெரியவர்கள்.

 

அதற்கும் விடுப்பு எடுக்க வேண்டி இருந்ததால், இரண்டே நாளில் கல்லூரிக்கு கிளம்பியிருந்தனர் சங்கர், நவீனா இருவரும்.

 

நவீனாவிற்கு உதவிக்கென ஊரிலிருந்தே ஒரு பெண்ணை வேலைக்கு நியமித்திருந்தார் அன்னம்மாள்.

 

“உனக்கு ஒத்தாசைக்கு அலமேலு இருக்கா…! எதையும் போட்டு மனசைக் குழப்பாம உன்னோட சோலிய மட்டும் எப்பவும்போல பாரு! பேரனையும் நல்லாப் பாத்துக்கோ…!, என்று பேத்திக்கு அறிவுரை வழங்கிவிட்டு, மகன், மருமகளோடு ஊருக்குக் கிளம்பியிருந்தார்.

 

“ஏன் ஆச்சி, நீங்களாவது இங்க எங்ககூட இருக்கலாம்ல?, என்ற நவீனாவின் கேள்விக்கு,

 

“அங்க வரவேற்பு வைக்க… வேணுங்கறதை பாக்க உன் மாமனாரும், மாமியாரும் வெளியே வேலையா திரியும்போது, நான் வீட்டில இருந்தா அவுகளுக்கு ஒத்தாசையா இருக்கும்.  அதான் போறேன்… எல்லாம் முடியட்டும்.  அப்புறமா வந்து ஒரு வாரம் தங்கறேன், என்று பேத்திக்கு விளக்கம் கூறிவிட்டு கிளம்பியிருந்தார்.

 

புதுமணத் தம்பதிக்குரிய சந்தோசம், எதிர்பார்ப்பு எல்லாம் இருந்தாலும், கல்லூரிப் படிப்பின் காரணமாக, இருதலைக்கொள்ளியின் நிலையில் நவீனா இருந்தாள்.

 

சங்கர், மனைவியின் நிலையறிந்து பெரும்பாலும் நவீனாவைத் தொந்திரவு செய்யவில்லை.

 

சூட்டோடு சூடாக பெரியவர்கள் வரவேற்பினையும் வைத்திருக்க, மிக நெருங்கிய சொந்தங்களைத் தவிர அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

 

ஓரிரு நாள்கள்கூட ஊரில் தங்கவிடாமல், வரவேற்பு அன்று காலையில் கிளம்பி வந்தவர்களை, மறுநாளே மணமக்களை மதுரைக்கு திருப்பி அனுப்பி வைத்திருந்தார் அன்னம்மாள்.

 

“நல்ல மனுசங்களா சுத்தி இருந்தா… இன்னும் நாலு நாளு இங்க தங்க வைக்கலாம்.  இங்க இருக்கிற மனுசாளுக மனசு வெம்பிக் கிடக்கும்போது, சந்தோசமா உங்களால இங்க இருக்க முடியாது.  கிளம்புங்க!, என்று வருத்தத்தோடே அனுப்பியிருந்தார்.

 

மானகிரியில் கண்ணேறு கழித்தும் மனம் அடங்காமல், அலமேலுவிற்கு அழைத்துக் கூறியிருந்தார் அன்னம்மாள்.

 

‘சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்க… புள்ளைகளுக்கு மறந்துறாம சுத்திப் போட்டுரு அலமேலு, என்ற நினைவுபடுத்தியதோடு, பேத்தியிடம் பேசி உறுதி செய்திருந்தார்.

 

நடந்த நிகழ்வு குடும்பங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்க, ராஜவேலு குடும்பத்தின் சார்பாக, பெரியவர்கள் இருவர் தம்பதி சகிதமாக வந்திருந்து வாழ்த்து தெரிவித்துச் சென்றிருந்தனர்.

 

தாஸின் உடன்பிறந்த பெண்கள் மற்றும் ராஜவேலுவின் மகள்களும் வரவேற்பில் வந்து கலந்து கொள்ளவில்லை.

 

அனைவருக்கும் சங்கர் தங்களது வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்ளாத கோபத்தை, வரவேற்பில் பங்கு கொள்ளாமல் காட்டியிருந்தனர்.

 

சங்கரே நடப்பதை எண்ணி சிரித்துவிட்டான்.  “ஒருத்தன் எத்தனை பொண்ணைக் கட்ட முடியும்?  இதுக்காக யாரும் வரவேற்புக்கு வரலைன்னா ஒன்னும் நஷ்டமில்லை, என்று கூறியிருந்தான்.

 

கணவனின் பேச்சைக் கேட்டிருந்தவள் சங்கர் தனிமையில் கிடைத்தபோது, “வாயி ஒன்னு பேசுது… ஆனாலும் கோபியர் கொஞ்சும் கண்ணன் மாதிரி டஃப் தரீங்க, என்று கணவனை கிண்டல் செய்திருந்தாள் பெண்.

 

வராவின் வீட்டில் இருந்தும், தங்கவேலு குடும்பத்து உறுப்பினர்கள் மட்டும் வந்திருந்து, அவர்களால் ஆன உதவிகளைச் செய்திருந்தனர்.

