Eedilla Istangal – 24.1

Eedilla Istangal – 24.1

தாரா-தேவா இருவரும் ராஜசேகரின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர். 

கீதா, ஜெகன், சரத், ராஜசேகர் என அனைவரும் சேர்ந்து, அவர்களை வரவேற்று, உள்ளே அழைத்து வந்திருந்தனர். 

தேவாவும் சரி… கீதாவும் சரி… எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை! 

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவும் இல்லை!! 

தாராவிற்காகக் கீதாவும், ராஜசேகருக்காகத் தேவாவும்… இப்படி நடந்து கொண்டனர். 

வரவேற்பறை சோஃபாவில் வந்து, தாரா-தேவா இருவரும் அமர்ந்து கொண்டனர். 

சற்று நேரத்திற்கு, அவர்கள் இருவரையும் ‘அது… இது’ என்று கொடுத்து உபசரிக்கும் படலம் நடந்தது. 

இதற்கிடையே, “எங்க வீடு எப்படி இருக்கு? என்று மெல்லிய குரலில் தாரா தேவாவிடம் கேட்டாள்.

‘நல்லாயிருக்கு’ என்ற பொருளில் மௌனத்துடன் கூடிய உடல்மொழி மட்டுமே, தேவாவிடம். 

சற்று நேரத்திற்கு பின், “தாரா வா… வந்து கொஞ்சம் ரெடியாகிக்கோ” என்றார் கீதா.

“சரிம்மா” என்றவள், “தேவா, நான்…” என்று மாடியை நோக்கி கை காட்டினாள்.

தேவா தலையை மட்டும் ஆட்டினான். தாராவும் கீதாவும் மாடிப்படிகள் ஏற ஆரம்பித்தனர். 

அவர்கள் சென்றபின், 

ராஜசேகர், ஜெகன், சரத் தேவாவிடம் பேச ஆரம்பித்தனர்.

******

வரவேற்பு நிகழ்ச்சி 

வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நல்ல விஸ்தாரமான தோட்டம்.

தோட்டம் முழுவதும் அலங்காரங்கள் மற்றும் அலங்கார விளக்குகள். 

எக்கச்சக்க நாற்காலிகள்! ஒவ்வொன்றும் சாட்டின் துணி கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது!! 

நாற்காலிகள் வட்ட வடிவில் போடப்பட்டிருந்தன. நடுவில் ஒரு மேடை! 

வண்ண வண்ண துணிகள் கொண்டு, மேற்கூரை போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

அதிலிருந்து தொங்கும் உருளை வடிவ மஞ்சள் நிற விளக்குகள்.

இதேபோல் மேடைக்குப் பின்புறமும், பல்வேறு வேலைப்பாடுகள்! அளவாய் இருந்தது! ஆனால், மனதை அள்ளிக் கொண்டது. 

மேடையின் மேல், வரவேற்பு கொண்டாடத்திற்காக கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

மேடையை ஒட்டி, முக்கிய புள்ளிகளுக்காக சோஃபாக்கள் போடப்பட்டிருந்தன.

தேவாவின் அண்ணன்-அண்ணியைத் தவிர, ஹேமா மற்றும் அவள் கணவன்… பாஸ்கர் தம்பதியினர்… பாபி மற்றும் சாரு…. வந்திருந்தனர். 

இவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே வந்ததால், ஹேமாவையும் சாருவையும்… கீதா விசேஷமாகக் கவனித்தார். 

காரணம்?? 

தாரா – தேவா திருமணத்தன்று, ஹேமா வீட்டிற்கு வர ஆசைப்பட்டதாக ராஜசேகர் சொல்லியிருந்தார். ஆதலால் ஹேமா! 

சாரு திருமணத்திற்குப் போகவில்லை என்ற வருத்தம் கீதாவிற்கு இருந்து வந்தது. ஆதலால் சாரு! 

தன் கைப்பட செய்த இனிப்புகள், சிறு சிறு பரிசுப் பொருட்களை வழங்கி, கீதா இருவரையும் ஆசிர்வதித்தார். 

அதன்பின்னரே, கீதாவின் மனம் ஆறியது.

*****

ராஜசேகரின் மருத்துவ, அரசியல் நண்பர்கள் ஒருபுறம். அவரது மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் மருத்துவர்கள் மற்றொரு புறம். 

சுற்றிலும் உறவினர்கள்._இவர்கள் சூழல நிகழ்ச்சி ஆரம்பித்தது. 

