AnthaMaalaiPozhuthil-25

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 25

              ரகுநந்தன், அபிநயாவை கைகளில் ஏந்தி இருக்க, அவன் பார்வை அவளிடம் ஆழ்ந்திருந்தது. அவளிடம் என்னன்னவோ சொல்ல அவன் மனம் துடித்தது. ஆனால்,’என்ன சொல்வது? எப்படி சொல்வது?’ என்று தெரியாமல் தவித்தது அவன் மனம்.

          அவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

                  நாணம் கொண்ட அவள் மனம் பேசத் துடித்த வார்த்தைகளை அவள் உதடுகள் முழுங்கி கொண்டாலும், அவள் விழிகள் தன் கருவிழிகளை அங்குமிங்கும் சுழற்றியபடி அவனுக்கு ஆயிரம் செய்திகள் கூறியது. அவனாலும் அந்த செய்திகளை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

    கண்டுகொண்டார்கள். ஆம், இருவரும் ஒருவரையொருவர் கண்டு கொண்டார்கள். 

          ஆனால் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில், ‘முதலில் இந்த கண்கட்டை அவிழ்ப்பது யார்?’ என்ற ஆட்டம்  அவர்களுக்குள் தொடங்கியிருந்தது.

              இருவரும் தங்களை மறந்து வேறொரு உலகில் சஞ்சரிக்க கவினின்  அழுகை சத்தம் அவர்கள் அறை வரை  கேட்டு அவர்களை நனவுலகிற்கு  அழைத்து வந்தது.

          அபிநயா ரகுநந்தனின் கைகளில் இருந்து துள்ளிக் குதித்து இறங்கினாள்.

 அபிநயாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. எப்படி நான் இப்படி என்னை மறந்து இவுக கையில் குழைந்து போனேன்?’ அபிநயா, தன்னைத்தானே மனதிற்குள் நொந்து கொண்டாள்.

 

   ‘ஐயோ… என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாக?’ அவள் ஒற்றை கண்ணை சுருக்கி, வெட்கப்பட, அவன் சீட்டியடித்தான்.

             அவன் செய்கையில் மிடுக்காக இருக்க நினைத்தும், முடியாமல் செவ்வானமாக சிவந்து  அவள் தோற்று போக, அவன் அவள் மனதை வென்றுவிட்ட களிப்பில் அவளை உரிமையாக பார்த்தான்.

      ‘பார்வைக்கு, இத்தனை சக்தியா?’ என்று அவள் அறிவு சந்தேகம் எழுப்ப, மனமோ அவள் அறிவை மழுங்க செய்து, ‘தன்னவனின் பார்வைக்கு  கதிர் வீச்சு அதிகம் என்று உறுதி செய்வது போல் அவள் முகத்தை மேலும் மேலும் சிவக்க செய்தது.

      ரகுநந்தன், அவளை மெல்ல மெல்ல நெருங்கினான்.  அவன் நெருங்குகையில், பின்னே செல்ல அவள் அறிவு கட்டளையிட, மனமோ அவள் அறிவுக்கு மறுப்பு தெரிவித்து, அவன் வருகையை ஆவலாக எதிர்பார்த்து அவளை அசையவிடாமல் அங்கு நிற்க செய்தது.

    அபிநயாவின் இந்த அசைவில்லா, அழுத்தம் ரகுநந்தனுக்கு உவப்பாக இருக்க, அவன் முகத்தில் ஓர் அழகிய புன்முறுவல்.

      ‘இது என்ன மயக்கும் புன்னகை?’ அவள் மனம், அந்த புன்னகையில் மயங்கியபடி, அவனிடம் செல்லமாக மனதிற்குள் கோபித்து கொண்டது.

    ஒருபக்கம் கோபித்து கொண்டாலும், மறுபக்கம் மயங்கும் அவளை ரசித்து கொண்டது, அபிநயாவின் பொல்லாத மனம்.

       அவன் அவள் அருகே! அவன் மூச்சு காற்றின் வெட்பம் அவளுக்கு பல செய்திகள் கூறியது. இது கணவனின் மொழியோ?’ என்று அவள் மனம் சிறகடிக்க, அவன் முகம் அவள் முகத்தின் அருகே.

 

    அவன் அதரங்கள், அவள் கன்னங்களுக்கு அருகே செல்ல, அபிநயா தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். விழிகள் மூடி இருந்தாலும், அவள் இமைகள் படபடத்து, அவள் நாணத்தை, தவிப்பை வெளிப்படுத்தியது.