 

மகள் செய்யாத சீர் வரிசைகளை சங்கர் மறுத்தும் கேளாமல், சிறப்பாகச் செய்திருந்தார் தங்கவேலு.

 

தங்கவேலு, நன்முல்லை சார்பில் வந்திறங்கிய சீர்வரிசைகளைக் கண்ட, வராவின் தாயும், தன் தந்தையிடம் இதேபோல தனது பெண்மக்களுக்கும் சீர் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருந்தார்.

 

வரவேற்பில் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க எண்ணிய தங்கவேலுவும், சரியென்றிருந்தார்.

 

ஆனால் வீட்டிற்கு வந்திருந்த மருமகளோ, கணவனிடம் இதற்கு மறுப்பு தெரிவித்து, முகம் திருப்ப, மகன் தந்தையிடம் வந்து நியாயம் கேட்டிருந்தான்.

 

தங்கவேலு இதையெல்லாம் எதிர்பார்த்திருந்ததால் எதையும் மறைக்க விரும்பாது மகனிடம் உண்மையை கூறியிருந்தார்.

 

“நவீனாவை நம்ம வீட்டில வச்சிப் பாக்க இங்க விட்டிருந்தப்போ மாப்பிள்ளை நவீனா செலவுக்குன்னு நான் எவ்வளோ மறுத்தும் கேக்காம மாச மாசம் கணக்குப் பாக்காம எனக்கு ஒரு தொகைய அனுப்பி விட்டிருந்தாரு!

 

அதை அப்ப நான் அந்தப் புள்ளை பேருல அக்கவுண்ட் ஓபன் பண்ணி பேங்க்ல போட்டிருந்தேன்.  இத்தனை வருசமா டெப்பாசிட்ல இருந்த அதை எடுத்துத்தான் இப்ப சின்ன அளவுல சீர் செஞ்சிருக்கோம். 

 

மாமன் சார்பா உன் பங்கையும் பண்ணிருக்கோம்.

 

தாத்தா பங்குங்கு எங்களால முடிஞ்சதையும் செஞ்சிருக்கோம்.

 

பொருள் போக்குவரத்துன்னு நிறையப் பாத்துட்டு வந்து அது கேக்குது.  அதை இங்க வச்சி விளக்கம் சொல்ல முடியாதுன்னுதான்பா உங்க அக்காகிட்ட சரின்னு சொன்னேன்.

 

வீட்டுக்கு வரும்போது, அதுகிட்ட விளக்கமா பேசி புரிய வச்சிக்கிரலாம், என்று மகனை சாந்தப்படுத்தி அனுப்பியிருந்தார், தங்கவேலு.

 

பணமும், பொருளும் மட்டுமே பிரதானமாக எண்ணும் மக்களுக்கு இடையில் வாழும் நிலையை எண்ணி மாய்ந்து போன மனதோடு இருந்தனர் தங்கவேலு மற்றும் நன்முல்லை இருவரும்.

 

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட வராவோ, “ம்… நினைச்சதைக்கூட எங்கிட்ட சொல்லாம மறச்சுட்டல்ல..!, என்று நவீனாவிடம் கேட்டவள்,

 

“கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதான ஆகனும், என்று விடயம் என்றாவது ஒரு நாள் வெளியில் தெரிய வந்துவிடும் என்பதையும் கூறிவிட்டு

 

“கடைசியில மச்சான் உனக்குன்னுதான் இப்புட்டு நாளும் கல்யாணம் வேணானு இருந்திருக்குறாக!, என்று பெருமூச்சோடு கிளம்பியிருந்தாள்.

 

வரவேற்பில் நின்றிருந்த நவீனா, சிரித்தே வராவை அனுப்பியிருந்தாள்.  உடன் மோனிகா இருந்ததால் சற்று தெம்பாக உணர்ந்திருந்தாள் நவீனா.

 

ஆனாலும், பெற்றோர் வந்து கலந்து கொள்ளாத நிலையில் மனம் வருந்திய நிலையிலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வரவேற்பு நிகழ்வை எதிர்கொண்டிருந்தாள் பெண்.

 

சங்கருக்கு பெண்ணின் ஏக்கம் புரிந்தாலும், அவனாக எதையும் வாயைத் திறந்து பேசினானில்லை.

 

ஒரே வீட்டில் முகம் திருப்பியவாறு நடந்து கொள்ளும் நிலை உண்டான பிறகு, பேரனை அங்கிருத்திக் கொள்ள விரும்பாமல் உடனே மதுரைக்கு அனுப்பியிருந்தார் அன்னம்மாள்.

 

சாந்தனுவிற்கு சங்கர் அழைத்து விடயம் கூறியும் வரவேற்பில் வந்து கலந்து கொண்டானில்லை.

 

“தம்பி… நான் சங்கர் பேசுறேன்.  நவீனாவுக்கும் எனக்கும் மதுரையில கல்யாணம் முடிஞ்சி, வர ஞாயித்துக் கிழமை நம்ம ஊருல வரவேற்பு வச்சிருக்கோம்.  கண்டிப்பா வந்து கலந்துக்கோ, என்று அழைத்துக் கூறியிருந்தான்.

