LogicIllaMagic24Final

LogicIllaMagic24Final

மேஜிக் 24 (Final)

 

“பேசாம இவங்க விருப்பப்படி…மத்த ரெண்டு கல்யாணத்தை மட்டும் செஞ்சுடுவோம்! என்ன சொல்றீங்க?” ஜெகந்நாதன் கேட்க

நிரஞ்சன் நந்தனா அதிர்ச்சியில் விழிக்க, கண்ணனோ “ஆமா அவதான் படிக்க ஆசைப்படறா. உங்க புள்ளைக்கும் டிரஸ்ட் தான் வாழ்க்கைனு சொல்லிட்டான். நீங்க சொன்னபடியே செய்வோம்!” முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள

‘அடேய் என்னடா வாயே தொறக்காம நிக்குற? இதான் சாக்குன்னு மறுபடி மரத்துல ஏறபாக்குறியா?’ தன்னவனை நந்தனா முறைக்க

‘இவ பார்வையே சரி இல்ல! இதான் சாக்குன்னு ஆஸ்திரேலியா போக பிளான் போடறாளோ ? ஊட்டி பிளான் போட்டா சமாளிச்சே! வேலையை விட்டு ஆஸ்திரேலியப்போய் இவளை காபந்து பண்ண வாய்ப்பே இல்ல ராஜா! அதிரடியா எறங்கு!’

“ப்ளீஸ்!’ என்று கத்தியவன், நந்தனாவை இழுத்துக்கொண்டு பெற்றோர் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்துவிட்டான். இதில் பெற்றோ அருகில் நின்றிருந்த நிவேதா, “டேய் என்னங்கடா என் கால்ல?” அலறி அடித்துக்கொண்டு விலகி நிற்க

“எங்களுக்கும் இன்னிக்கே கல்யாணம் பண்ணிவச்சுடுங்க ப்ளீஸ்! ப்ளீஸ்! “ நிரஞ்சன் கெஞ்ச, நந்தனா மெளனமாக எதோ யோசனையில் இருக்க,

“ஏய்! என்னடி யோசிக்கிறே?” நிரஞ்சன் முறைக்க

“ம்ம்? ஆமா ஆமா எங்களுக்கும் கல்யாணத்த பண்ணி வச்சுடுங்க!” நந்தனா உணர்ச்சியே இல்லாமல் சொல்ல

“என்னடி? கயட்டிவிட பிளான் போட்ரியா?” நிரஞ்சன் அவளை மிரட்க்ஷியுடன் பார்க்க

“இல்ல…”

“அப்புறமென்ன?”

“அதில்ல…இதுக்கே இவங்களுக்கு இவ்வளவு கோவம் வருதே…ஆஸ்திரேலியால அப்பளை பண்ணது ஆன்லைன் மட்டுமில்ல, வருஷத்துக்கு 3 மாசம் அங்க போயி தங்கி படிக்கணுமுன்ற விஷயத்தை சொல்லாம மறைச்சதை சொன்னா? நான் அடுத்தமாசமே அங்க போயாகணுமே? பேசாம அதுக்கும் சேர்த்து சாரி கேட்டுடவா?” அப்பாவியாகக் கேட்க

கோவமாக எழுந்து அமர்ந்த நிரஞ்சன் “என்ன ஆஸ்திரேலியா போறியா?”

அரங்கனை போலக் கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்துக்கொண்டு நந்தனா “ஆமா! பின்ன போகாம? என்னதான் ஃபாரீன் போய் படிசீங்களோ?” நக்கலாகக் கேட்க

“”என்னை பார்த்தா கேணைக்கிருக்கன்னு நெத்தில எழுதி ஒட்டிருக்கா?” அவன் முறைக்க

‘அத சொல்லியா தெரியணும்?”
“…”

“கேட்கறேன் என்னடி போஸ்கொடுத்து படுத்துகிட்டு இருக்கே?” நிரஞ்சன் அவள் காலில் அடிக்க

“டேய் என்னடா அடிக்கிறே?” கோவமாக எழுந்தவள் அவள் தோளில் அடிக்க, இருவரும் மாறிமாறி சிறுபிள்ளை போலச் சண்டையிட, அந்த அறையை விட்டு மற்றவர்கள் வாயைப்பொத்தி சிரித்தபடி வெளியேறியதை அவர்கள் கவனிக்கவில்லை.

வெகுநேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால், நிவேதா அறையினுள் சென்று பார்க்க, அங்கு அவர்களோ கொஞ்சிக்கொண்டிருக்க,

“என்னடா? எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க ! நாளைக்கு எவ்ளோ வேணுமோ கொஞ்சி தொலைங்க மரியாதையா இப்போ வெளில வாங்க !” நிவேதா முணுமுணுத்துக்கொண்டிருக்க, உள்ளே எட்டிப் பார்த்தபடி வந்த சற்று வயது முதிர்ந்த உறவுக்கார பெண்கள் இருவர், சிரித்துவிட்டு “என்ன இது பையன் ரூம்ல கல்யாண பொண்ணு? “

“அதானே ! என்னதான் லவ் மேரேஜ்ன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்ன இது?” வம்பு பேசத் துவங்க,

பதறியடித்துக்கொண்டு எழுந்த நந்தனா, நிவேதாவுடன் குடுகுடுவென மணமகள் அறைக்கு ஓடிவிட, நிரஞ்சனோ,
“பையன் ரூம்ல லேடிஸ்க்கு என்ன வேலை? ம்ம்ம் கிளம்புங்க !” என்று மிடுக்காகச் சொல்ல,

அவ்விருபெண்களில் ஒருவரோ, “டேய் நான் உன் பாட்டிடா படவா!…” அவன் கதை பிடித்துத் திருகினார் மைதிலியின் சித்தி, நிரஞ்சனின் பாட்டி.

“ஸ்ஸ்ஸ் சும்மா விளையாட்டுக்கு” அசடு வழிந்தான்.

மணமகள் அறைக்குச் சென்ற நிவேதாவோ, நந்தனாவிடம், “ரொமான்ஸ் பண்ண ஒரு நியாய தர்மம் வேண்டாமா? நாங்க வெளில வந்ததையும் கவனிக்கல…நேரமானதையும் கவனிக்கல…”

“இல்ல…” அசடு வழிந்து வெட்க புன்னகையை உதிர்த்து முகத்தை மூடிக்கொண்டாள் நந்தனா.

“அப்பாடா என் செல்லத்துக்கு வெட்க பட தெரியுமா ?” காஞ்சனா வம்பிழுக்க, காஞ்சானா நிவேதா என இருவரும் மாறிமாறி கேலிபேசியத்தில் முகப்பூச்சு இல்லாமலே வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

மறுநாள் அதிகாலை, ஒரே மேடையில் மூன்று மண்டபங்கள் அமைக்கப் பெற்று, முதலில் கிரிதர் காஞ்சானா, நடுவில் நிரஞ்சன் நந்தனா அவர்களை அடுத்து ஸ்ரீராம் நிவேதா ஜோடி எனத் திருமண சடங்குகள் ஒவ்வொன்றாய் நடக்கத் துவங்கியது.

முகூர்த்த புடவையை முதல் முறை பார்த்த நந்தனா கண்கள் கலங்கிவிட, அதை ஆசையாய் வருடிக் கொடுத்துப் புன்னகைத்துக்கொள்ள,

அதே அறையில் அலங்காரம் செய்துகொண்டிருந்த காஞ்சனா “பார்த்தியா நிரஞ்சனுக்கு உன்மேல எவளோ காதல்னு. அன்னிக்கி புடவையைப் பார்த்திருந்தாலே உனக்கு அவன் காதல் புரிஞ்சிருக்கும். நீதான் புடவையை ஏற்றெடுத்தும் பாக்கல. நான் ப்ளௌஸ் தைக்க கொண்டு வந்தபோவும் நீ இண்டேரெஸ்ட் காட்டல”

“…” மௌனமாக காஞ்சனாவை பார்த்தவள் ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டாள்

“ஹே என்ன மா ?” காஞ்சனா பதற

“நீ மட்டும் இல்லைனா இது எதுவுமே நடந்திருக்காது. “

“நான் என்ன பண்ணேன் மா ?”

