KarisalKattuPenne10

கரிசல் காட்டுப் பெண்ணே 10

 

திருவிழாவின் இரண்டாம் நாள் கொண்டாட்டமாகவே விடிந்திருந்தது. வண்ணக் கோலங்கள், தோரணங்கள், பக்தி பாடல்கள் என முதல் நாள் ஆர்பரிப்பு குறையாமலே தொடர்ந்தது.

கோயிலில் நேற்றிக்கடன் செலுத்துவோர் காலையில் இருந்தே படையெடுக்க தொடங்கி இருந்தனர். கோழி, ஆடு பலியிடுதல், வேல் குத்துதல், தீசெட்டி எடுத்தல், தீ மிதித்தல், அம்மன் வேடம் தரித்தல் என நேற்றிக்கடன் பட்டியல் நீண்டது.

மறுபுறம் அம்மன் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளும், அலங்காரங்களும் மும்முரமாக நடைப்பெற்று முடிந்திருந்தன.

கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம் என தெருவெல்லாம் வாத்திய ஓசைகளோடு கொண்டாட்டமாக சிம்ம வாகனத்தில் பூரண அலங்காரத்தோடு அம்மன் வீதியுலா வர, எங்கும் பக்தி மணம் பரப்பியது.

ஸ்ரீராம் இந்த கோலாகல சத்தத்தில் தான் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். காலையில் மருத்துவரிடம் சென்று வந்து, மருந்தின் உபாயத்தால் நன்றாக தூங்கி இருந்தான். அவனுக்கான மதியவேளை உணவு அவன் அறையின் மேசையில் இருக்க, நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது.

சீதாவின் உடலிலும் ஆங்கங்கே காயம் பட்டிருந்தது தான் என்றாலும், ஊமை காயங்களுக்கு மஞ்சள், உப்பு பத்தும், ரத்த கீரல்களுக்கு ரோட்டு புண்தழை கசக்கி இட்ட பத்தும் அவளுக்கு போதுமானதாக இருந்தது.

அத்தோடு அவளை தன் கைகளுக்குள் அணைத்தபடி உருண்டிருந்ததால் அவளைவிட இவனுக்கு அதிக இடங்களில் கீறலும் காயமும் ஏற்பட்டு இருந்தது.

சோர்வோடு எழுந்து சென்று குளித்து உடைமாற்றி வந்தவன், உணவையும் சாப்பிட்டு விட்டு கீழிறங்கி வந்து திருவிழா கூட்டத்தோடு கலந்துக் கொண்டான்.

முதலில் பேண்ட் வாத்தியம் இசைத்துவர, பின்னால் பளபளக்கும் வண்ண உடையணிந்த கரகாட்டகாரர்கள் மத்தள, நாதஸ்வர இசைக்கும் வாய்பாட்டிற்கும் ஏற்றபடி சுழன்றும் குலுக்கியும் ஆடி வந்தனர்.

அவர்களை தொடர்ந்து வண்ண துணிகளை கொண்டு குழுவாக ஒயிலாட்டம் ஆடி வர, தொடர்ந்து காவடியை தோளில் சுழன்று சுழற்றி காவடியாட்டம் ஆடி வந்தனர். இறுதியாக சிலம்பம் கொண்டு இளைஞர் குழு துள்ளிசைக்கேற்ப சிலம்பம் சுற்றி சுழற்றி வீரம் காட்ட, தொடர்ந்து அம்மனின் அலங்கார ஊர்தி ஊர்வலம் வந்தது.

ஸ்ரீராம் ஒவ்வொன்றையும் நிழற்படங்களாக தன் கைபேசியில் சேகரித்துக் கொண்டான். அத்தனை கொண்டாட்டத்தில் இவன் உள்ளமும் துள்ளத்தான் செய்தது.

“என்ன இன்ஜீனியரே, காலையில இருந்து உங்கள பார்க்கவே முடியல” என்று மாரி அவனிடம் வர,

“அதைவிடு மாரி, நேத்து காளையை விட்டு பிரச்சனை பண்ணவங்க யாருன்னு தெரிஞ்சதா?” என விசாரித்தான்.

