Eedilla Istankal

ஈடில்லா இஷ்டங்கள் – 1

ஏறுவெயில் வேளை.

அளவுக்கு அதிகமான கூட்டத்துடன் மாநகரப் பேருந்து… அசுர வேகத்தில் பறக்க நினைக்கும் இரு சக்கர வாகனங்கள்… பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்களின் வேன்கள் மற்றும் ஆட்டோக்கள்… பலதரப்பட்ட கார் வகைகள்… மேலும் பாதசாரிகள்!

இதுதான் சென்னையின் முக்கிய சாலையின் பரபரப்பான காலை நேரத்தின் முகம்!

ஏறுவெயிலின் எரிச்சல்…
கடும் போக்குவரத்து நெரிசல்…
எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் நிற்கும் மாநகரப் பேருந்துகள், பள்ளி வேன்கள் மற்றும் கார்கள்…
கிடைக்கும் இடைவெளியில் புகுந்து முன்னேறிச் செல்லும் பைக் மற்றும் ஆட்டோக்கள்…

இவை எல்லாவற்றையும் பொறுமையுடன் கடந்து, ஒரு கிளைச் சாலைக்குள் திருப்பப்பட்டது அந்த உயர்ரக கார்.

சற்று தூரத்தில் தெரிந்த போக்குவரத்து சமிக்கை சிவப்பில் இருந்ததால், கார் மெதுவாக செலுத்தப்பட்டு, சமிக்கைக்கு அருகிலிருந்த ஒரு மரத்தின் நிழலில் சென்று நிறுத்தப்பட்டது.

கூடவே, ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நின்றன.

இவ்வளவு நேரத்திற்குப் பின், இக்கணம்தான் ஓட்டுநர் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

இது எதையும் அறியாமல், காரின் பின்புறம் அமர்ந்திருந்தவள், கண்களை மூடி, கார் சன்னலில் தலை சாய்த்திருந்தாள்.

செவிப்பேசி வழியே வந்த Nat King Cole-ன் த்ரி லிட்டில் வேர்ட்ஸ்(three little words) பாடலில் லயித்திருந்தாள்.

கார் நின்ற உணர்வு வந்தததால், மெதுவாக கண் திறந்து பார்த்தாள்.

“என்ன கோபி??” என்று கேட்டபடியே, காதிலிருந்து செவிப்பேசியைக் கழட்டினாள்.

“சிக்னல்… இன்னும் அஞ்சு நிமிசத்துல ஹாஸ்பிட்டல் போயிரலாம்-க்கா”

“ம்ம்ம்” என்றவள்,

சும்மா இருக்கும் நேரத்தை, சுவாரஸ்யமாக்க… கண்களை அப்படியே சுழற்றிக் கொண்டு வந்தாள்.

பாவையின் பார்வை பக்கவாட்டில் இருந்த மரத்தின் மேல் விழுந்தது.

பார்வை மரத்திலிருந்து இறங்கி வந்து, மரத்தடியில் உதிர்ந்திருந்த பூக்கள் மேல் விழுந்தது.

பூக்களிலிருந்து பார்வை மெதுவாக நகர்ந்து, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் சக்கரத்தில் விழுந்தது.

சக்கரத்திலிருந்து இமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, பைக்கின்
மேல் அமர்ந்திருந்தவன் மேல் விழுந்தது.

அதன்பின் பார்வையும் சரி… பாவையும் சரி… எழுந்து கொள்வது கடினம்!

காருக்குள் இருந்தவளின் உதடுகள், தன்னை மறந்து ‘தேவா’ என்று உச்சரித்து அசைந்தன.

மிக எளிமையாக, டீக்கடையில் பைக்கை நிறுத்திக் கொண்டு… வாககாக அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு… இடது கையில் கண்ணாடி டீ கிளாஸைப் பிடித்துக் கொண்டு… எதிரே நின்றவனிடம் பேசிக் கொண்டு… இடையிடையே டீயைக் குடித்துக் கொண்டு…

இப்படி இருந்த தேவாவை, அப்படியே தனக்குள் கிரகித்துக் கொண்டாள்.

