மருத்துவமனை, அடுத்த நாள்!
தாராவின் அறை
கொஞ்சம் பதற்றமாக இருந்தாள்.
காரணம்?
காலையில், ஒரு மருத்துவருடன் தாராவிற்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.
இது சில நேரங்களில் நிகழ்வதுதான். அவளுக்கு இது புதிதல்ல!
ஆனால் இன்று அந்தக் கருத்து வேறுபாடு வந்திருந்தது, குழந்தைகள் நலப் பிரிவில் இருக்கும் ஒரு மருத்துவரிடம்.
நிச்சயம் சரத்தின் காதுகளுக்கு விடயம் சென்றிருக்கும். தன்னிடம், அவன் கேள்வி கேட்பான்!
அப்படிக் கேட்டால், அவனிடம் பொறுமையாக, கோபப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
நினைத்தது போல் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து, அலைபேசி அழைத்தது.
திரையில் சரத்தின் பெயர்!
“ஹலோ” என்றாள் அழைப்பை ஏற்ற பின்!
“எங்க இருக்க?”
“ரூம்ல”
“கொஞ்சம் பேசணும். வா” என்று சொல்லி வைத்துவிட்டான்.
******
எட்டாவது தளம் சென்று, சரத்தின் அறைக் கதவைத் தட்டினாள்.
“ம்ம், கம் இன்” என்ற குரல் வந்ததும், உள்ளே நுழைந்தாள்.
சைகையிலே ‘உட்காரு’ என்று சொன்னான்.
அவளும் அமர்ந்துகொண்டாள்.
“நீ எதுக்கு வேற டிபார்ட்மென்ட் டாக்டர்ஸ்-க்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிற?”
எடுத்தவுடன் கேள்வி! அதுவே தாராவிற்கு எரிச்சல் தந்தது. மேலும் அது கேட்கப்பட்ட முறை, அவளுக்குக் கோபத்தை வரவழைத்தது.
“அந்தப் பேபிக்கு இன்குபேட்டர் சப்போர்ட் தேவையில்லை. அதான் சொன்னேன்”
“நீ gynecologist-தான?? Pediatric gynecologist இல்லைல?”
இந்தக் கேள்வியில், இருவருக்குமான வாக்குவாதம் ஆரம்பித்தது!! அது தொடர்ந்து… தொடர்ந்து…
கடைசியில், “நான் மேனேஜ்மென்ட் பெர்சன்” என்று தாரா சொல்லியதில் வந்து நின்றது.
“ஓ, மேனேஜ்மென்ட் பெர்சன்! அதுக்கு டாக்டர்ஸ் மீட்டிங் அட்டன் பண்ணனும், ‘என் சர்வீஸ்’ இந்த ஹாஸ்ப்பிட்டல்-ல மட்டும்னு இருக்கணும்”
அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்தது! அவள் கட்டிவரும் மருத்துவமனையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறான்!
இன்று இதற்கு ஒரு முடிவு தெரிந்தே ஆகவேண்டும் என்ற முடிவில் தாரா இருந்தாள்.
“என்ன சைலன்டா இருக்க? இப்போ பேசு?”
“நான் இந்தக் ஹாஸ்பிட்டல்-ல சர்வீஸ் பண்றது, உனக்குப் பிடிக்கலையா சரத்?”
“என்ன கேள்வி கேட்டா, என்ன பதில் சொல்ற?” என்றவன் குரலில் எரிச்சல் இருந்தது!
“நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு” என்றாள் விடாமல்!
“இவ்ளோ பெரிய ஹாஸ்ப்பிட்டல் இருக்கிறப்போ, வேற ஹாஸ்பிட்டல் கட்டுற!! நீ, இந்தக் கேள்வி கேட்காத”
“அது நான் என் அப்பாகாகப் பண்ற ஒரு விஷயம். ஃபிரீ சர்வீஸ்காக. போதுமா?” என்று குரலை உயர்த்தினாள்.
“மெதுவா பேசு, இது ஹாஸ்பிட்டல்”
“சரி, பதில் சொல்லு” என்று சாதரணமானாள்.
