cn- 20

நிலவு – 20

விழா முடிந்து அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில், பாஸ்கர், தன் மகனுடன், சாந்தினியின் குழந்தைகளை சேர்த்துக் கொண்டு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தான்.

தயாவின் பேச்சை மீறி அங்கேயிருந்து செல்ல அவனுக்கும் மனமில்லை. தன்னைப் பார்வையாலேயே எரிக்கும் மனைவியின் மனநிலையை அவனும் அறிந்து கொள்ள விரும்பினான்.

இவர்களது நினைப்பை எல்லாம் ஓரம் கட்டி விட்டு, ஊருக்கு புறப்படுவதற்காக சிந்து அனைத்தையும் தயார் செய்ய முனைந்திருந்தாள். மகனின் ஷிப்பரை சுடுநீரில் அலசிவிட்டு, கையோடு ஃபிளாஷ்கிலும் நீர் ஊற்றிக் கொண்டபோதுதான் மரகதம் சுதாரித்து, அவளின் ஏற்பாட்டினை கவனிக்க ஆரம்பித்தார்.

“அண்ணனும் அண்ணியும் கெளம்பட்டும்… நீ இங்கேயே இரு சிந்து” மரகதம், அவளை தடுத்த நிறுத்த முயற்சிக்க,

“இல்லம்மா… வேலை நெறைய இருக்கு. கயலக்காவும் கடைக்கு வர முடியாது. நான் போயாகனும்” என்று சப்பைக் கட்டு கட்டினாள்.

பாஸ்கர் இருக்குமிடத்தில் கூட, தான் இருப்பதை விரும்பவில்லை என்பதை வெளியில் சொல்லி, பெரியவர்களிடத்தில் சிறப்பு வாழ்த்துக்களை பரிசாக வாங்கிக் கொள்வதில் இஷ்டமில்லை சிந்துவிற்கு.

“உனக்காகதானே, உன் அண்ணன், மாப்பிள்ளைய பிடிச்சு உட்கார வச்சுருக்கான். அதை பார்த்துட்டும் நீ கிளம்புறதுக்கு  ரெடியான என்ன அர்த்தம்டி?” என்று மரகதம் குரலுயர்த்த,

“யார் என்ன சமாதானம் சொன்னாலும் நான், என்னோட முடிவுல இருந்து மாறப் போறதில்லன்னு அர்த்தம்” கணீரென்று சற்றும் தாமதிக்காமல் வந்த சிந்துவின் திடமான பதிலில், தயா, அவளை முன்னறைக்கு அழைத்து விட்டான்.

“உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு சிந்து ஏதாவது கேக்கணும்னா கூட மாப்பிள்ளைய கேளு. ஏன் எல்லாத்தையும் மனசுல பூட்டி வச்சுக்கிட்டு, ஓடப் பார்க்குற?” என்றவனின் பார்வை பாஸ்கரை நோக்க, அவனும் பேச்சை கவனிப்பவனாக சற்று முன்னே எழுந்து வந்தான்.

அவனை தன் பக்கத்தில் அமர வைத்த மனோகர், “பொண்டாட்டி கிட்ட என்னய்யா வீராப்பு வேண்டி கிடக்கு? தனியா கூட்டிட்டு போயி மனச விட்டு பேசு மாப்ளே…!” என்று அறிவுரை கூற, பாஸ்கர், சிந்துவைத்தான் ஆழ நோக்கினான்.

நான் கூப்பிட்டதும் பேச வந்துட்டுதான், இவ வேற வேலைய பாக்கப் போறாளா..! அதான் மதியம் போயி நின்னதுக்கு என்னை முறைச்சுப் பார்த்தே முதல் மரியாதை பண்ணினாளே..! என்று மனதோடு சடைத்துக் கொண்டவனின் நினைப்பிற்கு,

நம்பி வந்த பொண்ணை, வைச்சு காப்பாத்த தெரியாதவனுக்கு, மாலை மரியாதை மட்டும்தான் கேடு! என்று அவனின் மனசாட்சி பலமான கொட்டினை வைத்தது.  

புது மனிதனாக மாறத் தொடங்கியதில் இருந்து, அவனது மனசாட்சியும் அவனோடு பேச ஆரம்பித்திருந்தது. தன் சுயத்தை உணர்தல் என்பது இதுதானோ!

