Poo01

“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் குரல் ஓங்கி ஒலிக்கத் தன் கைகளில் கொடுக்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கயிற்றை பல்லவியின் கழுத்தில் கட்டினான் மாதவன்.

மனதில் அப்படியொரு அமைதி விரவிக் கிடந்தது. அத்தனை எளிதில் தன் எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்பவனல்ல மாதவன். கொஞ்சம் இறுக்கமாகத்தான் எப்போதும் நடமாடிக் கொண்டிருப்பான்.‌ அவற்றையெல்லாம் தாண்டி இன்று அவன் முகத்தில் லேசானதொரு புன்சிரிப்பு தவழ்ந்தது. பவானியும் அற்புதாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

அற்புதாவிற்கு தம்பியின் மனது நன்றாகவே தெரியும். பல்லவி மேல் அவனுக்கு ஒரு நாட்டம் இருக்கிறது என்று அம்மா பவானியிடம் பலமுறை சொல்லி இருந்தாள். ஆனால் அம்மா அதை அத்தனை சுலபத்தில் நம்பிவிடவில்லை.

‘இந்த விசுவாமித்திரன் ஒரு பொண்ணைப் பார்த்து ஆசைப்பட்டுட்டாலும்!’ மகனது குணம் தெரிந்ததால் பவானி இப்படித்தான் நொடித்துக் கொள்வார். ஆனால் இப்போது மகள் சொன்னதிலும் உண்மை இருக்குமோ என்றுதான் தோன்றியது.

“நான்தான் சொன்னேனில்லை?”

“ஆமா அற்புதா! நீ சொல்லும் போது நான் நம்பவே இல்லை. ஆனா இப்போ எம்புள்ளை முகத்தைப் பார்க்கும் போதுல்ல தெரியுது. இந்தச் சாமியாருக்கும் ஆசை இருந்திருக்கும்னு!” அம்மா ஆச்சரியப்பட களுக்கென்று சிரித்தாள் அற்புதா.

இந்தக் கேலி எதுவும் புரியாமல் பல்லவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான் மாதவன். உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருத்தது அந்த முகத்தில். நியாயம்தானே! இத்தனை நாளும் டவுனில் வாழ்ந்த பெண். இப்போது இந்த கிராமத்தில் கொண்டு வந்து வாழ் என்றால் அவளுக்கும் கஷ்டமாகத்தானே இருக்கும். தன் புது மனைவிக்காக வக்காளத்து வாங்கியது மாதவனின் மனம்.

“அக்கா! கொஞ்சம் சிரிக்கா.” தன் காதில் முணுமுணுத்த தங்கையைத் திரும்பிப் பார்த்தாள் பல்லவி. தங்கையைப் பார்த்த மாத்திரத்தில் கண்கள் கலங்கிப் போனது பெண்ணிற்கு. அவர்கள் வீட்டிலேயே பல்லவிக்கு மிகவும் இஷ்டம் என்றால் அது அவள் தங்கை துளசிதான்.

“ஐயையோ! என்னாச்சுக்கா?” துளசி படபடத்துப் போனாள். சட்டென்று மாதவனும் திரும்பிப் பார்க்க உண்மையிலேயே இளையவள் பயந்து போனாள்.

“ஒன்னுமில்லை அத்தான். அக்காக்குப் புகை ஒத்துக்கலை. அதான் கண்ணு கலங்குது.” சின்னப் பெண்ணின் சமாதானத்தில் மாதவனும் புன்னகைத்தான். உண்மையைச் சொல்லப் போனால் தன் மனைவியின் மனத்துயர் அவனுக்கும் புரிந்துதான் இருந்தது.

மாதவனின் அப்பாவும் பல்லவியின் அப்பாவும் நல்ல நண்பர்கள். நண்பர்களாக இருந்த போதும் அத்தனைப் போக்குவரத்து கிடையாது. ஏனென்றால் பல்லவியின் குடும்பம் இருந்தது டவுனில். மாதவனின் அப்பா பக்கா கிராமத்தான்.

