அடுத்த நாள் காலை…
சரத் சொன்னபடி, மூன்று பேரும் வெளியே சென்றார்கள். தாரா கேட்டதை எல்லாம் சரத் வாங்கித் தந்தான்.
முதலில், இருவருக்குள்ளும் ஒரு தயக்கம் இருந்தது.
ஆனால் அன்று மருத்துவமனையில், இருவரும் பேசிக் கொண்டது… ஜெகன், சரத்திடம் பேசினது…
தேவா, தாராவிடம் சொன்னது… _இப்படிப்பட்ட நிகழ்வுகளால், தங்களுக்குள் இருந்த கசப்பான நினைவுகளை இருவரும் கடந்திருந்தனர்.
சற்று நேரத்தில், தாரா ‘அது வேண்டும்… இது வேண்டும்’ என்று இருப்பதை எல்லாம் கேட்க கேட்க… ‘ஏன்டா சொன்னோம்?’ என்ற சந்தோஷச் சலிப்பு வந்தது, சரத்திற்கு!
அடுத்தடுத்து வந்த நாட்காட்டியின் நாட்கள்…
சரத் மற்றும் ராஜசேகர், தேவாவின் அண்ணன் வீட்டிற்குச் சென்று வந்தனர். தேவாவின் அண்ணன்-அண்ணி பெரிய ஈடுபாடு காட்டவில்லை.
ஆனால், ஹேமா துள்ளிக் குதிக்காத குறைதான். அவ்வளவு சநதோஷம் அவளிடத்தில்!
அவள் சந்தோஷத்தின் மற்றுமொரு காரணம், அவள் கணவன் வந்திருந்தான். குழந்தைப் பிறக்கப் போகும் நாள் நெருங்கி வருவதால், அவன் வந்திருந்தான்.
எல்லோரும் சேர்ந்து, திருமணத் தேதியைக் குறித்தனர்.
ராஜசேகர், அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.
இதன் பின், ஒரு நாள் தேவாவும் சரத்தும் சந்தித்துக் கொண்டனர். திருமணத்திற்குத் தேவையான விடயங்கள் பற்றிப் பேசினர்.
சரத், திருமணத்திற்குப் பின் ஒரு பெரிய வரவேற்பு வைக்கப் போவதாகச் சொன்னான்.
அதில், தனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று தேவா சொல்லிவிட்டான்.
ராஜசேகர் அழைத்திருந்தபடி, தேவா வீட்டிலிருந்து ஹேமாவும், அவள் கணவரும் சென்று வந்தனர்.
கீதாவைப் பார்க்கும் பொழுது ஹேமாவிற்கு எங்கேயோ பார்த்த நியாபகம் இருந்தது.
ஆனால், அவள் அதற்கு மேல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவில்லை.
கீதாவும், தேவாவும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பே இல்லாமல் நாட்கள் நகர்ந்தன.
கீதா, அறிந்தே தவிர்த்து வந்தார்.
தேவாவிற்கு, ‘அக்கா சந்தித்தாயிற்று’ என்பதே போதுமானதாக இருந்தது.
தனக்குப் பிடிக்காத திருமணம் என்றாலும், தாராவிற்குப் பிடித்தமான வாழ்க்கை என்ற புள்ளியில் திருப்தி அடைந்தார், கீதா!
இதோ அதோ என்று… திருமண நாள் வந்தது.
ராஜசேகர் வீடு – காலை வேளை
தாரா, ஜெகன், சரத்… மூவரும், கீதாவின் வரவிற்காக வரவேற்பரையில் காத்திருந்தனர்.
கீதாவும் ராஜசேகரும்…
“இது தப்பு கீதா. ரொம்பத் தப்பு. நீ செய்றது நியாயமே இல்லை”
“நான் வரலை ராஜ். என்னைக் கம்பெல் பண்ணாதீங்க” என்று மறுத்துக் கொண்டே இருந்தார்.