அடிபட்டுத்தான், வலியின் கொடுமைகளைத் தெரிந்து கொள்பவர்களின் வரிசையில் அவனிருக்க, வாழ்க்கையை புரிந்து கொள்வது என்பது அத்தனை எளிதில் சாஸ்வதம் ஆகிவிடுமா என்ன?

வீட்டு மனிதர்களின் ஓட்டு மொத்தப் பார்வையும் தன்னை முற்றுகையிட்டிருக்க, அசராமல் அதனை எதிர்கொண்டு நின்றாள் சிந்து.

அவளின் பாவனையில் இருந்தது அடங்க மறுக்கும் பிடிவாதமா? மனதோடு, தான் கொண்ட உறுதியா? அல்லது அசாத்தியமான நிமிர்வா… இவற்றில் ஏதோ ஒன்று அவளை திடப்படுத்தி இருக்க, அனைவரையும் நேர்கொண்டு பார்த்தாள்.

“நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலண்ணே… இப்போதைக்கு என் சொந்த உழைப்புல, எனக்கான பாதுகாப்பான வாழ்க்கைய தேடிக்கிறதுதான் என்னோட குறிக்கோள்.

என் வீட்டுக்காரர் திருந்திட்டாரு, திரும்பவும் இவர் கூட சந்தோஷமா வாழலாம்ன்னு பேராசைப்பட்டு, மன கஷ்டத்தை தேடிக்க நான் பிரியப்படல..!

ஏற்கனவே கேள்விக்குறியா நின்ன அனுபவம் போதாதா? தெரிஞ்சே முள்ளு மேல நடந்து, வாழ்க்கைய ரணமாக்கிக்க நான் தயாரா இல்ல….” என்ற உறுதியான குரலில், தனது முடிவை ஆணித்தரமாக சிந்து உரைத்து நின்ற விதத்தில், யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை.

தேள் கொடுக்காக மாமியாரின் சொல்லம்புகளால் உண்டான தழும்புகள், இப்பொழுது அவளது முடிவுகளாக அனைவரின் முன்பும் வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தன. அன்று எதிர்வினை காட்டாது வேடிக்கை பார்த்த பாஸ்கர், இன்றும் அதையேதான் செய்தான். 

தன்னையே உறுத்து விழித்த கணவனை கண்டு, சற்றும் சலனப் படவில்லை. அவனும் இவளது பேச்சிற்கு எந்தவித அதிர்வும் காட்டாமல், ‘இதை நான் எதிர்பார்த்ததுதான் என்ற தோரணையில் நின்றிருந்தான்.

ஆனால் இவர்களை அப்படியே விட்டுவிட, இவர்களின் குடும்பத்தாரால் எப்படி முடியும்? சுற்றி இருக்கும் உறவுகள் அனைத்தும், இந்த இருவரின் மகிழ்வான நல்வாழ்க்கையை எதிர்பார்த்தல்லவா, தங்களின் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியிருக்க, அனைவரின் மனதிலும் எழுந்த ஆட்சேபணையின் எதிரொலியாக, அலமேலுதான் முதலில் தனது எதிர்ப்பை காண்பித்தார்.

“ஒண்ணுக்கு ரெண்டா பொறந்த வீட்டு சொந்தம், உன்ன கண்ணுல வச்சு தாங்குறாங்கன்னு தைரியத்துல பேசிட்டு இருக்கியா? எத்தனை நாள், நாங்க உன்னை பார்க்க முடியும்? எது வரைக்கும் உன்கூட வர முடியும்? கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா…” என்று சிந்துவை வளர்த்தவர் கடுகடுக்க,

“எப்பவும் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, சிந்து!”  நர்மதாவும் தன் பங்கிற்கு எடுத்துக் கூறினாள்.

“அன்னைக்கு பிள்ளைய தூக்கிட்டு இவ கிளம்பினப்பவே, தலையில ரெண்டு தட்டு தட்டி இங்கேயே இருடின்னு கட்டிப் போட்டிருக்கணும். மனசளவுல பலவீனமா இருக்கா, சின்னப்பொண்ணுனு, யாரும் கண்டிக்காம இருக்கப்போய் இப்போ இஷ்டத்துக்கு பேசிட்டு நிக்கிறா… ஒழுங்கா மனசுல இருக்குற குப்பையை எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு, குடும்பம் நடத்துற வழியப் பாரு..!” என்று ஏகத்திற்கும் வசைபாடிய படியே மரகதம் கொந்தளித்து விட்டார்.

