TholilSaayaVaa17

17

 

 

உணவகத்தில் நண்பர்களுடன் அரட்டை கச்சேரியில் மூழ்கியிருந்தவள் பைரவின் அழைப்பில், 

 

“சொல்லு பாஸ்”

 

“ஒன்னும் இல்ல சும்மாதான் உன் குரலை கேட்கலாம்னு”

 

“எனக்கு தெரியும் என் இனிமையான குரலை கேட்கத்தானே கால் பண்ண?” ஆர்வமாக கேட்க 

 

“ச்சேச்சே! உன் குரலை கேட்கும் போதெல்லாம்…”

 

“அப்படியே பறக்கறமாதிரி இருக்க?” ஆர்வம் கூட

 

“இந்த கொடுமையையே தங்கறேன், இப்போ இருக்க பிரச்சனை ஜுஜுபின்னு தோணும்” அவன் சிரிக்கத்துவங்க

 

“அடேய் ஓடிரு வந்தேன்…” ஒரு நொடி கத்தியவள், அருகில் பத்மா கேள்வியாக பார்த்ததில், புன்னகையுடன், ‘சும்மா’ என்று வாயசைத்து, பைரவ் மட்டும் கேட்கும் குரலில், “இரு வந்து உன்னை வச்சுக்கறேன்”

 

“ஆல் தி பெஸ்ட் ஆழாக்கு! எங்க இருக்க? லன்ச் போலாமா?”

 

“ஹே சாரி” தான் நண்பர்களுடன் வெளியே வந்ததை அவனுக்கு சொல்ல, 

 

“சரி கேரி ஆன்” அழைப்பை துண்டித்தவன், ஒருமுறை தலையை உலுப்பிக்கொண்டு வேலையே தொடர்ந்தான். 

 

மறுநாள் காலையில் மாயா எழுந்து வரும் பொழுதே, கையில் இரண்டு பித்தளை சம்படங்களுடன் வந்த கீதா,  பெரிய சம்படத்தை மேஜையில் வைத்து, “இதுல வாணி கேட்டாங்கன்னு காராசேவ் வச்சுருக்கேன்” 

 

சிறிய சம்படத்தை காட்டி “இதுல பால்கோவா இருக்கு, பைரவ் கேட்டான்”

 

அலுப்புடன் சோபாவில் அமர்ந்தவளோ, “போமா! அவனை அனுப்பிக்கோ” டிவியை ஆன் செய்தாள்.

 

“இன்னிக்கி என்னன்னு மறந்துட்டியா?” கீதா முறைக்க 

 

“என்ன …” கேட்டவள் பாதியிலேயே பேச்சை நிறுத்தி கண்களை மூடிக்கொண்டாள்.

 

“ஞாபகம் வந்தாச்சா?” கீதாவின் முறைப்பில் அசட்டு சிரிப்புடன் தலையசைத்தவள், வேகமாக தயாராக தன் அறைக்கு ஓடினாள்.

 

கீதா கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு எப்பொழுதும் நுழைவதைபோல் உரிமையாக பைரவின் வீட்டிற்குள் 

“வாணி மா…” என்று குரல்கொடுத்தபடி நுழைந்தவள், உற்சாகம் காற்றில் பறக்க, பட்டென்று வாயை மூடிக்கொண்டாள். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த விருந்தினர்களை அவள் எதிர்பார்க்கவில்லை. 

 

முதியவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பைரவ் முகமோ மாயாவை கண்ட நொடியே புன்னையுடன் மலர, “ஹேய் இவ்ளோ சீக்ரம் எப்படி எழுந்த? வாவா! ஆமா கைல என்ன?” எழுதவன் ஆர்வமாக கையிலிருந்த சம்படங்களை வாங்கிக்கொண்டான்.

