cn- 21 final

நிலவு – 21

வானவில்தானே நாம் சொந்தங்கள்…

வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்!

ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்…

யாரிடம் சேரும் உள்ளங்கள்!

வலை தேடி நீயே நீயே அதில் வீணாக

விழாதே! நீ விழாதே!

 

சிந்துவும் பாஸ்கரும் தங்களின் முடிவுகளை தெளிவாகக் கூறிவிட்டு, அன்றே சென்று விட்டனர். அவர்களின் முடிவில் சற்றும் மனம் ஒப்பாமல் பல்லைக் கடித்த தயாவின் வாயில் அறைபட்டவள் மிதுனா மட்டுமே!

அவளுக்கும் கணவனின் அலும்பல்களைப் பார்த்து மனதினில் அப்படி ஒரு கோபம். கணவனின் அர்த்தமில்லாத பொருமலுக்கு சுமைதாங்கியாய் மாறிப் போனதில் அத்தனை சோர்வும் சேர்ந்து கொள்ள, யாரிடமாவது சொல்லி, மனம் விட்டு அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் யாரிடம் சொல்வாள்?

மாமியார் தோள் சாய்த்துக் கொள்வார்தான் என்றாலும், மகன் மீது அவர் கோபம் கொள்ள, தான் காரணமாகி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள் மிதுனா.

தன்னைத்தானே தேற்றிக் கொள்வதில் ஓரளவு முயன்று அதில் வெற்றியும் கண்டு விட்டாள். அதன் பலன் தயாவின் ஒவ்வொரு சுடுசொல்லிற்கும் தகுந்த பதிலடி கொடுத்து, அதில் தன் அழுத்தத்தை மீட்டுக் கரை கண்டாள்.

கணவனின் கோபத்திற்கு சளைக்காமல் பதில் பேசி வர, இரண்டு நாட்களாக அவளுடன் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு நின்றான் தயானந்தன்.   

காலை உணவு வேளை… சாப்பாட்டு மேஜையில் கடுகடுத்த முகத்துடன், எதையோ யோசித்தவாறே உணவினை அளந்து கொண்டிருந்தான் தயா. மூன்று நாட்களாக கிட்டத்தட்ட இதே பாவனையில், வீட்டிலும் வெளியிலும் வலம் வருகிறான்.

“ஆனந்தா! சாப்பிடுற நேரத்துல மனச அலைபாய விடக்கூடாது. நீ என்ன சின்ன குழந்தையா? ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க…” மரகதம் தன்னால் முடிந்த அளவு மகனின் கவனத்தை திசை திருப்பிடும் முயற்சியில் இறங்கினாலும், அதற்கான பலன் என்னவோ பூஜ்யம்தான்!

“தனியா வாழ, தைரியம் இருக்குறவளுக்கு, கொஞ்சம் விட்டு கொடுத்துட்டு போகணும்னு, ஏன் தோண மாட்டேங்குதுமா?” மகன், தனது சந்தேகத்தை நூறாவது முறையாக கேட்க, இதற்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக நின்றார் மரகதம்.

“தம்பி… இப்போதைக்கு உன்னோட கவனம் எல்லாத்தையும், உன் பொண்டாட்டி மேலயும், பொறக்கப் போற உன் குழந்த மேலயும் வை… எல்லாம் தானா தெளிஞ்சு வருவாங்க” என்ற தாயின் பதிலில் அவன் சமாதானம் அடையவில்லை.

“இவங்களுக்கு பார்த்துதானே, என் கல்யாணமே நடந்தது.  அதையாவது நினைச்சுப் பார்த்திருக்கலாம்” ஆதங்கமாய் தயா வாயை விட,

“அவங்கள மனசுல வச்சு, நம்ம வாழ்க்கைய ஒப்பிட்டு பார்க்கிறத விட்டுட்டுங்க…” என்ற உஷ்ணப் பேச்சுடன் வந்தமர்ந்தாள் மிதுனா.

“உனக்கென்ன, நீ ஈஸியா சொல்லிடுவ? தனியா நிக்கிறது  என் தங்கச்சியாச்சே..!” தங்கையின் மீதான அதிக கரிசனத்தில், தயா கோபத்தில் முட்ட,  

“இப்போ என்ன, நாமளும் பிரிஞ்சுடலாமா? நானும் தனியா நின்னா உங்களுக்கு சமாதானம் ஆகிடுமா?” தணலை கொட்டியது போல் படபடப்புடன் மிதுனா பதிலடி கொடுத்தாள்.  

எத்தனை பெருமூச்சுக்கள் எடுத்தாலும், கணவன் சொன்னதை தன்னால் சமன் செய்ய முடியாது என்பதை அறிந்தவள், கிஞ்சித்தும் பாவம் பார்க்காமல் அவனை முறைக்கும் பார்வையாலேயே சுட்டெரித்துக் கொண்டிருந்தாள்.

“இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசுறத, எப்ப விடப் போற மிது? நான் எது சொன்னாலும் தப்பாவே அர்த்தம் பண்ணிக்கிட்டா, நான் என்ன செய்றது?” சலிப்பு மேலிட்ட குரலில் தயா இறங்கி வர,

“மனசுல இருக்குற குழப்பத்த, தீர்த்துக்க வழி தெரியாமதான் தனியா இருக்குறேன்னு முடிவெடுத்து போயிருக்காங்க… தெளிவான பிறகு, தானா ஒண்ணு சேருவாங்க. இத நீங்கதான் தப்பா புரிஞ்சு, எங்கள கேள்வி கேட்டே கொல்றீங்க… இன்னும் ரெண்டு நாள் இப்படியே பேசிட்டு இருந்தா, சிந்து எடுத்த முடிவ, நானும் யோசிக்க வேண்டி வரும்” என்றவள், மரகதத்திடம் திரும்பி,

அத்தை… ஊருக்கு ஃபோன் பண்ணி வண்டி அனுப்பச் சொல்லுங்க… அங்கேயே போயி பிரசவம் பார்த்துக்கலாம். சிந்துவுக்கு துணையா இருந்த மாதிரியும் ஆச்சு…” கணவனை கடிந்து கொண்டே பேச்சினை முடித்தாள் மிதுனா.   

