Eedilla Istangal – 23.1

Normal Try

அடுத்த நாள் காலை 

நன்றாக விடிந்திருந்தும், இன்னும் இருவரும் எழுந்து கொள்ளவில்லை. 

அந்த நேரத்தில், அழைப்பு மணி ஓசை கேட்டது. அதன் ஒலியில் தேவா கண் விழித்தான்.

நேரம் காலை 8:00 என்று சுவர் கடிகாரம் காட்டியது.

மீண்டமொருமுறை அழைப்பு மணி ஓசை கேட்டது.

“தாரா, டோர் பெல் அடிக்குது” என்று அவளை எழுப்பினான்.

“பைவ் மினிட்ஸ் தேவா” என்று கண் விழிக்க மறுத்தாள்.

“இட்ஸ் 8:00” என்று அவன் சொன்னதும், “சவுண்ட் ஸ்லீப்” என்று சொல்லியபடியே எழுந்தாள்.

அதற்குள், மீண்டும் அழைப்பு மணி அடிக்கப்பட்டது.

வேகமாகச் சென்று, கதவைத் திறந்தாள். கோபி நின்று கொண்டிருந்தான்.

“என்ன கோபி?”

“அக்கா, வீட்லருந்து சாப்பாடு கொடுத்துவிட்டாங்க”

“ஓ!” என்று அந்தக் கூடையை வாங்கி கொண்டவள், “நீங்க வெயிட் பண்ணுங்க. நான் ஒரு ஒன் அவர்ல கிளம்பி வர்றேன்” என்றாள். 

‘சரி’ என்று சொல்லி, கோபி சென்று விட்டான். 

அவன் சென்றதும், 

கதவைத் தாழிட்டு வந்து, கூடையைச் சாப்பாடு மேசையில் வைத்தாள்.

“தேவா, நான் ஹாஸ்ப்பிட்டல் கிளம்பறேன்”

“ம்ம்ம்”

“நீங்க?”

“அஸ்யூஸ்வல் ஆபிஃஸ்”

“ஓகே” என்று சொல்லி, அறைக்குள் சென்றாள். ஒரு அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தாள். 

அவள் வந்ததும், 

இருவரும் காலை வேளை உணவு உண்ண ஆரம்பித்தனர். 

“தேவா, இது இந்த வீட்டோட இன்னொரு கீ. உங்களுக்கு” என்று ஒரு சாவியை மேசை மீது வைத்தாள்.

“நீ ஃபர்ஸ்ட்டே இந்த வீடு பத்தி சொல்லியிருக்கலாம்”

“ஏன் தேவா?”

“நான் வேற ஒரு வீடு ரென்ட்டுக்குப் பார்த்திருந்தேன்”

“ரியலி” என்றாள் வியப்புடன்! 

“ஹே! மேரேஜ் முடிஞ்சு உன்னை ஆஃபீஸுக்கா கூட்டிட்டுப் போவேன்” என்றான்.

“இப்போ வேணா, அங்க போயிடலாமா?” 

“வேண்டாம். இந்த வீடு நீ ஆசையா வாங்கியிருக்க! ஸோ, இங்கயே இருக்கலாம்” என்று, அவள் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தான். 

தன் இடக்கரத்தை அவன் கன்னத்தில் வைத்து, “ஸோ கைன்ட் ஆஃப் யூ” என்றாள் வாஞ்சையுடன்! 

கன்னத்தில் இருந்த, அவள் கரம் பற்றி… ஒரு முத்தம் வைத்தான்.

“oh sad!” என்றாள் வருத்தமாக! 

“என்னாச்சு?” என விளங்காமல் வினவினான். 

“ஃபர்ஸ்ட் கிஸ்… ஃபோர்ஹெட்ல கொடுத்திருந்தா, நல்லா இருந்திருக்கும்” என்றாள் ஆசையாக! 

“இதுதான் ஃபர்ஸ்ட் கிஸ்னு எப்படிச் சொல்ற?” என்றான். 

தாராவிற்குச் சாப்பாடு புரையேறிவிட்டது. அவள் தலையைத் தட்டி, தண்ணீர் தந்தான். 

தண்ணீர் குடித்ததும், “எப்படி தேவா?” என்றாள் விழி விரிய! 

‘நீயே யோசி’ என்பது போல், அவளைப் பார்த்திருந்தான். 

நேற்றைய இரவின் பொழுதுகளைப் புருவங்கள் சுருங்க யோசித்தாள். 

