Eedilla Istangal – 24.2

வீட்டிற்குள்…

தாரா வரவேற்பறைக்குள் நுழையும் போது…

ஜெகன், சாப்பாடு மேசையின் அருகே நின்றுகொண்டிருந்தான்.

சரத்தும் கீதாவும் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ராஜசேகர் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

தாரா வருவதை பார்த்ததும், 

“என்ன-க்கா ஏதும் மறந்திட்டியா?” – ஜெகன்.

“என்ன வேணும் தாரா?” – கீதா.

“தாரா?? – சரத்.

ஒவ்வொருவரும் ஒரு கேள்வியுடன்!

யார் கேள்வியையும் தாரா கருத்தில் கொள்ளவில்லை.

கண்களில் தெரிந்தது ராஜசேகரின் உருவம்!! கருத்தினில் இருந்தது, அவரின் ஏக்கப் பார்வைகள்!!

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அவரை நோக்கி முன்னேறிச் சென்றாள்.

மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அவள் தன்னை நோக்கி வருகிறாள் என்று தெரிந்ததும், ராஜசேகர் அலைபேசி பேச்சை நிறுத்திவிட்டார்.

மேலும் மேலும் அடியெடுத்து வைத்து, ராஜசேகர் அருகில் சென்று நின்றாள். 

அவர் எதுவும் பேச விளையவில்லை! ஆனால், பார்வை முழுதும் தாராவின் மீதுதான் இருந்தது! 

“அது…அது…” என்று தயங்கினாள். 

மற்ற மூன்று பேரும் மூச்சு வீடக் கூட மறந்து போய், அப்படியே… அதே இடத்திலேயே இருந்தனர்.

“அது… போயிட்டு வர்றேன்” என்று சொல்லி முடித்தாள்.

இரண்டு வார்த்தைப் பேசுவதற்குள், அவள் இருதயம் இங்கும் அங்கும் ஓடித் திரிந்த களைப்பை அடைந்தது. 

‘ம்ம்ம்’ என்ற அர்த்தங்கள் மட்டும் கொண்ட தலையசைப்பு, ராஜசேகரிடம்!

இமைகள் உயர்த்தி, அவரைப் பார்த்தாள். 

அவரின் இதயத்திலிருக்கும் ஏக்கம், இருவிழிகளில் எட்டிப் பார்த்தது.

எப்பொழுதும் எட்ட நின்று பார்ப்பதுதான்! 

இருந்தும் இன்று இத்தனை அருகில் பார்க்கும் போது, கூட இரண்டு வார்த்தைகள் பேசினால் என்ன? என்று தோன்றியது. 

“பங்சன்… பங்சன்…” என்று வார்தைகளைத் தேடினாள்.

தான் ஏதாவது பேசி, அவள் பேசுவதை நிறுத்திவிட்டால்! ஆதலால் ராஜசேகர் அமைதியாக நின்றார்.

“பங்சன் டெக்கரேஷன் ரொம்ப நல்லா இருந்தது” என்று சொல்லிவிட்டு, மூச்சு வாங்கி கொண்டாள்.

மருத்துவமனை சார்ந்திராத விடயங்கள் மகள் பேசுகிறாள். மனதை திறந்து வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார், ராஜசேகர்!

“எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது” என்றாள். 

‘சந்தோசம்’ என்பது போல் லேசாகச் சிரித்தார்.

“நான் கிளம்புறேன்” என்று சட்டெனெ திரும்பினாள்.

அவரின் கண்கள் மட்டுமல்ல! அங்கிருந்து அனைவரின் கண்களும் ‘இன்னும் கொஞ்சம் பேசு தாரா’ என்று கெஞ்சின!

இரண்டு எட்டு வைத்தவளிடம், “அப்பாகிட்ட பேச வேற ஒன்னும் இல்லையா தாரா?” என்றார் இதயத்தின் ஏக்கத்தை மறைக்க முயற்சிக்கும் குரலில்!

