Crusha kadhala

WhatsApp Image 2022-03-14 at 2.11.06 PM-ec06499c

அழுகையும் ஆத்திரமும் சுய பச்சாதாபமும் கலந்து ஒரு பெண்ணைத் தாக்கினால் அவள் எப்படி இருப்பாளோ எந்த நிலைமையில் இருப்பாளோ அப்படிதான் அவளும் இருந்தாள்.

“தனக்கும் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் யாருக்கு என்ன தீங்கு பண்ணினேன்?” என்ற சுய ஆலோசனையும், “என்னை பார்த்து அவ எப்படி அப்படி கேட்கலாம்?” என்ற கோவமும் , “எல்லாரும் என்னைய சொல்லுகிற நிலைமைக்கு நான் தள்ளப்பட்டுட்டேனே!” என்ற கவலையும் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

யார் மடியிலாவது தலை சாய்த்து வாய் விட்டு அழ வேண்டும் என்ற துடிப்பு அவளுள் இருந்த போதிலும், ‘நான் இருக்கேன் உனக்கு’ என்ற ஆறுதல் வார்த்தையைச் சொல்லக் கூட ஆள் இல்லாததுதான் பரிதாபமாகிப் போனது.

மனதளவில் அவள் உடைந்திருந்தாள். முகத்தைப் பார்த்தே அவளது மனதை அறியும் அவளது தந்தையை அந்நேரம் அவள் நினைத்துக்கொண்டாள். அவளால் நினைக்க மட்டுமே முடியும் இப்பொழுது. சட்டத்திற்குப் பின் சிரிக்கும் அவளது தாய் தந்தையின் அருமையை, அவர்கள் இறந்தபின் இப்பொழுதுதான் முழுமையாக உணருகிறாள் என்றுகூடச் சொல்லலாம்.

கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் விசிறியடிக்கும் ஆத்திரம் அவளுள் எழுந்த போதும், ‘இது அப்பா கிபிட் கொடுத்தது! இது கடைசியா அம்மாவும் நானும் சோர்ந்துபோய் வாங்கினது’ என்று ஏதோ ஒரு காரணம் கண்முன் தோன்றி, அதைக் கையில் வேகமாய் எடுத்து பின் எங்கே ஆத்திரத்தால் நடுங்கும் கைகளினால் உடைத்து விடுவோமோ என்ற பயத்தோடு பத்திரமாய் வைத்து விட்டாள்.

எதாவது செய்து அவளது ஆத்திரத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள். அவளை அந்நிலைக்கு இந்த சமூகம் தள்ள வைத்தது என்று சொல்ல வேண்டுமோ?

சிவந்த முகத்தோடு பொங்கும் ஆத்திரத்தை அடக்க வழி தெரியாத இந்த வளந்த பெண் குழந்தை பாகீரதி. தன்னை நாடி வரும் மக்கள் எத்தனை பாவத்தை தன்னிடம் கரைத்தாலும்கூட அவர்களுக்குப் புண்ணியத்தை மட்டுமே பரிசாகக் கொடுக்கும் கங்கை மாதாவின் பெயரைக் கொண்டவள்.

ஆனால் அழகும் குணமும் அறிவும் தூய்மையான மனமும் கொண்டுள்ள இந்த புதுமைக்கு ஆண்டவன் குறையையும் சேர்த்தே கொடுத்துவிட்டான். மூன்றாடுகளுக்கு முன் பெற்றோரோடு சந்தோஷமாகச் சென்ற சுற்றுலாவில், பயணம் செய்த வண்டி விபத்திற்குள்ளாகிவிட்டிருந்தது.

இந்த விபத்து நிகழுமென்று தெரிந்திருந்தால், அந்த சுற்றுலாவிற்காக அவள் அடம்பிடித்திருக்க மாட்டாளோ ?விதி வலியதுதான் போல. அவளது கஷ்ட காலத்தின் ஆரம்பப்புள்ளியும் அந்த விபத்திலிருந்துதான்.
அந்த விபத்தில் அவள் இழந்தது அவளது பெற்றோர்கள் மட்டும் அல்லாது, கூறிய கண்ணாடி அவளது வயிற்றில் குத்திவிட தனது தாயோடு அவளது தாய்மையையும் இழந்திருந்தாள் அவள்.

