ishq wala love 4

அத்தியாயம் 4

            

இந்த உலகில் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. அனைத்துக்கும் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சரி தவறு எல்லாம் பார்க்க கூடாது பார்க்கவும் முடியாது. வாய்ப்பு வரும் பொழுது உபயோக படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி ஒன்று  மட்டுமே குறிக்கோள்.

              தோழர் நிரஞ்சன்

 

    தனது தந்தையிடமிருந்து வந்திருந்த புகைப்படத்தை பார்த்தவுடன் எழில் மொத்தமாக அதிர்ந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

       முகப்புத்தகத்தில் படங்களை பகிர்ந்தவுடன் அவள் அதிர்ந்தது அணைத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்கள் என்பதற்காக தானே தவிர எப்படி என்னுடைய புகைப்படங்களை பகிரலாம் என்பதை போல் அல்ல.

    ஏனென்றால் இவளே பலமுறை இதுபோன்று உதவுதற்காக வந்த வெள்ளையர்கள் மற்றும் இவர்களது ட்ரஸ்ட் சார்ப்பாக இவள் பங்கேற்றுக் கொண்ட பல செமினார்களில் வந்திருந்த வெள்ளையர்கள் என்று அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறாள் தான். அவை அனைத்துமே செல்பி வகையாறாகள். இப்படிப்பட்டவை அல்ல.

    என்னதான் இருந்தாலும் நமது தமிழ் மக்களுக்கு வெள்ளையர்கள் என்றாலே சிறிது மோகம் தாம். அதிலும் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது என்பது எதோ பரிசு பெறுவதைப் போன்று சந்தோஷக் குறுகுறுப்பை தருவது தானே…

     அதனால் எழிலே இவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருப்பாள் அதிலும் விக்ரம் மேத்தா,டாம் போன்ற அழகனுகளுடன் எடுத்தது என்ன கசக்கவா செய்யும். ஆனால் அவர்களாக அந்த புகைப்படத்தை போட்டதை தான் அவளால் ஏற்றுக்கொள்ளமுடிய வில்லை..  அதிலும் தனது தந்தை பார்த்துவிட்டார் என்பது வேறு அவளுக்கு பேரிடியாக தலையில் வந்து விழுந்தது.  

      சின்னதம்பி இதற்கு எப்படி ஆடப் போகிறார் என்று நினைத்தாலே எழிலது மூச்சுக்காற்று கூட நுரையிரலை தீண்ட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.  சின்னதம்பி எப்பொழுது எந்த மாதிரி ரியாக்ட் செய்வார் என்பதை அவரை படைத்த ஆண்டவனால் கூட அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.

       ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு கர்ண தாண்டவம் ஆடுபவர், இந்த செயலுக்கு கண்டிப்பாக தங்களை வெட்டி வீட்டுக்கு பின் இருக்கிற வாழைமரத்துக்கு உரமாக தான் போடப் போகிறார் என்று பயத்துடன் இருக்கும் பொழுது ஒன்றுமே நடவாதது போல் புரோட்டா வாங்கி வந்து அனைவரையும் சாப்பிட வைத்து அன்பு டார்ச்சர் செய்வார்.

     சரி அப்பொழுது சின்ன தப்பிற்கு தான் அடிப்பார். பெரிய தவறுகளை எல்லாம் அன்பாக சொல்லி தான் திருத்துவார் என்று நினைத்து முடிப்பதற்குள் பிரம்பை எடுத்து அடிப்பிண்ணி எடுத்துவிட்டு வடை வாங்கி வந்து ஊட்டி விடுவார். அப்பொழுதெல்லாம் எழில் நினைத்துக் கொள்வாள் ‘சின்னு அப்பா உங்க மனசு ஒரு தினுசு பா…’ என்று

           இதற்கு இப்பொழுது  சின்னதம்பி அடிப்பாரா? அல்லது திட்டுவாரா? இல்லை இத்தனை வருடங்களாக தான் அவருக்கு கொடுத்த மொத்த அவமானங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தவர் அத்தனைக்கும் இன்று மொத்தமாக சேர்த்துவைத்து தன்னை தப்பிதவறி கூட வீட்டு பக்கமே வந்து விடாதே என்று அடித்து விரட்டி விட்டு தலை முழுக போகிறாரா???