‘டுடே, லக்கி டே! ரொம்ப நாளுக்கப்புறம் தேவாவ பார்த்தாச்சு!! என்று சொல்லி, அவள் மனம் உற்சாகமாய் குதித்தது.

இருந்தும், ‘எப்பொழுதும் தூரத்திலிருந்தே ரசித்துவிட்டுச் செல்கிறோமே?’ என்ற எண்ணம் வந்து உற்சாகம் கொண்ட மனதை உறுத்தியது.

எனினும் அவனை விழுங்கிக் கொண்டிருக்கும் தன் கண்களை லேசாகச் சுருக்கி, ‘லவ் யு தேவா’ என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டாள்.

அதற்குள் பச்சை சமிக்கை வந்ததால், கார் நகர ஆரம்பித்தது.

காரினுள் இருந்த காரிகை, இருக்கையின் பின்புறம் சாய்ந்து கொண்டாள். இமைகளை மெதுவாக மூடி, கண்கள் விழுங்கிய தேவாவின் பிம்பத்தை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்திப் பார்த்தாள்.

ஒரு ஐந்து நிமிட பயணத்தில், ஒரு பெரிய மருத்துவமனை வளாகத்தினுள் கார் நுழைந்தது.

இரு கட்டிடங்கள் கொண்ட பெரிய மருத்துவமனை அது! ஒன்று இருபது தளங்கள் கொண்ட முதன்மை பிரிவு. மற்றொன்று மூன்று தளங்கள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு.

இரண்டு கட்டிடங்களின் வெளிப்புறங்கள் முழுவதும், பெரிய நீள அகலம் கொண்டு கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணாடியின் தூய்மையிலும்… பளபளப்பிலும்… வான் மேகங்கள் அதில் தெரிந்தன.

சுற்றிலும் மரங்கள். விதவிதமான செடிகள். ஆங்காங்கே மண்தரைகள் புல் தரையாக மாற்றப்பட்டிருந்தன. நடப்பதற்கு தார் சாலைகள். சரியான இடைவெளியில் சாய்வு நாற்காலிகள்.

இவை அனைத்தும் சரிவரப் பராமரிக்கப்பட்டிருந்தன.

வளாகத்தின் ஒரு புறத்தில் வெளி நபர்களுக்கான பெரிய பார்க்கிங் பகுதி. அங்கே முக்கால்வாசி கார்கள்தான் நிறுத்தப்பட்டிருந்தன.

மறுபுறத்தில் மருத்துவர்களின் வாகனங்களை நிறுத்தும் இடம். இங்கே முழுதும் கார்கள்தான்!

மேலும் ஒரு கேண்டீன். அதுவும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருந்தது.

சுருங்கச் சொன்னால் மிகப் பெரிய, புகழ் பெற்ற மருத்துவமனை. தகுதியான மருத்துவர்களையும், புதிய புதிய மருத்துவ வசதிகளையும் தன்னுள் கொண்டது.

கூடுதல் தகவல்… வசதி உள்ளவர்கள் குறிப்பாக அரசியல் புள்ளிகள், சினிமா பிரபலங்கள் அதிக அளவில் வந்து போகும் மருத்துவமனை.

இதுதான் இந்த பிரமாண்ட மருத்துவமனையின் முகம்!

இங்கு இவள் மருத்துவர் மட்டுமல்ல! மருத்துவமனை நிர்வாகத்திலும் பங்குகள், பொறுப்புகள் உண்டு!!

பெரிய கட்டிடத்தின் வாயிலில் சென்று, கோபி காரை நிறுத்தினான்.

“இன்னைக்கு கொஞ்சம் டிராபிக்… அதான் லேட்டாயிருச்சு-க்கா” என்றான்.