“ஏன் அம்மா எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. எனக்குதான் அம்மா இல்லாமல் போய்ட்டிங்க. நானும் அம்மாவாக முடியாத நிலைக்கு என்னை அந்த கடவுள் ஆக்கிட்டானா? ஒருவேளை என் குழந்தையும் நான் இல்லாமல் பின்னால கஷ்டப்பட கூடாதென்றுதான் கடவுள் என்னை அம்மாவாக விடலையோ?”

இருள் சூழும் நீண்ட இரவுகளில் அவளது எண்ணங்கள் இப்படி எங்கெங்கோ செல்லும். தலையணை எல்லாம் அவளது கண்ணீர் ரேகைகளால் நிரம்பி வழியும். கண்ணீரோடு அவளது கவலையையும் அவள் மறக்க ஆரம்பித்திருந்தாள். மனதைப் பக்குவப்பட அவளுக்கும் வருடங்கள் தேவைப் பட்டது.

“காலமே சிறந்த மருந்துடா கண்ணா. எல்லா கவலையும் காலத்தால் மாற்ற முடியும். ஒரு மனுஷனோட உண்மையான பாசத்தையும் காலம்தான் காட்டும். அதே மாதிரி அவனோட மனக்கசப்பையும் காலம்தான் குறைக்கும். எல்லாமே கடந்து போகும்” அவளது தந்தையின் கூற்றை விளையாட்டுபோல் கேட்டது எல்லாம் இப்பொழுது அவளுக்கு ஆறுதலாக மாறியது.

எல்லாவற்றையும் கடக்கத் தெரிந்த அவளுக்கு இன்று நடந்த நிகழ்வில் இருந்து மட்டும் கடக்க மறுத்தது என்னவோ உண்மையே. அவளது நெருங்கிய தோழி பார்வதியின் சீமந்தத்திற்கு ஏன்தான் தான் சென்றோமோ என்று ஆயிரத்தெட்டாவது முறையாக அவள் வருந்தினாள்.

“அவளாலேயே அம்மாவாக முடியாது. அவ அப்பா ஆத்தாவை முழுங்கிட்டு நிக்குறா. அவளைப் போய் என் பெண்ணிற்கு வளையல் அடுக்க சொல்றீங்க. அவளோட அந்த பார்வையே என் வாரிசை அழித்திடும். அவளை இங்க இருந்து போக சொல்லுங்” அவளது தோழியின் மாமியாரின் வார்த்தைகள் இப்பொழுதும் அவளது காதில் எதிரொலித்து அவளை இம்சை பண்ணியது. நின்ற கண்ணீர் மீண்டும் உற்றேடுக்க தயாராக இருந்த பொழுது அவளது காதுகளில் ஒரு தேவகானம் கேட்டது.

ஒரு கணம் ஒரு போதும் பிரியக்கூடாதே…
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே…
நீ கண்ட கனவு எதுமே கலையக்கூடாதே…
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே…
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி…
பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி…

எதிர் வீட்டில் வாழும் அவளது ராஜகுமாரன்தான் பாடிக்கொண்டிருந்தான். ஏனோ அவனது பாடலுக்கு அவள் அடிமையாகி இருந்தாள். இன்று நேற்று என்று இல்லாமல் அவளது கல்லூரி நாட்களிலேயே ஆரம்பித்த மயக்கம் இந்த நொடிவரை அவளிடம் தீரவில்லை.

காதல் கல்யாணம் என்று எல்லாவற்றையும் தனது நிலை புரிந்து மனதில் இருந்து தூக்கி எரியத் தெரிந்த பதுமைக்கு அவனது குரலில் ஏற்பட்ட மயக்கத்தை மட்டும் தூக்கி எரியவே முடியவில்லை. மாறாகப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறாள். அவன் பாடும் ஒவ்வொரு பாட்டும் அவளது மனதை அறிந்து அதை மயிலிறகால் வருடுவது போலவே அமைவது ஆச்சரியமாக அவளுக்குத் தோன்றும்.