“நீ அன்னிக்கி ஹோட்டலுக்கு வரவே தானே இதெல்லாம்…தேங்க்ஸ் அத்தை” கண்கள் கலங்கிட காஞ்சனாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அங்கு நின்றிருந்த நிவேதாவும் “நானு!” என்றபடி பெண்கள் இருவரையும் சேர்ந்தாற்போல் அணைத்துக் கொள்ள,

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த சரஸ்வதியோ “சுத்தம்! அங்க உங்கள தயாராகச் சொல்லி சாஸ்திரிகள் சொல்லிட்டு இருக்கார் இங்க என்ன கட்டிபுடிச்சு கொஞ்சலஸ்? ம்ம்…சீக்கிரம் !” சிரித்தவாறு ‘என்ன பசங்களோ’ என்றபடி சென்றுவிட்டார்.

நிரஞ்சன் ஆசையாய் வடிவமைத்த புடவையில் அழகு புதுமையாய் நின்றவள் தலைப்பைப் பார்த்துப் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தாள்

புடவை முழுவதும் நேர்த்தியான வேலைப்பாடுகள் நிறைந்திருக்க, தலைப்பில் தங்கச் சரிகையில் நிரஞ்சன் நந்தனாவின் பெயர்கள் நேர்த்தியாக எழுதப்பட்டு, சுற்றிலும் சின்ன சின்ன மலர்களும், இருதய வடிவங்களும் சூழ, உலகில் உள்ள பல மொழிகளில் காதல் என்ற வார்த்தை புடவை பார்டரில் எம்ப்ராய்டரியில் எழுதி இருந்தது.

தான் அவள்மேல் கொண்ட காதலை ஒவ்வொரு இழையிலும் அழகாய் நேர்த்தியாய் அவன் வெளிப்படுத்தி இருந்தான்.

மணப்பெண்கள் மூவரும், மணமகளுக்கே உரிய அழகுடனும், நாணத்துடனும் மேடைக்கு வர, அவர்களுக்காகவே காத்திருந்த அவர்களின் இணைகள் கண்ணில் காதலுடன் அவர்களைக் கண்களால் வரவேற்றனர்.

புடவையைப் பார்த்துப் பார்த்து உணர்ச்சி மிகுதியிலிருந்த நந்தனாவின் கண்கள் கலங்கியிருக்க, “என்ன பேபி ?” மெல்லிய குரலில் அவள் காதருகே குனிந்து நிரஞ்சன் கேட்க

அவன் மட்டும் கேட்கும் குரலில் “ஐ லவ் யு ரஞ்சன்!” என்றவள் அவன் கையை பற்றி முத்தமிட, மண்டபமே சிரிப்பலையில் மூழ்கிட, இவள் எதிர்பாரா காதல் மழையில் நனைத்தவனோ

“லவ் யு வாலு” என்று அவள் கையில் முத்தம் தர

“அதுக்கு ராத்திரி நேரம் இருக்குடா. இப்போவே ஸ்டார்ட் பண்டீங்க ?” ஸ்ரீராம் உரக்க கேலிப்பேச, நிரஞ்சனோ “இருக்கு மச்சி ஆனா பொறுமை தான் இருக்காதுபோல” என்று உரக்கவே பதில் தர, மீண்டும் மண்டபமே சிரிப்பலையில் மூழ்கியது.

பிள்ளைகள் அடிக்கும் கூத்தில் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாய் பெற்றோர்களும் சிரிக்க., கைகளால் பாவனையாய் மூன்று ஜோடிகளுக்கு ஒன்று சேர்ந்தார் போல் திருஷ்டி கழித்தார் சரஸ்வதி.

நாதஸ்வரம் மேளம் முழங்க, அனைவரும் மனதார வாழ்த்த மூன்று ஜோடிகளும் அமர்ந்திருந்த வரிசையில், பிரம்ம முகூர்த்தத்தில், தங்கள் இணையின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு திருமணப் பந்தத்தில் முதல் அடியை எடுத்து வைத்தனர்.

