Eedilla Istangal – 23.2

You are the love of my life – Dazzling Try 

அன்று ஞாயிற்றுக் கிழமை… 

தாரா, தேவா இருவரும் வீட்டில் இருந்தனர்.  

தாரா வரவேற்பறையில் இருந்தாள். 

தேவா, பால்கனியில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். 

வரவேற்பறையில்… 

மெல்லிய திரைச் சீலைகளின் வழியே, மந்த மாருதம் வீசும் மாலை நேரம்!

கருப்பு நிற டைல்ஸ்-ன் மேல், சன்னல் வழியே எட்டிப் பார்த்த மஞ்சள் வெயில்! 

பெரிய அறையின் நடுவே ஆலிவ் வர்ண கார்பெட் போடப்பட்டிருந்தது. 

அதன் மேல் தாரா அமர்ந்திருந்தாள். 

சுற்றிலும், சிறிய வெள்ளை நிறத் தலையணைகள். 

கார்பெப்ட்டின் அருகே, ஒரு வெள்ளை நிறமடிக்கப்பட்ட மண் பாத்திரத்தில், வண்ண வண்ண பூக்கள் மிதந்து கொண்டிருந்தன! 

நேட் கிங் கோல், த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

முழுதும் கருமை நிறத்தாலான புடவை! வெந்தய நிறத்தில் முந்தானையும் சட்டையும்!! 

மொத்தக் கூந்தலை அள்ளி எடுத்து, பிடிப்பானுக்குள் அடக்கியிருந்தாள்! ஒன்றிரண்டு முடிகள் இருபுறமும் தொங்கின!! 

கைகளில் மட்டும், ஆடைக்கு ஒத்துப் போகும் வண்ணத்தில் வளையல்கள் அடுக்காய் அணிந்திருந்தாள்!

முட்டி மேல் முகம் சாய்த்து, பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அலைபேசியில் பேசிவிட்டு, உள்ளே நுழைந்த தேவாவின் கண்களில் இவையாவும் விழுந்தன.

சற்று நொடிகள் சன்னலோரம் சாய்ந்து நின்று ரசித்து விட்டு, அவள் முன்னே வந்து அமர்ந்தான். 

“பேசியாச்சா?” 

“ம்ம்ம்” என்றவன், “இந்த சாங்-க நிறுத்தக் கூடாதா? என்றான் பிடித்தமில்லாமல்! 

“இன்னும் இந்த சாங் பிடிக்கலையா தேவா?” 

“இப்பவும் அனாயிங்தான்” என்றதில் ஆரம்பித்து, சற்று நேரம் அதை இதை என்று எதையோ பேசினார்கள். 

கடைசியில் தாரா, “எப்பவும் ஸ்பெக்ஸ் போடறீங்களே, டிஸ்டர்ப்ன்ஸா இருக்காதா?” என்று கேட்டாள். 

சில நொடிகள் யோசித்தவன், “அதை நீதான் சொல்லணும்” என்றான். 

“வாட்? நானா?? நான் எப்படி?” என்று புரியாமல் பார்த்தாள். 

சட்டென்று, அவள் அருகில் நெருங்கி வந்தான். ‘எதற்காக இப்படி?’ என்பது போல், அசராத பார்வைப் பார்த்தாள். 

“ஷேல் ஐ கிஸ்??” என்றான், அவள் முகத்தைக் காட்டி! 

‘வரவேற்கிறேன்’ என்று அர்த்தத்தில், கண்கள் மூடித் திறந்தாள். 

அவனுக்கு அர்த்தம் புரிந்தது! 

அகத்தினுள் இருந்த மொத்தக் காதலை, அவள் முகத்தினில் சத்தங்கள் இல்லா முத்தங்கள் வைத்துத் தெரியப்படுத்தினான். 

மந்தகாசம் பேசும் புன்னகையுடன், அவளது மையல் வழிகளைப் பார்த்து, 

“ஸ்பெக்ஸ் டிஸ்டர்ப்ன்ஸா இருந்ததா??” என்றான்! 

