Eedilla Istangal – 18.2

Eedilla Istangal – 18.2

இருவரும் ஒரு புன்னகை புரிந்தனர்.

“அப்புறம்?” என்றான். 

“அடுத்து என்ன பிளான் தேவா?”

“இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன். ஸோ பெருசா ஒன்னும் இல்லை”

“ஓ!” என்று யோசித்தாள். 

“நீங்க??”

இன்னும் யோசனையில் பிடியிலே நின்றிருந்தாள். 

“தாரா, நீங்க?” என்றான் அழுத்தமாக! 

“அன்னைக்கு கால் அட்டன் பண்ணலை. பிஃப்டீன் டேய்ஸ் பேசலை” என்று அடுக்கினாள். 

“பெரிய தப்புதான்! என்ன பண்ணலாம்??” 

“பெனால்ட்டி இருக்கு”

“என்ன பெனால்ட்டி?” 

“கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாமா?”

‘சரியென்று’ தலையாட்டினான். 

“பட், இங்க வேண்டாம். வேற எங்கயாவது போகலாமா?” என்று கேட்டாள். 

‘சம்மதம்’ என்ற உடல் மொழியுடன், “பட் எங்க?” என்று கேட்டான். 

இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர். 

இங்கு இன்னொன்று, 

அன்றிருந்த குற்றவுணர்வு, இன்று இருவரிடமும் இல்லை. காரணம், தேவாவின் காதல் தோல்வியைத் தழுவியதால்! 

“உங்களுக்கு ஏதாவது பிளேஸ் தெரிஞ்சா சொல்லுங்க” என்றான். 

‘தெரியலையே’ என்பது போல் முகத்தில் மாற்றங்கள். 

“சரி, நான் ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகவா??” என்று கேட்டான். 

“ம்ம்ம், பைக்லயா?”

“வெதர் ரெய்னியா இருக்கு. ஸோ பைக்ல வேண்டாம்”

“அப்போ எப்படிப் போக?”

சற்று நேரம் யோசித்தான். 

“தாரா, டு ஒன் திங்க். நீங்க உங்க டிரைவரைக் கூப்பிட்டு… என் பைக்கை, என்னோட ஆபீஸ்ல விட்றச் சொல்றீங்களா?”

“ஓகே, அப்புறம்… ” 

“உங்க கார்ல போகலாம்”

“ம்ம்ம்” என்றவள், தேவாவிடமிருந்து சாவி வாங்கிக் கொண்டாள். கோபியை அழைத்து, தேவா அலுவலகத்தில் வண்டியை விடச் சொன்னாள். 

மேலும், கோபியிடமிருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டாள்.

கோபி சென்றதும்,

கார் சாவியை தேவாவிடம் நீட்டியவள், சட்டென ஏதோ ஒரு தயக்கத்தில் பாதியிலே கையை நிறுத்தினாள்.

“என்ன தாரா?” 

“நீங்க கார்…??” என்றாள் கேள்வியாக! 

“ஏங்க, பாபியோட கார் டிரைவ் பண்ணியிருக்கேன். நம்பிக் கொடுங்க” 

“ஓ! பட், இது என்னோட ஃபேவரைட் கார். அதான் யோசிச்சேன்… “

“அப்படின்னா நீங்களே டிரைவ் பண்ணுங்க” 

“ஐ டோன்ட் டிரைவ் தோ ஐ நோ” என்று சொல்லி, லேசான முக மலர்தலுடன் சாவியைக் கொடுத்தாள்.

பயணம் ஆரம்பமானது.

போகும் போதே, தாரா மருத்துவமனைக்கு அழைத்துப் பேச ஆரம்பித்தாள்.

பேசிக் கொண்டிருக்கும் போதே, “சரத் சார் கேட்டா நான் சொல்லிக்கிறேன்” என்று கோபமாகச் சொல்லி வைத்துவிட்டாள்.