 

“ம்… சரி, என்றவன், அதற்குமேல் வந்தானில்லை.

 

அதற்காக வருந்தும் நிலையிலும் மணமக்கள் இல்லாத நிலையில், வந்த வேலையை திருப்தியாக முடிந்திருந்தனர்.

 

வரவேற்பு முடிந்து திரும்பியவர்கள் மதுரையில் வழக்கமான பணிகளில் மனதைத் திருப்பியிருந்தனர்.

 

///////////

 

சிறு புகைச்சலாகத் துவங்கிய சங்கர் நவீனா திருமணப் பிரச்சனை பூதகரமாகத் துவங்கி, ராஜவேலு அவர்களின் பாத்திய வீட்டுப் பகுதியிலிருந்து வீட்டினுள்ளே தங்கவேலு மற்றும் குருவேலு வீட்டிற்கு செல்லும் பாதையில், குருவேலு பகுதியை மட்டும் அடைத்திருந்தனர்.

 

சொத்துகள் அனைத்தும் குருவேலு காலத்திலேயே மூவரும் அவர்களுக்குள் பிரித்திருக்க, வீட்டின் ஹால் பகுதியின் வழி மட்டும் தற்போது அடைக்கப்பட்டிருந்தது.

 

பெண் மக்கள் அனைவரும் ராஜவேலுவின் வீட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து புகைந்திருந்தனர்.

 

அத்தோடு, ஆளுக்கொரு விடயத்தைக் கூறி, மனதில் வன்மத்தை வளர்ப்பதையும் இடைவிடாது செய்தனர்.

 

தனக்கில்லாதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற குறுகிய எண்ணமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டியது.

 

அதை எந்த விதத்தில் சொன்னால் பகை, வன்மம் கூடும் என்று சிந்தித்து, நஞ்சை விதைத்தபடியே இருந்தனர்.

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வன்மம், தான் எடுத்த முடிவில் இருந்து தன்னைப் பின்வாங்கச் செய்தவனை, தன்னால் இயன்றவரை துன்பப்படுத்தி மனம் குளிரப் பார்க்கவேண்டும் என்று சிந்திக்கச் செய்திருந்தது.

 

பெண், பொன், மண் என்ற மூன்றால் பிரச்சனைகள் ஆதிமுதல் இன்று வரை அரங்கேறுவதை யாராலும் தடுக்க இயலாத பக்குவமற்ற மனித இனமாகவே இன்று வரை உள்ளது.

 

அந்த வகையில் நவீனா எனும் பெண்ணிற்காக துவங்கிய சிறு மனஸ்தாபம், இன்று ஆல்போல வளர்ந்திருந்தது.

 

என்ன செய்யலாம்? என்ற யோசனையில் ஆழத் துவங்கியிருந்தார் சாந்தனுவின் தந்தை.

 

தானும் மாட்டிக் கொள்ளாது, ஆனால் சங்கரை பழிவாங்கி மனம் ஆற வழி தேடினார்.

 

நீண்ட நாள் யோசனைக்குப்பின் ஒரு முடிவுக்கு வந்தவராக, அதற்குரிய வழிமுறைகளை இயன்ற வகையில் முன்னேற்பாடாகச் செய்துவிட்டு, மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப்போல தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் அந்த மனிதர்.

 

பேசுவதை நேரில் கேட்டிராதபோதும், ஓரளவு நடப்பதை யூகித்து சிந்தித்த அன்னம்மாள், தாஸை விவசாயத்தைப் பார்த்துக் கொள்ளச் செய்துவிட்டு, பேரனிடம், “இப்பதான கல்யாணம் காச்சினு ஆகிருக்கு… இன்னம் கொஞ்ச நாளைக்கு தெம்பிருக்கற வரை உங்கப்பன் நம்ம காடு கரைய பாப்பான்…! அதை எல்லாம் பாத்து வளந்தவந்தான உங்கப்பன். பாக்கட்டும்.  அப்புறம் வந்து நீ தான பாக்கப்போறே!

 

லீவு ஒரு நாளுதான் அவளுக்கு, அன்னிக்காவது அவ பக்கத்தில நீ இருக்க வேணாமா?  அன்னைக்கும் இங்க ஓடி வந்திட்டா நல்லாவா இருக்கும், என்று பேரனை கிராமத்துப் பக்கமே வராமல் செய்திருந்தார் அன்னம்மாள்.

 

பேரனுக்கு எதுவும் நேர்ந்துவிடும் என்கிற பயத்தால் அல்ல.

 

பேரன் சற்று கோபக்காரன்.  பேச்சு முற்றும்போது கையை நீட்டிவிட்டால், தற்போதைய சூழலில் அது இன்னும் அதிக பிரச்சனையைக் கொண்டு வரும் என சிந்தித்தே பேரனை மானகிரிக்கு வர தடை செய்திருந்தார் அன்னம்மாள்.

 

சசியும் அதையே வழிமொழிந்திருந்தார்.

 

நடப்பவை அனைத்தும் தாய்வீடு மூலமாக புஷ்பாவிற்குத் தெரிந்தாலும், நேரில் வந்து மகளைக் காண முடியாத ஏக்கம் இருந்தது.