“ஆமாம்மா… எனக்கும் அதுதான் நல்லதுன்னு தோணுது. இவன் கோபத்தை கூட சமாளிச்சுடலாம். ஆனா, பாசத்துல கிறுக்குத்தனமா புலம்புறத, காது குடுத்து கேட்க முடியல! இவன் குழப்பிக்கிறதும் இல்லாம, எங்க நிம்மதியையும் சேர்த்து காவு வாங்கிட்டு இருக்கான்” அலட்டலான பேச்சில் மருமகளுக்கு தனது முழு ஆதரவை கொடுத்தார் மரகதம்.

“கூட்டணி பலமாதான் இருக்கு… கிராமத்துக்கு போயி பாருங்க… நம்ம வீட்டு பொண்ணு தனியா நிக்கிறதுக்கு, யார் யார் என்னென்ன பேசுறாங்கன்னு, அப்போ புரியும்!” பல்லைக் கடித்துக் கொண்டே தயா பேச,  

“போதும் நிறுத்துடா! ஊரு உலகத்துக்கு பார்த்து, இன்னும் எத்தன காலம்தான் மனசுக்கு ஒட்டாத வாழ்க்கைய வாழச் சொல்ற? எனக்கும் அவங்க முடிவு ஆரம்பத்துல பிடிக்கலதான். ஆனா, இப்போ யோசிக்கிறப்போ இதுவும் நல்லதுக்குதான்னு சொல்வேன். பக்குவம் இல்லாதவங்க, சின்ன வயசு, அவங்களா தெளிஞ்சு வரட்டும். நீ உன் குடும்பத்த பாரு தம்பி..!” கோபத்துடன் ஆரம்பித்து, மகனின் தலையை தடவி வாஞ்சையுடன் முடித்தார் மரகதம்.

“ம்‌ம்… நல்லது நடந்தா சரி…” என தாயின் பேச்சை உள் வாங்கியவன், வேலைக்கு கிளம்பி நிற்க,

“இன்னைக்கு மிதுனாவ செக்கப்க்கு கூட்டிட்டுப் போகணும் தம்பி… நீ நேரா ஆஸ்பத்திரிக்கு வந்திடுறியா?”

“அங்கே போனதும் ஃபோன் பண்ணுங்கம்மா, கிளம்பி வர்றேன்..!” என்றவன் மனைவியின் முகம் பார்க்காமலேயே புறப்பட்டு விட்டான்.

போடா போ… இந்த வீட்டுல நீ மாமியாரா? உங்கம்மா மாமியாரான்னு தெரியல? இனிமேலும் உன்னை மலையிறக்கி, புரிய வைக்கிற பொறுமை எனக்கில்ல! எக்கேடோ கெட்டுப் போ…” மிதமிஞ்சிய அலுப்புடன் கணவனை மனதில் தாளித்து கொண்டாள் மிதுனா.

ஆசை வார்த்தைகள் பேசத் தேவையில்லை, கனிவான பார்வைக்கு கூடவா பஞ்சமாகப் போய் விடும்! அதுவும் இப்போதிருக்கும் நிலையில், அவளின் மனம் வெகுவாக கணவனின் ஆறுதல் மொழிகளை எதிர்பார்த்து ஏங்கியிருக்க, அவனோ தனது மனக் கலக்கத்தை எல்லாம், இவளின் மேல் இறக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

தன்னைப் பொருட்படுத்தாதவனை, இவளும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. உன் உடன் பிறப்புக்கள் உனக்கு முக்கியம் என்றால், எனக்கு என் பிள்ளையும் என் உடல்நிலையும் முக்கியம் என்கிற ரீதியில், கணவனின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல், தன்போக்கில் இருக்க பழகிக் கொண்டாள்.

“டெய்லி வாக்கிங் கூட்டிட்டுப் போங்க… மனம் விட்டு நிறைய நல்ல விஷயங்களை பேசுங்க… முடிஞ்ச அளவுக்கு வேலை பார்க்கட்டும், எப்போ வலி வந்தாலும் கூட்டிட்டு வாங்க…” என்று தயாவிற்கு ஆலோசனைகளை கூறியவாறே, மிதுனாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து முடித்தார் பெண் மருத்துவர். 

இவன் கூட நான் வாக்கிங் போனா, ஹை பீபீ வந்து, ஐசியூ-லதான் அட்மிட் ஆகணும். என்கூட சிரிச்சு பேசிட்டுதான் வேற வேல பார்க்கிறவனாட்டம், சரிசரின்னு மாடு மாதிரி தலையாட்டிட்டு நிக்கிது, முசுடு வாய்க்குள் வசை பாடினாள் மிதுனா.

“வெளியே வந்தும், உன் வாயை குறைக்க மாட்டியா? டாக்டர் முன்னாடியே அப்டி சிடுசிடுக்கிற! என்ன பிரச்சனைடி உனக்கு?” தயா அங்கேயும் தர்க்கத்தை ஆரம்பிக்க,

“ம்ப்ச்… நீங்க வந்த வேலை முடிஞ்சது, கிளம்புங்க… இங்கே இருந்து எங்க பீபீய ஏத்தாதீங்க” அசட்டையுடன் பேசியவள், “அத்தை, நாம போலாம்..” என்று ஒலா காரை புக் செய்ய, அதுவும் இரண்டு நிமிடங்களில் வந்தது.

மரகதம் இவர்களின் இடையில் மாட்டிக்கொண்டாலும் மருமகளுக்கு பக்கபலமாகவே நின்றுகொள்ள, அதுவே மிதுனாவிற்கு புதுத் தெம்பை அளித்தது.