ஓர் அமைதி நிலவியது.

“சரத் யாரு?” என்றான். 

“ம்ம்ம் என்ன?” 

“இல்லை… பர்ஸ்ட் டே ஆக்சிடென்ட் கேஸ் கூட்டிட்டு வர்றப்பவும்… இந்தப் பேர் கேட்டேன். அன்ட் இன்னைக்கும். ஸோ, சரத் யாரு?”

“என் அண்ணன்” என்றாள் இயல்பாக! 

“ஓ! பட், கோபமா பேசின மாதிரி இருந்தது”

“ம்ம்ம், எப்பவும் ஹாஸ்ப்பிட்டல் ரிலேட்டடா, கொஞ்சம் ஆர்க்கியூமென்ட் வரும்” என்றாள் முகம் சுளித்து! 

அதைக் கண்டவன், “அண்ணனைப் பிடிக்காதா??” என்று கேட்டான். 

“ச்சே ச்சே! எனக்கு என் அண்ணனை ரொம்பப் பிடிக்கும். அவன் அம்மாகிட்ட பாசமா இருக்கிறது, ஹாஸ்ப்பிட்டல் மேனேஜ் பண்றது. எல்லாமே சூப்பரா இருக்கும். என்கிட்டத்தான் கோபப் படுவான்” என்றாள் வருத்தமாக! 

“ஓ! அப்போ அவர் மேல உங்களுக்குப் பாசம் இருக்கு…”

“நிறைய… பட், மனசுக்குள்ளதான். வெளியில கோபத்தை மட்டும்தான் காட்டுவேன்”

“ஓ!”

“அவனுக்கு எப்படின்னே தெரியலை?” என்றவளுக்கு, அவனுடன் கோவையில் சிறு வயதில் விளையாடியது நியாபகம் வந்தது. 

“ஒரு தடவைக் கோபத்தை விட்டுட்டு பாசத்தைக் காட்டிப் பாருங்களேன். அவர் எப்படின்னு தெரிஞ்சிடப் போகுது” என்றான் சாதரணமாக! 

அவன் சொன்னதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள். ஏன்? எதன் பின்? இப்படி மாறினோம் என்ற எண்ணம் திண்ணமாய் வந்து நின்றது. 

“அண்ணன் மட்டும்தானா?” என்று கேட்டு, அவள் எண்ணத்தைக் கலைத்தான். 

“ஒரு தம்பி உண்டு, ஜெகன். நல்ல பையன். என்கிட்ட இருக்கிற ஒவ்வொரு திங்க்ஸூம், அவன்தான் வாங்கிக் கொடுப்பான். இந்த பேக்… இயரிங்ஸ்… சாரீஸ்… எல்லாமே!” என்று சடுதியில் சந்தோஷம் கொண்டாள். 

“ரொம்ப பாசமோ… உங்க மேல”

“ஆமா! அதுக்காக எம்எஸ் படிக்க, ஃபாரின் போகாம இருக்கானா பார்த்துக்கோங்களேன்” என்றாள் சிரித்தபடி! 

“வாட்?” என்றான் நம்பாமல்! 

“நிஜமா தேவா! ஜெகன் என்னைத் தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டான்”

“ஒன்னு அந்த எஸ்ட்ரீம்ல இருக்கீங்க. இல்லைன்னா இந்த எக்ஸ்ட்ரீம்”

“புரியலை தேவா”

“பாசம் வைக்கிறதுல சொன்னேன்”

மீண்டும் அவள் யோசித்தாள்.

“உங்களால அவரோட ஃபியூச்சர் ஸ்பாயில் ஆகுதுன்னு தோணலையா தாரா?” என்று கேள்வி மட்டும் கேட்டு விட்டுவிட்டான்.

அவள்தான் பதில் எழுத வேண்டும்.

அதன் பின்னரான பயணம், நிறைய நேரம் அமைதியில் பிரயாணித்தது.