 

“உனக்கு பால்கோவா, வாணிமாக்கு காராசேவ்” என்றவள் பார்வை அவளை புன்னகையுடன் பார்த்திருந்த முதியவர்மேல் விழ,

பைரவ் “இவர் என் தாத்தா மார்க்!” சிரிப்புடன் அறிமுகப்படுத்த, அவரை பார்த்து ஸ்நேகமாய் புன்னகைத்தவள், 

 

“ஹாய் தாத்ஸ்! நான் மாயா. இவன் என்னை பத்தி எதுவுமே சொல்லி இருக்கமாட்டானு எனக்கு தெரியும் அப்படித்தானே பாஸ்” 

 

ஆர்வமாக அவர் அருகில் அமர்ந்து பேச துவங்கிய மாயாவை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்த மனஸாவையும் மற்ற உறவினர்களையும் மாயா கவனிக்கவில்லை.

 

“ஆமா ஏன் தாதஸ் அதென்ன மார்க், ரொம்ப ட்ரெண்டி பேரா இருக்கே” ஆர்வமாக பார்த்தவர், பதில் தரும்முன்னே பைரவ், “அவர் பேர் மார்கண்டேயன் நான் செல்லமா மார்க்ன்னு கூப்பிடுவேன்”

 

“எனக்கு நீங்க தாத்ஸ் தான் ஓகேவா மார்க் தாத்ஸ்?” அவள் கேட்கவும் புன்னகையுடன் அவரும் “ உன் இஷ்டம் டா. ஆமா நீ…” இருவரும் நண்பர்களாகிவிட்டதை உணர்ந்தவன், எனோ இருப்புக்கொள்ளாமல்,

 

“மார்க் இவ என் பிரென்ட் சொல்லிட்டேன் நீ லவுடிக்க பிளான் போடாத” 

 

மார்க் தாத்தாவோ “உனக்கு பிரென்ட் எனக்கு கேர்ள் பிரென்ட், என்ன மாயா சரிதானே”என்று சிரிக்க, மாயாவும் “எஸ் மை டார்ல்ஸ்” என்று பைரவை ஓரக்கண்ணில் பார்த்து சிரிக்க

 

“அதெப்படி நேத்துவரை நான் கேர்ள் பிரென்ட் இப்போ மாத்தினா எப்படி?” முறைத்தபடி வந்து நின்றாள் மானஸா.

 

“நல்லா கேளுடா, வந்ததும் வராததுமா பாரேன் பண்ற வேலைய!” பைரவ் மானஸாவின் தோளில் கையை போட்டுக்கொண்டு பைரவ் மாயாவையும் மார்க் தாத்தாவையும் முறைக்க

 

“ஒரே கேர்ள் பிரெண்டோட இருபத்தி நாலு வருஷம், ஒரே போர் அதான் புதுசா…” அவர் முடிக்கும் முன்னே, “தாத்தா அப்புறம் டார்லிங் டூர்லிங்ன்னு வா அப்போ வச்சுக்கறேன்…” அவரிடம் செல்ல சண்டையை ஆரம்பித்தாள் மானஸா.

 

அவர்கள் சண்டை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க பைரவ் மாயாவை கண்ணால் அழைக்க, அவனுடன் வாயில் வரை நடந்து சென்றவள், “என்ன பாஸ்?” 

 

“வாணிமா அப்பாவை மிஸ் பன்றாங்க.நேத்துலேந்து ஒரே உம்முனா மூஞ்சியா இருக்கா, நீ என்ன பண்ணுவே ஏது பண்ணுவேன்னு தெரியாது, மரியாதையா அவங்க மூடை மாத்தர புரியுதா? நான் குளிக்க போறேன். சாஸ்திரிகள் வந்துருவார். நீ கிச்சனுக்கு போயி உன்வேலையை ஆரம்பி” 

 

“டன் பாஸ்” என்றவள் சமயலறைக்கு செல்ல, பின்னே ஓடியவன் அவள் காதில் ரகசியமாய், “உள்ள வாசுகினு ஒரு டெர்ரர் இருக்கும் அதுகிட்ட பாத்து நடந்துக்கோ” எச்சரிக்கை செய்ய

 

“வாட்?”

 

“என் அத்தைடா, மானஸாவோட அம்மா. அவங்க கொஞ்சம் நறுக்குன்னு பேசிடுவாங்க அனா நல்லவங்கதான். எதுக்கும் பாத்து”

 

“சமாளிச்சுக்கறேன். எனக்கு வாணிமா சந்தோஷமா இருந்தா போதும்”  கண்ணடித்தவள் சமயலறைக்கு சென்றாள்.