“உனக்கு இங்க ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கிறப்போ, நீ ஒரு ஃப்ரீ சர்வீஸ் ஹாஸ்பிட்டல் ஸ்டார்ட் பண்ணா, உன்னோட 100% எந்த ஹாஸ்பிட்டலுக்கு-ன்னு ஒரு கொஸ்டின் வரும். அது இந்த ஹாஸ்பிட்டல் குட்வில்-ல அபெஃக்ட் பண்ணாதா??”
‘இதுதான் இவன் பிரச்சனையா?’ என்பது போல் பார்த்தாள்.
“நீ, அதிபன்னு ஒருத்தரோட கனவுக்காக யோசிக்கிறப்போ, நான் ராஜசேகர்-னு ஒருத்தரோட உழைப்புக்காக யோசிக்கிறேன். அவ்வளவுதான் தாரா!”
“அந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்-ல நான் தலையிட மாட்டேன். டிரஸ்ட் மாதிரி… இல்லைன்னா…என்ஜீஓ… நாட் யெட் டிசைட்டடு சரத்! பட், எனக்கு இந்தக் ஹாஸ்பிட்டல்-ல விட்டுப் போற ஐடியா இல்லை சரத்”
“நானும் போகச் சொல்லலை. தேங்க்ஸ் ஃபார் கிளாரிஃபிகேஷன்” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.
“இதைத் தவிர, என்கிட்ட பேசறதுக்கு எதுவுமே இல்லையா??”என்று கேட்டு, அவனுடன் பேச்சைத் தொடர நினைத்தாள்.
“இருக்குதே”
“அப்போ பேசு”
“அம்மா, உன்னை நினைச்சு கவலைப்படறாங்க. ஸோ மேரேஜ் பத்தி யோசி தாரா”
“ம்ம்ம்”
“அம்மாவோட ஹெல்த் கன்டிஷன் பத்தி, நான் யோசிப்பேன். அதனால இதைச் சொல்றேன்”
“அவ்வளவுதானா!? வேற இல்லையா?”
“வேற? ஜெகன் பத்தி சொல்லணும். அவன் உன்னாலதான் எம்எஸ் படிக்கப் போகாம இருக்கான். ஸோ அவனைப் போகச் சொல்லி அட்வைஸ் பண்ணு”
“ம்ம்ம்”
“நவ் எ டேய்ஸ்… அவன் ப்யூச்சர் பத்தி, நான் யோசிக்கிறேன் தாரா”
“ஓகே ஓகே! புரியுது! வேற ஏதாவது??”
“வேற ஒண்ணுமில்லை!”
“ஓ!” என்றவள், “என்னைப் பத்தி எப்பவாச்சும் யோசிப்பியா சரத்?” என்றொரு கனமானக் கேள்வி கேட்டாள்!
அக்கணம், அவன் அமைதியை கையில் எடுத்துக் கொண்டான்.
“இல்லை, யோசிச்சிருக்கியா சரத்?” என்று கேட்கையில், அவள் குரல் கனத்திருந்தது!!
மீண்டும் அமைதி. ஆனால், இம்முறை கேள்விக்காக அல்ல! கேட்டவளின் குரலில் இருந்த கனத்திற்காக!!
“நாம ரெண்டு பேரும் நல்லா பேசி, ரொம்ப வருஷமாச்சு சரத்!! எனக்… ” என்று பாதியிலேயே நிறுத்தினாள்.
வருத்தம் மேலோங்கி இருந்ததால், அவளால் அதற்கு மேல் பேச இயவில்லை.
அவனுக்கும், அவள் வருந்துவது தெரிந்தது.
இருவருக்கும், அதிபனின் மறைவிற்குப் பிறகு, வீட்டில் நடந்த வாக்குவாதம் நினைவிற்கு வந்தது.
அதன் பின்னரே, இருவரும் பேச்சைத் தவிர்த்திருந்தனர்.
“ஹாஸ்டல்ல சேர்த்துவிடுங்கன்னு சொன்னா… எனக்கு கோபம் வராதா?” என்று ஒருமாதிரி ஆகிப்போன குரலில் கேட்டான், சரத்.
“நீயும் சொன்னதான?! இவளை ஹாஸ்டல்-ல சேர்த்து விடுங்கன்னு”
“நீ அன்னைக்குச் சொன்னதை, நான் திருப்பிச் சொன்னேன்”
“நீ அப்படிச் சொன்னது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு சரத். ரொம்ப” என்று மட்டியைக் கடித்துக் கொண்டு, மனதின் வலியைக் காட்டினாள்.