யோசிக்க யோசிக்க, மெல்ல புருவத்தின் சுழிப்புகள் மறைந்தன. 

“ஐ திங்க் யு காட் இட்” என்றான். 

“யெஸ், பட் எதுக்கு இதெல்லாம்?”

“லவ்” 

“ஓ!”

“உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு விஷயம் பண்ணிருக்கேன். அதுக்காக லவ் யூ சொல்லேன்” என்று கெஞ்சினான்! 

அவன் கெஞ்சுவதைக் கண்டு கொள்ளாமல், உணவைக் கொரிக்க ஆரம்பித்தாள். 

“வேணா, நான் ஃபர்ஸ்ட் சொல்றேன். நீ ரிபீட் பண்ணு” என்றவன், “லவ் யூ தாரா” என்றான். 

அவன் காதல் சொல்லும் விதம் கண்டு, “Normal Try” என்று நகைத்தாள். 

“எனக்கும் அப்படித்தான் தோணுது” என்று சொல்லி, அவனும் நகைத்தான். 

பின், அவளை மருத்துவமனை அனுப்பிவிட்டு, அவன் அலுவலகம் சென்றான். 

Good Try 

அடுத்த நாள், மதிய வேளை…மருத்துவமனை. 

ஓய்வு நேரம் என்பதால், தாரா தன் அறையின் சோஃபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதும், “யெஸ், கம் இன்” என்றாள்.

கதவு திறந்ததும், நிமிர்ந்து பார்த்தாள்.

“தேவா நீங்களா? எப்போ வந்தீங்க?” என்றாள் ஆச்சரியமாக! 

இரண்டு மூன்று நாட்களாக வேலை நிமித்தமாக தேவா வெளியூர் சென்றிருந்தால், தாராவிடம் இந்த ஆச்சரியம். 

“டூ அவர்ஸ் முன்னாடிதான்” என்றவன், “என் கூட வா, வெளியே போய்ட்டு வரலாம்” என்றான். 

“எங்கே?”

“சொன்னாதான் வருவியா? வா தாரா” என்று அவள் கைப் பிடித்து இழுத்து, எழுப்பினான்.

“டயர்டா தெரியிறீங்க தேவா” என்றாள், கையிலிருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு. 

“இட்ஸ் ஓகே! நீ வா. 5:30-க்குள்ள திரும்பி வந்திடலாம்” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு… தன் பைக் நிறுத்தியிருக்கும் பகுதிக்குக் கூட்டிச் சென்றான். 

அவன் பைக்கை எடுப்பதைப் பார்த்தவள், “பைக்லயா தேவா??” என்று கேட்டாள். 

“ம்ம்ம்” என்றான், பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு! 

“சான்சே இல்லை” என்றாள், ஏறாமல் நின்று கொண்டு!! 

சைகையால், அவளை முன்னே வரச் சொன்னான். அவளும் வந்தாள். 

“இங்க பாரு தாரா, உனக்கு நல்ல மெமரி பவர். அதுக்காக நான் பேசினதெல்லாம் சொல்லிக் காட்டணும்னு அவசியமேயில்லை. ஓகேவா??” என்று கேட்டான். 

“ஹாஃப் ஓகே… ஹாஃப் நாட் ஓகே”

“இப்போ ஓகே. ஸோ ஏறு” என்றதும், பைக்கின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.

பிரமாண்ட மருத்துவமனை வளாகத்திலிருந்து, அவர்களைச் சுமந்து கொண்டு பைக் வெளியேறி, ஒரு பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்றது. 

தாராவை இறங்கச் சொன்னான். அவள் இறங்கிக் கொண்டாள். 

பின், அருகிலிருந்த டீ கடையில் வண்டியை நிறுத்திவிட்டு, தாராவுடன் வந்து நின்றான்.

அவன் எதுவும் சொல்லவில்லை. அவள் எதுவும் கேட்கவில்லை.

பேருந்து வந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். மதிய வேளை என்பதால், கூட்டம் அதிகமில்லை.

ஒரு இருக்கையில் தாரா அமர்ந்ததும், தேவாவும் அவளருகில் அமர வந்தான்.

‘இங்கில்லை’ என்று ஒற்றை விரலால் சைகை செய்தாள். மேலும், முன் இருக்கையைக் காட்டி, “அங்க உட்காருங்க” என்றாள்.

“ஹலோ, பேச வேண்டாமா?”