லேசாக சிரித்து, “பரவால்ல கோபி” என்றவள், “ஈவினிங் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள்.

கோபி பற்றி ஒரு சில வரிகள். இவளின் ஆஸ்தான ஓட்டுநர். இவளை ‘அக்கா’ என்று விளிக்கும் ஒரு நபர்.

அவள் இறங்கியதும், மருத்துவர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் நோக்கி கார் நகர்ந்தது.

காரிலிருந்து இறங்கியவள், விறுவிறுவென மருத்துவமனை உள்ளே நடந்து சென்றாள். நேராக மின்தூக்கி அருகே சென்று, பொத்தானை அழுத்திவிட்டு, காத்திருந்தாள்.

காத்திருக்கும் நேரத்தில், தாராவின் தனிப்பட்ட தோற்றத்தின் அடையாளம் பற்றி…

தோள் வரை நேராகத் தொங்கிய கூந்தல், அதற்கு மேல் சுருள் செய்யப்பட்டிருந்தன. அந்தச் சுருள்களும் செம்பு நிறத்தில் கலரிங் செய்யப்பட்டிருந்தது.

மூக்கில் ஒரு சிறு வளையம். கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு கம்மல். வலது கை மோதிர விரலில் பட்டையான மோதிரம். இவை மட்டும்தான் ஆபரணம் என்று அவளின் மேல்.

தோள் பட்டையிலிருந்து தொங்கும் ‘டெனிம் டோட் பேக்’. இவள் எங்கு சென்றாலும் இதுவும் சேர்ந்து கொள்ளும்.

நேர்த்தியான மடிப்புகளுடன், மிகக் குறைவான வேலைப்பாடுகள் கொண்ட புடவை. எப்பொழுதும் அல்ல! மருத்துவமனை வரும் பொழுது மட்டுமே!!

இதுவே தாரா!!

இதற்கிடையே, மின்தூக்கி வந்திருந்தது. இது மருத்துவர்களுக்கான பிரத்தியேக மின்தூக்கி. உள்ளே நுழைந்து எண் ஐந்தை அழுத்தினாள்.

தளம் ஐந்து வந்தது. இந்தத் தளம் முழுவதும் அவளது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தாள். எதிரில் வருவோரின் காலை வணக்கங்களை இன்முகத்தோடு வாங்கிக்கொண்டு, தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வரிசையாகக் குஷன் வைத்த நாற்காலிகள். இடையிடையே செயற்கைச் செடிகள் கொண்ட பீங்கான் தொட்டிகள். சுவர்களில் நம்பிக்கையூட்டும் வாசகங்கள். கண்ணாடியைப் பதித்து விட்டார்களா?? என்று சந்தேகம் வருமளவில் தரைத்தளம்.

மேலும் எங்கும் தூய்மை!

இதுதான் தாரா நடந்து கொண்டிருக்கும் நடைக்கூடத்தின் முகம்!

அவளது அறை வந்ததும், அறைக் கதவில் இருந்த எழுத்துக்கள் அவளை வரவேற்றன.

Dr. Thara MBBS, MS OB/GYN.

மேலும் அடைப்புக்குறிக்குள் தாரா – மகப்பேறு மருத்துவர் என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. புன்னகையுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

பெரிய அறை. பிஸ்தா நிறத்தில் சுவர்கள். ஒரு ஓரத்தில் திரையிடப்பட்ட பகுதி. மற்றொரு ஓரத்தில் நீள்வடிவ சோஃபா. அதன் பின்னே இருந்த சன்னலை மறைத்த வெண் திரைச்சீலைகள். அறையின் நடுவே கண்ணாடியாலான மேசை. சுற்றிலும் நாற்காலிகள். அவளுக்கு மட்டும் சுழல் நாற்காலி.

இதுதான் தாரா அறையின் முகம்!