திருமண உபசரிப்பில் மனதும், விருந்தில் வயிறும் நிறைந்த விருந்தினர்கள் தம்பதிகளை மனதார வாழ்த்தி விடைபெற, நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டும் அமர்ந்திருக்க,

வைஷாலிக்கு இந்தத் திருமண விருந்தினர்களிலிருந்து வரன் வந்திருப்பதாகவும், கூடிய விரைவில் திருமணம்பற்றிப் பேசப்போவதாகவும் சொல்லி ஸ்ரீதர் தெரிவிக்க, பிள்ளைகள் அனைவரும் வைஷாலியை கேலிசெய்ய துவங்கினர்.

மனநிறைவாய் உணர்ந்த மைதிலி, “பெருமாளுக்கு எவளோ நன்றி சொன்னாலும் போதாது ! வைஷுவை நெனச்சு எனக்கு மனசு சங்கடமா இருந்துது ஸ்ரீதர். இப்போ தான் மனசு நெறைஞ்சுருக்கு.” மனம் நெகிழ

“ஒரு கல்யாணத்துல இன்னொரு கல்யாணம் முடிவாகும்னு பெரியவங்க சும்மாவா சொல்லிருக்காங்க” ஸ்ரீதர் சொல்ல

“ஒரு கல்யாணமா? எங்கண்ணனால இன்னிக்கி நடந்த மூணு பிளஸ் நெக்ஸ்ட் வைஷு கல்யாணம்!” நிவேதா சிரிக்க

“ஆமா ஒரே கல்யாண மயம்!” காஞ்சனாவும் சேர்ந்துகொண்டாள்.

இரவுப் பெண்கள் தயாராகிக் கொண்டிருக்க நிவேதா எதோ மைதிலியிடம் வாதிட்டுக் கொண்டிருக்க, சரஸ்வதி அன்பாய் “என்னமா?” என்று கேட்க

“நீங்களே பேசிக்கோங்க இவகிட்ட. ரூம்க்கு போகமாட்டாளாம்.” மைதிலி சரஸ்வதியிடம் புகார்வாசிக்க

“ஏண்டா கண்ணா இவளோ நேரம் நல்லாதானே இருந்தே இப்போ என்னாச்சு?” சரஸ்வதி வாஞ்சையாய் கேட்க

“ராம் சொல்றான் ரூம்ல போயிருக்க மாதிரி இருக்கு சீக்கிரம் துணைக்கு வான்னு! எனக்கு பயமா இருக்கு. இதெல்லாம் நாளைக்கு நம்ம வீட்ல பாத்துக்கலாமே… நான் இன்னிக்கி இங்கேயே படுத்துக்குறேன் ப்ளீஸ்” நிவேதா அழும் நிலையில் கெஞ்ச

“அவன் பொய் சொல்றான் நிவி. அவனை விடவா பெரிய பேய் உலகத்துல இருக்கு ?” நந்தனா நாத்தனாரின் கண்களைத் துடைத்து விட

காஞ்சனாவும் “அவன் அப்படிதான் ஏதாவது சும்மா விளையாடுவான், நீ போய் நாலு அடிப்போடு வால சுருட்டிட்டு இருப்பான் பாரு.”

சரஸ்வதியோ கைப்பேசியில் மகனை அழைத்து எதோ சொல்ல, அலறி அடித்து ஓடிவந்த ஸ்ரீராம் நிவேதா காலில் விழாத குறையாய் அவளை அழைத்துச் சென்றான்.

காஞ்சனாவும் கிரிதரன் அறைக்குச் சென்றுவிட, நந்தனா மட்டும் தயக்கத்துடன் யோசித்திருக்க, பதற்றமாய் உள்ளே வந்த நிரஞ்சன்,

“அம்மா ஒரு அர்ஜென்ட் கேஸ் நானும் அப்பாவும் ஹாஸ்பிடல் போகணும்…” அன்னையிடம் சொன்னவன் நந்தனாவை தயக்கத்துடன் பார்க்க

“போயிட்டு வாங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” முகத்தில் எந்தவித கோவமோ வருத்தமோயின்றி புன்னகையுடன் அவள் சொல்ல,

அவளை அணைத்துக்கொண்டவன் தன்னவள் நெற்றியில் முத்தமிட்டு, “வரேன் பேபி நீ தூங்கி ரெஸ்ட் எடு நாங்க வர கண்டிப்பா நேரமாகும்.”