“அங்க உட்கார்ந்து பேசினாலும், எனக்கு கேட்கும் தேவா” என்று பிடிவாத அலப்பறை செய்தாள்!

“கேட்கும். பட், திரும்பிப் பேசினா எனக்கு கழுத்து வலிக்கும்” 

“அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல கழுத்து வலிக்கு மெடிசின் கிடைக்காதா?” 

“அன்ஃபேர்” என்று சொல்லிக் கொண்டே, முன் இருக்கையில் சென்று அமர்ந்தான். 

இரண்டு மூன்று முறை, பின்னே திரும்பி பேசினான். அதற்குள் நடுத்தனர் வந்தார். பயணச்சீட்டு வாங்கிக் கொண்டான்.

வாங்கியதும், பின்னால் திரும்பி… தாராவிடம் நீட்டினான்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“டிக்கெட்! அன்னைக்கு கேட்டியே?” என்றான்.

“செக்கிங் வந்தா என்ன செய்வீங்க?” 

“இங்கதான இருக்க… நீ கொடுக்க மாட்டியா?”

“நான் தொலைச்சிட்டேனா?? ஸோ, அப்புறமா நியாபகம் இருக்கும் போது வாங்கிக்கிறேன்” 

“உன்னை” என்று ஆரம்பித்தவன், சட்டென எழுந்து… அவளருகில் வந்து அமர்ந்தான். 

அவனின் அருகாண்மை பிடித்திருந்ததால், அவள் எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நிறுத்தம் வந்ததும், இருந்த ஒன்றிரண்டு பிரயாணிகளும் இறங்கிக் கொண்டனர். 

பேருந்து கிளம்பியதும்,

“தாரா”

“ம்ம்ம்” என்றாள், எதிர்காற்றால் பறக்கும் முடிகளை எடுத்து விட்டபடி! 

“லவ் யூ தாரா” என்று சொல்லி, பயணச் சீட்டை நீட்டினான். 

அவள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். மூன்று வார்த்தைக்காக முயன்று கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.

“எங்க? நீயும் அப்படியே லவ் யு சொல்லி, டிக்கெட்டை வாங்கிக்கோ” என்றான் எளிதாக! 

மெதுவாக கை உயர்த்திக் கொண்டே வந்தாள். இருவிரல்கள் கொண்டு அவன் பிடித்திருக்கும் பயணசீட்டை வாங்கினாள்.

“தேவா…” என்ற அழைப்பில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாள். 

“ம்ம் சொல்லு” என்றான் ஏக்கமாக! 

“good try தேவா” என்றாள் எடக்காக! 

“எஸ்கேப் ஆகிற” என்றான் எக்கச்சக்க எரிச்சலுடன்! 

அவன் நிலைமை கண்டு, அவள் சிரித்தாள். 

அவள் சிரிப்பதைக் கண்டு, அவனும் சிரித்தான் 

இருவரும் சிரித்தனர். 

சற்று நேரத்திற்குப் பின், அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். 

தேவா பேசிக் கொண்டிருந்தான். தாரா கேட்டுக் கொண்டிருந்தாள். 

கேட்பாரற்று கிடக்கும் பேருந்து இருக்கைகள்! 

நண்பகலைத் தாண்டியும், அனலடிக்கும் தார்ச்சாலைகள்! 

வெப்பக் காற்று வாரி இறைக்கும் புழுதிகள்! 

இதற்கிடையே, இரைச்சலாய் பேருந்து இயங்கும் சத்தம்!

வழிந்தோடும் அவன் வியர்வையுடன் பேசிக் கொண்டு… 

அவன் பேசும் வாசனையை நுகர்ந்து கொண்டு… 

மணமுடித்தவனுடன் மதுரமான ஒரு பிரயாணம், தாராவிற்கு! 

Crazy Try 

மற்றொரு நாள். 

இரவு 9:00 மணி, லவ் பக்கெட் ரெஸ்டாரன்ட். 

இன்று, தேவா தாராவை அழைத்து வந்திருந்தான். 

மேல் தளத்தின் முகப்பில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். 

தலைநகரத்தின் இரவுப் பொழுது…

வான் தரையில், எண்ணிலா விண்மீன் செடிகள் முளைத்திருந்தன. 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, தாராவின் விருப்பமான ரெட் வெல்வெட் கேக்கைக் கொண்டு வந்து, சிப்பந்தி வைத்து விட்டுப் போனார். 