வயல், தோட்டம், பண்ணை, கிணறு என்று கிராமத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனிதர். ஆனால் பல்லவியின் அப்பா அப்படியல்ல. கொஞ்சம் டாம்பீகத்தில் ஆர்வம் உண்டு. கிராமத்தான் என்றாலும் பட்டணத்து மோகம் அவரை ஈரக்க டவுனுப் பக்கம் போய்விட்டார்.

மூன்றும் பெண் பிள்ளைகள். ஆனால் அந்த எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் இஷ்டத்திற்கு வாழும் மனிதர். அதில் பல்லவியின் அம்மாவிற்குப் பெரிய வருத்தம் உண்டு. பெண்பிள்ளைகள் என்று பார்க்காமல் மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிப்பித்தார். மூத்தவள் ஜெயா ஒரு ஆசிரியை. அவள் திருமணத்தைத் தனது வசதிக்கும் மீறி தடபுடல் பண்ணி இருந்தார் மனிதர். வரவுக்கேற்ற செலவு என்பது மனிதரிடம் மருந்திற்கும் இல்லை. செலவிற்கேற்ப வரவையும் பெருக்கிக் கொள்ளத் தெரியவில்லை.

டவுனுக்கு உரம் பூச்சிமருந்து என்று வாங்கப்போகும் போதெல்லாம் ஒரு நடை நண்பரின் வீடுவரை போய்வருவார் சோமசுந்தரம், மாதவனின் அப்பா. பல்லவிக்கு இன்றுவரை அந்த சோமசுந்தரம் மாமாவைத்தான் தெரியும். அவருக்கொரு மகன் இருந்து கூடிய சீக்கிரத்தில் அவன் கையால் அவள் தாலியும் வாங்கிக் கொள்ளப் போகிறாள் என்பது கனவிலும் நினைக்காத ஒன்று. ஆனால் அந்தப் புண்ணியத்தை அவள் அப்பா கட்டிக் கொண்டார்.

வரவிற்கு மீறிய செலவுகள் வைத்திருந்த பல்லவியின் அப்பா தியாகராஜன் எப்போதும் கொஞ்சம் பசையோடு இருக்கும் நண்பரிடம் லேசாகக் கடன்பட ஆரம்பித்தார். சிறுகச் சிறுக வாங்கிய பணம் ஏறிக்கொண்டே போனது. இருந்தாலும் சோமசுந்தரம் கண்டுகொள்ளவில்லை. தனது நண்பர்தானே என்று இருந்து விட்டார்.

மூத்த பெண் ஜெயாவின் திருமணத்தின் போதும் தியாகராஜன் ஒரு பெரும் தொகையைக் கடனாகக் கேட்கவும் அப்போதும் சோமசுந்தரம் தயங்கவில்லை. அவரும் ஒரு பெண்பிள்ளையைப் பெற்றவர் என்பதால் நண்பரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டார். எல்லாமாக கடன் ஒரு பெரும் தொகையை நெருங்கி இருந்தது.‌

திடீரென்று சோமசுந்தரத்திற்கு உடம்பிற்கு முடியாமல் போகவும் கணக்கு வழக்குகள் அத்தனையும் மகன் மாதவன் வசம் வந்திருந்தது. அப்போதுதான் தியாகராஜனிற்கு சோதனைக் காலம் ஆரம்பித்தது. தந்தையைப் போல மகன் அத்தனைப் பெரும்போக்காக நடந்து கொள்ளவில்லை. பெரிய தொகையை நெடுநாளாக வைத்திருக்கும் அப்பாவின் நண்பருக்குக் கெடு விதிக்கப்பட்டது.

“பொண்ணும் மாப்பிள்ளையும் அக்கினியைச் சுத்தி வலம் வாங்கோ!” ஐயர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல சிறிது நேரத்திற்கு அந்த இடத்தில் சம்பிரதாயங்கள் நிறைவேற்றப் பட்டன. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மணமக்கள் மண்டபத்தில் இருந்த ஓர் அறையிலேயே ஓய்வெடுத்துக் கொண்டார்கள். மாதவன் ஏதோ வேலையாகக் கொஞ்சம் வெளியே போக பல்லவி வீட்டினர் அறைக்குள் புகுந்து கொண்டனர்.