“இன்றைக்கும் எனக்கு ஏற்ற மாதிரி பாடுறியே தோஷு? பாட்டுவரிகளில் சொல்வது போலவே என்கூடவே எப்போதும் வருவியா?” ஏக்கம் அவளுள் முட்டி தள்ளும். அவளது ஏக்கத்திற்கும் அந்த குரலிற்கும் சொந்தக்காரன் அஷுடோஷ். அவளது கல்லூரி சீனியரிலிருந்து இப்பொழுது அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியும் அவன்தான். பரம்பரை பணக்காரன். எனினும் அவன் விரும்பும் கட்டிட தொழிலில் சாதனை படைக்க வேண்டுமென்று அதற்குத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் துடிப்பான ஆண்மகன்.

பாகீரதிக்கு நேரெதிர் குணம் கொண்டவன். இவள் பொறுமையின் ஸ்வரூபமென்றால் அவன் அவசரத்திற்கென்றே பிறந்தவன். இவள் நேர்மறையாக ஒரு விஷயத்தை அணுகினால், அவன் எதிர்மறையாக நடந்தாலும் அதை சமாளிக்க வேண்டுமென்று திட்டம் வகுப்பான். குணங்களில் வேற்றுமை இருந்தாலும் இவர்கள் ஒன்றுபடுவது அவர்களின் வேலையிலும் பாடும் பாட்டை ரசிக்கும் விதத்திலும்தான்.

அப்பொழுதுதான் அவள் நேரத்தைக் கவனித்தாள். விடியற்காலை ஐந்து மணி. இரவு முழுவதும் அவள் தூங்காதது நினைத்து அவளே அவளைத் திட்டிக்கொண்டாள். இந்த நாள் அவளது ராஜகுமாரனுக்கு மிகவும் முக்கியமான நாள்.

“தோஷு வோட கனவு இன்றைக்குத்தான் நிறைவேற போகிறது. இன்னிக்குனுபாத்து நான் டிலே பண்ணக்கூடாது” சிதறி கிடந்த துணிகளும் தலையணைகளும் அவளைப் பாவமாகப் பார்க்க, “உங்களை எல்லாரையும் உங்களுடைய ஜோடியோடு சேர்த்துவச்சிட்டுதான் கிளம்புவேன். கவலைப்படாதீங்க” அவளது ராஜகுமாரனை நினைத்த மாத்திரம் அவளுள் சந்தோஷ சாரல்கள் எங்கிருந்துதான் தோன்றுமோ? அவளை நினைத்து அவளே சிரித்துக்கொண்டாள்.

அவசர அவசரமாக வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு வேண்டிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவள் கீழிறங்க அங்கே அவளுக்காகவே அஷுதோஷ் காத்திருந்தான். “ரொம்ப கலைச்சிபோய் தெரிகிற. சோ நீ என்னோடவே வந்துடு பாகீரதி. நாம சேர்ந்தே போய்விடலாம்”, என்று அஷுடோஷ் சொல்ல, அவனோடு சேர்ந்து செல்வது ஒன்றும் புதுமையான விஷயம் இல்லாததால் அவளும் அவன் கூறியது போலவே அவனது வாகனத்தில் ஏறினாள்.

இரவு முழுவதும் உறங்காததோ அல்லது அவளது ராஜகுமாரனின் அருகாமை தந்த சுகமோ அல்லது அவன் காட்டிய பரிவோ அவள் வாகனத்தில் ஏறிய கொஞ்ச நேரத்திற்குள் உறங்கி இருந்தாள். இரண்டு மணிநேர பயணத்திற்கு பின் அவர்கள் சேரவேண்டிய இடம் வந்து விட “பாகீரதி… நாம வந்துட்டோம்டா… எழுந்துடு”

கனிவான அவனது குரல் அவளது காதுகளில் ஒலிக்க, அவனது விரல்கள் மெதுவாக அவளது கன்னத்தைத் தட்ட, மெல்ல மெல்ல விழித்த பாகீரதிக்குத் தான் காண்பது கனவென்றே ஐயம் வந்துவிட்டது. அத்தனை அருகில் அவனது கனிவான முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் அவளுள் ஏக்கம் இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டே போனது.