வெகுநேரமாக, ‘வர மாட்டேன்’ என்று சொல்லும் கீதாவைச் சமாதானப் படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார், ராஜசேகர்!
இது, வெளியே காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும்!!
“தாராவைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா?”
கீதா அமைதியாக இருந்தார்.
“நான் போய், சரத்தை வரச் சொல்றேன். அவன் சொன்னாதான் நீ கேட்ப” என்று வெளியே சென்றுவிட்டார்.
அவர் சென்றதும்,
‘தான் ஏன் மறுக்கிறோம்?’ என்று எண்ணுகையில் கண் கலங்கியது.
ஒரே பெண்! அவளது கல்யாணத்திற்குச் செல்ல கோடி ஆசை இருக்கிறது.
ஆனால், தேவாவை எதிர்கொள்ளும் தைரியம் கிஞ்சித்தும் இல்லை.
இத்தனை நாட்களும் இல்லை! இன்றைய நாளில், நிச்சயம் இல்லை!!
மற்றுமொன்று, தான் திருமணத்திற்குச் சென்றால், தேவாவிற்கு உண்மை தெரிய வரும்.
தன் மீதான கோபத்தில், தேவா திருமணத்தை நிறுத்தி விட்டால்?!
தாராவால் தாங்கிக் கொள்ள இயலுமா??
ஆதலால், திருமணத்தைத் தவிர்க்கிறார்.
இந்த நிகழ்வில் மகளுடன் நிற்க முடியாத தன் நிலையை எண்ணி… வருத்தம், கவலை, நிம்மதியின்மை என்ற உணர்வுகளில் உழன்று கொண்டு வந்தார்.
எனினும், தன் முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாக இருக்கிறார்.
ஏனென்றால், தன் நிலைமைக்குக் காரணம் ‘தானே தான்’ என்று உணர்ந்திருந்தார்.
இதுவரைச் செய்தது எப்படியோ, ஆனால் இன்று மகளுக்குச் செய்வது நியாயக் கணக்கில் வராது என்று புரிந்து, புழங்காகிதம் அடைந்தார்!
மொத்தத்தில், தாரா விருப்பப்படி திருமணம் நடக்க வேண்டும்! அதன் பிறகுதான், தேவாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது, சரத் உள்ளே வந்தான்.
அவன் உள்ளே வருகிறான் என்று தெரிந்ததும், தன்னை சரிப்படுத்திக் கொண்டார்.
“ம்மா, கிளம்பலையா? என்று கேட்டுக் கொண்டு, கீதா முன்னே வந்து நின்றான்.
அவர் முகத்தில் தெரிந்த பயம், கவலை, நிம்மதியின்மை என எல்லாவற்றையும் படித்தவன், “என்னாச்சு-ம்மா?” என்றான்.
“சரத், நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க. நான் வந்தா… நான் வந்தா…” என்று தடுமாறினார்.
“என்னம்மா உங்க பிரச்சனை? தாராவை நினைச்சுப் பார்த்தீங்களா?”
“சரத், இப்பவும் அவளுக்காகதான் இந்த முடிவு. நீயாவது அம்மாவைப் புரிஞ்சிக்கோ-டா” என்று கண் கலங்கினார்.
“இப்படியே சொல்லிச் சொல்லி தப்பான முடிவு எடுக்கிறீங்க!”
“தப்புதான். ரொம்பத் தப்புதான். ஆனால், இந்த நேரத்தில இதுதான் சரி”
“ம்மா… உங்க மூணு பேருக்குள்ள என்னவோ இருக்கு” என்று யோசித்தவன், “நீங்க தேவாகிட்ட ஏற்கனவே பேசியிருக்கீங்களா?” என்று கேட்டான்.
அமைதியாக இருந்தார்.
