Eedilla Istangal – 13

Eedilla Istangal – 13

சாருலதா வீடு

6:30-லிருந்து, இரண்டு மணி நேரத்திற்கு முன், அதாவது நேரம் 4:30.

 

அன்று மருத்துவமனையிலிருந்து, வீட்டிற்குச் சீக்கிரமாக வந்திருந்தாள்.

 

பேத்திக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர், சாருவின் மாமனார் மாமியார்.

 

சாரு உள்ளே வந்ததைப் பார்த்து, “என்ன சாரு, இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்க?” என்று கேட்டார்.

 

“அது… அத்தை…” என்று தயங்கி ஆரம்பித்தவள், “ரெஃப்ரஷ் பண்ணிட்டு வந்து… ஒரு… ஒன்னு சொல்லணும்” என்று லேசான தடுமாற்றத்தோடு முடித்தாள்.

 

“சரி போ” என்று சொல்லி, மீண்டும் பேத்தியிடம் கவனத்தைத் திருப்பினார். 

 

சற்று நேரத்தில், முகம் கழுவிக் கொண்டு, மாமியார் அருகில் வந்தமர்ந்தாள். 

 

“அத்தை” 

 

“ம்ம், சொல்லு சாரு. என்ன சொல்லணும்?”

 

“5:30க்கு ஒருத்தர் வர்றேன்னு சொல்லியிருக்காரு” என்று முன்னுரை ஏதுமின்றி பேசினாள். 

 

“யாரு?”

 

“அது, பேரு பாபி. லாயர்…”

 

“ஓ! கோர்ட் கேஸ் விஷயமாவா?”

 

“இல்லை மாமா. இது வேற…”

 

“வேறென்னா என்ன??”

 

இப்போது விளக்கவுரை எழுத முடியாமல், தவித்தாள். 

 

அவளின் அமைதியைப் பார்த்த மாமனார், “சரி… வரட்டும் பார்க்கலாம்” என்று முடிவுரை எழுதினார். 

 

அதன்பின், நடந்து சென்ற ஒவ்வொரு நொடிகளும்… சாருவின் நாடித் துடிப்பை ஓடச் செய்தன. 

 

நேரம் 5:30 கடந்து சென்றது. பாபி வரவில்லை. 

 

ஒரு ஆறு மணி அளவில், சாருவின் மாமனார், “என்னாச்சு சாரு? அவர் வரலையா?” என்று கேட்டார்.

 

‘என்ன பதில் சொல்ல?’ என்று சாருவிற்குத் தெரியவில்லை.

 

“ஃபோன் பண்ணிப் பாரேன்”

 

“ம்ம்ம்” என்று சொல்லி, பாபியின் எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள். 

 

அழைப்பு போய்க்கொண்டே இருந்தது. அழைப்பைத் துண்டித்து விட்டாள். 

 

“என்னாச்சு சாரு?”

 

“கால் அட்டன் பண்ணலை அத்தை. ரிங் போய்க்கிட்டே இருக்கு”

 

“ஓ” என்றவர், “மாலி தூங்கிட்டா, உள்ளே கொண்டு போய் படுக்க வை” என்றார்.

 

மாமியாரிடமிருந்து, குழந்தையை வாங்கிக் கொண்டு, தன் அறைக்குச் சென்றாள். மாலியை மெத்தையில் படுக்க வைத்தாள். 

 

வெளியில் செல்ல மனமில்லாமல், அவளும் மெத்தை மேல் சாய்ந்து கொண்டாள். 

 

அலைபேசியை எடுத்து மீண்டும் ஒருமுறை பாபி எண்ணிற்கு முயற்சி செய்தாள். தற்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

 

அலைபேசியைத் தூக்கி, மெத்தையின் ஓரத்தில் எரிந்துவிட்டு, நன்றாகப் படுத்து விட்டாள். 

 

நேரம் செல்லச் செல்ல எரிச்சல் வந்தது. 