“காளை சொந்தகாரனை நாலு போட்டதும் அவன் உண்மையெல்லாம் உளரிட்டான். எல்லா பயலுகளையும் போலிஸ் அள்ளி போட்டு போயிருக்கு” மாரி பதில் தர இவனுக்கும் நிம்மதியானது. கொஞ்சம் தவறி இருந்தாலும் எத்தனை உயிர் போயிருக்குமோ? நினைக்கவே இவன் மனம் பதைபதைத்தது. நல்லவேளை அப்படி எதுவும் ஆகவில்லை.

“சும்மா சொல்ல கூடாது, அந்த சீதா புள்ளைய காளை கிட்ட இருந்து காப்பாத்தி ஒரே நாள்ல ஹீரோ ஆகிட்டீங்க” மாரி சிலாகிக்க,

“யாரு நானு? சும்மா கடுப்ப கிளப்பாத மாரி” ஸ்ரீராம் அலுத்துக் கொண்டான்.

“அட நிசமாத்தான் சொல்லுறேன்,‌ ஊரெல்லாம் அதை பத்தி தான் பேச்சு, அப்படியே கொஞ்சம் திரும்பி பாரு எல்லா பொண்ணுங்க பார்வையும் உங்கள தான் சுத்துது” என்று மாரி சற்று பொறாமையாகவே சொன்னான்.

ஸ்ரீராம் சுற்றி பார்க்க, அங்கிருந்த தாவணி பெண்களின் பார்வைகள் இவனை ஆர்வமாக உரசிப் போயின. இவன் மெலிதாக சிரித்து கொண்டான். இந்த ஊருக்கு வந்த புதிதிலும் இந்த ஆர்வமான பார்வைகளை தன்னை மோதி போனதை கவனித்து இருந்தான் தான். அவன் நினைவு மேகங்களை கலைப்பது போல அங்கே சீதா நின்றிருந்தாள்.

வீதியுலா சங்கரன் வீட்டு வாசலுக்கு வந்திருக்க, மரகதம் தீபாராதனை காட்ட தன் வாசல் தேடி வந்த அம்மனை குடும்பமாக வணங்கி நின்றனர். சீதாவும் அம்மனின் அலங்காரத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு கைகூப்பி கண்கள் மூடி சிரத்தையோடு ஏதோ வேண்டி நின்றிருக்க, ஸ்ரீராம் அசட்டையாக வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டான். ஒருவேளை அவள் வேண்டுதல் என்னவென்று இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருந்தால் மனம் இளகி இருப்பானோ என்னவோ?

‘அவசரப்பட்டு சின்னாவ அடிச்சுபுட்டேன்… தப்பு என்மேல தான் ஆத்தா, உசுர காப்பாத்தனது தெரியாம, புத்தி கெட்டு செஞ்சுபுட்டேன்… அவன் முகமே இருண்டு போச்சு, திருப்பி என்னை ஒத்த வார்த்தை பேசல… எரியிற அவன் மனசை ஆத்து ஆத்தா, உனக்கு இளநீ அபிஷேகம் பண்ணுறேன்’ என்று வேண்டுதல் வைத்திருந்தாள்.

இரவு ஏறிய பின்னர் வானவேடிக்கை வானில் வர்ணஜாலம் காட்ட தொடங்கியது. படா பட் என்ற சத்தங்களுடன் இருண்ட வான பின்னனியில் வண்ண தீப்பூக்கள் சிதறி பார்வைக்கு விருந்து படைக்க, ஆரவாரத்தோடு அம்மன் ஊர்வலம் முடிந்திருந்தது.

ஆனால் இன்று முழுவதும் ஸ்ரீராம் வீட்டிற்கு வராததால் மரகத்தின் தாயுள்ளம் தவித்து போனது. மனம் நொந்து இனி வரவே மாட்டானோ என்ற பயமும் அவரை பீடித்துக் கொள்ள, கௌதமியிடம் புலம்பினார்.