சற்று நேரத்தில், அவன் அவளைக் கூட்டி வர நினைத்த இடம் வந்திருந்தது.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு, “இங்கதான்” என்று சொன்னான்.

சன்னல் வழியே குனிந்து பார்த்தவள், “theosophical society” என்று கேட்டாள். 

“ம்ம்ம், கிரேட் பேனியன் டீரி. இந்த வெதர்ல நல்லா இருக்கும். வாங்க” என்றான். 

இருவரும் இறங்கிக் கொண்டனர். 

அவன் அவளை அழைத்து வந்தது, நானூறு வருடங்கள் தாண்டி வாழ்ந்து வரும் அடையார் ஆலமரம் இருக்கும் இடமாகும்! 

அக்கணம், வானம் பூமியை ஈரமாக்காமல் இருந்தது. 

இருப்பினும், குளிர் சாதனப் பெட்டிக்குள் குடிகொண்டது போல் தலைநகரின் வானிலை இருந்தது. 

இருவரும் உள்ளே சென்றனர்.

சீதோஷண நிலை காரணமாக, சில பேர் மட்டுமே வந்திருந்தனர்.

முன்னதாகப் பெய்த மழையினால் ஈரமாயிருந்த பாதைகளில் நடக்க ஆரம்பித்தனர்.

மழையைத் தொடர்ந்த மஞ்சள் வெயில் காலநிலை காரணமாக, அந்த இடமே ‘வின்டேஜ் எஃபெக்ட்டில்’ இருந்தது. 

இருவரும் முன்னேறிச் சென்றனர்.

“என்ன பேசவே மாட்டிக்கிறீங்க?” என்றான். 

அந்தக கேள்விக்குப் பின்னும், அவள் பேசவில்லை. 

“ஃபோன் அட்டன் பண்ணலைன்னு கோபமா? அப்படியிருந்தா, ஸாரி தாரா” என்று மன்னிப்புக் கேட்டான். 

“அப்ப நானும் கேட்டுக்கிறேன்! ஸாரி” என்றாள். 

“நீங்க இப்படிக் கேட்க மாட்டிங்களே!”

“ஓ! டசன் டைம்ஸ் ஸாரி” என்றாள் ஓர் இதழ் விரியா புன்னகையுடன்! 

இப்படிப் பேசியபடியே நடந்து வந்து, அந்த பழமையான ஆலமரத்தின் அருகில் வந்திருந்தனர். 

பல்லாயிரம் சதுரஅடி பரப்பில், கிளை பரப்பிக் கிடந்தது. 

சடைசடையாகத் தொங்கும் ஆலம் விழுதுகள். அது அத்தனையும் மழையில் நனைந்திருந்தன. 

நடப்பதை நிறுத்திவிட்டு, ஒரு விழுதைப் பிடித்துக் கொண்டு தேவா நின்றான். 

“தாரா, உங்க வீட்ல தெரியுமா?”

“எது?” என்றாள் நடந்தவள் நின்று! 

“உங்க லவ்” 

“ம்ம் தெரியுமே! ப்ரோபோசல் டே அன்னைக்கே தெரிஞ்சிடுச்சு”

“எப்படி?”

“நான் அழுதேனா… ஸோ ஃபேஸ் காட்டிக் கொடுத்திருச்சி. அப்புறம் ஜெகன் கேட்டான். நானும் சொல்லிட்டேன்” என்று சிரித்தாள். 

“அழுதீங்களா?”

“ம்ம்ம்” 

“எனக்காகவா?”

“ம்ம்ம்” என்று ஆழமாகத் தலையாட்டி, நடக்க ஆரம்பித்தாள். 

தேவா நடக்காமல், தடைப்பட்டு நின்றான். 

கூடச் சேர்ந்து வராமல் நின்று கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள், “தேவா வாங்க” என்று அழைத்தாள்.