 

கடிகார முள் ஏழு என்று நிற்கும் போது, அவளை ‘எந்திரி’ என்று சொல்லும் விதமாக அறைக் கதவு தட்டப்பட்டது. 

 

எழுந்து சென்று திறந்தாள். சாருவின் மாமியார்தான். 

 

அது சின்ன வீடுதான். வரவேற்பறை சோஃபாவில் பாபி அமர்ந்திருப்பது தெரிந்தது. எதிரில் இருந்த நாற்காலியில், சாருவின் மாமனார் இருந்தார். 

 

“சாரு வா, நீ சொன்னவரு வந்திருக்காரு” என்று மாமியார் சொன்னதும்,

 

“ம்ம்… இதோ” என்று தலையைக் கொஞ்சம் சரி செய்து கொண்டு, வரவேற்பறையில் வந்து நின்றாள்.

 

பாபி ஒரு பக்கம், சாருவின் மாமனார், மாமியார் ஒரு பக்கம் என இருந்தனர். சாரு நடுவில் நின்று கொண்டாள். 

 

மெல்லிய ஒலியில் தபேலா இசை கேட்டுக் கொண்டே இருந்தது. குழந்தை தூங்கி விட்டபின், இப்படி இசைக் கேட்பது, இந்த வீட்டின் வழக்கம் போல! 

 

‘யார் தொடங்குவது?’ என்றொரு மௌனக் கேள்வி, அங்கே சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது. 

 

“சாரு… எதுவும் சொல்லலை. நீங்க வருவீங்கன்னு மட்டும்தான் சொன்னா” என்று சாருவின் மாமனார் பேச ஆரம்பித்தார். 

 

“பர்ஸ்ட் என்னைப் பத்திச் சொல்லிடுறேன். நான் பாபி… லாயர்” 

 

“அதெல்லாம் சொன்னா… ” என்ற மாமியாருக்கு, அதற்கு மேல் என்ன கேட்க என்று தெரியவில்லை. 

 

மீண்டும் ஒரு மௌளம். தபேலா இசை மட்டும் கேட்டது. 

 

“சாருவோட ப்யூச்சர் பத்திப் பேசணும்” என்று பாபி மௌனத்தை விரட்டினான்.

 

*****

ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்… 7:00 மணி 

 

இத்தனை வருடக் காத்திருப்பை எல்லாம், தோற்கடிக்கும் காத்திருப்பு என்று உணர்ந்து கொண்டிருந்தாள், தாரா!

 

மேசையின் மேலிருந்த புத்தகத்தை திறந்து பார்க்கவும்… பின் மூடி வைக்கவும்… என்று காத்திருப்பு காலத்தைக் காகிதங்கள் கொண்டு கடந்து கொண்டிருந்தாள். 

 

திடீரென்று ஒரு சந்தேகம், வருவானா? மாட்டானா? என்று! 

 

உடனே அலைபேசியை எடுத்து தேவாவிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

 

பைக்கை ஓரத்தில் நிறுத்தி, அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்க தாரா” என்றான். 

 

அவன் நிற்கும் சாலையின் வாகன ஒலிகள் அலைபேசி வழி வந்தாலும், “எங்க இருக்கீங்க தேவா?” என்று கேட்டாள். 

 

“ஆன் தே வே”

 

“ஓ! இதைக் கேட்கத்தான் ஃபோன் பண்ணேன்” 

 

“சரி வச்சிடறேன்” என்றவனிடம், 

 

“தேவா வந்திடுவீங்கள??” என்று கேட்டாள். 

 

“ஆன் தே வே-ன்னு சொல்றேன், இப்படிக் கேட்கிறீங்க”

 

“ஸ்ஸ்.. ஸாரி”

 

“அனதர் ட்வென்டி மினிட்ஸ்ல, அங்க இருப்பேன்”

 

“ம்ம்ம்” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளிடம், 

 

“ஒன் திங் தாரா” என்று கூப்பிட்டான்.