”அண்ணி, இந்த சீதாவுக்கு இன்னும் சின்ன புள்ளங்கன்னு நினப்பு, புத்தி கெட்டு கைநீட்டி இருக்காளே… ஸ்ரீராமன் மனசு என்ன வேதனை படுமோ…”

“நீ வேற மரகதம், இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே இப்படி தானே அடிச்சு புடிச்சுப்பாங்க, இப்பவும் முட்டிகிட்டாங்க இல்ல, அவங்களே சமாதானம் ஆகட்டும். அவங்களுக்கு நடுவுல நாம போக வேணாம் சரியா?” என்று சொல்லிவிட்டே கணவருடன் கிளம்பினார்.

“இங்க பாரு ஸ்ரீ, நீ வீட்ட ஒழுங்கா கட்டலன்னாலும் பரவால்ல, சங்கரன் வீட்டுல யார் மனசையும் தெரியாம கூட கஷ்டபடுத்திடாத, புரிஞ்சதா?” பரமேஸ்வரன் மகனிடம் அழுத்தி சொல்ல, ஸ்ரீராம் ஆமோதிப்பக தலையசைத்து கொண்டான்.

இரவோடு இரவாக அவர்கள் கிளம்பி இருக்க, திருவிழாவின் கடைசி நாளில் எங்கும் கூச்சலும் கொண்டாட்டமுகாக விடிந்தது.

காலையிலேயே மேள தாளங்களோடு மஞ்சளாடை கட்டிய அம்மனின் சிறிய வடிவிலான செம்பு சிலையை நாள்வர் திறந்த பல்லக்கில் வைத்து தோளில் தூக்கி வர, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெரிய அண்டாக்களில் கரைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்து தொப்பலாக நனைந்து ஆடியபடியே ஆர்பாட்ட கூச்சலோடு வீதியுலா வந்தனர்.

பெண்களும் வஞ்சனையின்றி தங்கள் முறையானவர்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றிவிட்டு ஓடி மறைய என கலகலப்பு பெருகி இருக்க, வெள்ளை வேட்டி, சட்டையில் மஞ்சள் கரை படியாமல் கவனமாய் தங்கள் வீட்டு வாசல்வரை வந்து விட்டிருந்த சங்கரன் மீது மொத்தமாக ஒரு தோண்டி மஞ்சள்நீரை ஊற்றிவிட்டு சிரித்தார் மரகதம்.

“ஏ வேணாம் புள்ள” என்று அரற்றியவர், “சாமிய இறக்கி வச்சுட்டு வந்து உன்னய கவனிக்கிறேன்” என்று மிரட்டி விட்டு போனார். அதற்கும் அவரின் மனைவி முகங்கொள்ளா சிரிப்பையே பதிலாக தந்தார்.

வீதியுலா முடிந்து அபிஷேக, ஆராதனைகள் செய்து ஊர் காப்பு நீக்கப்படவும், வானில் மேகம் திரண்டு மழை தூரல் வலுக்கவும் சரியாய் இருந்தது.

ஊர் திருவிழா முடிந்ததும் இப்படி பொழியும் மழை கடவுளின் ஆசியாக கிராமத்து மக்களால் நம்பப்படுகின்றது.

“ஆத்தா, நாம எடுத்த திருவிழாவில குளிர்ந்து போயிட்டா, அதே சந்தோசத்தோட நம்ம பூமியையும் குளிர வச்சுட்டா டோய்” என்று யாரோ உற்சாக குரல் கொடுக்க, ஊர்மக்கள் பலரும் அந்த மழைக்கு கறுப்பு குடை பிடிக்காமல் வானம் நோக்கி கைக்கூப்பி வணங்கினர்.

மண்ணில் பட்டு தெறிக்கும் மழை துளியையும், நாசியை நிறைக்கும் மண்வாசத்தையும் ரசித்து நின்ற சீதாவின் கவனத்தை கவர்ந்தது மழையில் குதித்தாடி பாடி கொண்டிருந்த குழந்தைகளின் கொண்டாட்ட பாட்டு.

