சார் பதிவாளர் அலுவலகம்
சரத், தாரா, ஜெகன் மற்றும் ராஜசேகர்… நால்வரும் வந்திருந்தனர்.
சரத்தும், ராஜசேகரும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.
தாராவும் ஜெகனும், ஒரு ஓரமாக மர நிழலில் நின்று கொண்டிருந்தனர்.
ஜெகன், தாராவைப் பார்த்துக் கொண்டே நின்றான். ‘என்ன சொல்லி அவளைத் தேற்ற?’ என்று அவனுக்குத் தெரியவில்லை.
தாரா…
இக்கணம், அப்பா இல்லாதது பெரும் குறையாகத் தெரிந்தது!
இங்கேயே இருந்து கொண்டு, அம்மா வராதது பெரும் வேதனையாக இருந்தது!
தேவாவிடம் உண்மை சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வானோ? என்ற கேள்வி வந்தது!
_இதுதான் தாராவின் மனநிலை!
சற்று நேரத்தில், தேவா மற்றும் அவனைச் சார்ந்தோர் வந்தனர். பாபி, சாரு, மாலி… தேவா அண்ணன் அண்ணி குழந்தைகள்… மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர்… ஹேமா மற்றும் அவள் கணவன்… இப்படி எல்லாரும்!
ராஜசேகர் மற்றும் சரத்… இருவரும் சென்று அவர்களை வரவேற்றனர்.
வந்தவர்கள், ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்தனர்.
சற்று நேரம் பேசியபின், தேவா தாராவை நோக்கி வந்தான்.
“அக்கா… தேவா வர்ராரு” என்று ஜெகன் சொன்ன பிறகே தாரா நிமிர்ந்து பார்த்தாள்.
தேவா அருகில் வந்ததும், ஜெகன் “ஹலோ தேவா” என்று ஒரு புன்னகைத் தந்துவிட்டு நகர்ந்தான்.
அவன் சென்றதும்,
“ஏன் தனியா நிக்கிற தாரா? எல்லார்கிட்டேயும் வந்து பேசலாம்-ல?” என்றான்.
எதுவும் சொல்லாமல் நின்றாள்.
இங்கு இன்னொன்று,
இடைப்பட்ட நாட்களில்… தேவா மனதின் விருப்பம் மிகுந்ததால், மரியாதை விகுதி விலகியிருந்தது.
தாராவிற்கு?? என்றுமே தேவா மரியாதைக்குரியவன்! சாருவைத் தவிர மற்ற எல்லோர் முன்னிலையிலும்! அவன் உட்பட!!
தேவா, தாராவைப் பார்த்தான். அவள் முகத்தில் வாட்டம் இருந்தது.
“என்னாச்சு தாரா? ஏன் ரொம்ப டல்லா தெரியற?” என்றான் அக்கறையாக!
அமைதியாக நின்றாள்!!
“இப்போதான் உங்க அப்பா சொன்னாங்க ‘அம்மா வரலைன்னு’. அதான் கஷ்டமா இருக்கா??” என்றான் பரிவாக!
பதிலேதும் இன்றி பரிதவித்தாள்!!
“கவலைப்படாத. இதெல்லாம் லவ் மேரேஜ்-ல நடக்கிறதான்” என்றான் இதமாக!
இம்மியளவும் இதமாக உணர இயலாமல், இன்னல் கொண்டாள்!!
“இப்படி இருக்காத தாரா. அப்புறமா, அவங்களைப் போய் பார்க்கலாம். சரியா?” என்றான் ஆறுதலாக!
ஆறுதல் வார்த்தைகள் கூறியும், மன ஆற மறுத்தது!!
சற்று நேரம் சூழலில் பார்வையைச் செலுத்தியிருந்தவனை, “தேவா” என்று அழைத்தாள்.
“ம்ம்ம், என்ன தாரா?”
“ஹக் பண்ணி அழணும் போல இருக்கு” என்றாள், உயிரின் ஒவ்வொரு அணுவும் அலைப்புறும் குரலில்!
“இன்னும் கொஞ்ச நேரத்தில, மேரேஜ் முடிஞ்சிரும்… அப்புறமா?!” என்றான், அவள் குரலை உணர்ந்து! புரிந்து!! தெரிந்து!!