 

சமயலறையில் மெல்லிய குரலில் வாணியிடம் வாதிட்டு கொண்டிருந்தார்  பைரவின் கடைசி அத்தை வாசுகி, விஸ்வநாத்துடன் பிறந்தவர்களில் கடைக்குட்டி.

 

“அவன் பண்ணது தப்புதான் அண்ணி. அவளுக்கு என்ன குறைச்சல்? அவனை தேடி போகச்சொல்லி அவர்தான் சொன்னார். இப்படியா அவமான படுத்துவான்?” சற்று தணிந்த குரலில் கோவமாய் கேட்க

 

“சே! அவமானம்னு பெரிய வார்த்தை சொல்லாத வாசு. அவங்க எப்போவும் அடிச்சுக்கறதுதானே. அவன் ஏதோ மூட் அவுட்ல. அவனுக்கு மனஸாவை பிடிச்சா நான் ஏன் குறுக்க…” 

 

சமையலறை வாயிலில் தயங்கி நின்றிருந்த மாயாவை பார்த்து, பேச்சை நிறுத்தியவர், “வாடா எப்போ வந்த?” புன்னகையுடன் அவளை கண்களால் அழைக்க

 

“இப்போதான் வாணிமா” என்றவள் பார்வை வாசுகியின் மேல் விழுந்த நொடி, விழிகள் விருந்தாள், பைரவின் சாயலில், காட்டன் புடவையில் முகத்திற்கு சம்மந்தம் இல்லாத கோபத்துடன் இருந்த வாசுகியை எப்படி ‘டெர்ரர்’ என்று பைரவ் சொன்னான். 

 

‘இவ்ளோ அழகா இருக்க அத்தையை போயி…” அவள் எண்ண ஓட்டத்தை கலைத்தது வாசுகியின் வார்த்தைகள்.

 

“இதான் நீங்க சொன்ன மாயாவா?” என்றவர் எந்த உணர்வையும் காட்டவில்லை

 

மாயாவை அறிமுகப்படுத்திய வாணி, “நீ போயி எல்லார்கிட்டேயும் பேசிகிட்டு இருடா நாங்க வந்துடுவோம். அவனை குளிக்க போகச்சொல்லு” 

 

“அவன் குளிக்க போய்ட்டான், நான் என் பாய் பிரென்ட் கூட பேசிட்டுதான் வரேன். இப்போ தாத்ஸ் மானஸா ஒரே சண்டை” சிரிப்புடன் நடந்ததை சொல்லிமுடித்தவள், 

 

“ஆமா என்னவோ பேசிகிட்டு இருந்தீங்க நான் நடுல வந்து..சாரி. ஹால்ல வெயிட் பண்றேன்…” இரண்டடி எடுத்துவைத்தவள், 

 

“ஆமா எதோ பைரவ் மானஸான்னு காதுல விழுந்தது, என்ன கல்யாணம்பண்ண பேசுறீங்களா?” சொல்லும்பொழுதே எனோ தன்னிடம் எதோ மாறுதலை உணர்ந்தவள், புன்னகையை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டாள்.

 

“ஆமா என் பொண்ணுக்கு பைரவை கல்யாணம் செஞ்சுவைக்கதான் அதுக்கென்ன இப்போ?” வாசுகி முறைக்க

 

எனோ மாயா குரலில் கோவம் “அதுக்கென்ன? ஒண்ணுமில்லையே! வேணும்னா நான் அவன்கிட்ட பேசறேன்” 

 

“நீ என்ன பேசறது? நீ சொன்னா அப்படியே கேட்டுடுவானோ?” வாசுகியின் குரலில் நக்கல்

 

“கேப்பான்!” மாயாவின் உறுதியான பதிலில் ஒருநொடி வாசுகி அதிர்ந்தார், வாணியோ, “மாயா நீ போ நாங்க வரோம்” இடைமறித்தார்

 

“அப்போ சொல்லு உன் பிரென்ட் கிட்ட மனஸாவை கல்யாணம் செஞ்சுக்கோன்னு” நக்கல் குறையவில்லை

 

“வேணும்னா உங்களுக்காக சொல்லிப்பாக்ரேன். ஆனா மானஸாவை பிடிச்சிருந்தா அவன் சரின்னு சொல்லியிருப்பானே, ஓகே சொல்லடி என்னவா இருக்கும்னு நீங்க ஏன் யோசிக்க கூடாது?” அவள் தீர்க்கமாக சொல்ல இம்முறை அதிர்ந்தது வாணியும் தான்.