இரவு வீடு திரும்பிய தயா, உணவைப் பரிமாறிய மரகதத்திடம்,

“உன் மருமக சாப்பிட்டாளாமா? வாக்கிங் போனாளா?” என அக்கறையோடு விசாரிக்க,

“இவ்வளவு கேக்குறவன், சீக்கிரம் வந்து கூட்டிட்டு போகலாமே தம்பி..! நீ செய்றது கொஞ்சமும் சரியில்ல…  பொண்டாட்டிய இந்த சமயத்துல சந்தோஷமா வச்சுக்கோப்பா… ரெண்டு உசுரா இருக்குறவகிட்ட முகத்தை திருப்பிக்க எப்படிய்யா மனசு வருது?” மகனின் போக்கு பிடிக்காமல் அவர் கேட்க,

“பதிலுக்கு அவ எதுவுமே பேசுறதில்லையாம்மா? நான் ஒண்ணு பேசினா, அவ பத்தா திருப்பி குடுக்குறா! நீயும் பார்க்கிறதானே!”

“அது வரைக்கும் எனக்கு சந்தோஷம்டா தம்பி… உன் பேச்சுக்கு மனசொடஞ்சு போய் உக்காரமா, தனக்குதானே தைரியபடுத்திக்கிட்டு நிக்கிறாளே, அதுவே பெரிய விஷயம்” என்று மருமகளை பாராட்டிக் கொண்டவர், மகனின் செயலில் தனது அதிருப்தியை வெளிப்படையாக சொல்லி விட்டார்.

“ஆம்பளப் புள்ள ஆசையில, மூணாவது குழந்தைக்குதான் உங்க அப்பாவும், அப்பத்தாவும் என்கிட்ட, கடுசா நடந்துகிட்டாங்க… நீ என்னடான்னா, தலைச்சன் பிள்ளைக்கே, உன் பொண்டாட்டிய இந்த பாடு படுத்துற… இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு நினப்பு இருந்தா, அத இப்பவே அழிச்சிடு…” சாடிக் கொண்டே, அவரின் அனுபவத்தை மகனிடம் சொல்ல,

“என்னம்மா சொல்றீங்க? அப்பாவும் சேர்ந்தா உன்னை திட்டினாரு?” தன்னை கடிந்து கொண்டதையும் கவனத்தில் கொள்ளாமல், அதிர்ச்சியுடன் கேட்டான் தயா.  

“அவங்கம்மா பேச்சுக்கு அவரும் என்ன பண்ணுவாரு? ஆம்பளப் புள்ள பொறக்கலன்னா, என்னை தள்ளி வைச்சுட்டு, இன்னொரு பொண்ணை கட்டிக்கணும்னு உங்கப்பாகிட்ட சத்தியம் வாங்கிட்டுதான், என் மாமியார், நான் மூணாவது புள்ளைய பெத்துக்கவே சம்மதிச்சாங்க… நல்லவேள, நீ பையனா பொறந்து என்னை காப்பாத்தின… இல்லன்னா, இந்நேரம் நான் காணாம போயிருப்பேன்” என்றவரின் கண்களில் அந்த நாளின் வலியும் வந்து சென்றது.

“இதெல்லாம் ரொம்ப அநியாயம்மா… உன் தப்புன்னு எதுவுமே இல்லையே! எப்டி உன்னை தள்ளி வைக்க நினைக்கலாம்? நீ கேட்டிருக்க வேண்டியதுதானே?” தாய்க்கு தலைமகனாய் வெகுண்டு கேட்க,

“அவ்வளவுக்கு பேச விட்றவங்களா அவங்க! அதுபோலதானே நீயும்..! சரியான காரணத்த வச்சுக்கிட்டா, உன் பொண்டாட்டிக்கிட்ட மூஞ்சிய தூக்குற…

மாட்டுக்கு கொம்பு சீவுற மாதிரிதான், ஆம்பளைக்கு புருசங்கிற பதவியும்… தண்ணி காட்டுறவனுக்கே, கொம்பால முட்டிக் காயப்படுத்துற மாதிரி, உங்க பிள்ளைய சுமந்துட்டு நிக்கிறவங்கள, குத்திப் பேசியே மனச ரணப்படுத்துவீங்க” என்று தன் போக்கில் அவர் சொல்லிக் கொண்டே தொடர்ந்தார்.

“பிரசவ நேரத்துல, பொறந்த வீட்டு சொந்தம் பக்கத்துல இல்லாம, பொண்ணுங்க மனசு படுற கஷ்டத்த, அனுபவிச்சவடா நானு… உடம்பும் மனசும் அந்த நேரத்துல தவியா தவிச்சுப் போயிரும்.

புருஷன் அனுசரனையா இருந்தா, எல்லா கஷ்டத்தையும் கடந்து, மறுஜென்மம் எடுத்திடலாம். உங்க அப்பா செஞ்ச தப்ப, நீயும் செய்யாதே தம்பி… என் மருமக மனச வாடவிடாம பார்த்துக்கோயா” கரகரத்த குரலில் தன் விருப்பத்தை, வேண்டுதலாக மரகதம் சொல்ல, தயானந்தன் அரண்டு விட்டான்.

“ம்மா… இப்படிதான் இருக்கணும்னு அதட்டி, கண்டிச்சு சொல்லும்மா… அத விட்டுட்டு, என்கிட்ட நீ கெஞ்சிட்டு நிக்கலாமா? உன் மருமக பத்தின கவலைய விடு, நான் கவனிக்கிற கவனிப்புல, பத்து புள்ள பெத்துக்கோ ராசான்னு நீயே சொல்வ பாரு! நான் உன் புள்ளம்மா…” என்றவன் தாய்க்கு ஆறுதல் கூறி, அவரை உறங்க அனுப்பி வைத்தான்.

தாயின் அறிவுரைக்கு பிறகு, வீட்டு ஹாலில் அமர்ந்து, தன்னைதானே எடை போட ஆரம்பித்தான் தயானந்தன். சமீப நாட்களாக மனைவியினிடத்தில், தான் நடந்து கொண்டதை எல்லாம் நினைத்துப் பார்க்க, தன்மேல் அத்தனை கடுப்பு வந்தது.