        இப்படி ஒரு எண்ணம் மனதினுள் வந்தவுடனே  தன்னைப்போல  எழிலுக்கு  கரங்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. சின்னதம்பி மட்டுமே அவளது உயிரின் ஆதாரம். அவர் இல்லாத ,அவரிடம் திட்டு வாங்காத அவர் கையால் அடி வாங்காத ஒரு நாள் அவள் வாழ்க்கையில் வருவதை  எழிலால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் அவளுக்கு பயமாக இருந்தது.

    அப்படியெல்லாம் தன்னை வெளியே அனுப்பமாட்டார் சின்னு அப்பா என்று நினைக்கும் போதே தான் செய்த விளையாட்டு தனங்களெல்லாம்  கண் முன்பு வந்து போனது.   

       சின்னதம்பியை கொஞ்சநஞ்ச பாடா படுத்தியிருக்கிறாள் இவள். முருகா… எப்படியாவது சமாளிப்போம் என்று நினைக்கும் போதே அவளுக்கு ஆகச்சிறந்த ஒரு சந்தேகம் வந்து தொலைத்தது,

’இந்த மனுசன் எப்பத்துல இருந்து சோசியல் மீடியாலா எல்லாம் யுஸ் பண்ண ஆரம்பிச்சார்? என்னை எப்போல இருந்து பாலோ பண்ண ஆரம்பிச்சார்?’ என்று எழில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

      “எழில் சின்னு அப்பாவுக்கு நான் fbலயும் இன்ஸ்டாவிலும் அக்கவுண்ட் ஒபன் பண்ணிருக்கேன். உனக்கு ரெக்யுஸ்ட் அனுப்பிருக்கேன் அசப்ட் பண்ணு … சுமால்ப்ரோ இனிமேல் உங்களை டாடி லிட்டில் ப்ரின்சஸ் போஸ்ட்ல எல்லாம் tag பண்ணியே சாவடிக்க போறேன் பாருங்க…” என்று இரு வாரங்களுக்கு முன்பு கலகலவென்ற சிரிப்புடன் கூறிய சந்தியா நினைவிற்கு வந்தாள்.

      “பத்த வைச்சுட்டியே பரட்டை.. இரு டி உன்னை வந்து வைச்சுக்கிறேன்” என்று எழில்  எதோஎதோ காதில் வாங்க முடியா வார்த்தைகளால் சந்தியாவை அபிஷேகம் செய்து கொண்டிருந்தாள்.

          வந்த அழைப்பை ஏற்காமல் இருந்ததோடு மட்டுமில்லாமல் அடுத்து வந்த குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு, எதோ அர்த்த ராத்திரியில் நன்றாக உறங்கி கொண்டிருந்தவளை எழுப்பி அலெக்ஸாண்டர் வைத்திருந்த குதிரையின் பேர் என்ன? என்று கேட்டதை போல் முழித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று வாய்விட்டு வேறு புலம்பவும் ‘என்ன டா இது பைத்தியம்’ என்ற செய்தியை கண்ணிலேற்றி அந்த வண்டியிருந்த மூவரும் எழிலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 “பிச்சைக்காரி இப்ப மட்டும் என் கண்ணு முன்னாடி இருக்கனும் நீ… மூச்சுக்கு முந்நூறு தடவை ஒதுக்கிவிடுவியே… அந்த உன் மொக்கை மூஞ்சில விழுற முடியை பிடிச்சு மொத்தமா நறுக்கி விடல என் பேர் எழில் இல்லை டி..” என்று ஐந்து நிமிடம் சென்றும் விடாமல் புலம்பிக் கொண்டிருந்த எழிலை ரசனையுடன் ஆராய்ந்து கொண்டிருந்த  விக்ரமை முறைத்து பார்த்துவிட்டு எழிலை தாண்டி பின்னிருந்து கையை கொண்டுசென்ற டாம் அவனது பின்னந்தலையில் சட்டென்று ஒரு அடியை போட்டான்.

அதில் பதறி திரும்பிய விக்ரம் லகுடபாண்டிங்களா எவன் டா அவன் என் ரசனையில் கையைவிட்டு  கலைத்தது என்பதைப் போல் பார்க்க.. கொன்றுவேன் என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டிய டாம் எழிலை நோக்கி கண்களை காட்ட,

           அதிலிருந்த செய்தியை புரிந்துக் கொண்டவன் எழிலின் வலக்கரத்தை பிடித்து மெதுவாக உலுக்க அதில் கனவிலே சந்தியாவிவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தவள் சுயநினைவிற்கு வந்தாள்.