“என்னடா பாத்துட்டே இருக்க. எழுந்துகோடாமா… எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கிறார்கள்” அவன் பேசியே பின்னே தனது சுயநினைவுக்கு வந்தவள், அவனது தோள் சாய்ந்து உறங்கியது மூளைக்கு எட்ட உடனே எழுந்தவள், “சாரி சார். எப்படித் தூங்கினேன் என்று தெரியலை. ரொம்ப சாரி சார்” தன்னைப் பற்றி என்ன நினைப்பானென்ற கவலை அவளுக்கு!

“ரிலாக்ஸ் ரதி. என்ன ஆயிற்று இப்போ. போகலாமா?” அவன் பேசியதெல்லாம் அவளிற்கு எங்கே காதில் கேட்டது, திருதிருவென அவள் முழிக்க, போ… லா… மா… னு… கே…ட்டேன்…” அவன் ஒவ்வொரு எழுத்தாக மீண்டும் சொல்ல ,” எஸ் பாஸ். போகலாம்!”

‘ஐயோ கடவுளே. எனக்கு இன்றைக்கு என்ன ஆயிற்று. இன்றைக்கு தோஷுக்கு ரொம்ப முக்கியமான நாள். என்னால் எதுவும் பிரச்சனை ஆகம பாத்துக்கோ! ‘அவசர வேண்டுதல் மெயிலை ஆண்டவனிற்கு அனுப்பியவள் அந்த கட்டிட வாசலிற்குச் சென்றாள்.

ரதிதோஷ் குடில்” அஷுதோஷின் நிறுவனத்தின் இருபத்தி ஐந்தாவது கட்டிடம். அவனது ட்ரீம் ப்ராஜெக்ட் என்றுகூடச் சொல்லலாம். பொறுப்பற்ற பிள்ளைகளாலும் பொறுப்பற்ற பெற்றோர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட முதியோர்களுக்காகவும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகவும் எழுப்பப்பட்ட கட்டிடம் இது.

“ஒரு பக்கம் அம்மா அப்பாவால ஒதுக்கப்பட்ட குழந்தைங்க. மறுபக்கம் பிள்ளைங்கனால ஒதுக்கப்பட்ட பெத்தவங்க. யாருக்காக நான் வாழணும்ங்கிற எண்ணம் இந்த இரண்டு தரப்பினருக்கும் இருக்கும். இவங்கள நாம ஒரே இடத்தில் சேர்த்தா, அவர்களே ஒரு அழகான குடும்ப ஆகிடுவாங்க! இதுதான் இந்த ப்ராஜெக்ட்டோட முக்கியமான குறிக்கோள். மற்ற ப்ரொஜெக்ட்ஸ்ல என்னுடைய திறமை வெளிவந்துச்சுனா இந்த ப்ரொஜெக்ட்ல என்னுடைய உணர்வுகள் கலந்துருக்கு. இதை ப்ராஜெக்ட் என்னுடைய கனவு பாக்கி” அன்று அஷுதோஷ் கூறிய வார்த்தைகள் அவளிற்கு இன்று நிகழ்ந்ததுபோல் இருந்தது.

அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் மகிழ்ச்சியின் பின்னும் முதியோரின் திருப்திக்குப் பின்னும் தனது ராஜகுமாரன் இருந்தது அவளிற்குப் பெருமையாக இருந்தது. அந்த கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குத்தான் வந்திருந்தார்கள் இருவரும். குழந்தைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் சிறு சிறு போட்டிகளையும் ஏற்பாடு பண்ணிருந்தாள் பாகீரதி .”உன்னுடைய யோசனை நிஜமாகவே பிரமாதமா இருக்கு பாக்கி. விருந்தினர் பேசிட்டு குத்துவிளக்கு ஏத்திட்டு போய் இருந்தோமென்றால் இந்த குழந்தைகளோட இத்தனை ஆர்ப்பாட்டமான சந்தோஷத்தை நாம மிஸ் பண்ணிருப்போம்” விரிந்த சிரிப்போடு அவன் கூறிய வார்த்தைகளில் அவள் சொக்கித்தான் போனால். ‘உன்னுடைய இந்த ஒற்றை சிரிப்பிற்காகவே நான் என்ன வேணாலும் பண்ணுவேன் தோஷு! அது உனக்கே தெரியாது!’ஆட்டம் பாட்டம் எல்லாம் அடங்கிய பின் குழந்தைகள் எல்லாரும் அஷுதோஷை பாட நச்சரிக்க, “சரி. கண்டிப்பா பாடுகிறேன். என்னுடைய மனசிற்கு ரொம்ப நெருக்கமானவளும் இந்த குடிலை வர காரணமுமான என்னுடைய காதலிக்கு இந்த பாடலை நான் டெடிகேட் பண்ணுகிறேன்!”

