Eedilla Istangal 2.2

Eedilla Istangal 2.2

“கொஞ்சம் பேசணும்” என்று கேட்டுக் கொண்டே, தாரா மேசையின் முன் வந்து நின்றான்.

அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்தது பற்றி, அங்குள்ள மருத்துவர்கள் சரத்திடம் சொல்லி இருப்பார்கள் என்று தெரியும். அவன் இங்கே வந்து நிற்பான் என்றும் தெரியும். ஆதலால் தாரா எவ்வித வியப்புகளும் பதில்களும் தராமல் அமைதியாக இருந்தாள்.

“தாரா…” என்று அழுத்தி அழைத்தான்.

“எதுக்கு பேசணும் சரத்??” என்று அலுத்துக் கொண்டாள்.

“நீதான சொல்லிருக்க… சரத் வந்தா… என்கிட்ட வந்து பேசச் சொல்லுங்கன்னு??”

பதிலேதும் சொல்லாமல், அப்படியே அமர்ந்திருந்தாள்.

“தாரா…”

“சரி பேசு”

“எம்எல்சி-ன்னு தெரிஞ்சும் ஏன் அட்மிட் பண்ண?”

“ஏன்?? அதுல என்ன ப்ராப்ளம்??”

“என்ன ப்ராப்ளம்மா?? உனக்கு… ”

இவர்கள் வாக்குவாதம் ஆரம்பிக்கும் போதே, உள்ளே இருவர் நுழைந்தனர். ஒருவர் வயதானவர். மற்றொருவன் ஜெகன்.

“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க சரத்?” என்று கேட்டபடியே அந்தப் பெரியவர் சரத்தின் அருகில் வந்தார்.

“அதான! ரெண்டு வார்த்தை இவளைக் கேள்வி கேட்டறக் கூடாதே. எப்படித்தான் கண்டுபிடிச்சு வருவீங்களோ??” என்று வந்தவர் மேலயும் கோபப்பட்டான்.

“நான் என்ன கேட்கிறேன்… நீ என்ன சொல்ற??” என்று பொறுமையாகவே கேட்டார்.

“தேவையில்லாம அக்காவ திட்ட வந்திருப்பான்” என்று ஜெகன் இடையில் புகுந்து, தாராவிற்கு ஆதரவாகப் பேசினான்.

“ஓ! இவளைத் திட்டப் போறேன்னு தெரிஞ்சு… நீதான் இவரைக் கூட்டிட்டு வந்திருக்கியா??” என்று ஜெகன் மீதும் பாய்ந்தான்.

“நீ சும்மா இரு ஜெகன்” என்று பெரியவர் ஜெகனைக் கண்டித்தார்.

“சரி-ப்பா” என்று ஜெகன் அமைதியானான்.

ஆம்! வந்திருப்பவர் மருத்துவமனை உரிமையாளர்! பெயர் ராஜசேகர்.

“சரத் சொல்லு. எதுக்கு இங்க வந்து கத்திக்கிட்டு இருக்க?”

“அவ என்ன பண்ணியிருக்கா தெரியுமா??”

“தெரியும். ஒரு உயிரைக் காப்பாத்தியிருக்கா…”

“ஐயோ அப்பா ப்ளீஸ்… என்னமோ எனக்கு ஒரு உயிர் மேல அக்கறை இல்லாத மாதிரி போர்ட்டரை பண்ணாதீங்க. நானும் டாக்டர்தான்”

ஆம்! சரத்தும் மருத்துவமனை உரிமையாளர் ராஜசேகரின் பையன்தான்! மூத்த மகன்!!

“சரி சரத். ஆனா அந்த நேரத்தில, அவ என்ன பண்ணிருக்க முடியும்?”

“ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்கலாமே”

தாராவோ, மற்றவர்களோ எதுவும் பேசவில்லை.

“இப்போ எம்எல்சி… நம்ம டாக்டர்ஸ் போலீஸூக்கு அக்நாலேட்ஜ்மென்ட் பண்ணனும்… இப்படி எக்ஸ்ட்ரா பர்டன்”

“சரி விடு. இதுக்காக அவமேல இவ்வளவு கோபப்படாத”

“அப்பா!! நான் அதுக்காக மட்டும் கோபப்படலை. டாக்டர் ஷீலாகிட்ட ‘பாஃலோவ் வாட் ஐ செட்’-ன்னு சொல்லியிருக்கா. அவங்க எவ்ளோ எக்ஸ்பிரியன்ஸ்டு டாக்டர். அவங்ககிட்ட அப்படிப் பேசலாமா??”

