Eedilla Istangal – 7

ராஜசேகர் வீடு

தாராவும், ராஜசேகரும் மருத்துவனை கிளம்பிச் சென்றிந்தருந்தனர்.

கீதாவும், சரத்தும்… அவர்கள் சென்றதும் பேச ஆரம்பித்தவர்கள், இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அக்கணம், “அம்மா என்ன பிரேக் பாஸ்ட்?” என்று கேட்டபடியே ஜெகன் வந்து அமர்ந்தான்.

“பூரி, தோசை… ரெண்டும் இருக்கு ஜெகன். எதுவேணுமோ எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு சரத்தின் பக்கம் திரும்பினார்.

“நீ சொல்றதை நம்ப முடியலை சரத்” என்றார்.

‘அப்படி என்ன சொன்னான்?!!’ என்று புத்திக்குள் கேட்டபடியே பூரியை எடுத்தாள்.

“ம்மா… ஏன் நம்ப முடியலை?”

“அவளைப் பார்த்தா அப்படித் தெரியலைடா”

“எல்லா பையனையும் வேண்டாம்னு சொல்றதைப் பார்த்தா… அப்படித்தான் தெரியுது”

‘இந்த தடவை பெரிய பிராப்ளம் கிரியேட் பண்றான் போல’ என்று நினைத்துக் கொண்டே, ஜெகன் சாப்பிட்டான்.

திடீரென, “இதோ ஜெகன் இருக்கான்ல… இவன்கிட்ட கேளுங்க. ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ்ல” என்று ஜெகனை இழுத்தான்.

“ஜெகன்… உனக்கு இதைப் பத்தி தெரியுமா?” – கீதா.

“எதைப் பத்தி??”

“அண்ணா சொல்றான்டா… தாரா லவ் பண்றான்னு… அதான் உனக்கு??”

“இவன் ஒருத்தன்னு… இவன் சொல்றதை நம்பி, அக்காகிட்ட எதையாவது கேட்டு வைக்காதீங்க” என்று எழுந்து விட்டான்.

“ஜெகன்”

“ம்மா… எனக்கு எதுவும் தெரியாது”

“அது இல்லடா. இந்த ஜூஸை தாராகிட்ட கொடுத்திரு. மறந்திட்டு போயிட்டா” என்று ஜூஸ் பாட்டிலை நீட்டினார்.

வாங்கிக் கொண்டான்.

“ஜெகன்”

“என்னம்மா??” என்று சலிப்பாகச் சொன்னான்.

“அப்படி எதுவும்னா, அக்காவைச் சொல்லச் சொல்லுடா” என்று சாந்தமாகச் சொன்னார்.

“சரி… சரி… ” என்று கிளம்பிச் சென்றான்.

அவன் சென்றதும்,

“சரத், நல்லா தெரியாம இப்படிப் பேசாதடா”

“ம்ம்ம்”

“அதோட… அப்பாகிட்டயும் இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத. சரியா?”

“ம்ம்ம் சரிம்மா. நீங்க சாப்பிடுங்க. அப்புறமா நான் ஹாஸ்பிட்டல் போறேன்” என்று பரிமாறத் தொடங்கினான்.

*****

மருத்துவமனை வளாகம்

தாராவின் அறை…

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் எடுக்கும் மேம்”

“ப்ம்ச். பேஷண்ட் வெயிட் பண்றாங்க. கொஞ்சம் பாஸ்ட்டா”

“சரி மேம்” என்று வேலையைத் தொடர்ந்தார்.

பார்வையாளர்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே, தாரா அறையின் குளிர்சாதன பெட்டி வேலை செய்யவில்லை.

ஆதலால் பழுதை சரி செய்து கொண்டிருக்கின்றார்.

அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு சாரு வந்தாள்.

மீண்டும் கதவு மூடப் போனவளிடம், “இட்ஸ் ரியலீ ஹாட் சாரு. டோர் ஓப்பனா இருக்கட்டும்”

“ம்ம்ம் சரி” என்று கதவை நன்றாகத் திறந்து வைத்தவள், “எதுக்கு கூப்பிட்ட தாரா?” என்று கேட்டாள்.