மகளின் அறியா வயதும் அவளின் பேதைத் தனமும் தன்னால் கண்டுகொள்ளப் படாமல் விட்டதினால் ஏற்பட்ட பின்விளைவினை, இன்றளவும் அனுபவித்து வந்தவரின் மனவலியில், தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டி விட்டார் மரகதம்.

“கொஞ்சநாள் போச்சுன்னா நடந்ததெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணும் சிந்து… அவசரப்படாதே!” கங்காவும் சேர்ந்து சொல்ல,

“பெரியவங்க உன்னோட நல்லதுக்குதான் சொல்வாங்க, சிந்தா கண்ணு… அமைதியா உக்கார்ந்து யோசிச்சு பாரு, உனக்கே புரியும்” என்று தன்மையாக அறிவுறுத்தினார் நாராயணன்.

“என் பிள்ளைய பத்தின நினைப்பு தவிர்த்து, வேற எந்த யோசனையும் எனக்கு இல்லப்பா… என்னை கட்டாயப் படுத்தாதீங்க!” சிந்துவின் இந்த வீம்பான முடிவால், தயாவிற்கும் கோபம் துளிர் விட்டது. 

மனம் சமாதானம் ஆகும் வரை, வந்தவனை நாலு கேள்வி கேட்டு, சேர்ந்து வாழ்வதை விட்டுவிட்டு, இதென்ன அசட்டு பிடிவாதம் என்ற அலுப்பான எண்ணத்தில் முகத்தை சுருக்கி கொண்டான்.

இவள், என்ன வாழ்ந்து அனுபவித்து விட்டாள் என்று, இந்த பெரிய மனிதப் பேச்சு பேசுகிறாள் என்றே மனதோடும் நொந்து கொண்டான்.

அதே நேரத்தில் சிந்துவின் திடமான முடிவிற்கு, பதில் எதுவும் பேசாத பாஸ்கரின் மீதும் அளவில்லாத கோபம் வந்து கண்ணை மறைக்க, அவனிடம் கேள்வி கேட்க திரும்பிய நேரத்தில் மிதுனா இடையிட்டாள்.

தயானந்தன், இந்த நேரத்தில் பாஸ்கரிடம் பேச ஆரம்பித்தால் நிச்சயமாக, மிகக் கடினமான வார்த்தைகளை பிரயோகித்து நிலைமை, மேலும் மோசமாகி விடக் கூடும் என்ற பதைப்பு வர, வேறு வழியின்றி அவள் தலை பட்டாள்.

“உன்னோட வலி சாதாரணமானது இல்ல சிந்து. உன் பக்கம் நியாயம் இருக்கு, உன் மனசு சங்கடப்படக் கூடாதுன்னுதான் இதுவரைக்கும் உன்னை எதுவும் கேட்டதில்ல…! நீ என்ன சொன்னாலும் சரினு தலையாட்டிட்டு வந்திருக்கேன்” என்றவள், பெரு மூச்சோடு அனைவரையும் ஒருமுறை பார்த்து விட்டு,

“எனக்கு ஒரு உண்மைய மட்டும் சொல்லு சிந்து! நீங்க ரெண்டு பேரும் காதலிச்சது உண்மைதானே? கல்யாணம் நடந்ததென்னவோ, யாரும் விரும்பாத முறையிலதான்…  அதுக்காக மனசுல வச்ச அன்பு, நேசம் எல்லாம் காணாம போயிருமா? இதுக்கு தெளிவான ஒரு பதிலை சொல்லு!” என்ற மிதுனாவின் கேள்வி, சிந்துவை மட்டுமல்ல பாஸ்கரையும் அசைத்துப் பார்த்தது.