         “என்ன ஆச்சு எழில்? எதாவது பிரச்சினையா?”

      தலையை அந்த புறமும் இந்த புறமும் திருப்பி விக்ரமையும் டாமையும் பார்த்து முறைத்தவள் வாயில் அசிங்கம் அசிங்கமாக வரவிருந்த வார்த்தைகள் அனைத்திற்கும் வேலி போட்டு அடக்க பாடுப்பட்டாள்.

       ஏன் இப்படி செய்தீர்கள் என்று திட்டிவிடலாமா என்று ஒரு நொடி யோசித்தவள் எதை சொல்லி எப்படி திட்ட முடியும். அவர்களுக்கு இதெல்லாம் ஒரு விசயமே இல்லை. வந்ததிலிருந்தே அவர்கள் ஒரு விதமான தோழமையுடன் தான் தன்னுடன் பழகுகிறார்கள் என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது. அதில் அந்த நட்புறவில் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிலாம்.  அதை பெரிதாக எடுத்துக் கொண்டு தான் எதாவது சொல்லிவிட அதை அவமானமாக நினைத்துவிட்டால் எல்லாம் கெட்டுவிடும். நான்கு வயது குழந்தை முதல் அறுபது வயது முதியோர் வரை இவர்கள் செய்ய போகும் உதவியால் உயிர் வாழ முடியும் என்னும் போது இந்த சிறு விசயத்துக்காக ரிஸ்க் எடுக்க எழில் விரும்பவில்லை. அதனால் எதையும் பெரிதுப் படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள்.

 அவளது மனதோ ‘பிளீஸ் எழில் ரெண்டே ரெண்டு வார்த்தை மட்டும் திட்டிக்கிறேன் இல்லாட்டி என்னால வாயை அடக்க முடியாது’  என்று கறராக கூறிவிட,

                   இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டே “வீணா போனவங்களா..விலங்காம போனவனுங்களா.. மூஞ்சியை பாரேன்.. மூஞ்சியை…நல்லா சிலை திருட வந்தவங்க மாதிரியே ஒரு முகரை…” என்று திட்ட..

                 இருவரது முகமும் ஒரு நொடி அதிர்ந்ததோ என்று அவள் நினைக்கும் முன்பே அவர்கள் முகத்தில் புரியாத பாவனை வந்து அமர அதில் திருப்திபட்டுக் கொண்டவள் அடுத்து “தெல்லவாரிங்களா..” என்று சிரிப்புடன் முடித்துவைக்க.

                         “என்ன சொன்ன எழில்?” என்று விக்ரம் கேட்க..

                           “ஓன்னுமில்லை சார்… லேட் ஆயிருச்சு… எதோ ஞாபகத்துல புலம்பிட்டு இருந்துட்டேன் அதுனால சாரி சொன்னேன் சார் ” என்று ஆங்கிலத்தில் எழில் கூறிவிட

              “ஆனால் நீ பேசுனதுல சாரின்ற ஒரு வார்த்தையே வரலையே…” என்று புருவ சுழிப்புடன் கேலிப்புன்னகையை வாயில் அடக்கி டாம் கேட்க , அவனது கேள்வியில் சிறிது ஜெர்க் ஆனவள் முகத்தில் முயன்று பதட்டத்தை கொண்டுவராமல் சமாளித்து “நான் சாரியை தமிழில் சொன்னேன் சார்.. அதான் உங்களுக்கு தெரியல.. ஹி ஹி ஹி… அண்ணா வேகமா வண்டியை எடுங்க  லேட் ஆகிட்டு இருக்கு..” என்று டாமிடம் ஆரம்பித்து ஒட்டுநரிடம் முடித்தாள்.

           அதன்பிறகு டாமும் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாகி விட்டுவிட அடுத்து தனது தந்தையை எப்படி சமாளிப்பது என்ற யோசனை வர முதலில் தனது அலைப்பேசியை ஸ்சுவிச் ஆப் செய்தவள், இவர்களை முதலில்  சரியாக லதா அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு தந்தையின் காலில் விழுந்தாவது சமாளிப்போம் என்று நினைத்து அமைதியாகி விட்டாள்.

            சில நிமிடங்களில் சென்னையின் மிகப்பெரிய ஐந்து நட்சத்திர விடுதி முன்பு வண்டி நிற்க, லாபியில் நிற்கும் பாதுகாவலர் வந்து காரின் கதவை திறந்துவிட வரிசையாக  இறங்கினர் மூவரும்.