மேலும், “ஆனா அழக்கூடாது. இது நம்ம லைஃப் ஸ்டார்டிங் டே! ஸோ, நீ ஹேப்பியா இருக்கணும்” என்றான் மகிழ்ச்சியாக!
“ம்ம்ம்” என்றாள், சந்தோஷமே இல்லாமல்!
“பட், நான் சொன்னேன்ல தாரா! யாரையும் கன்வின்ஸ் பண்ண, முடியலைன்னா… நான் வந்து கன்வின்ஸ் பன்றேன்னு. நீ என்கிட்ட சொல்லியிருக்காலாமே??” என்று குறைபட்டுக் கொண்டான்.
“இல்லை தேவா… அது வந்து…” என்று விளக்கம் கொடுக்கப் போனவளை,
“ஹே! நத்திங்க் ராங். லீவ் இட்” என்று நிறுத்திவிட்டான்.
‘இதற்கே இப்படி என்றால்… இன்னும் என்னென்ன இருக்கிறது?’ என்று தாராவிற்குப் பதற ஆரம்பித்தது.
“தேவா”
“ம்ம்ம்”
“நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்து, ஸாரி கேட்டா மன்னிச்சிருவீங்களா?”
“அதெப்படி மன்னிக்க முடியும். கண்டிப்பா முடியாது” என்றான் விளையாட்டாய்!
அவன் விளையாட்டை ரசிக்க முடியாமல் தவித்தாள், தாரா.
லேசாகச் சிரித்துக் கொண்டே, “டசன் டைம்ஸ் ஸாரி-ன்னு கேட்கணும்” என்றான் விருப்பமாக!
தாராவால் சிரிக்க இயலவில்லை.
தேவாவும், அவளின் நிலை அறிந்து கொண்டான்.
ஆனால், அவளது அம்மாவை நினைத்துக் கலங்குகிறாள் என்று அர்த்தம் கொண்டான்.
சற்று நேரத்தில்…
வாழ்நாள் முழுவதும் வாழப் போகும் வாழ்வை, கையெழுத்து இட்டு வரவேற்றனர்.
மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டு, வெளியே வந்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு,
தேவாவின் அக்காவிற்கு ஒரு எண்ணம், தாராவின் அம்மாவைச் சென்று பார்த்துவிடலாம் என்று!
ராஜசேகரிடம் சொல்லிப் பார்த்தாள். அவருக்கும் அது சரியென்று தோன்றியது.
ஆனால், தாராவின் விருப்பம் என்ன என்று நினைத்து, ராஜசேகர் அவளைப் பார்த்தார்.
‘முடியாது’ என்று தாரா தலையசைத்தாள்.
அவளுக்குத் தேவாவிடம் பேசியே ஆக வேண்டும்! இதற்கு மேல் உண்மையை தள்ளிப் போட முடியாது என்று எண்ணினாள்!
சரத், ஜெகன், தேவா… மூவரும் அவளிடம் கேட்டுப் பார்த்தனர்.
யார் சொல்வதையும் அவள் கேட்கவில்லை. கேட்கும் நிலையில் அவள் மனநிலை இல்லை.
தேவா, கொஞ்சம் ஒரு மாதிரி உணர்ந்தான். ‘ஏன் இந்த அடம்?’ என்று ஒரு சிறு கோபம் கூட வந்தது!
சில நிமிடங்களுக்குப் பின்,
தாராவின் மறுப்பினால், அனைவரும் கிளம்பத் தயாரானாகினர்.
தேவாவின் அண்ணன் மற்றும் அண்ணி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர்… ராஜசேகர் மற்றும் தேவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.
ராஜசேகரிடம் சொல்லிவிட்டு, ஹேமா தேவாவிடம் வந்து நின்றார்.
“நானும் அவரும், என் மாமியார் வீட்டுக்குப் போறோம்” என்றாள்.
“ம்ம்ம்”
“தேவா, இன்னொரு நாள் போய் அவங்க அம்மாவைப் பார்த்திடு. சரியா??”