“உன்கிட்டயும் இதையேதான் கேக்கிறேன் பாஸ்கர்! உன் வாழ்க்கையில சிந்து மட்டுந்தான்னு, நீ அன்னைக்கு சொன்ன வார்த்தை நிஜம்ன்னா, இன்னும் எதுக்காக ஒதுங்கி நிக்கிற? உன் மனைவி கூட பேசுறதுக்கு, எதுடா உன்ன தடுக்குது?” என்றவளின் கேள்வியில் இருவருமே தலை குனிந்து நின்றனர்.

மிதுனா கேட்பதும் சரிதானே! இதே கேள்வியை சிந்து, தனக்குதானே எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும் இருக்கிறாள். பாஸ்கருடன், தான் கொண்டது உண்மைக் காதல்தானா? அவளைப் பொறுத்தவரை காதல் என்பது என்ன?

மனதோடு இருவரும் பேசிக்கொண்ட தருணங்கள் என்று ஏதும் இல்லை. அவனால் அவள் ஆகர்ஷிக்கபட்டாள். இருவரையும் ஒருவித ஈர்ப்பு விசைதான் இழுத்திருக்கின்றது என்பதை தெளிவாக உணர்ந்தவளுக்கு, அதைக் காதல் என்றே எடுத்துக் கொள்ள தோன்றியது.

பாஸ்கரைத் தவிர, வேறு யாரும் அவள் மனதில் காதல் என்ற கோணத்தில் நுழைந்ததில்லை. புயலாக மாறி, தன் சுயத்தையே மறக்க வைக்கும் நிகழ்வாக காதல் அமைந்ததில் சிந்து முற்றிலும் நிலைகுலைந்துதான் போனாள்.

அவளின் இருபது வயதும் பாஸ்கரின் இருபத்தியிரண்டு வயதும் கிளர்ச்சி யுத்தம் நடத்தியதற்கு, இருவரின் வாழ்க்கையே போர்க்களமாக உருமாறி, இன்று ஒருவருக்கொருவர் எதிர் திசையில் நிற்கும்படி ஆகி விட்டது.

பாஸ்கருக்கு வாழ்க்கையை இலகுவாக எடுத்துச் சென்றுதான் பழக்கம். இது இல்லையா சரி, நான் வேறு வழி தேடுகிறேன் என்று, வழித் தடத்தை மாற்றிப் போய்க் கொண்டே இருப்பவன். எங்கும் எப்பொழுதும் நின்று மருகிப் பழக்கமில்லாதவன்.

இரண்டு வருடத்திற்கு முன்பு, மனைவி தன்னை விட்டு பிரிந்து வாழ நினைக்கிறாள் என்றதும், அதற்கான காரணத்தை கேட்டு, அவளை சமாதானப் படுத்தாமல் தன் போக்கில் பாதையை மாற்றிக் கொண்டுச் செல்லப் பழகிக் கொண்டான்.

இருவரின் நிலையும் ஒன்றுக்கொன்று சமானம் இல்லாத தராசுத் தட்டுக்களைப் போல், ஏற்றத் தாழ்வுகளுடன்தான் நிறைந்து காணப்படுகிறது.

வரும் காலங்களில், மீண்டும் இதே போன்ற சண்டைகளும் சச்சரவுகளும் இருவருக்குமிடையில் நிகழாது என்று எப்படி சர்வ நிச்சயமாக கூற முடியும்?

அப்படியிருக்க, மீண்டும் சோதனை எலியாக, தன்னை ஏன் முன்னிறுத்தி கொள்வானேன் என்றுதான், சிந்து வாழ்நாள் முழுவதும் தனியாக இருந்து விடலாம் என்ற கொள்கைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

“இப்படி ஒருத்தருக்கொருத்தர் மனசுக்குள்ளேயே பேசிட்டு இருந்தா, எந்த மாற்றமும் நடக்காது சிந்து..! என் கேள்விக்கு பதில் சொல்லலைன்னா கூட பரவாயில்ல, நடந்தத மறந்துட்டு, சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க..!” அமைதியாக நேரங்கள் கடக்க, மிதுனா, தன் பேச்சில் அதை தகர்த்தெறிந்தாள்.