“ஸீ, ஏசி ஒர்க் போய்கிட்டு இருக்கு. சப்போஸ் என்னால முடியலைன்னா… என்னோட கேஸஸ் நீ கொஞ்சம் பார்த்துக்கோ”

“நீ எங்கயாவது போறியா??”

இந்த நொடி, “மேம், இங்க ப்ராப்ளம் இல்லை. அவுட் டோர் யூனிட்ல போய் செக் பண்ணிப் பார்க்கிறேன்” என்றார்.

தாரா சரியெனத் தலை அசைத்தாள்.

ஏசி மெக்கானிக் கிளம்பியதும்,

“சொல்லு தாரா, எங்கயாவது போகனுமா?”

“ம்ம்ம், தேவாவைப் பார்க்கப் போறேன்”

“இன்னைக்கா??”

“ம்ம், கொஞ்சம் பேசணும் சாரு. ஆஃப்டர் 2:30 வர்றேன்னு, தேவாகிட்ட சொல்லிருக்கேன்”

“நேத்து கேம்ல பார்த்தப்ப பேசலையா?”

“பேசணும்னு நினைச்சேன். பட் பேச முடியலை. அதான்…” என்று அவள் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னே,

“யாருக்கா தேவா?” என்று கேட்டு, ஜெகன் கதவருகே நின்று கொண்டிருந்தான்.

அந்தக் குரல் கேட்டு… சாரு, தாரா இருவரும் திரும்பினர்.

“ஜெகன் நீ…” என்று கேட்டு, தாரா அதிர்ச்சியுடன் நின்றாள்.

ஜெகன் உள்ளே வந்தான். அவள் பேசியதை முழுவதும் கேட்டிருந்தான்.

அவள் முன்னே வந்து நின்று, “தேவா யாரு?” என்று கேட்டான்.

வேகமாகச் சென்று, சாரு கதவை அடைத்துவிட்டு வந்தாள்.

“ஜெகன்… அது… அது” என்று தாரா படபடத்தாள்.

“லவ் பண்றியா??” என்று அடுத்த கேள்வி கேட்டான்.

“ஜெகன்” என்று தொண்டைக் குழியிலிருந்து வந்தது.

“சொல்லுக்கா லவ் பண்றியா??”

“ஏன்… ஏன் இப்படிக் கேட்கிற?”

“வீட்ல, அண்ணா அம்மாகிட்ட… ‘நீ லவ் பண்றியோன்னு’ சொல்லிக்கிட்டு இருக்கான்”

“சரத்… வேற என்ன சொன்னான்??” என்றவளுக்குப் பயம் வந்தது.

“அவனை விடு. நீ சொல்லு… லவ் பண்றியா?”

‘என்ன செய்ய?’ என்ற பார்வையுடன் சாருவைப் பார்த்தாள்.

‘ஒத்துக்கொள்’ என்று சாரு கண்கள் சொல்லின.

“ம்ம்ம்” என்று தன் காதலை ஒத்துக் கொண்டாள்.

“எப்போ இருந்து லவ் பண்றீங்க?”

“அய்யோ, இனிமேதான் அவர்கிட்ட இதைப்பத்தி பேசனும்”

“அப்போ, நீ மட்டும்தான் லவ் பண்றியா?”

“அது… ஜெகன்…”

“பதில் சொல்லுக்கா??”

“ம்ம்ம். ப்ளீஸ் ஜெகன், இப்போ வீட்ல யார்கிட்டயும் சொல்லாத”

ஜெகன் அமைதியாக நின்றான்.

“நான் அவர்கிட்ட சொல்லிட்டு, அப்புறமா வீட்ல சொல்லிடுவேன்”

“சரத்தை நினைச்சு பயப்பிடுறீயா??”

இக்கணம் தாரா அமைதியைக் கையில் எடுத்தாள்.

“அவனை மைன்ட் பண்ணாத. உனக்குப் பிடிச்சிருக்குன்னா, அம்மா அப்பா நோ சொல்ல மாட்டாங்க” என்று தைரியம் சொன்னான்.

“ம்ம்ம்” என்றவள் குரலில் வருத்தம் ஒட்டியிருந்தது.

“நீ… நீ ஏன் இப்படி இருக்கிற?” என்று சொல்லி, அவளைத் தோளோடு தோள் அணைத்துக் கொண்டான்.