 

“மாயா என்ன இது பெரியவங்க  கிட்ட போ” வாணியில் மிரட்ட

 

வாசுகியும் “எல்லாத்தையும் கேட்கணும்னு இல்ல. பெரியவங்க சொன்னா கேட்ட என்னவாம் உன் பிரெண்டுக்கு? எங்க மானஸாவுக்கு என்ன குறையை கண்டானாம்?” விடுவதாக இல்லை, வாணியிடம் காட்ட முடியாத கோவ அஸ்திரத்தை மாயாவின் மீது தொடுக்கத்துவங்கினார். 

 

“நீங்க சொல்றதை தப்புனு சொல்லல ஆனா பெரியவங்க காட்டினாலும் மனசுக்கு பிடிச்சாதானே கூட வாழமுடியும்? மொதல்ல உங்க மானஸாவுக்கு விருப்பம் இருக்கானு கேட்டீங்களா?” மாயா வாதாட, வாசுகி கோவத்தில் கத்தத்துவங்க, பொறுமை இழந்த வாணி

 

“மாயா! நிறுத்து என்ன பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம? சாரி கேளு ! ம்ம் ! ” என்று மிரட்ட, கப்பென்று வாயை மூடிக்கொண்ட மாயா, “சாரி ஆண்டி பைரவ் ஏற்கனவே…” அவள் குரலை மீறி கோவமாக வந்தது பைரவின் குரல்

 

“மாயா எதுக்கு சாரி கேக்கணும்?” கோவமாக நுழைந்தவனை பெண்கள் மூவரும் எதிர்பார்க்கவில்லை, அவன் பின்னே வந்த மானஸாவும் ஏனோ சமயலறைக்குள் நுழையாமல் வாயிலில் மறைத்தபடி நின்றுகொண்டாள்.

 

வாணி தயங்கியபடி நிற்க, வாசு நடந்ததை மேலோட்டமாக சொல்லி, “நாங்க என்ன உங்களுக்கு கெடுதலா செய்யப்போறோம்? சின்ன வயசுலேந்து ஒண்ணா விளையாடி வளந்தவங்க தானே? அவளை கட்டிக்கிட்டா என்ன குறைஞ்சு போவியாம்? அதென்ன உன்னைத்தேடி பேச வந்த பொண்ண அப்படி அவமானப்படுத்தி விரட்டி அடிப்பியா?” 

 

“லூசுத்தனமா உளறாதீங்க நான் கோவத்துல கொஞ்சம்….அதெல்லாம் மனஸாகிட்ட சாரி கேட்டுட்டேன். இப்போ எதுக்கு மாயாவை ரவுண்ட் கட்டறீங்க?”

 

“என்ன செய்யணும்னு உனக்கு தெரியுமாம். உங்க வாழ்க்கையில் நாங்க முடிவெடுக்க கூடாதாமே” முறையிட்டவர்,

“அதென்ன மானஸா உனக்கு சரியா இருக்கமாட்டானு சொல்றா? அவ்ளோ தெரியுமோ உன்னை எங்களை விட?” கோவமும் உரிமையும் எட்டிப்பார்க்க,

 

அவர் சொன்னதை காற்றில் விட்டவன், வியப்பாய் மாயாவை பார்க்க அவளோ கண்களை உருட்டிக்கொண்டு எங்கோ விட்டதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“அங்க என்ன பார்வை? என் பொண்ணுக்கு என்ன குறை? அண்ணா இருந்திருந்தா இப்படி நடக்குமா.…” வாசுகி கலங்க, அவர் கண்களை வேகமாக துடைத்து பைரவ் தான் “இப்போ நான் என்ன சொல்லிட்டேன். டைம் கேட்டேன் தப்பா?”