 

“சொல்லுங்க தேவா”

 

“பைக் ஓட்டிக்கிட்டு இருக்கேன்… ஸோ இனிமே கால் பண்ணாதீங்க”

 

‘இதுக்குத்தான?’ என்ற சலிப்புடன், “ஓகே ஓகே” எனச் சொல்லி வைத்துவிட்டாள். 

 

திரும்பவும் சுற்றியுள்ள அலங்காரங்களைப் பார்த்தாள். 

 

வருடங்கள் தாண்டி காதலைக் காக்க வைத்தவளுக்கு, வழியில் வருகின்றவனுக்காகக் காதலை காக்க வைக்க இயலவில்லை!

 

தேவா சொன்ன இருபது நிமிடம் கழித்து, அந்த ரூப் டாப் ரெஸ்டாரன்ட்…

 

கீழே பைக்கை பார்க் செய்துவிட்டு வந்தவன், மின்தூக்கியில் ஏறினான். 

 

அந்தக் கட்டடத்தின் மேல் தளத்திற்கு வந்தவனுக்கு, அங்கு அமைக்கப்பட்ட அலங்காரங்களைப் பார்த்து… ஒருகணம் திகைத்தான்.

 

இருந்தும், தாரா அமர்ந்திருக்கும் மேசையை நோக்கி நடந்து வந்தான். 

 

தேவா அருகில் வந்ததும், தாரா எழுந்து நின்றாள்.

அவளின் முகம் முழுதும் புன்னகை பூக்கள்.

 

“ஹாய்” என்றாள்.

 

“ம்ம்ம்”

 

இருக்கையைக் காட்டி, ‘உட்காருங்க’ என்பது போல் சைகை செய்தாள்.

 

அவனும் அமர்ந்துகொண்டான். அவளும் அமர்ந்தாள். 

 

மேசையின் மேலிருந்த புத்தகத்தின் தலைப்பு, பலூன்களின் வடிவங்கள், இசைக்கப்பட்ட பாடல் என ஒவ்வொன்றும், அவளின் இதயத்தை இயம்பியது. 

 

இத்தனையையும், தேவா இமைகள் அசையாமல் பார்த்தான்.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென ‘லவ் யூ தேவா’-ன்னு சொன்னா எப்படி இருக்கும் என்று நினைத்தாள். 

 

ஆனால், கண்ணாடி முன் சொன்ன ‘லவ் யூ தேவா’… முன்னாடி இருப்பவனைப் பார்த்து வெட்கம் கொண்டன! 

 

“தேவா” என்ற அழைப்பிலே, அவளது மனதினைக் காட்டினாள்.

 

ஆனால், அவனோ மௌனம் காட்டினான்.

 

கைக்கெட்டிய தூரத்தில் தன் காதல் அமர்ந்திருப்பதை காண்கையில், கன்னியவள் காற்றில் மிதந்தாள்! 

 

மீண்டும், “தேவா” என்று அழைத்தாள்.

 

“ஏன் இப்படி ஒரு அர்ரேனேஜ்மெண்ட்” என்று கேட்டான்.

 

“பேசணும்னு சொன்னேன்ல தேவா…”

 

“ஓ!” 

 

“பேசட்டுமா??” 

 

“அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசலாமா??”

 

“இல்லை, நான் பேசி முடிச்சதுக்கு…”

 

“வேண்டாம். இன்னைக்கு நான் பேசுறேன்… நீங்க கேளுங்க” என்று பேச ஆரம்பித்தான். 

 

*****

 

சாருலதா வீடு 

 

“ப்யூச்சர்??” என்று யோசித்த சாருவின் மாமனார்…

 

“உங்க வீட்டைப் பத்திச் சொல்லுங்க. சாருவை எப்படித் தெரியும்?” என்று கேள்வி கேட்டார். 

 

பாபி பதில் சொன்னான். அதன் பின்னும், நிறைய கேள்விகள்… நிறைய பதில்கள். அவருக்குத் திருப்தி வந்த பின்னே நிறுத்தினார். 