இத்தனை வருடங்களாய் மனதை அரித்துக் கொண்டிருந்த வலியை அவனிடம் கொட்டிவிட்டோம் என்ற நிம்மதியில், தாரா இருந்தாள்.
இத்தனை வருடங்களும், இந்த வலியுடனே வாழ்ந்திருக்காளா?? என்று நினைக்கையில், சரத் மன நடுக்கம் கொண்டான்.
எழுந்து, அவள் அருகே சென்று மேசையின் மீது சாய்ந்து நின்றான்.
“தாரா”
“ம்ம்ம்”
“அன்னைக்கு ப்ராப்ளம் வேற. நீ அம்மாவைப் பேசின. ஸோ நானும் பேசினேன்”
“இதே ஜெகன் பேசினா என்ன செஞ்சிருப்ப?”
“புரியலை”
“அன்னைக்கு என் இடத்தில ஜெகன் இருந்தா, என்ன செஞ்சிருப்ப?”
“ஓ! நீங்கிறதால ஹாஸ்டலுக்கு அனுப்பச் சொன்னதா சொல்ற! ஜெகன்-னா அப்படிப் பேசியிருக்க மாட்டேன்-னு சொல்ற!! இதானா உன்னோட சந்தேகம்”
‘ஆம்’ என்று அமைதியாக இருந்து ஒத்துக் கொண்டாள்.
“நல்லா கேட்டுக்கோ தாரா. நீயில்ல! ஜெகன், அப்பா… யாரு அம்மா கஷ்டப்படுற மாதிரி பேசினாலும். நான் இப்படித்தான் நடந்திருப்பேன்”
அம்மா மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா? என்று ஒரு நொடி அதிர்ந்தாள், தாரா!
அதேநேரம், அந்தப் பாசத்தைத் தன்னிடம் காட்டமாட்டானா?? என்று ஏக்கம் கொண்டாள், தாரா!!
“அன்ட் ஜெகன் அப்படிப் பேசியிருந்தா, நல்லா திட்டிருப்பேன்”
“அப்போ என்னை ஏன் திட்டலை சரத்? திட்டிருக்கலாமே! இப்படிப் பேசாத.. தப்பு தாரா! அப்படின்னு சொல்லித் திட்டிருக்கலாமே! ஏன் திட்டலை சரத்?” என்று உரிமையாகக் கேட்டாள்.
‘தங்கை’ என்ற உறவின் உரிமையை எடுத்திருக்க வேண்டுமெனச் சொல்கிறாள்! சரத்திற்குப் புரிந்தது.
அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தான். அதன்பின் நடந்ததவைகளையும் நினைத்துப் பார்த்தான்.
அவளுக்கும் அவனுக்கும் இடையே இடைவெளி வந்தது எதனால் என்று புரிந்தது!
தாராவைப் பார்த்தான்.
வெளியே உறுதியாக தெரிந்தாலும், உள்ளே உடைந்திருக்கிறாளோ? என்ற உறுத்தல் வந்தது.
அவள் உச்சந்தலை வரை, தன் உள்ளங்கையைக் கொண்டு வந்தான். பின்னர் என்ன நினைத்தானோ! கையை பின்னோக்கி இழுத்துக் கொண்டான்.
ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, தாரா நிமிர்ந்து பார்த்தாள்.
“போதும் பேசினது. போ” என்றான் அமைதியாகிப் போன குரலில்!
“சப்போஸ், எனக்கு மேனேஜ்மென்ட் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இல்லாம இருந்தா… உனக்கும் எனக்கும் கேப் ரொம்ப வந்திருக்காதோ?” என்று கேட்ட, தாராவின் கண்கள் கலங்கின.
“ஏன் இப்படியெல்லாம் நினைக்கிற?” என்றவன் குரல் கஷ்டப்பட்டது!
“எனக்கு இந்த ரெஸ்பான்சிபிலிட்டிஸ் எதுவும் வேண்டாம் சரத். நீயும் ஜெகனும் பார்த்துக்கோங்க” என்று கெஞ்சினாள்.