இருக்கையில் சென்று தாரா அமர்ந்ததும், “குட் மார்னிங் மேம்” என்று சொல்லிக் கொண்டு செவிலியர் ஒருவர் உள்ளே வந்தார்.

இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, தாராவிற்கு நிர்வாகத்தில் பெரும் பங்கு இருப்பது தெரியுமென்பதால், அவளை ‘மேம்’ என்றே அழைத்துப் பழக்கம்.

“ஹேப்பி மார்னிங்” என்று கூறிக்கொண்டே கணினியை உயிர்ப்பித்தாள்.

“மேம், பைவ் மினிட்ஸ்க்கு அப்புறமா பேஷன்ட்ட அனுப்பவா??”

“ஆல்ரெடி லேட். ஸோ சென்ட் தெம் இமிடியேட்லி”

“ஓகே மேம்” என்று செவிலியர் வெளியே சென்றார்.

மறுநொடியே அன்றைய நாளின் முதல் பார்வையாளர் அறைக்குள் நுழைந்தார்.

சட்டென்று, விரித்து விடப்பட்டிருந்த கூந்தலை ஒரு சிறு பிடிப்பானுக்குள் அடக்கினாள்.

“குட்மார்னிங் டாக்டர்” என்று சொல்லி, லேசாக மூச்சு வாங்கியவாறு வந்து அமர்ந்தார், அந்தக் கர்ப்பிணிப் பெண்.

அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, “குட்மார்னிங்” என்றாள்.

செவிலியர் மருத்துவக் கோப்பை கொண்டு வந்து, தாரா முன்னே வைத்தார். அதனை இரண்டு தரம் புரட்டிப் பார்த்தவள்.

“ஓகே, நௌவ் சிக்ஸ்த் மன்த் ஸ்டார்ட்டடு… இல்லையா??”

“யெஸ் டாக்டர்”

“ஹவ் டூ யூ பீல்”

“ம்ம்ம்.. குட்” என்று அந்தப் பெண் புன்னகைத்தாள்.

தாமதமான முதல் பிரசவம் என்பதாலும், சக்கரை அளவு அதிகமாக இருப்பதாலும், அந்தப் பெண்ணின் புன்னகையில் அச்சம் கலந்திருந்தது தெரிந்தது.

இதுபோன்ற சிக்கலான பிரசவங்கள் மட்டுமே தாரா பார்ப்பாள்.

குறைந்த காலத்திலேயே நிறைய அனுபவங்களைப் பார்க்க வாய்ப்பிருந்ததால், வயதை மீறிய பக்குவத்துடன் செயல்படுபவள்.

ஆகையால்தான் இத்தகையை நிலையில் இருக்கிறாள்.

மேலும் அவளின் பேச்சுக்களில் கனிவைக் காட்டிலும், இரு உயிரைக் காப்பது ‘தன் கடமை’ என்று பொறுப்புணர்வு மேலோங்கி இருக்கும்!

இதுவே தாராவின் செயல்களின் அடையாளம்!

“சிஸ்டர், இவங்களுக்கு பிபி, வெயிட் செக் பண்ணுங்க” என்று கோப்பை செவிலியரிடம் கொடுத்தாள்.

அவர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே, “முடிஞ்சதும்… உள்ளே கூட்டிட்டுப் போங்க” என்று அறைக்குள் இருந்த திரையிடப்பட்டப் பகுதியைக் காட்டினாள்.

“ஓகே மேம்” என்ற செவிலியர், தாரா சொல்லியவாறு செய்ய ஆரம்பித்தார்.

சற்று நொடிகளில், தாரா எழுந்து அந்தப் பகுதிக்குச் சென்றாள்.

தாரா உள்ளே வரும் போது, செவிலியர் கையுறைகளை வைத்துக் கொண்டு காத்திருந்தார். அவரிடமிருந்து அதை வாங்கி மாட்டிக் கொண்டவள், கர்ப்பிணி பெண்ணை பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

“பேபி மூவ்மென்ட்ஸ் பீல் பண்றீங்களா??”