            முதலில் இறங்கிய டாம் எழிலை பார்க்காமல் அவளை நோக்கி தனது வலக்கையை மட்டும் நீட்ட,  என்ன எது என்று புரியாமல் எழில் முழித்தாள்.

               “கம் ஆன்…” என்று எதையோ கொடு என்பதைப் போல் அவன் கை அசைக்க எழில் என்னவென்று தெரியாமல் அவனது அழுத்தமான வன்மையான நீண்ட கையின் மேல் தனது பூப்போன்ற மென்மையான இடதுகையை வைக்க மென்மை வன்மையுடன் கலந்ததால் உண்டான சிலிர்ப்பில் சட்டென்று தனது தலையை திருப்பி தனது கரத்தின் மீது படிந்திருந்த  அவளது கரத்தை பார்த்தவனது கண்களுக்குள் கடந்த காலத்தில் சுவையுடன் அள்ளிப்பருகிய பல நினைவு நிரல்களின் எட்சங்கள் இன்று வலியுடன் ஒட…அதை வெறுப்பவனாக  

             “ஷிட்..” என்று சலிப்பாக கூறியவாறு அவளது கையை தனது கையிலிருந்து அலட்சியமாக தட்டிவிட்டவன் தனது கால்சட்டையின் பின் பையிலிருந்து தனது வாலட்டை எடுத்து ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அந்த காவலாளியிடம் நீட்டினான்.

        அவனது இந்த புறக்கணிப்பில் எழிலுக்கு ஐயோடா என்று ஆகிவிட்டது. எழில் காரில் வைத்து அவனது கையை தட்டிவிட்டதற்க்கு இணையாக இப்பொழுது பழி தீர்த்து கொண்டதற்காகவே எழிலுக்கு தோன்றியது.

            எதற்கு இப்பொழுது தேவையில்லாமல் அவன் கரத்தின் மீது தனது கரத்தை வைத்து தொலைந்தோம் என்று  அதற்கு தண்டனையாக தானே தனது மண்டையிலே நான்கு கொட்டு வைத்து கொள்ள வேண்டும் என்று தோன்ற அவளது கை நேராக தலையை நோக்கி செல்ல, இருக்கும் இடம் உணர்ந்து மேலும்பிய கரத்தை அப்படியே காதோர முடியை ஒதுக்கி விடுபவள் போல் சமாளித்து கொண்டாள்.

                 அவளது அதிர்ந்த தோற்றத்தை பார்த்த விக்ரம் சமாளிப்பாக “இல்லை ஜெர்ரி அவன் பிஏ தான் எப்பயுமே அவன் திங்க்ஸ் எல்லாம் வைச்சு இருப்பாங்க. அந்த ஞாபகத்துல கை நீட்டினான். மறந்துட்டு நீட்டுனாதுனல ஷிட்னு சொன்னான் வேற ஒன்னும் இல்லை..” என்று நீண்ட விளக்கம் கொடுக்க, அதை எற்றுக்கொண்டவள் எழில் சிரிப்புடன் ஒஹ் என்பதைப் போல் தலையாட்ட, விக்ரம் ஏங்கு அவளது தலையாட்டலை கவனித்தான் அந்த கன்னகுழியிலே நிறுத்திக் கொண்டான் தனது பார்வையை..

            அவளது இடக் கன்னக்குழி தன்னுடைய நீண்ட ஃபான்ஸ் கிளப்பில் புதிதாக வேண்டி விரும்பிய ஒரு அரை இந்தியனையும், ரசிகனாகி விட்டேன் என்று உணராத ஒரு முழு வெள்ளைக்காரனையும் சேர்த்துக் கொண்டது.       

    விக்ரமின் பதிலை கேட்டுக்கொண்டிருந்த டாம் தனது காரியதரிசியின் நினைவில் புன்னகை பூவை பூக்க விட்டான். அவனது பொருட்கள் அடங்கிய ஒரு பையை தூக்கிக்கொண்டு எப்பொழுதும் தனது பின்னாடியே தனக்கு ஒரு வால் போலவே அலைபவள். தான் கை நீட்டுவதிலே எதற்கு என்று புரிந்துக் கொண்டு அந்த பொருளை சரியாக  கொடுப்பவள்.அவள் ரேச்சல் இரண்டு வருடங்களாக அவனிடம் தான் பணிபுரிகிறாள்.