அதிலும் மரகதம் தனக்கு நேர்ந்ததை எடுத்துச் சொல்லி, அப்படி இருந்து விடாதே என அறிவுரை கூறியதை, நினைத்தால் மனம் ஆறவில்லை அவனுக்கு.  

என்ன சொல்லி அவளை சமாதானம் செய்வது? எந்த முகத்தோடு மன்னிப்பு கேட்பது என்ற நினைவே பெருத்த சங்கடமாய் இருக்க, மனம் முழுவதும் மனைவி எத்தனை பாடுபட்டாளோ என்ற வேதனையில், அப்படியே தலை பிடித்து அமர்ந்து விட்டான்.

ஒரு வேகத்தில், மனைவியின் நிலையை கருத்தில் கொள்ளாமல் கோபத்தில் பேசிவிட்டாலும், அது தப்பென்று புரியும் போது, தன்னைதானே கீழாய் நினைத்து வெட்கிக் கொள்ளும் மனோபாவம் வந்திருந்தது.

ஒவ்வொரு முறை கோபப்படும் பொழுதும், தன்னாலான முயற்சிகள் செய்து, அவனை திசை திருப்பும் மனைவி, இம்முறை ஒன்றும் செய்யாமல் இருப்பதிலேயே அவளது கோபத்தின் தன்மை புரிந்து போனது. 

மனதிற்குள் உழன்று கொண்டிருந்தால், சித்தம் கலங்கி விடுமோ என்ற அச்சம் வர, மனைவியின் அருகாமை மட்டுமே, தன்னை மீட்டெடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், அவளை நாடிச் சென்றான்.

மனைவி எந்த  தண்டனை கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனம் பக்குவப் பட்டிருக்க, அந்த நினைவுமே மனதிற்கு இன்பத்தை கொடுத்தது.

உன்னாலே மெய் மறந்து நின்றேனே…

மை விழியில் மையலுடன் வந்தேனே…

இடைவிடாத நெருக்கங்கள்…

தொடருமா உயிரே..!

மொழியில்லாமல் தவிக்கிறேன்…

மௌனமே இங்கே…

அவர்களின் அறைக்கு சென்று, மனைவியின் அருகில் படுத்துக் கொள்ள, சத்தம் கேட்டு விழித்தவள் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்

“மிது…!” சாதாரணமாய்,

“மித்துகுட்டி…” கிசுகிசுப்பாய்,

“மிதுனா…” கொஞ்சம் சத்தமாய், அழைத்துப் பார்த்தவன், தன் விரலால் அவள் முகத்தில் கோலம் போட,

“ம்ப்ச்… நேரங்கெட்ட நேரத்துல வந்து, இதென்ன தொல்லை?” என கைகளை தட்டி விட்டவள், மெதுவாக எழுந்து, கணவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அவள் முதுகைப் பார்த்தவன், பின்பு தாள முடியாமல், அவளின் பின்புறம் இருந்து அணைத்துக் கொள்ள, மனைவியின் கையும் தானாக மேலெழுந்து கணவனின் கையை பற்றி, மேலும் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டது.

“ஏன் மிது பிடிக்கலையா? சாரிடி” கூறியபடியே கழுத்தில் மென்மையாக தன் இதழைப் பதித்து, முகத்தை புதைத்துக் கொண்டு ஆழ மூச்செடுக்க,

“இது என்ன புது அவதாரம்? அதுவும் இவ்வளவு மெதுவா?” கணவனின் தீண்டலில் இருந்த மென்மையை சுட்டிக் காட்டியபடியே கேட்டாள்.

இதுவரையில் கணவனின் செயல்பாடுகளை எல்லாம் அதிரடிகளாக, வன்மையாக மட்டுமே அனுபவித்தவளுக்கு  இது புதுவித அனுபவமாகவே இருந்தது.  

“இது உனக்கு பிடிக்குமா மித்துகுட்டி?” என உல்லாசமாய் கேட்டவன், அடுத்தடுத்த அச்சாரங்களை மனைவியின் கன்னங்களில் மென்மையிலும் மென்மையாக பதியமிட்டான்.

கணவனின் பாரமுகத்தில் அவனோடு சரிசமமாக பதிலடி கொடுப்பதில் சோர்ந்து போயிருந்தவளுக்கு அந்த அனுசரணை தேவைப்பட்டதோ?

“இப்படி கேக்குறதும் புதுசா இருக்கே? என்ன ஆச்சு என் கோப மகாராஜாவுக்கு…!” நக்கலில் இறங்கியவள், அவன் கைகளை  விலக்கி விட,

“ரொம்ப ஓட்டாதே மிது! தப்புதான், மறந்திடேன் பிளீஸ்” மருகல் இல்லாத வெளிப்படையான மன்னிப்பை வேண்ட,

“இதப் பாருடா… சார் இவ்வளவு நல்லவரா மாறிட்டாரு… எந்த பூதம் வந்து மந்திரிச்சு விட்டுச்சு” நமட்டுச் சிரிப்பில் அவனைச் சீண்டினாள்.

“ம்ம்… பூதம் இல்லடி, உன் மாமியார்தான், கன்னத்துல அடிச்சு சொன்னா தெளிய மாட்டேன்னு, நெஞ்சுல அடிச்சு புரிய வச்சுட்டாங்க…” என்று முகத்தை சுருக்கிக் கொள்ள,

“அடப்பாவி! அத்தைக்கிட்டயும் கோபப்பட்டீங்களா தயா? என்ன தைரியம் உங்களுக்கு?” எனப் பல்லைக் கடித்தவள், அவனை அடிக்க தலையணையை தேடினாள்.