“ம்ம்… அப்பப்போ”

“டயர்டுநெஸ் இருக்கா??”

“ம்ம்ம், லைட்டா இருக்கு”

“தண்ணீ நல்லா குடிங்க. லிப்ஸ் டிரையா இருக்கு”

“ஓகே டாக்டர்”

இப்படிப் பேசிக் கொண்டே, தாரா பரிசோதித்து முடித்துவிட்டாள்.

“நார்மல்தான். ஜஸ்ட் என்ஜாய் பீயிங் பிரக்னன்ட்” என்று நம்பிக்கை புன்னகையுடன் சொல்லிவிட்டு, கைகளிலிருந்த உறைகளைக் கழட்டிக் குப்பைக் கூடையினுள் போட்டு வெளியே வந்தாள்.

அறையிலிருந்து அந்தப் பெண் வரும் போது, தாரா மருந்துச்சீட்டு எழுதிக் கொண்டிருந்தாள்.

“உட்காருங்க” என்று முன்னே இருந்த நாற்காலியைக் காண்பித்தவள், “டேப்ளெட்ஸ் சேஞ்ச் பண்ணிருக்கேன். தென் பேஃட்டல் மூவ்மென்ட்ஸ் அண்ட் குரௌத் பார்க்க ஒரு ஸ்கேன் எடுத்திடலாம்” என்றாள்.

“ஓகே. பட் ஸ்கேன் டிடெயில்ஸ்?”

நின்றுகொண்டிருந்த செவிலியரைக் காட்டி, “அவங்க சொல்லுவாங்க” என்றாள்.

“ஓகே டாக்டர்”

“டயபடீஸ் இருக்கிறதால, டயட் சாட் பிளான் டயட்டீஷியன்கிட்ட கேட்டுக்கோங்க”

“ஓகே டாக்டர்”

“ம்ம்ம் டயட்டீஷியன்??” என்று கேள்வியாகச் செவிலியரைப் பார்த்தாள்.

“வந்தாச்சு மேம். ரூம் நம்பர் 511”

“யெஸ். 511ல இருப்பாங்க. யு கேன் கெட் டீடெயில்டு டயட் பிளான் பிரம் தெம்”

“நானே கேட்கணும்னு நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க டாக்டர்”

ஒரு சிறு புன்னகை மட்டும்தான் தாராவிடம்.

“ஓகே.. தேங்க்ஸ் டாக்டர்” என்று எழுந்து, கிளம்பிச் சென்றார்.

அதன்பின், ஒரு இரண்டு மணிநேரத்திற்கு எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் பணியில் மூழ்கிப்போனாள்.

அணிச்சையாக, “நெக்ஸ்ட்” என்று கேட்கும்போதே…

“அவ்ளோதான் மேம்” என்று சொல்லிக் கொண்டு செவிலியர் வந்தார்.

“ஓகே பைன். கிவ் மீ பிப்டீன் மினிட்ஸ். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு… ஐவிஎஃப் கேஸ் ஒன்னு அட்டென் பண்ணனும்” என்றாள்.

“ஓகே மேம்”

“ம்ம்ம்… அண்ட், இங்க கேஸஸ் வந்தா…” என்று யோசித்தவள், “வேற டாக்டர்ஸ் ப்ரீன்னா… அட்டென் பண்ணச் சொல்லுங்க. அதர்வைஸ் ஆஸ்க் தெம் டூ வெயிட்”

“ஓகே மேம்”

“அவ்வளவுதான். நீங்க போகலாம்”

“ஓகே மேம்” என்று கதவை அடைத்துவிட்டு, செவிலியர் வெளியேறினார்.

அயர்வைப் போக்கும் வண்ணம், தன் சுழல் நாற்காலியில் பின்னோக்கி சாய்ந்து, கண்கள் மூடினாள்.