“ஹாஸ்பிட்டல் ரெஸ்பான்ஸிபிலிட்டி, நான்… நீ… ஜெகன்! நம்ம மூனு பேருக்கும் ஈக்வல்தான்”
“இல்லை சரத்… ” என்று தொடங்கியவளிடம்…
“போதும். இது லஞ்ச் டைம். போ… போய் சாப்பிடு. அகைன் 5:30 க்கு விசிட்டர்ஸ் டைம் ஸ்டார்ட் ஆகும்-ல” என்று முடித்துவிட்டான்.
“ம்ம்” என்று எழுந்து, திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
எதையோ ஒரு நிமிடம் யோசித்தாள். பின் திரும்பி, “சரத்” என்றாள்.
“என்ன?”
“நீ சாப்பிட்டியா?” என்றொரு கேள்வி!
அது, சரத்திற்கான தாராவின் கேள்வி மட்டுமல்ல! அவனுக்கான அவளின் அக்கறையும் கூட!
“இல்லை. இனிமேதான்” என்றான் பாதியாகிப் போன குரலில்.
“ஓ!” என்றவள், அப்படியே நின்றாள்.
“என்ன தாரா?” என்று மெல்லக் கேட்டான்.
“வெளியில போய் சாப்பிடலாமா சரத்?” என்று மெதுவாகக் கேட்டு நின்றாள்.
என்ன பதில் சொல்வான்! ஒத்துக் கொள்ளவானா? மாட்டானா? என்ற ரீதியில் தாரா நின்றாள்.
“எப்பவும் ஜெகன்கூடதான போவ… இன்னைக்கு என்ன… என்கிட்ட கேட்கிற?” என்று வேறொரு கேள்வி, அவளுக்காக அவனிடம் இருந்தது.
“அதான் கேட்கிறேன். நீ கூட்டிட்டுப் போறீயா?” என்று திரும்பவும் கேள்வி கேட்டு நின்றாள்!
அவனின் மீது அவளுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டியவள், அவனிடம் அவள் எதிர்பார்க்கும் ஆசையைச் சொன்னாள்.
அவளின் அக்கறையோ? ஆசையோ? இரண்டுமே அவனுக்குப் புதிதல்லவா? அமைதியாக நின்றான்.
“பக்கத்திலதான் சரத். இப்ப போனா… 5:30க்கு திரும்பிடலாம். ப்ளீஸ் கூட்டிட்டுப் போ சரத்?” என்று கேட்டாள்.
அவள் கேட்டவிதம், முற்றிலும் ஒரு தங்கை அண்ணனிடம் கேட்கும் விதம்!
சமாதானம்… அடம்பிடிப்பு… ஆசை…உரிமை… கெஞ்சல்… பாசம்… எல்லா உணர்வுகளும் கலந்த கலவை அது!
இப்படியொரு உணர்வில் கேட்டுக் கொண்டு நிற்பவளைப் பார்த்து, ஒரு அண்ணன் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்!
முதலில் ஏன் ‘முடியாது’ என்று சொல்ல வேண்டும்?!
சரத் சம்மதித்தான்.
“அப்போ, நான் போய்… ஜெகனைக் கூட்டிட்டு ED என்ட்ரன்ஸ்ல வெய்ட் பண்றேன். நீ வந்திரு. நம்ம மூனு பேரும் போகலாம்” என்றாள் வேகமாக!
அதுவரை, அவள் முகத்தில் பரவியிருந்த அழுத்தம் குறைந்து, ஆனந்தம் பலிச்சிட்டது!
இதில்தான் இவள் சந்தோஷம் இருக்கிறதா? என்பது போல் சரத் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரத், என்ன ஒன்னும் சொல்ல மாட்டிக்க?” என்று காற்றாகிப் போன குரலில் கேட்டாள்.
“நீ போ தாரா. நான் வர்றேன்” என்று சொன்னதும், தாரா அறையை விட்டு வெளியேறினாள்.
அவசரச் சிகிச்சைப் பிரிவு
தாராவும் ஜெகனும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.
“நிஜமா சொல்றியா?” என்று சந்தேகமாய் ஜெகன் கேட்டான்.
“நிஜமா ஜெகன். நான் கேட்டேன் ‘கூட்டிட்டுப் போறீயான்னு?’… அவன் ஓகே சொல்லிட்டான்”
“நம்பவே முடியலை”
“வெயிட் பண்ணு. வருவான். அப்போ நம்பு!”
அடுத்த ஐந்து நிமிடங்கள் கழித்து, தாராவிடம் சொன்னது போல், சரத் வந்தான்.