“ம்மா சொல்லுங்க”
“ஆமாடா! அவன் பார்க்கிற வேலையை வச்சுத் திட்டிருக்கேன். அவன் கஷ்டப்படுற மாதிரி பேசிருக்கேன். இன்னும் இருக்கு. அப்புறமா சொல்றேன்” என்று உண்மையை ஒத்துக் கொண்டவர், ஓரிரு கண்ணீர் துளிகள் சிந்தினார்.
அதற்கு மேல், கீதாவால் சரத்திடம் உண்மையை மறைக்க முடியாது! மறைக்கவும் மாட்டார்!!
“ம்மா அழாதீங்க” என்று பதறி, அவர் கண்ணீர் துளியைத் துடைத்தான்.
மேலும், “முன்னாடியே சொல்லியிருக்கலாமே-ம்மா. இப்போ என்ன செய்ய முடியும்??” என்றான்.
“எதுவும் செய்ய வேண்டாம். தாரா-க்காக இந்தக் கல்யாணம் நடக்கணும் சரத்” என்று அழுதார்.
“கண்டிப்பா நடக்கும். நான் நடத்தி வைப்பேன். சரியா? நீங்க நிம்மதியா இருங்க” என்று அவரைத் தேற்றினான்.
சற்று நேரம் அலைபேசியில் பேசினான்.
“என்னடா போகலையா?” என்று கேட்டவரிடம்,
“ம்மா, உங்களைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் வருவாங்க”
“எதுக்கு சரத்?”
“உங்களைத் தனியா விட்டுப் போக முடியாது. நான் மேரேஜ் முடிஞ்சதும் வந்துருவேன். சரியா? அதுவரைக்கும் டென்ஷனாகாம இருங்க”
“ம்ம்ம்” என்று தலையாட்டினார்.
“மேரேஜ் முடிஞ்சதும், இங்க கூட்டிட்டு வர நினைச்சேன். ஆனா தாரா, அவ வாங்கியிருக்க வீட்டுக்குப் போகணும்னு சொல்றா” என்று பேசியபடியே விரிப்புகளைச் சரி செய்தான்.
“போகட்டும் சரத். விட்டுடு… அவங்க ரெண்டு பேரும் பேசட்டும். பேசணும்! பேசினாதான் நல்லது” என்றார்.
இருவருக்கும் புரிந்தது! தாரா, தன் தந்தை பற்றிப் பேசப் போகிறாள் என்று!
தாரா, அதிபன் மகளென்று தெரிந்தால், தேவா எப்படி எதிர்வினை புரிவான்?? அதைத் தாரா எப்படி எடுத்துக் கொள்வாள்??_என்று கீதா கவலைப்பட்டார்.
ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே இருந்து சேர விடாமல் தடுத்தாயிற்று! இனி விலகி நிற்பதே உகந்தது! _என்று கீதா மனதைத் தேற்றிக் கொண்டார்.
கீதாவைப் பார்த்தவன், “ம்மா, நீங்க…” என்று தொடங்கியவனிடம்,
“நான் என்னைப் பார்த்துக்கிடுவேன்! நீ அவளைப் பாருடா” என்றார்.
“நான் பார்த்துப்பேன். ஆனா அவ உங்களைத் தேட மாட்டாளா?”
நிச்சயம், ‘தான் கூட நிற்க வேண்டும்’ என்று ஆசைப்படுவாள். ஆனால் தன்னிலமை? மீண்டும் முகத்தில் கலக்கம் தெரிந்தது.
அதைக் கண்டவன், “ம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான்.
அதற்கு மேல், சரத்தால் கீதாவை வற்புறுத்த முடியாது! வற்புறுத்தவும் மாட்டான்!!
உள்ளத்தின் குற்ற உணர்வால், கீதா உடலைக் குறுக்கிக் படுத்துக் கொண்டார்.
“இப்போ கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று, அவர் தலைகோதி சொல்லிவிட்டு, சரத் வெளியே வந்தான்.