தாராவும், தேவாவும் கேக் வெட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

அதன் பின், ஒவ்வொருவராக வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றனர். சிலர் பரிசுப் பொருட்கள் தந்தனர்.

வாழ்த்து சொல்லும் படலம் நடந்து கொண்டிருக்கும் போதே, இரவு உணவு ஆரம்பித்தது. 

தோட்டத்தில் ஆங்காங்கே நின்றும், நாற்காலியில் அமர்ந்தும் சாப்பிட ஆரம்பித்தனர். 

முக்கிய புள்ளிகள் புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து மட்டும் சொல்லி, ராஜசேகரிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.

ஹேமா… பாபி-சாரு… பாஸ்கர் தம்பதியினர்… உறவுகள்… மருத்துவமனை பணியாளர்கள்… என்று அனைவரையும் அருகிலிருந்து அன்புடன் கவனித்தார், ராஜசேகர். 

சற்று நேரத்தில், வாழ்த்துகளும்… இரவு உணவும் முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றனர்.

கடைசியில், தேவா-தாரா இருவரும்… குடும்ப உறுப்பினர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, கார் நிறுத்துமிடம் நோக்கிச் சென்றனர்.

அனைவரையும் வழி அனுப்பிவிட்ட பின், கீதாவிற்கு ஓய்வு தேவைப்பட்டதால் ஜெகன் அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். 

‘அப்பாவும் வரட்டும்’ என்று, சரத் ராஜசேகருக்காகக் காத்திருந்தான். 

“நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு வர்றேன். நீ போ” என்று சொல்லி, சரத்தை அனுப்பி வைத்தார், ராஜசேகர். 

அவன் சென்றபின்,

பரந்து விரிந்த இடத்தில் நின்று கொண்டு, சுற்றிலும் ராஜசேகர் பார்வையைச் சுழலவிட்டார். 

காலியாக இருந்த மேடையையும், நாற்காலிகளையும் பார்க்கும் பொழுது… ஒரு தந்தையாக ராஜசேகரின் மனம் நிரம்பியிருந்தது!! 

*****

தாரா – தேவா… 

கார் நிறுத்துமிடம் வந்திருந்தார்கள். 

காரினுள் ஏறும் முன், “தாரா, ஒரு நிமிஷம்” என்றான் தேவா.

“என்ன தேவா?” என்றாள் சிரித்த முகத்துடன்! 

“எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்தியா?”

“ம்ம்” என்றாள் முகமாறாமல்! 

“மாமாகிட்ட??”

முகம் மாறிவிட்டது. “வாங்க போகலாம்” என்று காரைத் திறக்கப் போனவளை, கைப் பிடித்து நிறுத்தினான்.

“என்ன தேவா?”

“மாமாகிட்ட சொன்னியா?”

“ப்ச் சொல்லலை”

“ஏன்?”

பதில் சொல்லாமல் நின்றாள்.

“தாரா, ‘ஏன்னு?’ கேட்கிறேன்”

“நான் பேசினதில்லை”

‘இன்னும் காரணம் சொல்’ என்பது போல் நின்றிருந்தான்.

“என் அப்பாக்கிட்டருந்து என்னைப் பிரிச்சிக் கூட்டிட்டு வந்திட்டாரு. ஸோ, நான் அவர்கிட்ட பேசினதில்லை” என்றாள், தன் செயலை நியாயப் படுத்தும் விதமாக! 

“ஏன் தாரா இப்படிச் சொல்ற? எனக்கு, நீ தப்பு பண்றன்னு தோணுது”

அமைதியாக நின்றாள்.

“தாரா, போய் பேசிட்டு வா” என்றான் கொஞ்சம் கண்டிப்பாக! 

“முடியாது தேவா” என்றாள் கறாராக! 

“தாரா” என்று பற்களைக் கடித்துக் கொண்டு அழைத்தவன், “உனக்கு எப்படிப் புரிய வைக்க?” என்று யோசித்தான். 

ஓர் அமைதி நிலவியது.

“தாரா” 

“ம்ம்ம்” 

“வா, நடந்துகிட்டே பேசலாம்” என்று சொல்லி, தோட்டத்துப் பாதைகளில் நடக்க ஆரம்பித்தான். 

அவளும் பின்தொடர்ந்தாள். 