“பதில் சொல்லித்தான் என்னை, நான் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லண்ணி… என்னுடையது உண்மையான நேசம்தான். அளவுக்கதிகமாக அன்பு மனசுல இருக்குறதாலதான் இதுவரைக்கும் நான், அவர விட்டுக் கொடுத்ததில்ல… யார்கிட்டயும் குறைவா ஒரு சொல்லும் சொன்னதில்ல… இத்தனை ஏன்? நேருக்குநேரா என் கோபத்த கூட நான் காமிச்சதில்ல… என்னோட இந்த நெலமைக்கு, என்னோட முட்டாள்தனமும் வயசுக்கோளாறும்தான் காரணம்னு நினைச்சு, என்னை நானே தண்டிச்சிட்டு இருக்கேன்…” ஆழ மூச்செடுத்துக் கொண்டு பேசிய சிந்துவின் பதிலில், அவளது முடிவும் தெளிவானதோ என்று அனைவருக்கும் எண்ணத் தோன்றியது.   

“இப்டி மனசு முழுக்க ஆசைய வச்சுட்டும் ஏன்மா பிரிஞ்சு வாழணும்னு சொல்ற?” என்று அமைதியாகவே கேட்டான் தயானந்தன்.

மனைவியின் கேள்வியும் தங்கையின் பதிலும் தயாவின் கோபத்தை தணிய வைத்திருக்க, இப்பொழுது அவர்களின் நிலையில் நின்று யோசிக்கவும் ஆரம்பித்தான். 

“உயிரா நினைக்கிறவங்கள, ஒவ்வொரு நிமிசமும் வெறுப்போடு பார்த்து எப்படி குடும்பம் நடத்த முடியும்? அந்த சமார்த்தியம் எனக்கு இல்ல… இந்த நிமிஷம் என் கோபத்துக்கு, அவரை பலியாக்கினாலும், பின்னாடி அத நினைச்சு வருத்தபடப் போறதும் நாந்தானே..!

ஆறாத ரணமா பதிஞ்சு போன என்னோட துன்பம் எல்லாம், இவர பார்க்க பார்க்க இன்னும் பாரம் கூடிபோய் கோபமா, வெறுப்பா மாறுமே ஒழிய, எங்களுக்குள்ள சந்தோஷம் இருக்காதுண்ணே… கோபத்துலயும் வெறுப்புலயும் புது புது பிரச்சனைகள்தான் மறுபடியும் வந்து நிக்கும்” அழுகைக்கு மாறிய தொண்டையை சரிசெய்து கொண்டவாறே சிந்து முடிக்க,

“நீ தனியா இருந்தா, இத விட பெரிய பிரச்சனைகள் உனக்கு வந்து சேருமே சிந்து..! இன்னைக்கு பெருசா நினைக்கிற விஷயம் நாளைக்கு ஒண்ணுமே இல்லாம போயிடலாம்.  உன் கோபத்த வெளியே கொட்டிட்டுன்னுதானே சொல்றோம். மனசுக்குள்ள பொருமிட்டு இருந்தா, அது நமக்கே எமனா போயிடும்டி” என்று மரகதம் தொடர்ந்து வற்புறுத்த ஆரம்பித்தார். .   

“என் கோபம் அங்கீகரிக்கப் படணும். என் உணர்வுகளுக்கு மதிப்பு வேணும். எனக்கும் உணர்ச்சி வசப்படாம, பொறுமையா எதையும் ஏத்துக்குற பக்குவம் வரணும். அது, நான் தனியா இருந்தா மட்டுமே முடியும். நடந்தத அத்தனை சீக்கிரம் மன்னிச்சு, மறக்க என்னால முடியாது” என்ற சிந்துவின் பார்வை பாஸ்கரை தொட்டே மீண்டது.    

இது உனக்கான தண்டனை அல்ல நம்மிடையே பரஸ்பர வெறுப்புணர்வு மேலும் வளராமல் இருக்க, நமக்கான நன்மை இது என்பதை புரிந்து கொள்வாயா, என்ற கோரிக்கை இருந்ததோ?

“நீ சொல்றதெல்லாம் மனசுக்கு சரின்னு தோணலாம் சிந்து.  ஆனா யதார்த்த வாழ்க்கையில சாத்தியமாகுமா? பிரச்சனைக்கு காரணமா இருந்த, எங்க அம்மாவே இப்ப இல்லாதப்போ இந்த முடிவு அவசியம்தானா? நிதானமா யோசி!” சாந்தினியும் அவளை சமாதானப் படுத்த,

“உன்னுடைய எதிர்காலம் தனிமையிலேயே முடிஞ்சிடக் கூடாது. உனக்கும் வயசிருக்கு… நாங்கெல்லாம் எவ்ளோ நாளைக்குதான் உன் கூட வர முடியும்? நான் சொல்றது புரிஞ்சுதா?” என்ற மிதுனாவின் பார்வை, சிந்துவை ஊடுருவியது.