சரத் பேசுவது நியாயம் என்பதால், “அவ உன்னைவிட ரெண்டு வயசு சின்னவ சரத். நீ சொல்லிக் கொடுத்தா… கத்துக்க போறா” என்று அமைதியாகச் சொல்லிப் பார்த்தார்.

“யாரு?? இவ! நான் சொல்லிக் கேட்பாளா??” என்றவன், “விடுங்க. என்னைக்கு நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க??!! அவளுக்குத்தானா உங்க புல் சப்போர்ட்டும்” என்றான் அலுத்துப்போய்.

“அப்படியில்லை சரத்….” என்று அவனைச் சமாதானப் படுத்த வார்த்தைகளைத் தேடினார்.

ஆனால் அதற்குள், “வேண்டாம்-ப்பா. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன்” என்றவன், தாராவைப் பார்த்து…”வீட்டுக்கு வா. அம்மா முன்னாடி மிச்சத்தை கண்டின்யூ பண்ணறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.

இப்படிச் சொல்லிவிட்டு வெளியேறிச் சென்ற சரத் பற்றி…

சரத் ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.

தாராவைவிட இரண்டு வயது மூத்தவன். ஆதலால் அவளைக் காட்டிலும் அனுபவம் கொஞ்சம் அதிகம்.

இருவருக்கும் நிர்வாகத்தில் சரிசமமான பொறுப்புகள் கொடுக்கப் பட்டிருந்தன. இருப்பினும், அங்குள்ள மருத்துவர்கள் சரத்தின் முடிவிற்குத்தான் செவிசாய்ப்பார்கள்.

காரணம் மருத்துவ நிர்வாகத்தில் அவன் எடுத்துக் கொள்ளும் அக்கறை!

தாராவும் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று நடத்துபவள்தான். ஆனால் சரத்தை விட இரண்டு வருடங்கள் அனுபவம் குறைவு என்பதன் வெளிப்பாடுகள் சிற்சில தருணங்களில் வெளிப்படும்.

அது சரத்தைக் கோபம் கொள்ளச் செய்யும்.

தந்தை கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த மருத்துவமனையை, அதன் நல்லபெயரை… எந்த ஒரு காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்போடு இருப்பவன்.

தாரா, சரத் இருவரின் நோக்கங்கள் ஒன்றாகவே இருந்தாலும், அதைச் செயல்படுத்தும் விதத்தில் மாறுபட்டிருந்தனர்.

எனவே இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் வரும்.

மேலும் சரத்திற்கு அம்மா என்றால் உயிர். அவனுக்கு அம்மாதான் எல்லாமே! அவ்வளவு பிடிக்கும்!!

இதுவே சரத்!!

அவன் சென்றதும், ஜெகன் தாராவின் அருகில் வந்து…”அக்கா… நீ ஒன்னும் வொரி பண்ணாத. அண்ணா-க்கு அம்மா மட்டும்தான் சப்போர்ட். உனக்கு நானும் அப்பாவும் இருக்கோம். டூ வோட்ஸ். நீதான் மெஜாரிட்டி” என்று ராஜசேகருக்குக் கேட்காதபடி ரகசியமாகச் சொன்னான்.

அவ்வளவு களேபரத்துக்குப் பின்… அவன் சொன்னது… சொன்னவிதம்… தாராவின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது.

“ஜெகன்” என்று ராஜசேகர் அழைத்தார்.

“அப்பா” என்று முன்னே சென்று நின்றான்.

“இ.டி-ல நீதான இருந்த??. நீயே டெசிஷன் எடுத்திருக்கலாம். எதுக்கெடுத்தாலும் அவ முன்னாடி வந்து நின்னு, அவளுக்குப் பிரச்சனையைக் கொண்டு வராத” என்று கண்டித்தார்.

“சரி-ப்பா”

“இன்னும் கொஞ்ச நாள்ல, நீ எம்.எஸ் படிக்கப் போகணும். ஸோ பி ரெஸ்பான்சிபிள்”

“ம்ம்ம்” என்று தலையைக் குனிந்து கொண்டே சொன்னவன், “தாரா வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் ‘தாரா’ என்று சொல்லிவிட்டுச் செல்வதைப் புன்னைகையுடன் பார்த்தவளுக்கு, அப்போதுதான் அங்கு நின்றுகொண்டிருந்தவர் கருத்தில் வந்தார்.