சட்டென அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

“இங்க பாரு… உனக்கு ஒண்ணு பிடிச்சிருக்குன்னா… அம்மா, அப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. அப்படியே அவங்க சொன்னாலும், நான் சொல்ல மாட்டேன். புரியுதா?”

அவன் தோளில் சாய்ந்தவாறே, தலையை அசைத்தாள்.

“ஜெகன், பர்ஸ்டு லவ் கன்ஃபார்ம் ஆகட்டும். அதுக்கப்புறம் இதெல்லாம் பேசலாம்” – சாரு.

சாருவின் பேச்சைக் கேட்டதும், தாரா சுதாரித்துக் கொண்டு, “இங்க பாரு ஜெகன், நீ எம்எஸ் படிக்கப் போகனும். அதுல மட்டும் கான்சன்டிரேட் பண்ணு” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம். உன் பக்கத்தில இருந்து, நீ சந்தோஷமா இருக்கியான்னு பார்க்கிறதான்… என் வேலையே”

“ஜெகன்… ” என்றாள் குரலில் கண்டிப்புடன்!

“சரி, சரி படிக்கிறேன். அவர் பேரென்ன… தேவாவா??”

“ம்ம்ம்” என்றவள் முகம் கண்டிப்பை விட்டுவிட்டு கனிவைக் காட்டியது.

“சென்னைதானா?”

“ம்ம்ம்”

“எத்தனை நாளா லவ் பண்ற?”

“நாள் கணக்கில்ல ஜெகன். வருஷக் கணக்கு!” என்று அவர்கள் பேச்சில் சாரு கலந்து கொண்டாள்.

“அப்படியா-க்கா?” என்று சிரித்தான்.

“எனக்குத் தெரிஞ்சே, ஒன்றரை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கா? எப்போ, எதனால லவ் வந்ததுன்னு கேட்டா… சொல்லவே மாட்டா. இப்பவாவது சொல்லேன் தாரா”

சாரு இப்படிக் கேட்பது, இது முதல் முறையல்ல! இந்தக் கேள்வியை எத்தனை முறை சாரு கேட்டாலும், தாரா மௌனத்திற்குள் மறைந்து கொள்வாள்.

மௌனம் பதிலில்லை. பதில் வேறு இருக்கிறது. ஆனால் அந்தப் பதிலைச் சொல்ல முடியாது.

முடியாததை, மெல்லிய முறுவல் கொண்டு சமாளித்துக் கொள்வாள்.

இப்போதும் சமாளிக்கிறாள்.

“சரி விடு, அவரோட ஜாப் என்னக்கா?” என்று ஜெகன் கேட்டான்.

“பாலிசி அனலிஸ்ட்”

“பா.. பாலிசி” என்று ஜெகன் சிரிக்க ஆரம்பித்தான்.

“ஏன் சிரிக்கிற ஜெகன்?” என்று தாரா பாவமாகக் கேட்டாள்.

“இல்லை. நீ டாக்டர்… அவர்… பாலிசி அனலிஸ்ட்… எப்படி ரெண்டு பேருக்கும்?” என்று மேலும் மேலும் சிரித்தான்.

“இதுல சிரிக்க என்ன இருக்கு? போதும் ஜெகன்” என்றவளின் குரலில் கோபம் இருந்தது.

“ஓகே ஓகே…ஸாரி” என்றவன், அவள் கோபம் கண்டு, “அவரை அவ்வளவு பிடிக்குமா??” எனக் கேட்டான்.

காதலின் ஆழம் உணர்த்திடும் அழுத்தமான தலையசைப்புகள் தாரா தந்தாள்.

“ஏன்-க்கா?”

“எனக்கும் பதில் தெரியனும். அந்த ஆக்டிவிஸ்ட்ட ஏன் அவ்வளவு பிடிக்கும்னு?” என்ற சாருவின் குரலில் ஆர்வம் மிகுந்திருந்தது.

“ஆக்டிவிஸ்ட்டா? பாலிசி அனலிஸ்ட்-ன்னு சொன்னீங்க” என்ற ஜெகனின் குரல் பேதம் காட்டியது.

“அதுவு‌ம்… ஆக்டிவிஸ்ட்டும்” என்று சாரு சொன்னாள்.