மைதிலி சரஸ்வதியிடம் தயங்கியபடி விளக்கம் கொடுக்க எத்தனிக்க “நான் எதுவும் நெனச்சுக்க மாட்டேன் பா. டாக்டர்ஸ் கடவுள் மாதிரி. அவங்களுக்கு குடும்பம் ஒரு கண்ணுன்னா அவங்க தொழில் ஒரு கண்ணு.” என்று அவரை சமாதானம் செய்தார்.

திருமணம் முடிந்ததும் அவன் கனவினை தன்னுடைய தாக ஏற்றுக்கொண்ட நந்தனா, சிறிதும் வருந்தவில்லை. முடிந்தவரை அவனுக்காக விழித்திருந்தவள் களைப்பில் உறங்கிப்போனாள்.

மறுநாள் சுகன்யா மயூர விக்கி சித்தார்த் என நண்பர்கள் சூழ பேசிக்கொண்டிருந்தவள் மனமோ அவர்கள் சென்ற வேலை வெற்றிகரமாக நடந்திருக்க வேன்றுமென்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தது.

மண்டபத்திலிருந்து புறப்பட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்ட பின்பும் நிரஞ்சன் ஜெகநாதன் வீடு வந்து சேர வெகுநேரமானது.

இரவு நிரஞ்சன் அறைக்குச் சென்றவள், னைத்தும் நல்லதாக நடந்ததை கேட்டறிந்த பின்னரே நிம்மதியானாள்.

“பேபி நீ மெத்தையைப் பார்த்து எதாவது சொல்லுவேன்னு பாத்தேன்.” அவன் ஏக்கமாகக் கேட்கவும் குனிந்து மெத்தையைப் பார்த்தவள்

“இது என் பெட்டில…” சந்தோஷமான அதிர்ச்சியில் கேட்க

“உன் பிரெண்ட்ஸ் நாம சேர்ந்து இதுல வாழ்க்கையை துவங்கனும்னு கொடுத்தாங்க அதான் இதை மாத்தினேன்.”

“ம்ம் மறக்கமாட்டேன் இதைத்தான் அணிக்கு கொடுத்துட்டு நக்கலா மெசேஜ் செஞ்சீங்க ! “ உதட்டைப் பிதுக்கிப் புகாரவாசிக்க,

அவள் தலையைக் கலைத்தவன் “என் லூசு பொண்டாட்டி நான் அன்னிக்கி உனக்கு மறைமுகமா சொல்ல முயற்சி பண்ணேன். நீ மரமண்டைனு எனக்கு தெரியுமா சொல்லு?” அவள் மூக்கை பிடித்துக் கொஞ்ச

‘மரமண்டையா? எனக்கு இதுவும்வேணும் இன்னுமும் வேணும்!’

“என்ன செய்ரது என் புருஷன் அரைலூசுன்னு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன் நானும் லூசுதான்” அவளும் அவன் மூக்கை பிடிக்க

‘அடிப்பாவி’

“இதுக்குதான் வயசுல சின்னப் பொண்ண காதலிக்கக் கூடாது, நான் பத்தடி பாஞ்சா நீ பதினாறடி பாயிரே.” கிண்டலாய் சொன்னவன், “ஆமா உனக்கு எப்போ என்னை பிடிச்சது ?” ஆசையாய் அவள் முகத்தையே பார்த்திருக்க,

சில நொடி யோசித்தவள் “தெரியலையே, கொஞ்சம் கொஞ்சமா தோணிச்சுன்னு வச்சுக்கோங்க. உங்களுக்கு எப்போ என்னை பிடிச்சது?”

‘உன்கிட்ட ஆயிரம் கேள்விகள் இருக்கு, என்கிட்டே திட்டவட்டமான ஒரு பதிலும் இல்லையே!”