திரும்பிவிட்டாள்.

“சொல்லு தாரா! அப்பாகிட்ட பேச மாட்டியா?”

‘அப்படியெல்லாம் இல்லை’ என்பது போல் மெல்லமாகத் தலை ஆட்டினாள். ஆனால், வாய் திறந்து அதை வார்த்தையாகக் கோர்க்க இயலவில்லை.

“தாரா… அப்பாவைப் பிடிக்காதா?” 

அவர் இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், அன்றைய தன் பேச்சு என்று தெரிந்ததால்… மௌனமாக நின்றாள். 

“உன்னை, உன் அப்பாக்கிட்டருந்து பிரிச்சிட்டேன்னு… கோபம்!? ம்ம்ம், அப்படித்தானா?”

“கோபம் இல்லை” என்றவள் குரல் கமிறியது!

“அம்மா… சரத்தையும் ஜெகனையும் பார்த்துக்கிற மாதிரி, உன்னை நான் பார்த்துக்கணும்னு நினைச்சேன்! 

ஸ்கூல்ல… நீ சரத்-ஜெகன் கூட பேசி, சிரிச்சி விளையாண்டதைப் பார்த்து…

என்கூடவும் இப்படி ஒருநாள் பேசிச் சிரிப்பேன்னு நினைச்சேன்! 

ஆனா, நீ என்னை ஏத்துக்கலை-ங்கிறதை எப்போ உணர்ந்தேன் தெரியுமா?” என்று கேட்டு, நிறுத்தினார். 

அதுவரைக் குனிந்து நின்று, தன் கலக்கங்களை மறைத்துக் கொண்டிருந்தவள்… நிமிர்ந்து பார்த்தாள். 

“உன்னை ஒவ்வொரு தடவையும் கோயம்புத்தூர் கூட்டிட்டுப் போவேன்ல… அப்போ என்கிட்டருந்து ஓடிப் போய்… உன் அப்பாவை… ” – ராஜசேகருக்கு, அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. ஒரு ஏக்க பெருமூச்சு மட்டுமே! 

அந்த நாளில், தந்தையின் ஏக்கத்தை மட்டும் பார்த்தவளுக்கு, மறுபக்கத்தில் இப்படி இவர் ஏங்கிக் கொண்டிருந்தாரா? என்ற கேள்வி எழுந்தது. 

“அப்போ புரிஞ்சிடுச்சு! உனக்கு, உன் அப்பா-னா எவ்ளோ பிடிக்கும்னு! என்னை ஏத்துக்கிறது உனக்கு எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது”

‘முடியாது’ என்று தெரிந்த பிறகும், தனக்காக சரத்தை அடித்தாரா? – தாரா மனநிலை! 

“ஆனா, அந்த அளவு பாசம் இல்லைனாலும், கொஞ்சமாவது என் மேல பாசமா இருப்பேன்னு நினைச்சேன்… ஆசைப்பட்டேன்”

பாசம் இருக்கு! இப்பொழுதுதான் தேவா சொன்னானே! ஆனால், எப்படி அவருக்கு எடுத்துச் சொல்ல என்று தெரியவில்லை. 

உணர்ச்சிகளின் பிடியில் இருந்ததால், தாராவிற்கு உரையாடல் வரவில்லை. 

“இப்போ வரைக்கும் நினைச்சிக்கிட்டே இருக்கேன். அப்பப்ப நீ ஹாஸ்ப்பிட்டல்-ல ஏதாவது பேசினா, ரொம்ப சந்தோஷமா இருப்பேன்”

முகாம் நடத்த அனுமதி கேட்டபோது சிரித்தது… இதற்காகவா? – தன்னிடமே கேள்வி கேட்டுக் கொண்டாள், தாரா. 

“சரி தாரா!! நீ சொல்ற மாதிரியே, உன் அப்பாக்கிட்டருந்து உன்னை பிரிச்சிட்டேன்… அது என்னோட தப்புன்னே வச்சிப்போம்! 