 

‘அடுத்து என்ன பேச?’ என்று தெரியாத ஒரு அமைதி. தபேலா இசை மட்டும் கேட்டது. 

 

“நீங்க… உங்க முடிவு??” என்று பாபி கேள்வியாக நிறுத்தினான். 

 

“நோ நோ… இதுல சாருவோட முடிவுல நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்” என்று விசாரித்தப் பின், அவள் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 

 

“ம்ம்ம்”

 

“அப்பா ஏன் வரலை?” 

 

அவரைப் பற்றி மேலோட்டமாகச் சொன்னான். 

 

“ஓ! அப்படியா” என்றவர், “எங்க பையன்கிட்ட ஒரு தடவை பேசுறீங்களா??” என்று கேட்டார். 

 

“ஸூயர்”

 

“சாரு, நீ போய் காஃபி போட்டுக் கொண்டு வா” என்றார் சாருவின் மாமியார். 

 

“இல்லை, இப்போ வேண்டாம்” என்று பாபி மறுத்துவிட்டான். 

 

இதற்கிடையே மூத்த மகனிற்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார், சாருவின் மாமனார். 

 

நடப்பதைப் பார்க்கையில், தான் வந்ததன் காரணத்தை, சாரு சொல்லும் போதே கணித்திருப்பார்கள் என்று பாபிக்குப் புரிந்தது. 

 

பேசிவிட்டு, அலைபேசியைப் பாபியிடம் கொடுத்தார். 

 

அலைபேசியை வாங்கிக் கொண்டு, பாபி வெளியே சென்று பேசிவிட்டு வந்தான். 

 

“என்ன சொல்றான்?” என்று கேட்டார், அலைபேசியை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு! 

 

“அது… நீங்க அப்புறமா அவர்கிட்ட கேட்டுக்கோங்க” என்று முடித்துவிட்டான். 

 

அதற்கு மேல், அவர்கள் எதுவும் கேட்கவில்லை. சாருதான் ‘என்ன நடக்கிறது?’ எனப் புரியாமல் தவித்தாள். 

 

“எங்க சைடு இருந்து ஒரு சின்ன ரெக்வஸ்ட்” – மாமனார். 

 

“சொல்லுங்க”

 

“மேரேஜ், ரெஜிஸ்டர் ஆஃபீசில வச்சிக்கலாம்”

 

“ம்ம்ம் ஓகே. ரிசப்ஷன் மாதிரி எதாவது எக்ஸ்பெக்ட் பண்றீங்களா?”

 

“அது… அதெல்லாம் எதுக்கு. ஆனா, உங்களுக்கு…” 

 

“நோ ப்ராப்ளம். நீங்க எஃக்ஸிபிட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறீங்க. கரெக்டா??”

 

“ம்ம்ம்” 

 

“அப்புறம் மேரேஜ் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க”

 

“ம்ம்ம் சரி”

 

“அப்பாகிட்ட கேட்டு, டேட் சொல்லுங்க. நான் என் பையன், பொண்ணுங்களுக்குச் சொல்லணும்”

 

“ம்ம்ம் ஓகே! வேற எதுவும் என்னைய பத்தித் தெரியனுமா?”

 

“இல்லை போதும்” என்றவர், “மாலி பத்தி என்ன முடிவு எடுத்துருக்கீங்க?” என்று தயங்கித் தயங்கி விடயத்திற்கு வந்தார். 

 

“அது நான் சாருகூட பேசிட்டு… சொல்றேனே…” என்றான், பாபி தயங்காமல். 

 

அவன் பதில், சாருவுக்குத் திருப்தியில்லாமல் இருந்தது. 

 

“சரி, சரி… ஆனா உங்களால முடியலைன்னா சொல்லுங்க… என் பெரிய பையன் பார்த்துப்பான்”

 

மீண்டும் அமைதி. தபேலா இசை மட்டும் ஒலித்தது. 

 

“தப்பா எடுத்துக்காதீங்க… சாருகூட கொஞ்ச நேரம் தனியா பேச முடியுமா?” என்று பாபி அனுமதி கேட்டான். 