அவள் மடியில் படுத்துக்கொண்டவன், மெல்லப் பேசத்துவங்கினான்,

“எனக்கும் தெரியலடா. எனக்கே தெரியாம வந்ததுன்னு வச்சுக்கோயேன். உண்மையைச் சொன்னா உன்மேல மட்டுமில்ல உங்க எல்லார்மேலயுமே எனக்கு பிரியம் வந்தது. யாரையும் இழக்க கூடாதுன்றதுல மட்டும் கவனமா இருந்தேன்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவனைத் தள்ளிவிட்டு எழுதவள்

“அப்போ என் மேல லவ் வரல? சும்மா புருடா விட்ருக்கீங்க! எப்போவும் போல அப்படித்தானே?” கோவமாய் கண்கள் கலங்க முறைக்க

அவள் நெற்றியில் செல்லமாய் தட்டியவன் “அடியே லூசாடி நீ? நான் பேசி முடிக்கர்துக்கு முன்னாடியே நீயா எதுக்கு கண்டதை யோசிக்கிறே?”

அவளோ முறுக்கிக்கொண்டு திரும்பிக்கொள்ள, அவளை தன்புறம் திரும்பியவன்,

“ப்ளீஸ்…பொறுமையா கேளு! எனக்காக நீ அமைதியா இருந்தது, எல்லாருக்காகவும் யோசிச்சு உன் வாழ்க்கையே மாறக்கூடிய வாய்ப்பிருந்தும் கல்யாணத்துக்கு சம்மதிச்சது, நம்ம டிரஸ்ட்காக உன்னாலான உதவியை செஞ்சது எல்லாமே திரும்பத் திரும்ப என்னை உன்கிட்ட ஈர்த்தது. காதலை காதல்னு உணரத்தான் எனக்கு தெரியலை.”

அவளை வலுக்கட்டாயமாகக் கட்டிலில் அமரவைத்தவன் மீண்டும் அவள் மடியில் தலைவைத்து,

“நீ உன் நண்பர்களோட ஊட்டிப்போறேன்னு சொன்னபோவும், சித்து பத்தி பேசும்போதும் எனக்கே தெரியாம பயங்கர பொறாமை வந்தது தெரியுமா? வேலையே ஓடல ஒரே ஆத்திரமா வந்தது. சுகன்யாவுக்கு போன் பண்ணி சித்து நம்பர் வாங்கி…அப்ப்பா எவளோ மண்டை காஞ்சேன் தெரியுமா” அவன் அவளை ஏக்கமாய் பார்க்க

அவன் தலையை மெல்ல கோதியவள், “சாரி! எனக்கு இதெல்லாம் புரிஞ்சுக்க தெரியலை…” வருந்தினாள்

“விடு பேபி…சரி கேளேன்… எப்படியாவது என் கண்பார்வைலயே உன்னை வச்சுக்கணும்ன்றதுல மட்டும் ரொம்ப உறுதியா இருந்தேன். அதான் உண்ட வண்டி வண்டியா வாங்கிகட்டிட்டாலும் பரவால்லைனு ஊட்டிக்கு வந்தேன். என்ன… அப்பாவும் இந்த பைத்தியக்காரத் தனமெல்லாம் தான் காதல்னு உணரமுடியலை.

ஊட்டில கூட எனக்குக் கொஞ்சம் மனசு குழப்பமாத்தான் இருந்துது ஆனா உன்னை தொலைச்சுட்டு தேடினப்போ, ட்ரெக்கிங் போனப்போ எனக்கே தெரியாம உன்மேல பைத்தியமாக ஆரம்பிச்சுட்டேன்… நாம அங்கேந்து கிளம்பரத்துக்கு முன் ராத்திரி ஒரே ஷால்வாயில உன்கூட நின்னுட்டு வானத்தை பார்த்துட்டு இருந்தப்போவே என் காதலை நான் உணர்ந்துட்டேன். உனக்கும் புரிஞ்சுருக்கும்னு தப்பா நெனச்சேன்…” ஏக்கமாய் தலைகுனிந்து கொண்டான்.

