அத்தியாயம் – 6
முதல் வருடம் செமஸ்டர் லீவுகள் முடிந்து கல்லூரி உள்ளே நுழைந்தாள் அபூர்வா. அவள் கேம்பஸ் உள்ளே நுழையும்போது அவளின் பட்டாளமே மரத்தடியில் அமர்ந்தபடி அபூர்வாவிற்கு கையசைக்க அவளோ புன்னகையைப் பதிலாக கொடுத்துவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அவர்களை நோக்கிச் சென்றாள்.
“ஹே அபூர்வா நம்ம செட்ல சீக்கிரம் வரும் பொண்ணே நீதான். இன்னைக்கு என்ன நாங்க எல்லோரும் வந்தபிறகு ஆடி அசைந்து மெதுவா வர” என்று வந்தும் வராதுமாக தோழியை வம்பிற்கு இழுத்தாள் மைதிலி.
அவளின் அருகே அமர்ந்த அபூர்வா, “வீட்டில் இருந்து வரும்போது ஒரு பையனைப் பார்த்து சைட் அடித்ததில் என்னையே மறந்துட்டேன்டி மையூ. அதன் இன்னைக்கு கொஞ்சம் லேட்” என்றவள் சிரிக்காமல் சொல்ல, “நீயாவது சைட் அடிப்பதாவது யாரை நம்ப சொல்ற” என்று சண்டைக்கு வந்தாள் சித்ரா.
“நான் வீட்டில் இருந்து கிளம்பும்போது தம்பிக்கு காபி போட்டு கொடுத்துட்டு வெளியே வரண்டாவில் நின்று வானரத்துடன் வம்பு இழுத்ததில் நேரம் போனதே தெரியல..” என்றவள் அவள் பங்கிற்கு புலம்பினாள்.
அபூர்வாவின் புலம்பலைக் கண்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்ட தோழிகள், “இது ஏதோ நம்புகின்ற மாதிரி இருக்குடி” என்றனர்.
அவர்கள் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துகொண்டு இருக்கும்போது அங்கே வந்த பிரணவ், “ஹாய் அபூர்வா” என்றதும் அபூர்வா சட்டென்று நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.
தன் முன்னே ஆறடி குறையாத உயரத்துடன் கம்பீரமாக நின்றவனைப் பார்த்தவள், “வாங்க சீனியர் என்னடா இன்னும் ஆளை காணலையேன்னு யோசிச்சேன் நீங்க வந்துட்டீங்க” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.
“ஓ மேடம் என்னை ரொம்ப எதிர்பார்த்து காத்துட்டு இருந்தீங்களா மேடம்” என்றான் அவன் கேள்வியாக புருவம் உயர்த்தியபடி.
“பின்ன எதிர்பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? தினம் தினம் லவ் சொல்றேன் என்ற பெயரில் வந்து காமெடி பண்ணும் உங்களை நான் எதிர்ப்பார்க்காமல் இருந்தாதான் அதிசயம்” என்று கிண்டலோடு கூறியவள் கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள்.
தன் வலது கையைத் திருப்பிப் பார்த்த அபூர்வா, “ம்ம் உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் கொடுக்கிறேன். அதுக்குள் காதலை அழகாக சொல்ல ட்ரை பண்ணுங்க” என்றவள் அவனைப் பார்த்தபடி, “யுவர் டைம்ஸ் ஸ்டார்ட் நொவ்” என்றாள்.
தன்னை ஏளானம் செய்யும் அவளைக் கண்டு அவனுக்கு கோபம் வந்தபோதும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஐ லவ் யூ” என்று அவளிடம் கிரீட்டிங் கார்டு அண்ட் ரோஸ் இரண்டையும் நீட்டினான்.
அபூர்வா என்ன செய்ய போகிறாளோ என்ற சிந்தனையில் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு அவனையும் பார்த்தனர் அவளின் வகுப்பு தோழிகள். அவள் கரங்கள் நீண்டு அதை வாங்கிக் கொண்டது.
அவளின் செயலில் அவனின் முகம் பளிச்சென்று மலர, “தேங்க்ஸ்” என்றதும் அபூர்வா ரோஜா பூவை ஒவ்வொரு இதழாக பிச்சு பிச்சு கீழே போட்டுவிட்டு, “ம்ம் இன்னும் கொஞ்சம் பெட்டராக நீங்க லவ் சொல்லி இருக்கலாம். பிரணவ் லைட்டர் இருக்கா” என்றதும் அவன் எடுத்து கொடுத்தான்.