அத்தனை நேரம் ஜெகன் முகத்தில் இருந்த மலர்ச்சி, அப்படியே மறைந்தது.

ஜெகனின் முக மாற்றத்தை, தாரா கவனித்தாள்.

‘ஏன் பிடிக்கிறது?’ என்று கேள்வியை ஜெகன் திரும்பக் கேட்கவில்லை.

“அக்கா, இதுல ஜூஸ் இருக்கு. அம்மா கொடுக்கச் சொன்னாங்க” என்று பேச்சை மாற்றினான்.

“ஜெகன்…” என்று தயக்கத்துடன் தாரா அழைத்தாள்.

“வீட்ல சொல்ல மாட்டேன்” என்றவன், “வரேன் சாரு-க்கா” என்று சொல்லி வெளியே சென்றான்.

அவன் சென்றபின்,

ஜெகனைச் சமாளித்தாயிற்று என்ற உணர்வில், “உஃப்” என்று சொல்லி, சாருவைப் பார்த்தாள்.

‘இது தேவையா?’ என்ற கேள்வியுடன் சாரு பார்த்தாள்.

“கொஞ்சம் பார்த்துப் பேசியிருக்கனும். உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சது, இப்போ ஜெகனுக்கும் தெரிஞ்சிடுச்சி” என்று கவலைப்பட்டாள்.

“ஒன்னு சொல்லட்டுமா? நீ தேவாவை லவ் பண்றது பாபிக்குத் தெரியும்”

“தெரியுமா? எப்படி??”

“நீ தேவாவைப் பார்க்கிறதை… யாராவது பார்த்தாலே போதும். இப்படித்தான் சொல்வாங்க”

தாராவால் சாருவைப் பார்க்க முடியவில்லை.

“தாரா, எனக்கென்னமோ தேவா சரியான சாய்ஸ் இல்லையோன்னு தோனுது”

“தேவா ரொம்ப நல்லவன் சாரு”

“கேள்வி… அவன் நல்லவனா? இல்லையாங்கிறது? கிடையாது. அவனுக்கு உன்னை பிடிக்குமா? பிடிக்காதா? அதுதான்”

“நான் பேசினா பிடிக்கும் சாரு”

“அப்போ பேசு”

“டு டைம்ஸ் பேச டிரை பண்னேன். பட் பேச முடியலை”

இரண்டு முறை, இவளால் பேச முடியவில்லையா? இல்லை, இவளைப் பேச அவன் விடவில்லையா? என்ற சந்தேகம் சாருவிற்கு வந்தது.

“தாரா… அவன்… ” என்று தொடங்கிய போதே,

“சாரு, எனக்குத் தேவாவை ரொம்ப பிடிக்கும்” என்று முடிவாய் சொன்னாள்.

“ஏன் பிடிக்கும்னு கேட்டா? காரணம் சொல்ல மாட்டிக்க. சும்மா சும்மா இதையே சொல்லாத” என்று கடுமையாகச் சொன்னாள்.

“ஸாரி சாரு”

“சரி, இன்னைக்காவது பேசு” என்றாள்.

தாரா சரியென்று தலையாட்டியதும், சாரு அறையை விட்டுச் சென்றாள்.

அவள் சென்றதும்,

‘அச்சோ’ என்று உடல்மொழியுடன் நாற்காலியில் அமர்ந்தாள்.

நேற்று பாபி பேசியது வரை தன்னிடம் சொல்லியவளிடம், நெஞ்சத்தில் வாழும் காதலுக்கான காரணம் சொல்ல இயலவில்லையே! என வருந்தினாள்.

ஜெகன் கேட்ட, ‘நீ மட்டும்தான் லவ் பண்ணறியா?’ என்ற கேள்வியில் உண்மை இருந்ததால், அது உள்ளத்தை உறுத்தியது.

சட்டென அலைபேசியை எடுத்தாள். தான் அனுப்பிய ‘குட்மார்னிங் மெசேஜ்-ஐ’ பார்த்திருக்கிறானா? எனப் பார்த்தாள்.

அவன் சொன்னதைக் செய்திருந்தான்.
அதாவது பார்க்கவேயில்லை!

இதயம் கவல் கொண்டு, துடித்து துடித்துக் களைப்படைந்தது.