“இல்லை” என்றாள் சாதரணமாக! 

“அதெப்படி கம்பேர் பண்ணாம சொல்ல முடியும்??” என்றவன், தன் கண்ணாடியைக் கழட்டினான். 

அவன் விருப்பம், அவளுக்கு விளங்கியது. 

“ஒன்மோர் டைம்” என்று, அவளிடம் அனுமதி கேட்டான். 

‘தாராளமாக’ என்பது போல், புருவங்களை உயரச் செய்தாள். 

மீண்டும் அவள் முகத்தினில் சத்தங்கள் எழும் முத்தங்கள் வைத்துக் கொண்டிருந்தான். 

முத்தத்தைத் தொடர்ந்தவன், அனுமதி கோராமால் அவள் அதரத்தின் அருகே நெருங்கினான்.

சட்டென, தன் உள்ளங்கை கொண்டு, அவன் உதடுகளைத் தடுத்து நிறுத்தினாள். 

‘ஏன்?’ என்று கேள்வி கேட்டன அவன் விழிகள். 

“ஒன்னு கேட்கணும் தேவா” 

“இப்பவா?” 

“ம்ம்ம்” 

“சரி கேளு” 

“த்ரீ லிட்டில் வேர்ட் சாங் அனாயிங்கா தேவா?” என்று, தன் விழிக்கருகில் இருக்கும் அவன் விழியிடத்து வினா எழுப்பினாள். 

ஓர் நொடி மௌனம் நிலவியது! 

பின், அவள் கரத்தை விலக்கிவிட்டு, “இதைக் கேட்க வேற நேரமே கிடைக்கலையா?” என்றான் முறுவலுடன்! 

‘இல்லை’ எனத் தலையசைத்து, உதட்டிற்குள் சிரித்தாள்.

“அன்ஃபேர்” என்று சொல்லி, அவள் தோள்களில் முகம் புதைத்துச் சிரிக்கத் தொடங்கினான். 

அவனளவு இல்லையென்றாலும், அவளும் சிரித்தாள். 

இருந்தும், “பதில் சொல்லுங்க தேவா” என்றாள். 

“நல்லா கேட்டுக்கோ…” என்றவன், ஒரு நிமிடத்திற்குப் பாடலைப் பாராட்டித் தள்ளினான்.  

கடைசியில், “இட்ஸ் ஆன் அமேசிங் சாங்” என்று முடித்தான்.

‘அனாயிங்’… ‘அமேசிங்’ ஆனதால், அன்பிற்குரியவர்கள் அதரங்கள் அநியாயத்திற்கு அந்நியோன்யம் ஆயின! அதிக நேரத்திற்கு!! 

ஆம் அதிக நேரத்திற்குத்தான்!!! 

அந்த அதிக நேரம் கழித்து…

“ஸ்பெக்ஸ் டிஸ்டர்ப்ன்ஸா இருந்ததா?” என்றான் சாதரணமான குரலில்! 

“நீங்க லாஸ்ட்டா கிஸ் பண்றப்போ ஸ்பெக்ஸ் போடலையே தேவா. தென், ஹவ் கேன் ஐ டெல்?” என்றாள், அவனை விடச் சாதரணமான குரலில்! 

“தாரா தாரா” என்று சிரித்தான். 

அவளும் சிரித்தாள். 

பின், இருவரும் சிரித்தனர். 

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” என்று எழுந்து, அறைக்குள் சென்றுவிட்டு… திரும்பி வந்து அவளருகே அமர்ந்தான். 

“என்ன தேவா?”

“அந்த ரிங்-க கழட்டு” என்றான், அவள் ரகசியம் மறைக்கும் மோதிரத்தைப் பார்த்து. 

மோதிரத்தைக் கழட்டினாள். நகப்பூச்சு இடப்பட்ட விரலை, அவன் முன்னே நீட்டினாள்.