அந்த கார்டில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் அதை தீ வைத்து கீழே போட்டாள். “தேங்க்ஸ்” என்றவள் மாறாத புன்னகையுடன் அவனைக் கடந்து செல்ல அவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது. அவளின் இந்த திமிர் தான் அவளின் மீது அவனின் பார்வைபடர காரணமானது.
“இன்னும் எத்தனை நாளைக்கு நீ இதே கர்வத்துடன் யாருக்கும் தலை வணங்காமல் இருக்கிறன்னு பார்க்கிறேன்” என்றவன் அவளிடம் சவால்விட்ட அவள் திரும்பி நின்று மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு,
“எத்தனை வருஷம் போனாலும் அபூர்வா இப்படித்தான் இருப்பா” என்று திமிருடன் கூறியவள் தன் வகுப்பை நோக்கி சென்றாள். பிரணவ் அவள் மீதான கோபத்துடன் அங்கிருந்த கல்லில் எட்டி உதைத்துவிட்டு கோபமாக அங்கிருந்து நகர்ந்தான்.
பிரணவ் அவளின் சீனியர். கல்லூரி முதல் வருடத்தில் ராகிங் செய்தபோது அவளை முதல் முறையாகக் கண்டான். அவர்கள் அவளை அழ வைக்க என்ன என்னவோ செய்து பார்த்தும் அதெல்லாம் தோல்வியில் சென்று முடித்தது.
எப்படியும் அவளை வைக்கும் நோக்கத்துடன் பிரணவ் அவளை காதலிக்க வைப்பதாக சவால்விட, “உன்னால் முடிஞ்சிதை செஞ்சுக்கோ” என்று சொல்லிவிட்டு பயமில்லாமல் சென்றவளை கண்டவனுக்கு அவளின் மீதிருந்த கோபம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
அவன் பின்னாடி அந்த காலேஜில் இருக்கும் அத்தனை பெண்களும் பித்து பிடித்து திரிந்தனர். காரணம் அவன் ஒரு ஆணழகன். இப்படி ஒருவன் தனக்கு கணவனாக வர வேண்டும் என்று எல்லோரும் ஏங்கும் இடத்தில் இருப்பவனை துச்சமாக நினைத்தாள் அபூர்வா.
பிரணவ் அபூர்வாவை காதலிக்கும் விஷயம் காலேஜில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். தினமும் எது நடக்கிறதோ இல்லையோ ஒரு கிரீட்டிங் கார்டு வீணாவதைப் பார்த்து அபூர்வாவின் தோழிகளுக்கு தான் அவனின் மீது காதல் வந்ததே தவிர அவளுக்கு வரவில்லை.
கிளாஸ் ரூமிற்குள் வந்து தன் இடத்தில் அமர்ந்தவள் அடுத்த ஹௌர்க்கு உண்டான புத்தகத்தை எடுத்து திறக்க அதில் அவனின் பிம்பமே தெரிந்தது. அவள் மற்றவர்கள் முன்னாடி தன்னை சாதாரணமாக காட்டிகொண்ட போதும், ‘உன்னால அவனை மறந்துவிட முடியுமா’ என்று கேட்டது அவளின் மனம்.
‘முடியாது’ என்றவள் நிமிரும்போது அவளின் தோழிகள் இருவரும் வந்து அமரவே, “மேடம் இன்னைக்கு கிளாஸ் வருவாங்களா” என்று பேச்சை மாற்றிய அபூர்வாவை அவர்கள் முறைத்தனர்.
“ஏண்டி காலேஜில் இருக்கிற எல்லா பொண்ணுங்களும் எனக்கு அவன் லவ் லேட்டர் தர மாட்டானா? என்னிடம் அவன் ஒரு நிமிடம் நின்று பேச மாட்டானான்னு ஏங்கறாங்க. நீ என்னடான்னா அவனை ஒரு மனுஷனாக கூட மதிக்காமல் இருக்கிற” என்று எரிந்து விழுந்தாள் மைதிலி. பாவம் அவளுக்கு எங்கே தெரிய போகிறது அபூர்வாவின் மனம்.
அவளை புரிந்து கொள்ளாமல் பேச, “அடியேய் லவ் லெட்டர் கொடுத்து காலேஜ் டப்பர் பிரணவ் தான் இல்லன்னு சொல்லல. அதுக்காக விருப்பம் இல்லாமல் அவனைக் காதலிக்க சொல்றீயா?” கோபத்துடன் கேட்டுவிட்டு திரும்ப கிளாசிற்கு லெக்சரர் வருவதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.