தன் அண்ணி என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் இல்லை சிந்துவிற்கு. தன்னை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இதைத்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதையெல்லாம் கேட்கும் பொழுது, விரக்தியுடன் சிரித்துக் கொள்வாள் சிந்து.  

“நீங்க சொன்ன எல்லாத்தையும் விட, நான் இப்போ ஒரு அம்மா… அந்த நினைப்பு தவிர, வேற எதுவும் என் புத்திக்கு உறைக்கலண்ணி… என் குழந்தைய, ஒரு நல்லவனா இந்த சமூகத்துக்கு அடையாளப் படுத்துற பொறுப்புல மட்டுமே என் கவனத்த செலுத்தப் போறேன்” என்ற சிந்து, தனக்கான கடமையை தெளிவாக எடுத்துரைத்தாள்.  

“அதே பொறுப்பு, புள்ளைய பெத்த அப்பனுக்கும் இருக்கும் சிந்து. அதுக்காவாவது சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க…” சற்றே குரல் உயர்த்தி பேசிய தயா, முதன் முறையாக பாஸ்கரின் சார்பாக நின்றான்.

தங்கையின் வலியே பெரிதென்று நினைத்தவனுக்கு அவளின் பிடிவாதம் பக்குவமில்லாத தன்மையே காட்ட, எப்படியாவது அதனை புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிவிட்டான்.

“அம்மாவோட கடமையை நான் செய்றேன், அப்பாங்கிற கடமையை அவர் செய்யட்டும், அதுக்கு நான் தடை சொல்ல மாட்டேன்! அதுக்கு மீறி ஒரு சொல்லோ, செயலோ,  என்னை நோக்கி வர்றதயும் நான் அனுமதிக்க மாட்டேன்..!” உறுதியான முடிவோடு சிந்து கூற,

“இத பேச்சுக்கு கூட ஒத்துக்க முடியாது சிந்து…!” என பல்லைக் கடித்தான் தயா.  

“ஏன்? கணவன் மனைவியா வாழ்ந்தா மட்டுந்தான், நல்ல பெத்தவங்களா இருக்க முடியுமா? நட்புங்கிற போர்வையில ஒழுக்கத்தை தாண்டி, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு வழி காட்டுற சமுதாயம், ஒரு பிள்ளைக்கு அம்மா அப்பாவாக மட்டுமே வாழ, ஏன் ஒத்துக்காது?” காட்டமான தன் வாதத்தை முன்வைத்தாள் சிந்து.

“நீ விதண்டாவாதம் பேசுற சிந்து… சின்ன பிள்ளைங்க விளையாட்டு இல்ல இது, பிடிக்கலன்னு சொல்லி திரும்பிப் பார்க்காம போறதுக்கு… ஒரு முறை விரும்பி ஏத்துக்கிட்ட வாழ்க்கைய, நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கிட்டு வாழ பழகிக்கணும்” என்று கடிந்து கொண்டே,

மீண்டும் அறிவுறுத்திய தயா, சொன்னது தங்கைக்கு மட்டுமல்ல, உனக்கும்தான் என்கிற பார்வையில் பாஸ்கரையும் கூர்மையாக நோக்கினான்.  

“அவளோட முடிவ அவ சொல்றா… அதுக்கு உடன்படுறவன் அமைதியா இருக்கும் போது, நாம அடுத்தடுத்து எதிர்ப்பு காட்டுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல தயா… ஒரு குழந்தைய, பெத்தவங்களா இருந்து, அவங்களோட பொறுப்புகளை யோசிக்கட்டும். இதோட விடுங்க… நான் யாருக்காகவும் பேசப் போறது இல்ல…” என்ற மிதுனாவின் பேச்சு, பாஸ்கரிடம் முடிந்தது.