பிடித்திருந்த விழுதை விட்டுவிட்டு, அவளுடன் நடக்க வந்தான்.

அக்கணம், மத்தியான நேர வானம் மழைச் சொரியத் தொடங்கியது. 

பெரிய ஆலமரக் குடையின் கீழ், ஒரு சிறிய குடைப் பிடித்து, இருவரும் நின்றுவிட்டார்கள்! 

“இப்போ வீட்ல என்ன சொல்றாங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டான். 

“ம்ம்ம், மேரேஜுக்கு ஃபோர்ஸ் பண்றாங்க”

“நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க?”

“தேவா! நானும் உங்களை மாதிரி, என் மனசில இருக்கிறதைப் பேசிக்கவா?” என்று ஆசையாகக் கேட்டாள். 

“ம்ம்ம்” 

“நீங்கதான் என் முடிவு” என்று ஆசையைச் சொன்னாள். 

இப்படிச் சொல்லிவிட்டு, குடைக் கம்பியிலிருந்து விழும் மழைத் துளிகளில் விளையாட ஆரம்பித்தாள். 

துளியளவும் அசையாமல் தேவா நின்றிருந்தான். 

ஐந்து நிமிடங்கள் கடந்த பின், 

“தேவா, மழை விட்ருச்சு. வாங்க நடக்கலாம்” என்று அழைத்தாள்.

குடையை மடக்கிவிட்டு, அவனும் நடக்கத் தொடங்கினான்.

“அன்னைக்கே மறக்க முடியாதுன்னு சொன்னீங்கள” என்றான். 

“ம்ம்ம்” என்றதோடு விட்டுவிட்டாள். 

இந்த நொடிகளில், அமைதியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு நடந்தனர். 

“தேவா, நீங்க உங்க லவ்வரை மறந்தாச்சா??” என்று கேட்டாள், அமைதியைத் தூர விலக்கி நிறுத்தி! 

ஒர் மென்னகை மட்டுமே அவனிடம்! 

“கேட்கிற கொஸ்டின் பியான்ட் மை லிமிட்-னா, ‘பாஸ்’ சொல்லிடுங்க. ஐ அன்டர்ஸ்டான்ட்” 

“மறக்கணும்னு நினைக்கிற அளவுக்கு நியாபகம் எதுவும் இல்லை தாரா”

“புரியலை”

“இப்போ உங்க கூட இத்தனை நாள் பேசறேன். ஸோ ஐ ஹேவ் சம் மெம்மரிஸ். ஆனா, அந்தப் பொண்ணோட அதுமாதிரி எதுவும் இல்லை”

அவள் நின்றாள். அவனும் நின்றான். 

“ஓ! அப்போ, என்னை மறக்க மாட்டிங்களா?” என்று நேராக அவன் விழிகளைப் பார்த்து கேட்டாள். 

அவனுக்கு என்னவோ, அவள் தன் இதயத்தின் வாசலில் நின்று கேட்பது போல இருந்தது. 

எனவே பதிலேதும் சொல்லாமல், “நடக்கலாமா?” என்று கேட்டான். 

‘சம்மதம்’ என்பது போல் விழி மூடித் திறந்தாள். 

மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு விழுதையும் விலக்கி விலக்கி நடந்தாள். சில நேரம், அவனுக்காக விழுதினை விலக்கித் தந்தாள். 

“ஏன் தேவா? உங்க வீட்ல, உங்க மேரேஜ் பத்தி எதுவும் கேட்க மாட்டாங்களா?”

“அக்கா கேட்பா… பட் அண்ணா அண்ணி…” என்று நிறுத்தினான். 

“சொல்லுங்க” 

“அடிக்கடி அண்ணி சொல்லுவாங்க, சேலரி ஃபுல்லா மத்தவங்களுக்குக் கொடுத்திட்டா, எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணும்னு” என்றான்.  

நடப்பதை நிறுத்தினாள். 