           ரகுநந்தன், தன் தலையை மெல்ல அசைத்து, அவள் செவிகளில்  “நான் உன்னை தொடலை.” கிசுகிசுப்பாக கூற, அவன் தீண்டல் இல்லை என்றாலும், அவன் உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் உணர்வுகளை மெல்ல உள் வாங்கியபடிஅபிநயா சற்று நிதானமாக தலை அசைத்தாள்.

   தன் கண்களை திறந்து, அவனை பார்த்தாள். அத்தனை, நெருக்கத்தில் அவன் முகம். அவன் கண்களில் தாபம். அதை தாண்டி, ‘உன் சம்மதமின்றி எதுவும் இல்லை. உன் அனுமதி வேண்டி நான்என்று உரிமை இருந்தும், ஆசை இருந்தும்  விலகி நிற்கும் அவன்.

   அபிநயாவுக்கு, அவனை அத்தனை பிடித்திருந்தது. அந்த அத்தனையின் அளவை, அவளால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை என்பது தான் நிஜம்.

    அவனை அழமாக பார்த்தாள். ரகுநந்தனின் கண்களில் காதல் வழிந்தோடியது. அந்த காதலை அபிநயாவின் மனம் உணர்ந்தாலும், அவள் மனதில் மெல்லிய சுணக்கம்.

இவுகளுக்கு, என் மனசு தெரியலையா?’ சுணக்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அவனை பார்த்து அவள் புன்னகைத்தாள்.

       ‘தாம்பத்யம், சொல்லி தெரிவதா? சொல்லமால் சங்கமிக்கும் இடம் அன்றோ?’ பல கேள்விகள் தோன்ற, அபிநயா மனதில் தோன்றியதை சாமர்த்தியசாலித்தனமாக மறைத்தாள்.

 

               ‘நான் உன்னை விட கெட்டிக்காரன்என்று நிருபிப்பது போல் தன் மனைவியின் எண்ண ஓட்டத்தை பிடித்துவிட்டான் ரகுநந்தன். அவன் முகத்திலும் ஒரு ரசனையான புன்னகை.

    அவர்கள் இருவரின் புன்னகையையும் கலைக்கும் விதமாக, “அம்மா…” என்று கவினின் அலறல் சத்தம்.

    கவினின் அழுகை வழக்கம் தான். ஆனால், இந்த அலறல், ரகுநந்தன் வேகமாக அறையை விட்டு வெளியேறி கடகடவென்று படி இறங்கினான்.

    ரேவதி, “டொம்… டொம்…” என்று கவின் முதுகில் அடிக்க, குழந்தை வலியால் துடித்து கொண்டிருந்தது.

        “அக்கா, உனக்கு அறிவிருக்கா? இல்லையா?” ரகுநந்தனின் குரல் உயர்ந்து ஒலித்தது.

   கவின் ஓடி சென்று, அபிநயாவை கட்டி கொண்டான். அபிநயா மீது, அவன் கொண்ட பாசமும், அவள் அவனுக்கு கொடுத்திருந்த பாதுகாப்பு உணர்வையும் கவினின் இந்த செய்கை படம்பிடித்து காட்டியது.

      “ஆமா டா, தம்பி. எனக்கு தான் அறிவில்லை. உன் பொண்டாட்டி புத்திசாலி. நீ புத்திசாலி. அது தானே சொல்ல வர?” என்று ரேவதி காட்டு கத்தலாக கத்தினாள்.

   பவானியம்மாள் செய்வதறியமால், சோபாவில் அமர்ந்து இவர்களை பார்த்து கொண்டிருந்தார்.

   சுரேஷ் வீட்டில் இல்லை. அபிநயா, கவினை அணைத்தடி அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.

              “நேத்து வரைக்கும், கல்யாண வீடுன்னு சுத்தியாச்சு. இப்ப தான், கொஞ்சம் ப்ரீயா இருக்கோம். படின்னு சொன்னேன். எக்ஸாம் வருது. திரும்பவும், விருந்து அது இதுன்னு வேலை வந்திரும்.” கடுப்பாக கூறினாள் ரேவதி.

    ரகுநந்தன், எதுவம் பேசாமல் அவன் கோபத்தை கட்டுப்படுத்தி அமைதி காக்க, “நான் சொல்றதே இவனுக்கு புரிய மாட்டேங்குது. ஒரு தடவை இல்லை, ஓராயிரம் மட்டம் சொல்லிட்டேன்.  அது எப்படி புரியாமல், போகும்? கவனமில்லை. பிடிவாதம்.” ரேவதி கவினை பார்த்து திட்டி கொண்டிருந்தாள்.