வரவேற்பறையில்…
வெளியே வந்தவன் கண்களில், தாரா விழுந்தாள்.
‘அம்மா, ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?’ என்ற ரீதியில் நின்றிருந்த தாராவைப் பார்த்தான்.
‘இவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல?’ என்று நினைத்தவன் மனம் சுணக்கம் கொண்டது.
“என்னடா அம்மா வரலையா?” என்று ராஜசேகர் கேட்டார்.
‘இல்லை’ என்று தலையசைத்தான்.
தாரா எதுவும் கேட்கவில்லை.
அவளை நோக்கி வந்த சரத், “ஒண்ணுமில்லை தாரா! அம்மா கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்றாங்க. ஸோ வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றான்.
“நான் பேசிப் பார்க்கவா சரத்?” என்று நம்பிக்கை இல்லா குரலில் கேட்டுப் பார்த்தாள்.
நம்பிக்கை இல்லாத குரல்தான்!
ஏன்?
சரத் பேசியே வராதவர், தான் பேசியா வந்து விடப்போகிறார்… என்ற காரணத்தால்!
“வேண்டாம் தாரா! இந்த நேரத்தில எதுவும் பேச வேண்டாம்” என்று சமாதானம் கூறினான்.
அவள் எப்படிச் சமாதானம் அடைவாள்? அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.
“தாரா… நான் இருக்கேன்! ஜெகன்… அப்பா…” என்று சரத் சொல்லும் போதே,
தாராவின் பார்வைக் கீதாவின் அறை நோக்கிச் சென்றிருந்தது.
சரத், அதற்கு மேல் பேச முடியாமல் நின்றுவிட்டான். அவள் முகத்தைப் பார்க்கும் பொழுது, அவனால் எதுவும் பேச இயலவில்லை.
அவனுக்கு மட்டுமல்ல! ராஜசேகரும் ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் நின்றார்.
ஜெகன் மூவரையும் பார்த்தான். பின்,
“அக்கா” என்று அழைத்தான்.
ஜெகன் அழைத்ததும், தாரா அவன் அருகில் சென்று நின்று கொண்டு, “ஜெகன், நீ அம்மாகிட்ட சொல்லேன்” என்று கேட்டுப் பார்த்தாள்.
“எதுக்குச் சொல்லணும்? என்ன சொல்லணும்? கல்யாணம்-னா வரத் தெரியாதா?” என்று கோபப்பட்டான்.
சரத், எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
இன்னும் சமாதானம் அடைய முடியாமல் நின்று கொண்டிருப்பவளைப் பார்த்து, “போகலாம்-க்கா லேட்டாகுது. தேவாவைப் பார்த்தா… நீ சரியாடுவ… வா” என்று சமாதானப் படுத்தினான்.
தேவா என்ற வார்த்தை, அவளைக் கொஞ்சம் வழிக்கு கொண்டு வந்தது.
பின்னால் நின்று கொண்டிருந்த சரத்தையும் ராஜசேகரையும், கண் அசைவால் ‘வாங்க’ என்று ஜெகன் அழைத்தான்.
பின், தாராவின் கைப்பிடித்துக் கொண்டு ஜெகன் கிளம்பிவிட்டான்.
அவர்கள் சென்றதும்,
கீதாவின் அறையைப் பார்த்து நின்ற ராஜசேகரிடம், “வாங்கப்பா” என்றான், சரத்.
“ஏன் அம்மா இப்படி?” என்று வருந்தினார்.
“ரீஸன் இருக்கு! வந்து பேசலாம்-ப்பா”
“அம்மா ஹெல்த்துக்கு எதுவும்… ??”
“இல்லைப்பா. பட், நர்ஸ் அரேஞ்ச் பண்ணிருக்கேன். இப்ப வந்திருவாங்க. நீங்க வாங்க” என்று சொல்லி, அவர்களும் கிளம்பிவிட்டார்கள்.