‘என்ன?’ என்பது போல் பார்த்து, அவனும் நின்றான். 

“உங்க அண்ணியை அடுத்து எப்போ மீட் பண்ணுவீங்க?” என்றாள் சம்மந்தமில்லாமல்! 

“அக்காவைப் பார்க்கப் போறப்ப பார்ப்பேன். ஏன் கேட்கிறீங்க?”

“ஓ! அப்போ நான் சொல்றதை, அவங்ககிட்ட சொல்லிடுங்க”

“என்ன சொல்லணும்?” என்றான், அவளைப் புரிந்து கொள்ள முடியாமல்! 

“தாரா-ன்னு ஒரு பொண்ணு, என்னைக் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறா. பட், நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்-னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு நடக்கலானாள். 

அவள் சொன்னதைக் கேட்டு, நிற்பவனைக் கண்டவள், “வாங்க தேவா” என்று அழைத்தாள். 

நடந்து சென்று, அவள்கூடச் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான். 

அருகருகே நடந்த இருவருக்குமிடையே நீளமான ஒரு அமைதி நிலவியது!

இருவரும், சற்று நேரம் வானின் குடையின் கீழ், பெரிய பெரிய ஆலம் விழுதுகளுக்கு இடையே நடந்து வந்தார்கள்!

சாரல்கள் சலசலக்க ஆரம்பித்ததும், மீண்டும் வண்ணக் குடையின் கீழ் வந்துவிட்டார்கள்! 

மேலும் நின்றுவிட்டார்கள். 

வானில் வெள்ளை வெயிலும், கருப்பு மேகங்களும் ஒன்றாய் தெரிந்தன. அது அப்படியே தலைநகரிலும் பிரதிபலித்தது. 

ஆதலால், அந்த இடமே ஒரு ‘ப்ளாக் அன்ட் வொயிட் எஃபெக்ட்டில்’ இருந்தது. 

நிறமில்லா காற்று செல்லும் திசைக்கு ஏற்ப பறக்கும், நிறமேற்றப் பட்ட அவளது கூந்தல் சுருள்கள்! 

அதைக் கட்டுக்குள் வைக்க அவள் கரங்களின் முயற்சி!! 

நனைந்து மடிந்த இமைகளில்லாமல், இன்று மஸ்காராவில் நனைத்த இமைகள்!! 

நாசியின் மூச்சிற்கு ஏற்ப அசையும் மூக்குத்தி! 

தாராவைப் பார்ப்பதற்கு ரசனையாக இருந்தது, தேவாவின் கண்களுக்கு!

“தாரா” என்று அழைத்தான்.

“ம்ம்” என்றாள், அதுவரைக் கவனத்தை எங்கோ வைத்திருந்தவள், அவன் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி! 

“ஒன்னு சொல்லணும்” 

“சொல்லுங்க”

“தாரா, நீங்க இன்னைக்கு அழகா இருக்கீங்க” என்றான், அவள் கண்களை நேராகப் பார்த்து!! 

ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு, குடையை விட்டு வெளியேறிச் சென்று சிரித்தாள்.

“தாரா, இட்ஸ் டிரிசிலிங்க்” என்று அவள் கைப் பிடித்து இழுத்து, குடைக்குள் கொண்டு வந்து நிறுத்தினான்.

இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தாள். 

“எதுக்குச் சிரிக்கிறீங்க?”

“உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ண வந்தேன்ல??” என்றாள் கேள்வியாக! 

“ஆமா” 

“அன்னைக்கும் இதே சாரீதான் கட்டியிருந்தேன்”

“புரியலை”

“இல்லை, அன்னைக்கு நோ சொல்லிட்டு… இன்னைக்கு இப்படிச் சொல்றீங்கள. அதான்” என்று மீண்டும் சிரித்துக் கொண்டாள். 

அவள் சிரித்து முடிக்கும் வரைக் காத்திருந்து, “தாரா” என்று அழைத்தான். 