 

“நீ பவித்ராவ நிச்சயம் பண்ணப்போ மூச்சு விட்டேனா? இப்போ தானே கேட்கறேன். கைல வெண்ணை இருக்கும்போது ஊர்ல எங்கயோ பொன்னைத்தேடினா?” அழுகையும் கோவமும் ஒன்றுசேர வாசுகி கேட்க

 

வாணியோ பொறுமையாக “நான் எங்க வாசு அவனுக்கு பொண்ணு தேடினேன். நாங்க இன்னும் அந்த மனக்கஷ்டத்துலேந்து வெளியவே வரலை” வருத்தம் தோய்ந்த குரலில் வாணி சொன்னது பைரவை வாட்ட

 

“இப்போ என்ன…” பைரவ் துவங்கும் பொழுது, “அம்மா அப்பா ஃபோன்!” மானஸா கைபேசியுடன் உள்ளே நுழைந்தாள்.

 

“இவரை இப்போ யார் கூப்பிட்டா? மூக்கு வேர்க்குமோ” கோவமாக கைபேசியுடன் வாசுகி வெளியேற

 

“நீ கூல் டா, அம்மா அழுகைக்கு பயந்து ஓகே சொல்லி தொலைக்காத அப்புறம் நானே உன்னை கொதறிடுவேன். நமக்கு செட் ஆகாதுன்னு நானே சொன்னேன் எங்க கேட்டாத்தானே!” படபடவென பேசியவன், வாணியிடம்

 

“சாரி நான் அம்மாவை சமாதானம் செஞ்சுக்கறேன்.நீங்க சமையல் வேலையே பாருங்க நேரமாகிடும் தாத்தா இப்போவே தொப்பையை தடவிகிட்டு உட்கார்ந்திருக்கார்.” சொன்னவள், மாயாவிடம் 

 

“உன் பாய் பிரெண்டுக்கு ஒரு காபி உன் கையால வேணுமாம்” புன்னகைத்தவள் சென்றுவிட,

 

“விடுடா. போ வேலைய பாரு, நீயும் போ மாயா” வாணி தாத்தாவுக்கு காபி போட துவங்க 

 

மாயாவோ பைரவிடம் கோவமாக “அதென்ன சொல்ல வந்த?”

 

குழம்பியவன் “எப்போ?”

 

“இப்போ. என்னனு…”

 

“கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லவந்தேன்” தோளை குலுக்கினான்

 

அவனை வெட்டவா குத்தவா என்பதுபோல் முறைத்தவள் “அடேய்!” என்று கத்தியதில் அதிர்ந்த வாணி சக்கரையை சிந்திவிட, பைரவோ அனாயசமாக, “என்ன?” புருவம் உயர்த்த

 

“அப்படி எப்படி ஓகே சொல்லுவ?”

 

“சொன்னா என்ன?”

 

“அதெல்லாம் சொல்லக்கூடாது”

 

“ஏனாம்?”

 

“அவ உனக்கு செட் ஆகமாட்டா’

 

“எல்லாம் ஆவா பாரு அத்தையை அசால்ட்டா கூட்டிகிட்டு போனா. எங்க எல்லாரையும் சிங்கிளா நின்னு சமாளிப்பா. என்னமோ அவதான் எனக்கு சரியா இருப்பாளோன்னு ஒரு எண்ணம் அதுவும் சடான்னா” என்றவனின் குரலில் இருந்த கேலியை உணராதவள்.

 

“உன் தலை! உனக்கு அறிவே இல்லையா பொசுக்கு பொசுக்குன்னு பொண்ணை ஓகே பண்ணுவியா?” அவள் முறைக்க, அவளை மேலும் வம்பிழுக்க நினைத்தவன்,

 

“பின்ன நமக்கானவங்க யாருனு தெரிஞ்சுக்க அவகாசம் தேவைதானே? எனக்கு மானஸான்னு எழுதி இருக்கு போல அதான் பவித்ரா செட் அகல” என்றான் முகைதை பாவமாக வைத்துக்கொண்டு

 

“கேவலமான லாஜிக்! உன்னை போயி அறிவாளின்னு சொன்னேனே உனக்கு மூளை ஒரு ஸ்பூன் அளவுக்கும் இல்ல”

 

“நீ தான் புத்திசாலியாச்சே கடன் கொடுக்கறது” அவன் கிண்டல் புன்னகையில் கோவமானவள்

 