அவனை அணைத்துக்கொண்டவள், “சாரி எனக்கு ஒருநாள் நீங்க என்ன விரும்பறீங்கன்னு தோணும்….அனா என்ன…அடுத்த நாளே அதை அப்படியே கவுத்துடறமாதிரி ஏதான செஞ்சு வைப்பீங்க. நான் தான் கற்பனை பண்ணிகிட்டேனு தோணும்.” அவளும் வருந்த

தன்னவளை அணைத்துக்கொண்டவன் “நான் கொண்டுவந்த முகூர்த்த புடவையை பார்த்துக்கூட உனக்கு என் மனசு புரியலையா?” ஏக்கமாக அவளைக் கேட்க,

‘நான் எங்க அத பாத்தேன்?’

“…”

“சொல்லு பேபி அதை பார்த்துமா என்காதல் புரியலை?”

“பாத்தாதானே!” அவன் அசடுவழிய

“என்ன?” எழுந்தவன் புருவம் முடிச்சிட “என்ன சொல்றே?”

“பின்ன? புடவையை அவசரமா கொடுத்துட்டு என் முகத்தைக்கூட பார்க்காம ஓடிட்டீங்க அதான்…” உதட்டைப் பிதுக்க

“அடியே லூசு நீ எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருக்கப்போ வந்து ரொமான்ஸ் பண்ண சொல்றியா? எதுக்கு என்னால உன் படிப்பு கெட்டுப்போச்சுன்னு எல்லாரும் சொல்லவா?”

‘இல்லனா மட்டும் நாங்க அப்படியே யூனிவர்சிட்டி மார்க் வாங்கிடுவோம். பாஸ் பண்ணாதே பெரிசு!’

“ஆமா நீங்க ரொமான்ஸ் பண்ணிட்டாலும்! காதலை சொல்லவே எல்லாரும் கூடிநின்னு கும்மியடிக்க வேண்டி இருந்தது” நக்கலாகச் சொல்லி அவள் சிரிக்க

“ஆமா நீதான் தைரியசாலியாச்சே! ஏன் நீ சொல்றது?”

‘நான் எப்படா சொன்னேன் தைரியசாலின்னு? நீயா நெனச்சுகிட்டா நானா பொறுப்பு?’

“…”

“என்ன யோசிக்கிறே?”

தயங்கியவள் மெல்ல “சொல்லிடலாம்னு நெனச்சேன்… ஆனா நான் லவ் பன்றேன்னு சொன்னா நீங்க என்னை சந்தற்பவாதின்னு தப்பா நெனச்சுட்டா ? என்னை வெறுத்துட்டா? அதான் பயம்…” அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு பொத்தானை உருட்டி விளையாடியபடி சொல்ல

“எப்படி கரெக்ட்டா தப்பா யோசிச்சுருக்கே?” அவன் கிண்டல் செய்ய

‘என்ன பண்ணித்தொலைக்காரது எனக்கெல்லாம் முகத்துக்கு நேரா காதலை சொன்னாலே கனவுன்னு தோணுது. இதுல நானா வந்து எங்க ப்ரொபோஸ் பண்றது!’

“தோடா! நான் லவ் சொல்லிருந்தா மட்டும் சார் என்ன பண்ணிருப்பீங்க?” அவள் புருவத்தை உயர்த்த

“கண்டிப்பா உங்கப்பா கால்ல விழுந்து….நான் பொய்ச்சொன்னத ஓத்துக்கிட்டு,… உன் கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு….” அவன் இழுக்க

“கேட்டுட்டு?” ஆர்வமாய் அவன் முகத்தைப் பார்க்க

“பின்னங்கால் பிடரியில பட ஓடியே…போயிருப்பேன்! “ உரக்கச் சிரித்தான்.

அதைச் சற்றும் எதிர்பாராதவள் மெத்தையிலிருந்த தலையணையை எடுத்து அவனை மொத்தி எடுத்துவிட்டாள்.

கொஞ்சம் ஊடல், நிறைய நிறையக் காதலும் பின் கூடலுமென, தங்கள் வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்கினர், விபத்தால் சந்தித்து, விஷமத்தால் கைகோர்த்து இப்பொழுது காதலால் இணைந்த மிஸ்டர் இம்சையும் மிஸ்ஸஸ் பேபியும்!

சுபம்

error: Content is protected !!