“பல்வவி… உன்னோட மாமியாரும் நாத்தனாரும் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியுறாங்கடி.” ஜெயா சொல்லவும் அவளை ஒரு முறைப்பு முறைத்தாள் பல்லவி. இப்போது ஜெயா அம்மாவைப் பார்க்க அவர் முகத்திலும் கவலை படிந்துவிட்டது.

“இங்கப்பாரு பல்லவி. எதுக்கு ஜெயாவை முறைக்கிறே? அவ சரியாத்தான் சொல்லுறா. அம்மாவும் பொண்ணும் எந்தப் பந்தாவும் இல்லாம எவ்வளவு பதமா நடந்துக்கிறாங்க தெரியுமா?”

“அத்தான் கூட நல்ல மாதிரியாத்தான் தெரியுறாங்க.” இது துளசி.

“அப்போ நீயே கட்டி இருக்கலாமே?” சட்டென்று தங்கை மேல் பாய்ந்தாள் பல்லவி.

“அது முடியாதே! அந்த முரட்டு அத்தானுக்கு இந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாமே!” துளசி சொல்ல மூன்று பெண்களுமே சிரித்தார்கள்.‌ பல்லவியின் முகம் கடுகடுத்துப் போனது.

“இங்கப்பாரு பல்லவி. வாழ்ந்து பார்த்தவடி இந்த அம்மா. அனுபவத்துல சொல்றேன் கேட்டுக்கோ. மாப்பிள்ளை சொக்கத் தங்கம். அதைப் போகப் போக நீயே புரிஞ்சுப்பே. உங்கப்பா வேணும்னா வேற வழியில்லாம இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சு இருக்கலாம். ஆனா நான் அப்படியில்லை. எனக்கு மாப்பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருந்தது. கிராமத்துல இருக்கிறதைத் தவிர அவர்கிட்ட எனக்கு வேற எந்தக் குறையும் தெரியலை.”

அவர்கள் அத்தனைப் பேரும் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பல்லவியின் மனம் அடங்க மறுத்தது. வயற்காட்டில் வேலை செய்யும் மனிதருக்கு கம்பியூட்டர் படித்த பெண் கேட்கிறதா? உள்ளுக்குள் மனது இப்படித்தான் போர்க்கொடி பிடித்தது.

அதுகூடப் பரவாயில்லை. வயற்காட்டில் வேலை செய்பவர்கள் என்றால் என்ன அவ்வளவு கேவலமா? அதைக் கூட அவள் பெரிது பண்ணி இருக்கமாட்டாள். ஆனால்… மாதவன் நடந்துகொண்ட முறையைத்தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

பணத்தையே குறிக்கோளாக வைத்துக் காய் நகர்த்தியவன் என்றைக்கு அவளைப் பார்த்தானோ அன்றிலிருந்து தலைகீழாக மாறிவிட்டான். ஆரம்பத்தில் பல்லவியின் அப்பாவிற்கும் இந்தச் சம்பந்தத்தில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை. அவர் போதாத காலம் கடைசியில் வேறு வழியில்லாமல் தலையாட்டி இருந்தார்.

கம்பியூட்டரில் பெரிய படிப்புப் படித்திருக்கும் தன் பெண்ணை இந்தப் பட்டிக்காட்டில் கட்டிக்கொடுக்க அவருக்குக் கொஞ்சமும் பிரியமில்லை. ஆனால் அதையெல்லாம் பார்க்கும் நிலைமையில் அவர் இப்போது இல்லை. மனிதர் சம்மதித்து விட்டார். ஆனால் பல்லவி உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள். ஒருவேளை மாதவன் அவளிடம் மனம்விட்டுப் பேசியிருந்தால் அவள் மனம் இளகியிருக்குமோ என்னவோ! மாதவன் அதைச் செய்யத் தவறிவிட்டான். பணத்துக்கு ஈடாகத் தான் பண்டமாற்று செய்யப்படுவது போலவே உணர்ந்தாள் பல்லவி. அந்த நினைப்பே அவளுள் வேரூன்றியும் இருந்தது.