“ம்ம்ம், சரி-க்கா”
“உனக்கு கல்யாணம் நடந்ததே எனக்குச் சந்தோஷம். வேற எதையும் நான் யோசிக்கலை. நீயும் யோசிக்காத. சந்தோஷமா இரு??” என்றவள், மேலும் சில அறிவுரைகள் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
பாபியும், சாருவும்… இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு,
தாரா, சரத், ஜெகன்… மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
மறுபக்கம், ராஜசேகரும் தேவாவும்!
ராஜசேகரின் முகத்தில் ஒரு நிம்மதியின்மை பரவிக் கிடந்தது.
அதைப் படித்தவன், “என்னாச்சு மாமா?” என்று கேட்டுவிட்டான்.
அவன் விளிக்கும் விதமே, அவரின் நிம்மதியின்மையைப் பாதியளவு விரட்டி விட்டது.
“தப்பா எடுத்துக்காதீங்க. தாரா ஏதோ உங்ககிட்ட பேசணும்னு நினைக்கிறா போல! அதான் இப்படி!”
“பரவால்ல மாமா”
“ரிசப்ஷன் வைக்கிறப்போ, இந்த மாதிரி சின்னச் சின்ன குறையெல்லாம் இல்லாம பார்த்துக்கிறேன்”
“இதுல குறை என்ன இருக்கு மாமா? அத்தையைப் போய் பார்க்காம இருக்கிறது, மரியாதையா இருக்காதுன்னு நினைச்சேன். அவ்வளவுதான்!”
இவர் இப்படி யோசிக்கிறார். ஆனால், இவரைக் கீதா எப்படிப் பார்க்கிறார் என்று நினைக்கையில் ஒரு மாதிரி இருந்தது, ராஜசேகருக்கு!
“நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க மாமா?”
“வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருந்தா, மேரேஜ் கம்பிளிட் ஆன பீல் கிடைச்சிருக்கும். யாரையும் சரியா கவனிக்க முடியலைன்னு ஒரு வருத்தம். அதான்”
“ஓ!”
“உங்க அண்ணா-அண்ணி எதுவும் நினைப்பாங்களா?”
“அவங்க இதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டாங்க மாமா”
“உங்க அக்கா…”
“அக்கா ஹெல்த் கன்டிஷனக்கு, அவ ரெஸ்ட் எடுக்கிறதுதான் நல்லது”
“பாஸ்கர் பேமிலி??”
“அங்கிள் ஆன்ட்டி, என்னைக்குமே என்னோட பெர்ஷனல்ல தலையிட மாட்டாங்க மாமா”
அடுத்த கேள்வி ராஜசேகர் கேட்கும் முன்,
“பாபி-சாரு புரிஞ்சிப்பாங்க. விடுங்க மாமா” என்று சிரித்தான்.
ராஜசேகரும் சிரித்துவிட்டு, ‘வேறு யாரையும் விட்டு விட்டோமா?’ என யோசித்தார்.
“மிச்ச இருக்கிறது நான் மட்டும்தான் மாமா” என்றான்.
மேலும் சிரித்தார்.
என்றுமே மற்றவர்களுக்காகப் பேசிப் பழகியவருக்கு, தனக்காக ஒருவன் பேசுவது… சந்தோஷத்தை தந்தது.
“மாப்பிள்ளை” என்றார் மனதார! மனது ஆற!!
“ஐயோ மாமா. இப்படிக் கூப்பிடாதீங்க. ரொம்ப வியர்டா இருக்கு” என்று கூச்சப்பட்டான்.
“எனக்கும் இப்படிக் கூப்பிடறது ஒரு மாதிரி இருக்கு. ஆனா, உங்களை இப்படிக் கூப்பிடத் தோணுது. ஏதோ ஒரு திருப்தி மாப்பிள்ளை”
“ஜெகனே பேர் சொல்லிதான் கூப்பிடுறாரு… நீங்க போய்… “
“அவன் எப்படியும் கூப்பிட்டுப் போறான். எனக்கு இப்படிக் கூப்பிடறதுதான், பிடிச்சிருக்கு. இது ஒரு ஆசைன்னு கூட வச்சிக்கோங்க”
“சரி, உங்க இஷ்டம் மாமா. ஆனா இதுல ஆசைப்படற அளவுக்கு என்ன இருக்கு??”
“உங்களுக்கு அது புரியாது. கூடிய சீக்கிரம் புரியலாம். புரிஞ்ச பின்னாடி, நீங்க மாறினாலும்… நான் மாற மாட்டேன் மாப்பிள்ளை” என்றார் உண்மைக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டு!