தலையைக் குனிந்து கொண்டாள்.

தாராவின் அறை பெரியதுதான். ஆனால் அது இன்னும் பெரியதாக தெரிந்தது.

காரணம்… உள்ளே இருந்த இருவருக்கும் இடையே படர்ந்திருந்த அமைதி! இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி!!

“தாரா” என்று அழைத்துக் கொண்டு ராஜசேகர், தாரா அருகே வந்தார்.

தாரா இருக்கையைவிட்டு எழுந்திரிக்கவும் இல்லை. குனிந்த தலையை நிமிர்த்தவும் இல்லை.

“தாரா”

“ம்ம்ம்”

“சரத் சொல்றதும் சரிதானே! நம்ம டாக்டர்ஸ் யாரையும் அப்படிப் பேசக்கூடாது” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொன்னார்.

அவர் பேசுவதைக் கவனிக்கின்றாளா? என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தாராவின் உடல்மொழி இருந்தது.

“அப்பா என்ன….” என்று அவர் ஆரம்பிக்கும் முன்னே…

“ப்ச்” என்று எரிச்சல் காட்டினாள்.

உடனே, “சரி…சரி… நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டார்.

அவர் அப்படிச் சொல்லியும் தாராவின் முகத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.

“சரத் சொன்னானே…” என்று மீண்டும் ஆரம்பிக்கப் போனவரை…

“ப்ளீஸ், சரத் ஏதாவது சொன்னா… அதுக்கு நான் பதில் சொல்லிக்குவேன். நீங்க இடையில…” என்று நிறுத்தியவள், “பீலிங் டயர்ட். ஸோ… ” என்று பாதியிலேயே நிறுத்தினாள்.

அவள் முகத்தில் தெரிந்த களைப்பை பார்த்தவர், “நீ சாப்பிட்டியா… சாப்பிடலன்னா… சாப்பிடு. மணி நாலாகப்போகுது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று கனிவுடன் சொல்லிவிட்டு வெளியேறினார்.

அவர் சென்ற பிறகே, தாரா நிமிர்ந்து நிம்மதியாக மூச்சு விட்டாள்.

*****

வெளியே சென்ற ராஜசேகர் அங்கு நின்றுகொண்டிருந்த, அந்த தளத்தின் செவிலியர்களைப் பார்த்து, “சிஸ்டர் இங்க வாங்க” என்று பொதுவாக அழைத்தார்.

அங்கு நின்றவர்களில் மொத்த செவிலியர்களும், ‘என்ன டாக்டர் வேணும்?’ என்று கேட்டுக்கொண்டு வந்து அவர் முன் நின்றனர்.

“ஒருத்தர் போதும்…” என்றார்.

இருந்தும் யாரும் செல்லவில்லை. ஏனெனில் அவர் மீதிருந்த மரியாதை அப்படி!

“சொல்லுங்க டாக்டர்” என்றார் ஒரு செவிலியர்.

“உங்க மேம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. இனிமேதான் சாப்பிடுவாங்க போல”

“ஆமா டாக்டர். ஒரு ஐவிஎஃப் கேஸ் முடிச்சிட்டு இப்போதான் வந்தாங்க”

“ஓ! கொஞ்சம் அவங்க ரிலாக்ஸானதுக்கு அப்புறமா, மத்த கேஸ் அனுப்புங்க”

“ஓகே டாக்டர்”

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்”

“ஷூயர் டாக்டர்”

“சரி, நீங்க போங்க” என்று அவர் சொன்ன பிறகே, செவிலியர்கள் கலைந்து சென்றனர்.

ராஜசேகரும் தன் அறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

அவர் சென்று கொண்டிருக்கும் போதே அவரைப் பற்றி…

அவர் ராஜசேகர். தன் மருத்துவப் படிப்பு முடிந்ததும், ஒரு சின்ன இடத்தில் தன் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.

கடும் முயற்சி செய்து, படிப்படியாக முன்னேறி… இன்று இத்தகைய பெரிய பன்முக சிறப்பு மருத்துவமனை உருவாக காரணமானவர்.