அதுவரை பொங்கிவழிந்த சந்தோஷம் எல்லாம் பாகீரதிக்கு வடிந்து போனது. ‘உன்னுடைய நிலைய நீ எப்படிடி மறந்த? உன்ன மாதிரி பொண்ணுங்க ஒருத்தர் மேல கிரஷ்தான் வைக்க முடியும். அதுக்காக யாராச்சும் கல்யாணம் பண்ண விரும்புவார்களா?’ ஒரு மனம் அவளைக் குத்தி கிழிக்க ‘என்னுடைய நிலைமை எனக்குத் தெரியும். நான் ஒன்றும் அவரோடு மனைவியை இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லையே. அவரை பாத்துட்டே வாழ்ந்திடலாம்னுதான இருந்தேன்’ மறுமனம் அவளிற்குச் சப்பைக்கட்டுக்கட்ட ‘சும்மா நடிக்காத. அப்புறம் ஏன் அவருடைய காதலிக்குனு சொன்ன உடனே உனக்குக் கவலையாக இருக்கு. என்ன பொறாமைபடுறியா ?’ ஒரு மனம் விடாமல் வாதாட ‘அவர் எங்க இருந்தாலும் யாரோடு இருந்தாலும் எனக்கு அவர் சந்தோஷமா இருந்த போதும்! அவளோதான்’ அவளது மனமே இரண்டுபட்டு ஒரு போராட்டத்தைத் துவக்க அவனும் பாட ஆரம்பித்தான்.

என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால், நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா

அவளிற்கு மிகவும் பிடித்த பாடல் அது. முதல் முறையாக அவன் பாடி அவள் கேட்ட பாடல் அது. கண்ணீர்த் துளிகள் நான் இப்போது வரப்போகிறேனென்று அவளைப் பயமுறுத்த அந்த இடத்திலிருந்து சீக்கிரம் கிளம்பியாக வேண்டுமென்று துடித்தாள். ஆனால் அவளது மனதை எப்போதும் அறிந்து கொண்டு அதற்க்கேற்றார் போல் நடப்பவன் இன்று மட்டுமேனோ முரண்டு பிடித்தான். நிகழ்ச்சி முடிந்தபின் அவனோடு சென்று அவனது காதலியை அறிமுகம் செய்தே தீருவேனென்று அடம்பிடித்தான். அவனது பிடிவாதத்தை நன்கு அறிந்தவள் பொறுமையைக் கடைப்பிடித்தாள் அங்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதென்று அறியாமல்.

மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் அவன் அவளை நேரே தனது புது வீட்டிற்கு அழைத்து சென்றான். மிகவும் கம்பீரமான பங்களா. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த இடமே சொர்க்க பூமிபோல் காட்சி அளித்தது அவளிற்கு. ஆனால் அந்த அழகை எல்லாம் அவளை அனுபவிக்க இயலாது அவளது கண்களை அவன் துணியால் கட்டிவிட்டு மொட்டைமாடிக்குக் கூட்டிச் சென்றான். “இப்போது கண்ணைத் திறந்து பார் ரதி” ‘அவனது குரலில் என்ன இருந்தது? எப்போதும் ஒலிப்பது போல் இல்லாமல் வேற மாதிரி இருக்கிறது?’ கண் திறப்பதற்குள் அவளது மூளை விழித்துக்கொண்டது. கண் விழித்த அவளிற்குத் தான் காண்பது நிஜமா கனவா என்றே குழம்பியது.