அந்த தப்புக்கு இத்தனை நாள் தண்டனை கொடுத்தது போதாதா? ஒரே வீட்ல… இப்படி ஒருத்தன் இருக்கிறதைக் கண்டுக்காம… பேசாம… அப்பான்னு கூப்பிடாம…” என்று நிறுத்தினார். 

அவருக்கு வலிப்பதைக் கூற வேண்டும். ஆனால், அது அவளுக்கு வலியைக் கொடுத்துவிடாமல் கூற வேண்டும். 

அப்படியொரு பக்குவமான குரலில் கூறினார். அவர் வயதிற்கு ஏற்ற பக்குவம் அது! 

ஆனால், தாராவின் வயது! அவர் அளவிற்கு பக்குவம் இல்லாததால், அவளுக்கு நிரம்ப வலித்தது. 

“முன்னெல்லாம்… நீ, என்னை புரிஞ்சிப்ப-ன்னு ஒரு நம்பிக்கை இருந்தது! ஆனா, அது இப்போ இல்லை”

அவர் குரல் அழுதது! தாடை தசைகளை இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டார்!! இல்லையென்றால் அவரும் அழுதிருப்பார்!!! 

ஆனால், அவள் கண்களில் நீர்த் தேங்க ஆரம்பித்திருந்தது! 

“ரொம்ப கஷ்டமா இருக்கு தாரா. இப்படியே… நீ அப்பான்னு கூப்பிடாம என் வாழ்க்கை முடிஞ்சிருமோன்னு… ” என்று சொல்லிவிட்டு, நடுங்கிய கைகளால் வாயை மூடிக் கொண்டு நின்றார் 

“ஏன் இப்படிப் பேசறீங்க?” என்று கோபப்பட்டவள், தன் இரு கைகளால் அவரை அணைத்துக் கொண்டாள். 

மெல்ல மெல்ல கண்ணீர் சொரிய ஆரம்பித்தாள். 

இக்கணம், சரத்-ஜெகன்-கீதா மூன்று பேரும், ராஜசேகர் அருகில் வந்து நின்றனர். 

தாராவின் அழுகை அதிகரித்தது. 

“அப்பா அழறா-ப்பா. ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?” என்றும் சரத் கண்டித்தான்.

“தாரா அழாத” என்று சுற்றியிருந்தவர்கள் சொல்லி, அவளது கண்ணீரை நிறுத்த முயற்சி செய்தனர். 

ஆனால், அவள் நிறுத்தவில்லை. 

“தாரா அழாதம்மா. இனிமே அப்பா இப்படிப் பேசமாட்டேன்” என்று சொல்லி, விலக்கி நிறுத்தி அவளது கண்ணீர் துடைக்கப் பார்த்தார். 

ஆனால், அவள் அழுவதையும் நிறுத்தவில்லை. பிடித்தப் பிடியையும் விடவில்லை. இன்னும் அவரோடு ஒண்டிக்கொண்டாள்.

“தாரா, நீ அழுதா அப்பாவால தாங்க முடியாது. அழாத தாரா… “

சற்றும் குறையாமல் அழுது கொண்டிருந்தாள், தாரா! 

“தாரா… அப்பாக்கு நீ-னா உயிரு. இப்படி அழாதம்மா… ” என்று கெஞ்சினார். 

இதே வார்த்தைகள், உயிர் பிரியும் தருவாயில் அதிபன் சொன்னதாகத் தேவா சொல்லித் தெரிந்து கொண்டாள். 

அதே வார்த்தைகள், உயிர் வேதனையில் ராஜசேகர் சொல்லிக் கேட்கிறாள். 

எதற்கு இந்த வரட்டுப் பிடிவாதம். அவரையும் வருத்தி… தானும் வருந்தி… 

லேசாக அவரிடமிருந்து விலகினாள். 