***

கூட்டம் கொஞ்சம் கலைந்திருந்தது. மண்டபத்தைக் காலி பண்ணிவிட்டு எல்லோரும் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்பாவிற்கு உடல்நலக் குறைவு என்பதால் மாதவன்தான் எல்லாவற்றையும் பார்க்க வேண்டி இருந்தது.

மேலும் கீழுமாக இரண்டடுக்கு வீடு. சோமசுந்தரத்திற்கு உடம்பிற்கு முடியாமல் போன பிற்பாடு அவரும் மனைவியும் மாடி ஏறுவதில்லை. ஜாகையைக் கீழேயே வைத்துக் கொண்டார்கள்.‌ அற்புதாவும் திருமணமாகிப் போய்விட்டதால் மாடி முழுவதும் எப்போதும் மாதவன் ஆட்சிதான். இதையெல்லாம் பார்த்தபோது பல்லவியின் அம்மா சரோஜாவிற்கு மிகவும் இதமாக இருந்தது. எந்த அல்லுத் தொல்லும் இல்லாத வீட்டில் தன் மகள் வாழவந்திருப்பது மனதிற்குச் சமாதானமாக இருந்தது அந்தத் தாய்க்கு.

ஜெயாவும் துளசியும் வீட்டைப் பார்த்தும் பாராதது போல கவனித்துக் கொண்டார்கள்.

” ஜெயாக்கா… என்னக்கா? வீடு இவ்வளவு பெருசா இருக்கு?”

“அதான் துளசி நானும் பார்க்கிறேன். நம்ம வீட்டைப்போல நாலு மடங்கு இருக்குமில்லை?”

“ஆமாக்கா… பல்லவிக்கா ரொம்ப லக்கியில்லை?”

“அது எங்கடி அவளுக்குப் புரியுது. எதையாவது சொன்னா முறைச்சுப் பார்க்கிறா.”

“ம்… அவளுக்கு நல்ல பெரிய வேலைக்குப் போகணும்னு ஆசை. அதையெல்லாம் சொதப்புற மாதிரி இந்தக் கல்யாணம் வந்ததுதான் கோபமா இருக்கும் போல.”

“அப்ப எதுக்குடி பார்த்த வேலையை விட்டா? அங்கயும் நல்லாக் கை நிறையச் சம்பளம் குடுத்தாங்கதானே?”

“டீம் லீடரைப் புடிக்கலையாம் அக்காக்கு.”

“இதெல்லாம் ஒரு பேச்சா துளசி? டீம் லீடரைப் புடிக்கலைன்னு யாராவது நல்ல வேலையை விடுவாங்களா? எனக்கும்தான் எங்க ஹெட் டீச்சரைப் புடிக்காது. அதுக்காக வேலையை விடலாமா? இந்தக் காலத்துல ஒரு நல்ல வேலையைத் தேடிப் புடிக்கிறது எவ்வளவு கஷ்டம்?”

“அதுவும் சரிதான்.”

“நம்ம அப்பா குடுக்க வேண்டிய கடனுக்காக இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா வீட்டு மனுஷங்க நல்லவங்க மாதிரித்தான் தெரியுறாங்க. இவளோட மாமியார்க் காரி தங்கம்டி.”

“அது மட்டுமில்லைக்கா… அத்தானோட பார்வை இவளை விட்டு அங்கிட்டு இங்கிட்டு நகரலைத் தெரியுமா?” ரகசியக் குரலில் கடைக்குட்டி சொல்ல மூத்தவள் செல்லமாக ஒரு அடி வைத்தாள்.

“சின்னக் கழுதை… நீ இதைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தியாக்கும்!” அக்கா அடிக்கவும் அந்தக் காலேஜ் குயில் வாய்பொத்திச் சிரித்தது.