 

கணவனின் சொல்லை மீறி வரக்கூடிய தைரியம் இருந்தாலும், அடுத்து இருக்கும் தன் மகனுக்காக எண்ணி கணவனின் வார்த்தைகளை ஏற்று அமைதியாக இருந்தார்.

 

புஷ்பாவின் நிலையறிந்ததால், சங்கரோ, சசிகலாவோ, தாஸோ யாரும் எதுவும் தவறாக எண்ணவில்லை.

 

இடையிடையே சங்கரையும், நவீனாவையும் காணவேண்டி மதுரை சென்று வந்தனர் சசியும், தாஸும்.  அவ்வப்போது மோனிகாவும் மதுரைக்கு வந்து சென்றாள்.

 

தங்கவேலுவும், வராவின் தாய் எழுப்பிய பிரச்சனையை, அரும்பாடுபட்டு புரியவைத்து, மகனின் திருப்திக்காக போராடிக் களைத்திருந்தார்.

 

////////////

 

கல்லூரிக்குச் சென்று வந்தவளுக்கு, படித்துக் கொண்டே, வீட்டையும் கவனித்து, கணவனையும் கவனிப்பது மலைப்பாக இருந்தது.

 

பெண்ணின் சுணக்கம் கண்டு, “எதுக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கற…! முடிஞ்சதை செய்யி…! மத்ததை அலமேலு அக்கா பாத்துக்கும், என்று சங்கர் கூறினாலும், பெண் தனது திருப்திக்கு வேண்டி அனைத்தையும் தனது மேற்பார்வையின் கீழ் வைத்துக் கொண்டாள்.

 

அதற்குமேல் பெண்ணை நிர்பந்திக்காமல் விட்டிருந்தான் சங்கர்.

 

களைப்பாக வருபவளை, கஷ்டப்படுத்த விரும்பாதவனாய், வேறு வேலைகளில் கவனத்தைத் செலுத்தத் துவங்கியிருந்தான் சங்கர்.

 

பெரியவர்கள் அவ்வப்போது மதுரைக்கு வந்து சென்றிருந்த நிலையில், ஊருக்குச் சென்று நான்கு நாட்கள் சென்றிருக்க, தன்னவனின் நீண்ட நாள் மாற்றத்தை மிகத் தாமதமாகவே கண்டு கொண்டவள், வெளியே சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

 

வந்தவன் உண்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல, அலமேலுவை உண்ணப் பணித்திருந்தவள், அடுத்து செய்யக் கூடிய பணிகளைக் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

நவீனா வருவதற்குள் படுக்கையில் குப்புறப்படுத்து உறங்கும் பாவனையில் இருந்தவனைக் கண்டவள், “ரொம்ப வேலையா?, என்று கணவனைக் கேட்டாள்.

 

“ம்…, என்று கண்ணைத் திறவாமல் பதில் கூறியவனை விடாமல்

 

“வெளி வேலையப் பாருங்க… வேணாங்கலை! ஆனா வீட்டையும் கவனிங்க!, என்று விட்டு அருகில் வந்து படுத்திருந்தாள்.

 

“வீட்ட என்னத்தைக் கவனிக்க சொல்ற…! அதான் நீ நல்லா பாத்துக்கறீயே…! பத்தாததுக்கு அலமேலு அக்கா வேற இருக்கு!, என்று பதில் கூறியவனை தலையணை எடுத்து அடித்திருந்தாள் நவீனா.

 

மனைவி சொல்ல வருவது புரிந்தாலும், புரியாததுபோல பேசியவனைக் கண்டு பெண் வெகுண்டிருந்தாள்.

 

“புது பொண்ணு மாப்பிள்ளைனு சத்தியம் பண்ணா கூட யாரும் நம்ப மாட்டாங்க?, என்றவளை

 

“அடுத்தவங்க நம்பனுங்கறதுக்காகவா இவ்வளவு நாளா எல்லாம் பண்ற?, என்று அதுவரை குப்புறப் படுத்தபடியே பேசியவன், மனைவியின் பேச்சைக் கேட்டு அவளை நோக்கித் திரும்பியவாறே கேட்டிருந்தான்.

 

“கல்யாணம் ஆகி ஒரு மாசம்கூட ஆகலை… அதுக்குள்ள நான் உங்களுக்கு போரடிச்சிட்டேனா? இப்பலாம் என்னையக் கண்டுக்கறதே இல்லை!, என்று சண்டைக்கு நின்றிருந்தாள்.