இன்னும், ஒரு கரம் அவரை அழுத்திப் பிடித்திருந்தது… மற்றொரு கரத்தால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ப்பா” என்று வாய் திறந்து சொல்லும் போதே, மீண்டும் அழகை வந்துவிட்டது .

அதுவரை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், சொல்வதை நிறுத்திவிட்டார்கள். அவளும் ‘அப்பா’ என்று அழைத்துவிட்டு, மீண்டும் கண்ணீர் வடித்தாள். 

“சரத்… அம்மா உள்ளே போறேன்-டா” என்று சரத்தின் கைகளைக் கீதா பிடித்தார்.

அதுவரை தாராவின் மீதிருந்த கவனத்தை, சரத் கீதாவிடம் திருப்பினான். 

அவரும் கண் கலங்கியிருந்தார்.

“அம்மா… நீங்க ஏன் இப்படி?” – சரத். 

“எனக்கு… எனக்கு… இது போதும் சரத். இது போதும்” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு, அவரது அறையை நோக்கி நடக்கப் போனார். 

“ஜெகன், நீ இவளை பார்த்துக்கோ… நான் அம்மாவை பார்த்திட்டு வர்றேன்” என்று கீதாவைக் கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றதும்,

இன்னும் இரண்டு மூன்று முறை ‘அப்பா’ என்று அழைத்தாள். 

ஜெகனும் எவ்வளவோ ஆறுதல் சொன்னான். ஆனால் இருவரும் கேட்கவேயில்லை. 

தாரா, இதுவரை உணர மறுத்த உணர்வை உணர்ந்து உழன்று கொண்டிருந்தாள். 

ராஜசேகர், அவள் உணர்ந்ததை உணர்ந்து நெகிழ்ந்து கொண்டிருந்தார். 

சற்று நேரத்திற்குப் பின், கீதாவைத் தூங்க வைத்துவிட்டு, சரத் வந்தான்.

“தாரா இன்னும் ஏன் அழுதுகிட்டு இருக்க?” என்று கடிந்து கொண்டவன், “ஜெகன், கொஞ்சம் தண்ணீ கொண்டுவா” என்றான்.

ஜெகன் ஒரு கண்ணாடித் தம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து, தாராவிடம் நீட்டினான்.

வாங்க மறுத்துவிட்டாள். 

தண்ணீரை வாங்கி, “தாரா முதல இதைக் குடி” என்று தம்பளரை, அவள் கைகளில் சரத் திணித்தான். 

கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள். மற்றொரு கரம், இன்னும் ராஜசேகரைப் பிடித்திருந்தது. 

சரத் சென்று, சாப்பாட்டு மேசையின் மேலிருந்த டிஸ்ஸுயூ தாள்களை எடுத்துவந்தான். 

அதைக் கொண்டு தாராவின் கண்ணீரை… கண்ணீர் கோடுகளைத் துடைத்துவிட்டான்.

வாய் வார்த்தை இல்லாமல், வாஞ்சையுடன் தாராவின் தோள்களில் தட்டிக் கொடுத்தார், ராஜசேகர். 

தாரா, அவ்வளவு அழுததின் காரணமாக, இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கும் முதுகினை மெதுவாக நீவிவிட்டான், ஜெகன்.

இவையெல்லாம் ஆறுதல் தந்தது, தாராவிற்கு! 

தாரா, 

அந்த வீட்டினரின் அன்பிற்குரியவள்! 

ராஜசேகரின் செல்லமகள்!

சரத் ஜெகனின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவள்!

வேறென்ன சொல்ல!!

சரத்தான் பேச ஆரம்பித்தான்.

“தாரா… இதுக்குப்புறம் அழக் கூடாது. இட்ஸ் யுவர் டே. ஸோ, ஹேப்பியா இரு”

‘ம்ம்ம்’ என்று தலையாட்டினாள். 

“ஜெகன், ஏதாவது ஸ்வீட் எடுத்திட்டு வா?” என்றார் ராஜசேகர்.

ஜெகனும் எடுத்து வந்தான். 