செவிப்பேசி வழியே த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலை ஓட விட்டாள்.

இரண்டு முறைக் கேட்ட பின்பு, இதயம் முறையாகத் துடிக்க ஆரம்பித்தது.

****

சென்னையின் நெருக்கடியான ஒரு பகுதி,

மதியம் 2:30க்கு கிளம்பி, தாரா அந்த இடத்திற்கு மூன்று மணிக்கு வந்திருந்தாள். அந்தப் பகுதியில்தான் தேவா வாசம் செய்கிறான்.

காரிலிருந்து இறங்கும் போதே,

“அக்கா, இங்க பார்க் பண்ண முடியாது. வேற ரோட்ல பார்க் பண்றேன். நீங்க பேசிட்டு வந்து கால் பண்ணுங்க, நான் வந்திடுவேன்”

“ம்ம்ம் சரி கோபி” என்றாள்.

கார் கிளம்பியது.

சாலையை ஒட்டியவாரு இருந்த, ஒரு பழைய கட்டிடம். ஆதலால் கொஞ்சம் அழுக்காக இருந்தது.

ஐந்து அடுக்குகள் கொண்டது. ஒருமுறை கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

பின், ஒரு நபர் மட்டுமே செல்ல முடியும் குறுகலான படிக்கட்டு வழியே ஏறினாள். மூன்றாவது தளத்தில்தான் அவனது அலுவலகம் என்று தெரியும்.

மூன்றாவது தளத்திற்கு வந்ததும், ஒற்றை அடிப் பாதை போல் இருந்த நடைகூடத்தில் நடந்தாள்.

வரிசையாகச் சிறிய அறை அளவில் இருந்த கடைகள் மற்றும் அலுவலங்கள்.

அங்கே ஒரு அறையின் முன், மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர் நிற்பது தெரிந்தது.

நேராக அவர்களை நோக்கிச் சென்றாள்.

அவர்களும் இவளைக் கண்டதும்…

“அந்தப் பொண்ணு… நேத்து கேம்ப் ஆர்கனைஸ் பண்ண டாக்டர்தான?”

“ஆமா பாஸ்கர். பட் இங்க ஏன் வர்றா?”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே… தாரா அருகில் வந்திருந்தாள்.

“ஹாய் தாரா” என்று இருவரும் சொன்னார்கள்.

“ஹாய்”

“என்ன விஷயமா வந்திருக்க?”

“தேவாகிட்ட பேசணும்”

“ஃபார் வாட்? கேம்ப் பத்தியா?”

“இல்லை. இது வேற…”

“வேற கேம்ப் பத்தியா??”

“இது கேம்ப் பத்திக் கிடையாது”

“தென்… ஏதாவது டொனேஷன் கொடுக்கப் போறியா??”

“இல்லை”

“நீ எங்ககிட்ட சொல்லலாம். நாங்க ஒரு டீமா வொர்க் பண்றோம்”

“இது வொர்க் ரிலேட்டடு கிடையாது”

“தென்??”

“பெர்ஷனல்”

“பெர்ஷனலா? என்ன பெர்ஷனல்?”

“பெர்ஷனல்னு சொல்றேன். என்னன்னு கேட்கறீங்க? அண்ட் நீங்க ஏன் இத்தனை கொஸ்டின் கேட்கறீங்க?” என்று எரிச்சலடைந்தாள்.

“ஷீ இஸ் இம்பொலைட். இல்லையா பாஸ்கர்??”

“யெஸ், யூ ஆர் கரெக்ட்” – மிஸ்டர் பாஸ்கர்.

“வாட் இஸ் ராங் இன் மை ஆன்ஸர்” என்று அவள் கேட்கும் போதே இருவரும் உள்ளே சென்றுவிட்டார்கள்.

தாரா, அங்கேயே அப்படியே அழுத்தமாக நின்றாள்.

அறையின் உள்ளே…

அறை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றில் மேசை மற்றும் நாற்காலி. முக்கிய கோப்புகள் வைக்க ஒரு அலமாரி.

மற்றொரு பகுதி அவன் தங்குவதற்குப் போல… திரையிட்டு மறைத்திருந்தான்.

தேவா ஏதோ தாள்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“தேவா”

“என்ன அங்கிள்??”