 

அவர்கள் யோசித்தார்கள்.

 

“ஹெசிட்டேட் பண்ணீங்கன்னா வேண்டாம்”

 

“அப்படியெல்லாம் இல்லை. பேசுங்க. பேசி… மாலி பத்தி முடிவெடுங்க”

 

வெளியே செல்ல எழுந்தவனிடம்,

 

“வெளியில வேண்டாம். இங்கே பேசுங்க” என்று சொல்லிவிட்டு, இருவரும் அவர்களது அறைக்குள் சென்று விட்டார்கள்.

 

எழுந்து நின்றவன், அவள் அருகில் வந்தான். 

 

மீண்டும் அமைதி. தபேலா இசை மட்டும் இசைத்தது. 

 

“என்னாச்சு சாரு?” என்று பாபி அக்கறையாகக் கேட்டான்.

 

“ஏன் இவ்வளவு லேட்?”

 

“லேட்டாகும்னு மெசேஜ் அனுப்பியிருந்தேனே… பார்க்கலையா??”

 

“நீ ஃபோன் அட்டென் பண்ணலங்கிற கோபத்தில, எதுவும் பார்க்கலை” என்று மெல்லிய சத்தத்துடன் சிடுசிடுத்தாள். 

 

பாபி சிரித்தான். 

 

“அதை விடு! நேத்தே மாலி பத்திப் பேசியாச்சுல. அவங்க கேட்டப்போ, சொல்லியிருக்கலாமே”

 

“அப்புறம் சொல்லிக்கலாம்”

 

“இது என்ன ஆன்ஸர் பாபி?” என்று பொறுமினாள். 

 

“ரிலாக்ஸ் சாரு. அவங்க பையனும் ஃபோன்ல திரும்பத் திரும்ப இதைத்தான் கேட்டாங்க”

 

“நீ என்ன பதில் சொன்ன?”

 

“இவங்ககிட்ட சொன்னதைத்தான் சொன்னேன்”

 

“ப்ச்”

 

“இங்க பாரு. அவங்களுக்கும் ஒரு தயக்கம் இருக்கும்”

 

“என்ன தயக்கம்? அதான் ஓகே சொன்னாங்கள”

 

“அது உன்னோட விஷயத்தில. பட் மாலி விஷயத்தில, அவங்களால அப்படி இருக்க முடியாதுன்னு தோணுது”

 

‘ஏன்?’ என்று விளங்காமல் விழித்தாள். 

 

“நான் மாலியைப் பார்த்துப்பேனா… மாட்டேன்னானு… ஒரு சின்ன பயம்”

 

“அதுக்காக மாலியை விட்டு…நான் இருப்பேன்னு எப்படி…” என்றவளுக்கு, அதற்கு மேல் பேச முடியவில்லை. 

 

“சாரு… “

 

“நீ பதில் சொல்லிருக்கலாமே பாபி” என்று கலங்கினாள். 

 

“உனக்கென்ன பதில் சொல்லனும். அவ்வளவுதான??” என்று பாபி சொல்லும் போதே, குழந்தை அழும் சத்தம் கேட்டது.

 

பாபி சாருவைப் பார்த்தான்.

 

“மாலி” என்றாள்.

 

“ஓ! தூக்கிட்டு வா சாரு. நான் பார்க்கனும்” என்று பாபி சொன்னதும், 

 

“ம்ம்ம் இரு” என்று சொல்லி, சாரு சென்று மாலியைத் தூக்கி வந்தாள். 

 

லேசாகத் தூக்க கலக்கத்தில் குழந்தை இருந்தது. 

 

“என்கிட்ட கொடு சாரு?”

 

“அழுவா பாபி… வேண்டாம்”

 

“பரவால்ல கொடு” என்றவன், சாருவிடமிருந்து மாலியை வாங்கி, தன் தோள்களில் போட்டுக் கொண்டான். 

 

குழந்தையின் முதுகில் சாரு தட்டிக் கொடுத்தாள். 