ஜெகனும், தாராவும் கார் அருகில் சென்றனர். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் சரத் அமர்ந்திருந்தான்.
கார் சன்னலைத் திறந்து, “ஏறிக்கோங்க” என்றான் சரத்.
இருவரும் சற்றுத் தயங்கினர்.
அவர்கள் தயக்கத்தைக் கண்டதும், காரிலிருந்து சரத் இறங்கி, என்ன தாரா? போக வேண்டாமா?” என்று கேட்டான்.
“அண்ணா, டிரைவர் வேண்டாம்” என்றான் ஜெகன்.
“ஏன்?”
“அக்காவை வெளியே கூட்டிட்டுப் போகிறப்போ, நாம டிரைவ் பண்ணாதான் அவளுக்குப் பிடிக்கும்”
இப்படியெல்லாம் இவள் எதிர்பார்ப்பாளா? என்பது போன்ற தோற்றம், சரத்திடம்!!
“சரி ஏறுங்க” என்றவன்,
ஓட்டுனரிடம் சென்று, “நான் டிரைவ் பண்ணிக்கிறேன். நீங்க இறங்குங்க” என்றான்.
அவர் இறங்கியதும்,
கார் கிளம்பியது.
இதுவே முதல் முறை! இப்படி மூவரும் செல்வது!!
*****
Mall Food Court
வார நாட்கள் என்பதால், அந்த உணவுக் கூடம் கூட்டமே இல்லாமல் இருந்தது.
மூன்று பேரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
“ரெஸ்டாரென்ட் போகணும்னு சொல்லிட்டு, இங்க எதுக்கு?” என்றான் சரத்.
“அக்கா-க்கு, இங்க இருக்கிற ஃபுட் டேஸ்ட் பிடிக்கும்” என்றான் ஜெகன்.
சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து, மூவரும் உண்டனர்.
சாப்பிடும் போது, ஜெகனும் தாராவும் பேசியும், சிரித்தும் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான், சரத்.
சாப்பிட்டு முடிந்ததும்….
“கிளம்பலாமா?” என்று சரத் கேட்டான்.
“நீ கிளம்பு-ண்ணா. இவ்ளோ தூரம் வந்திட்டு, அக்கா ஷாப்பிங் பண்ணாம போக மாட்டா” – ஜெகன்.
‘இவன் எப்படி இவளை இவ்வளவு புரிந்து வைத்திருக்கிறான்?’ என்று சரத் யோசிக்க ஆரம்பித்தான்.
“பரவால்ல ஜெகன். ஹாஸ்ப்பிட்டல் போயிடலாம். ஷாப்பிங் பண்ணா லேட்டாகும்” என்று தாரா, சரத்திற்காகப் பேசினாள்.
“அக்கா, அவன் போகட்டும்! நான் இருக்கேன்” – ஜெகன்.
“எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நானும் இருக்கேன்” என்று சரத், தாராவிற்காகப் பேசினான்.
இப்படிச் சொல்லிவிட்டு, சரத் முன்னே நடந்து சென்றான்.
“வா” என்று தாராவைக் கூட்டிக்கொண்டு ஜெகனும் பின் தொடர்ந்தான்.
*****
மூவரும் ஒரு கடைக்குள் நுழைந்தனர்.
ஒரு ஐந்து நிமிடங்கள் தாராவுடன் சுற்றிவிட்டு, “தாரா, நீ ஷாப்பிங் பண்ணு. நானும் அண்ணனும் இங்க உட்கார்ந்திருக்கோம்” என்று ஜெகன் சொன்னான்.
அவனது ‘தாரா’ என்ற அழைப்பைக் கவனிக்காமல் ‘சரியென்று’ என்று சொல்லிச் சென்று விட்டாள்.
அவள் சென்றதும்,
ஆண்கள் இருவரும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.
“தாரா-ன்னு சொல்ற. அக்கா-ன்னு மரியாதை இல்லையா?” – சரத்.
“உனக்குத் தங்கச்சின்னு பாசம் இருக்கா?” என்று ஜெகன் பேச ஆரம்பித்தான்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல், சரத் அங்கிருந்த ஆங்கில மாத இதழைப் புரட்ட ஆரம்பித்தான்.