சற்று நேரம் எதையெதையோ பேசிவிட்டு, “தாரா, நீ பாபியைப் பத்தி என்ன நினைக்கிற?” என்று கேட்டான். 

“பாபிக்கென்ன?? ஹீ இஸ் சச் எ ஜெம்! அவ்ளோ கேரிங். அவ்ளோ மெச்சூர்… அன்ட், தன்னை சுத்தி இருக்கிறவங்கள ஹேப்பியா வச்சிப்பாரு” என்று அடுக்கிக் கொண்டே போனவள், “ஒன் வேர்ட்ல சொல்லணும்னா… சாரு, ரியலி லக்கி” என்று முடித்தாள். 

“ம்ம்ம்”

“இன்னொன்னு” என்றவள், “சாருவை பார்த்துக்கிறது ஓகே. பட், மாலியைப் பார்த்துக்கிறாருன்னா!!? ஹீ இஸ் கிரேட்” என்றாள். 

“ய்யா, ஐ நோ தேட்!!” என்றவன், “இப்போ மாமாவுக்கும் பாபிக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு?” என்றான்.

அவள் நின்றாள். அவனும் நின்றான்.

‘இன்னும் இவன், இந்தப் புள்ளியிலே நிற்கிறானே?!’ என்ற ரீதியில் தாரா பார்த்தாள்.

“தாரா, பதில் சொல்லு”

“சாருவோட சிச்சுவேஷன் வேற… என் அம்மா… ” என்று ஆரம்பிக்கப் போனவளிடம்,

“நான், உன் அம்மா பத்திப் பேசலை. பாபி-மாமா பத்திதான் பேசறேன். ஸோ, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” என்று மீண்டும் அதே கேள்வியில் நின்றான். 

இருவருக்கும் என்ன வேற்றுமை? என பதில் யோசித்தாள்! ஆனால், கிடைத்த விடை என்னவோ ஒற்றுமைதான்!!

ஆதலால், அமைதியாக நின்றாள். 

“தாரா” 

நிமிர்ந்து பார்த்தாள். 

“மாலி வளந்தப்புறம்… நீ மாமாகிட்ட நடந்துகிற மாதிரி, பாபிகிட்ட நடந்துக்கிட்டா… நீ யாரைத் தப்பு சொல்லுவ??”

இதற்கு பதில் இருக்கிறது. ஆனால், அது தன்பக்க வாதமாக வரமுடியாத பதில்! ஆகையால், அமைதியாக நின்றாள். 

“இன்னைக்கு, யாரும் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க தாரா. ஆனா, சரத் ஜெகனுக்கு மேரேஜ் ஆச்சுன்னா… வர்றவங்க என்ன பேசுவாங்க? அப்போ உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்”

“யாராவது என்னை எதும் சொன்னா, டாக்டர் சும்மா விடமாட்டார்… தெரியுமா?” என்றாள் கர்வமாக! 

ஆனால், அடுத்த நொடியே… ‘எங்கிருந்து வந்தது தனக்கு இந்த நம்பிக்கை! சரத், ஜெகன், அம்மா… என்ற எந்த உறவும் ஏன் வரவில்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். 

ஆனால், தாரா ‘டாக்டர்’ என்று விளிப்பதைப் பார்த்து, தேவாவிற்குக் கோபம் வந்ததிருந்தது. 

“டாக்டரா?” என்று கேட்டு, அதை வெளிப்படுத்தினான்.

அவனது குரல், அவளை யோசனையிலிருந்து மீட்டெடுத்து வந்தது. 

“ஏன் தாரா, அப்பான்னு சொல்ல முடியாதா?” என்று மேலும் கோபப்பட்டான்.

மீண்டும் அமைதி தாராவிடம்!

“அப்பாக்கிட்டருந்து பிரிச்சிட்டு வந்திட்டாருன்னு சொல்றியே… இங்க கூட்டிட்டு வந்து உன்னை கஷ்டப்படுத்தினாரா??”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்று ராஜசேகருக்காகப் பேசினாள். 

“அப்புறம் ஏன் அவர்கிட்ட இப்படி நடந்திக்கிற?”

தாராவிடம் பதிலில்லை. 

“தாரா, நீ அடிக்கடி சொல்ற… ‘இது என் ஃபேவரைட் கார்! இது நான் கட்டிற ஹாஸ்ப்பிட்டல்! இது நான் வாங்கின வீடு!’ இது ஒவ்வொன்னும் கோடிக்கணக்கில இருக்கும்ல?”