அதன்பிறகு மைதிலி அவளோடு பேசுவதை நிறுத்திவிட்டாள். அவன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்திவரும் தன்னை அவன் உதறிவிட்டு அபூர்வாவை பிரணவ் காதலிப்பாக சொல்வதைக் கேட்க நேரும் போதெல்லாம் அவள் கோபத்துடன் அவனையே திட்டி தீர்த்தாள்.
குற்றாலம் சென்று வந்ததில் இருந்து மனம் அவளையே தேட ஆரம்பித்தது. அபூர்வா ஊருக்கு வந்திருந்த விஷயத்தை யாருமே அவனிடம் சொல்லாமல் விட்டுவிட்டனர். மீண்டும் சென்னைக்கு வந்தும் அவனின் நாட்கள் வழக்கம் போலவே செல்ல துவங்கியது.
அன்றுடன் அவன் குற்றாலம் சென்று வந்து எட்டு மாதம் முடிந்திருந்தது.
ஆதி சைட்டில் வேலையை முடித்துவிட்டு சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல நினைத்து கிளம்பியபோது அவனின் செல்போன் சிணுங்கியது. திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும், “ஹலோ சிவா சொல்லுடா” என்றான்.
“ஆதி சிந்துவுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருதுடா. அவளுக்கு ஏதாவது வாங்க வாங்கி கொடுக்கணும். நீயும் என்னோடு வருகிறாயா” என்றான்.
“நான் எதுக்குடா வரணும்” என்று ஆதி சலித்துக்கொள்ள, “டேய் கூட இந்த குட்டி பிசாசும் வந்திருக்கு. அவளுக்கு ஏதாவது வாங்குவது ரேவதி பார்த்தால் வீட்டில் போட்டு கொடுத்துவிடுவாள். அப்புறம் ஜாதி, மதம்னு ஆயிரம் கிளாஸ் எடுப்பாங்க” என்று மூச்சு விடாமல் பேசியவனின் தொல்லை தாங்காமல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அவன் பைக்கில் அவன் சொன்ன ஷாப்பிங் மால் நோக்கி சென்றவன் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு கையில் பைக் சாவியை சுழற்றியபடி மாலுக்குள் நுழைந்தான். அங்கே சிவா சொன்ன கடைக்கு ஆதி வேகமாக செல்லும்போது அவனை கண்டுவிட்டான்.
சட்டென்று அவனின் முன்னாடி போய் நின்றவன், “ஹலோ” என்று சொல்ல நிமிர்ந்த ஆதி சக்தியைக் கண்டவுடன் அடையாளம் கண்டு கொண்டான்.
“நீ எப்போ வந்த?” என்று சந்தோசமாக கேட்டபடி அவனின் தோளில் கைபோட்டு கொண்டான்.
“நான் வந்து இரண்டு நாள் ஆச்சு. நாளைக்கு நீங்க வேலை செய்யும் கம்பெனிக்கு வரலாம்னு நினைச்சேன்” என்று குறும்புடன் கண்சிமிட்டியவனின் குறும்பு கண்டு, “பொய் சொல்ற” என்றான் ஆதி சிரித்தபடி.
“பாட்டி தாத்தாவுக்கு உடம்பு சரியில்ல. அதன் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்” என்றதும் ஆதிக்கு குழப்பமாக இருந்தது.
“அன்னைக்கு பாட்டி தாத்தா இறந்துட்டாங்கன்னு சொன்ன. இன்னைக்கு பாட்டி தாத்தாவிற்கு உடம்பு சரியில்லன்னு சொல்ற” என்று குழப்பத்துடன் கேட்டதும், ‘ஐயோ இவரிடம் இனி விளக்கம் சொன்னால் பொழுது விடிந்துவிடுமே’ என்று மனதிற்குள் புலம்பினான்.
ஆதி அவனை கேள்வியாக நோக்கிட, “அன்னைக்கு சொன்னது எங்கப்பாவோட தாத்தாவும் பாட்டியும். இன்னைக்கு நான் சொல்றது எங்க கயல் சித்தியோட மாமனார் மாமியார்.” என்றான்
அவனோடு இணைந்து நடந்த ஆதிக்கு சக்தியின் பேச்சு ஆபூர்வாவின் பேச்சுடன் ஒத்துப் போவது போல தோன்றிட, “உன்னோட தாத்தா பாட்டி” என்று அவன் கேள்வி கேட்கும் போதே சிவா அவர்களை நோக்கி வந்தான்.