“இந்தா பிடிச்சுக்கோ… மெதுவா எழுந்திருச்சு அடி” என்று தலையணையை மனைவியிடம் தூக்கிக் கொடுத்தவன் அவள் எழுந்து கொள்ளவும் உதவி செய்ய, மிதுனாவிற்கு மூச்சடைத்துப் போனது.

என்ன வம்ப வளர்த்து வைக்கப் போறானோ?’ என மனதில் நினைத்ததை, அவனிடத்தில் கேட்கவில்லை.

“ரெண்டு பேரும் சேர்ந்து, என்னை ஒத்தையில தவிக்க விட்றீங்கடி…” என்று அவளைப் பார்த்து கணவன் வெகுவாக குறைபட,

“பின்ன… முசுடு ஆபீசரா, முண்டாசு கட்டிக்கிட்டு இருந்தா, கோவில் கட்டி கும்பாபிஷேகமா பண்ணுவாங்க?” என சிடுசிடுப்பாக பேசியபடியே இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு அமர்ந்தாள்.

இரண்டு கால்களிலும் அதிக வீக்கம் தென்பட, “சுடு தண்ணி ஒத்தடம் குடுக்கவா மிது? வீக்கம் குறையும்” என்று தயா கரிசனமாக கேட்க,

“உங்க அக்கறைய காட்ட நேரங் காலமில்லையா? நடுராத்திரி தயா… ஒழுங்கா படுங்க” என்றவள் மறக்காமல், தலையணை கொண்டு இரண்டு அடிகளை கொடுத்து விட்டே, தலையை சாய்த்துக் கொண்டாள்.

“ரொம்ப கஷ்டமா இருக்கா மிது?” மனைவியின் முகம் பார்த்து, கேட்டபடியே இவனும் படுக்க,

“எத கேக்கிறீங்க தயா?” கண்கள் தூக்கத்தை தழுவிக் கொள்ள நினைத்தாலும் கணவனின் ஆறுதலான பேச்சில் அமைதியாகப் பேசத் தொடங்கினாள்.

“என்கூட வாழ்றது, நான் கோபமா பேசுறது இதெல்லாம்தான் கேக்குறேன், கஷ்டமா இருக்கா மிது?” பரிதவிப்புடன் கேட்டவனின் கேள்வியில்,

கண்களை விரித்தவளுக்கு தூக்கம் தொலை தூரம் ஓடிப் போனது. மனக்குழப்பத்தில் இவன் அதிகமாய் தவிக்கிறான் என்பதை உணர்ந்தவள்,

“என்ன ஆச்சு உங்களுக்கு? யார் என்ன சொன்னா?”

“கேட்டதுக்கு பதில் சொல்லு, மிது!” என கணவன் அடம் பிடிக்க, அவன் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவள்,

“நான், எனக்கு பிடிச்ச வாழ்க்கைய, எனக்கு பிடிச்சவரோடத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன், இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” தெளிவான பதிலை, பாட்டாக பாடி முடித்தாள்.

“நீங்க இப்போ எல்லாம் எஃப்‌எம் போடுறதில்ல… அதான் தேவையில்லாத சந்தேகம் வந்து, இல்லாத மூளைய சொறிஞ்சு வைக்குது” என்று கிண்டல் செய்ய, அதனைக் கண்டு கொள்ளாமல்,

“உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா?” என நம்பாத பாவனையில், ஆரம்பித்த கேள்வியில் மீண்டும் வந்து நின்றான் தயா.

“இதுல பொய் சொல்லி என்ன கிடைக்கப் போகுது? நெஜமாவே பிடிச்சிருக்கு. ஆனா, அப்பப்போ உங்க கோபத்தோட மல்லுக்கட்ட வேண்டியதா இருக்கு என்று முகத்தை சுருக்கியவள், பின் தனது மேடிட்ட வயிற்றைச் சுட்டிக்காட்டி,

“இப்போ இது வேறயா? கொஞ்சமில்ல நெறையவே  கஷ்டமா இருக்கு” என தன் மனதில் உள்ளதை மறைக்காமல் கூறி முடிக்க, அவள் உள்ளங்கைகளை தன் கைகளுடன் அழுத்திக் கொண்ட தயா,

“நான் பெரிய முட்டாள்… முடிஞ்சா நான் பேசின எல்லாத்தையும் மறந்து மன்னிக்கப் பாரு, சாரிடா மித்துகுட்டி” உணர்வு பூர்வமாய் மன்னிப்பை வேண்ட, மனைவிக்கோ சகலமும் உறைந்து போனது.

“நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி தயா? வாழப் போறது ஒத்த வாழ்க்கை. அதை சந்தோஷமா, வெளிப்படையா  வாழணும்னு நினைக்கிறேன். அதான் நீங்க எது சொன்னாலும், அத மனசுல பாரமா ஏத்திக்காம, நானும் வெளியே கொட்டிட்றேன்..!” என்றவள் விளக்கம் கூற, கேட்டவனின் உடல் மொத்தமும் சிலிர்த்துக் கொண்டது.  

உடனே பதில் சொல்லாது, அவளை உற்று நோக்கியவன்,

“நான் சொன்னதை எல்லாம் மனசுல வச்சுட்டு, என்னை குத்திக்காட்டாம இருக்கிற பெரிய மனசு, உன்கிட்டதான் இருக்கு மிது!

நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புதான். உணர்ச்சி வேகத்துல அது புரியல, ஆனா என் அம்மாவுக்கும் இதே நிலமைன்னு நெனைக்கும் போதுதான், எனக்கே நான் செஞ்ச தப்பு உறைக்குது” என்று உணர்ந்து பேசியவன், மரகதம் தன்னிடம் சொன்னவற்றை பகிர்ந்து கொண்டான்.

“வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் கத்துக் குடுத்திருக்கு மிது! நான் வளர்ந்தது, கடந்து வந்தது எல்லாம் சேர்த்து, இப்படிதான் இருக்கணும்னு சொல்லிக் கொடுத்திட்டு  போயிருக்கு. அதுல கொஞ்சம் மாறுபடும் போது, என்னை அறியாம, உன்னை நான் காயப்படுத்துறேன்” என்று தத்தளித்தவனை அணைத்துக் கொண்டு, ஆறுதல் கூறிட துடித்தாள் மிதுனா.   