 

“சொல்ல வரதை சுத்திச் சொன்னா எனக்குப் புரியமாட்டுதுன்னு தெரியுதுல்ல…! எதுக்கு இவ்வளவு நேரம் அது, இதுன்னு பேசிகிட்டு…! வந்தவுடனே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசிப் பழகு!, என்று மனைவிக்கு அறிவுரை கூற

 

“உங்களை…, என்று கணவனை தன் இருகைகளாலும் அடிக்கத் துவங்க…

 

“ரொம்ப சின்னப் புள்ளைய கல்யாணம் பண்ணா இதுதான் பிரச்சனை,  குடும்ப இஸ்திரி மாதிரியா பண்ற…! கிளியாஞ்சட்டில சோறாக்கி வச்சி விளையாடற சின்னப் புள்ளை மாதிரி பண்ணிகிட்டு…!, என்று பெண் அடிக்கத் துவங்கியதை கைகளால் தடுத்தபடியே சிரித்தவாறு பெண்ணைப் பார்த்துக் கூறியவனை

 

அதற்குமேலும் வந்த கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், “நீங்க மட்டும் என்னவாம்…! புதுசா கல்யாணம் ஆன மாதிரியா பிகேவ் பண்றீங்க!, என்று சங்கரின் மார்போடு தலை சாய்த்து தஞ்சமடைந்திருந்தாள் பெண்.

 

மார்போடு தலை சாய்த்தவாறு இருந்தவளின் தலையைத் தடவிக் கொடுத்தவன், “கை நீட்டாத வீனா…! இது ரூமுக்குள்ள நடக்கிறதுதான்…!  ஆனா அடிச்சுப் பழகினது… அப்டியே வெளி இடத்திலயும் இந்தப் பழக்கம் தன்னை அறியாமலேயே வரும்.  அது பாக்கறவங்களுக்கு தப்பா தெரியும்!  எனக்கும் பிடிக்கல!, என்று கூறினான் சங்கர்.

 

தலையை மட்டும் ஆட்டி இனி செய்யமாட்டேன் என்பதான உடல்மொழியில் கூறியவாறு, நிமிராமல் இருந்தவளை, “நாளைக்கு சாட்டர்டே… நீ ப்ரீயா!, என்ற கேட்க

 

“இல்லை… ஹாஸ்பிடல் போகற வேலையிருக்கு…!, என்று பெண் கூற

 

“சரி… தூங்கு!, என்று பெண்ணைத் தட்டிக் கொடுக்கத் துவங்கினான்.

 

“நான் ஒன்னும் சின்னப் பாப்பா இல்லை…!, என்று கணவனின் செயலில் அவனிடமிருந்து கோபமாகப் பிரிந்து திரும்பிப் படுத்திருந்தாள் நவீனா.

 

“ரொம்ப பிகு பண்றீங்க டீடா…! வர வர…, என்று பெண் கூற வந்ததைக் கூறாமல் தனக்குள் விழுங்க

 

“யாருடீ இப்ப பிகு பண்றது.  நீயா? இல்லை நானா? இந்த டீடாவை விட மாட்டியா வீனா…!, என்று பெண்ணை நோக்கிப் புரண்டு அருகில் சென்றிருந்தான்.

 

“வேற என்ன சொல்லிக் கூப்பிட…! மச்சான்னு கூப்பிட எனக்குப் பிடிக்கலை!, என்று பதினோராயிரத்து ஒன்றாவது முறையாக பெண் தன்னவனிடம் கூற

 

தன்னை நோக்கிப் பெண்ணைத் திருப்பியவன், “ஊரே அப்டிதான் கட்டினவனை சொல்லுது…! உனக்கு மட்டும் பிடிக்கலைன்னா என்னடீ செய்யறது…!, என்று கேட்டான்.

 

“அதுக்காக பேரு சொல்லிக் கூப்டறேன்னு சொன்ன அவ்ளோதான்!, என்று தனது மறுப்பையும் தெரிவித்திருந்தான் சங்கர்.

 

“பாப்பாவுக்கு இன்னும் ரெண்டு வருசம் தடா சொல்லியாச்சு..! இல்லைனா அதுபேறச் சொல்லியாது அப்பானு கூப்பிடலாம்!, என்று சோகமாகக் கூறினாள் பெண்.

 

“அதுக்கா இவ்வளவு வருத்தம் எம்பொண்டாட்டிக்கு!, என்று நம்பாமல் கேட்க

 

“ஜெய்னு கூப்பிடறேன்னு சொன்னாலும் நீங்களும் ஒத்துக்க மாட்டீங்கறீங்க, என்று கூறினவளைப் பார்த்தவன்

 

“சுத்தி சுத்தி நீ எங்க வரனு தெரியுது, என்று கணவன் கூற

 

சிரித்தபடியே, “பேரு சொன்னா ஆயுசு குறையும்னு இந்த ஆச்சி வேற பயமுறுத்தறாங்க…!, என்று தனது மனக்குறையை கணவனிடம் கூறியவறே

 

“நிஜமா வேலைனாலதான் என்னையக் கண்டுக்கலையா? இல்லை நான் வேலையா திரியறேன்னா?, என்று பெண் சரியாக யூகித்துக் கேட்க

 

“உனக்கு எப்டித் தோனுது, என்று மனைவியையே கேட்டிருந்தான்.

 

“எனக்கு என்னென்னவோ தோனுது. அதையெல்லாம் சொல்லலாம்னு வந்தா… ஆளு வரதே இலெவன் ஆர் டுவெல்வ்னு ஆகிருது… அப்பவே நான் அரைத் தூக்கத்துல அசமந்தமா இருக்கேன்.  விடிஞ்ச உடனே நான் கிளம்பி போயிறேன், என்று தனக்குள் சடைத்துக் கொண்டவளை

 

ஆதரவாக தோளணைத்து, “சரி என்னென்ன தோணுதுன்னு இப்ப சொல்லு… கேக்கறேன், என்று கேட்க

 

“அது அப்பப்ப தோனும்.  இப்டி வந்து கேட்டாலாம் மொத்தமா சொல்ல முடியாது, என்றவள்,

 

“திடீர்னு எப்டி இலெவன் வரை  அங்க வேலை? என்று சரியான கேள்வியில் வந்து நின்றிருந்தாள்.