மீண்டும் உறங்கிவிட்டது.

 

“சாரு, நீ போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா… நாம வெளியில போகலாம்” 

 

“இப்பவா?”

 

“ம்ம்ம்” 

 

‘எதுக்கு வெளியே போகணும்?’ என்று நினைத்தாலும், அவன் சொன்னது போல் முகம்கழுவி வந்தாள்.

 

அதே நேரத்தில், சாருவின் மாமனார் மாமியாரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். 

 

சாருவின் மாமியார், “ஓ, மாலி முழுச்சாச்சா?” என்று கேட்டபடி, பாபியின் அருகில் வந்தார். 

 

“இல்லை அத்தை. தூங்குறா” என்று சாரு பதிலளித்தாள். 

 

“ஓ!” என்றவர், “கொடுங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி, பாபியிடமிருந்து மாலியை வாங்க கரம் நீட்டினார். 

 

“இல்லை. இனிமே நானே பார்த்துக்கிறேன்” என்று கொடுக்க மறுத்து விட்டான். 

 

அப்பொழுது கேட்ட கேள்விக்கு, இக்கணம் பதில் சொல்கிறான் என்று அனைவருக்கும் புரிந்தது.

 

மேலும், “நாங்க மூனு பேரும் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வர்றோம்” என்றான்.

 

இதற்கு முன்பு கேட்ட அனுமதி குரல், இக்கணம் இல்லை எனத் தெரிந்தது. 

 

“சரி” என்று சாருவின் மாமனார் சொன்னார். 

 

“திரும்பி நானே கொண்டு வந்து விட்டுருவேன்” என்று பொறுப்பாய் சொன்னான். 

 

“ம்ம்ம் சரி” 

 

சாரு, பாபி இருவரும் அப்பார்ட்மெண்ட் வெளியே வந்தனர்.

 

சாருவின் முகம் தெளிந்திருந்தது.

 

“போதுமா? பதில் சொல்லியாச்சு” 

 

மட்டியைக் கடித்துக் கொண்டு மென்னகைப் புரிந்தாள். 

 

“அப்படிப் பார்த்துப்பேன்… இப்படிப் பார்த்துப்பேன்னு சொல்றதுக்கு… ‘நாங்க மூனு பேருன்னு’ சொல்லிட்டா முடிஞ்சு போயிடும்”

 

மனம் திறந்து புன்னகைப் புரிந்தாள். 

 

“சரி சொல்லு, எங்க கூட்டிட்டுப் போகப் போற?” என்று கேட்டாள். 

 

“ஒரு லாங் டிரைவ் போகலாமா?” என்று அவள் அபிப்பிராயம் கேட்டான். 

 

வழித்துணை நீயானால் – போகும் 

வழியைப் பற்றி

பயமென்ன? என்பது போல் பார்வை சாருவிடம்! 

 

பாபிக்குப் புரிந்தது! 

 

சிரித்துக் கொண்டே, சாருவிடம் மாலியைக் கொடுத்துவிட்டு, “ஏறு” என்று கதவைத் திறந்து விட்டான்.

 

தானும் ஏறிக் கொண்டு, காரைக் கிளப்பினான். 

 

மூவரின் பயணம் இனிதே தொடங்க ஆரம்பித்தது. 

 

பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த, சாருவின் மாமனார் மாமியார் முகங்களிலும் ஒரு சந்தோஷம்! 

 

*****

 

இதே நேரத்தில் ரூஃப் டாப் ரெஸ்டாரெண்டில்…

 

பிண்ணனியில் த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடல்…

 

பேசப் போகிறேன் என்று சொன்னவனிடம்…

 

“என்ன பேசப் போறீங்க?” என்று கேட்டாள். 

 

“ஸீ தாரா. ஐ கேன் ஈஸீலி கெஸ்”

 

‘என்ன?’ என்பது போல் பார்வை தாராவிடம்! 