“ஹேய்! இப்போ நான் சொல்றத கேப்பியா மாட்டியா?” பொறுமை இழந்தாள்

 

இருவரின் வாதத்தில், பொறுமை இழந்த வாணி,

 

“ச்சே! என்ன இது? தலைக்கு மேல வேல இருக்கு இப்போ நேரத்தை வீணடிச்சுக்கிட்டு, போடா போ சாஸ்திரிகள் வந்தா குரல் கொடு, அண்ட் நீ இந்த காபீயை தாத்தாகிட்ட கொடுத்துட்டு அங்கேயே கப்சிப்ன்னு உட்காரு. உங்க ரெண்டுபேரு குரலும் கேட்டுது வந்து பிச்சுடுவேன்” அவர் மிரட்டலில் 

 

பைரவை முணுமுணுத்தபடி திட்டிக்கொண்டே மாயா காப்பியுடன் ஹாலிற்கு செல்ல, பைரவோ

 

“என் கல்யாணத்தை பேசினா நேரத்தை வீணடிக்கறதா? நீயெல்லாம் ஒரு தாயா?” வாணியின் கன்னத்தை செல்லமாக குத்தினான்.

 

“இல்ல இப்போ நான் பேய்! போய் வேலைய பாரு” மகனை விரட்டியவர், சமையல் வேலையில் கவனம் செலுத்தினார். 

 

ஒவ்வொரு வருடமும் விஸ்வநாத்தின் நினைவுநாளான்று தானே அணைத்து வேலைகளையும் செய்வதில் எதோ ஆத்ம திருப்தியை உணர்வார் வாணி. வாசுகி குடும்பமும், மார்க் தாத்தாவையும் தவிர மற்ற உறவுகளான விஸ்வநாத்தின் தம்பியோ மற்றொரு தங்கையோ இன்றுவரை வாணியின் வீட்டிற்கு வந்ததில்லை.

அவர்கள் மனதில் வாணியின் மேல் இன்றும்கூட கோவம் நிலைகொண்டிருந்தது.

 

வாணியின் ஆணையை மீறி மாயா பைரவிடம் பேசவில்லை, மார்க் தாத்தா மற்றும் மானஸாவுடன் பேசியபடி இருந்தவள் அவ்வப்போது , தந்தைக்கு திதிகொடுத்து கொண்டிருந்த பைரவை முறைக்கவும் தவறவில்லை.

 

உணவிற்கு பிறகு மாயா முதலில் விடைபெற, வாணி வாசுகியையும் அவர் கணவரையும் அழைத்துக்கொண்டு பேச தன்  தோட்டத்திற்கு சென்றுவிட, மானஸா மார்க் தாத்தாவுடன் செஸ் விளையாட,மற்ற சில வாணிவழி உறவினர்களும் விடைபெற பைரவ் மட்டும் யாருடனும் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட்டான். 

 

நினைவு தெரிந்தவரை தந்தையுடன் கழித்த ஞாபகங்களை அசைபோட்டவன், அவன் தன் பெற்றோருடன் கழித்த சில நிகழ்வுகளை கணினியில் பார்த்தபடி, கண்களின் ஓரம் சிறிய நீர்த்துளியுடன் உறங்கிவிட்டான்.

 

வீட்டிற்குள் நுழைந்த மாயா காரணம் சொல்லாமல் குடும்பத்தினரை  கடிந்துக்கொண்டு கோவமாக தன் அறைக்குள் புகுந்துகொண்டாள். 

 

அவள் தத்துபித்து கோவத்தையும், ஆட்டத்தை பலமுறை பார்த்ததனாலோ என்னவோ யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை, எப்படியும் இரவுக்குள் காரணத்தை சொல்லி மன்னிப்பையும் கேட்பாளேன்று தெரியும்.

 

அறையில் கட்டிலில் கோவமாக அமர்ந்தவள் மனதில் பைரவை திட்டி தள்ளினாள், 

 

‘யார் என்ன சொன்னாலும் ஓகே சொல்லுவியா? டுபுக்கு! நீ CEOன்னு வெளில சொல்லிக்கிட்டு திரியாத, கேவலமா இருக்கும்

 

போ அவளையே கல்யாணம் பண்ணிக்கோ அப்புறம் வந்து குத்துது குடையுதுன்னு சொல்லு மூஞ்சிய ஒடைச்சுடறேன்’ கோவமாக தலையணையை வீசி எறிந்தாள்.