“அதிசயமா இருக்கு! நீ வந்திருக்க?” என்று மீண்டும் ஜெகன் பேச ஆரம்பித்தான்.
“அவதான் கூட்டிட்டுப் போன்னு சொன்னா! அதான்”
“அதான! உனக்கா இதெல்லாம் எங்கத் தெரியப்போகுது?!”
“என்னடா? அவளும் இப்படித்தான் பேசுறா… நீயும் பேசுற… என்னதான் உங்களுக்குப் பிரச்சனை?”
“அக்கா என்ன பேசினா?”
“என்னைப் பத்தி யோசிப்பியான்னு கேட்டா?”
“கரெக்ட்தான். அதேதான் நானும் கேட்கிறேன்!! அவளைப் பத்தி யோசிப்பியா?”
“அவளைப் பத்தி யோசிக்காமவா, அலைன்ஸ் பார்த்துகிட்டு இருக்கேன்”
“அவளைப் பத்தி யோசிச்சா, நீ அலைன்ஸ் பார்த்திருக்கவே மாட்ட”
“என்ன சொல்ற ஜெகன்?” என்று புரியாமல் சரத் கேட்டான்.
“நீ, அம்மாவைப் பத்தி யோசிச்சதால அலைன்ஸ் பார்க்கிற”
“ஆமா! அவளை நினைச்சு அம்மா கஷ்டப்படுறாங்க. அதான் பார்க்கிறேன்” என்று ஒத்துக் கொண்டான்.
“ஆனா, அவ கஷ்டப்படுறாளே… அது உனக்குத் தெரியலையா?”
இன்னும் சரத்திற்குப் புரியவில்லை. எனவே அமைதியாக இருந்தான்.
“அவ லவ் பெயிலியர்ன்னு சொல்லி… என்ன… ஒரு ஒன் மன்த் இருக்குமா? அதுக்குள்ள, வேற பையன் போட்டோவைக் கொண்டு வந்து காட்டறீங்க”
“….”
“அதுவும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை. நல்லாவா இருக்கு??”
“… “
“அம்மாவோட ரெஸ்பான்ஸிபிலிட்டி வேற! ஸோ அவங்க அப்படி நடந்துக்கிறது, ஓகே!! பட், நீ அவ ஏஜ் குரூப்தான? உனக்குப் புரியாதா?”
“…”
“கொஞ்சம் டைம் கொடுக்கக் கூடாதா? அதுலருந்து அவ வெளியே வர்றதுக்கு” என்று சொல்லிவிட்டு, ஜெகன் ஒரு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான்.
ஓர் அமைதி நிலவியது!
“அவமட்டும் அம்மாகிட்ட நடந்திக்கிற விதம், சரியா?” என்று சரத் கேள்வி கேட்டான்.
“அவளோட அப்பாக்கிட்டருந்து அவளைப் பிரிச்சுட்டு வந்துட்டாங்கனு, அம்மா மேல ஒரு கோபம் இருக்கு”
“அது சரியான்னு கேட்கிறேன்”
“தெரியலை! பட், சொல்றேன்னு தப்பா நினைக்காத!! அவளை அவ அம்மாகிட்டருந்தும் பிரிச்சிட்ட மாதிரி தோணுது!”
“என்ன சொல்ற?” என்று பதறியவன், “அவதான அம்மாகிட்டருந்து ஒதுங்கி நிக்கிறா?? என்னமோ நான்தான் காரணம் மாதிரி சொல்ற?” என்று அதே பதற்றத்துடன் சரத் பதில் கேள்வி கேட்டான்.
“அப்படியில்லை! பட், ரிலேஷன்ஷிப்ப பேலன்ஸ் பண்ணு. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்”
மீண்டுமொரு ஓர் அமைதி நிலவியது.
“என்னைய சொல்ற? அவ அப்பாக்கிட்ட நடந்திக்கிறது கரெக்டா?” என்று சரத கேட்டான்.
“ஸோ, அப்பா-அம்மாகிட்ட… அவ நடந்திக்கிறதை வச்சிதான், உனக்கும் அவளுக்கும் இடையில ரிலேஷன் இருக்க முடியும்னு சொல்ற??!”
“…”
“அவ உனக்குத் தங்கச்சி, அப்படிங்கிற தாட் உனக்கு இல்லையா?”
“அதெப்படி இல்லாம போகும் ஜெகன்??”