“காசுக்காகக் கல்யாணங்கிறதெல்லாம் சும்மா ஜெயாக்கா. அத்தானுக்கு பல்லவிக்காவை அவ்வளவு பிடிச்சிருக்கு. பொண்ணு கேட்டா நம்ம அப்பா குடுக்க மாட்டாங்கன்னு தெரியும். அதான் இப்படிக் காய் நகர்த்தி இருப்பாங்க.”

“ஆமாடி துளசி. எனக்கும் அப்படித்தான் தோணுது. ஆளும் பார்க்க நல்லாத்தானே இருக்காரு. எதுக்குடி இவ கஞ்சியைக் குடிச்சா மாதிரி வெறைப்பா நிக்குறா?”

“அத்தான் பார்க்க ஜம்முன்னுதான் இருக்காரு… ஆனாலும் அக்கா நிறத்தோட ஒப்பிடும்போது…” இளையவள் இப்போது ராகம் பாடினாள். இவர்கள் வீட்டில் எல்லோரும் நல்ல வெண் பளிங்கு நிறத்தில் இருப்பார்கள். அதிலும் பல்லவி நல்ல திருத்தமான முகத்தோடு பார்க்க லட்சணமாக இருப்பாள்.

“அப்படியில்லை துளசி. பொண்ணுங்கதான் நல்ல நிறமா இருந்தா பார்க்க அழகா இருக்கும். அப்படியும் சொல்ல முடியாது. இப்போ வர்ற எத்தனைக் கறுப்பு ஹீரோயின்ஸ் சும்மா செமையா இருக்காங்க. ஆம்பிளைங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லைடி. கைநிறைய சம்பாதிச்சு வர்றவளைக் கண்கலங்காம ராணி மாதிரிப் பார்த்துக்கிட்டா பொண்டாட்டி அந்த இடத்துலேயே சரண்டர்தான் தெரியுமா?”

“ம்…”

“பல்லவி புருஷன் அப்படியெல்லாம் ஒன்னும் கறுப்பு இல்லைத் தெரியுமா?”

“ஐயையோ! அத்தான் கறுப்பு இல்லைக்கா. அக்காவோடு ஒப்பிடும்போது…”

“இவளை யாருடி இத்தனை வெள்ளையாப் பொறக்கச் சொன்னது?”

“அதானே?” அக்காளும் தங்கையும் கிளுக்கிச் சிரித்துக் கொண்டார்கள்.

அன்றிரவே அடுத்த சம்பிரதாயத்திற்கும் நேரம் குறித்திருந்தார்கள். பெண் வீட்டார்கள் அத்தனைப் பேரும் அன்றே கிளம்பி விட்டார்கள். அவ்வளவு பெரிய தூரம் என்று சொல்வதற்கில்லை. காரில் போவதென்றால் இரண்டு மணிநேரப் பயணம்தான்.

அத்தோடு பல்லவியின் அப்பா தியாகராஜன் மாப்பிள்ளை வீட்டில் தங்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. தன் கழுத்தில் கத்தியை வைத்துத் தன் பெண்ணை அடைந்தது அவருக்கு அத்தனை உடன்பாடாக இல்லை.

ஊதாரியாக இருந்த போதும் ஒரு நல்ல தகப்பன்தான் தியாகராஜன். மூன்றும் பெண்ணாகப் பிறந்த போதும் கூட அலட்டிக் கொள்ளாத மனிதர். மனைவி புலம்பும் போதெல்லாம்…

‘நான் எதுக்குச் சேமிக்கணும்? ராணி மாதிரி எம் பொண்ணுங்களை வளர்த்திருக்கேன். தேவைப்பட்டவன் சும்மா வந்துக் கட்டிக்குவான்.’ இப்படித்தான் சொல்வார்.

மூத்தவள் ஜெயாக்கும் அப்படித்தான் ஒரு மாப்பிள்ளை அமைந்தது. பாங்கில் வேலைச் செய்யும் மனோகர் ஆசைப்பட்டு வந்து மணந்து கொண்டான். இவராகச் செலவு செய்ததே ஒழிய அவர்கள் எதுவுமே கேட்கவில்லை. அதில் மனதருக்கு அத்தனைக் கர்வம்.