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை மாமா?” என்றான் உண்மைக்கு இந்தப் பக்கம் நின்று கொண்டு!
“விடுங்க மாப்பிள்ளை. தாரா வெயிட் பண்றா. ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றார் சகஜமாக!
சரியெனத் தலையாட்டினான்.
அதன் பின், தாராவும் தேவாவும்… சரத் ஜெகன் மற்றும் ராஜசேகரிடம் விடைபெற்றுச் சென்றனர்.
அவர்கள் சென்றதும், மற்ற மூன்று பேரும் கீதாவைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
தாரா வீடு
அது, அடுக்குமாடிக் குடியிருப்பு!
வீடு வரும் வரை, இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீடு வந்து, உள்ளே நுழைந்ததும்…
“ஏன் தாரா இப்படி?” என்று கேட்டான்.
“ஏற்கனவே சொல்லியிருந்தேனே தேவா”
“அது சரி. பட், மாமா எல்லார்கிட்டேயும் எக்ஸ்பிளேன் பண்ணிக்கிட்டு, பீல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதான் கேட்டேன்”
ராஜசேகரை, தேவா அழைக்கும் விதம் தந்த அசௌகரிய அமைதி, தாராவிடம்!
“இப்போ இங்க வர்றது அவ்ளோ அவசியமா?” என்று கேட்டான்.
‘ஆம்’ என்று தலையாட்டினாள்.
“அப்படி என்ன அவசியம்?”
“ஏன்னா, எனக்கு என் அப்பாகூட இருக்கணும்னு தோணிச்சு. அதான்” என்றாள், அழுத்தமாக! ஏக்கமாக! விருப்பமாக!!
“அப்பா-வா? அப்படின்னா நீ மாமா கூட… ” என்று தேவா ஆரம்பிக்கும் போதே,
“அவர் என் அப்பா இல்லை” என்றாள், நிதானமாக! நிம்மதியாக!
புரியாமல் நின்றான்.
“ஒரு நிமிஷம் வாங்க” என்றாள்.
அவனும், அவள் பின்னே சென்றான்.
வரவேற்பறையில் இருந்த அதிபன் புகைப்படத்திற்கு முன்னே சென்று நின்றாள்.
அவனும் நின்றான்.
“இவர்தான் என் அப்பா” என்று புகைப்படம் நோக்கிக் கை காட்டினாள்.
தாரா கை காட்டிய திசை நோக்கி, தேவாவின் பார்வைச் சென்றது.
அங்கே அதிபன்! அவனின் அதிபன் ஐயா புகைப்படம்!!
அதைப் பார்த்ததும்,
கோபம் வந்தது! திக்கென்று இருந்தது! திகைப்பைத் தந்தது!
புரியாமல் இருந்த ராஜசேகரின் வார்த்தைகள் புரிய ஆரம்பித்தன.
மன்னிப்பு பற்றிய தாராவின் பேச்சு எதற்கு என்று தெரிந்தது.
ஒரு சில நிமிடங்களில், தன்னை மீட்டுக் கொண்டான்.
சற்று நேரம் அமைதியாக நின்றான்.
பின் சிரித்துக் கொண்டான்.
“ஏன் சிரிக்கிறீங்க?” என்று எதுவும் அறியாமல் கேட்டாள்.
“உங்க அம்மா கல்யாணத்துக்கு ஏன் வரலைன்னு இப்போ புரியுது” என்றான் அலட்சியமாக!
அம்மா ஏன் வரவில்லை? என்று தனக்கே புரியவில்லை. இவனுக்கு என்ன புரிந்தது?? என்ற குழப்பத்துடன் தாரா நின்றாள்.
“உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்களா?” என்றான், அவளைப் புரியாமல்!
“என்ன விஷயம் தேவா?” என்றாள் ஏதும் புரியாமல், தெரியாமல்!
“சரி, அதை விடு. நீ ஏன், அதிபன் ஐயா பொண்ணுன்னு என்கிட்ட சொல்லலை?” என்றவன் கண்களில் ஏக்கர் கணக்கில் ஏமாற்றம் கொட்டிக் கிடந்தது.