இது உன் வாழ்க்கை, அதை தக்க வைத்துக் கொள்வது உன் கையில் என்ற பாவனையில், தன் தம்பியை அமைதியாகப் பார்த்துக் கொண்டே அமர்ந்து விட்டாள். குடும்பத்தாருக்கும் இவர்களைப் பற்றி பேசுவது ஒருவித அசௌகரியத்தை கொடுக்க, அவர்களும் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டார்கள்.

இருவரையும் முன்னிட்டு நிறைய பேசியாகி விட்டது. இனியும் தொடர்ந்தால், குடும்பத்தாரின் கட்டாயத்தில் இருவரும் வெறுப்புடன் வாழ்வை தொடர ஆரம்பிப்பர் என்பது சர்வ நிச்சயம்.

அப்படி நடந்தால் அங்கே அன்பு நிற்காது, பலவந்தம் என்ற பிடித்தமின்மை மட்டுமே ஆட்சி செய்யும் என்று தோன்ற, இருவரிடமே முடிவினை விட்டு விட்டார்கள். ஒவ்வொரு முறையும் சமாதானம் பேசி, சேர்த்து வைக்க, சிறுபிள்ளைகளின் விளையாட்டா, வாழ்க்கை!

சிந்து, தன் முடிவில் சற்றும் பின்னடையாமல், பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள். பாஸ்கர் அனைவரின் முன்பும் என்ன சொல்ல, ஏது செய்ய என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சிறு வயது முதற்கொண்டு பெண்களின் நிழலில் வளர்ந்தவன், சுயமாய் தனக்கான முடிவுகளை எடுக்கத் தெரியாதவன், சமீப நாட்களாகதான் சுய சம்பாத்தியத்தின் பலனை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறான்.

தனது தாய் இருந்திருந்தால் நிச்சயம் இந்த மாற்றம் வந்திருக்குமா? அது சந்தேகமே! வாழ்க்கை இன்னும் சிக்கலாகி இருக்கும் என்பதுதான் உண்மை. வெளியுலகத்தை தெரிந்து கொள்ள ஆரம்பித்தவனுக்கு, வாழ்க்கையின் தாத்பரியம் அத்தனை எளிதில் பிடிபட்டு விடுமா என்ன?

யார் என்ன சொன்னாலும் சரியென்று ஒத்துக்கொண்டு போகும் மனோபாவம் மட்டுமே கொண்டவன், இப்பொழுது மனைவியின் பேச்சிற்கு, எப்படி பதில் கொடுப்பது என்ற தர்ம சங்கடமான நிலையில் குழம்பிக் கொண்டிருந்தான்.

குழந்தையின் புதிய ஸ்பரிசம், அவனை ஈர்க்க வைத்திருக்க, இனிமேலும் தனக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் உறவைத் தட்டிக் கழிக்கவும் மனம் வரவில்லை.

மனமெங்கும் பாரமேறிய உணர்வில் தமக்கைகளின் முகம் பார்க்க, அவர்கள் இருவரும் நீதான் பேச வேண்டும் என்று பேசாமடந்தையாகி அமர்ந்திருந்தனர்.

பாஸ்கரின் தடுமாற்றத்தை கண்ட நாராயணன், தானாகவே முன்வந்து அருகில் அமர்ந்தவர், “மாப்ளே தம்பி…! எனக்கு உங்க மேலே நிறைய கோபம் இப்பவும் இருக்கு. ஆனா உங்க நெலமையில இருந்து பார்க்கும் போது, நீங்க வளர்ந்த விதம்தான் அதுக்கு காரணமோனு தோணுது.

மனசுல பயம், தயக்கம் எதையும் வச்சுக்க கூடாது. ஆண் பிள்ளைகளுக்கு அது அழகில்ல… என் பொண்ணு சொன்ன முடிவுக்கு, உங்க மனசுல தோனுற பதிலச் சொல்லுங்க..! ஒரு குடும்பம் காரணமே இல்லாம பிரிஞ்சு நிக்கிறத பார்க்குற சக்தி இங்கே யாருக்குமே இல்ல…!” உள்ளன்போடு பேசி, அவனுடைய பொறுப்பை உணர வைத்தார் பெரியவர்.