         அது மட்டுமில்லாது கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த ரேச்சலை தான் டாம் டேட் வேறு செய்துக் கொண்டிருக்கிறான். டாமின் டேட்டிங் வரலாற்றிலே ரேச்சல் தான் அதிக நாட்கள் அவனது பெண் தோழியாக இருப்பவள்.. தன்னாலும் ஒருத்தியுடனே வாழ்க்கையில் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை இவனது மனதில் சிறிதாக பதித்தவள். இருக்காதா பின்னே.. இவனை பொறுத்த வரை ஒரு  பெண்தோழி மாக்ஸிமம் மூன்று மாதங்கள். மினிமம் இரண்டு வாரங்கள் என்று இருந்தவனை ஒன்றரை வருடங்கள் அவளை தவிர வேறு யாரை பற்றியும் சிந்திக்க விடாமல் வைத்திருக்கிறாள் அந்த தேவதை.

                  ஆம் டாமை பொறுத்தவரை அவள் தேவதை தான். என்ன இறக்கை முளைக்காத தேவதை.. இருவருக்கான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்று நினைக்கும்போது தான் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துவிட அதிலிருந்து வெளிவருவதற்காக  லண்டனில் இருந்து இந்த சென்னையில் வந்து நின்றுக் கொண்டிருக்கின்றனர்.  

           ரேச்சலை நினைத்து முதலில் புன்னகைபுரிந்தவன் அடுத்து அடுத்து அடுக்கடுக்காக நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து முகம் இருகி நின்றான். இவனது இந்த சிந்தனை எல்லாம் ஒரு சில விநாடிகளில் அவனது மூளைக்குள் ஒடி முடிந்திருந்தது.

              உலகிலே அதிவேகமானது மனிதனின் சிந்தனைகள் தான். சில நொடிகளில் ஒரு மனிதனின் மொத்த வரலாற்றையும்  கண்களுக்கு முன்பு ப்ரொஜக்ட் செய்து காட்டுவதில் நினைவுகள் கெட்டிக்காரன்.

             எழில் விக்ரமிடம் தலையாட்டிவிட்டு டாமை பார்த்தவள் ‘இவன் ஏன் இப்படி நிக்குறான். இன்னும் நம்ம மேல கோவமா தான் இருக்கனா? எதுக்கு தேவையில்லாம ரோட்ல போற சனியனை பனியனில் தூக்கி போடுவானேன்’ என்று நினைத்த எழில் டாமிடம் “சாரி…” என்று கூற அவளது குரலில் அவளின் முகத்தை பார்த்த டாம் “பராவயில்லை ஜெர்ரி..” என்றவன் தோளோடு அணைத்து விடுவித்தான்.  

       அது ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதி. என்னிடம் வந்து ஒரு நாள் நீ தங்கி செல்ல வேண்டுமென்றாலும் ஒரு நடுத்தர குடும்பத்தின் ஒரு மாத செலவை நீ எனக்கு முழுதாக தந்தால் மட்டுமே முடியும் என்று கட்டியம் கூறுவது போல் அதன் ஆடம்பரம் இருந்தது. பணம் படைத்தவர்களுக்கு அந்த விடுதியின் தோற்றம் வரவேற்பாகவும், மத்தியதர மக்களுக்கு ஆசையை ஊட்டுவதாகவும், எழைக்களுக்கு மிரட்டுவதாகவும் தோன்றும்படி இருந்தது.  

              அந்த நட்சத்திர விடுதியின் தரைதளம் முழுவதும் ஒரு பகுதி வரவேற்பு பகுதியாகவும், இன்னொரு பகுதி உணவகமாகவும் செயல்பட்டு வந்தது. இங்கு ஒரு காபியாவது அருந்திவிட வேண்டும் என்பதே  பல நடுத்தரகுடும்ப கல்லூரி சிட்டுகளின் கனவாகவே இருந்து வருகிறது.

           அந்த வரவேற்பு பகுதியில் டாம் மற்றும் விக்ரமை வரவேற்பதற்காக சந்தியா, நிரஞ்சன் லதா அம்மா ஆகியோர் காத்துக் கொண்டிருந்தனர்.லதா அம்மா கையில் சிறுக்கட்டு போட்டிருந்தார். திடிரென்று கையில் சிறு அடிப்பட்டுவிட அதை மருத்துவரிடம் காட்ட சென்றவர்க்கு அங்கு நேரம் ஆகிவிடவே நிரஞ்சனை அழைத்து எழில்மதியிடம் கொடுக்க சொல்லி எழிலிடம் டாமை விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வருமாறு கூறியிருந்தார்.