மிகவும் எளிமையானவர். தன்னிடம் வேலை செய்பவர்களிடம் கூட அதிர்ந்து பேசாதவர். மருத்துவமனை வெளியிலும், உள்ளேயும் நிறைய மரியாதையைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

ஜெகன் எப்படியோ… அப்படித்தான் ராஜசேகரும். தாராவின் கண்கள் லேசாகக் கலங்கினாலும், முகம் சற்று கலக்கம் காட்டினாலும் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இதுவே டாக்டர் ராஜசேகர்!

*****
உள்ளே தாரா…

சரத் சொல்லிச் சென்றதையே யோசித்துக் கொண்டிருந்தாள். டாக்டர் ஷீலாவிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டோமோ? என்று சந்தேகம் வந்தது.

அப்படி எண்ணம் வந்த அடுத்த நொடியே, டாக்டர் ஷீலாவை அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு, கடைசியாக தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாள். அதற்கு அவரோ, ‘தாரா பேசினதுக்காக, நான் ரெக்ரெட் பண்றேன்’ என்று சரத் சொன்னதாகச் சொன்னார்.

‘சரி’ என்று அழைப்பைத் துண்டித்தாள்.

சற்று நேரம் எந்த இடையூறும் இல்லாமல் தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

வெளியில் சென்று செவிலியரிடம், ‘கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’ என்று சொன்னதற்கு…’ஏற்கனவே உங்க அப்பா சொல்லிட்டுத்தான் போனாங்க மேம்’ என்று சொன்னார்.

எதுவும் சொல்லாமல் உள்ளே வந்துவிட்டாள்.

மேசையின் மீது சாய்ந்து நின்று கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள்.

ஏன்? இப்படி ஒரு சூழ்நிலையில் தேவாவைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் அவன் முகத்தைக் கூடச் சரியாகப் பார்த்துப் பேச முடியவில்லையே??

நடந்ததை நினைக்க நினைக்க மனம் கனத்துக் கொண்டே போனது.

காலையில் தேவாவைப் பார்த்த பொழுது இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது போன்ற உணர்வு.

சட்டென, ‘ச்சே’ என்று தலையை உலுக்கிக் கொண்டு, ‘தாரா இப்படி இருக்கக் கூடாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

தன் அறையில் இருந்த ஓய்வறைக்குள் சென்றாள்.
வாஷ் பேசின் முன்னே சென்று நின்றாள். டேப்பை திறந்துவிட்டு முகத்தில் தண்ணீரை வாரி வாரி அடித்தாள்.

அதன்பின் எதிரில் இருந்த முகக்கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு…

‘சீயர் அப் தாரா. தேவா மாதிரி ஒருத்தன, நீ வேற எந்த மாதிரி சிச்சுவேஷனல மீட் பண்ணிருக்க முடியும்னு நினைக்கிற?? பக்கத்தில பார்க்கணும்னு நினைச்ச பார்த்திட்ட. நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது பேர் சொல்லிக்கோ. தட்ஸ் ஆல்! ஹேவ் எ ஹோப் இன் யூ அண்ட் யுவர் லவ் கேர்ள்!! ‘ என்று தனக்குத் தானே சொல்லி, தன் மனதை ஆறுதல் செய்து கொண்டாள்.

மனம் லேசாகுவது போல் இருந்தது.

பிடிப்பானுக்குள் இருந்த கூந்தலை, விரித்து விட்டாள். நன்றாக முடிகளைக் கோதிவிட்டுக் கொண்டு, முகத்தை இருகைகளாலும் துடைத்துவிட்டு… முகக் கண்ணாடி பார்த்தாள்.

முகம் காட்டும் கண்ணாடி அவள் அகம் காட்டியது.
அகத்தில் இருந்த காதல், அதில் தெரிந்தது.

அந்தக் காதலைக் கண்டவுடன், களைப்பாக இருந்த முகம் களிப்பைக் காட்டத் தொடங்கியது.

மீண்டும் மனம் உற்சாகம் கொண்டது.

இப்போது முகக்கண்ணாடி அகத்தில் இருபவனைக் காட்டிச் சிரித்தது.

அந்தக் காதல் காட்சிப்பிழையை ரசித்தவள், தண்ணீரைக் கண்ணாடி மீது வீசிவிட்டு, ‘லவ் யு தேவா’ என்று சொல்லிக் கொண்டாள்.

error: Content is protected !!