“இப்போ அது எதுக்கு?”

“எங்கிருந்து வந்திச்சு அந்தப் பணம்?”

“அது என்னோட எர்னிங்ஸ்”

“இப்படிச் சம்பாதிக்கிறதுக்கு ஒரு படிப்பு தேவை! அதை யாரு கொடுத்தா?”

மீண்டும் பதிலில்லை. 

“பத்திரமா பாத்துகிட்டு… பாசத்தைக் கொட்டி படிக்கச் வச்சா, நீ அவரையே தள்ளி நிக்க வச்சிப் பார்க்கிற?”

“என்னால என் அப்பா இருந்த இடத்தை யாருக்கும் விட்டுத் தர முடியாது” என்றாள். 

எல்லா கேள்விகளுக்கும், இதுதான் அவளிடம் இருக்கும் ஒரே பதில்! 

“யாருக்கும் விட்டுத் தர வேண்டாம். நானும் விட்டுத் தர சொல்லலை. உன் மேல பாசம் வச்சிருக்கிற ஒருத்தரைப் புரிஞ்சிக்கிட்டியான்னு கேட்கிறேன்”

மீண்டும் மீண்டும் பதில்லாமல் நின்றாள். 

‘இத்தனை பதிலில்லா கேள்விச் சூழலுக்குள்தான் நிற்கிறேனா?’ என தன்னையே கேட்டுக் கொண்டாள். 

அது, அவளுக்குத் ‘தன்பக்கம் நியாயமில்லையோ’ என்ற உணர்வைத் தந்தது. 

“எனக்கு ஐயாவைப் பத்தி நல்லா தெரியும். உன்னை விட அதிக நேரம் அவர்கூட பேசியிருக்கேன். அதை வச்சி சொல்றேன்… நீ இப்படி நடந்துக்கிறது, ஐயாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது”

‘உன் தந்தைக்குப் பிடிக்காத ஒன்றை செய்கிறாய்’ என்ற அவனின் வாதம், அவளின் பிடிவாத பிடிமானத்தை அசைக்க ஆரம்பித்தது. 

“உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு தடவையும், அவர் எவ்வளவு ஏக்கத்தோட பார்க்கிறாரு! அது உனக்குத் தெரியலையா தாரா?”

பக்கத்திலிருந்து பார்க்கவில்லை என்றாலும், தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி? என்று நினைத்தும் இருக்கிறேன். – தாராவின் மனநிலை!

“அவரை ஒரு மனுஷனா கூட மதிக்க மாட்டிக்க. அப்படி என்ன தப்பு பண்ணாரு?”

“தேவா இப்படிச் சொல்லாதீங்க. அவர் மேல ரெஸ்பெக்ட் உண்டு. ஒரே ஒரு நாள்தான், அவர்கிட்ட கோபமா பேசியிருக்கிறேன். அதுக்கப்புறம் பேசினதேயில்லை”

“அதான் தப்புன்னு சொல்றேன். அடுத்த நாளே கோபப்பட்டதுக்கு ஸாரி கேட்டுட்டுப் பேசியிருக்கலாமே தாரா??”

“ஏன் இவ்ளோ திட்டறீங்க. அதுவும் இன்னைக்கு?” என்று கண் கலங்க கேட்டாள். 

“திட்டலை தாரா! திருத்தணும்னு நினைக்கிறேன்”

‘திருத்தம் செய்யும் அளவிற்கா தன் செயல்கள் இருக்கிறது?’ என்பது அவளை வருத்தம் கொள்ளச் செய்தது. 

“தாரா”

“ம்ம்ம்”

“உனக்கு அவர் மேல பாசம் இருக்கு. எப்படின்னு சொல்லவா??”

ஆச்சரியமாகப் பார்த்தாள். 

“நீயும் நானும் ஹாஸ்ப்பிட்டல்-ல ஒரு நாள் ஆர்க்யூ பண்ணோம்ல?”

“ம்ம்ம்”

“அதுதான் ஃபர்ஸ்ட் டைம் நாம தனியா பேசினது. கரெக்டா??”

“ம்ம்ம்” 

“எத்தனை வருசமா நீ என்கிட்ட பேசணும்னு வெயிட் பண்ணிருப்ப! 

ஆனா நான், உங்க ஹாஸ்பிட்டல் பத்திக் குறை சொன்னதும், எல்லாத்தையும் மறந்திட்டு எப்படி என்கிட்ட ஆர்க்யூ பண்ண?!