             “அக்கா… அவனுக்கு படிக்க பிடிக்கலைன்னா விடு. படிச்சவன் எல்லாம் புத்திசாலியா? படிச்சவன் மட்டும் தான் பெரிய ஆளா? காமராஜரை எல்லாரும் மதிக்கலை? படிக்காத மேதைன்னு பாரட்டலை? சச்சின் என்ன படிச்சி கோல்ட் மெடலா வாங்கிருக்காரு? அவருக்கு பிடிச்ச லைன்ல பெரிய ஆளா வரலை?” என்று ரகுநந்தன் பேச, ‘இவுக என்ன பேசுறாக?’ என்பது போல் அவனை பார்த்தாள் அபிநயா.

             “கவினுக்கு எது பிடிச்சிருக்குனு பார்ப்போம்? ஒரு பாடகனாகவோ? ஒரு பெரிய நடிகனாகவோ? ஒரு மைக்கேல் ஜாக்சனாவோ வரட்டும். அவனுக்கு எது பிடிக்குதோ அதை செய்யட்டும். படிப்பெல்லாம் தேவை இல்லை.” கடுப்பாக கோபமாக ரகுநந்தன் பேசிக்கொண்டே போக, அவனை இடை மறித்தாள் அபிநயா.

 

   “ என்ன பேசிட்டு இருக்கீக? படிப்பு தேவை இல்லைன்னு சொல்லாதீக. படிக்காம முன்னுக்கு வந்த அஞ்சு பேரை தான் நீங்க சொல்ல முடியும். இல்லை, அதிக பட்சமா பத்து பேரை சொல்ல முடியும். ஆனால், இந்த மீதி உலகம், படிச்சவங்களை வச்சி தான் இயங்கிட்டு இருக்கு. வாய்ப்பு நிறைய இருக்கிற மீதி உலகத்தில் போட்டி, போட்டு நிற்க முடியாத நாம, அந்த பத்து பேரோட போட்டி போட்டு நிற்க முடியுமா?” என்று அபிநயா கோபமாக கேட்டாள்.

 

      “அதுக்கு படிப்பு வரலைன்னு, இப்படி தான் பிள்ளையை அடிச்சி கொல்லணுமா?” என்று அபிநயாவிடம் எரிந்து விழுந்தான் ரகுநந்தன்.

          ரகுநந்தன், எரிந்து விழுந்ததில், பவானியம்மாள் சற்று பயந்து, கண்களை மருமகள் பக்கம் திருப்பினார். ஐயோ… இதனால், இவங்களுக்குள்ள பிரச்சனை வந்திருமோ?’

    தன் தம்பி மனைவியை ஆச்சரியமாக பார்த்தாள் ரேவதி. இவ, என்ன என் பக்கம் கூட பேசுவாளா?’ என்ற சிந்தனையோடு.

 

    “எதுக்கு அடிக்கணும்? சொல்ற விதமா சொல்லணும். படிப்பு எப்படி வராமல் போகும்?” என்று ரேவதியின் ஆச்சரியத்தை, நொடிப்பொழுதில் தன் வார்த்தைகளால், கலைத்தாள் அபிநயா.

    அவள் வார்த்தையில் வெகுண்ட ரேவதி, “நான் சரி இல்லைனு சொல்றா, உன் பொண்டாட்டி. ” என்று ரகுநந்தனிடம் புகார் கொடுக்க ஆரம்பித்தாள் ரேவதி.

   “நீங்க, கவினை அடிச்சிருக்க கூடாது.” அபிநயா, நிதானமாக கூறினாள்.

      “என் பிள்ளையை அடிக்கிற உரிமை எனக்கில்லையா? இதை சொல்ல இவ யாரு?” அபிநயாவை விடுத்து தம்பியிடம் பேசினாள் ரேவதி.

     பவானியம்மாள், தன் மகளை பாவமாக பார்த்தார். என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான் கவின். அழுகை, பிடிவாதம், படிக்கறதில்லை. ரேவதியும் என்ன தான் பண்ணுவா?’ என்ற சிந்தனை அவருக்கும் வந்தது.

 

    ‘இப்படி அடிக்க வேண்டாம். ஆனாலும்…அவரும் அழுது கொண்டிருந்த கவினை பாவமாக பார்த்தார்.

    “நல்லதை யார் வேணாலும் சொல்லலாம்.” என்று, அபிநயா இத்தனை பேச்சுகளுக்கு பின்னும் நிதானமாக கூற, ‘இவ விட மாட்டா.என்று ரகுநந்தன் அவளை யோசனையாக பார்த்தான்.

   “என் பிள்ளையை பத்தி எனக்கு தெரியும். நேத்து வந்த உனக்கு என்ன தெரியும்?” என்று ரேவதி இடக்கு பேசினாள்.