 

“அது… ஹாஸ்டல்ல நான் இதுவரை இருந்திட்டு இப்ப இங்க வந்தபின்ன வேற ஒருத்தவரை அப்பாயிண்ட் பண்ணிருந்தாங்க…! இப்ப நான் வீட்டில நீ வரவரை வந்து தனியா இருக்கறதுக்கு, பத்து மணிவரை நானே இருந்து பாக்கறேனு சொல்லிட்டேன்!, என்று தாமதத்திற்கான காரணத்தைக் கூற

 

“இதை ஏன் எங்கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலை!

 

“இதெல்லாம் எதுக்கு?, என்று சங்கர் கூறியதும்

 

“நான் மட்டும் எதுக்கு எனக்கு உள்ள ஷெட்யூல் எல்லாம் வந்து உங்ககிட்ட சொல்றேன்?, என்று மறுகேள்வி கேட்டிருந்தாள்.

 

“…ம்…, என்றவன், “சொல்லக்கூடாதுன்னு இல்ல, என்று இழுக்க…

 

“எல்லாம் எனக்கு தெரியுது.  இன்னும் நான் பப்பா இல்லை… உங்க பொண்டாட்டி… அதுனால எதுனாலும் எங்கிட்ட சொல்லுங்க… இப்டி நீங்களா ஒன்னு நினைச்சு எதாவது செய்யாதீங்க!, என்று ஸ்திரமாகக் கூறியிருந்தாள்.

 

“சரிங்க பொண்டாட்டி!, என்றவனை

 

“இந்தக் கிண்டல் தான வேண்டாங்கறது!, என்று நவீனா கூற

 

“வேற என்ன வேணும்?, என்று சங்கரும் கேட்க…

 

“இனி எதையும் கேட்டு வாங்கற ஐடியா இல்லை…! நீங்க மட்டும் இவ்வளவு வீம்பா இருக்குபோது நான் மட்டும் எதுக்கு வந்து உங்ககிட்ட கேக்கணும்?, என்று நியாயம் பேச

 

“சரிடீ… ரொம்ப கோபப்படக்கூடாதுன்னு எனக்கு சொல்லிட்டு நீ கோபப்பட்டா எப்டீ!, என்று அணைக்க

 

“அதான் எல்லாத்தையும் அணைக்க உங்களுக்கு வழி தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!

 

“வரவர டபுள் ஸ்ட்ராங்கா பேசுறடீ!

 

“எல்லாம் உங்களோட சேந்த பின்ன தான?

 

“ம்… நல்ல இம்ப்ரூவ்மென்ட்!, என்று சங்கர் பாராட்ட

 

“ஒரு மண்ணுமில்ல… முன்னல்லாம் பாக்க வர சாக்குல பைக் ரைட், அப்புறம் கிளம்பும்போது ஏர்போக முடியாதளவுக்கு ஒரு ஹார்ட்டி ஹக், இடையிலே கேப்பு கிடைக்கிற நேரத்தில அன்எக்ஸ்பெக்டடு ஒரு வெரைட்டி கிஸ்…! இப்டி லைஃப் நல்ல எனர்ஜெடிக்கா போச்சு…!, என்று ஏமாற்றமாகக் கூறியவளை

 

சிரித்தபடியே அணைத்தவனைக் கண்டு கொள்ளாமல்

 

“கல்யாணத்துக்கு அப்புறம் தடையில்லாம இது இன்னும் ஸ்ட்ராங்காகும்னு நினைச்சு வந்தா… எல்லாம் உல்டாவா ஆகிருச்சு!  பியூஸ் போன பல்ப்பாட்டாம் இருக்கற என்னைப் போயி நல்லா இம்ப்ரூவ் ஆகிட்டேன்னு கிண்டல் பண்றீங்க!, என்று பெண் வருத்தத்தோடு விரக்தியில் உரைக்க

 

பெண்ணின் பேச்சில் அவளின் எதிர்பார்ப்புகளை தான் ஏமாற்றியதை உணர்ந்தவன், பெண்ணை தன்னோடு சேர்த்து இறுக அணைத்து இதழில் கதையெழுதி, இதம் தந்தவனை

 

சற்றுநேரம் அமைதியாக ஏற்றிருந்தவள், கணவனிடமிருந்து வம்பாகப் பிரிந்து, “இப்டி கேட்டுக் கேட்டுத்தான் இனி நான் வாங்கனும்னா… அப்டி ஒன்னு எனக்குத் தேவையில்லை?, என்று வருத்தமாகக் கூறிவிட்டு கணவனுக்கு முதுகைக் காட்டி திரும்பிப் படுத்திருந்தாள்.