“ஏன்டா இவ்வளவு நேரம். சரி உள்ளே ரேவதி இருக்கிறா நீ பார்த்துக்கோ நான் சிந்துவுக்கு போய் கிப்ட் வாங்கிட்டு வந்துவிடுகிறேன்” என்று சிவா படபடவென்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
ஆதியுடன் நின்றிருந்த சக்தியை அவன் கவனித்தாலும் அதைப் பற்றி விசாரிக்க இது நேரமல்ல என்பதால் அவன் தன் வேலையை கவனிக்க சென்றுவிட, “இந்த அண்ணா என்ன படபடன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்காரு” என்று அவனிடமே கேட்டான் சக்தி.
“அவன் எப்போதும் அப்படித்தான்” என்று சொல்லிவிட்டு கடைக்குள் நுழையும்போது தான் சக்தி கடையின் பெயரைக் கவனித்தான். அந்த கடைக்குள் தான் அபூர்வா, ரக்சிதா, சஞ்சனா, ராகவ் நாலும் பேரும் இருந்தனர்.
இப்போது என்ன சொல்லி சமாளிக்கலாம் என்றவன் யோசிக்கும் முன்னே ரக்சிதா கடைக்கு வெளியே வந்து, “சக்தி நீ இங்கேதான் இருக்கிறாயா? உன்னை அண்ணி தேடுனாங்க” என்று கூறவே, “வரேன்னு சொல்லு” என்றான்.
இருவரும் பேசுவதைப் பார்த்தபடி நின்ற ஆதிக்கு சட்டென்று ரக்சிதாவை அடையாளம் தெரியவில்லை. ஆனால் எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது.
“ஓ குடும்பத்துடன் ஷாப்பிங் வந்திருக்கீங்களா” என்றவன் கடைக்குள் நுழைய ரேவதி மாடல் ட்ரஸ் செலக்ட் செய்யும் செக்சனில் நின்றிருக்க அவசரமாக பார்வையை சுழற்றிய சக்தியின் விழிகளில் விழுந்தாள் அபூர்வா.
சக்தி உடனே ஆதியிடம், “இருங்க நீங்க இங்கேயே இருங்க ஸார். நான் போய் அக்காவிடம் என்னனு கேட்டுட்டு வரேன்” என்று சக்தி அங்கிருந்து நகர, “ஆதி வந்துட்டியா” என்ற ரேவதி இழுத்து சென்றுவிட்டாள்.
அபூர்வாவின் அருகே சென்ற சக்தி, “என்னக்கா” என்று கேட்க, “இந்த சர்ட் உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் போட்டு பாரு” என்று கூறவே சக்தி ட்ரையல் ரூமிற்கு சென்றுவிட்டான்.
அப்போது எதிர்பாராத விதமாக சுடிதார் செக்சன் உள்ளே நுழைந்த அபூர்வா சஞ்சனாவுக்கும், ரக்சிதாவிற்கும் அழகான மெட்டிரியல் பார்த்து தேர்வு செய்துவிட்டு, “இது உங்க இருவருக்கும்” என்று அவர்களிடம் கொடுத்தாள்.
அபூர்வா தனக்கு எடுக்கும்போது ரேவதி ஆதியுடன் சுடிதார் செக்சன் உள்ளே நுழைந்தாள். ரேவதி என்ன பேசினாலும் கடமைக்கும் ‘ம்ம்’ கொட்டியபடி அவளோடு இணைந்து நடந்த ஆதியின் பார்வை திரும்பி நின்ற அந்த பெண்ணின் மீதே நிலைத்தது.
அதை கண்ட ரேவதி, “ஆதி என்ன சைட் அடிக்கிறீயா” என்று கேலியுடன் கேட்டுவிட்டு துணியை எடுக்கும் வேலையைக் கவனிக்க அபூர்வாவின் எதிரே இருந்த நிலை கண்ணாடியில் அவளின் பளிங்கு முகம் பட்டு அவளை அடையாளம் காட்டி கொடுத்தது.
அவளை அங்கே சந்திப்பான் என்று அவனே நினைக்கவில்லை. அதுவரை அவளின் மீது வைத்திருந்த கோபம் அனைத்தும் காற்றில் கரையும் கற்பூரமாக மாறிபோகவே தன்னை மறந்து அவளை ரசிக்க தொடங்கினான் ஆதி.