 

“அரேஞ்ஜ்மென்ட்ஸ் பார்த்தாலே தெரியுது. இட்ஸ் எ ப்ரோபோஷல். ஆம் ஐ ரைட்??”

 

“100 மார்க்ஸ் தேவா” என்றாள், மனதைச் சொல்லாமல், அதனைப் படித்தவனுக்கு, மதிப்பெண் தந்து! 

 

“பட், யூ ஃபெயில்டு தாரா” என்றான். 

 

மறுப்பான் என்று தெரியுமாகையால், அவள் மனம் தெளிவாக இருந்தது. 

 

“தேவா நான் பேசினா…”

 

“நீங்க என்ன பேசினாலும், நான் உங்க ப்ரோபோஷல அக்சஃப்ட் பண்ணப் போறதில்லை”

 

தன் காதல் வாசத்தை, இத்தனை அருகில் கொண்டு சென்றும் சுவாசிக்க மறுப்பவனை என்ன செய்ய? என்று புரியாமல் விழித்தாள்! 

 

திடீரென்று, “ஒன் ஃபேவர்…” என்று கேட்டான். 

 

“சொல்லுங்க”

 

“அந்த ஸாங்க ஸ்டாப் பண்ணச் சொல்றீங்களா!? இட்ஸ் ரியலி அனாயிங்” என்று தன் மறுப்பை, மேலும் அவள் மனதில் பதிய வைத்தான். 

 

அவனின் மறுப்பை உணர்ந்தவளின் முகம், கொஞ்சம் சிறுத்துப் போனது. 

 

எனினும், தூரத்தில் நின்ற சிப்பந்தியிடம், பாட்டை நிறுத்தும் படி சைகையில் சொன்னாள்.

 

பாட்டு நின்றது… 

 

“தேங்க்ஸ்” என்றான். 

 

“தேவா..”

 

“வெயிட்! நானும் எவ்வளவோ அவாய்ட் பண்ணிப் பார்த்தேன். பட் நீங்க புரிஞ்சிக்கிட்ட மாதிரியே தெரியலை”

 

‘எல்லாம் புரிஞ்சது’ என்று கத்த வேண்டும் போல இருந்தது தாராவிற்கு! 

 

“மே பி, ரீஸன் சொன்னா புரிஞ்சிப்பீங்களான்னு பார்க்கிறேன்”

 

உதவி செய்ய வேண்டும், 

நேரம் செலவிட முடியாது… என்று தன் காதலை மறுக்க, அவன் காரணம் கூறுவான் என்று தெரிந்ததால், தாரா சலிப்புடன் இருந்தாள். 

 

“தாரா லீஸன்”

 

“ய்யா, ஐ அம்” என்று அவன் விழிகளைப் பார்த்து, புன்னகை புரிந்தாள். 

 

“நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்” என்று தன் மனதைத் திறந்தான். 

 

அவளின் புன்னகை மெல்ல மெல்ல குறைந்து, பின் மறைந்தது! 

 

“என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா. ஸோ இந்த மாதிரி பண்றதை, இதோட நிறுத்திக்கோங்க” என்று சூழலின் காதல் அலங்காரங்களைச் சுட்டிக் காட்டினான். 

 

நம்பமாட்டாமல், “நீங்க… பொய் சொல்றீங்க. என்னைய அவாய்ட் பண்ண இப்படிச் சொல்றீங்க. கரெக்டா??” என்றவளுக்கு, அதுவரை இருந்த தெளிவு தொய்வடைந்தது. 

 

“என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க? இதுலெல்லாம் விளையாடுவாங்களா?” என்று எரிச்சலடைந்தான். 

 

ஏக்கமாக அவனைப் பார்த்தாள். 

 

“தாரா, நான் லவ் பண்றது உண்மைதான். அதைப் பொய்-ன்னு சொல்லாதீங்க” என்றவன் குரலில் உண்மைக் காதலுக்கான கோபம் இருந்தது.

 

“ஸாரி” என்றவளுக்கு ஒரு உண்மை புரிந்தது. 