“பேயுதம்மா பேயுதம்மா
பேயாய் மழை பேயுது

ஊசி போல மின்னி மின்னி
ஊரெல்லாம் பேயுது

பாசி போல மின்னி மின்னி
பட்டணம் எல்லாம் பேயுது

ஈஸ்வரன் கிருபையாலே
எங்கெங்கும் பேயுது

மாயவன் கிருபையால
வந்து மழை பேயுது…”

சிறுவர், சிறுமியர் ஒருவர் பின் ஒருவராக மழைப்பாட்டு பாடியபடி விளையாட,

இங்கே, ஸ்ரீராமின் பார்வையும் ஜன்னல் வழியே மழையைத் தாண்டி, எதிர்வீட்டு திண்ணையில் சில குழந்தைகள் மழையில் தொப்பலாக நனைந்தபடி பாடி கும்மாளம் அடிப்பதைப் பார்த்திருந்தன.

“மழை வருது மழை வருது
நெல்லு வாருங்க

முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏரோட்டும் மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மா இருக்கிற மாமனுக்கு
சூடு வையுங்க”

சிறுமியர் பாடியபடி சிறுவர்களை கைக்காட்டி, உரக்கச் சிரித்தனர்.

மகிழ்ச்சியும் நிறைவுமாக அம்மன் கோயில் திருவிழா நிறைவுற்றது.

# # #

இந்த இரண்டு நாட்கள் ஓய்வில் சலித்து போய் இருந்தான் ஸ்ரீராம். உடலின் காயங்கள் வெகுவாக ஆறியிருந்தன. ஆனால் மனதின் காயம்?

உள்ளுக்குள் ஒரு ஓரத்தில் குன்றலான ஒருவித முணுமுணுப்பு அவன் ஈகோவை சீண்டியபடியே இருக்க, அதிலிருந்து திசைதிருப்பி தன் வேலையில் கவனம் செலுத்த முயன்றான் அவன்.

“திருவிழா ஜோரெல்லாம் முடிஞ்சது இல்ல. நாளைக்கு காலையில எல்லாரும் வேலைக்கு வந்திருக்கணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டு வேலையை முடிச்சாகணும் எனக்கு” நாளைக்கு ஒருநாள் ஓய்வு கேட்ட மாரி மேஸ்திரியை கைப்பேசியில் குதறிவிட்டு வைத்தான் ஸ்ரீராம்.

மாலையில் புது வீட்டின் கட்டிடத்தில் நின்றிருந்தவன், பாதி முடிந்திருந்த கட்டிடத்தை நிமிர்ந்து வானை நோக்கி பார்க்க, முழுமைபெற்ற வீட்டின் அமைப்பு காட்சிபிரதியாய் பார்வையில் விரிய, அவன் கனவுகள் சிறகு விரிப்பதாய்.

“சின்னா…” என்ற அழைப்பில் அவன் முகமும் மனமும் ஜல்லி, சிமெண்ட் கலவை போல சட்டென இறுகி போக திரும்பியவன், அவளுக்கு பின்னால் பார்வையை செலுத்தினான். தம்பியின் துணையின்றி தனியாக வருபவள் அல்லவே!

ஆனால், இன்று அவள் தனியாக வந்திருக்க, எந்த இளக்கமும் அற்ற இடுங்கிய பார்வை பார்த்தான் அவன்.

சீறலான அவன் தோற்றத்தின் முன் முயல்குட்டி போல நின்றிருந்தாள் இவள்.

“நான் தான் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேன் சின்னா… எத்தனை முறை வேணாலும் உன்கிட்ட மன்னிப்பு கேக்கிறேன்… என்மேல இருக்க கோவத்துல அப்பா, அம்மாவ அவாய்ட் பண்ணாத, ரெண்டு நாளா நீ வீட்டுக்கு வரலன்னு ரொம்ப கஷ்டபடுறாங்க” என்று தயங்கிய குரலாக கெஞ்சுதலாக கேட்க, அவன் அலட்சிய பார்வையோடு முகம் திருப்பிக் கொண்டான்.