‘வி நோ வாட் இஸ் எத்திக்-ன்னு’ சொன்னேல்ல… அதுல அந்த ‘வி’ யாரு தாரா?”

உண்மைதான்! மருத்துவமனை பற்றி யார் தவறாகப் பேசினாலும், தன்னால் பொறுத்துப் போக முடியாது. அது ‘ஏன் என்று?’ லேசாகப் புரிந்தது. 

“இப்போ கேட்டியே ‘எங்க வீடு எப்படி இருக்குன்னு?’. அதுல ‘எங்க-ன்னு’ சொன்னது, டாக்டர் ராஜசேகர் குடும்பத்ததான?”

‘ஆமாம்’ என்று மனம் சொன்னது. ஆனால், மூளை எதையோ நினைத்து முரண்டு பிடித்தது. – தாராவிற்கு! 

“மேரேஜுக்கு முன்னாடி, நீ ஐயா பத்திச் சொல்லாததுக்குக் காரணம் கேட்டப்போ… என்ன சொன்ன?” என்று அடுத்த கேள்வி கேட்டான். 

” ‘சொல்லத் தோணலைன்னு’ சொன்னேன்”

“ரீஸன், அது இல்லை. உனக்கு பயம்! 

நம்ம அப்பா மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கிறவன், இவங்களை எப்படி பார்பானோன்னு பயம்! 

அன்னைக்கு உன் ஃபேஸ் டல்லா இருந்ததுக்கு காரணம் அதுவும்தான்! 

உன்னைப்பத்தி சொன்னப்புறம், சரத் ஜெகன்கிட்ட இதேமாதிரியே பேசுவீங்களான்னு கேட்டேல? அப்போ மாமாவைப் பத்தியும் மனசில நினைச்சியா? இல்லையா??”

தான் காதலிக்கிறவன், தன்னை இப்படிக் கணித்து வைத்திருக்கிறானே என்றொரு தோற்றம் தாராவிடம்! 

“சொல்லு தாரா! நினைச்சியா? இல்லையா?”

“நினைச்சேன் தேவா! நினைச்சேன்!! முதல சரத் ஜெகன் பத்தி மட்டும்தான் நினைச்சேன். 

ஆனா, நீங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல பேசினதைப் பார்த்து… 

உண்மை தெரிஞ்சப்புறம், அவர்கிட்ட நீங்க பேசற விதம் மாறிடுமோன்னு நினைச்சேன். 

அது, அவரைக் கஷ்டப்படுத்துமோன்னு நினைச்சுப் பயந்தேன்!

போதுமா?” என்று சத்தமாகச் சொல்லி, சரணடைந்தாள். 

“என்னால மாமா கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சிருக்கிற. குட்! சரிதான்!! பட், உன்னால அவர் கஷ்டப்படுறதை மறந்திட்டேயே?!”

அவள் முகம் மாறியிருந்தது. 

அவள் உணர்ந்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. மேலும், உடைந்து கொண்டிருக்கிறாள் என்றும் புரிந்தது. 

ஆதலால், “தாரா போ. போய் பேசிட்டு வா” என்றான். 

“திடிர்னு போய் என்ன பேச தேவா?” என்றவள் குரல் சங்கடப்பட்டிருந்தது. 

” ‘போயிட்டு வர்றேன்னு’ சொல்லிட்டு வா. இன்னைக்கு அது போதும்” என்றான், அவளைச் சமாதானப் படுத்தம் குரலில்!

தாராவிடம் தயக்கம்! அவருடன் சகஜமாகம் பேசி எத்தனை வருடங்கள் ஆயிற்று? சட்டென்று முடியுமா? என யோசித்தாள்! 

“தாரா, எதையும் யோசிக்காத. போ” என்றான். 

“ம்ம்ம்” என்று சொல்லி, திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

“தாரா”

“ம்ம்ம்” என்று பின்னாடித் திருப்பிப் பார்த்தாள்.

“மாமா எதுவும் பேசினா, கொஞ்சம் பொறுமையா கேளு” 

“ம்ம்ம்” என்று தலையாட்டினாள்.

“நான் சொன்னதுக்காக, அவரை அப்பான்னு கூப்பிட வேண்டாம். நீயா உணர்ந்து கூப்பிட்டா ஓகே” என்றான்.

ஏதும் சொல்லாமல், வீட்டின் பிரம்மாண்ட வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

*****

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!