“உன்கூட வாழுற இந்த வாழ்க்கை பல புது அனுபவங்கள தருது. அத சொல்ல எனக்கு இந்த காலம் போதாது மிது!”  என்று சொன்னவனின் பளபளத்த கண்களில் ஆனந்தக் கண்ணீரின் நீரோட்டம் தெரிய,

மிதுனாவிற்கு, இந்த உணர்வை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. இத்தனை நாள் திருமண வாழ்வில், முதன்முறையாக கணவன் தன்னிடம் மனம் திறந்து பேசுவதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

இவன் என் கணவன், இவனது பாசம் மட்டுமல்ல கோபமும் கூட, என்னைத் தாண்டி வேறொருவரிடம் செல்லாது என்ற கர்வம் மனதில் ஏற, முன்பெல்லாம் இருந்ததை விட இப்பொழுது இன்னும், மிக அதிகமாய் கணவனை பிடித்துப் போனது. 

“இது போதும்… இப்போ இருக்குற வாழ்க்கைய உன்கூட சந்தோஷமா, அதோட போக்குல வாழணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் மனைவியின் முகம் பார்க்க, அவளும் பெருமிதமான புன்னகையுடன் அவனை பார்த்தாள். 

“நான் ரொம்ப லக்கி தயா… எந்த நிலையிலயும் நெஞ்சுல வச்சு தாங்குற நீங்க, என் பக்கத்துல இருக்கும் போது, வேற எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்ல… நம்ம லைஃப் எப்பவும் சந்தோஷமா இருக்கப் போகுது. அந்த நம்பிக்கைய நீங்க எனக்கு குடுத்திட்டீங்க. நான் நானா, உங்க கைகோர்த்துட்டு வாழ்க்கை முழுசும் வரப்போறேன்” என்று முகம் மலர்ந்து சொல்லிய விதத்தில் தயா பூரித்துப் போனான்.

ஒரு ஆண்மகன் தன் இணையிடம் எதிர்பார்ப்பதும்  இதுதானே! அவனின் இனிய நிலவு என்றென்றும் இனிக்கும் விழுதுகளைக் கொடுக்கும் சர்க்கரை நிலவேதான் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்வுப் பூர்வமாய் அறிந்து  கொண்டான்.

இனி இந்த உணர்தல் தினந்தோறும், அவனுக்கு புதுப்புது சுவையான அனுபவங்களை அள்ளி வழங்கும் என்பதில் ஐயமில்லை.  

அவன் பதிலே பேசாது இருக்க, மிதுனா என்னவென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க,

“என் சக்கரகட்டிடி நீ..!” என்று அவனுக்கே உரிய வசீகரிக்கும் புன்னைகையுடன் சொல்லிட, அதில் விரும்பியே மயங்கிப் போனாள்.

எப்பொழுதும் அவளை கொஞ்சிக் கொள்ளும் அந்த பேச்சும், அவனின் சிரிப்பும், சொல்லாத ஆறுதல்களை எல்லாம் சொல்லி அணைத்திட, அர்த்தம் பொதிந்த மென்னைகையில் கணவனின் தோள்களில் அடைக்கலமானாள் அவனின் சர்க்கரை நிலவு…

பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்…

கண் மூடிப் பார்த்தேன் எங்கும் இன்பம்…

அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்…

அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்…

இன்றைக்கும் என்றைக்கும்

நீ எந்தன் பக்கத்தில்…

இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்…

மெல்லிய நூலிடை வாடியதே!

மன்மத காவியம் மூடியதே!

அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்

அன்பென்னும் கீர்த்தனை பாடியதே!

         *********************************************************************

 

இரண்டு வருடங்கள் கழித்து….

தயா, தனது இரண்டு வயது மகன் யதுநந்தன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நிற்க, மிதுனா, தமிழின் மகள் ஒருவயது ஸ்ருத்திகாவின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாள்.

“ஓடாதே குட்டிமா..! கீழே விழுந்துடுவ… டொம் ஆகிடும், பாப்பாவுக்கு பெரிய ஆஆ வந்திடும்” என்று குழந்தையின் பாஷையில் பயம் காட்ட, அந்த செல்லச்சிட்டு அத்தையின் கட்டளையை காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது அண்ணன்களின் பின்னால் தளிர் ஓட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

நான்கு வயது விபாகரனின் கார் டூர்ர்ர்ர் என்று முன்னே செல்ல, அதற்கு சளைக்காமல் யதுவின் ஹெலிகாப்டர் சொய்ங் என்று  மேலே பறந்தது. பெண் குழந்தையின் கைகளில் பொம்மை ஒன்றைத் கைகளில் திணிக்க, அதனை தூர எறிந்தாள் குட்டிப் பெண்.

“மாப்ளே! உன் பொண்ணு வீராங்கனைதான். நல்லா குறி பார்த்து அடிப்பா போலயே…” தயா ஆரம்பிக்க,

“அவள வருங்கால ஐபிஎஸ்‌-ஸா வளர்க்கப் போறேன் மச்சான்! இப்போ இருந்தே அதுக்கு ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ணிட்டேன்…” பெருமையாகச் சொன்னான் தமிழ்செல்வன்.  

“அது எப்படி மாப்ளே? எனக்கும் சொல்லு… நானும் என் பையனுக்கு ஐஏஎஸ் ட்ரைனிங் குடுக்க, ட்ரை பண்ணி பார்க்கிறேன்” விடாமல் வம்பு பேச ஆரம்பித்திருந்தார்கள் இருவரும்.