   “இதே பிரச்சனை தான் இவங்க மிஸ் கிட்டயும். ஸ்கூலையும்… கொஞ்ச நேரம் என் பிள்ளையை பார்த்துட்டு, எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டியது.” என்று ரேவதி முணுமுணுக்க, ரகுநந்தனின் கண்களை கூர்மையானது.

       “இவங்க மிஸ் என்னனா, இவனை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக சொல்றாங்க. டாக்டர் இவன் நார்மல் தான். கொஞ்சம் கேர் எடுத்து பார்த்துக்கோங்க. எல்லாம் வளர்ந்தா சரி ஆகிருமுன்னு சொல்றாங்க.” கண்ணை கசக்கினாள் ரேவதி.

அங்கு மௌனம் நிலவியது. ரேவதியே மீண்டும் தொடர்ந்தாள்.

      “இவன் சிரிக்கவே மாட்டேங்குறான். இப்படின்னு ஒரு கம்பளைண்ட். இதெல்லாம் ஒரு பிரச்சனையா? கவின் அப்பாவோட, அப்பா முசுடுன்னு அவங்க சொந்தத்தில் பலர் சொல்லி கேட்டிருக்கேன். இவன் அவங்களை மாதிரி இருந்தா நான் என்ன பண்ணுவேன்? இதுக்காக என் பிள்ளை நோயாளி ஆகிருவானா?” ரேவதி பிடிவாதமாக கேட்டாள்.

      ‘கவின் சிரித்ததில்லை. காது நல்லா தான் கேட்குது. கலகலன்னு பேசலைனாலும், பேசுவான். சிலர் அதிகமாக சிரிப்பதில்லை. இப்படி யோசிச்சது பெரிய தப்போ?’ ரகுநந்தன் நிலைமையின் தீவிரத்தை மெல்ல உணர ஆரம்பித்தான்.

 

      ‘கவின் அவங்க அப்பாவை போல் நல்ல உயரம். வழமையான உணவு வகைகளை சாப்பிடவில்லைனாலும், சாக்லேட், கேக் என விரும்பி உண்ணும் அவன் உடலும் சற்று புஷ்டியாக தான் இருக்கும். வயது ஐந்து தான், ஆனால் பார்ப்பவர்கள் ஏழு சொல்லலாம்.  ஏதோ பெரிதாக சரி இல்லையோ?’ என்ற கேள்வியோடு தன் மருமகனை ஆராயும் விதமாக பார்த்தான் ரகுநந்தன்.

    அபிநயாவுக்கு, பக்கென்று இருந்தது.  இவங்களால், நிலைமையை புரிஞ்சிக்க முடியலை. ஏத்துக்கவும் முடியலையே? இவங்களோட, இந்த  குணத்தால், தான் பிரச்சனையின் வீரியம் இந்தளவுக்கு வந்திருக்கு.என்று அபிநயா ரேவதியை பரிதாபமாக பார்த்தாள்.

   கவினை, பவானியம்மாள் அறையில் விட்டுவிட்டு, “கவினை, நீங்க கொஞ்சம் பக்குவமா கையாளனும்.” அபிநயா, தன்மையான குரலில் கூறினாள். கவின் முன், அவன் தாய்க்கு அறிவுரை கூற அவள் விரும்பவில்லை.

      இன்னும் பேச அபிநயாவிடம் பல விஷயங்கள் இருந்தாலும், எப்படி பேசுவது என்று அவள் தவிக்க, “எல்லா தப்பும், என் மேலங்கிற மாதிரியே எல்லாரும் பேசுங்க.” என்று வெடுக்கென்று கூறிவிட்டு, தலையை திருப்பி கொண்டு ரேவதி அறைக்குள் சென்றுவிட்டாள்.

    ‘இவள் மேல் மட்டுமா தவறு? கவினின் தந்தை சுரேஷ் மீதல்லவா மொத்த தவறும்அந்த மாலை பொழுதில் அரங்கேறிய தவறு, அதன் தொடர்ச்சியாக நடந்த விஷயங்கள் அல்லவா, கவினின் இந்த நிலைக்கு காரணம். பெற்றோர்கள் இருவரும் தானே காரணம்?’ என்று அபிநயாவின் மனம் இவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.

  ‘சொன்னால் புரிந்து கொள்வார்களா? இவர்கள் ஏற்றுக் கொண்டு அதற்கு தேவையானதை செய்யவார்களா?’ என்று அறைக்குள் சென்று கதவை படாரென்று சாற்றிய ரேவதியை அபிநயா, ஒற்றை புருவம் உயர்த்தி கவலையோடு பார்த்தாள்.

    ‘என் கூற்றை இந்த உலகம் நம்புமா?’ என்ற சந்தேகமும் அவளுள் எழுந்தது.             

      பொழுதுகள் விடியும்…