ஜந்து நொடிக்குப் பின், தன் டோட் பேக்கிலிருந்து கிரேப் ஜூஸ் பாட்டிலை எடுத்தாள். தாராவின் விருப்பமான பாணம் இது.

கூடவே தன் செல்பேசியையும் எடுத்தாள்.

மீண்டும் Nat King Cole-ன் த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலைச் செவிப்பேசி வழியே செவிக்குள் ஓடவிட்டாள்.

ஜூஸைக் குடித்தபடியே, கணினியில் ட்விட்டர் அக்கவுண்டிற்குள் சென்றாள். தான் பின்தொடரும் நபர்களை… இல்லை, நபரைப் பார்த்தாள்.

யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை! அந்த நபர் தேவாதான்!!

அதான்! டீக்கடையில் அமர்ந்திருந்தானே, அவன்தான். கிடைக்கும் சொற்ப நேர ஓய்வில் கூட, அவன் ஒருவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பாள்.

தேவா! அவனைப் பற்றி என்ன சொல்ல??

தேவா ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’ மற்றும் ‘பாலிசி அனலிஸ்ட்’. இளங்கலை பொலிட்டிக்கல் சயின்ஸ்ம், முதுகலை பாலிசி மேக்கிங்கும் படித்திருந்தான்.

பெரும்பாலும் ‘ஆக்டிவிஸ்ட் தேவா’ என்றே அறியப்படுபவன்!

முதலில் பாலிசி அனலிஸ்ட்டாக அரசாங்க வேலையில் சேர்ந்தான்.

ஆனால் அது அவனுக்குச் சரிப்படவில்லை. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சுயமாக இருக்க இயலவில்லை.

ஆதலால் அந்த வேலையே விட்டுவிட்டு, தனியார் நிறுவனத்தில் சேர்ந்து கொண்டான். இதற்கும் நிறைய பிரச்சனைகள் உள்ளன.

இருந்தும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவே தேவா செயல்களின் அடையாளம்!

மேலும் தேவாவின் தனிபட்ட தோற்றத்தின் அடையாளம் பற்றி…

கழுத்து வரை வளர்ந்த முடியைத் தூக்கி சிறிய குடும்பி போட்டிருப்பான். கருப்பு சட்டமிட்ட கண்ணாடி அணிந்த கண்கள். எக்கணமும் இரண்டு மூன்று நாள் வளர்த்த தாடியுடன் கூடிய முகம். தேடித் தேடி நல்லது செய்வதால் உண்டான தேஜஸ்த்து தேகத்தில் தெரியும்.

தன் வருமானம் முழுவதையும், சமூதாயத்திற்கு நல்லது செய்யவதற்காகச் செலவிடுபவன்.

இதற்காக சிலர் அவனைப் பித்தன் என்று சொல்வார்கள்.

ஆம்! நான் பித்தன்தான்! ஆனால் ‘அப்துல் ரகுமானின் பித்தன்’ என்பான்!!

மேலும் தேவா அடிக்கடி சொல்வது, ‘90% ஆஃப் தேவாவோட வாழ்க்கை சொஸைட்டிக்குத்தான்’ என்று.

இந்தப் பேச்சிலும், அவனது மற்றைய பேச்சிலும் நிறைய பேர் அவன்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

வித்தியாசமான கொள்கைகள்… புதிய நோக்கங்கள்… தெளிவான பார்வைகள்… தீர்க்கமான தீர்வுகள்…

சுருங்கச் சொன்னால்… தேவாவைப் பார்த்தால், 70% சுறுசுறுப்பு வருமென்றால், 30% கிறுகிறுப்பு வரும்… அப்படியொரு படைப்பு! இருபாலருக்கும் இது பொதுவே!!

இதுவே தேவா!

தாராவிற்கு, தேவாவின் வாழ்க்கை முறை நன்றாகத் தெரியும். இருந்தும் வாழ்க்கைப் பாதையில் அவனோடு கைகோர்த்து நடக்க விரும்புகிறாள்.