 

வாணி அமைதியாக நாற்காலியில் சாய்ந்தபடி விஸ்வநாத்தின் புகைப்படங்களை ஃபோனில் பார்த்தபடி எதோ சிந்தனையில் இருக்க, “வாணிமா” பைரவின் அழைப்பில் விழிகளை மட்டும் உயர்த்தியவர், மகனை தன்னருகில் அழைக்க

 

“வாணிமா ஒன்னு யோசிச்சுருக்கேன் சொல்லவா?” 

 

பைரவின் தலையை கோதியவாறு “என்னடா?”

 

“அம்மா பேசாம எனக்கு கல்யாணமே வேண்டாம். நீயும் நானுமே ஒருத்தருக்கு ஒருத்தர்இருக்கோம். எதுக்கு இந்த தேவையில்லாத குழப்பம். 

 

முன்ன பின்ன தெரியாத பொன்னும் சரிவரலை, மானஸாவையும் எனக்கு கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்ல, அவளுக்கும் என் மேல அப்படி எந்த எண்ணமும் இல்லை, அவ மாமா தொல்லைதங்கமதான் சரி சொல்லிருக்கா, மார்க் சொன்னார்”

 

பொறுமையாக அவன் சொன்னதை கேட்டவர், எனக்கும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. அம்மாக்கு இன்னிக்கி ஒருநாள் அவகாசம் தரமுடியுமா?”

 

“என்ன வாணிமா நீ, எவ்ளோ வேணுமோ யோசி.சரி நான் இன்னிக்கி உன்கூட இங்க தூங்கவா? ரொம்ப ஒருமாதிரி இருக்கு” 

 

“அப்பாவா மிஸ் பண்றியாடா” மகனின் சிகையை வருடிக்கொண்டிருந்த கை நிற்க, “ம்ம்” என்று மட்டுமே சொன்னவன் இரவு வாணியின் அறையிலேயே படுத்துகொண்டான்.

 

எவ்வளவு புரண்டு படுத்தும் உரக்கம்மட்டும் வருவதாக இல்லை. மாயா தனக்காக காலை அத்தையிடம் வாதித்ததும், வாணியிடமே மல்லுக்கு நின்றதும். மானஸாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிப்பதக சொன்ன நொடிமுதல் பேச்சில் கோவமும் பதற்றமும் கொண்டதையும் எத்தனை முறை அலசியும் அவனுக்கு தோன்றியது ஒன்றே

 

‘ஸ்பேஸை தாண்டி போனது நான் மட்டுமில்ல போல இருக்கே ஆழாக்கு…’ கண்களை மூடிக்கொண்டிருந்தவன் முகத்தில் மெல்லிய புன்னகை,

 

‘லூசு என்னைவிட நீ மோசமா இருக்க போல இருக்கு. உனக்கு நாளைக்கு பேயோட்டினா தான் சரிவரும்’ உறக்கம் அன்று அவனை வஞ்சம் செய்ய, விடிந்ததும் மாயாவை சென்று சந்திக்க கடிகார முள்ளை வேகமாக ஓடும்படி மிரட்டிக்கொண்டிருந்தான்.

 

காலை விடிந்தும் விறுவிறுவென தயாராகி வந்த மகனை சந்தேகமாக பார்த்த வாணி, “மாயா வீட்டுக்கு…” அவர் முடிக்கும்முன்பே, புருவம் உயர்த்தியவன் “அங்க தான் போறேன்னு எப்படி தெரியும்?” அதிசயமாக கேட்க,

 

“நாம கிளம்பலாம்னு சொல்லவந்தேன். இதோ வரேன் என்றவர் எதோ பையை எடுத்துக்கொள்ள”

 

“வாணிமா பசிக்குது, பிரேக்ஃபாஸ்ட் எங்க?”