“ம்ம்ம்”

“அக்கார்டிங் டு மீ… நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்றதுக்கும்… உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கும்… எந்தச் சம்பந்தம் இல்லை” என்று தன்னைத் தெளிவு படுத்தினான். 

அவன் தெளிவு, ஓரிரு நொடிகள் அமைதியை அவளிடம் தந்தது! 

அவளின் அமைதி, அவளிடமும் ஒரு தெளிவு கொண்டு வந்தது. 

ஆதலால், “ஆனா, தாராக்கு தேவாவை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றாள் ஆத்மார்த்தமாக!

முதல்முறையாகத் தன் காதலைப் வெளிப்படையாகப் பிரகடனப் படுத்தினாள். 

என்றோ சொல்ல நினைத்தது! இன்றுதான் சொல்ல முடிந்தது! சொல்லிவிட்டாள்!! 

விழிகளில், ‘என்னைக் காதலி’ என்ற விண்ணப்பங்கள் ஏதுமில்லை! ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற விருப்பங்கள் மட்டுமே! 

“எப்பவு ஏதோ பேசணும்னு சொல்வீங்கள, இப்போ பேசறீங்களா?” எனக் கேட்டான். 

மறுப்பாய் தலையசைப்பு, தாராவிடம்! 

பேச மறுத்து விட்டாள். 

தன் காதலுக்கான முடிவை, அவன் எடுக்க கால அவகாசம் வேண்டும் என்று விட்டுவிட்டாள். 

அவனின் முடிவு எதுவாயினும், அது எந்தக் காரணங்களையும் சார்ந்து இருக்கக் கூடாது என்று நினைத்தாள். 

அந்த முடிவு அவளுக்காக, அவன் எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டாள். 

ஆதலால் பேச மறுத்து விட்டாள். 

?முன்னறிவிப்பு ஏதுமின்றி, தன் நேசத்தை சொன்னவளால் தன்னை பாதியளவு நிரப்பிக் கொண்டது. – காதல் உண்டியல் feeling awesome with தாரா!?

“லேட்டாகுது தேவா. போகலாமா??” என்று கேட்டாள். 

சரியென்றான். 

பின் இருவரும் மெதுவாக நடந்து, கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். 

மீண்டும் பயணம். 

தாராவை மருத்துவமனையில் கொண்டு வந்து விட்டுவிட்டு, விடைபெற்றுச் சென்றான். 

*****

தேவா, அலுவலகத்தை நோக்கிப் பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருந்தான். 

மழை பெய்ய ஆரம்பித்தது. சன்னலின் வழியே வருகின்ற மழைச் சாரலைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தான். 

மனதிற்குள் பெய்யும் சாரலாய் தாராவின் பேச்சுக்கள் இருந்தது. 

இதுநாள் வரை அவனிடம், 

விவாதம் செய்திருக்கிறாள்!

வேதனை காட்டியிருக்கிறாள்! 

விளையாட்டாய் பேசியிருக்கிறாள்! 

இதுதான் முதல்முறை, 

ஒவ்வொரு வாக்கியத்திலும் – தன்

விருப்பத்தைப் பகிர்ந்திருக்கிறாள்!! 

தாரா கேட்ட கேள்விகளுக்குத் தன்னிடம் பதில் இருக்கிறதா? என்று தெரியவில்லை. 

ஆனால், தாராவிற்காக தன் மனதில் ஒரு இடம் இருக்கிறது என்று தெரிந்தது. 

*****

அடுத்த நாள் காலை 

ராஜசேகர் வீடு 

குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர். 

“தாரா” என்றழைத்தான் சரத். 

‘சொல்லு’ என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள். 

“நேத்து ஏன் டாக்டர்ஸ் மீட்டிங் வரலை? எங்க போயிருந்த?” என்று கேள்வி கேட்கத் தொடங்கினான். 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!