இப்போது பல்லவி விடயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. என்ன? மாப்பிள்ளை கிராமத்தான். அதுவும் வெறும் டிகிரி. அங்குதான் அவர் தோற்றுப் போனார். தன் மூன்று குழந்தைகளிலும் பல்லவிதான் நல்ல அழகு என்பது அவர் எண்ணம். ஒரு ராஜகுமாரன்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளையாக வருவான் என்ற அவர் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டான் மாதவன். அந்தக் கோபம் அவருக்கு.

ரூமின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் பல்லவி. குளித்துவிட்டு பட்டுக் கரையிட்ட ஒரு காட்டன் புடவைக்கு மாறியிருந்தாள். அவளை அங்கே யாரும் எதற்கும் வற்புறுத்தவில்லை. அதுவே பெண்ணின் மனதிற்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

அவள் மாமியார் மல்லிகைப் பூவைக் கையில் வைத்துக் கொண்டு அவளிடம் அனுமதி கேட்டது கூட அவளுக்கு இதமாகத்தான் இருந்தது.

“பூ கொஞ்சம் வெச்சு விடட்டாம்மா?”

“சரி…” அதற்கு மேல் என்னப் பேசுவதென்று பல்லவிக்குத் தெரியவில்லை. இயல்பாக அவரோடு இணைந்து கொள்ளவும் அவளால் முடியவில்லை.

“மாடியிலதான் ரூம் இருக்கு. நீ போம்மா.” அவர் சொல்லவும் தலையாட்டியபடி மேலே வந்துவிட்டாள். இந்தத் திரைப்படங்களில் எல்லாம் காட்டுவதைப் போல எங்கே அலங்காரமும் பண்ணி கையில் பால் சொம்பையும் கொடுத்து விடுவார்ளோ என்று அவள் பயந்து போயிருந்தாள். நல்லவேளை அந்த அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

ரூமும் சாதாரணமாக இருந்தது, எந்த அலங்காரங்களும் இன்றி. புது விரிப்பு விரிக்கப்பட்டு மல்லிகைப்பூ உதிரியாகத் தூவப்பட்டிருந்தது. கட்டிலின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் மல்லிகைச் சரம் மெல்லிய இழையாகச் சுற்றப்பட்டிருந்தது, அவ்வளவுதான்.

தன் முதுகிற்குப் பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சட்டென்று திரும்பினாள் பல்லவி. மாதவன்தான் உள்ளே வந்து கொட்டிருந்தான். ரூமிற்குள் தன் புத்தம் புது மனைவியைப் பார்த்ததும் அவன் கண்கள் கொஞ்சம் மென்மையைத் தத்தெடுத்தது.

“உக்காரு பல்லவி.” இயல்பாக அவளை வரவேற்றான் கணவன்.

“பரவாயில்லை…” லேசாகத் தடுமாறியவள் ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள். மாதவனின் கண்கள் லேசாகச் சுருங்கிப் பின் தன்னை மீட்டுக் கொண்டது.

“இன்னைக்கு அலங்காரத்துல ரொம்ப அழகா இருந்த பல்லவி.” எல்லாக் கணவன்மாரும் முதலிரவில் சொல்லும் வார்த்தைதான். ஆனால் எல்லா மனைவிமாரையும் போல பல்லவி அதில் மகிழ்ந்து விடவில்லை.

“நான்… உங்ககிட்டப் பேசணும்.” அவள் பதட்டம் அவனுக்குக் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.

“பேசு.” என்றான் இள நகையுடன்.

“எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” குரோதமாக வந்தது அவள் கேள்வி. மாதவன் இப்போதும் லேசாகச் சிரித்தான்.

“இதென்ன கேள்வி பல்லவி? பிடிச்சிருந்தது பண்ணிக்கிட்டேன்.”

“எனக்குப் பிடிக்க வேணாமா?” ஆணித்தரமான அந்த வாதத்தில் மாதவன் கட்டிலில் அமர்ந்து தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டான்.