அவர் சென்றதும்,

“ம்ம்ம், சாப்பிடு” என்று உண்ணச் சொல்லி, கேக் இருந்த பீங்கான் தட்டைத் தாரா புறமாகத் தள்ளினான். 

ஒருமுறை உருக்கும் பார்வைகள் கொண்டு, அவனை உண்டு விட்டு ஸ்பூனைக் கையில் எடுத்தாள். 

வெள்ளையும் சிவப்பும் கலந்திருந்த கேக்கை ஸ்பூனால் எடுத்து உண்ண ஆரம்பித்தாள். 

தேவா, பேசிக் கொண்டே இருந்தான். தாரா ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

அவள் சாப்பிடும் விதம் கண்டவன், “என்ன இப்படிச் சாப்பிடற?” என்றான் ஒரு மாதிரி குரலில். 

அவன் பேசுவதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், கேக்கை விழுங்கிக் கொண்டிருந்தாள். 

“ஸ்பூனை இப்படி லிக் பண்ற?? இந்தக் கேக் அவ்ளோ பிடிக்குமா?” என்றான். 

‘ம்ம்ம்’ என்று தலையாட்டியவள்… ஸ்பூனை அவன் முன் நீட்டி, “நீங்க வேணா ட்ரை பண்ணிப் பாருங்க” என்றாள்.

அவளிடமிருந்து ஸ்பூனை வாங்கிக் கொண்டான். 

அதன் பின், அவன் செய்த செயலைக் கண்டு, “ஹலோ” என்று அவன் புஜங்களில் செல்லமாகத் தட்டினாள். 

மேலும், “கேக்கை டேஸ்ட் பண்ணச் சொன்னா, ஸ்பூனை லிக் பண்றீங்க. யூ கிரேசி” என்று சொல்லிச் சிரித்தாள். 

அவள் அப்படிச் சொல்லியதும், கேக்கை எடுத்து உண்டான்.

அவன் உண்டு முடித்ததும், “எப்படி இருக்கு?” என்றாள் விருப்பமாக! 

“கேக் சுமார்தான். பட், ஸ்பூன் டேஸ்ட்டா இருக்கு” என்றான் விஷமமாக! 

முதலில் அவனது விஷமப் பேச்சு, அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் புரிந்தபின், “bad boy” என்றாள். 

“ய்யா ய்யா” என்றவன், ஸ்பூனை அவளிடம் நீட்டினான். 

அவனிடமிருந்து ஸ்பூனை வாங்கி, மீண்டும் கேக்கை உண்ண ஆரம்பித்தாள். 

“தாரா” 

“ம்ம்ம்” 

“u y o i o l e v… எங்க இதை அரேஞ்ச் பண்ணிச் சொல்லு” என்றான். 

ஒருகணம் ‘இது என்ன ஆங்கில வார்த்தை?’ என்று யோசித்தாள். 

“குளு கொடுக்கிறேன்” என்றவன், “த்ரீ லிட்டில் வேர்டஸ், எயிட் லிட்டில் லெட்டர்ஸ்” என்றான். 

‘ஓ! இதற்காகத்தானா?’ என்று தயவுதாட்சண்யமே இல்லாத பார்வை, அவளிடத்தில்! 

‘தயவு கூர்’ என்று அவன் கண்கள், அவளிடம் காதல் வாசகத்தை யாசித்தன!!

தன் டோட் பேக்கிலிருந்து, ‘ஜஸ்ட் எ ரீமைண்டர்: ஐ லவ் யூ’ என்ற புத்தகத்தை எடுத்து மேசையில் வைத்தாள். 

பின், “crazy try” என்று சொல்லி, மெதுவாக அவன் புறமாக… அதை ஒற்றை விறலால் நகர்த்தினாள். 

“அவ்ளோதானா?” என்று அலுத்துக் கொண்டான். 

பின், புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அதன் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான். 

அவளோ, அவனைப் புரட்டிப் போடும் பார்வைகள் கொண்டு பார்த்திருந்தாள். 

உள்ளுணர்வு உந்த, கண்கள் உயர்த்தினான். 

பார்வையின் பொருள் மாறாமல், அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள். 

அவள் செயலில், சிலாகித்துப் புன்னகைச் சிந்தினான். 

ஆகயாக் குடையின் கீழ், காதல் நிலையில் இருவரும்!! 

வாங்கியது இனிக்கிறதா? 

வாழ்க்கை இனிக்கிறதா?? _ பிரித்தறிய முடியா இன்ப நிலையில் தாரா.