 

மனைவியின் சுணக்கம் மனதை வாட்ட, “வேற என்னை என்ன செய்யச் சொல்லுற…? காஞ்ச மாடு கம்புல பாஞ்சமாதிரி நான் நடந்துட்டா அதை தாங்க உனக்குத் தெம்பு வேணாமாடீ!, என்று மனைவியின் பின்னோடு அணைத்துக் காதில் மெலிதான குரலில் கேட்க

 

“காஞ்ச மாடா நீங்க?  எனக்கொன்னும் அப்டித் தெரியலையே? நீங்களா எதையாது நினைச்சு எங்கிட்ட இருந்து தள்ளிப் போகாதீங்க…! எனக்கு வேணுங்கறதை வெக்கப்படாம நான் உங்ககிட்டயும், அதேபோல உங்களுக்கு தோணறதை நீங்க எங்கிட்ட கேக்கறதுக்காகவும் தான் இந்த மேரேஜ்.

 

நம்ம கல்சர்ல மேரேஜ் அப்டிங்கற ஒன்னே, புராபர் ரிலேசன் இல்லாம கண்ட்ரோல் பண்ணி அதனால வர பாதிப்புகள்ல இருந்து விடுபடவும், தடம் மாறாம சரியான தடத்தில பயணிக்க ஏதுவாவும் வச்சிருக்கறதா ஆச்சி சொன்னாங்க…!

 

நீங்க என்னனா…. என்னன்னவோ உங்களுக்குள்ள யோசிச்சு… உங்களை நீங்களே எதுக்கு கஷ்டப்படுத்திக்கறீங்க, என்றவள்

 

“இப்டி சேக்ரிஃபைஸ் பண்றதுக்கு எதுக்கு மேரேஜ் பண்ணனும்.  முன்ன மாதிரியே தனித்தனியா இருந்திருக்கலாமே?, என்று நவீனா கேட்க

 

“சரிடீ, இனி அப்டி பண்ண மாட்டேன்.  ஆனா உனக்கு எதாவது இன்கன்வீனியன்ட்னா நீ முன்கூட்டியே எங்கிட்ட சொல்லிறனும், என்று பெண்ணிற்கு உறுதி கூற

 

“அதுக்குத்தான் அந்தக்காலத்தில சில வழிமுறையெல்லாம் வச்சிருந்ததா ஆச்சி சொன்னாங்க…!, என்றவளை

 

“அந்தக் காலத்து ஆளுங்க அப்டியென்ன பண்ணாங்க?, என்றவனிடம்

 

“கூட்டுக் குடும்பத்துல இப்ப மாதிரி அவங்க மாப்பிள்ளைகூடல்லாம் இலகுவா பிரைவஸியோட நெனைச்ச நேரத்துல பேச முடியாதாம்.  பாக்கக்கூட முடியாதாம். கல்யாணமாகி முகம் பாக்கவே வருசமாகியிருமாம். நைட்ல அதுவும் இருட்ல மீட் பண்ணா என்ன தெரியும், என்றவள்

 

“ஆனாலும்… ஈவினிங்கே அவங்கவங்க ஹப்பிக்கு சிக்னல் குடுத்துருவாங்களாம்!, என்று பெண் கூற

 

பெண்ணின் பேச்சில் சுவராசியம் மிகுந்தவனாக சிரித்தபடியே ஆவலோடு, “எதுக்கு சிக்னல், என்று கேள்வியெழுப்ப

 

“அது… “, என்று இழுத்தவள், “அன்னிக்கு நைட் அவங்களுக்கு ஓகேன்னு மெசேஜ், என்று  பெண் சிரிக்க…

 

“ம்… விவகாரமாவே வாழ்ந்திருக்காய்ங்கபோல…, என்று சிரித்தவனிடம்

 

“ம்… ஈவினிங் அவங்க பார்ட்னர் தலையில பூ வச்சிட்டு இருந்தா… அன்னிக்கு மத்த எல்லா விசயத்துக்கும் அவங்களுக்கு ஓகேன்னு அர்த்தமாம்…! இதுவே… பீரியட் டைம்னா… இல்ல எதாவது இன்கன்வீனியன்ட்னா பொண்ணுங்க தலையில ஈவினிங் பூ வைக்க மாட்டாங்களாம்!, என்று தனது ஆச்சி கூறியதை கணவனிடம் கூற…

 

“வாவ்… சூப்பர்.  அப்பவே சிக்னல் குடுத்து… மனுசனை கிறுக்காட்டி… கிளைமேக்ஸ் வரதுக்குள்ள… கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிற வித்தை தெரிஞ்சிருக்கு! ம்… அப்புறம், என்றவனிடம்

 

“அப்புறம் என்ன கதையா சொல்றேன், என்று பெண் கேட்டுவிட்டு அமைதியானவளிடம்

 

மனைவியின் அமைதியை தவறாக எண்ணி மேற்கொண்டு தனது மனதைத் திறந்திருந்தான்.