அது, 

எனக்கானவன் என்று நினைத்தவன், எனதில்லை என்பது! 

 

“ஆக்சுவலி, பாபி சொன்னான்தான் வந்தேன். அதுவும் பேசப் போறீங்கன்னு சொன்னான். பட் நீங்க… ” என்று பாதியிலேயே நிறுத்தி விட்டான்.

 

நேற்று பேசும்போது அவனைக் கணித்தது சரியே! தாராவின் மனம் கணத்தது. 

 

“யாருன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டுப் பார்த்தாள். 

 

“இட்ஸ் பியான்ட் யுவர் லிமிட்” என்று, அவள் எல்லையைக் கோடிட்டுக் காட்டினான். 

 

“அகைன் ஸாரி” என்றாள், அவன் வாழ்வில்… தான் எங்கே நிற்க வேண்டும் எனப் புரிந்து! 

 

“இட்ஸ் ஓகே. அன்ட் ஒன் ரெக்வஸ்ட்” என்று இடைவெளி விட்டவன், “இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றான். 

 

கழுத்து நரம்புகள் புடைக்க, “ம்ம்ம்” என்று சொன்னாள். 

 

அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியவில்லை. 

மறுபுறமும் திரும்பினாள். 

அவள், 

நயனங்கள் இரண்டிலும் நீர்ப்படலம், 

நட்சத்திரக் கூட்டத்தை மறைத்தன! 

 

“தாரா”

 

அவனது அழைப்பில், சட்டென அவளால் திரும்ப இயலவில்லை. விழிநீரை விரலால் துடைத்தாள். 

 

“தாரா”

 

“ம்ன்” என்று திரும்பியவள், இமைகள் நனைந்திருந்தன. 

 

அதைக் கண்டவன், “ஆர் யு ஓகே? நான் கிளம்பட்டுமா?” எனக் கேட்டான். 

 

“ய்யா, ஐ அம் ஓகே. அன்ட் இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று உதட்டில் புன்னகை ஏந்திக் கொண்டு, உள்ளத்தின் ஏக்கத்தை மறைத்தாள். 

 

“தேங்க்ஸ் ஃபார் திஸ் அன்டர்ஸ்டான்டிங்” என்று விடைபெற்றுக் கிளம்பினான். 

 

அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

விழித்தெழும் போது விடைபெற்றுச் செல்லும் கனவைப் போல, தன் காதல் ஆயிற்றே என்று வருந்தினாள்! 

 

அவன் சென்றதும், 

 

உரத்த கேவல்கள் வருவது போல் இருந்தது. ஆனால், இது அதற்கு உரித்தான இடமல்ல எனத் தெரிந்தது! 

 

வாய் கசப்பது போல இருந்தது. முன்னால் இருந்த கேக்கை இரண்டு வில்லைகள் எடுத்து உண்டாள். 

 

கசப்பு போகவில்லை! 

புரிந்தது!! 

வாய் கசக்கவில்லை… 

வாழ்க்கை கசத்து விட்டதென்று!! 

 

கையிலிருந்த ஸ்பூனை மேசையில் தூக்கிப் போட்டாள். 

 

என்றோ ஒருநாள் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொன்னவன், இன்றும் அதே எண்ணத்தில் இருப்பான் என நினைத்தது… முட்டாள்தனம் என மூளைக்குப் புரிந்தது! 

 

மனதிற்கு?? 

 

பாச உண்டியலைப் போல, காதல் உண்டியலும் நிரம்பப் போவதில்லை என்ற உண்மை உணர்ந்து உள்ளம் குமுறியது! 

 

நெஞ்சத்தில் சேர்த்துச் சேர்த்து வைத்த நேயங்கள், சோர்ந்து போய் காயங்கள் தர ஆரம்பித்தன! 

 

இருள் மண்டிக்கிடந்த வானைப் பார்த்தாள். சிதறிய காதலை நினைத்து, அவள் மனம் கதறி அழ ஆரம்பித்தது!! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!