“பிடிக்காமப் போறதுக்குக் காரணம் இருக்கா என்ன?” அவன் குரல் உறுதியாக வந்தது.

“எங்கிட்ட ஆயிரம் காரணம் இருக்கு.”

“ஓ… அவ்வளவு இருக்கா? எல்லாம் வேணாம். ஒன்னு ரெண்டைச் சொல்லு.” அந்தக் குரலில் இருந்த கேலி அவளைச் சீண்டியது.

“உங்களோட இந்தத் திமிரை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை.”

“எனக்குத் திமிரா?”

“இல்லையா? கல்யாணம் பண்ணப் போற பொண்ணுக்கிட்ட ஒரு வார்த்தை என்னை உனக்குப் பிடிச்சிருக்கான்னு உங்களுக்குக் கேக்கத் தோணிச்சா? இப்பக்கூடப் பிடிக்காமப் போறதுக்குக் காரணம் இருக்கான்னுதானே கேக்குறீங்க?” அவள் வெடித்தாள். மாதவன் இப்போது நிறையவே நிதானித்தான். இப்படியெல்லாம் பெண்களோடு அவன் அதிகம் பேசியதில்லை.

தன் அக்கா அற்புதா போல அல்ல பல்லவி. டவுனில் வளர்ந்த, படித்த பெண். வேலைக்கெல்லாம் போயிருக்கிறாள். பதமாகத்தான் கையாள வேண்டும் என்று உணர்ந்து கொண்டான்.

“இங்கப் பாரு பல்லவி. நம்ம ஊர் வழக்கப்படி கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை பொண்ணுக்கிட்டப் பேச முடியாது. அது நம்ம பண்பாடு இல்லை.”

“ஐயோ! எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்கெல்லாம்?”

“நீ இப்போ இவ்வளவு வருத்தப்படுற அளவுக்கு என்ன நடந்துப் போச்சு?” இப்போது பல்லவி தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

‘என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நான் அழுகிறேன். இவன் எத்தனைச் சுலபமாக என்னிடம் கேள்வி கேட்கிறான்?’ அதற்குமேல் பெண் அமைதியாகி விட்டாள். பேசிப் பயனில்லை என்று தோன்றியதோ!

“பல்லவி!” தன் தோள் தொட்ட கணவனின் கரத்தைப் படக்கென்று தட்டிவிட்டாள் மனைவி. இப்போது மாதவனின் நெற்றி சுருங்கியது.

“தொடாதீங்க.” சீறினாள் பெண்.

“ஓ… நிறைய சினிமா பார்ப்பியோ?”

“எனக்கு அதுக்கு நேரம் இருந்ததில்லை.”

“பரவாயில்லை… ரொம்ப டயர்டா தெரியுறே. வந்து தூங்கு.” சொன்னவனைக் கேள்வியாகப் பார்த்தாள் பல்லவி.

“ரெண்டு பேருமே களைச்சுப் போய் இருக்கோம். இப்போப் பேசுற எதுவுமே சரியா இருக்காது. நீ தூங்கு பல்லவி. காலையில பேசிக்கலாம்.” சொல்லிவிட்டு அவன் சற்று நகரக் கட்டிலில் போய் அமர்ந்தாள் பல்லவி. தூவியிருந்த மலர்கள் அவளைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தன. ஜன்னலோரம் நின்றிருந்தவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள் பெண். சற்று நேரத்தில் அசதி மேலிடத் தூங்கியும் போனாள்.

ஆனால் மாதவன் அத்தனை சுலபத்தில் தூங்கிவிடவில்லை. நிதானமாக வேஷ்டியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்தவன் ரூமிற்குள் நடைபயின்ற படி இருந்தான். ஆசைப்பட்டு மணந்த பெண். இந்தச் சூழலோடு பொருந்திப் போகச் சற்று சிரமப்படுவாள் என்றுதான் எதிர்பார்த்தான். இப்படியான வார்த்தைகளை அவள் வாயிலிருந்து அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் நிதானமாகவே நின்றிருந்தான் மாதவன்… முதலிரவு அறையில் ஒற்றையாக!