அந்த இனிப்பிலிருந்து, ஒரு வில்லை எடுத்து தாராவிற்குப் புகட்டினார். பின், “இனிமே அழக் கூடாது! கவலைப் படக்கூடாது” என்றார் அன்புடன்!

அன்பை ஏற்று தலையை மட்டும் ஆட்டினாள். 

அதன்பின், ஜெகன் ஒரு வாயும்… சரத் ஒரு வாயும் இனிப்பு எடுத்து தாராவிற்கு ஊட்டிவிட்டனர்.

இனிப்பை மென்று கொண்டே, ராஜசேகரை நிமிர்ந்து பார்த்தாள். 

“என்ன தாரா?”

‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தாள். வெகுநேரம் கழித்து புன்னகை செய்தாள். மீண்டும் அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 

“உன் மேரேஜ்க்கு அப்பா எந்த கிப்ஃட்டும் வாங்கித் தரலையே. உனக்கு ஏதாவது வேணுமா தாரா?”

“இப்போ எதுவும் தோணலை” என்று மட்டும் சொன்னாள். 

அழும் போது இருந்த, ‘அப்பா’ என்ற அழைப்பு… இக்கணம் இல்லை! என்று உணர்ந்தார், ராஜசேகர். 

உணர்ச்சி வசப்பட்டுத்தான் அழைத்திருப்பாள் என்று தெரிந்தது. 

இருக்கட்டும்!! 

உரிமையுடன் அழைப்பாள், என்று நம்பிக்கை கொண்டார். 

அந்த நம்பிக்கையில், “சரி தாரா! என்ன வேணுமோ, அப்பாகிட்ட கேளு” என்று சிரித்துக் கொண்டார். 

“ப்பா! வாங்கித் தர்றேன்னு மட்டும் சொல்லிட்டீங்க, அவ்ளோதான்! இது அதுன்னு… கேட்டுகிட்டே இருப்பா” என்றான் சரத். 

“நான் சம்பாரிச்சது எல்லாமே அவளுக்குத்தான-டா” என்றார், தாராவின் தலையை வருடியபடி! 

அவர் அப்படிச் சொன்னதில், ஓர் களிப்பு! ஓர் கனிவு!! கூடவே சிறிதளவு கர்வம்!! – தாராவிற்கு! 

“போதும் ப்பா! வெளியிலே தேவா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரு. இன்னொரு நாள் பேசலாம்” என்றான் சரத் பொறுப்பாக! 

“ஆமா தாரா! லேட்டாகுது. நீ கிளம்பு” என்று சொல்லி, அவள் நெற்றி வருடி… உச்சி முகர்ந்தார், ராஜசேகர். 

“ஜெகன், நீ தாராவைக் கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வா… நான் அப்பாவை ரூமுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் சரத்.

இருவரிடமும் விடைபெற்று, தாராவும் ஜெகனும் வெளியே வந்தனர்.

அவர்கள் சென்றதும், 

“சரத்… அப்பா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ரொம்ப ரொம்ப…” என்று பேசிக் கொண்டே நடந்தார். 

“ம்ம்ம் புரியுதுப்பா… ” என்று சொல்லிக் கொண்டே, அவரின் அறைக்கு அழைத்துச் சென்றான். 

வீட்டின் வெளியே… 

காரின் அருகே நின்று கொண்டிருந்த தேவாவிடம்… தாராவை விட்டுச் சென்றான், ஜெகன்.

“கிளம்பலாமா?” என்று கேட்டான் தேவா.

‘ம்ம்’ என்று தலையசைத்துக் காரினுள் ஏறினாள்.

தேவாவும் ஏறினான்.

காரினுள் இருந்த சிறு விளக்கொளியில் தெரிந்த தாராவின் நனைந்த இமைகள் நிறைய விடயங்களை விளக்கியது. 

முதல் முறையாக, அவளின் நனைந்த இமைகள்… அவனுக்கு நிம்மதியைத் தந்தன.