“அந்த டாக்டர்…நேம் தாரா. ஷீ இஸ் வெயிட்டிங் ஃபார் யூ”

அவனது விழிப்பார்வை சொன்னது, அவள் வரவை அவன் எதிர்பார்க்கவில்லை என்று!

“எதுக்குன்னு கேட்டா ரொம்ப ரூடா ஆன்ஸர் கொடுக்கிறா”

“ரூடாவா? தாராக்கு அப்படிப் பேசத் தெரியாது அங்கிள்”

“ஆர் யூ கைய்ஸ்(guys) இன் லவ்?”

“அய்யோ ஆண்ட்டி, அப்படியெல்லாம் இல்லை”

“ஓகே, உனக்கு இல்லை. பட் அந்தப் பொண்ணு??”

“மே பி”

“மே பி-ன்னா?”

“ம்ம்ம், செகண்ட் டைம் மீட் பண்றப்ப ஐ கெஸ்டு. நேத்து பேசினப்பவும் அப்படித்தான் தெரிஞ்சது”

“ஏன் இதெல்லாம் அலோவ் பண்ற?”

“அங்கிள், நான் அலோவ் பண்ணலை. டீசென்ட்டா அவாய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அது அவங்களுக்குப் புரியுதா? இல்லையான்னு தெரியலை. லெட்ஸ் ஸீ”

“ஓ!”

“இப்படிச் சொல்லிப் புரியலைன்னா… ஸ்டராங்கா ‘நோ’-ன்னு முகத்துக்கு நேர சொல்லிருவேன்”

“யூ ஆர் ஸோ மெச்சூர்டு யங் மேன். இல்லையா பாஸ்கர்??”

“யெஸ், யூ ஆர் கரெக்ட்” – மிஸ்டர் பாஸ்கர்.

“அதை விடுங்க… நான் பார்த்துக்கிறேன். இதுல நாலு செக் இருக்கு. இதை வச்சி ஆர்ட் காலேஜ் பசங்க பீஸ் பே பண்ணுங்க. ரீமைனிங்…” என்று தன் கார்டை எடுக்கும் போதே,

“உன் கார்டு வச்சிக்கோ. நாங்க எங்க பென்ஷன் அமௌன்ட்டை யூஸ் பண்ணிக்கிறோம்”

“தேங்க்ஸ் ஆண்ட்டி. அப்புறம் நான் ஒரு த்ரீ டேய்ஸ் இங்க இருக்க மாட்டேன்”

“ஏன் கோயம்பத்தூர் போறியா??”

‘கோயம்பத்தூர்?’ என்ற ஊர்ப்பெயர் கோடி கோடி உணர்வுகளைக் கொண்டு வந்து மனதில் கொட்டியது.

“தேவா”

“இல்லை அங்கிள். ஜாப் ரிலேட்டடு பீல்ட் வொர்க்”

“ஓகே யங் மேன். டேக் கேர்”

“ஷூயர் ஆண்ட்டி. இப்போ நான் போய் பேசிட்டு வந்திடுறேன்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வரும்வரை தாராவின் பொழுதுகள்,

மாறி மாறிச் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்துகளில் மனம் லயித்து இருந்தன.

பயணச்சீட்டே இல்லாமல், அந்தப் பேருந்துகள் அவள் எண்ணத்தை எங்கெங்கோ பயணிக்கச் செய்தன.

வெளியே வந்தவன், “தாரா” என்று அழைத்தான்.

திரும்பியவுடன், “ரொம்ப நேரமா வெயிட் பண்றேன் தேவா” என்று குறையாகக் சொன்னாள்.

“நான்தான் சொன்னேன்ல… மோஸ்ட்லி பிஸியா இருப்பேன்னு” என்றான் தன் மேல் குற்றமில்லை என்பது போல்!

“ஐ அம் ஸாரி”

“இட்ஸ் ஓகே. பேசணும்னு சொன்னீங்கள… பேசுங்க”

“இங்க வேண்டாம் தேவா”

“அப்புறம் எங்க?”

“அப்படியே ஒரு ரைடு போய்கிட்டே பேசலாமா?”