“எனை நோக்கிப் பாயும் பூரி கட்டையை, கேட்ச் பண்றது எப்படினு, இன்னைக்கு காலையில கூட பிடிச்சு காட்டுனேன் மச்சான்…” சட்டை காலரை உயர்த்திக் கொண்டு தமிழ் சொல்ல,

“உயிர் தப்பிச்சது, உள் காயம் இருக்கோ, அண்ணா….” சந்தேகமாய் மிதுனா கேட்க,

“சேச்சே… சேதாரம் இல்லாம அடி வாங்குறது எப்படினு, என் மச்சான், எனக்கு அழகா சொல்லிக் குடுத்திருக்கான்… அதுல பொழச்சு வந்திட்டேன் தங்கச்சி..! உனக்கு சொல்லிக் குடுக்கலையா?” என்று மிதுனாவைப் பார்த்து கேட்டவன், பின் தயாவிடம் திரும்பி,

“ஏன் மச்சான், என் தங்கச்சிக்கு அநியாயம் செய்றத, நீ இன்னுமா விடல?” என்று கேட்ட தமிழை வெட்டவா குத்தவா என்று முறைத்தான் தயா.

“அவர் ஒழுங்கா பேசிச் சிரிச்சாலே, சென்னையில வந்த புயல் கரைய கடக்காது… இதுல எனக்கு நல்லது சொல்லிக் குடுத்திட்டாலும்…” என்று மிதுனா நொடித்துக் கொள்ள, அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

விருப்பாச்சி கிராமத்தில் தயானந்தனின் வீட்டினில் அமர்ந்து கொண்டுதான் இந்த சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது. தமிழ்செல்வனின் குடும்பத்தோடு, மரகதத்தின் வாரிசுகள் அனைவரும், வீட்டினை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர்.

வெளிக்கட்டு, முற்றம், உள்கட்டு, அதனை தாண்டிய தனித்தனி அறைகள் என அனைத்தும் பழமையின் பொக்கிஷங்களாக, கலை நயத்தோடு புதிய பொலிவுடன் அழகாக மிளிர்ந்தது.

வீட்டிற்கு பின்னால் இருந்த தோட்டமும் நன்றாகப் பரிமாரிக்கப்பட்டு பல விதமான பழ மரங்களும், செடி கொடி பூ வகைகளும் வளர்க்கப்பட்டு, அந்த இடமே பசுஞ்சோலையாக காட்சி அளித்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்ட படப்பிடிப்பு நிறுவனம், தனது தயாரிப்பை நிறைவு செய்திருக்க, அதில் கடன் முழுவதும் கழிந்து, கணிசமான தொகையும் கைகளில் வந்திருந்தது.

பின்னோடு அடுத்த நிறுவனம், அதே போன்ற படப்பிடிப்பிற்கு கேட்டுவர, தவிர்க்க இயலாமல், சற்றுக் கூடுதலான தொகையில், மூன்று வருடத்திற்கு புதிய ஒப்பந்தத்திற்கு சரியென்று சொல்லியிருந்தான் தயானந்தன்.

ஒப்பந்தப் பேச்சு முடித்து, கையெழுத்திட வந்தவனுடன், வீட்டின் புதிய பொலிவைப் பார்க்க, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வந்திருந்தனர்.    

இனி அந்த வீட்டின் மூலம் வரும் வரவுகள் அனைத்தும் வருமானமே! வீட்டுப் பத்திரம் மற்றும் இரண்டு ஒப்பந்தத்தில் வந்த தொகையினை, அன்னையின் கைகளில் கொடுத்து விட்டான் தயா.

“இது உன்னோடதுமா, நீ பார்த்து எதுனாலும் செய், உன்னிஷ்டம்…” என்று தூக்கிக் கொடுக்க, புதிதாக பொறுப்பும் பணமும் தன்னிடம் வந்து சேர்ந்த, அதிர்ச்சியில் மிரண்டு போய் நின்றார் மரகதம்.

“எனக்கு உங்கள விட்டா, வேற எதுவும் தெரியாதுயா!  இதெல்லாம் வேணாம்” என்று தட்டிக் கழிக்க,

“நீ இவ்வளவு அப்பாவியா இருக்க வேணாம் அத்தை..! வந்த பணத்துல ஆள் வச்சு பண்ணையம் பண்ணி, பெரிய மனுஷியா நடமாடுறத விட்டுட்டு, இப்படி தட்டிக் கழிக்கிறியே…” கேலி பேசினான் தமிழ்.

“இந்த வீட்டால வந்த பிரச்சனை, கொஞ்சமா தமிழ்… இப்பதான் நிம்மதியா வாழ்க்கை போயிட்டு இருக்கு. புதுசா இத தலையில தூக்கி வச்சுக்கிட்டு, என் நிம்மதிய கெடுத்துக்க நான் விரும்பல” என்று தன் இயல்பில் நின்றவர், மகனிடம் திரும்பி,

“உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ, அதுபடி செய் ஆனந்தா..!” என்று பொறுப்பை தள்ளி விட்டார்.

“வர்ற வருமானத்தை அஞ்சா பிரிச்சு பாங்க்ல போடலாம், மச்சான்…” என தமிழ் யோசனை சொல்ல,

நர்மதா, கங்கா சிந்து மூவரும் சேர்ந்து தங்களுக்கு இந்த வீட்டில் மட்டுமல்ல, சென்னை வீட்டிலும் பங்கு வேண்டாம் என்று மறுத்தனர். தங்களுக்கு செய்த சீர்வரிசைகளே போதும் என்று பெருந்தன்மையாக, அவரவர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் சொல்லி விட்டனர்.

தானமாக வந்த சொத்தை பிரிக்க கூடாது என்றும் அதை பெண்களுக்கு சீதனமாகக் கூட கொடுக்கக் கூடாது என்றும் நாராயணனும் தேனுபாட்டியும் சொல்லிவிட, அனைவரும் சரியென்று ஒப்புக் கொண்டனர்.