இவளுக்குள் தவிப்பு கூடியது. வாய் திறந்து ஏதேனும் நாலு வார்த்தை திட்டி விட்டால் கூட பரவாயில்லை. ஏதும் பேசாமல் இப்படி முகம் திருப்பிக் கொள்பவனை எப்படி தான் சமாதானம் செய்வது என்பது புரியாமல் திகைத்து நின்றாள்.

“சாரி சின்னா… நான் சாரி கேக்கிறேன் இல்ல… ப்ளீஸ்…” அவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நிற்க, இவள் குற்றவுணர்வில் கெஞ்சி நின்றாள்.

“உன் கோபம் தீர நான் என்ன செய்யணும் சொல்லு… நான் செய்யறேன்!”

“…”

“இப்படி பேசாம இருக்காத… மனசுக்கு கஷ்டமா இருக்கு…”

“…”

“ப்ளீஸ் ஏதாவது பேசு சின்னா… இல்ல என்னை திட்டிடு”

“…”

“வேணுன்னா என்னை அடி கூட அடிச்சிடு…” அவள் சொல்ல இவன் சட்டென அவள் புறம் திரும்பி, அவளை ஆழ பார்த்தான்.

“நான் அடிச்சிட்டேன்னு தான உன் கோபம்… என்னை நீ திருப்பி அடிச்சா உன் கோபம் கொஞ்சமாவது குறையும் இல்ல…” என்றவளின் கன்னம் கபகபவென எரிச்சலானது.

ஸ்ரீராம் அவளை அறைந்திருந்தான்!

சீதாவும் இதை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. அவனை சமாதானம் செய்ய இவள் ஏதோ சொல்ல போக, அவன் அதுவே சாக்கென்று அவளை அடித்து விட்டு இருந்தான்.

விறுவிறு என்று வலித்த கன்னத்தில் கைவைத்து கொண்டவள் அவனை மிரண்டு பார்க்க, “நீ எதுக்கு என்னை அறைஞ்ச? உன்ன காப்பாத்தும் போது நான் உன்ன தொட்டேன்னு தான அத்தனை பேருக்கு முன்னால கைநீட்டி அடிச்ச… இது‌ நீ என்னை அன்னிக்கு தொட்டு காப்பாத்தின இல்ல அதுக்கு நான் கொடுத்திருக்க வேண்டிய அறை” அவன் குரலுயர்த்தாமல் அழுத்தமாக பேச, இவள் அவன் பேசுவது விளங்காது பார்த்து நின்றிருந்தாள்.

“எதிர்பாராம ஆபத்து நேரத்தில, உன் அனுமதி இல்லாம நான் உன்ன தொட்டு காப்பாத்தினது தப்புனா, அதே போல என் அனுமதி இல்லாம நீ என்னை தொட்டு காப்பாத்தினதும் தப்பு தானே?”

அவன் விளக்கத்தில் இவளின் பங்கய விழிகள் விரிய, “நீ மட்டும் என்ன ஸ்பெஷலா போயிட்ட, நான் மட்டும் என்ன வொர்ஸ்ட் போயிட்டேன் ம்ம்?” என்று கடுப்பாக கேட்டவன்,

“நீ என்னை காப்பாத்தின, பதிலுக்கு நானும் உன்ன காப்பாத்திட்டேன், நீ என்னை அடிச்ச பதிலுக்கு நானும் உன்ன அடிச்சேன்… அவ்வளவு தான்,‌ இனி உனக்கும் எனக்கும் எந்த பேச்சும் இல்ல” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

தெளிவாக குழம்பிய நிலையில் அங்கேயே நின்றிருந்தாள் சீதாமஹாலட்சுமி.

# # #

அடுத்தடுத்த நாட்களில் புது வீட்டு வேலைகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தன. இரண்டு வாரத்தில் கட்டிடம் முழுதாக ஏறி இருக்க, மோல்டிங் போடுவதற்காக நாள் குறிக்கப்பட்டு, அதற்கான கட்டிட பொருட்கள், கூடுதல் கூலி ஆட்கள், அவர்களுக்கான உணவு, தொடர் பணிகள் என்று ஓய்வின்றி நேரம் ஓடியது.