மோதிர விரலில், அவனது பெயர் டாட்டூவாக! ஒருகணம் அவன் உடல் சிலிர்த்தது!! 

‘இதுல எனக்குப் பிடிச்ச விஷயம் இருக்கு’ என்று அவள் சொன்னது நியாபகத்தில் வந்தது. 

கழுத்து நரம்புகள் புடைக்க, உணர்ச்சி வசப்பட்டு, அவள் காதலை ரசித்தான். 

பின்னர்… அவள் விரல் பிடித்து, மோதிரம் அணிவித்தான். பின், அவள் நெற்றியில் முத்தமிட்டு…”யூ ஆர் தே லவ் ஆஃப் மை லைஃப்” என்றான் காதலுடன்! 

“dazzling try” என்று மட்டும் சொன்னாள். அதன்பின், அவளது கவனம் முழுதும் அந்த மோதிரத்தின் மேல்தான். 

“பிடிச்சிருக்கா?” 

“ரொம்ப” என்றவள், “இதான் உங்க லவ்வருக்காக, நீங்க வாங்கினேன்னு சொன்ன ரிங்கா?” என்று கேட்டாள். 

“ஹலோ! உனக்குப் ப்ரோபோஸ் பண்ணிட்டு, அதை வச்சிருப்பேனா??” என்று பதில் அளித்தான். 

கங்குகரையில்லா காதலைக் காட்டி, அவனைப் பார்த்தாள் 

“இது உனக்காக வாங்கினது” என்றான் அந்தக் காதலை கௌரவப் படுத்தும் விதமாக! 

அவனது தோள் வளைவினில் முகம் புதைத்தாள். வாகாக தோள் சாய்ந்திருந்தளை, வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தான். 

******

மாலை 5:30யைத் தாண்டி நேரம் சென்று கொண்டிருந்தது. 

இன்று தாரா-தேவாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. தேவா, வேலை விடயமாக மூன்று நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு, இன்று திரும்புவதாகச் சொல்லியிருந்தான். 

தேவாவின் வரவிற்காகத் தாரா காத்திருந்தாள். அந்தத் தருணத்தில், தன்னை வரவேற்பிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தாள். 

சற்று நேரத்தில், அழைப்பு மணி ஓசைக் கேட்டதும், ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். 

தேவாதான்! 

“ஹாய்” என்று சொல்லி, வீட்டிற்குள் வந்தான். 

சட்டென கட்டிப் பிடிக்கப் போனவளிடம், “டிராவல்டு லாட். ரெப்பிரேஷ் பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்லி அறைக்குள் சென்று விட்டான். 

சில நொடிகள் கடந்த பின், 

“கிளம்பலாமா தாரா?” என்று கேட்டுக் கொண்டே, அவளருகில் வந்து நின்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“என்ன அப்படிப் பார்க்கிற?” 

“ஐ கேனாட் டேக்-ஆஃப் மை ஐஸ் ஃபரம் யூ” என்றாள் ரசிப்புடன். 

சிரித்துக் கொண்டான்! 

தன் கரங்கள் எடுத்து, அவன் கழுத்தோடு கோர்த்துக் கொண்டு, “மிஸ் யூ ஸோ மச்” என்றாள். 

பின், அவனது கன்னத்தில் முத்தம் வைத்தாள். 

“லவ் யூ-க்கே வழியில்லை… இதுல மிஸ் யூ!!” என்று சலித்துக் கொண்டு, அவள் கைகளைப் பிரித்துவிட்டான். 

முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த வருத்தம், தேவாவிற்கு! 

மேலும், “வா, கிளம்பலாம்” என்று கதவைத் திறந்து, வெளியே சென்று நின்றான்.

அவளும் வெளியே வந்தாள். 

நான்கைந்து அடிகள் நடந்து வந்து, இருவரும் மின்தூக்கியில் ஏறிக் கொண்டனர். 

தளம் : 20

மின்தூக்கியின் உள்ளே…

நல்ல விசாலமாக இடமிருந்தது. எனவே இருவரும், ஆளுக்கொரு மூலையில் நின்றனர். 