“அப்பாகிட்ட அக்கா பேசாம இருக்கிறது… எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. பட், அதையும் தாண்டி… அவ எனக்கு அக்கா”
“…”
“டூ டேய்ஸ் முன்னாடி வந்து சொன்னா, ‘நீ எம்எஸ் படிக்கப் போ. நான் சரத்கூட ஆர்க்யூமெண்ட் பண்ணாம இருந்துப்பேன்னு’ “
“நீ என்ன சொன்ன?” என்று சரத் கேட்டான்.
“உண்மையைச் சொல்லனும்னா… உன்னை நம்பி, அவளை விட்டுட்டுப் போக மனசு வரலை. அதனால, நான் எதுவும் சொல்லலை”
சரத் அடிபட்டான்! தங்கை, தம்பி என்ற இரு உறவுகளிடமும் வார்த்தைகள் கொண்டு அடிவாங்கினான்!!
“இதுக்கு மேல உன்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணுமில்லை”
“…”
“எது எப்படியோ, தயவுசெஞ்சி… இந்த மாப்பிள்ளை பார்க்கிற ப்ராசஸ்ஸ கொஞ்சம் நிறுத்தி வைங்க” என்று சொல்லி எழுந்து விட்டான் ஜெகன்.
“எங்கடா போற?” – சரத்.
பணம் செலுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த தாராவை, ஜெகன் கை காட்டினான்.
சரத்திற்குப் புரியவில்லை.
“வெளியே வந்தா, அக்காக்கு நான்தான் எல்லாம் வாங்கித் தருவேன்”
சரத் ஏதோ சொல்ல வரும் போது…
“உடனே, அவகிட்ட பணம் இல்லையான்னு கேட்றாத”
“….”
“இதுல எனக்கொரு திருப்தி, அவளுக்கு ஒரு சந்தோசம். அது உனக்குப் புரியாது!” என்று சொல்லி, தாரா நிற்குமிடம் சென்றுவிட்டான்.
ஜெகன் வந்ததும், தாரா எதுவும் சொல்லாமல், வாங்கிய பொருளை அவனிடம் கொடுத்துவிட்டு, விலகிவிட்டாள்.
அவர்கள் இருவரையும் வித்தியாசமாகப் பார்த்தான், சரத்.
அதன்பின் இரவு உணவை வெளியே முடித்துவிட்டு, இரவு பத்து மணியளவில் மூவரும் வீடு வந்தனர்.
ராஜசேகர் வீடு
ராஜசேகர், கீதாவிற்கு பெரிய பெரிய சந்தோஷங்கள்! மூன்று பேரும் ஒன்றாகச் சென்று வருகின்றனர் என்று!!
சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் அவரவர் அறைக்குச் சென்றனர்.
தாராவின் அறை
வாங்கி வந்ததை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு, மெத்தையில் விழுந்தாள்.
ஜெகனைச் சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
சரத் என்ன நினைக்கிறான்? என்று தெரியவில்லை.
எதையெதையோ நினைத்துக் கொண்டு வந்தவளுக்கு, கடைசியில் தேவா நியாபகம் வந்தது!
இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதால், கண்டிப்பாக அழைத்திருக்க மாட்டான் என்று தெரியும்.
இருந்தும் ஒரு ஆசை! அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்!!
அதிர்ச்சியடைந்தாள்! அத்தனை முறை அவளை அழைத்திருந்தான்.
ஏன்? எதற்கு?
வெளியே செல்வதால், அலைபேசியை சைலன்ட் மோடில் போட்டிருந்ததாள். எனவே கவனிக்கவில்லை!
தேவாவிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள். அவன் எடுக்கவில்லை.
திரும்பவும் அழைத்துப் பார்த்தாள். ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்தது.
திரும்பத் திரும்ப அழைத்தாள். தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று வந்தது.
என்னாயிற்று இவனுக்கு? ஏதோ ஒரு வேலையாகச் செல்வதாகக் சொன்னானே?
அதில் ஏதாவது பிரச்சனையா?
பாச உண்டியலைப் போல காதல் உண்டியலும்?? என்று கேள்வி கேட்டு நிறுத்தினாள்.
அதற்கு மேல் எதுவும் யோசிக்க முடியாமல் தவிக்கத் தொடங்கினாள்.