              அந்த வரவேற்பு  பகுதியின் கண்ணாடி அமைப்பின் உபயத்தால்  காரிலிருந்து மூவரும் இறங்குவதை இவர்கள் கவனித்துவிட்டனர். இருந்தும் உள்ளே வராமல் அங்கே நடந்து கொண்டிருந்த நாடகங்களை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு மனதில் அபாய மணி ஒலிக்க ஆரம்பித்து இருந்தது.

            அதை ஒரக்கண்ணாலே கணித்துவிட்ட சந்தியா “லலிதா அம்பாள் இங்கே எதோ கருகுற வாசனை அடிக்குதுல…” என்று லதா அம்மாவிடம் கேட்க,

               “அதெல்லாம் ஒரு வாடையும் வரலையே டி…” என்று மூக்கை உறிஞ்சிக்கொண்டே லதா அம்மா கூற நிரஞ்சன் பல்லை கடித்துக் கொண்டு நின்றான்.

               “உங்களுக்கு வயசு ஆயிருச்சுல அதான் ஒன்னும் தெரியல… கண்ணு தான் போச்சோனு நினைச்சேன். மூக்கும் போச்சா…”என்று கேலி பேச

                “போடி வாயாடி… உன்னை படைக்கும் போது ஆண்டவன் கொஞ்சம் கவனகுறைவா இருந்துட்டான். ஒரு பொருளை மட்டும் வைக்க மறந்துட்டான்…அது என்னனு தெரியுமா? ”

                  “அது மூளைனு சொல்லி மட்டும் மொக்கை போட்டுறாதீங்க லலிதா அம்பாள்…” என்று தனது நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கி கொண்டு கூற,

                      “ச்சே..ச்சே அது இல்லாம எந்த ஜீவராசியும் உலகத்துல கிடையாது… நான் சொன்னது வாலை.. வால் மட்டும் வைச்சு விட்டு இருந்தான்னு வை அழகர் கோவில்ல இருக்குறது தான்.” என்று கூற,

                        “இது அதை விட மொக்கை லலிதா அம்பாள். சம்பளம் கொடுக்குற முதலாளின்ற ஒரே காரணத்தால மட்டும் தான் இதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன்…” என்று சந்தியா திருப்பி லதா அம்மாவை கலாய்த்துவிட லதா அம்மா கப்சிப் கமர்கட் ஆகிவிட்டார்.

                அதோடு அமைதியாகி விட்டால் எப்படி அவள் சந்தியாவாக இருக்க முடியும். இன்னும் உள்ளே வராமல் வெளியே நின்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் மூவரை பார்த்து நெருப்பின் மேல் நின்று கொண்டிருப்பவனைப் போல் கால் மாற்றி கால் நின்று கொண்டிருந்த நிரஞ்சனை பார்த்த சந்தியா,

                  “கிடைக்கவே மாட்டா அவ தான் டா பொண்ணு…

                   ஆம்பளைங்க தான் அலையுறானுங்க ரோட்ல நின்னு…” என்று ஆரம்பிக்க, இதற்கு மேலும் அங்கயே நிற்க நிரஞ்சனுக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கிறது.

        விறுவிறுவென்று நடந்து சென்ற நிரஞ்சன் சென்று நின்று இடம் எழிலின் அருகில். சரியாக நிரஞ்சன் அவர்களை நெருங்கிய போது தான் எழில் மன்னிப்பு கேட்க டாம் அவளை தோளோடு அணைத்தது.

             அதில் அதிர்ந்த நிரஞ்சன் சட்டென்று எழிலின் வலக்கையை பிடித்து இழுத்து தன்னிடம் நிறுத்தி கொண்டவன் டாமை பார்த்து முறைத்தான்.

              எழிலின் கரத்தில் பதிந்திருந்த நிரஞ்சனின் கரத்தைப் பார்த்த விக்ரமிற்கு அவனை கொன்று போடும் வெறிவர மவனே இப்ப அவ மேல இருந்து நீ கையை எடுக்கல உன்னை கொல்லுவேன் டா என்ற பார்வையை கூர்மையுடன் அவனை நோக்கி செலுத்தினான் விக்ரம்.