அவளது கவனம் முழுதும் அவனிடம்! அவனது கவனம் முழுதும் அலைபேசியிடம்! 

“தேவா” 

“ம்ம்ம், சொல்லு” என்றான் தலையை நிமிர்த்தாமல்! 

மூன்று நாட்கள் பின்னே வந்தும், தன் முகம் பார்க்காமல் பேசுபவனைக் கண்டு எரிச்சல் வந்தது. 

“தேவா” என்று அழுத்தி அழைத்தாள். 

“சொல்லு தாரா, கேட்க்கிறேன்” என்றான் அசராமல்! 

“நான் எப்படி இருக்கேன்னு, சொல்லவேயில்லை?” என்றவள் குரலில் கோபம் தெரிந்தது. 

ஒருமுறை அவளை முழுவதும் கிரகித்தவன், “ஹீல்ஸ் போடலையா?” என்று கேட்டான். 

“இந்த ஸேரிக்கு ஹீல்ஸ் சூட் ஆகாது” 

“ஓ!” 

“என்ன ‘ஓ!’ நான் எப்படி இருக்கேன்னு சொல்லுங்க?” என்றாள் படபடவென்று, அவன் அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டே!

அக்கணம், மின்தூக்கி நின்று திறந்தது. 

தளம் : 15

அத்தளத்தில் இரண்டு பேர் ஏறிக் கொண்டனர். 

‘ஆட்கள் இருக்கிறார்கள், இனி எப்படிப் பேச?’ என நினைத்து தாரா அமைதியானாள். அலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டாள். அவன் அருகிலே நின்று கொண்டாள். 

இரண்டு நொடிகள் கழித்து, 

“இப்போ பதில் செல்லவா தாரா??” என்றான், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்! 

‘சொல்லுங்க’ என்று தலையை மட்டும் அசைத்தாள். 

முன்னே நிற்பவர்களை ஒருதடவை பார்த்தான். பின், அவள் செவியருகே குனிந்து… “நீ பிளைன் ஸேரி கட்டினா… எனக்கு ரொம்ப பிடிக்கும்!” என்றான்.

தாராவின் எண்ணத்தில்… 

அன்று மழை நாளில், ‘அழகா இருக்க’ என்று தேவா சொன்னது! 

கேஃபேயில் தேவாவின் பார்வைகள்! 

வீட்டினுள் தேவாவின் முத்தங்கள்! 

_என்று வேலைப்பாடில்லா புடவை கட்டிய நாட்களில், அவனது செய்கைகள் நியாபகத்தில் வந்து போயின! 

கடைசியில் இன்றும்!! 

ஆம்! இன்று கடற்கரை மணல் வர்ணத்தில், வேலைப்பாடுகள் ஏதுமில்லா புடவை!! காஃபி கொட்டையின் நிறத்தில் புடவையின் கரைகள்!! 

உதடுகளின் சாயங்கள் தாண்டாத, சிரிப்பு ஒன்றை அவள் சிரித்தாள். 

இது, தன் பேச்சின் மாயங்கள் என்றுணர்ந்து… அவனும் மௌனமாகப் புன்னகை புரிந்தான். 

மின்தூக்கி மீண்டும் நின்றது. 

தளம் : 12

மேலும் இருவர் ஏறிக் கொண்டனர். 

ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், இப்பொழுது இடம் விசாலமானதாகத் தெரியவில்லை. 

மின்தூக்கி கீழிறங்க ஆரம்பித்தது. 

“தேவா”

“ம்ம்ம்” என்றான் அவளை நோக்கி! 

உள்ளங்கையால் உதட்டினை மறைத்துக் கொண்டு, “லவ் யூ தேவா” என்றாள், உமி பறக்கும் ஓசையில்! 

வேறு புறம் திரும்பிக் கொண்டான். கேட்டவனின் மனம் உல்லாசமாய் குதித்தது. 