“ரைடு?? யூ மென்ட் பைக் ரைடு?? சான்ஸே இல்லை”

“நாட் பைக் ரைடு. பஸ்ல போகனும்”

“பஸ்லயா?? ஆர் யூ ஷூயர்?”

“யெஸ், ஐ அம் டேம்ன் ஷூயர்”

அவன் தயங்கினான்.
ஆனால் வெளியில் சென்று பேசுவது நல்லது என்று தோன்றியது.

எனவே “சரி வாங்க” என்றான்.

அவளை முன்னே செல்லச் சொல்லி, பின்னே சென்றான்.

படிக்கட்டுகளில் இறங்கும் போது,

“தாரா தாரா” என்று இருமுறை அழைத்தான்.

அவளது கவனம் நிகழ் பொழுதில் இல்லை போல! அடுத்தப் படிக்கட்டுகளில் இறங்கப் போனாள்.

ஆனால் அதற்குள் தேவா கைப்பிடித்து நிறுத்தினான்.

சூழல் உணர்ந்து, “என்ன தேவா?” என்று கேட்டாள்

கண்களால் படிக்கட்டைக் காட்டினான். நாலைந்து நபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என்பதால், அவளை நிற்கச் செய்திருந்தான்.

அவர்கள் கடந்ததும், “ம்ம்ம் போங்க” என்றான்.

*****

இருவரும் சேர்ந்து அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர்.

நண்பகலைக் கடந்த வேலை என்பதால்,
ஆதவன் மட்டும்தான்.
ஆட்கள் இல்லை.
ஒரு பேருந்து வந்து நின்றது.

“பர்டிக்குலரா எதாவது பிளேஸ் போகணுமா தாரா?”

“இல்லை. அப்படி…” என்று வாக்கியத்தை முடிக்கும் முன்பே,

“அப்போ ஏறுங்க…” என்று நின்ற பேருந்தில் ஏறினான்.

அவளும் ஏறிக் கொண்டாள்.
பேருந்து புறப்பட்டது.

நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. அவன் ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

அவளைப் பார்த்து, முன் இருக்கையைக் கை காட்டினான்.

அவளும் அமர்ந்து கொண்டாள்.

தாராவிற்குப் பேருந்தின் ஒலி கேட்கக் கேட்க, மனதில் வலி கூடியது.
முகம் அமைதியைக் காட்டியது.
மனம் அலைக்கழிந்து கொண்டது.

“தாரா… ஏதோ பேசணும்னு…” என்று அமைதியைக் கலைத்தான்.

பின் இருக்கையில் இருப்பவனைப் திரும்பிப் பார்த்தாள்.

அதற்குள் நடத்துனர் வந்தததால், இரண்டு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டான்.

எதையும் யோசிக்காமல், “அந்த டிக்கெட் தர்றீங்களா??” என்று கேட்டாள்.

‘எதற்கு தேவையில்லாத இந்த யாசிப்பு?’ என அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

“தேவா”

“டீடீஆர் வந்தா தேவைப்படும் தாரா”

“அப்போ இறங்கிறப்போ??”

“அது வரைக்கும் நீங்க கேட்டது நியாபகம் இருந்தா தர்றேன்”

மீண்டும் முன்னே திரும்பி அமர்ந்து கொண்டாள்.

போயொழிந்த தினங்களின் நினைவினில் உறைந்தவள், போய்க் கொண்டிருக்கும் கணங்களை உணரவில்லை.

“தாரா” என்றான்.

திரும்பி, “தேவா, நான் இறங்கிக்கவா??” என்றாள்.

“பேசலையா??”

‘பேச முடியலை’ என்ற அர்த்தத்துடன் ஒரு தலையசைப்பு, அவளிடம்.

“ஓகே. பட் இன்னொரு நாள் இப்படிக் கூப்பிடாதீங்க, கண்டிப்பா வர மாட்டேன்” என்று தன் எண்ணத்தைச் சொன்னான்.

எதையும் கவனத்தில் ஏற்கும் நிலையில் அவளில்லை.

அடுத்த நிறுத்தம் வந்ததும் இதயத்தில் இருப்பதை இறக்கி வைக்காமல், இறங்கிக் கொண்டாள்.

இருக்கையில் அமர்ந்தபடியே அவன் பயணத்தைத் தொடர்ந்தான்.