“எனக்கும் இந்த வருமானத்த அனுபவிக்க மனசு வரல… இப்போதான் சின்னதா மினரல் வாட்டர் பிளாண்ட்ட பாங்க் லோன்ல ஆரம்பிச்சுருக்கேன். ட்ரை கிளீனிங் சென்டரோட லோன் ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கு. இந்த ரெண்டும் முடிஞ்ச பிறகுதான், வேற எந்தவொரு முடிவும் எடுக்கணும்” தனது நிலையை எடுத்துரைத்த தயா, மனைவியைப் பார்த்து,

“உனக்கு எதுவும் தோணுதா மிது?” என்று கேட்க,

“அத்தை… மாமாவோட ஆசையே விவசாயம் பண்றது தானே? இந்த பணத்த கொண்டு கஷ்டபடுற விவசாயிகளுக்கு விதை வாங்கவும் உரம் வாங்கவும் கொடுத்து உதவி செஞ்சா என்ன?” என்று மரகதத்தைப் பார்த்து மிதுனா கேட்க, மருமகளின் யோசனை அவருக்கும் பிடித்துப் போனது.

கணவரின் விவசாய வேட்கையை, மருமகளும் சுட்டிக் காட்டிப் பேச, அதை நடைமுறைப் படுத்தலாம் என்ற முடிவிற்கு வந்தார். ஆனால், அதை சரியான முறையில் விசாரித்துக் கொடுக்க வேண்டுமே என்ற கேள்வி மனதில் தோன்ற,   

சரியான ஆள் பார்த்து கொடுக்கணும் மிதுனா… பொறுப்பா எடுத்துச் செய்யனும். உங்களுக்கு சென்னையிலேயே வேலை சரியா வருதே?” என ஆதங்கப் பட்டார்.

“ஆள் வச்சு பார்க்கலாம் அத்தை. சிந்துவும் தமிழ் அண்ணாவும் மேற்பார்வை பார்க்கட்டும். நாராயணன் அப்பா யாருக்கு கொடுக்குறதுணு, பார்த்து சொல்ற பொறுப்ப ஏத்துக்கட்டும். எங்க ப்ரீ டைம்ல எங்களால முடிஞ்ச வேலைய செய்றோம்” ஒரே நேரத்தில் அவரவர்க்கான பொறுப்புகளையும் பிரித்துச் சொன்னாள் மிதுனா.

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட பிறகுதானே,  தயானந்தனின் குடும்பம் முற்றிலும் தலைகீழாக மாறிப் போனது. அதனை மனதில் வைத்தே மிதுனா தன் யோசனைகளை முன்வைக்க, அதற்கு அனைவரும் ஒரு மனதாக ஒப்புதல் அளித்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட, தயாவின் தந்தை அறிவுநம்பியின் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கும் சேர்த்து உதவித் தொகை வழங்க முடிவெடுக்கப் பட்டது. தற்போதைக்கு சிறிய அளவில் ஆரம்பித்து நாளடைவில் அதை விரிவாக்கம் செய்யும் படியாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.

சிந்துவின் வாழ்வில் முன்னேற்றம் என்பது படிப்படியாக தொடர ஆரம்பித்தது. தமிழ்செல்வனின் மனைவி கயல்விழிக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் நேரம் சரியாக இருக்க, கடை வேலைகள் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாள் சிந்து.  

தயாவிடம் மாதந்தோறும் பணம் அனுப்புவதை நிறுத்த சொன்னவள், தமிழ் வம்படியாக கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள். 

வலையபட்டி கிராமத்து வீட்டில், பெரியவர்களின் மேற்பார்வையில் விபாகர் வளர்ந்து வர, வாரம் ஒருநாள் பாஸ்கர் அலைபேசியில், வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கி இருந்தான்.

இணையத்தின் மூலமாக விளையாட்டுப் பொருட்களையும், உடைகளையும் பாஸ்கர், தமிழின் பெயரில் அனுப்பி வைக்க, வேண்டாமென மறுக்காமல் சிந்துவை ஏற்றுக் கொள்ள வைத்திருந்தனர் பெரியவர்கள்.

இந்த வகையில் சிந்து, தன்னை அனுமதித்ததே பெரிய விஷயம் என்று எண்ணிக் கொண்ட பாஸ்கர், அவளின் வழியே தானும் பின்பற்ற ஆரம்பித்தான்.  

மகனிடம் பேசுபவன், எக்காரணத்தைக் கொண்டும் மனைவியிடம் பேச முயற்சிக்கவில்லை. தமிழிடம் அனைவரின் நல விசாரிப்புகளை கேட்டு அறிந்து கொள்வான், அவ்வளவே!

மெல்ல மெல்ல இவனது தயக்கமும், சிந்துவின் கோபமும் குறைந்து, எதிர்காலத்தில் நல்லதொரு இணையாக வாழ, காலம் வழிகாட்டட்டும்…

சென்னையிலும் மிதுனா மற்றும் குழந்தையிடம் பேசும் பாஸ்கர், தயானந்தனிடம் பேசுவதற்கு பெரும் தயக்கம் காட்டுவான்.

தயாவும் மிதுனாவிடம், எப்பொழுதும் போல் அவனை பற்றிய எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், அவ்வப்பொழுது மனைவியிடம் விசாரித்து அறிந்து கொள்வான்.

மரகதம் மகனுடன் சென்னையில் தங்கிக் கொண்டு, வீட்டைப் பார்த்துக் கொள்வதில் முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

முன்னைப் போன்ற கோபப்பார்வைகள், தர்க்கப் பேச்சுக்கள் தயாவிடம் எட்டிப் பார்த்தாலும் மிதுனா அவற்றை எல்லாம் தூரமாய் நிறுத்திக் கொள்ள பழகிக் கொண்டாள்.

இருவரும் தங்கள் இயல்பிலிருந்து மாறாமல்,  வாழ்க்கையில் இனிதே பயணம் செய்ய, அந்த இனிமை மாறாது நாமும் இவர்களிடமிருந்து விடைபெறுவோம் தோழமைகளே!!!  

சுபம்