பின் குனிந்து, “இதைச் சொல்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா?” என்றான் மெல்லிய குரலில்! 

முன்னே நிற்பவர்களைப் பார்த்தாள். அனைவரும் அலைபேசியினுள் அமிழ்ந்து இருந்தனர். 

தேவாவைப் பார்த்து, “லவ் யூ தேவா” என்றாள் மீண்டும் மிதமான குரலில்!!

இக்கணம் மின்தூக்கி நின்றது. 

தளம் : 9

மேலும் ஒருவர் ஏறிக் கொண்டார். 

மின்தூக்கி கீழிறங்க ஆரம்பித்தது. 

“தாரா” என்று தாழ்ந்த குரலில் அழைத்ததும், அவள் திரும்பினாள். 

“ஹீல்ஸ் போட்டிருக்கலாம்-ல! கண்ணை பார்த்துச் சொல்லிருப்ப” என்று கிசுகிசுத்தான்! 

அவனைக் குனியச் சொல்லி சைகை செய்தாள். அவனும் லேசாகக் குனிந்தான். 

“இதைக் கண்ணைப் பார்த்து சொல்லக் கூடாது. ஹார்ட்டைப் பார்த்துச் சொல்லணும்” என்றாள், குனிந்தவன் காதிற்குள் ரகசியமாக! 

நிமிர்ந்து கொண்டே, “அது சரி” என்றான் லேசான சிரிப்புடன்! 

“லவ் யூ தேவா-ன்னு சொல்றேன். ஒரு ரியாக்ஷனும் இல்லை”

“ரியாக்ஷன் எதுக்கு தாரா? ரீவார்டே தர்றேன். இதுக்காகத்தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். பட், வீட்டுக்கு வந்தப்புறம்!” என்றான் கவனமாக! முன்னே நிற்பவர்கள் காதில் விழாதபடி!! 

“வாவ் தேவா!” என்றாள் களிப்புடன்! முன்னே நிற்பவர்கள் காதிற்குக் கேட்கும்படி! 

முன்னே நின்றுகொண்டிருந்த ஆட்கள் அனைவரும், அலைபேசியை விட்டுவிட்டு… ‘என்னாயிற்று இந்தப் பெண்ணிற்கு?’ என்பது போல் அவளைத் திரும்பிப் பார்த்தனர். 

‘ஏன் இப்படி?’ என்பது போல் தேவாவும் பார்த்தான். 

‘அய்யோ’ என்றிருந்தது தாராவிற்கு!

“ஸாரி ஸாரி” என்று பொதுவாகக் கேட்டுவிட்டுக் குனிந்து கொண்டாள்.

முன்னே நின்றவர்கள், மீண்டும் அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தனர். 

உள்ளுக்குள் உருண்டு புரண்டு சிரிக்கிறான் என்பதை, தேவாவின் உடல்மொழி சொன்னது. 

அதன்பின், தாரா மௌனமானாள்! வாய் திறக்கவில்லை, தரைத்தளம் வரும் வரை!!

தரைத்தளம் வந்து, அனைவரும் இறங்கிச் சென்ற பின்… 

தேவா சத்தமிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.  

அவன் சிரிப்பைக் கண்டு, அவளும் சிரித்தபடியே, “லவ் யூ தேவா” என்றாள் தித்திப்பாய், அவன் முகம் பார்த்து! 

அந்த தித்திப்பில் திளைத்தவன், “லவ் யூ தாரா” என்றான், அவள் முகம் பார்த்து!

பின், அவளை அழைத்துக் கொண்டு கார் நிறுத்துமிடம் நோக்கிச் சென்றான். 

இருவரும் கிளம்பினர். 

ராஜசேகர் வீடு 

திருமணம் முடிந்தபின்… நிறைய முறை, ராஜசேகர், சரத், ஜெகனை தேவா சந்தித்துவிட்டான். 

இதுதான் முதல் முறை, கீதாவைச் சந்திக்கப்போவது!