அவர்களின் நேர் எதிரே இருந்த நிலை கண்ணாடியில் ஆதியின் அருகே அபூர்வா நிற்பது பிரதி பிம்பம் கண்ட ஆதி தன் செல்லில் யாரும் அறியாதபடி அவளுடன் போட்டோ எடுக்க நினைக்கும் போது அவள் நிமிர்ந்து புன்னகைக்க வேண்டுமே என்று அவனின் மனம் முரண்டு பிடித்தது.
அவளுக்கு ஏதோ தோன்றிட சட்டென்று நிமிர்ந்து கண்ணாடியை பார்த்தாள். அவளின் பின்னோடு ஆதியின் பிரதிபிம்பம் தெரிய வழக்கம்போலவே கற்பனை என்று நினைத்தவள் காதலோடு அவனின் தோற்றத்தை ரசித்தாள்.
அந்த ஒரு நொடி அவளின் கண்களில் தெரிந்த காதலுக்கு கட்டுபட்டு நின்ற ஆதி அவளை காதல் பார்வை பார்த்தபடி சட்டென்று தன் மொபைலில் போட்டோ எடுத்தான் அந்த அழகிய காட்சி!
அவளுக்கு சட்டென்று மின்னிய பிளாஷில் தன்னை சுதாரித்து திரும்பும்போது, “அக்கா இந்த சர்ட் நல்லா இருக்கா” என்று அவளின் அருகே வந்தான் ராகவ்.
அந்த கேப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆதி, “ரேவதி முக்கியமான போன் வருது நான் வெளியே வெயிட் பண்றேன் சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு சுடிதாரை எடுத்து பில் போட்டான் ஆதி.
அங்கே அபூர்வா பில் போட வைத்திருந்த உடையை மாற்றி வைத்துவிட்டு அதில் ஒரு சீட்டை எழுதி போட்டுவிட்டு நகர்ந்தான்.
“ம்ம் சூப்பராக இருக்கு” என்று சொல்லிவிட்டு அவள் திரும்பி கண்ணாடியைப் பார்க்கும்போது அங்கே ஆதியைக் காணவில்லை.
‘எப்போ பாரு அவனோட நினைவில் இருந்தா இப்படித்தான் பைத்தியம் பிடிக்கும்’ என்று தலையில் தட்டியபடி அவள் வந்த வேலையை கவனித்தாள்.
அவர்கள் நால்வரும் உடை எடுத்துவிட்டு வெளியே வரும்போது சக்தி மட்டும், “அக்கா நீங்க முன்னாடி நடங்க நான் இதோ வந்து விடுகிறேன்’ என்று அவர்களை அனுப்பிவிட்டு ஆதியின் அருகே வந்தான்.
“நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்பறோம் ஆதி சார். அடுத்த முறை வரும்போது நான் கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வரேன்” என்று சொல்லி அவனிடமிருந்து விடைபெற்று கிளம்பினான். சக்தியிடம் அபூர்வாவை சந்தித்த விஷயத்தை ஆதி மூச்சு விடவில்லை.
இதெல்லாம் நடந்து முடிந்ததும் சிவாவும் ரேவதியும் வந்துவிட இருவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டான். எல்லோரும் அவர்களுக்கு எடுத்த உடை எடுத்து போட்டு பார்க்க அபூர்வாவும் தான் செலக்ட் செய்த உடையை எடுத்தாள்.
அது வேறு உடையாக இருக்கவே, “இந்த கடைக்காரன் மாற்றி கொடுத்துட்டானோ” என்று அவள் யோசிக்கும்போது அதிலிருந்து ஒரு சின்ன பேப்பர் விழுந்தது. அவள் சிந்தனையுடன் அதை கையில் எடுத்து பிரித்து படித்தாள்.
“இரண்டு வருடங்களுக்கு பிறகு பளிங்கு முகம் காண வரம் கொடுத்த என் தேவதைக்கு ஒரு சின்ன பரிசு
இப்படிக்கு
உன் இதயம் திருடிச் சென்றவன்” என்ற எழுத்தைக் கண்டதும், ‘அப்போ நான் கடையில் பார்த்து ஆதியைத்தானா?’ என்றவளுக்கு கண்கள் கலங்கியது.
நாட்கள் யாருக்கும் நிற்காமல் ஓடி மறைந்திட கல்லூரி படிப்பில் மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தாள்.