“அது… வந்துங்கயா…” தயக்கத்துடன் பாஸ்கர் வார்த்தைகளை உச்சரிக்க,

“மாமான்னு கூப்பிடுங்க தம்பி…” சிரித்தபடியே பாஸ்கரின் முதுகினை தட்டிப் கொடுக்க, அவன், தன்னால் பேசத் தொடங்கினான்.

“ம்ம்… மாமா… எனக்கு என்ன முடிவெடுக்குறதுனு தெரியல… இத்தன நாள் மத்தவங்க பேச்சுக்கு, தலையாட்டுற பொம்மையா மட்டுமே இருந்திருக்கேன். நான் கெட்டவன் இல்ல, பொறுப்பில்லாதவன். என்னோட இந்த பலவீனம்தான், என்னை, என் குடும்பத்துல இருந்து பிரிச்சு வைச்சிருச்சு..!

சிந்துகிட்ட, ஏன் இந்த முடிவு எடுத்தேன்னு கேக்குற அளவுக்குக்கூட ரோஷம் இல்லாம குழம்பிட்டு இருக்கேன். எனக்கான வாழ்க்கைய நான் தொலைச்சிட்டு நிக்கிறேன்னு நல்லா புரியுது. ஆனா, அத எப்படி சரி பண்றதுன்னுதான் தெரியல…” அறியாமையுடன் சொன்ன பாவனையில் அங்குள்ள அனைவரும், ‘ஐயோ, உண்மையில் இவன் மிகவும் பாவம்தான் என்றே நினைத்தனர்.

“உனக்கான முடிவுகள, நீ எடுக்க ஆரம்பி பாஸ்கர். நிதர்சனத்தை புரிஞ்சுக்கோ… உன் வாழ்க்கை கேள்விக்குறியாகாம காப்பாத்திக்கிறது, உன் கையில இருக்கு” என்று தைரியப்படுத்தினாள் மிதுனா.  

சிறிது நேரம் தயங்கி தலைகுனிந்தவன், “பக்கத்தில இருந்தாதானே கோபம் குறையாம வெறுப்பு கூடும்னு சொல்றா… நான்… நான் தூரமா இருந்தே பார்க்கிறேனேக்கா…!

என் பிள்ளைக்கு, அப்பாவா, என் பொறுப்ப கையில எடுக்கிறேன். வெளிநாட்டுல வேலை பார்க்கிறவங்க இப்படிதானே குடும்பம் நடத்துறாங்க… ஒரு சின்ன மாற்றம் அவ இஷ்டபட்டு பேசினா மட்டுமே, நான் பதில் பேசுவேன். எனக்கு இதுதான் நல்லதுனு தோணுது.

அவளோட கோபம் குறைஞ்சு, எப்போ என் மேல அவளுக்கு நம்பிக்கை வந்து, என்கூட வாழலாம்னு தோணுதோ, அப்போ என் மனசும் அத விரும்பினா, சேர்ந்து வாழ முயற்சி பண்றோம்.

அதுவரைக்கும் சிந்து சொன்ன மாதிரியே, பெத்தவங்களா எங்க கடமைய செய்றோம். இப்பவும் சொல்றேன் சிந்துவ தாண்டின இன்னொரு வாழ்க்கைய, நான் தேடிக்க மாட்டேன், இது அம்மா மேல சத்தியம்..!” என்றவன் தன் வாழ்க்கையை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, மன அழுத்தம் தாங்காமல் வெளியேறி விட்டான்.  

இத்தனை சிறிய வயதில் வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்பதுதான் இவர்களுக்கு விதிக்கப் பட்டது போலும்..!

வாழ்க்கையை ஆரம்பிப்பதில் இருந்த வேகத்தை முடிப்பதிலும் காண்பிக்க தொடங்கி விட்டனர் இருவரும்.

மனதால் பக்குவப்பட்டு, நிதர்சனத்தை புரிந்து கொண்டு தங்களுக்கு இடையேயான கோபச் சலனத்தை தாண்டி, வரும் காலங்களில் இவர்கள் இணைந்து வாழ்வார்கள் என்னும் நம்பிக்கை கொள்வோம்..!

மாற்றம் ஒன்றே மாறாதது… அந்த மாற்றத்தால், எதிர்காலத்தில் இருவரும் கைகோர்த்து மகிழ்ச்சியான வாழ்வினை எதிர்கொள்ள, இவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி விடையளிப்போம்..!