“பீ மை பார்ட்னர் ரதி” என்ற ரோஜா பூக்களால் எழுத்துக்கள் வரையபட்டு தரையெங்கும் பலூன்கள் நிரப்பப்பட்டு மெழுகுவர்த்திகள் ஒளியும் ரோஜாவின் மணமும் குழலிசையும் அவளை வித்தியாசமாய் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தோரணைகளும் அவளது புலன்களை செயல் இழக்க செய்தது.

ஒருவாறு சமாளித்து ஒட்டிக்கொண்ட உதடுகளைப் பிரித்து “தோஷு இதெல்லாம்?” அவள் முடிக்கக் கூட விடாமல் அவன் “இங்க வா ரதி” என்று கைபிடித்து அழைத்து அங்குப் போடப்பட்ட ஸ்விங் சாரில் அவன் மடியில் அவளை அமரவைத்து ஒரு சொடக்கு போட்டு “அங்க பார்…” என்று சொல்ல ‘என்ன அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கிற!’ அவளது மனம் திடுக்கிடும் போதே வானை வண்ணங்களால் நிரப்பிக்கொண்டிருந்தது வானவேடிக்கைகள். அவளது முகத்தில் பூக்கும் சிறுபிள்ளை சந்தோஷத்தைக் கண்டவனின் முகத்திலும் சந்தோஷம் பூத்தது.”புடிச்சிருக்கா ரதி?” இருபொருள்பட அவன் கேட்ட கேள்வியில்தான் அவள் விழித்துக்கொண்டாள் தன்னால் எப்படி அவனை ஏற்றுக்கொள்ள முடியுமென்ற கவலையில்! எழுந்துகொள்ள முயற்சி செய்த அவளை இடையில் கை சுற்றி வளைத்து வளைத்துத் தடுத்தவன்,

“உன் மீதான என் காதல் காதலுக்கு வயசு ஐந்து ரதி. உன்னை நான் முதல் முறை கல்லூரி பிரெஷர்ஸ் டே பார்த்ததுமே ரொம்ப ரொம்ப புடிச்சுப்போச்சு. அப்போது அது வெறும் கிரஷ்ணுதான் நினைத்தேன். ஆனால் உன்ன பார்க்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அதே கல்லூரியில் என்னுடைய மேற்படிப்பைத் தொடர்ந்தேன். நீ கல்லூரி பேருந்தில் வருகிறங்கிற ஒரே காரணத்திற்காக நான் கல்லூரி பேருந்துல வர ஆரம்பித்தேன். ஆனால் என்னவோ அப்போது ப்ரபோஸ் பண்ணலாம் எனக்கு தோணல. மாஸ்டர்ஸ் முடிச்சு நான் அப்பாவுடைய நிறுவனத்தில் சேர்ந்த புதுசு. உன்னுடைய பைனல் இயர் ஸ்டார்டிங்க்ல உன்னுடைய விபத்து தெரியவந்துச்சு. அதைக் கேள்விப்பட்டு எப்படி துடிச்சேன்னு போனேன் தெரியுமா? நீயும் நானும் ஒரே டிபார்ட்மென்ட் என்று டக்குனு நினைப்பு வந்து எங்க அப்பாவோடு சண்டை புடிச்சு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். நீயும் நானும் எப்போதும் சேர்ந்தேதான் இருக்கவேண்டுமென்று, பேர்லகூட ரதிதோஷனுதான் வைத்தேன். நமது டிபார்ட்மென்ட்ல நிறையப் பேசி, உன்னை மட்டும் செலக்ட் பண்ணினா தப்பாக இருக்குமென்று, உன்னோடு மூன்று பேரை என் நிறுவனத்துக்கு செலக்ட் பண்ணி, உன்னை என்னை பக்கத்திலேயே வச்சிக்கணும்ங்கிறதுக்காக நிறுவனத்துக்குக் குடியிருப்புகள் கொண்டுவந்தேன். உனக்கு என் பாட்டென்றால் நிறைய பிடிக்குமென்றுதான் தினமும் நீ எழுந்துக்குற நேரம் பார்த்து, அலாரம் வைத்து, ஒவ்வொரு நாளும் விடாமல் உனக்கு எந்த பாட்டு பிடிக்குமென்று பார்த்துப் பார்த்து பாடுவேன். இதெல்லாம் ஏன் பண்ணினேன்? எனக்கு உன்மேல் இருந்தது அப்போ வெறும் கிரஷ் இல்லையா காதலானு ஒரே குழப்பம் ரதிமா. அப்போதுதான் உன்ன முதல் முறை ஒருத்தங்க உனக்கு ஏற்பட்ட அச்சிடேன்ட் வச்சி உன்னைத் தப்பா பேசினாங்க. அவங்களுக்கு நிஜமாகவே நான் நன்றி சொல்ல ஆசைபடுறேன். அவளுக்கு யாருமில்லன்னுதான எல்லாரும் அவளைத் தப்பா பேசுறீங்க. நான் அவளுக்கு எல்லாமுமா இருப்பேனென்று ஒரு உத்வேகம் வந்துச்சு. அப்போதுதான் நீ என்னுள்ளே எந்த அளவுக்கு வேரோடி இருக்கானனு எனக்கே புரிந்தது. அது மட்டும் இல்லாமல் என்னுடைய இந்த ட்ரீம் ப்ரொஜெக்ட் கூட உன்னால வந்ததுதான் ரதி. உனக்கு விபத்து ஆனதில் இருந்து எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தனு உன்ன பார்த்த டாக்டர் கிட்ட கேட்டு தெரிந்துகொண்டேன். அப்போது ஸ்டார்டிங்க்ல இருந்தே நீ அனாதை உனக்கு யாருமில்லன்னு முத்தரகுத்தின குட்டி பசங்களுக்கு எதனை வருத்தமா இருக்கும். உனக்கு நான் கிடைத்த மாதிரி அவங்களுக்கு தாத்தா பாட்டியென்று சொந்தங்களை உருவாக்கிவச்சேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றி பின்னாலும் என்னுடைய ஒவ்வொரு முயற்சி பின்னாலும் நீதாண்டா இருக்க. என்ன பொறுத்தவரை ஐ லவ் யு எல்லாம் உன்மேல் நான் வைத்திருக்கக் காதலைச் சொல்லாது. நீ எப்போதும் என்கூடவே இருப்பியாடா?”