ஸ்ரீராம் வழக்கம் போலவே சங்கரன் வீட்டிற்கு வருவது, உண்பது, சக்திவேல் உடன் வாயடிப்பது என தொடர, எந்த மாற்றமும் இன்றி நாட்கள் சென்றன.

அன்றைக்கு பிறகு சீதாவிடம் ஸ்ரீராம் பேசுவதை தவிர்த்திருந்தான். அது சீதாவிற்கும் புரிந்ததால் அவளும் கல்லூரி, வீடு, கழனி என்று தன் வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தாள்.

அவளது அவசரபுத்தியால் தன் சிறுவயது பள்ளித் தோழனை இரண்டாம் முறையாக பிரிந்திருந்தாள் அவள். மனதின் ஓரம் சிறு வெறுமை தவிர பெரிதாக கவலை கொள்ள அவளுக்கு வாய்ப்பில்லை.

சென்டரிங் அடிக்கும் வேலைகள் முடிந்திருக்க‍, காலை ஆறு மணிக்கு தொடங்கி மாலை எட்டு மணி வரை நீண்டது அன்றைய மோல்டிங் வேலை. ஸ்ரீராம் கண்காணிப்பில் மேஸ்திரிகள் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருந்தனர். கலவையை சரியான அளவில் நேர்படுத்தினால் தான் கட்டிடத்தின் மேல்தளத்தின் வலிமை காக்கப்படும். அடுத்த இரு நாட்கள் முழுவதும் ஓய்வு சாய்வின்றி கூலி ஆட்கள் மாற்றி மாற்றி‌ கலவை தாளாவை கைமாற்றியபடியே இருந்தனர்.

அன்றைய வேலைகள் முடிந்ததும் மோல்டிங் இறுகி உறுதியடைய என சில நாட்கள் கட்டிட பணியாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

ஸ்ரீராம் அந்த நாட்களை வீட்டின் கதவு, சன்னல் வடிவமைப்பு வேலைகளை துரிதபடுத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

ஸ்ரீராம் வழக்கம் போல சங்கரன் வீட்டிற்கு வர, வீட்டிற்குள் யாரும் இருப்பது போல தெரியவில்லை. “அத்த… எங்க இருக்கீங்க?” குரல் கொடுத்தபடி பின்கட்டு பக்கம் வர, “இங்க தான் இருக்கேன் வா ஸ்ரீராமா” கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர் ஈர கைகளை துடைத்தபடி வந்தார்.

“எப்ப வர சொன்னா, இப்ப வர? நேரத்துக்கு சாப்பிட வேணாமா டா” என்று மரகதம் சமையலறைக்கு வர, பின்னோடு வந்தவன், வீட்டின் மூலையில் ஒடுங்கிப் படுத்திருந்த சீதாவை பார்த்தான்.

“சீதாவுக்கு உடம்பு சரியில்லையா அத்த?” மனம் கேளாமல் கேட்டு விட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல டா, இது பொம்பளங்க நோவு, தானா சரியாகிடும், பாசி பயறு உருண்டை செஞ்சு, கேவுறு அடை தட்டி இருக்கேன், நீ சாப்பிடு வா” என்று அழைத்துச் சென்றார்.

‘பொம்பள நோவா?’ என்று குழம்பியவனுக்கு நிதானமாக தான் பொறிதட்டியது.

‘அதற்காக என்றாலும் கூட இப்படி மூலையோடு ஒதுக்கி வைக்க வேண்டுமா என்ன?’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

கல்லூரியில் மாதவிலக்கு சமயங்களில் ஓய்ந்து போன தன் தோழிகளுக்கு பழச்சாறு வாங்கி தந்ததும், அவர்களால் முடியாத நேரங்களில் வீடுவரை உடன் சென்று விட்டு வந்ததும் இவன் நினைவில் வந்து போனது.

அத்தனை கண்ணியமான தன்னை இவள் தவறாக எண்ணி, அசிங்கப்படுத்தி விட்டாளே என்று உள்ளம் குமுறியது அவனுக்கு. மரகதம் தந்ததை பெயருக்கு கொரித்துவிட்டு கிளம்பிவிட்டான்.

# # #

வருவாள்…