திரும்பவும் ட்விட்டர் பக்கத்திற்கு…

‘இன்னைக்கு என்ன ட்வீட் போட்டிருக்கான்?’ என்று ஆராய ஆரம்பித்தாள்.

‘நீங்க ஏன் தேவா போராட்டத்தில் கலந்துக்க மாட்டிக்கீங்க?’ என்று யாரோ கேள்வி கேட்டிருந்தனர்.

‘போராட்டம் செஞ்சிதான் தேவைகளை வாங்கணும்னா தேர்தல் எதுக்கு? தலைவர்கள் எதுக்கு? எந்த ஒரு தலைவனும், தன் மக்களை வீதியில வந்து போராட விடக்கூடாது’ என்று தேவா பதில் சொல்லியிருந்தான்.

அவனின் பதிலைக் கொண்டு, அடுத்த கேள்வி ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அது,
‘அரசியல் பேச மாட்டேன்னு சொன்னீங்களே??’ என்று நக்கலாக.

தேவாவின் பதில்…
‘நான் அரசியல் பண்ண மாட்டேன்னுதான் சொன்னேன். அரசியல் பேச மாட்டேன்னு சொல்லலை. ரெண்டும் வேற!’ என்று நறுக்கென்று.

அவ்வளவுதான் ட்வீட்!

‘அவ்வளவுதான!?’ என்று தாரா ஏக்கம் கொண்டாள். எத்தனை நாள்தான் இப்படி டிவிட்டரில் மட்டுமே அவன் எண்ணத்தைக் கேட்பது?? கூடிய விரைவில், தேவாவுடன் நேருக்கு நேர் நின்று பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

ஏற்கனவே இதயத்தை அவனுக்காக பத்திரப்படுத்தி வைத்திருப்பவள், இதய வடிவிலிருந்த ட்வீட்டரின் விருப்ப பொத்தானை சொடுக்கிவிட்டாள்.

இப்போது Nat King Cole,

Three little words
Eight little letters
Which simply mean I love you-ou

என்ற வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்.

தாராவின் முகத்தில் மெல்லிய புன்னகைக் கோடு.

“தோஸ் த்ரீ லிட்டில் வேர்ட்ஸ்… யெஸ்! தேவாகிட்ட நான் எக்ஸ்பெக்ட் பண்றதும் அதுதான்” என்று தன் காதல் ஆசையை முணுமுணுத்தாள்.

பின்னர், தன் வலது கை விரலின் பட்டையான மோதிரத்தைப் பார்த்தாள். மெதுவாக அதைக் கழட்டினாள். அந்த மோதிரம் இருந்த இடத்தில், ‘தேவா’ என்று ஆங்கிலத்தில் டேட்டூ!

மற்றவர்களிடமிருந்து அந்த டேட்டூவை மறைக்கவே, இந்த பட்டையான மோதிரம்.

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்ட, ‘சீக்கிரமாகத் தன் காதலை தேவாவிடம் சொல்லவேண்டும்?’ என்று நினைத்துக் கொண்டாள்.

தன்னைப் பற்றிய அறிமுகமே இல்லாத ஒருவன் மேல், இவ்வளவு காதல் வைத்திருப்பதை எண்ணி, அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது.

சொல்லாத காதலைத் தேவாவிடம் சொல்லும் நாளை எதிர்பார்த்து, சொல்லுக்குள் அடங்கா காதலுடன் தாராவின் நாட்கள் நகர்கின்றன.

அந்த நேரத்தில்…
எந்தவித அனுமதியின்றி, தாராவின் அறைக்கதவைத் திறந்து கொண்டு, உரிமையாக உள்ளே வந்து நின்றான் ஒருவன்.

சட்டென மோதிரத்தைப் மாட்டிக் கொண்டு, நிமிர்ந்து பார்த்தாள்.