நீளமாக பேசிய அவன் ஏக்கமாக முடிக்க, அவனை விட அவளது ஏக்கத்திற்கு அளவில்லாமல் போனது. அவன் பேசப் பேச அவள் பேசாமடந்தையானாள். ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் அவள் நிலை. அவளது நிலையை சற்றென்று புரிந்துகொண்டவன், “எதற்காக யோசிக்கறனு எனக்கு புரிகிறது. உனக்கு நான்தான் முதல் குழந்தை. அதோடு நமது குடிலில் எத்தனையோ குழந்தைகள் உன்னுடைய அன்புக்காக ஏங்கி இருக்கிறார்கள். எனக்கு உன்னோடு கூடவே இருக்கவேண்டும். அது மட்டும் போதும்டா ரதி. வேறெதுவும் வேண்டாம். மூங்கில் எப்படி ஐந்து வருஷமா பூமிக்குள்ள தன்னோடு வேறுகளை பலப்படுத்திட்டு அதக்கு அப்புறம் கடகடன்னு வளருமா நானும் இப்போது உன் முன்னாடி நிற்கிறேன். வேணானும்னு மட்டும் சொல்லிடாதடா… ப்ளீஸ்! “

அவனது காதலின் ஆழத்தில் அவள் மூழ்கித்தான் போனாள். எதுவும் பேசாமல் வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் மறந்து , நீட்டிய அவனது கைகளைப் பிடித்து அவனது மார்பில் சாய்ந்துகொண்டாள் ‘நீ மட்டும் போதும் எனக்கு’ என்ற தோரணையில். “இப்போது மேடத்துக்கு என்மேல் க்ரஷா காதலா?” குறும்பு அவன் குரலில் கூத்தாட “இரண்டும் இருந்தால் உங்களுக்கு வேண்டாமென்று தோணுமா என்ன?” உனக்கு நான் ஏற்ற ஜோடிடா படவா என்ற தோரணையில் அவளும் பதில்கூற, இவர்களின் காதலில் இயற்கையும் மகிழ்ந்தது! இனியெல்லாம் ஆனந்தமே!