 

“அதெல்லாம் கீதா ரெடி பண்ணிருப்பாங்க கிளம்பு” என்றவர் அவன் பதிலுக்கு நிற்காமல் முன்னே செல்ல

 

“வாணிமா….மா…நில்லு நீ எங்க வர? நான் அதுகிட்ட பேச போறேன்” அவரை இடைமறித்தான்.

 

“நானும் கீதாகிட்ட பேசப்போறேன். இதோ பக்ஷணம் எடுத்துவச்சேன் கொண்டுபோய் கொடுக்கணும்”

 

“அதுக்கு என்கிட்டே கொடு, நானே கொடுத்துடறேன்”

 

“ஏண்டா நான் வந்தா என்ன?” வாணியின் முறைப்பில், திணறியவன், “ஒன்னும் இல்ல வா” விறுவிறுவென முன்னே நடக்க, புன்னகைத்தபடி வாணி பின்தொடர்ந்தார்.

 

மாயாவின் வீட்டில் நுழைந்த நொடியே, “ஆண்டி அது எங்க?” என்றவன் “ரூம்ல தானே” தானே பதிலும் சொல்லிக்கொண்டு அவள் அறைக்கு ஓடிவிட,

 

“டேய் ரூம் கதவை தட்டிட்டு நீன்னு சொல்லிட்டு போ” 

 

வாணியின் எச்சரிக்கையை காற்றில் விட்டவன், அறைக்கதவை படாரென்று திறந்துகொண்டு உள்ளே செல்ல, மாயாவோ தரையில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

 

அவள் முதுகில் செல்லமாக அடித்தவன் “போதும் தூங்கினது எழுத்துரு தூங்குமூஞ்சி”

 

கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தவள், “டேய் என்ன காலங்காத்தால?” கண்களை திருக்கமுடியாமல் திணற

 

“டைம் இப்போ பத்தாக போகுது, காலங்காத்தாலையாமே. போ பிரெஷ் ஆகு, வாணிமா கிழ வெயிட் பண்றங்க , எனக்கும் பசிக்குது”

 

“என்ன வாணிமா? எதுக்கு?” மாயாவை பயம் தொற்றிக்கொண்டது, முன்தினம் தான் பைரவின் வீட்டில் நடந்ததை சொல்லி பெற்றோரிடம் வாங்கிக்கட்டி கொண்டது மீண்டும் கண்முன் வர,

 

“மறுபடி மொதலேந்தா” கண்களை மூடிக்கொண்டாள்.

 

இருவரும் கீழே இறங்கிய நேரம், மாயாவின் குடும்பத்தினரும் வாணியும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவள் ‘அப்படி வாணிமா போட்டுக்கொடுக்கல’ ஆசுவாசம் அடைந்தாள்.

 

“வாடா நல்ல தூக்கமா?” புன்னகைத்த வாணியின் அருகில் அமர்ந்து கொண்டாள் மாயா.

 

மாதவன் அருகில் பைரவ் அமர்ந்துகொள்ள, மாதவன் மெல்லிய குரலில் “எவ்ளோ சொன்னேன் இப்படி கவுந்துட்டியே மச்சான்” என்று புன்னகைக்க

 

“என்ன?” பைரவ் கேட்கும் முன்பே, “உனக்கு குட்டிப்பிசாசுதான் பொண்டாட்டின்னு எழுதி வச்சுருக்கு யார் மாத்த முடியும்?” மாதவனின் கிண்டலில் அவன் குழம்பி தெளியும் முன்பே, வாணி

 

“டேய் மாயாவை கல்யாணம் பண்ணிக்கிறியா? எங்க எல்லாருக்கும் ஓகே!” என்றவர் மாயாவை பார்க்க, அவ்ளோ அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

 

“வாணிமா ஆர் யு ஓகே?” மாயா கேட்க 

 

“எங்க எல்லாருக்கும் சம்மதம் நீயும் அவனும் சம்மதிக்கவேண்டியதுதான் பாக்கி” மாதவன் பதில் தர

“ஹே சும்மா விளையாடறீங்க தானே?” மாயா அனைவரையும் பார்க்க, புன்னகையுடன் வாணியும் கீதாவும் மறுக்க, பைரவ் முகத்திலிருந்த திகைப்பில், நடப்பது உண்மை என்று உணர்ந்துகொண்டாள்.