 

“உங்க ஆளுகளுக்கு(பெண்களுக்கு) எப்பவுமே ஆம்பிளைகளை ஆட்டி வைக்கிறது, கை வந்தக் கலைதான்போல!, என்று மனதில் உள்ளதை மறையாமல் சிரித்தவாறே கூற

 

கணவனை தனது முழங்கையால் அவனது விலாவில் இடித்து, “இதுக்குத்தான் இதையெல்லாம் ஆச்சி உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்கபோல, என்றவள்,

 

“இப்ப என்ன சிக்னல் தந்து உங்களை ஆட்டி வச்சிட்டேன், என்று கணவனது புறம் திரும்பி சண்டைக்கு தயாரானவளை,

 

பாந்தமாக மார்போடு இறுக்கியணைத்து பெண்ணை இளைப்பாறச் செய்தவன்,

 

உன்னைச் சொல்வேனா?, என்று பெண்ணிடம் சரணடைந்தவன், பள்ளியறைப் பாடம் சொல்லித்தர பெண்ணை தயார் செய்யத் துவங்கினான் சங்கர்.

 

திரும்பிய வேகத்தில், திசை திருப்பியவனின் பாதையில் சென்றவளை, திசை திரும்பாத வண்ணம் தனது நினைப்பிலேயே விடியல்வரை கைவளைவில் வைத்திருந்தான் சங்கர்.

 

நீண்ட நாளுக்குப் பிறகு, எதையோ பறிகொடுத்திருந்த உணர்விலிருந்து பெண் மீளத் துவங்கியிருந்தாள்.

 

அதன்பின் வந்த நாள்கள் இருவருக்கும் உகந்ததாக மாற்றியமைத்து சந்தோச வானில் சிறகடித்திருந்தனர்.

//////

 

ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில், வழமைபோல மதுரைக்கு வந்து செல்ல முடியாத வேலைப் பளுவில் தாஸ் பண்ணை வேலையில் இருக்க, நவீனாவிற்கும் மானகிரிக்கு கணவனுடன் வர முடியாத சூழலாதலால், “இந்த ஒன் வீக் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ வீனா… அப்பா தனியாளா கிடந்து கஷ்டப்படறாரு… நான் இன்னிக்கு ஈவினிங் கிளம்பி போயிட்டு… வேலை முடிஞ்சவுடனே திரும்பி வந்திரேன், என்று மானகிரிக்கு கிளம்பியிருந்தான் சங்கர்.

 

பேரனைக் கண்டு பதறிய அன்னம்மாள், “அந்தப் புள்ளையவும் கூட கூட்டிட்டு வராம, இப்டி தனியா ஏன்யா வந்த?, என்று கேட்க

 

“அதுக்கு லீவு இல்ல ஆத்தா, என்றவன்

 

“ஒரு நாளுதான… அதெல்லாம் இருந்துக்குவா… அலமேலு அக்காதான் இருக்குல்ல, என்றுவிட்டு பணிகளில் கவனம் செலுத்தியிருந்தான் சங்கர்.

 

பெரும்பாலும் பண்ணையில் தங்கிக் கொள்ளும் தாஸை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அன்று இரவு பண்ணையில் தங்கிக் கொள்வதாக சங்கர் கூறியிருந்தான்.

 

தாஸ் வீட்டிற்கு வரவே, மகனை மட்டும் கண்ட அன்னம்மாள், “கூறுகெட்டவனே அவனை ஏன்டா தனியா விட்டுட்டு வந்த…? ஒன்னு அவங்கூடவே நீயும் இருந்திருக்கனும்.  இல்லைனா அவனை வீட்டுக்கு அனுப்பிட்டு நீ அங்கேயே தங்கியிருக்கனும், என்று விரட்டியதோடு

 

“எப்படா அவங்கூட வம்பு வளப்போமுன்னு இன்னும் திரியறவங்ககிட்ட தனியா விட்டா, வம்பை விலையில்லாம வாங்கிட்டு வந்திருவாண்டா உம்மையன், என்று தலையில் அடித்துக் கொண்ட அன்னம்மாளை

 

“அம்மா ஒரு நாளுதான… அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டான்.  முன்ன மாதிரி இல்ல நம்ம சங்கரூ.  இப்ப பய ரொம்ப மாறி அமைதியாகிட்டான்.  காலையில எழுந்திருச்சதும் நான் பண்ணைக்குப் போயிருவேன்,  அதுக்குள்ள இந்த ராத்திரியில அதுவும் பண்ணையில போயி எவன் வம்பு வளக்கப் போறான், என்று சமாதானம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றிருந்தார் தாஸ்.

 

சங்கரும் அன்றைய தினம் இரவை தனிமையில் கழிக்க தயாரானான்.

 

நீண்ட நேரம் இரவில் மனைவியோடு அலைபேசியில் பேசிவிட்டு வைத்திருந்தான்.

 

திருமணத்திற்குப் பிறகு தனித்து இருந்தவனுக்கு உறக்கம் வராமல் இருக்கவே, நீண்ட நேரம் விழித்திருந்தவன், அதிகாலையில் உடலலைச்சலால் துயில் கொள்ளத் துவங்கியிருந்தான் சங்கர்.

 

விடியலில் கேட்ட செய்தி, நவீனாவை நடுக்கமடையச் செய்திருந்தது.

 

நடந்தது என்ன? அடுத்த அத்தியாயத்தில்..

—————–.